அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


நினைவலைகள் - கவலைகள்!
2

இங்கு நான் பார்க்கிறேன் - உணருகிறேன் - புதிய பாடம் கூடப் பெறுகிறேன் - ரொட்டி சுடுவதற்கு, மாவு பிசைகிறோம். மாவு பிசைந்து ஓரளவு "இளகிய' நிலை அடைந்த பிறகுதான், அதை உருட்டி தட்டை வடிவமாக்குகிறோம் - ஆனால், "இளகிய' நிலையில் மாவு இருப்பதால், அதை உருட்டித் தட்டையாக்கும் போது ஒட்டிக்கொண்டு விடுகிறது. ஒட்டிக்கொள்ளாதிருக்க, உருட்டுவதற்காகப் பயன்படுத்தும் பாண்டத்தின்மீது, உலர்ந்த நிலையிலுள்ள மாவு தூவி, அதன்மீது, பிசைந்த மாவை வைத்து உருட்டித் தட்டையாக்கி எடுத்து, பிறகு, "ரொட்டி' சுடுகிறோம், இந்த "மாவு' ரொட்டி ஆகாது! ஆனால், இந்த மாவு தூவாவிட்டால், பிசைந்தது கைக்கு வராது, பாண்டத்திலேயே ஒட்டிக்கொள்கிறது. சாதாரண "ரொட்டி' சுட்டெடுக்க, "இத்தனை பக்குவம்' தேவைப் படுகிறது. மிருகத்தனமான எதிர்ப்புக்கு இடையிலே, மிகப் பெரிய மக்கள் இயக்கத்தை நடத்திச்செல்லும் மகத்தான காரியத்தில் வெற்றி காண, எத்தனை பக்குவம் தேவைப்படும்! அடுப்படியில் அமர்ந்திருக்கும்போது, நான் இதனை எண்ணாமலில்லை.

கிடைத்ததைப் பயன்படுத்துவது, இருப்பதற்கு ஏற்றபடி ஆக்கிக்கொள்வது, சேதமானதுபோக மீதமுள்ளதைப் பயன்படுத்திக்கொள்வது என்பவைகளெல்லாம், இங்கேலி நான் பெற்றுள்ள பாடங்கள். வாழைப் பழத்தில் முன் பாகமோ, அடிப்பாகமோ, தளதளவென்று ஆகிவிட்டால், பழமே வேண்டாமென்று போட்டுவிடுகிறோம் - வெளியே! இங்கேலி? தளதளவென்று ஆகிவிட்ட பகுதியை நீக்கிவிட்டு மற்றதைப் பயன்படுத்திக்கொள்கிறோம் - இங்கு என்ன பழக்கடையா இருக்கிறது, இது வேண்டாம் வேறு கொடு என்று கேலிட்க? அதிலும் நான் கெட்டுப்போன பாகத்தைக்கூட வீணாக்கி விடாமல், பறவைகள் கொத்தித் தின்னட்டும் என்று அதற்கேலிற்ற இடமாக பார்த்துத்தான் போட்டு வைக்கிறேன். வடித்த சாதம் குழைந்து போய்விட்டால், அன்று தயிரன்னமாக்கப்படுகிறது; விறைத்துப்போய்விட்டால் புளிச்சாதமாக்கப்படுகிறது; இன்று காலையில், சமையலிடத்தில் வாடி வதங்கிப்போய், சத்தற்ற நிலையில், "வெண்டை' ஒரு குவியல் தனியாக இருந்தது - வீசி எறியவேண்டியதுதான் என்றார் பார்த்தசாரதி. வேண்டாம் வற்றல் போடுவோம் என்று சொல்லி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, மோரில் ஊறவைத்து, உலரவைத்திருக்கிறேன் - நாளையோ மறுநாளோ, வெண்டைக்காய் வற்றல் விருந்தாகப்போகிறது. இது, சாப்பாட்டுக்காக, நிலைமைக்குத் தக்கபடி நாம் மேற்கொள்ள வேண்டி வருகிற முறை. நமது கழகம், நாட்டுக்குப் புதிய பொலிவு நிலை சமைத்திட அமைந்திருக்கிறது; எத்தனை எத்தனை விதமான "பக்குவம்' நாம் மேற்கொள்ள வேண்டும்; கற்றுக்கொள்ள வேண்டும். மேலவைத் தேர்தல் சம்பந்தமாக ஏற்பட்டுவிட்ட சில விரும்பத்தகாத நிலைமைகளைக் கண்டபோது, நான் இவ்விதமெல்லாம் எண்ணிக்கொண்டேன். தூக்கிவாரிப் போடுவதுபோல, மேலவை உறுப்பினர் பதவியை, நண்பர் எம். ஜி. இராமச்சந்திரன் ராஜிநாமா செய்துவிட்டாராம் என்று இன்று மாலை மதியழகன் தன் தம்பியைப் பார்த்துவிட்டு வந்து தெரிவித்தார். திகைத்துப் போனேன்; ஆனால், அடுத்தகணமே மதியழகன், நமது நண்பர்களின் சீரிய முயற்சியினால், அந்த நிலைமை மாற்றப்பட்டுவிட்டதாகக் கூறி, என் மனதைக் குளிரச் செய்தார்.

நாங்கள் இங்குவந்து சேர்ந்த மறுநாள் சிறை மேலதிகாரி, வந்திருந்தார் - மெத்த கவலையுடன். சட்ட சபையில் சிறை நிலைமை குறித்து, நமது கழகத் தோழர்கள் கேலிட்டிருந்த கேலிள்விகள்பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். அதன் விளைவாக, எங்களை, இனி நீங்கள் வேலை ஏதும் செய்யவேண்டாம் என்று சொல்லிவிட்டாரா என்றால், இல்லை; காலையில் 7-30 - லிருந்து மாலை 4-30 வரையில் சிறை உடையில் இருக்க வேண்டும்; நூற்புவேலையைச் செய்திடவேண்டும் என்று கண்டிப்பாக சொல்லிவிட்டுச் சென்றார். அது அவருடைய கடமை. நான் அதற்காக வருத்தப்படவில்லை. இங்கு நாங்கள் வேலை செய்யாமலில்லை - செய்கிற வேலை வேண்டுமானால், பயனற்றதாக இருக்கலாம் - நூற்புவேலை. ஆனால் முறையாக வேலை செய்து வருகிறோம்.

நேற்றும் இன்றும், கிருத்துவ மார்க்கத்தின் துவக்க கட்டத்தைப் பின்னணியாகக்கொண்ட ஒரு புத்தகம் படித்துக் கொண்டிருக்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஒரு புறத்தில் செல்வச் செருக்கும் மூட நம்பிக்கையும்; மற்றோர் புறம் அருளாளரின் அறநெறி. இந்த இருவேறு நிலைமைகள் ஒன்றை ஒன்று எந்த வகையிலே பற்றியது என்பதை இந்த நூலில் வெகு அழகாக விளக்கி இருக்கிறார் ஆசிரியர். தூங்கு முன்பு, அநேகமாக முடித்துவிடுவேன். இடையில் சிறிதுநேரம் நாலடியார் படித்துக் கொண்டிருந்தேன்.

14-3-1964

இன்று காலைப் பத்திரிகைகளில் எம். ஜி. ஆர். மேலவை உறுப்பினர் பதவியைத் துறந்துவிட்டார்; அந்த நிலையை மாற்ற நாவலரும் மற்றவர்களும் எடுத்துக்கொண்ட முயற்சி வெற்றி பெறவில்லை என்ற செய்தி கண்டு, திடுக்கிட்டுப் போனேன். கழகத்தில் ஆழ்ந்த பற்றும் என்னிடம் பாசமும் மிக்கவர். நான் சிறையில் இருக்கும் சமயத்தில், வெளியே எழும்பும் சில நிலைமை காரணமாக, இவ்விதமான முடிவுக்கு வந்தார் என்றால், எனக்கு மிகுந்த வேதனை ஏற்படாமலிருக்க முடியுமா? ஆனால், என்ன செய்ய முடியும்! நிலைமைகளை அறிந்துகொள்ளவோ, அவரிடம் பேசி நிலைமையைச் சீராக்கவோ முடியாத இடத்திலல்லவா இருக்கிறேன். பகலெல்லாம், இங்குள்ள நண்பர்கள் இது குறித்தே மிகச் சங்கடப்பட்டுக்கொண்டனர். எனக்கு, என்னுடைய மனச்சங்கடத்தை அடக்கிக்கொள்ளும் வேலையுடன், மற்ற நண்பர்களின் சங்கடத்தைத் துடைக்கும் பொறுப்பும் சேர்ந்து, நெஞ்சுக்குப் பெரும் சுமையாகிவிட்டது. கழகத்துக்கும் எம். ஜி. ஆருக்கும் அமைந்துவிட்ட பாசம், சொல்லிக்கொடுத்து ஏற்பட்டதல்ல. தூண்டிவிட்டுக் கிளம்பியதுமல்ல, தானாக மலர்ந்தது. "கனி என் கரத்திலே வந்து விழுந்தது'' என்று பெருமிதத்துடன், "நாடோடி மன்னன்' வெற்றி விழாக் கூட்டத்திலே நான் பேசியது என் நினைவிற்கு வந்தது. அவர் கழகத்தைத் துறந்துவிடுவதோ, கழகம் அவரை இழந்துவிடுவதோ, நினைத்துகூடப் பார்க்கக்கூடாது. எனவே அவர், மேலவை உறுப்பினர் பதவியை விட்டு விலகினாலும், கழகத்தை விட்டு விலகமாட்டார் என் நெஞ்சிலிருந்து விலகமாட்டார் என்று எனக்கு உறுதி உண்டு. அந்த உறுதியைத் துணையாகக் கொண்டு, மனச்சங்கடத்தை மாற்றிக்கொள்ள - குறைத்துக்கொள்ள முனைவதிலேயே இன்று பெரும் பகுதி சென்றுவிட்டது. படித்து முடித்திட திட்டமிட்டிருந்தபடி. கிருத்தவ மார்க்கத் துவக்க நிலைபற்றிய புத்தகத்தையும் படிக்க மனம் இடம் தரவில்லை.

ஒருபுறம், ராஜகோபாலின் "உண்ணாவிரதம்' - மற்றோர் புறம், எம். ஜி. ஆரின் விலகல். எதற்கும் காரணமாக என் சொல்லோ செயலோ இல்லை - ஆனால், அவைகளால் ஏற்பட்டுவிடும் வேதனையின் முழு அளவும் எனக்கு. இப்படி ஒரு நிலைமை எனக்கு! நானாகத் தேடிக்கொண்டது - எனக்காக அல்ல, நாட்டுக்கு நல்லது விளையும் என்ற நம்பிக்கையுடன் நாம் நடத்திச் செல்லும் கழகத்துக்கா! என் இயல்பு தனித்தன்மை வாய்ந்தது; நான் கழகத்தை நடத்திச் செல்லும் முறை அந்த இயல்பை ஒட்டியே பெரிதும் அமைந்துவிட்டிருக்கிறது. கழகத்தை நான் வெறும் அரசியல் கட்சியாகக் கருதுபவனல்ல - எவர் ஒப்புக்கொண்டாலும் மறுத்தாலும், நான் மிக ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருப்பது "கழகம் ஒரு குடும்பம்' என்ற கருத்தினை. அரசியலை விளக்கும் சிலபல ஏடுகளை அதிலும் கட்சி மாச்சரியங்கள், கட்சி உட்பூசல்கள், தலைமைக்காக மேற்கொள்ளப்படும் முறைகள் ஆகியவற்றை விளக்கும் ஏடுகளைப் படித்த சிலர், "குடும்ப பாசம்' என்ற இந்தக் கருத்தையே தவறு என்கிறார்கள் - தீது என்று என்னிடமேகூட வாதாடினார்கள். அவர்களுக்கும் எனக்கும் இருந்த உறவுதான் முறிந்ததே தவிர - அவர்களாக முறித்துக்கொண்டார்களே தவிர - குடும்ப பாசம் என்ற கருத்துக்கும் எனக்கும் ஏற்பட்டுவிட்ட பிடிப்பு என்னைவிட்டுப் போய்விடவில்லை - போகாது. இந்தப் பாச உணர்ச்சிதான், நமக்கு வலிவும் பொலிவும் தருவது; இது குறைந்தால் வலிவும் பொலிவும் மறையும்.

வலிவும் பொலிவும் தருகிற இந்த உணர்ச்சி காரணமாகத் தான், கழகத்திலிருந்து எவரேனும் விலகுகிறார் என்றால், மெத்தச் சங்கடமாகிவிடுகிறது. அதிலும் எம். ஜி. ஆர். போன்ற நட்புக்குப் பொருத்தமிக்கவர் மனச்சங்கடம் கொண்டு விலக முனையும்போது, சங்கடம் வேதனையாகிவிடுகிறது.

இதே கிழமை இதழில் பார்க்கிறேன், பஞ்சாப் முதலமைச்சரை விலகச் செய்ய வேண்டும் என்பதற்காக, நேரு பண்டிதர் மாளிகை முன்பு, ஒருவர் உண்ணாவிரதம் மேற்கொள்ளப் போகிறார் என்ற ஒரு செய்தியும்,

கடலூர் நகராட்சி மன்றத் தலைவராக, காங்கிரஸ் கட்சி ஒருவரை குறிப்பிட்டுவிட்டதால் மனம் குமுறி, அவ் ஊர் இளைஞர் காங்கிரசார் கண்டன ஆரவாரமும், ஊர்வலமும் நடத்துவது பற்றிய செய்தியும்,

தமிழ்நாடு காங்கிரஸ் துணைத்தலைவர் திரு. அருணாசலம் பொறுப்பிலிருந்து வேதனையுடன் விலகும் செய்தியும் வெளி வந்துள்ளன.

இவைகள் யாவும், அரசியல் கட்சிகளிலே ஏற்பட்டுவிடும் நடவடிக்கைகள் - இவை கட்சியிலுள்ளோருக்கு வேதனை தருவதில்லை.

நாம் அப்படி அல்ல. நம்முடைய இயல்பும் முறையும் முற்றிலும் வேறு - சட்டை கிழிந்துபோவதற்கும் சதை பிய்ந்து விடுவதற்கும் உள்ள பேதம் தெரியுமல்லவா - மற்ற கட்சிகளிலே ஏற்பட்டுவிடும் விலகல் போன்றவைகள், சட்டை கிழிந்துவிடுவது போன்றது; நம்முடைய கழகத்திலே ஏற்பட்டுவிடும் நிகழ்ச்சிகள் சதை பிய்ந்துவிடுவதுபோன்றது - வேதனையில், விளைவில்

இவ்விதமாக பலப்பல எண்ணங்கள் குமுறிக்கொண்டிருக்கும் நிலையில், வழக்கம்போல் அடுப்படியில் இருந்தேன். எத்தனையோ முறை பார்த்ததைத்தான் பார்த்துக் கொண்டிருந்தேன். அடுப்பு எரிந்துகொண்டிருக்கிறது - மேலே வைக்கப்பட்டுள்ள பாத்திரத்தில் நறுக்கி எடுத்த காய்கள் வெந்துகொண்டிருக்கின்றன. காய்களை நறுக்கி எடுத்து, அடுப்புக்குள் போட்டா வேக வைக்கிறோம் - கருகிப்போகுமே! காய்வேக நெருப்பின் வெப்பமும் தேவை, அதேபோது அந்த வெப்பம் வேகவைக்கும் அளவிலும் முறையிலும் அமைந்திருக்க வேண்டும்; அதற்காகவே ஒரு பாத்திரம்! வெப்பத்தால் பாத்திரம் தாக்குண்டு காய் வேகுமளவுக்கு வெப்பத்தை அதன் பக்கம் திருப்பிவிட்டு மற்றதைத்தான் பெற்றுக்கொள்கிறது. பாத்திரம் கரி பிடித்து விடுகிறது - காய் வெந்து சுவைப் பண்டமாகிறது. கழகத்துக்கு நான் அப்படிப்பட்ட ஒரு பாத்திரமாக இருக்கிறேன் - மகிழ்கிறேன்! வேதனையை முழுவதும் நான் தாங்கிக்கொள்ள வேண்டி ஏற்பட்டுவிடுவது, அடுப்பின்மீது ஏற்றப்பட்டுள்ள பாத்திரத்தின் நிலைக்கு என்னைக் கொண்டு சேர்க்கிறது. ஆனால், சமையலுக்கு ஒரு பாத்திரம் போதாது! பல வேண்டும்! என் நண்பர்களை, நான் இதுபோன்ற பாத்திரமாகும்படி கேலிட்டுக் கொள்வது தவிர, வேறு விளக்கம் ஏதும் கூறத் தேவையில்லை என்று கருதுகிறேன். கழகத்திலே ஏற்பட்டுவிடும் விரும்பத்தகாத நிகழ்ச்சிகளால் ஏற்பட்டுவிடும், வெப்பத்தை பாத்திரம்போல, நாம் இடையே இருந்து தாங்கிக்கொண்டால்தான் சமையல் காரியம் ஒழுங்காக முடியும். இவ்விதமாக நானாக எண்ணிக்கொண்டு, என் மனக்குழப்பத்தை மாற்றிக்கொள்ள முனைந்தேன். வெற்றி பெற்றேன் என்று சொல்வதற்கில்லை.

இன்று மாலை, அன்பழகனுடைய துணைவியார் அவரைச் சந்தித்து, நாய் கடித்ததால், மகனுக்கு எந்தவிதமான தொந்தரவும் ஏற்படவில்லை என்று ஆறுதல் கூறினார்கள். மகனே, தைரியம் சொன்னானாம் - எனக்கு ஒன்றும் இல்லை அப்பா! பயம் வேண்டாம் என்று.

இதை அன்பழகன் என்னிடம் சொன்னார் - மனம் நிம்மதி அடைந்தது.

இன்றிரவு மீண்டும், குறையாக விட்டிருந்த புத்தகத்தைப் படித்துவிட்டுப் படுத்தேன்.

15-3-1964

நான் படித்த புத்தகத்தில் குறிப்பிட்டிருந்த சம்பவங்கள் பற்றி மேற்கொண்டு தகவல்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆர்வத்தில், இன்று "பைபிள்' படித்துக்கொண்டிருந்தேன் - தமிழில் ஆக்கப்பட்டது.

ரோமானியர்களிடம் சிக்கிச் சீரழிந்த நாடுகளிலே பஞ்சமும் பசியும், பிணியும், பகையும், மூடமதியும் கேலிடுகளும் நெளிந்து கொண்டிருந்த நிலைமையையும், அறநெறி காட்டிட எவருமின்றி, அந்த மக்கள் மாக்களாகிக் கிடந்ததையும், அந்த இருளையும் இழிவையும் துடைக்க ஏசுநாதர் மேற்கொண்ட அருள் வழிபற்றிய விவரமும் படித்து, மன நிம்மதி பெற்றேன்.

இதோ விதை விதைக்கிறவன் விதைக்கப் புறப்பட்டான்.

அவன் விதைக்கிறபோது சில விதைகள் வழியோரத்தில் விழ, ஆகாயப் பறவைகள் வந்து அவைகளைப் பட்சித்துப் போட்டன.

சில விதைகள் அதிக மண்ணில்லாத கற்பாறை நிலத்தில் விழுந்து மண் ஆழமில்லாததினாலே, உடனே முளைத்தன.

ஆயினும் சூரியன் எழும்பவே, அவைகள் எரிந்து வேரில்லாமையால் உலர்ந்துபோயின.

சில விதைகள் முள்ளுகள் நடுவே விழவே, முள்ளுகள் எழும்பி, அவைகளை நெருக்கிப்போட்டன.

வேறு சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்து, ஒன்றுக்குச் சிலது நூறாகவும், சிலது அறுபதாகவும், சிலது முப்பதாகவும் பலனைத் தந்தது.

நீண்ட நேரம், இந்தப் பகுதியைப்பற்றிச் சிந்தித்து, சிந்திக்கச் சிந்திக்க கருத்துச்சுவை கிடைக்கப்பெற்று மகிழ்ந்தேன்.

நண்பர் அன்பழகனுடன், இதுபற்றி நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தேன்.

பொதுவாக, மார்க்கங்கள், தூய்மைப்படுத்தும் இயக்கங்கள் மலரும்போது, அந்த இடங்களிலும், நாட்களிலும் நெளிந்து கொண்டுள்ள அக்ரமங்களை ஒழித்திடும் விதமாக ஆற்றல் பெறுகின்றன; தூய்மையும் வாய்மையும் கனிகின்றன; கெடுமதியும் கொடுஞ்செயலும் அழிந்துபடுகின்றன, நன்னெறியும் நல்லறிவும் அரசோச்ச வருகின்றன, இருள் அகலுகிறது, இழிவு துடைக்கப் படுகிறது. வெற்றி கிட்டுகிறது. மனித குலத்துக்கு மேம்பாடு கிடைக்கிறது.

ஆனால் அக்ரமத்தை ஒழிப்பதிலே வெற்றி பெற்ற இயக்கங்கள், மீண்டும் அதுபோன்ற அக்ரமங்கள் எழ முடியாத நிலையை நிலைத்திடச் செய்ய முடிவதில்லை. தூய்மைப்படுத்தப் பட்ட இடம் மீண்டும் பாழ்படுகிறது; அரசோச்ச முற்பட்ட வாய்மை மீண்டும் வாட்டி வதைக்கப்படுகிறது. கொடுமைகள் புதிய வலிவில் கொக்கரித்துக் கிளம்புகின்றன.

ஒழிக்கப்பட்டது ஒழிந்துபோய்விடவில்லை - துடைக்கப் பட்டது துல்லியமாகிவிடவில்லை - அடக்கப்பட்டது அடங்கிப்போய்விடவில்லை. இது விந்தையாக இருக்கிறது என்பதுபற்றி, அன்பழகனிடம் பேசிக்கொண்டிருந்தேன். வெட்ட வெட்டத் துளிர்த்தெழுவதுபோல, மனித குலத்தை அலைக்கழிக்கும் கேலிடுகள், தூய்மையாளர்களால் அவ்வப்போது தாக்கித் தகர்க்கப்பட்டு வந்தபோதிலும், மீண்டும் மீண்டும் கேலிடுகள் தலை தூக்குகின்றன. மனித குலத்தைப் பாழ்படுத்துகின்றன; தூய்மைப்படுத்தும் முயற்சி தொடர்ந்து நடந்தபடி இருக்க வேண்டும்போலும் என்று பேசிக்கொண்டோம்.

நாளையத் தினம் மேயர் தேர்தல் - என்ன ஆகுமோ என்பது பற்றிய ஏக்கம் ஏற்பட்டுவிட்டது. "மக்கள் கழகத்துக்குப் பேராதரவு காட்டியுள்ளனர். மாநகராட்சி மன்றத்தில் அரசோச்சும் பொறுப்பை ஒப்படைத்துள்ளனர் - ஆட்சியைப் பெறுவதற்கான எண்ணிக்கையும் கிடைத்திருக்கிறது, எனவே ஏக்கம்கொள்ளத் தேவை இல்லை'' என்று மதியழகன், தைரியம் கூறினார். ஆனாலும், காங்கிரஸ் கட்சி, "பண பாணத்தை' ஏவி, கழகத்தைச் சிதறடிக்கப்போகிறது என்ற மிரட்டல்கள் இதழ்களிலே வந்திருந்த காரணத்தால், நான் சற்றுக் கவலைப்பட்டுக்கொண்டிருந்தேன். மாலை, நெடுநேரம் இது குறித்து பேசிக்கொண்டிருந்தோம்.

இரவு, பைபிள், "பழைய ஏற்பாடு' படித்தேன்.

16-3-1964

இன்று பிற்பகல் 2 மணிக்குக் கூடி, மேயர் தேர்தல் நடத்தப் போகிறார்கள் என்ற செய்தியுடன், காங்கிரசின் சார்பில், கேலி. எம். சுப்பிரமணியம் என்ற செல்வவான் நிறுத்தப்பட முடிவாகி இருக்கிறது என்ற செய்தியையும் கழகம் கிருஷ்ணமூர்த்தியை நிறுத்த இருக்கிறது, தி. மு. க. ஆதரவு பெற்ற இவர், சென்ற முறையும் இதேபோல நின்று காங்கிரசிடம் தோற்றுப்போனார் என்ற செய்தியையும் இணைத்து, இதழ்கள் வெளியிட்டிருந்தன. நிலைமை விளக்கம் அல்ல, தமது நினைப்பை வெளிப்படுத்தி இருந்தனர்,

தேர்தல்களை நடத்துவதிலே திறமை பெற்றவர்கள் என்று பட்டயம் பெற்றுள்ள காங்கிரஸ் தலைவர்கள், மேயர் தேர்தலை நடத்திவைக்க வருகிறார்கள் என்றும், இதழ்கள் மிரட்டி இருந்தன.

நமது கழக சம்பந்தமாக என்ன ஏற்பாடுகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன என்பதையும் அறிந்துகொள்ள முடியாத நிலையில், அல்லற்பட்டுக்கொண்டிருந்தோம்.

இன்று காலை 9 மணிக்கு என்னைப் போலீஸ் பாதுகாப்புடன், பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தார்கள் - எனக்கு ஏற்பட்டுள்ள தோள் வலி எந்த நிலையிலே இருக்கிறது என்பதைக் கண்டறிய டாக்டர் நடராஜனிடம் கொண்டுபோயினர். வழக்கம்போல, போலீஸ் காவல், டாக்டர் நடராஜன் பரிசோதனை நடத்தினார். இடக்கரத்தை, வலக் கரம்போல இலகுவாக இன்னமும் தூக்க முடியவில்லை என்பதையும், பனி நீங்கி வெப்ப நாட்கள் துவங்கியது முதல், வலி ஓரளவு குறைந்திருக்கிறது என்பதையும் கூறினேன். இதற்கு வைத்தியம் உங்களிடமேயேதான் இருக்கிறது - இடக் கரத்தில் உள்ள பிடிப்பு போக, தேகப் பயிற்சி செய்தபடி இருக்க வேண்டும் என்று கூறினார். நாளைக்கு மூன்றாக உட்கொண்டு வரும் நொவால்ஜின் மாத்திரையை, இனி இரண்டாகக் குறைத்துக்கொள்ளலாம் என்று கூறி அனுப்பி விட்டார்.

அண்ணன்

15-11-1964