அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


ஓட்டாண்டியாக்கிவிட்டு!
2

உரிமைகள் குலைக்கப்படுகின்றன. இது நாம் ஏற்றுக்கொண்டுள்ள இந்திய அரசியல் சட்டத்திற்கே ஒவ்வாதது என்று கண்டிக்காத மேதைகள் இல்லை; சட்ட நிபுணர்கள் இல்லை. இன்னமும் நெருக்கடி நிலைமையை நீடித்துக்கொண்டிருப்பது அறமாகாது; அதன் பெயரால் பாதுகாப்புச் சட்டத்தை ஏதாவது ஒரு வடிவத்தில் நீட்டிக்கொண்டு போவது அடாத செயலாகும் என்று நீதி மன்றங்களில் கீர்த்திமிக்க நிலை பெற்றிருந்தவர்களெல்லாம் எடுத்துக் கூறிவிட்டனர். சர்வாதிகார நாடுகளில் தவிர வேறு எங்கும் இப்படிப்பட்ட ஆள்தூக்கிச் சட்டங்கள் - நாக்கறுப்புச் சட்டங்கள் இல்லையே என்று கூறிக் கண்டிக்கின்றனர் சான்றோர் பலர்.

இந்தியாவின் முன்னாள் சட்ட அமைச்சர் ஏ. கே. சென் அவர்களே இந்தப் போக்கைக் கண்டித்துப் பேசுகிறார்.

ஆனால், தம்மைவிட அறிவிலும் ஆற்றலிலும் மிக்கார் எவர் உளர் என்ற நினைப்புத் தடித்துப் போன நிலையில் தடுப்புக் காவல் சட்டம்கூடத் தேவைதான் என்று காங்கிரசார் வாதாடுகின்றனர்; எண்ணிக்கை வலிவினைக் காட்டி அக்கிரமத்தை நியாயமாக்கிக் காட்டுகின்றனர்!

தடுப்புக்காவல் சட்டம், ஒப்புக்கொள்ளப்பட்ட சாதாரண சட்ட முறையாகிவிட்டது என்றே பேசுகிறார், உள்துறை அமைச்சர் - புதியவர் - சவாண்! மனித உரிமைகள் அவ்வளவு கேவலப்படுத்தப்பட்டு விடப்பட்டுள்ளன.

உணவு போதுமான அளவு இல்லை.
உரிமைகள் பறிக்கப்படுகின்றன.
சாந்தி இல்லை, சமாதானம் இல்லை.

என்றாலும், ஓட்டு இருக்கிறதல்லவா, அதை எமக்குக் கொடுத்திடுக! என்று கேட்கிறார்கள். ஓட்டாண்டியாக்கிவிட்டு ஓட்டும் கேட்கிறார்கள். புது டில்லியில், "ஜனநாயக நிலை'பற்றிய கருத்தரங்கு ஒன்றில் பேசிய மேனாட்டு அரசியல்துறைப் பேராசிரியர் ஒருவர்,

"மக்கள் காங்கிரசாட்சியிலும் வெறுப்படைந் துள்ளனர்; ஆனாலும் காங்கிரசுக்கு ஓட்டுப் போடுகின்றனர். இந்த விந்தை இந்திய ஜனநாயகத்திலே காணப்படுகிறது. இது ஆராயப்பட வேண்டிய பிரச்சினையாகும்' என்று குறிப்பிட்டிருக்கிறார்.

உள்ளபடியே தம்பி! காங்கிரசாட்சியிடம் மக்கள் கொண்டுள்ள கோபமும் கொதிப்பும், வெளிநாடுகளிலே உள்ள ஆய்வாளர்களும் அறிந்துள்ளனர். மக்களிடையே இவ்வளவு ஏமாற்றத்தையும் எரிச்சலையும் மூட்டிவிட்ட காங்கிரஸ் கட்சியை மக்கள் மீண்டும் ஆதரித்து ஆட்சியில் அமர்த்தமாட்டார்கள் என்று கருதுகிறார்கள். ஏனெனில், இங்குக் காங்கிரசாட்சி செய்திருப்பது போன்ற தவறுகளிலே நூற்றிலே ஒரு பங்கு தவறு செய்திடினும் போதும், அங்கு அத்தகைய ஆட்சியை மக்கள் தாங்கிக்கொள்ள மாட்டார்கள். ஜனநாயக உணர்வு அங்கெல்லாம் அந்த அளவு இருக்கிறது.

இங்கோ ஆட்சியினிடம் மக்களுக்கு அச்சம் மூண்டுவிடுகிறது.

அக்கிரமம் செய்திடினும், ஆட்சி தன்னிடம் சிக்கிக் கொண்டுள்ள வலிவினைக்கொண்டே, எதிர்ப்புச் சக்திகளை முடியடித்துவிடும் என்ற பீதி பிடித்தாட்டுகிறது.

இந்த அச்சத்தை, தம்பி உன் இடைவிடாத முயற்சியின் துணை கொண்டு, திராவிட முன்னேற்றக் கழகம் பெரும் அளவுக்கு ஓட்டிவிட்டிருக்கிறது.

இந்த நிலைமையை நன்கு புரிந்துகொண்ட காங்கிரசார் இம்முறை "கடைசி ஊசி' போடுவது என்பார்களே அதுபோல உள்ள பணம் அவ்வளவையும் வீசிப் பார்த்துவிடுவது என்று துணிந்துவிட்டுள்ளனர். பார்க்கட்டும்! பாசி பிடித்துப்போன பணமெல்லாம் வெளியே வரட்டும்! பாட்டாளியின் வயிற்றில் அடித்துச் சேர்த்து வைத்துள்ள பணமெல்லாம் வெளியே வரட்டும்! ஒன்றை ஒன்பதிற்கு விற்றுச் சேர்த்துள்ள பணமெல்லாம் வெளியே வரட்டும்! கள்ளப் பணம், கருப்புச் சந்தைப் பணம், வரி கொடுக்காமல் ஏய்த்துச் சேர்த்த பணம் எல்லாம் வெளியே வரட்டும்!! ஏன் வருகிறது என்பதா மக்களுக்குத் தெரியாது; புரியாது!! மிக நன்றாகப் புரிந்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நான் பேரூர்களில் மட்டுமல்ல, சிற்றூர்களிலே எல்லாம் பார்க்கிறேன்.

என் ஆவல் தீருமளவுக்கும் தோழர்களின் அன்பழைப்பை நிறைவேற்றும் அளவுக்கும் என்னால் எல்லா இடங்களுக்கும் சென்று வர முடியவில்லையே, அதற்குப் போதுமான வலிவு இல்லையே என்றுதான் வருத்தப்படுகிறேன்.

நண்பர்கள் அடுக்கடுக்காக நிகழ்ச்சிகளைக் கூறும்போது சுரீல் என்று கோபம்கூட வந்துவிடுகிறது, இப்படி "வேலை வாங்குகிறார்களே' என்று. ஆனால், சென்று, அங்கு ஆர்வம் ததும்பும் நிலையில் ஆடவரும் பெண்டிரும், முதியோரும், இளைஞரும் திரண்டு இருந்திடக் காணும்போது எல்லாக் கஷ்டங்களும் இருக்கும் இடம் தெரியாமல் பறந்தே போய்விடுகின்றன.

இவ்வளவு பேரும் எதேச்சாதிகாரத்தை எதிர்ப்பவர்கள்.

காங்கிரசினால் மூட்டிவிடப்பட்டுவிட்ட கொடுமை களை எதிர்ப்பவர்கள்.

காங்கிரசுக்கும் கனதனவான்களுக்கும் ஏற்பட்டு விட்டுள்ள கூட்டுச் சதித் திட்டத்தைத் தகர்த்திடத் துடிப்பவர்கள்

. ஏழை வாழ்ந்திட வேண்டும்; இல்லாமை ஒழிய வேண்டும்; நிம்மதி ஓங்க வேண்டும் என்ற உன்னதமான இலட்சியத்துக்காகப் போராடுபவர்கள்.

மொழி காத்திட, உரிமை காத்திட, எதனையும் இழந்திடும் துணிவு பெற்ற தூய உள்ளத்தினர்.

இவர்களை ஆசை அலைக்கழிக்கவில்லை; அச்சம் மருட்டவில்லை; ஆளவந்தார்களின் அட்டகாசம் அடக்கிட முடியவில்லை.

ஏடு பல காட்டி இவர்களை மயக்கிட முடியவில்லை.

ஏதேதோ செய்கிறோம் என்று தித்திப்புத் தடவி இவர்களை இழுத்திட முடியவில்லை.

இவர்கள் அஞ்சா நெஞ்சினர்; அறப்போர் இயல்பினர்,

இப்படை தோற்கின் எப்படை ஜெயிக்கும்?

இவர்கள் பலர்! மிகப் பலர்! இவர்களை வீழ்த்திட முனைபவரோ சிலர்!

இவ்விதமான எண்ணமெல்லாம் கொள்ளுகின்றேன்; இதயத்திலே ஓர் இசையே சுரக்கிறது. அவர்களைக் காண்கிறேன். கனிவு என்றால் என்ன என்பது விளக்கமாகிறது, அவர்களிடம் பேசுகிறேன்; பாசம் என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்கிறேன்; புதியதோர் ஆர்வம் பெறுகிறேன்.

என் உள்ளத்தில் எழுந்திடும் ஆர்வத்தின் அளவு எவ்வளவோ, அந்த அளவு என் உடலில் வலிவு இருக்கக் கூடாதா, இல்லையே என்று எண்ணி ஏக்கம் கொள்கிறேன்.

ஒவ்வொரு கூட்டமும் என்னை அந்த மக்களுடன் பிணைத்துவிடுவதை உணருகிறேன் - பாசப் பிணைப்பு அஃது என்பதால் பெருமிதம் கொள்கிறேன்.

நான் பெற்றிடும் இந்தப் பெருமிதத்தைத்தான் மற்ற பேச்சாளர்களும் பெறுவர் என்பதை எண்ணிப் பார்க்கிறேன்; மிகப் பெரியதோர் குடும்பம் நமது கழகம் என்ற இலக்கணம் மெய்ப்பிக்கப்பட்டு வருகிறது என்பதை உணர்ந்து மகிழ்கிறேன்.

புதுப்பாளையம் பகத்தூர்
சிறுவாளூர் வடுகபாளையம்
தூக்கநாய்க்கன் மேட்டுப்பாளையம்
பாளையம் காளிங்கராயன்பாளையம்
தாசப்பகவுண்டன் தொட்டிபாளையம்
புதூர் அத்தாணி
கூடக்ரை சவுண்டப்பூர்
நம்பியூர் பவானி
பவானிசாகர் கவுந்தப்பாடி
புஞ்சைபுளியம்பட்டி அந்தியூர்
காவ-பாளையம் ஓலகடம்
உக்கரம் ஆண்டிபாளையம்
சத்தியமங்கலம் குருவரெட்டியூர்
கோபிசெட்டிப்பாளையம் கந்தாம்பாளையம்
தாளக்கொம்புபுதூர் கீரனூர்
பெருந்தலையூர் ஆலாம்பாடி
பொத்தபாளையம் பச்சாம்பாளையம்
உடையாம்பாளையம் நாச்சிபாளையம்
கெம்பநாயக்கன் பாளையம் புதுப்பை
கோவை நகர உட் கிளைகள் எரசனம்பாளையம்
கோவை நகரம் கன்னிவாடி
தாயனூர் மூலனூர்
தோலம்பாளையம் புளியம்பட்டி
கெண்டேபாளையம் லக்கமநாயக்கன்பட்டி
காரமடை வெள்ளகோயில்
எல்லப்பாளையம் முத்தூர்
வரதய்யன்பாளையம் காங்கயம்
அன்னூர் வரப்பாளையம்
நீலிபாளையம் தாராபுரம்
கருவலூர் எலகாம்வலசு
பெரிய ஆயிபாளையம் கெல்லிபாளையம்
ராக்கியாபாளையம் சிவன்மலை
அம்மாபாளையம் வெள்ளவாவிபுதூர்
அவினாசி காமாட்சிபுரம்
சேவூர் கண்ணம்பாளையம்
சாவக்கட்டுபாளையம் பட்டணம்
திருமுருகன் பூண்டி பாப்பம்பட்டி
சிறுமுகைபுதூர் அப்பநாயக்கன்பட்டி
ராசிபாளையம் சூலூர்
அருகம்பாளையம் வாகராயம்பாளையம்
திருப்பூர் ஆனைமலை
சோமனூர் காளியாபுரம்
கோம்பக்காடு பழனிக் கவுண்டனூர்
பல்லடம் பொள்ளாச்சி – பல வட்டங்கள்
பள்ளபாளையம் கோடம்பட்டி
வதம்பச்சேரி புளியம்பட்டி
சேகம்பாளையம் ராசக்காபாளையம்
காமநாயக்கன்பாளையம் கொப்பம்புதூர்
பூலவாடி வடசித்தூர்
துங்காவி வெள்ளே கவுண்டன் புதூர்
தாமரைப்பாடி அரசன்பாளையம்
கணியூர் கிணத்துக்கடவு
சோழமாதேவி சேரிபாளையம்
மடத்துக்குளம் மொடக்குறிச்சி
கொழுமம் அரச்சலூர்
கொமரலிங்கம் மேலப்பாளையம்
சாமராயபட்டி புதுப்பாளையம்
மலையாண்டி கவுண்டனூர் குமாரபுரி
கண்ணமநாயக்கனூர் ஈங்கூர்
உடுமலைப்பேட்டை வீரப்பன்சத்திரம்
தேவனூர்புதூர் பெரிய அக்ரகாரம்
காரத்தொழுவு ஈரோடு
வால்பாறை குன்னத்தூர்
வாட்டர் பால்ஸ் ஊத்துக்குளி
கல்லூர் பெருமாநல்லூர்
பச்சைமலை பெங்கால்மட்டம்
பழனியூர் மஞ்சூர்
பெத்தநாயக்கன் பாளையம் குன்னூர்
உதக மண்டலம்  

தம்பி! புஞ்சை புளியம்பட்டி தோழர் சாமிநாதன் அனுப்பிய கடிதத்தின் மூலம், நான் கோவை மாவட்டச் சுற்றுப் பயணத்தின்போது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளச் சென்றிருந்த ஊர்களின் பட்டியலைத் தொகுத்துத் தந்திருக்கிறேன்.

இத்தனை ஊர்களிலும் - இவைகளில் பல, பாளையங்கள் - நமது கழகத்திடம் பற்று நிரம்பக் கொண்டவர் பல்லாயிரவர் இருந்திடக் கண்டு பெரு மகிழ்ச்சி கொண்டேன். அவர்கள் ஆர்வத்துடன் கூறுகின்றனர். "அண்ணா! இந்த முறை வெற்றி நமக்குத்தான்!! கவலைப்படாதீர்கள்'' என்று.

அவர்களுக்குப் புள்ளிவிவரம் போதுமான அளவு தெரியாது. மேற்கோள்கள் அவர்கட்கு மனப்பாடமாகவில்லை. வரலாற்றுச் சான்றுகளை இவர்கள் தேடி அலைந்து கொண்டில்லை.

கண் இருக்கிறது, காண்கின்றனர்; காங்கிரசாட்சியால் நாடு கொண்டுவிட்ட அலங்கோலத்தை.

காது இருக்கிறது; விம்மல், குமுறல், பெருமூச்சு, கதறல் விழுகிறது.

அறிவு இருக்கிறது; தூய்மை கெடாத அறிவு; சிந்திக்கிறார்கள்! தெளிவு பிறக்கிறது.

வயலைப் பார்க்கிறார்கள் வயிற்றையும் பார்த்துக் கொள்கிறார்கள்!

வரட்டும்! வரட்டும் இந்த முறை ஓட்டுக்கு - என்று மெல்லிய குரலில் ஆனால் உறுதி நிரம்பிய தன்மையில் கூறுகிறார்கள்.

இவர்களிடம் காங்கிரஸ் தலைவர்கள் சென்று, நாங்கள் இப்போது நாலாவது ஐந்தாண்டுத் திட்டம் போட்டிருக்கிறோம் என்று சொன்ன உடனே, பூரித்துப்போய் விடுவார்களோ! ஏமாளித்தனமான எண்ணம்!

திட்டம்தானே ஐயா! ஐந்தாண்டுத் திட்டம்!! தெரியுமே! பார்த்தோமே!! அனுபவித்துக்கொண்டுதானே இருக்கிறோம் திட்டங்களை!!

என்றுதான் சலிப்புடன் பேசுவார்கள். அவர்கள் திட்டங்களுக்கு விரோதிகள் அல்ல! ஆனால் திட்டங்கள், ஏழைக்கு பயன்பட வில்லையே என்ற வேதனையால் தவிக்கின்றார்கள்.

அவர்களின் சார்பிலே பணியாற்றிடும் ஆச்சார்ய வினோபா பாவே, அவ்வப்போது காங்கிரசாட்சியினால் விளைந்துள்ள கேடுபாடுகளை விளக்கிக்கொண்டு வருகிறார்.

அவருக்குப் பூசை நடத்தக்கூடக் காங்கிரஸ் தலைவர்கள் முன்வருகிறார்கள். ஆனால் அவருடைய அறிவுரையின்படி நடந்திட மட்டும் மறுக்கிறார்கள். முடியவில்லை!!

தம்பி, இந்த ஐந்தாண்டுத் திட்டம்பற்றி வினோபா மிகக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார். இதனைக் "குருட்டுத் திட்டம்' என்றே கூறுகிறார். நிலைமையைத் தெரிந்து கொள்ளாதவர்கள் தீட்டிடும் திட்டம். அவர்கள் மெத்தப் படித்தவர்களாக இருக்கலாம். ஆனால் ஏழைகளை அவர்கள் கண்டதில்லை!! - என்று சாடுகிறார்.

நிலைமை மிகவும் சீர்கேடடைந்து வருகிறது. இதைத் தில்லியிலுள்ள நமது தலைவர்கள் பார்க்காமல் இல்லை. அவர்கள் அவற்றை நன்கு அறிவார்கள். ஆனால் அவற்றிற்கு மாற்று என்ன என்பதைக் கண்டறியத் திறனில்லாதவர்கள் என்றே நான் வருத்தத்துடன் கூற வேண்டியிருக்கிறது.

திட்டத்தை இயற்றியவர்கள் மிகப் பெரியவர்கள், அவர்களில் சிந்தனையாளர்கள், பொருளாதார சமூக சாஸ்திர நிபுணர்கள் அனைவரும் இருக்கிறார்கள், ஆனால் அனைவருமே இந்தத் தேசத்தின் ஏழையைக் கண்டறியாதவர்கள்.

எல்லோரும் பட்டணத்தையும் பட்டணத்தின் பகட்டான வாழ்க்கையையும் பார்த்துப் பழக்கப் பட்டவர்கள். முதுகோடு முதுகாக ஒட்டிக்கிடக்கும் விவசாயியின் வயிற்றையோ மற்ற ஏழைக் கிராம மக்களின் நிலைமையையோ அவர்கள் கண்டறிந்ததில்லை என்றே கூற வேண்டும். அதைத்தான் திட்டமும் பிரதிபலிக்கிறது.

பதவிபெறும் நோக்குடன் காங்கிரசைக் குறைகூறித் திரிகிறார் என்று வினோபாவேயைக் கூறிடும் துணிவு வராது என்று நம்புகிறேன். இதுவரையில் அத்தகைய துணிவு வரவில்லை.

அவருடைய கண்டனம், மனம் வெதும்பி வெளிவந் திருக்கிறது. இந்த இலட்சணத்தில் திட்டத்தைத் தீட்டியும் நடத்தியும் வந்திருக்கும் காங்கிரசு, மீண்டும் ஆதரவு கேட்கிறதே, என்ன நியாயம்?

நியாயமற்றதுதான். ஆனால் நிதி இருக்கிறதே நிரம்ப! பணம் இருக்கிறதே, கோடி கோடியாக!! பணம் பாதாளம் வரை பாயுமே! - என்கிறார்கள்.

தம்பி! நாடு என்ன பதில் அளிக்க வேண்டும்? என்ன பதில் கிடைக்கப்போகிறது என்பது, உன் உழைப்பைப் பொறுத்து இருக்கிறது.

இடையே உள்ள நாட்கள் அதிகமில்லை; அவை வேகமாகவும் உருண்டோடிக்கொண்டுள்ளன. எனவே உன் நேரம் முழுவதும், நினைப்பு முழுவதும், அறிவாற்றல் அவ்வளவும், இந்த ஒரே காரியத்துக்கு என்ற உறுதியுடன் இன்றே பணியாற்றக் கிளம்பிடுவாயேல், தம்பி! வெற்றி நிச்சயம். நாடு வாழ்ந்திடும்; வாழ்த்திடும்! உன்னால் மட்டுமே இந்த வெற்றியைப் பெற்றுத்தந்திட முடியும்; ஆனால் ஒரே ஒரு நிபந்தனை; மற்ற எதற்கும் இரண்டாவது இடமே - முதல் இடம், ஜனநாயகப் பாதுகாப்புக்கே - கழக வெற்றிக்காகப் பணியாற்றுவதற்கே - என்ற உறுதியுடன் தொண்டாற்ற வேண்டும். முடியுமா? செய்வாயா?

கேள்வி கேட்கிறேன் பார், கேள்வி - செய்வாயா? என்று. இப்போதே அதைத்தானே செய்துகொண்டிருக்கிறாய்!! அந்த மகிழ்ச்சி தந்திடும் வலிவுதானே என்னையும் வேலை செய்திடச் செய்கிறது.

அண்ணன்,

31-7-66