அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


ஓட்டாண்டியாக்கிவிட்டு! (1)
1

கழகம் அஞ்சும் மூணும் அடுக்காக உள்ள இடம் அன்று!
மக்கள்தம் மனக்குமுற-ன் வடிவமே தி. மு. க.!
ஐந்தாண்டுத் திட்டங்களால் கிடைத்த பலன் என்ன?
சுயராஜ்யம் கிடைத்தும் சுபிட்சம் இல்லையே!
ஓட்டாண்டியாக்கிவிட்டு ஓட்டுக் கேட்கிறார்களே!
இப்படை தோற்கின் எப்படை ஜெயிக்கும்?
ஏழையைக் கண்டறியாதவர்கள் தீட்டிய திட்டமே ஐந்தாண்டுத் திட்டம்!

தம்பி!

பார்த்துக்கொண்டிருக்கும்போதே நாட்கள் உருண் டோடிக்கொண்டிருக்கின்றன. தேர்தல் வேக வேகமாக நெருங்கி வந்துகொண்டிருக்கிறது.

நாலைந்து மாதங்களில் பொதுத் தேர்தல் நடைபெற இருக்கிறது என்று நேற்றுத்தான் பேசிக்கொண்டிருந்ததுபோல இருக்கிறது; இப்போது பார்த்தாலோ ஐந்து அல்ல, நாலும் அல்ல, மூன்று மாதங்களே இடையிலே உள்ளன என்று கூறவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டிருக்க காண்கின்றோம்.

நமக்கு மட்டுமா! காங்கிரசுக்கும் அதே நிலைமைதானே என்று கேட்பார்கள். ஆனால், தம்பி! இது ஏழைக் குடித்தனம்; ஐந்தும் மூணும் அடுக்காக உள்ள இடம் அல்ல; எல்லாவற்றையும் நாமேதான் கவனித்துக்கொண்டாக வேண்டும். காங்கிரசுக்கு நிலை அப்படியா? ஏராளமான எடுபிடிகள்! பெட்டி வழிய வழியப் பணம்!! இதை முடித்துவிட்டேன் - அதனை முடித்துத் தருகிறேன் - இது முடிந்துவிடும் என்று கூறிக் கட்டளையை எதிர்பார்த்துக் கிடக்கும் ஆள் அம்பு உள்ள கட்சி.

பதவியில் உள்ளவர்களிடம், அதிலும் தொடர்ந்து இருபது ஆண்டு அளவு பதவியில் உள்ளவர்களுக்கு, அதன் காரணமாகவே - ஒரு தனிச் செல்வாக்கு ஏற்பட்டுவிடத்தானே செய்யும்.

பலன் பெற்றவர்கள், பலன் கிட்டும் என்று எதிர்பார்த்துக் கிடப்பவர்கள் அங்கு நிறையப் பேர் இருக்கத்தான் செய்வர்.

அதிலும் தகுதி, திறமை ஆகியவைகளைக் காட்டிலும், பெரிய இடத்துச் சிபாரிசு, எந்த இடத்திற்கும் நுழைவுச் சீட்டாகப் பெரிதும் பயன்படும் நாட்டிலே, பதவியில் உள்ளவர்களைப் பலரும் மொய்த்துக்கொண்டிருப்பது எளிதாகப் புரியக் கூடியதுதானே. அதிலும், "வரம்' கொடுப்பதிலே காங்கிரசார், வேறு எவரும் போட்டியிட முடியாத அளவு வல்லமை காட்டிப் பழக்கப்பட்டவர்கள்.

புதிய பாதைகள் போடுகிறார்கள்!
பள்ளிக்கூடமா? புதிது புதிதாக!

மருந்தகம்! படிப்பகம்! மனமகிழ் மன்றம்! மாதர் சங்கம்! இவைகளுக்கான திறப்பு விழாக்கள், ஆண்டு விழாக்கள்! அமைச்சர்களின் பேருரைகள்! ஒவ்வோர் நாளும்!!

காளை வாங்க, கிணறு வெட்ட, உரம் வாங்க, வரப்பு அமைக்க கடன் கேட்டிருந்தவர்கள், கேட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது, இனி எங்கே கிடைக்கப் போகிறது என்று எண்ணி ஏக்கமடைந்து, சோர்ந்து கிடக்கிறார்களல்லவா, பலர் - அவர்களைத் தட்டி எழுப்பு கிறார்கள், தர்பார் நடத்துபவர்கள், கடனா கேட்டிருந் தீர்கள்? அடுத்த வெள்ளிக் கிழமை கிடைக்கும் என்று வாக்களிக்கிறார்கள்.

உமது மகனா உத்தண்டன்? தெரியாமலே போய் விட்டதே! போன வருடமே இடம் வாங்கி இருக்கலாமே! இந்த வருடம் இடம் நிச்சயம் - என்று கூறுகிறார் மண்டலம்.

முகங்களிலே புதிய மலர்ச்சி! வார்த்தைகளிலே தனியானதோர் குளிர்ச்சி! நடவடிக்கைகளிலே ஒரு நட்புணர்ச்சி! எல்லாம் பளிச்சிடுகின்றன!

இவை "போலி' என்பதனைக் காட்ட மட்டுமல்ல இவை குறித்து நான் கூறுவது; வாக்காளர்களை மயக்க, ஆட்சி நடாத்திடும் கட்சியினரால் முடிகின்ற அளவு, எதிர்க் கட்சிகளால் முடியாது என்பதையும் உணர்த்துவதற்குத்தான்.

உடனடியாக உள்ளம் மகிழ்ந்திடும் செயலைச் செய் வதன் மூலமோ இனிப்புப் பேச்சுப் பேசுவதன் மூலமோ, நீண்ட காலமாக நடத்திக்கொண்டு வந்த கொடுமைகளை மறைத்துவிடலாம் என்று காங்கிரஸ் கட்சியினர் எண்ணுகின்றனர்.

ஆனால், உள்ளத்துக்கு மகிழ்ச்சி ஊட்டும் பொருள் தருவதன் மூலமாகவே, மக்களை மயக்கிவிட முடியும் என்ற நிலை இருக்குமானால், ஆளுங் கட்சியான காங்கிரசு, சென்ற தேர்தலிலே 100-க்கு 42 என்ற அளவு ஓட்டுகள்தானா பெற்றிருக்கும் ?

ஏழ்மை, அறியாமை, மனக் குழப்பம், மருட்சி என்பவைகளின் பிடியிலே சிக்கிக் கிடப்பினும், தமிழகத்துப் பொதுமக்கள் ஜனநாயக உணர்வை, நீதி நியாயத்தில் கொண்டுள்ள பற்றினை விட்டுவிடவில்லை.

அந்த நம்பிக்கை எனக்கு நிரம்ப இருப்பதனால் மட்டுமே, எத்தனையோ இடர்ப்பாடுகளுக்கு மத்தியிலும், இந்தப் பொதுத் தேர்தலில் கழகம் ஈடுபட்டு வெற்றி வாகை சூடும் என்று அறிவித்திருக்கிறேன்.

கொடுமைகளுக்கு ஆளான மக்கள் மனம் குமுறிக்கொண்டிருக் கிறார்கள் என்பதையும், மீண்டும் கொடுமையின் பிடியிலே சிக்கி விடக்கூடாது என்பதிலே உறுதியாக உள்ளனர் என்பதையும், அதற்கான பணியாற்றுவதிலே ஆர்வம் கொண்டுள்ளனர் என்பதையும் ஒவ்வொரு கூட்டத்திலும் நான் காண்பதுபோலவே, பொதுமக்களிடம் தோழமைத் தொடர்பு கொண்டுள்ள கழகத் தோழர்கள் அனைவரும் காண்கின்றனர். அதனால்தான் அவர்களின் பேச்சிலே ஒரு தெம்பும், உறுதியும் காணப்படுகிறது.

தொகுதிகளின் நிலைமைகளை ஆராய்ந்து பார்த்ததில் தமக்கு ஏற்பட்ட கருத்து பற்றி நாவலர் என்னிடம் பேசிக்கொண்டிருந்தார்; அவரிடமேகூட, அந்தத் தெம்பு ததும்பிக்கொண்டிருக்கக் கண்டேன்.

சென்ற தேர்தலின்போது கழகத்திற்கு இருந்த செல்வாக்கு இம் முறை இன்னின்ன காரணங்களால் இந்த அளவு வளர்ந் திருக்கிறது என்பது குறித்து என்னிடம் எடுத்துக் கூறும்போதே கழகத் தோழரின் முகத்திலே ஒரு பொலிவு புதிதாகத் தவழ்ந்திடக் காண்கின்றேன்.

அவர் மாளிகைவாசி அல்ல!

அம்பாரம் அம்பாரமாகச் செந்நெல்லைக் குவித்து வைத்துள்ள பெருநிலக்கிழார் அல்ல.

ஏழை அல்லது நடுத்தரக் குடும்பத்தினர்!

அவர்களிடம், தெளிவும் செயலார்வமும் இருந்திடக் காண்கின்றேன். செய்வதைத் திட்டமிட்டு, வகைப்படுத்தி, முறைப் படுத்திச் செய்திட வேண்டும் என்ற ஆர்வம் நல்ல அளவு இருந்திடக் காண்கிறேன்.

கூட்டு முயற்சியிலே எத்தனை சாதிக்க முடியும் என்பதனை நாட்டுக்கு எடுத்துக் காட்டியதுடன், நாமே உணர்ந்து கொள்ளும்படி செய்திருப்பது நமது கழகம்.

ஆத்திரத்தினாலோ, அருவருப்பினாலோ, வெறும் பிரசாரம் என்ற போக்கினாலோ நம்மைப்பற்றி, காங்கிரசிலுள்ளவர்கள் எவ்வளவு வேகமாக மேடைகளிலே பேசினாலும், இவனைப் பார்! அவனைப் பார்! என்று இழித்துரைத்தாலும், ஒரு நேரமாகிலும் அவர்கள் உண்மையை உணரும்போது

எப்படியோ இப்படி ஒரு வலிவினைத் திரட்டி விட்டார்களே!

என்று தம்மையும் அறியாமல், பேசாமலிருக்க முடியாது.

இதனாலா? அதனாலா? இப்படியா? அப்படியா?

என்றெல்லாம் ஆராய்ச்சி நடத்தி நடத்தி, தமது முறைகளைக்கூட அவர்கள் நம்முடைய முறைகளுக்கு ஏற்ப மாற்றிக்கொண்டும் பார்க்கிறார்கள். ஆனால் ஒரே ஒரு உண்மையைத்தான் அவர்கள் ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள்.

மக்களின் மனக்குமுறலின் வடிவமாக, மக்களின் பெருமூச்சின் வடிவமாக

திராவிட முன்னேற்றக் கழகம் இருந்து வருகிறது என்ற உண்மையை.

மற்றொரு நம்பிக்கை ஆளவந்தார்களுக்கு இருக்கிறது; பணம் பத்தும் செய்யும் என்பதிலே உள்ள நம்பிக்கை.

ஆனால் பணத்திற்கு உள்ள மதிப்பே இன்று வேகமாகக் கெட்டுக்கொண்டு வருகிறது.

டில்லியில் மூண்டிடும் கலவரங்களைப்பற்றிய செய்தி கேட்டு, இந்தியாவுக்குக் கடன் தொகை எந்த அளவு கொடுக்கலாம் என்பதற்காகக் கலந்து பேசிய குழுவினர், இத்தனை குழப்பம் மூண்டுகிடக்கும் நாட்டுக்குப் பெரிய அளவு தொகை கடன் கொடுப்பது நல்லதுதானா? என்று யோசிக்கின்றனர்; கவலையைத் தெரிவித்துள்ளனர் என்பதும்,

வெளிநாடுகளிலே வாங்கியுள்ள கடனைத் திருப்பித் தருவதற்கான தவணையில் மாறுதல் தேவை; அதாவது பிறகு திருப்பித் தருகிறோம் என்று கூறித் தவணை வாங்க வேண்டும் என்ற யோசனை டில்லி வட்டாரத்தில் உலவுகிறது என்பதும்,

இந்தியாவிலே தொழில் நடத்த "முதல்' போடு வதற்குப் பணத்திலே குறியாக உள்ள ஜப்பான் தயக்கம் காட்டுகிறது என்பதும்,

இன்றுள்ள பொருளாதார நெருக்கடியை எடுத்துக் காட்டு வதனை எத்தனை வேகமான காங்கிரஸ் பிரசாரகரும் மறுத்துவிட மாட்டார்.

நிலைமை, பல முனைகளில் நல்லபடியாக இல்லை.

சமூகத்தில், ஒழுங்கும் சாந்தியும் பெரிய அளவில் குலைக்கப்பட்டிருக்கிறது.

பசியும் பட்டினியும் கொட்டும் கொடுமை வளர்ந்தபடி இருக்கிறது.

இவைகளிலே ஒன்றைக்கூடச் சீர்படுத்தக் காங்கிரஸ் அரசினால் முடியவில்லை.

இருப்பினும் தேர்தலிலே நாங்கள் வெற்றி பெறுவோம் என்று அவர்கள் மார்தட்டுகிறார்கள் என்றால், எதை நம்பிக்கொண்டு அவ்விதம் பேசுகிறார்கள் என்று யோசிக்க வேண்டாமா?

படி அரிசி நாலு ரூபாயாம்! இந்த அக்கிரமம் வேறு எங்காவது நடந்திடுமா? அனுமதிப்பார்களா? என்று பதறுகிற மக்களிடம் எப்படியும் நாங்கள் ஓட்டுக்களைப் பறித்திடுவோம் என்று காங்கிரஸ் கட்சி கூறுகிறது என்றால், பணத்தால் எதையும் சாதித்துக்கொள்ளலாம் என்பது தவிர வேறு எதுவாக இருக்க முடியும்?

காலை மலர்ந்ததும், மக்கள் கண்களிலே படுவது, பட்டினிச் சாவு, துப்பாக்கிச் சூடு, சிறை பிடித்தல், வெளி நடப்புகள், புகார்கள், உட்பூசல்கள் என்பனபற்றியே. ஒரு நாடு மிகச் சீர்கேடான நிலையிலே இழுத்துச் செல்லப்படுகிறது என்பதற்கு வேறென்ன சான்றுகள் வேண்டும்?

நம்ம சர்க்கார்
நல்லவர் சர்க்கார்

என்று சொந்தம் கொண்டாடுகிறார்கள்; இதற்கா எதிர்ப்புக் காட்டுவது என்று கேட்கிறார்கள்; மக்களோ

இருண்ட கண்களையும்
வறண்ட தலையையும்
காய்ந்த வயிற்றையும்

காட்டுகிறார்கள்; நம்ம சர்க்கார் தந்தவை! ஆனந்தத் தாண்டவ மாடச் சொல்லுகிறீர்களா ஐயா! என்று கேட்கிறார்கள். இந்த நிலையிலும் "ஓட்டு' எமக்குத்தான் என்று எந்தத் தைரியத்தில் பேசுகிறார்கள் ஆளுங்கட்சியினர்?

பணம் இருக்கிறது பார்த்துக்கொள்ளலாம் என்ற ஒரே தைரியத்தில்.

போக போக்கியத்திலே மூழ்கி, வலிவிழந்து கிடந்த ஐந்நூறு சிற்றரசர்களையும், செல்வச் செருக்குமிக்கோரையும் பதவிக் காகவும் பட்டத்துக்காகவும் பல்லிளித்துக் கிடப்போரையும், ஆலவட்டங்களையும் ஆமாம் சாமிகளையும் பக்கத் துணையாக வைத்துக்கொண்டு இருநூறு ஆண்டுகள் வெள்ளை ஏகாதி பத்தியம் ஆட்சி நடத்த முடிந்ததல்லவா? இவர்கள் அதே "பாணி'யில் தமது ஆட்சியை நடத்திச் செல்ல முடியும் என்று நம்புகிறார்கள்.

அவர்களால் முடிகிறதா இல்லையா என்பதல்ல பிரச்சினை; நாடு இன்னமும் அவர்களின் ஆட்சியைத் தாங்கிக்கொள்ள முடியுமா என்பதுதான் பிரச்சினை.

தம்பி, காங்கிரசாட்சி துவக்கப்பட்டபோது, மக்களின் வாழ்விலே வளம் உண்டாக்க என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்டபோது, ஒரு வசீகரமான புன்னகையுடன் காங்கிரஸ் தலைவர்கள் கூறினார்கள்.

ஐந்தாண்டுத் திட்டங்கள் போடப் போகிறோம் என்று.

மூன்று முடிந்து, நாலாவது நடமாட விடப்பட்டிருக்கக் காண்கிறோம். திட்டங்களால் கிடைத்த பலன் என்ன? எங்கு சென்றுள்ளது? என்று கேட்கிறார்கள்.

நானும் அதைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன், ஐந்தாண்டுத் திட்டங்களால் விளைந்த பலன், எங்குப் போயிற்று என்றுதான் தெரியவில்லை; ஏழைக்கு அந்தப் பலன் வந்து சேரவில்லை என்று காமராஜர் கூறுகிறார்.

திட்டத்தை நிறைவேற்றினோம்; ஆகவே எமக்கு ஓட்டுப் போடுங்கள் என்று கேட்பதற்கான நியாயம் எங்கே இருக்கிறது? பலன், போன இடம் தெரியவில்லை என்று பெருந்தலைவரே பேசுகிறாரே!

திட்டங்களுக்குத் தேவைப்படும் பொருள் குவிய, வரி கொடுத்துக் கொடுத்து ஏழை எளியோர்கள், மேலும் இளைத்துப்போய், களைத்துப்போய் இருப்பது தெரிகிறது; திட்டத்தால் பெற்ற பலன் வேறு என்ன, எங்கே இருக்கிறது என்று காட்டக்கூடக் கூச்சப்படுகிறார்கள் காங்கிரசின் பெரிய தலைவர்கள்.

ஆராய்ச்சி நடத்துகிறார்கள், திட்டம் ஏன் எதிர்பார்த்த பலனைச் சமூகத்துக்குத் தரவில்லை என்று.

திட்டம் சரியாகத் தீட்டப்படவில்லை.

திட்டம் நடைமுறைக்கு ஏற்றதாகத் தீட்டப்படவில்லை.

திட்டம் சரியாகவே தீட்டப்பட்டது, செயல்படுத்து வதிலேதான் தவறுகள் நேரிட்டுவிட்டன.

செயல்முறை சரியாக வகுக்கப்படவில்லை. செயல்படுவதற்குத் தக்கவர்களை அமர்த்தவில்லை.

செயல்படுத்தியவர்களுக்குப் போதிய அக்கறை இல்லை.

திட்டத்தின் உட்பொருளைச் சரியாக உணர்ந்து கொள்ளவில்லை.

திட்டத்திற்கு மக்களின் ஒத்துழைப்பு முழு அளவில் கிடைக்கவில்லை.

இப்படி ஆளாளுக்கு ஒரு குட்டுக்குட்டியபடி உள்ளனர். குட்டுபவர்கள் எல்லோருமே காங்கிரஸ் எதிர்ப்பாளர் என்று கூறிவிட முடியாது. காங்கிரஸ்காரர்களிலேயே பலர் குறை காணுகின்றனர்.

எல்லோரும் ஒருசேர இன்று ஒப்புக்கொண்டிருப்பது, திட்டங்கள் எதிர்பார்த்த பலனை சமூகத்துக்கு தரவில்லை என்பது.

ஆகவே, எந்தத் திட்டங்களைத் தமது சாதனையிலே சிகரம் போன்றது என்று இவர்கள் கூறிக்கொண்டு வந்தார்களோ, அந்தத் திட்டங்களே தோல்வி அடைந்துவிட்டன என்பது மறுக்கப்பட முடியாத ஆனால் பயங்கரமான உண்மையாகி விட்டது. இந்தத் திட்டங்களுக்காகச் செலவாகி இருக்கும் பணத்தின் அளவு, எவருடைய தலையையும் சுற்றச் செய்துவிடும்; அத்தனை பெரிய தொகை.

"விடமாட்டோம் இந்தியாவை'' என்று வெள்ளையர் வீம்பு பேசிக்கொண்டிருந்த நாட்களில் டில்லிப் பாராளுமன்றத்தில் வீற்றிருந்த கோவிந்த வல்லப பந்த் கோபாவேசமாக ஒரு முறை சுயராஜ்ய திட்டம்பற்றிப் பேசியபோது, வெள்ளையர் ஒருவர் குறும்புத்தனமாகக் குறுக்கிட்டு,

சுயராஜ்யம் கிடைத்ததும் என்ன செய்யப் போகிறீர்கள்?

என்று கேட்டபோது, பந்த் அவர்கள் பதிலளித்தார், சுடச்சுட. அவரால் அன்று, எந்த அளவுக்குச் சொல்ல முடிந்தது?

சுயராஜ்யம் கிடைத்ததும் நாட்டை வளப்படுத்த திட்டம் தீட்டுவோம். நூறு கோடி ரூபாய் அளவு செலவிட்டுத் திட்டம் நிறைவேற்றுவோம்!

என்று கூறினார். கவனித்தனையா தம்பி! 100 கோடி! அது அன்று பிரம்மாண்டமான தொகை!

ஆனால் காங்கிரஸ் அரசு இந்த ஐந்தாண்டுத் திட்டங் களுக்காகச் செலவிட்டிருக்கும் தொகை, 20,000 கோடி ரூபாய்! பண்டித பந்த்தினால் நினைத்துப் பார்த்திருக்கக்கூட முடியாத தொகை!! இவ்வளவு செலவான பிறகும், இன்று நாட்டிலே இல்லாமை, போதாமை! அமெரிக்கா பறக்கிறார் அமைச்சர் சுப்பிரமணியம், உணவுக்காக! சௌத்ரி, ஐரோப்பா பயண மாவார், கடன் கேட்க! மேத்தா, ரஷியா செல்லக்கூடும்! இந்திரா அம்மையார், உலக சமாதானம் உண்டாக்க யூகோ செல்லக்கூடும்.

பாவம், அவர்களால் இங்கு இருக்க முடியவில்லை.

காது குடையும் கூச்சல்! கண்ணைக் கெடுக்கும் காட்சி! மனதை மருட்டும் செய்திகள்! நிம்மதி இல்லை! நிலைகொள்ளவில்லை.

பாரிசோ, மாஸ்கோவோ, நியூயார்க்கோ, இலண்டனோ எங்காவது சென்று சிறிதளவு நிம்மதி யாவது பெறலாம் என்று எண்ணுகிறார்கள். துல்லியமான மேக மண்டலங்களுக்கு மேலே விமானம் செல்லும்போது, ஆர்ப்பரிப்பும், பேரணியும், கடை அடைப்பும், கலவரமும் இல்லாத நிலை காண்கின்றனர்! ஒரு நிம்மதி!

இலஞ்சக் குற்றச்சாட்டுகள் கூறிடுவோர், குறுக்குக் கேள்விகள் பூட்டிடுவோர், ஊழல்களை அம்பலப் படுத்துவோர், அமீர்சந்த் பியாரிலால் போன்றவர்கள் பற்றிக் கிளறிவிடுவோர் இல்லாத இடம்; ஒரு மகிழ்ச்சி!

இந்த விதத்தில் அவர்களும் பாவம், தங்கள் மனத்திலே குமுறிக் கொண்டிருக்கும் கவலையை மறந்துவிட முயற்சிக்கிறார்கள்.

20 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட்டு, தோல்வி கண்ட கட்சி, கூனிக் குறுகிப் போகவேண்டியது முறையாக இருக்க, இந்தத் திட்டங்களின் கர்த்தாக்களாகிய எமக்கே ஓட்டுகள்! - என்று பாத்யதை வேறு கொண்டாடுகிறார்கள்!!

தெளிவும் ஜனநாயக உணர்வும் இருக்கவேண்டிய அளவிலும் வேகத்திலும் இந்த நாட்டில் இருந்திடுமானால், 20 ஆயிரம் கோடி ரூபாயைப் பாழாக்கினதற்காகக் காங்கிரஸ் கட்சியைக் கூண்டிலே நிற்க வைத்து விசாரணை நடத்தி இருப்பார்கள்!

இன்றோ இந்த ஆட்சியின் போக்கை எதிர்க்கத் துணிபவர்களை, காரணம்கூடக் காட்டாமல் சிறையில் தள்ளிவைக்க, தடுப்புக் காவல் சட்டத்தை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீடிப்பது என்று பாராளுமன்றத்தில் பலமான எதிர்ப்பைத் துச்சமென்றுத் தள்ளிவிட்டு நிறைவேற்றி வைத்துக்கொண்டுவிட்டார்கள்.