அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


ஓட்டாண்டியாக்கிவிட்டு! (2)
2

பிழைப்பு! என்ன மாறுதல் அந்தப் பிழைப்பிலே காணுகிறான்? அதே ஏழ்மை - கவலை - திகைப்பு - திகில். ஒரே ஒரு மாறுதல்!

ஐயாவும் காங்கிரஸ்
நானும் காங்கிரஸ்

என்று கூற முடிகிறது. அவ்வளவுதான்.

கலெக்டர் எப்போதும்போல, பண்ணையார் மாளிகைக்குத் தான் வருகிறார். "பண்ணையாட்கள் இப்படித்தான், ஏதாவது தகராறு கிளப்பிக்கொண்டுதான் இருப்பார்கள்! நான் பத்துப் போலீஸ் அனுப்பிவைக்கிறேன்'' என்று தைரியம் தருகிறார்.

தாசில்தாரருக்கு எப்போதும்போல பண்ணையார் ஆள் அனுப்பிவைக்கிறார், "இன்னார் நமக்கு ரொம்பவும் வேண்டியவர், கவனியுங்கள்' என்று. ஆகட்டும் என்று பதில் அனுப்புகிறார் அதிகாரி முன்புபோலவே.

போலீஸ் அதிகாரிகள், முன்புபோலவே, பெரிய பண்ணையாருடய புன்னகையை விருந்தாகக் கொள்கிறார்கள்.

ஒரு மாறுதலும் ஏற்படவில்லை. ஏற்படாது. நிலப்பிரபு ஆகட்டும் தொழிலதிபராகட்டும், அவர்களுக்கு ஒரு தனி "இயல்பு' எப்படி ஏற்பட்டுவிடுகிறது?

அந்த இயல்புக்குக் காரணம், தன்னிடம் நிறையச் செல்வம் இருக்கிறது, புதிய செல்வமும் சேர்ந்து வருகிறது என்ற உணர்வு அவருக்கு. தான் பிறரை அடக்கி ஆளத்தக்கவர் என்ற இயல்பைக் கொடுக்கிறது. அவரிடம் குவிந்துகிடக்கும் செல்வத்தைக் கண்டதாலே ஏழையர் பலரும் அவர்முன் குனிந்து நிற்கிறார்கள், பணிவு காட்டுகிறார்கள். பலர் தன்முன் குனிந்து நிற்பதைக் காண்பதால் அவருக்குத் தன்னாலே நிமிர்ந்து நிற்கும் இயல்பு வருகிறது.

இந்த இயல்பு எதனால் ஏற்படுகிறதோ அதனை மாற்றினாலொழிய இயல்பு எப்படிப் போகும்?

இவ்விதமாகவெல்லாம் கேட்டிடின் தம்பி! காங்கிரசார் கோபம் கொள்கிறார்கள். கோபத்துக்குக் காரணம் என்னவென்றால், அவர்களுக்கு உள்ளூற நாம் கூறுவது உண்மை என்று படுகிறது. அந்த உண்மை உள்ளத்தைக் குத்துவதாலே ஒரு எரிச்சல். பாவம், அந்த எரிச்சலைத் தீர்த்துக்கொள்ள நம்மை ஏசுகிறார்கள். அதிலே அவர்களுக்கு ஒரு ஆறுதல். அந்த வகையிலே, தம்பி, நாம் அவர்களுக்கு ஒரு விதமான உதவிகூடச் செய்கிறோம் என்று கூறலாம்.

செல்வம், நிலமாகவோ தொழில் அமைப்பாகவோ சிலரிடமே இருந்திட எவ்வளவு நாள் அரசு அனுமதித்துக் கொண்டு வருகிறதோ அந்த நாள்வரையில், அதற்கு ஏற்ற இயல்பு இருந்துதான் தீரும்.

செல்வம் ஒரு சிலரிடம் குவிந்திருப்பது அவர்களுக்குத் தனி இயல்பைத் தருகிறது என்று நான் கூறும்போது செருக்கு, கொடுமை செய்திடும் போக்கு ஆகியவற்றை மட்டுமே குறிப்பிட வில்லை. செல்வர்களிலே செருக்கற்றவர்களே இல்லையா என்றோ செல்வமே இல்லாமல்கூடச் செருக்குடன் திரிபவர்கள் கிடையாதோ என்றோ கேட்டுவிடாதே. செருக்கும் கொடுமை செய்திடும் போக்கும் கொண்ட இயல்பைப் பற்றிய ஆராய்ச்சியை நான் இங்கு நடத்தவில்லை.

நாம் பணக்காரர், நம்மிடம் பணம் இருப்பதால், பணமற்றவர்கள் நம்மிடம் பணிவுடன் இருக்கிறார்கள்.

நாம் பணம் படைத்தவர்கள்.

பணம் படைத்தவர்களாக இருப்பதால் நிம்மதியான, நாலு பேர் கண்டு மதிக்கத்தக்க வாழ்வு நடத்த முடிகிறது.

நாம் பணம் படைத்தவர்கள். அதனால் நாம் தொழிலை நடத்திட வசதி பெற்றிருக்கிறோம். நாம் தொழில் நடத்தினால் பலரும் நம்மிடம் வேலை செய்திட வருவார்கள். நம்மிடம் வேலை செய்து பிழைப்பதால், நம்மை "முதலாளி'யாகக் கொள்கிறார்கள்!

ஆக நாம் ஒரு "அரசு' நடத்த முடிகிறது.

இந்தவிதமான உணர்வுகள் ஊட்டி வளர்த்திடும் இயல்பு பற்றித்தான் கூறுகிறேன்.

தம்பி! இதிலே நாம் கவனிக்கவேண்டிய ஒன்று தொக்கி நிற்கிறது.

எந்தச் செல்வம் தனக்கு ஒரு தனிச் செல்வாக்கையும் மதிப்பையும் பெற்றுத் தந்து வருகிறதோ, அந்தச் செல்வத்தை இழந்துவிடக்கூடாது என்ற உணர்வும், அந்தச் செல்வம் போய்விட்டால், முன்புபோலச் செல்வாக்கும் மதிப்பும் கிடைக்காது என்ற அச்சமும், ஆகவே அந்தச் செல்வத்தைக் கட்டிக் காப்பாற்றியாக வேண்டும் என்ற உறுதியும், அந்தச் செல்வத்தைக் காப்பாற்றிக்கொள்வதற்காக எல்லா முறைகளையும் மேற்கொண்டாக வேண்டும் என்ற துணிவும், அவர்களுக்கு இயல்புகளாகிவிடுகின்றன.

பாம்புப் புற்றுக்குப் பால் வார்க்கும் தருமமும், எறும்புகளுக்கு அரிசி போடும் தருமமும், காக்கை கழுகுகளுக்குத் தின்பண்டம் போடும் தருமமும் செய்திடுவதிலே விருப்பமும் பழக்கமும் கொண்ட "முதலாளிகள்' அதிக விலைக்குப் பண்டத்தை விற்பதற்கோ, கள்ள மார்க்கட் நடத்துவதற்கோ, பொய்க் கணக்கு எழுதுவதற்கோ கடன்பட்டவன் கதறிடும்போது அந்தக் கண்ணீரைக் கண்டும் மனத்தைக் கல்லாக்கிக்கொள்வதற்கோ துளியும் தயங்குவதில்லை அல்லவா?

அரிசியில் வேண்டுமென்றே கல்லையும் மண்ணையும் கலந்து, ஒரு படியை ஒன்றரைப் படியாக்கி விற்றிடும் "அக்ரமம்' செய்திடும் அதே "முதலாளி', கோயி-லே உற்சவம் நடத்தி, வெண்பொங்கல் பிரசாதம், பக்தர்களுக்கும் ஏழைகளுக்கும், வழங்கிடும் "புண்யம்' செய்கிறார்! பார்த்திருக்கலாமே! நான் அதை மட்டும் அல்ல, தம்பி! அந்தப் "புண்யவான்', அந்தப் பொங்கலில் "கல்' ஒன்றிரண்டு இருந்திடக் கண்டு கடுங்கோபம் கொண்டு என்ன அநியாயமய்யா இது! என்று கேட்டதையும் கண்டிருக்கிறேன்.

செல்வவான்கள் தமக்குச் சமூகத்திலே கிடைத்திருக்கிற "இடம்' தம்மிடம் உள்ள செல்வத்தின் காரணமாகத்தான் என்பதை உணர்ந்திருக்கும்போது அந்தச் செல்வத்தைக் காப்பாற்றிக்கொள்ளவும், வளர்த்துக்கொள்ளவும்தான் முனைந்து நிற்பார்கள். அஃது அவர்களின் இயல்பு ஆகிவிடுகிறது.

ஆகவே காங்கிரசில் சேர்ந்துகொண்ட செல்வர்கள் தமது இயல்பை மாற்றிக்கொண்டவர்கள் என்று வாதாடுவதிலே பொருள் இல்லை.

அவர்களுக்குள்ள இயல்பை மாற்றிக்கொள்ளச் செய்வோம் என்று சில காங்கிரஸ்காரர் பேசக் கேட்டிருக்கிறேன். "மகாத்மா'வாக, காந்தியாரை ஏற்றுக்கொள்ளச் சம்மதித்த செல்வர்கள், பணக்காரர்கள் தம்மிடம் உள்ள செல்வம் தம்முடைய சுகபோகத்துக்காக என்று கருதாமல், சமூகத்தின் நன்மைக்காக அந்தச் செல்வம் தம்மிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது, தாம் அந்தச் செல்வத்தை சமூக நன்மைக்காகப் பயன்படுத்தும் செயலை மேற்கொண்டுள்ள "தர்மகர்த்தாக்கள்' என்ற எண்ணத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்ற உபதேசத்தை ஏற்றுக்கொண்டு அதன்படி நடந்திட முற்பட்டனரா? இல்லையே!

ஊசியின் காதிலே ஒட்டகம் நுழைந்தாலும் நுழையலாம், பணக்காரன் பரமண்டலத்துக்குள்ளே நுழைய முடியாது.

பிறந்தபோது கொண்டு வந்ததில்லை, போகும்போது கொண்டு செல்லப்போவதுமில்லை என்றும்,

செல்வம் நிலைக்காது, அது செல்வோம், செல்வோம் என்று செப்பிக்கொண்டே இருப்பதாகும் என்றும்

எப்படி எப்படியெல்லாமோ கூறிப் பார்த்தாகிவிட்டது. இப்போது கதர்ச் சட்டை போட்டுவிடுவதாலா அந்த இயல்பு மாறிவிடும்? மாறாது. ஆகவேதான், இத்தனை சிற்றரசர்களை, சீமான்களை, தொழிலதிபர்களை, வியாபாரக் கோமான்களைச் சேர்த்து வைத்துக்கொண்டு சோஷியலிசம் பேசுகிறீர்களே, இதிலே நேர்மைகூட இருப்பதாகத் தெரியவில்லையே, அருள் மொழிகளே அவர்களின் இயல்பை மாற்றிடவில்லையே, உங்கள் பேச்சா அவர்களின் இயல்பை மாற்றிவிடும் என்று நாம் கேட்கிறோம்?

இவ்வளவு விளக்கமாகக் கேட்பதுதான் தம்பி! அவர்களுக்கு ஆத்திரத்தை மூட்டிவிடுகிறது.

புரோகிதரிடம் சொல்லிப் பாரேன், எங்கள் வீட்டுக் கிணற்றுத் தண்ணீரையே குடத்திலே கொண்டுவரச் செய்து, மாவிலை சொருகிவிட்டு "கங்கா தீர்த்தம்' என்று கூறி எங்கள் தலையிலேயே தெளிக்கிறீரே ஐயா! இது என்ன வேடிக்கை! என்று. அவராவது சிரிப்பார்! மற்ற பெரியவர்களுக்குத்தான் கோபம் பீறிட்டுக்கொண்டு வரும்; "இது என்ன போக்கிரித்தனமான கேள்வி?'' என்பார்கள்.

அதுபோல ஒரு வேடிக்கை நடத்துகிறார்கள் ஊரிலுள்ள அத்தனை பணக்காரர்களையும் படைதிரட்டி வைத்துக்கொண்டு, நாங்கள் சோஷியலிசத்தைக் கொண்டுவரப்போகிறோம் என்று.

நாட்டிலே இன்று சீமான்களிடம் உள்ள செல்வம் முழுவதையும் பறித்து, ஒரு இடத்திலே குவித்து வைத்து, நாட்டு மக்கள் அனைவருக்கும் அந்தச் செல்வத்தைச் சமமாகப் பங்கு போட்டுக் கொடுத்துவிடுவதுதான் முறை. சோஷியலிசம் அதுதான். ஆகவே அதைச் செய்யுங்கள் என்று நாம் கூறுவதாகக் கற்பித்துக்கொண்டு, வக்கணை பேசுவதிலே வல்லவர்கள் கேட்கிறார்கள்,

உள்ள செல்வத்தைப் பங்கு போட்டால் ஆளுக்குப் பத்து பைசாகூட வராதே! தெரியுமா? என்று.

இப்போது உள்ள செல்வத்தைப் பங்குபோடச் சொல்லிக் கேட்பதுதான் சோஷியலிசம் என்று யாரும் கூறிடவில்லை.

செல்வ உற்பத்திக்கான சாதனங்கள், வாய்ப்புகள் ஒரு சிலரிடம் மட்டும் அவர்கள் செல்வம் படைத்தவர்களாக இருப்பதால் சிக்கிக்கொள்கின்றன. அந்தச் சாதனங்களும் வாய்ப்புகளும் பணம் படைத்த சிலரிடம் சிக்கிக் கொள்வதால் அவர்களிடமே மேலும் மேலும் செல்வம் போய்ச் சேர்ந்துவிடுகிறது. செல்வம் இவ்விதம் சிலரிடமே சென்று அடைபட்டு விடுவதால், மிகப் பலரின் வாழ்க்கை செல்லரித்ததாகிவிடுகிறது. இந்த முறையை மாற்றுவதுதான் சோஷியலிசம்.

செல்வ உற்பத்திக்கான சாதனங்களையும் வாய்ப்பு களையும் ஒரு சிலரிடமே விட்டுவைக்கும் முறையை மாற்றாத வரையில், ஏழையின் வாழ்விலே முன்னேற்றம் காண முடியாது.

இந்த நோக்கத்துடன், இந்த வழியில் காங்கிரஸ் அரசு திட்டமிட்டு வேலை செய்கிறதா என்பதுதான் மிக முக்கியமான கேள்வி.

இந்த முறையிலே இந்நாள் வரையில் காங்கிரஸ் அரசு வேலை செய்யவில்லை.

இந்த முறையிலே வேலை செய்யாததால்தான் இத்தனை ஆண்டுகளாக உற்பத்தியான செல்வம் சமூகத்தில் பரவலாக்கப்படவில்லை. ஒரு சிலரிடம் முடங்கிவிட்டிருக்கிறது.

அப்படிச் சமூகத்தில் பரவிடாமல், ஒரு சிலரிடம் செல்வம் குவிந்துவிட்டதனால்தான், ஏழை மேலும் ஏழையாகிறான் பணக்காரன் மேலும் பணக்காரனாகி இருக்கிறான் என்று கூறப்படுகிறது.

இப்போது காங்கிரஸ் அரசு இத்தனை ஆண்டுகளாக, செல்வம் ஒரு சிலரிடம் சென்று குவிந்துவிட இடம் கொடுத்ததற்கும், உடந்தையாக இருந்ததற்கும், அதிலே (தேர்தல் நிதி என்ற முறையில்) பங்கு பெற்றதற்கும் சமூகத்திடம் மன்னிப்புக் கேட்கவும், சமூகம் அளிக்கும் தண்டனையை ஏற்றுக்கொள்ளவும் வேண்டிய குற்றவாளி நிலையில் இருக்கிறது.

குற்றவாளிக் கூண்டிலே நின்றுகொண்டே, காங்கிரஸ் அரசு, தீர்ப்பு அளிக்கிறது, நாட்டிலே சோஷியலிசம் கொண்டுவர என்னினும் தகுதி உள்ளவர்கள் எவரும் இல்லை என்று.

இந்தக் கொடுமையையும் இந்நாடு தாங்கிக்கொள்ள வேண்டி இருக்கிறது.

செல்வம், செல்வப் பெருக்கத்திற்கான சாதனங்கள், வாய்ப்புகள் சமூகத்தில் பரவலாக்கப்படாமல், ஒரு சிலரிடம் மட்டுமே குவிந்துவிட்டது என்பதனைக் காங்கிரஸ் தலைவர்களே ஒப்புக்கொண்டாகிவிட்டது.

ஐந்தாண்டுத் திட்டங்களின் மூலம் புதிதாக உற்பத்தியான செல்வம் எங்கே போயிற்று என்று தெரிய வில்லை என்று துவக்கத்தில் பேசிய காமராஜர், இப்போது வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டுவிட்டிருக்கிறார். ஐந்தாண்டுத் திட்டங்களால் உற்பத்தியான செல்வம் இதுவரையில் பணக்காரர்களுக்கு மட்டுமே பயன்பட்டு இருக்கிறது என்று.

இவர், ஏதோ இதுநாள் வரையில் இந்த நாட்டிலே இல்லாதவர்போலவும், என்ன நடக்கிறது என்பதனைக் காணும் இடத்திலே இவர் இருக்கவில்லை என்பதுபோலவும், யாரோ மூட்டிவிட்ட தீவினை இது என்ற முறையிலும் பேசுகிறார்.

இந்த நாட்டிலே மட்டுமே இத்தகைய பேச்சைப் பேச முடியும்.

ஜனநாயக உணர்வு செம்மையாக உள்ள வேறு எந்த நாட்டிலே இதுபோலப் பேசிடினும் என்ன கேட்பார்கள்?

என்னய்யா! மாய்மாலம் பேசுகிறீர்! உம்முடைய கட்சி அல்லவா இந்த ஐந்தாண்டுத் திட்டங்களை நடத்திற்று, நீரும் அந்தக் கட்சியிலே தலைமை இடத்திலே இருந்து வந்தீரே! எட்டு ஆண்டுகள் நாட்டை ஆண்டுகொண்டிருந்தீரே! அப்போதுதானே இந்த அக்ரமம் ஏற்பட்டது? நீரும் சேர்ந்துதானே இந்த ஐந்தாண்டுத் திட்டத்தின் பலன், பணக்காரர்களுக்குப் போய்ச் சேர்ந்துவிடும் அக்ரமத்தை நடத்தி வைத்தீர். இப்போது யாரோ செய்துவிட்டார்கள் என்ற முறையிலே பேசுகின்றீரே? உள்ளபடி என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதே உமக்குத் தெரியாமலிருந்து வந்ததா? தெரிந்தும் அந்த அக்ரமத்தைத் தடுக்கத் துணிவு எழவில்லையா? தடுக்க முயன்றும் அது நடக்கவில்லையா? என்றெல்லாம் கேட்பார்கள்.

இந்த நாட்டிலே தம்பி! பெரிய இடத்தில் உள்ளவர்களின் பகை நமக்கு ஏன் என்ற போக்கு காரணமாக, இதைக் கேட்கப் பலரும் தயக்கப்படுகிறார்கள். நாம்தான் கேட்கிறோம். அதனால்தான் நம்மிடம் அத்தனை ஆத்திரம் அவர்களுக்கு, ஆளவந்தார்களுக்கு.

நாம் அதனைக் கேட்பதுகூடத் தம்பி! குற்றம் செய்தவர்களை அம்பலப்படுத்த வேண்டும் என்ற உணர்வு காரணமாக அல்ல.

நடைபெற்ற குற்றம் என்ன என்று கண்டறிந்தாலொழிய, இந்த மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களின்போதும் நடைபெற்று விட்ட "அக்ரமம்' மறுபடியும் நடைபெறாமல் தடுத்திட வழி கிடைக்காதே என்பதற்காக.

காமராஜர், இந்த மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களின் மூலம் கிடைத்த செல்வம் பணக்காரர்களுக்கே பயன்பட்டு வருகிறது என்றுதான் கூறினாரே தவிர - அதிலும் அந்த உண்மையை மகனாலோபிஸ் குழுவினரின் ஆய்வுரை அறிவித்த பிறகு - நாட்டிலுள்ள எதிர்க்கட்சிகள் இடித்துரைத்த பிறகு - பொருளாதார விற்பன்னர்கள் விளக்கிக் காட்டிய பிறகு ஒப்புக்கொண்டார் - மறுபடியும் அதே கெடுதல் ஏற்படாமலிருக்க என்ன முறை மேற்கொள்ளப்பட இருக்கிறது என்று கூறவில்லை. ஆகவேதான் குற்றம் செய்தவர்கள் எவர் என்பதும், ஏன் அந்தக் குற்றம் செய்தார்கள் என்பதும் தெளிவாக்கப்பட வேண்டும் என்கின்றோம்.

மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களின் மூலமும் உற்பத்தியான செல்வம் பணக்காரர்களுக்கே பயன்பட்டு வந்திருக்கிறது என்று வெளிப்படையாகக் காமராஜர் கூறியான பிறகு, ஏமாற்றத்துக்கு ஆளாக்கப்பட்ட ஏழை மக்கள், உழைத்து அதன் பலனை முழு அளவில் பெறாமல் தவித்திடும் பாட்டாளி மக்கள், தமது கண்டனத்தைத் தெரிவிக்கவேண்டாமா? தெரிவித்தால்தானே இனியும் இந்த அக்ரமம் நடைபெற்றிடக்கூடாது என்ற உணர்வு ஆளவந்தார்களுக்கு ஏற்படும்.

அந்தக் கண்டனத்தைத் தெரிவிக்கும், நியாயமான, சட்டப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள வழிதானே தேர்தல்.

அந்தத் தேர்தலின்போது ஐந்தாண்டுத் திட்டங்களின் மூலம் கிடைத்தப் பலனைப் பணக்காரர்கள் மட்டுமே பெற்றுவிட்டனர். அதற்கு நீவிர் உடந்தையாக இருந்து வந்தீர்கள்! நாங்கள் உழைத்தோம்! அவர்கள் கொழுத்தார்கள்! நீங்கள் அதற்கு வழி செய்து கொடுத்தீர்கள்! எம்மை ஓட்டாண்டியாக்கி விட்டு, மறுபடியும் எம்மையா ஓட்டுக் கேட்கிறீர்கள் என்று இந்நாட்டு ஏழை மக்கள் கேட்டிட வேண்டும்.

"என்னத்தைப் பாட ஐயா!'' என்று கேட்டார், கவிஞர் சுரபி.

எனக்குக் கவிதை தீட்டிடத் தெரியாது. ஆனால் கவிதை திறமையுள்ளவர் இவைபற்றி எழுதிடலாகாதா?

ஏழை ஏமாற்றப்பட்டது பற்றி எழுதிடலாமே!

ஏழை மேலும் ஏழை ஆகிடத்தக்க விதமான முறைகள் இருந்து வருவதுபற்றி எழுதிடலாமே!

இனியாகிலும் இப்படிச் செய்யுங்கள் ஐயா! என்று வழிமுறை பற்றி எடுத்து எழுதலாமே!

கருத்து சுரக்கும், ஐயமில்லை! கவிதைக்குத் தேவைப்படும் எதுகை மோனைக்குக் குறைவுமில்லை. ஆனால் ஒரே ஒரு தொல்லை. ஆட்சியினர் சீறுவர்?

கவி பாடக் கற்றதனால் பயன்
என்கொல்
காவலர் சீறுவரோ என்றஞ்சிடின்

என்று கேட்கத் தோன்றுகிறதா தம்பி! நமக்கேன் வீண் வேலை. நமக்குத் தெரிந்த முறையில் நாட்டினருக்கு உண்மைதனை எடுத்துச் சொல்வோம். கடமையைச் செய்திடுவோம்.

இந்தக் கடமையாற்றும் பணியின் ஒரு பகுதியாகத்தான் நாம் அங்கங்கே மாநாடுகள் நடாத்திக்கொண்டு வருகிறோம். அடுத்துச் சிவகெங்கையில் நடத்துகிறோம்.

சிவகெங்கைச் சீமையைப்பற்றி இனிமேல் நான் எடுத்துக் காட்டித்தான் நீ புரிந்துகொள்ளப் போகிறாயா? தம்பி!

மானங்காத்த மருதிருவரைத் தந்த மண்டலமாயிற்றே அது. எனக்குச் சொந்தமான இந்த மண்ணுக்கு இன்னொருவன் உரிமை கூறுவதா? என வெகுண்டெழுந்து மறப்போர் புரிந்து - மானத்துக்காக உயிர்விட்ட பெருமைக்குரிய இடம்!

அங்கே நாம் கூடுகிறோம்; நமக்குரிய எதிர்காலத்தை நாமே நிர்ணயித்துக்கொள்ளும் திட்டங்களை வகுக்கக் கூடுகிறோம்.

சிவகெங்கை மாநாட்டுக்கு மன்னை நாராயணசாமி தலைமை வகிக்க இருக்கிறார். சுறுசுறுப்புமிக்கவர்; சுற்றிச் சுற்றிச் செயலாற்றும் தீரர்! உழவர் பெரும்படையின் உள்ளம் உணர்ந்தவர் அவர்.

தீந்தமிழ்ச் சொற்களால் - தேமதுரத் தமிழால் தேனினுமினிய கவிதை யாத்து, கவின் காட்சிப் படைத்து களம் அமைக்கும் வேழவேந்தன் உன்னையெல்லாம் வரவேற்கப் போகிறார்.

பொல்லாத ஆட்சியதன் புன்மைகளையெல்லாம் புரட்டிக் காட்டிடுவார் அவர்.

கழக முன்னணித் தலைவர்கள் அனைவரும் அங்கே நல்ல நல்ல கருத்து விருந்து படைக்கப் போகிறார்கள்!

தம்பி! நீ அந்த விருந்தைச் சுவைக்கவேண்டாமோ உன்னைச் சார்ந்தவர்களைச் சுவைக்கச் செய்ய வேண்டாமோ?

வந்திடு! மலர்ந்த உன் முகத்தால் ஒளி தந்திடு! ஒளி மிகுந்த அந்த முகங்களையெல்லாம் கண்ணாரக் கண்டு களிக்கவென்றே நான் புறப்பட்டுவிட்டேன் சிவகெங்கைக்கு.

அண்ணன்,

27-11-66