அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


ஓட்டாண்டியாக்கிவிட்டு! (2)
1

கலயம் நிறையவில்லை! கண்ணீர் உலரவில்லை!
நலிவு தலைவிரித்தாடும்போது சுதந்தர விருந்து வைக்க முடியுமா?
சோஷியலிசப் பேச்சு நேர்த்தியாக நெய்யப்பட்டுள்ள சொல்லாடை!
நிற்பது கூண்டில்! வழங்குவது தீர்ப்பு!
திட்டங்களின் பயன் பணக்காரர்களுக்கே!
ஓட்டாண்டியாக்கிய உமக்கா ஓட்டு?

தம்பி!

ஒரு கவிதை வேண்டுமா ? பயப்படாதே நான் எழுதினது அல்ல, நமக்காக என்று எழுதித் தரப்பட்டதுமல்ல, ஒரு கவிஞரின் கற்பனைக் கனி!

கவிஞர்கள் விருப்பம் இருக்கும்போது புகழ்வார்கள், வேறு இடம் சென்றுவிட்டால் முன்னாள்தனை முற்றிலும் மறந்துபோய் எவரெவருக்குத் துதிபாடிக்கொண்டிருந்தனரோ அவர்களையே தூற்றிப் பாடுவரே என்று எண்ணியா தம்பி! கவிஞரின் கற்பனையா என்று கவலையுடன் கேட்கிறாய். அச்சம் வேண்டாம். இந்தக் கவிதை என்னைப் பற்றியதுமல்ல, நமது கழகத்தைப் பற்றியதுமல்ல; நாட்டு நிலையைக் குறித்த கவிதை.

நாட்டு நிலைமை காங்கிரஸ் ஆட்சி காரணமாக நல்லபடி இல்லையே, நலிவு மிகுந்திருக்கிறதே என்று குறை கூறி வருபவர் நாம். ஆகவே நாட்டு நிலைமைபற்றி நமது ஏட்டினுக்காக எழுதி அனுப்பப்பட்ட கவிதை என்றால், காங்கிரஸ் ஆட்சியினைக் குறித்துக் கண்டிப்பதாகத்தான் இருக்கும்; அவை அறிதலும் கவிகளுக்கு உண்டே என்கிறாயா? தம்பி! இக்கவிதை, நாட்டு நிலைமைகள் நலிவுற்றிருப்பதைத்தான் காட்டுகிறது. ஆனால் நமக்காக இயற்றி அனுப்பப்பட்டது அல்ல; காங்கிரசை ஆதரிக்கும் ஏட்டுக்காக அனுப்பப்பட்டு வெளியிடப்பட்ட கவிதை. "குமுதம்' இதழில், சுரபி எனும் கவிஞர் வெளியிட்டது.

ஆசிரியர் கேட்டுக்கொண்டார்போல இருக்கிறது, சுதந்திரத்தினால் கிடைத்த சுவைபற்றிக் கவிதை தரும்படி.

கேட்டதையே கேட்டார். பாவம் புதிதாகக் காதல் கொண்டு கசிந்து கண்ணீர் மல்கிக்கொண்டிருக்கும் கவிவாணர்களை மட்டும் கேட்டிருக்கக்கூடாதா!! காவடிச்சிந்தும், திருப்புகழுமாகப் பொழிந்து தந்திருப்பார்களே! ஆசிரியர் அப்படிப்பட்ட "சிந்து' ஒன்றையும் வெளியிட்டார். இதோ நான் இப்போது உன் பார்வைக்குக் கொண்டுவரும் பாடலையும் வெளியிட்டார்! எவரெவருக்கு எதெது தேவையோ அதை எடுத்துக்கொள்ளட்டும் என்ற பெருநோக்கம் காரணமாக என்று எண்ணுகிறேன். அல்லது அவருக்கே ஒருவேளை இப்படியும் மற்றோர் வேளை அப்படியுமாக எண்ணம் எழும்புமோ என்னவோ தெரியாது.

கவிதை தந்திடச் சொல்லி ஆசிரியர் கேட்டதும் "சுரபி' கவலைப்படுகிறார், என்னத்தைப் பாட என்று தலைப்பே அதுதான். இனி கவிதையைப் படித்திடத் தொடங்கு, தம்பி!

மன்னிக்க வேணுமையா
ஆசிரியரையா!
என்னத்தைப்
பாட ஐயா?
சொன்னதையே
புரட்டிச்
சுண்டக் கறி
சமைத்துச்
சுதந்திர விருந்து
வைக்க - இந்தச்
சுரபியாலாகாதையா?

துவக்கத்திலேயே சூடு கலந்துவிடுகிறது. கவிதை கேட்கிறீர்கள், கவிதை! எதைப்பற்றிய கவிதையை எதிர்பார்க்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும்; பாரத நாட்டின் கொடி பட்டொளி வீசிப் பறந்திடுவதுபற்றி, "நானும் மனிதன், நாடாள்வேன்' எனக் கூறச் செய்த ஆட்சியின் பெருமை, அடிமைத்தளைகள் பொடிப் பொடியாகிவிட்ட பெருமை, இவை பற்றித்தானே! இதற்கு நான்தானா அகப்பட்டேன்; என்னிடம் இதனை எதிர்பார்க்காதீர் - இது அரைத்த மாவை அரைப்பது - புளித்துப் போய் விட்டது. . . வேண்டாம்;

சொன்னதையே புரட்டிச்
சுண்டக்கறி சமைத்துச்
சுதந்திர விருந்துவைக்க
இந்தச் சுரபியாலாகாதையா!

என்று தெரிவிக்கிறார். தெரிவித்துவிட்டுப் பெருமிதமாக எடுத்துரைத்திட என்னய்யா இருக்கிறது என்று கேட்கவே செய்கிறார்:

நாற்பதுகோடி பொங்கி
ஐம்பதாய் ஆவதையா?
நாழிக்குக் கையேந்தி
நகருங் குயூவினையா?
ஏற்பதில் போட்டியிட்டு
எய்டுகள் வாங்கிவந்து
யானைப்பசிக்குப் பொரி
எண்ணிக் கொடுப்பதையா?
என்னத்தைப் பாட ஐயா!

சுதந்திர ஆட்சி நடைபெறுகிறது. ஆனால் மக்கள் சோற்றுக்கு அலையும் நலிவு தலைவிரித்தாடுகிறது. இந்தக் கண்றாவிக் காட்சியைக் காணக் காண உள்ளம் வேதனைப்படுகிறது. நீங்களோ சுதந்திரத்தின் அருமைபற்றிப் பாடச் சொல்லுகிறீர்கள் - என்னத்தை ஐயா! பாடுவது! என்று கேட்கிறார். சுதந்திரம் வந்தால், பசிப்பிணி நீங்கிவிடும், மக்கள் நல்வாழ்வு வாழ்வார்கள் என்று சொல்லி வந்தோம்; சொல்லிக்கொண்டே இருக்கிறோம்; இந்த (அவ) இலட்சணத்தைப்பற்றி என்னத்தைப் பாடுவது என்கிறார்.

திட்டங்கள் தீட்டிவைத்துத்
தில்லானா பாடி வந்தோம்
தேனும் பாலும் பெருகித்
தெருவெல்லாம் ஓடுமென்றோம்
சட்டியில் போட்டாச்சு
சற்றே பொறுங்கள் என்றோம்.
சத்தம் பலத்ததல்லால்
சாதங் கொதிக்கக் காணோம்
என்னத்தைப் பாட ஐயா!
ஏட்டிலே பாத்திகட்டி
எழுத்தை வாரி விதைத்து
எழில் பொங்க வார்த்தைநட்டு
பிரசங்க மாரிபெய்து
கூட்டுக்குழு விளைத்துக்
கொத்தறிக்கை அறுத்துக்
கொட்டி அளந்து வந்தால்
கும்பி நிறைந்திடுமோ?
இரண்டல்ல ஒன்றல்ல
இருபதை ஓட்டிவிட்டோம்
இருந்ததைச் சுரண்டுவதில்
எல்லோரும் போட்டியிட்டோம்
அருண்டவர் படைகளை
அண்டையில் கொண்டுவிட்டோம்
ஆசிய ஜோதியையும்
அணைத்து விழுங்கிவிட்டோம்
என்னத்தைப் பாட ஐயா!
பாயும் படுக்கையுமாய்த்
தாயைக் கிடக்கவிட்டுப்
பகலுமிரவும் பேயாய்ப்
பதவிக்கலைந்து வந்தோம்
நாயும் நரியும் பொல்லா
நச்சரவும் மேயும்
நைந்த குடிசைக்குள்ளே
நாடகமாடி வந்தோம்.
இரும்புக்கு வீண்சண்டை
வரம்புக்குப் போராட்டம்
இளகிடுங் கோவாவை
விழுங்கிட வெறியாட்டம்
துரும்புக்குத் துஜங் கட்டி
உறவுக்குக் குழிவெட்டத்
துடித்திடும் வீணர்க்குச்
சுதந்திரம் ஏதுக்கு?
கருப்பு வெளுக்கவில்லை
கலயம் நிறையவில்லை
கனவு கண்ட கிழவன்
கண்ணீர் உலரவில்லை.
குறுக்கு நிமிரவில்லை
கும்மிருள் நீங்கவில்லை
கொண்டாட்டப் பாட்டு
நெஞ்சக் குழியில்
சுரக்குமோ அய்யா!
என்னத்தைப் பாட ஐயா!

தம்பி! கடைசியிலே, இசை மொழியிலே கூறுவார்களே, "முத்தாய்ப்பு' என்று, அது எவ்வளவு அருமையாக அமைந் திருக்கிறது பார்த்தனையா!

உதட்டு அசைவு அல்ல ஐயா! கவிதை உள்ளத்திலிருந்து கிளம்பும் உணர்ச்சி, உண்மை; கவிதை! நாட்டு நிலையைக் காணும்போது இதயத்தில் வேதனை மூண்டிடுகிறது. அங்கிருந்து கவிதையாக சுரக்கும்! - என்று கேட்பதன் மூலம் "சுரபி' அவர்கள் இன்று சுதந்திரத்தால் கிடைத்த சுவையும் பயனும் பற்றிய கவிதைகள் பலவும் நெஞ்சக் குழியிலிருந்து சுரந்தவை அல்ல, எதுகையும் மோனையும் விளையாடிடச் செய்யும் வித்தை! வெறும் உதட்டும் அசைவு!! - என்று காட்டுகிறார்.

நாடு ஆள்வது காங்கிரஸ் கட்சி - நாட்டு நிலைமை நெஞ்சக் குழியிலே எழுச்சியைச் சுரந்திடச் செய்வதாக இல்லை என்று "சுரபி' கூறுகிறார் - இது மறைமுகமாகக் காங்கிரஸ் கட்சியைக் கண்டிப்பதாக இருக்கிறது என்பது அல்ல, நான் இந்தக் கவிதையைச் சுவைத்ததற்கான காரணம்.

இது நமது நாட்டு அறிவாளர்களின் உள்ளத்திலே முகிழ்த்துள்ள புதிய கருத்தோட்டத்தைக் காட்டுகிறது என்பதால்.

எதிர்பார்த்தவர்கள் ஏமாற்றமடைந்தால் எத்தனை சலிப்பு ஏற்பட்டுவிடும் என்பதை விளக்குகிறது என்பதால்.

சுபிட்சம் வரும், சுகவாழ்வு வரும் என்று திரும்பத் திரும்ப எத்தனை முறை சொல்லிக்கொண்டே இருப்பது ? நலிவு தலைவிரித்தாடிடும் நிலை நீடிக்கும்போது - எப்படிச் சுண்டக்கறி சமைத்துச் சுதந்திர விருந்து வைக்க முடியும் என்று கேட்கவேண்டிய விதமாக உள்ளம் நைந்த நிலையில் சிந்தனையாளர்கள் உள்ளனர் என்பதைக் காட்டுகிறது என்பதால்.

திரும்பத் திரும்பச் சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்க என்னால் ஆகாதய்யா!! வேறு ஆளைப் பாருமய்யா!! என்று கூறிடும் முறையிலே கவிதை இருப்பது. மேலும் மேலும் மக்களை மயக்க நிலையில் வைத்திருக்கும் காரியத்தில் ஈடுபட மனம் இசையவில்லை என்று அறிவாளர் பலரும் கருதுகின்றனர் என்பதைக் காட்டுகிறது என்பதால்.

சென்ற கிழமை நான் கூறினேனே தம்பி! "சுயராஜ்யம்' என்ற சொல் கிளறிவிட்ட ஆசைக் கனவுகள் பல; சுவை மிக்கன; எனவே அந்தச் சொல் கேட்டு மக்கள் சொக்கிக் கிடந்தனர் என்று. அந்த நிலையிலிருந்து விடுபட முனைகின்றனர் விளக்கம் பெற்றோர் என்பதனைக் காட்ட உதவுகிறது இந்தக் கவிதை என்பதைத்தான் முக்கியமானதாகக் கொள்கிறேன்.

அந்தச் சுண்டக்கறி சமைத்தளிக்கவே சலிப்பு ஏற்பட்டு விட்டிருக்கிறது - நெடுநாட்களாக இன்பநிலை வரப்போகிறது என்று எடுத்துக் கூறிவந்தவர்களுக்கு.

புதியவர்கள் விறுவிறுப்பாகத்தான் இருப்பார்கள்; அவர்கள் மக்களை அந்தப் பழைய பேச்சிலேயே சொக்க வைக்க முடியும், சொல்லில் சுவை கூட்டி, சந்த இனிமை காட்டி என்று எண்ணுகின்றனர்.

"சுரபி' - என்னத்தைப் பாட ஐயா! என்று சலிப்புடன் கேட்பதுபோலத்தான், சுதந்திர ஆட்சியின் அருமை பெருமை, அந்தச் சுதந்திரம் பெற்றிடக் காட்டப்பட்ட வீரம், தியாகம் ஆகியவைபற்றிய சிந்துகளைக் கேட்டுக் கேட்டு, மக்கள் சலிப்படைந்து போய்விட்டுள்ளனர்.

பொற்கோழி கூவிற்று பொழுது புலர்ந்தது என்று நிலை இருக்கும்போதுதான், சேவலின் கூவல் இசை போன்றிருக்கிறது - மற்றப் போதினில் அது "கத்தல்' ஆகிறது, காது குடைகிறது.

சுதந்திர ஆட்சி, மக்களை நிம்மதியான வாழ்வு பெறச் செய்திருந்திருந்தால், சிந்து பாடிடவும் மனம் இடம் தரும், கேட்டிடவும் இனிமை பயக்கும். இப்போது சலிப்பு மட்டுமல்ல - கேலி செய்வதுபோலவேகூட இருக்கிறது.

கவிஞர் என்னத்தைப் பாட ஐயா! என்று சலிப்புடன் கேட்பதுபோலவே, ஆளவந்தார்களும், சுயராஜ்யத்தின் அருமை பெருமைபற்றிச் சுவையூட்டும் பேச்சுப் பேசி பதினெட்டுக்கும் அதிகமான ஆண்டுகள் ஓட்டிவிட்டோம், பதவியைக் காப்பாற்றிக் கொண்டுவிட்டோம், மேலும் மக்களை நமது பிடியிலே வைத்திருக்க "என்னத்தை எடுத்துக் காட்டுவது'' என்று யோசித்துப் பார்த்து, தயாரித்த சுவைப் பானந்தான் தம்பி! சோஷியலிசம் பற்றிய பேச்சு.

சுயராஜ்யம் வருகிறது, உன் வாழ்வு துலங்கப்போகிறது என்று ஆண்டு பல பேசியாகிவிட்டது. அதன் சுவை குறைந்துவிட்டது, ஆகவே சோஷியலிசம் வருகிறது, உன் இன்னல் ஒழிந்துவிடப்போகிறது, உனக்குப் புதுவாழ்வு கிடைக்கப் போகிறது என்ற புதிய பேச்சு ஆரம்பமாகி இருக்கிறது.

இது நெஞ்சக் குழியில் இருந்து சுரப்பது அல்ல, நேர்த்தியாக நெய்யப்பட்டுள்ள சொல்லாடை!!

காங்கிரஸ் பிரசாரகர்கள் "சுண்டக் கறி' சமைத்துக் கொடுத்துச் சலிப்படைந்து கிடந்த நேரத்தில் "சுடச்சுட' புதுச்சரக்கு இதோ! என்று தலைவர்கள் சொன்னதும் மகிழ்ச்சி அடைந்து கூவிக் கூவி விற்கிறார்கள்! ஆதாயம் நிரம்பக் கிடைக்கும் என்றும் நம்புகிறார்கள். விவரம் தெரிந்தவர்கள் விளக்கம் கேட்கிறார்கள். "சோஷியலிசம் பேசுகிறீர்கள், கேட்க இனிப்பாகத்தான் இருக்கிறது. ஆனால் திட்டம் என்ன காட்டுகிறீர்கள்? சோஷியலிசம் என்பது ஒரு லட்சியம் - அதை அடைவதற்கான திட்டம் என்ன மேற்கொண்டிருக்கிறீர்கள்?'' என்று கேட்கும்போது, காங்கிரஸ் பேச்சாளர்களுக்குக் கோபம் வருகிறது - பதில் கூற முடியாததால்.

ஏழையின் இன்னலைத் துடைக்கப் போகிறோம்.

ஏழைக்குச் சோறு, துணி, வீடு, வேலை எல்லாம் கிடைத்திடச் செய்யப் போகிறோம் என்று கூறுகிறார்கள்.

மகிழத்தக்கதுதான்! ஆனால் எப்படி? என்று கேட்டால் பதிலைக் காணோம்!!

எப்படி ஏழைக்கு நல்வாழ்வு தரப் போகிறீர்கள் என்ற கேள்விக்கு முன்னதாக மற்றோர் கேள்வியும் எழுகிறது.

ஏன் ஏழை, ஏழையாக இருக்கிறான்?
எப்படி அவன் ஏழையானான்?

என்ன காரணத்தால் பலர் ஏழைகளாகவும் ஒரு சிலர் மட்டும் செல்வர்களாகவும் இருந்து வருகின்றனர்?

இந்த அடிப்படைக் கேள்வியின் தொடர்பாக வேறோர் கேள்வியும் பிறக்கிறது.

ஏழையின் வாழ்வு துலங்கும்படிச் செய்யப் போகிறோம் என்கிறீர்களே, பதினெட்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து வருகின்றீர்களே, இந்த உங்கள் ஆட்சியிலே ஏழையின் வாழ்வு துலங்க என்ன செய்திருக் கிறீர்கள்? எந்த அளவு வெற்றி கிடைத்திருக்கிறது?

இந்தக் கேள்விகளை நாம் எழுப்பும்போது தம்பி! ஒன்று தெளிவாகத் தெரிவித்துவிடுகிறோம்,

சோஷியலிசம் கூடாது என்றோ
சோஷியலிசம் கிடைக்காது என்றோ

நாம் கருதவுமில்லை, கூறவுமில்லை. சோஷியலிசத்தை வரவேற் கிறோம்; அதேபோது விளக்கம் கேட்கிறோம். அந்தப் புனிதமான இலட்சியத்தைச் செயல்படுத்தத் தக்க வழிமுறைகள் என்ன கொண்டிருக்கிறீர்கள்? கூறுங்கள் என்று கேட்கிறோம்.

காங்கிரஸ் ஆளுங்கட்சியாவதற்கு முன்பே, ஆளுங்கட்சி ஆகப்போகிறது என்று தெரிந்த உடனே, மோப்பம் பிடித்துக் கொண்டு காட்டு விலங்குகள் இரைதேடுவதுபோல, சீமான்கள் காங்கிரசின் நண்பர்களாகிவிட்டனர்! வழிகாட்டிகளாகி விட்டனர்! காங்கிரசை ஊட்டி வளர்ப்பவர்களாகிவிட்டனர்! இதை எந்தக் காங்கிரஸ்காரரும் மறுக்க மாட்டார், புதிதுகள் தவிர.

ஆட்சி நடத்திடக் காங்கிரஸ் முன்வந்த பிறகு, இந்த உறவு மேலும் வலுப்பட்டுவிட்டது; சிற்றரசர்கள், சீமான்கள், வணிகக் கோமான்கள் பெரும்பாலோர் இன்று காங்கிரஸ் கட்சியில் உள்ளனர். மறுத்திட இயலாது.

ஆனால் இவர்கள் தமது இயல்பை மாற்றிக் கொண்டவர்கள் - தேசியவாதிகள் - காந்தீயர்கள் என்று வாதாடுகிறார்கள். இது சாதுப் புலி, சைவப் புலி, சன்யாசிப் புலி என்று கூறுவதுபோன்ற வேடிக்கையான வாதம்.

காங்கிரசிலே சேர்ந்துள்ள எந்த நிலப் பிரபுவும், தன் நிலங்களைப் பகிர்ந்து கொடுத்துவிட்டு, எல்லோரும்போல நானும் வாழ்வேன் என்று கூறிக்கொள்ளும் "கருணாமூர்த்தி'யாகிவிடவில்லை.

இப்போதும் அவர் பெரிய பண்ணை நடத்துகிறார். ஆள் அம்பு ஏராளம். கொடுக்கல் வாங்கல் எப்போதும்போல. கட்டிவைத்து அடிப்பதுகூட நடந்து வருகிறது. மாளிகையிலே கொலு இருக்கிறார், வைரம் மின்னுகிறது, எந்த மெருகும் குறையவில்லை.

ஒரே ஒரு "தியாகம்' செய்கிறார்! நாலு பேர் முன்னாலே வரும்போது புன்னகை காட்டுகிறார், புதிய கதர்ச்சட்டை போடுகிறார்.

மாடாக உழைத்து ஓடாகத் தேய்ந்துவருகிறானே உழவன் அவன் இப்போதும், சேரியிலும் பாதை ஓரத்திலும்தான் இருக்கிறான்; பண்ணையாரின் தயவு இருக்கும் வரையில்தான் அவனுக்குப் பிழைப்பு!