அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


ஒளி படைத்த கண்ணினாய்!
வா! வா! வா!
1

தேர்தலும் அரசியல் கட்சியும் -
பிராங்கோவும் சட்டமும் -
க்யூபாவின் காஸ்ட்ரோ -
இந்திக்கு வங்காளிகள் எதிர்ப்பு

தம்பி!

வருகிறாயா, ஒரு திருமணக்காட்சி காண! அடே அப்பா! அண்ணனுக்கு எப்படித்தான் இந்த "மனம்' வந்தது, எப்போது பார்த்தாலும், பாடிவீடு வருகிறாயா, களம் வருகிறாயா, சிறைச்சாலைக்கு வருகிறாயா, வழக்குமன்றம் வருகிறாயா என்று அழைப்பு விடுத்தவண்ணம் இருப்பவராயிற்றே, அப்படிப்பட்ட கல்மனக்கார அண்ணன், இவ்வளவு கனிவுடன் திருமண வீட்டுக்கு அழைக்கிறாரே வியப்பான நிகழ்ச்சிதான் என்றுதானே எண்ணிக்கொள்கிறாய். திடுக்கிட்டுப் போய்விடாதே, தம்பி! திருமண வீட்டுக்கு உன்னை அழைப்பது, களித்திட, சுவைத்திட அல்ல; கருத்துக் கண்டு பெறத்தான்.

திருமணத்தன்று, மணமக்கள் இருவரும் வேண்டுமானால், எழில் தரும் ஆடை அணி அதிகமின்றிக்கூட இருக்கலாம் - அன்றுதான் அவர்களை எழிலுருவாக்கிடும் இன்ப நினைவு பெருக்கெடுத்து, புது மெருகு கொடுத்திருக்குமே - செயற்கைஅழகு தேடிக் கொள்வானேன். பெற்றோர் - உற்றார் - உறவினர் - உடனிருக்க வந்தோர் இவர்கள், மகிழ்ச்சி தரும் நாளன்று, புதிய கோலம் புனைந்துகொள்ளத் தவறமாட்டார்கள்! நானே, கண்டு கேட்டுவிட்டும் வந்தேன்; தன் அருமைத் திருக்குமாரிக்குத் திருமணம் நடத்தினார், திருவண்ணாமலை சண்முகம். அடே! அப்பா! பட்டுப்பட்டாடை! சரிகை வேட்டி! புத்தம் புதிய சட்டை! மாப்பிள்ளைக் கோலம்! யார்? மாமனார்!! நம்ம சண்முகம்!! சரி! இதோ, பார் திருமணக் காட்சியை.

"வாங்க! வாங்க! இதோ, இப்படி! இங்கு வந்து, குழந்தைகளை ஆசீர்வாதம் செய்யுங்க' - என்று குழையக் குழைய அழைக்கிறாரே, அவர்தான் மாமனார்!

இருக்கட்டும்! இருக்கட்டும்! என்று கூறியபடி, புகைக்குப் பயந்துகொண்டு, சற்று தொலைவிலேயே உட்காருகிறாரே, அவர், வருமானவரி அலுவலகத்திலே மிகுந்த செல்வாக்குப் படைத்தவர். திருமண நாளிலும், "வியாபார தோரணை' இல்லாமலா, போகும்! அதுதான், உபசாரமாக வடிவெடுத்திருக்கிறது.

பலர் வரவேற்கப்படுகிறார்கள்; மன்றத்திலே முன்னிடம் பெறுகிறார்கள். அதோ பார், ஒரு முதியவர், தள்ளாடியபடி தவிக்கிறார் - வழி கிடைக்காமல், இடம் தேடிக்கொண்டு. திருமண வீட்டுக்குப் போகிறோம், நாலுபேர் வருகிற இடம், பச்சென்று வருகிறவர்களெல்லாம் வருவார்கள், அந்த இடத்துக்கு நான் மட்டும் பக்கிரிபோலப் போகலாமா - "திருஷ்டி பரிகாரம்' போல! - என்ற நினைப்பு அந்த முதியவருக்கு.

வேட்டி வெண்ணிறமாக இருக்கிறது - ஆனால் தம்பி அதற்காக அவர், அதை ஒரு நாள் முன்னதாகவே தோள் வஎடுக்குமள வு துவைத்து, அழுக்குப் போக்கி, உலர்த்தி "பெட்டி' போட்டு, பாதுகாத்து, உடுத்திக் கொண்டார். நாட்டு வேட்டி - சரிகையுமில்லை, கரையின் சாயம்கூடக் கலைந்துபோயிருக்கிறது. என்றாலும், உள்ளதை நல்லதாக்கி உடுத்திக்கொண்டு வந்திருக்கிறார்.

அதோ, "தங்கப்பல்' தனவானைப் பார்! சந்தனம் கீழே சிந்திவிட்டதைக் கவனிக்காமல் உட்கார்ந்து விட்டார் - இருபது ரூபாய்க்குமேல் விலை உள்ள வேட்டி - கறைபட்டு விட்டது. திருமண வீட்டுப் பெரியவர், பரிதாபம் காட்டுகிறார் - அவர் அலட்சியமாகப் பரவாயில்லை' - என்று கூறுகிறார். ஆமாம்,அவருக்கு அது பரவாயில்லை! ஆனால், தம்பி! முதியவர் முகத்தைப் பார்த்தாயா, அச்சம்! எங்கே, தன் வெண்ணிற வேட்டி கெட்டுவிடுகிறதோ என்ற பயம். உள்ளதில், நல்லது அது. அதுவும் கெட்டுவிட்டால், என்ன செய்வது என்ற கவலை அவருக்கு.

மேலே கவனித்தாயா, சரிகை வேட்டி! மடிப்புக் கலையாமல்! அழகாக இருக்கிறதல்லவா!

பார்த்து விட்டார், திருமணவீட்டுப் பெரியவர், முதியவரை. ஒரு மகிழ்ச்சியற்ற சிரிப்பு!

"வாய்யா, வாய்யா, வரதப்பமொதலி! வா! வா! எங்கே, நீ வராமலிருந்து விடுகிறாயோன்னு பார்த்தேன்'' - என்கிறார்.

பெருமைப்படுத்திப் பேசுகிறாரா, கேலி செய்கிறாரா, அல்லது வேற்றுமையா என்று புரிந்துகொள்ள முடியவில்லை.

அருகே செல்கிறார், பார்! கழுத்திலே போட்டிருக்கும், சரிகை வேட்டியைத் தொட்டிழுக்கிறார், கவனித்தாயா! "சரிகை வேட்டியா! பலே! பலே! கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா! வரதப்பமொதலி, வாங்கின கடனைக் கொடுக்க முடியாமல், திண்டாடினாலும் திண்டாடுவாரே தவிர, இந்தச் சரிகை வேட்டி போடுவதை மட்டும் மறக்கவே மாட்டார்!'' - என்று கூறியபடி, முதுகிலே ஒரு தட்டுத்தட்டி, ஒரு மூலையைக் காட்டுகிறார் போய், உட்காரச் சொல்லி. இதைக் கண்டுதான் தம்பி! அதோ அந்த வைரக் கடுக்கன், பச்சைக்கல் மோதிரம் இவர்களெல்லாம் இடி இடி என்று சிரிக்கிறார்கள் தெரிகிறதல்லவா, தம்பி! வந்தவர், கேலிப் பொருளாகிறார்! அவர் செய்து கொண்டிருக்கும் அலங்காரமே, கனவான்கள் "கிண்டல்' செய்து மகிழ, வழி செய்கிறது. துல்லியமாக உடுத்திக்கொண்டு போவதுதான் முறை - இடம் அப்படிப்பட்டது - நேரமும் அதுபோல் - என்று எண்ணிக்கொண்டு அதற்காகவே முயற்சி எடுத்துக்கொண்டு, நாலுபேர் வருகிற இடத்துக்கு, நல்லபடி உடுத்திக்கொண்டு, போகவேண்டுமே என்றுதான், வரதப்பர், இவ்விதம் வந்தார்! ஆனால், பார்த்தாயல்லவா, அவரைக் கேலி செய்கிறார்கள். ஏன்? வரதப்பர் வாழ்ந்து கெட்டவர்!!

வாழ்ந்து கெட்டவர்கள், தமது நிலைமை வெளியே தெரியாதபடி, மூடி மறைத்தாலும், பூசி மெழுகினாலும் மற்றவர் கண்களுக்கு, உண்மை நிலைமை பளிச்செனத் தெரிந்துவிடும். உடையை, நிலைமையை மாற்றிக் காட்டும் வகையிலே அணிந்துகொள்ளலாம் - ஆனால் உடை உண்மை நிலைமையையா, மூடிடும், உடலை மட்டுந்தானே!

எனக்கு இங்கு இருக்கப் பிடிக்கவில்லை, அண்ணா! இளைத்தவர்களை இறுமாப்பாளர்கள் ஏளனம் பேசி, இழிவாக நடத்தும்போது, என்னால் கண்டு தாங்கிக்கொள்ள முடிவதில்லை. நினைப்பு எப்படி எப்படியோ மாறுகிறது. இந்த முதியவர், வறுமையால் வாடிடலாம் - அதற்காக மனிதத் தன்மையற்றா, இந்த மமதைக்காரர் நடந்துகொள்வது? வாழ்ந்துகெட்டவர், சரி! அதனால்? கேலி செய்வதா? கேவலமாக நடத்துவதா, இதுதான் முறையா? இதைக் காண, என்னை வேறு அழைத்து வந்தாயே! - என்றெல்லாம் கேட்கத் தோன்றுகிறது, உனக்கு. தம்பியின் உள்ளம் அறியாதவனா, நான். கோபமாகத்தான் இருக்கும். சரி! காணவேண்டியதைக் கண்டாகி விட்டது, இனி நமக்கு இங்கென்ன, வேலை? வா, தம்பி, போகலாம்.

வருத்தமாக இருக்கிறதல்லவா! கோபம் குறையவில்லை அல்லவா! நினைக்க நினைக்க ஆத்திரம் பீறிட்டுக்கொண்டு வருகிறதல்லவா! ஆமாம், அப்படித்தான் இருக்கும். நான் பட்டிருக்கிறேன், அந்த வேதனையை, பல முறை!

ஆனால், தம்பி! வாழ்ந்துகெட்டவருக்குக் கிடைப்பது இதுதான்; திருமண வீட்டில் மட்டும் என்று எண்ணாதே; எங்கும்; எப்போதும்.

வாழ்ந்துகெட்ட வரதப்பர், கால் வீக்கத்தால் நடக்க முடியாமல் வண்டியிலே போகிறார் என்றால், கேலியாகத்தான் பார்க்கிறார்கள்!

"குதிரை வண்டியிலே போகிறாரே. வரதப்பமொதலி!' - என்பார், ஒருவர்.

குதிரை வண்டியிலா? வரதப்பனா - என்று திரும்பத் திரும்பக் கேட்பார், இன்னொருவர்.

வண்டிக்காரன் தெரிந்தவனாக இருப்பான் - காசு கேட்டிருக்க மாட்டான் - என்று கேலி செய்வார் வேறொருவர்.

மூவரும் சிரிப்பார்கள்! வாழ்ந்துகெட்டவர்கள், இருப்பது போனதால் ஏற்பட்ட வருத்தத்தை மட்டுமல்ல, இப்படிப்பட்ட கேலி கிண்டலையும் சுமந்து தீரவேண்டி இருக்கிறது.

வாழ்ந்து கெட்டவர்களுக்கு மட்டுமல்ல, அப்படிப்பட்ட இடங்கள், இனங்கள், நாடுகள், எல்லாவற்றுக்குமே, இந்தக் கதிதான், என்ன செய்வது?

பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, நான் செஞ்சிக் கோட்டை சென்றேன் - தேசிங்கு ராஜனின் வீரத்தை எண்ணி வியப்புற்றவண்ணம், கோட்டை உட்புறம் நடந்தேன் - நிழலுக்காகப் படுத்து உறங்கிக் கொண்டிருந்த நாய் ஒலி கேட்டு விரண்டு, ஓடிற்று. நாய், தம்பி! சொறிபிடித்த நாய்! எனக்கு, உள்ளபடி துக்கம் துளைத்தது. செஞ்சிக் கோட்டையிலே, தேசிங்கு மன்னன் கோலோச்சிக்கொண்டிருந்த நாட்களில், "பாராசாரியும்' "நீலவேணியும்' அல்லவா அங்கு உலவி இருக்கும் - கவிதைப் புகழ்பெற்ற அந்தப் புரவிகள் கெம்பீரநடை போட்ட இடத்தில், சொறி நாயல்லவா ஓடிற்று.

மனிதர்களைத் தள்ளு, தம்பி! அந்தக் கோட்டைக்கு வந்த "கதி'யை பார்த்தாயா? வாழ்ந்துகெட்டால், இதுதான் நிலைமை வாழ்ந்து கெட்டவர்கள் மீண்டும் வாழ வழிகாண வேண்டும் இல்லை மாண்டொழிய வேண்டும்; இல்லையெனில், உலகிலே சிறுகச்சிறுக மானம் அழிந்து, உள்ளம் நொந்து, உருக்குலைந்து போக நேரிடும்!

தனி மனிதரானால், வாழ்ந்து கெட்ட நிலையால் ஏற்படும் இழிவைத் தாங்கிக்கொள்ள முடியாமல், தனக்கு நிரம்பத் தெரிந்தவர்கள் இருக்கும் இடத்தை விட்டு, அவர்கள் "கண்காணா' இடம் சென்று காலத்தை ஓட்டுவர். ஒரு நாள், தம்பி! திருக்கழுக்குன்றம் சென்றேன்; குளத்திலே குளித்துவிட்டுத், தங்குமிடம் திரும்பினேன், நண்பர்களோடு. கடைவீதிப் பக்கம் வருவோர் போவோரிடம் பிச்சை கேட்டுக்கொண்டு, அலங்கோலமான நிலையில் ஒரு மாது இருந்திடக் கண்டேன். பத்தாண்டுச் "சுயராஜ்யம்' இந்த இலட்சணத்தில் இருக்கிறது என்று எண்ணிக்கொண்டேன் அந்த மாது, என்னை மிரள மிரளப் பார்த்துவிட்டு, சரேலென நழுவி, வேறு பக்கமாக ஓட்டம் பெருநடையாகச் சென்றிடக் கண்டேன். திகைத்துப் போனேன். நம்மைக் கண்டதும் அந்த மாது முகத்திலே மிரட்சி! நான் காணக்கூடாது என்பதுபோல ஓடி மறைகிறார்களே, என்ன காரணம்? என்று ஒரே குழப்பம் எனக்கு - ஒரு கணம் - பிறகோ, தம்பி! என் கண்களில் நீர் துளிர்த்தது. என்னைக் காணக் கூடாது என்று ஓடி மறைந்த மாது, எனக்குத் தெரிந்தவர், வாழ்ந்து கெட்டவர் - பிச்சை எடுத்திடவேண்டியநிலை பெற்றதை நான் காணக்கூடாது என்று, பீதிகொண்டு, ஓடி மறைந்திருக்கிறார்கள், பாபம், ஆணாக இருந்தாலாவது, காவிகட்டிக்கொண்டு "அண்ணாமலைக்கு அரோகரா' கூறிக்கொண்டு, பிச்சை அல்ல எடுப்பது, சம்சார பந்தத்தை அறுத்துக் கொண்டேன் என்று பேசி இருக்க முடியும் - மாது - என்ன பேச முடியும். ஓரளவு நிம்மதியாக வாழ்ந்தவர்கள் - அதைக் கண்டவன் நான். வாழ்ந்து கெட்ட அந்த மாது, பிச்சை எடுத்துக்கொண்டிருப்பதை நான் காண்பது என்றால், அதைவிடக் கொடுமையான காட்சி வேறென்ன இருக்க முடியும்! எனக்கு அந்தக் கஷ்டம் வரக்கூடாது என்றுதான், அந்த மாது, ஓடி மறைந்திருக்க வேண்டும். மறைந்த மாது, மற்றவருக்குப் பிச்சை போட்டதைக் கண்ட கண்களால் அவர்கள் பிச்சை எடுப்பதைக் காண்பதென்றால், எத்துணை வேதனை ஏற்படும். தம்பி! விளக்கவா முடியும்?

வாழ்ந்துகெட்ட வரதப்பன், மறைந்து அலையும் மாது இடிபாடான கோட்டை - இவை நான் காண்பனவாக மட்டு மின்றி, நம்மோடு தொடர்பு கொண்டனவாக இருந்திடின், வேதனை எத்துணை கொடுமையுள்ளதாகிடும்.

சுவர் இருந்த இடத்திலே, ஓலை வைத்து மறைத்திருக்கும் இடிந்த வீடுகளைப் பார்த்திருக்கிறோம்.

ஓட்டையான பாண்டத்தில், எதையோ ஒட்டிவைத்து, உபயோகப்படுத்துவதைப் பார்த்திருக்கிறோம்.

இவ்வளவுக்குப் போவானேன், தருமமிகு சென்னையில், நித்தம் காணலாமே, கன்றாகத் துள்ளிக் கொண்டிருந்ததை, கைக்கு அடக்கமான தோல் பொம்மையாக்கி, பசுவிடம் காட்டிப் பாலைக் கறந்தளிக்கும் காட்சியினை.

இவைகள், ஒன்றுகூட இப்போது, நம் கண்முன் - மனக்கண் முன் - நின்று நைந்துருக வைத்திடும் காட்சிக்கு ஈடாகாது, வெட்கம், துக்கம் தருவதிலே.

வாழ்ந்துகெட்ட வரதப்பன், திருமண வீட்டுக்கு வந்தானல்லவா, சரிகை வேட்டியுடன் - கேலி மொழி கேட்டிட - தம்பி! தமிழ்த்தாய் காலில் சிலம்பு ஒலிக்க, மேகலை மின்னிட, மணி ஆரத்துடன், உலகம் காண நிற்கிறாள் - ஆனால் நெற்றியில் பொட்டு இல்லை, கூந்தலில் நெய் இல்லை, கண்களிலே நீர் கசிகிறது; காலிலே தளைகள்!! ஆமடா, தம்பி, ஆம்! வாழ்ந்துகெட்ட நிலையில்தான், தமிழ்த்தாய் இருந்திடக் காண்கிறோம்.

வாழ்ந்துகெட்ட வரதப்பனை மண்டைக் கனம் கொண்டவன் கேலி பேசியபோது, வரதப்பனின் மகன், அங்கு இருந்திருந்தால்? மணவீடாகவா இருக்கும்! பெருத்த அமளி மூண்டுவிடாதோ?

மறைந்தோடிய மாதை, அவன் பேரப்பிள்ளை தற்செயலாகக் காண நேரிட்டால், கசிந்து, கண்ணீர் மல்கி நான் இருக்கும்போது உனக்கேன் இந்தக் கதி? என்று கேட்டுக் காலடி வீழ்ந்து, கல் உடைப்பேன், குப்பை கூட்டுவேன், மாடு போல் உழைப்பேன், எப்பாடுபட்டேனும், உன்னைக் காப்பாற்றுவேன், பாட்டி! உன்னை இந்தக் கோலத்திலா, நான் காண வேண்டும்.

வா, என்னுடன் என்று அழைத்துக்கொண்டு போவானல்லவா?

செஞ்சி, தேசிங்கு மன்னன் வழிவழி வந்தவர்களுக்கு என்று ஆகி, அந்தக் குடும்பத்தினன் ஒருவன், சொறி நாய் கோட்டையில் உலவக் கண்டால், வாளா இருப்பானா?

ஆனால், தம்பி! நாம், நீயும் நானும், நம்மைப்போல உள்ள மூன்றுகோடி தமிழர்களும், தமிழ்த்தாய் தலைவிரிகோலமாகி, தளைகள் பூட்டப்பட்டிருப்பதைக் காண்கிறோம். தளைகளும் உடைபடவில்லை, நமது உடலிலும் உயிர் இருந்துகொண்டிருக் கிறது. வாழ்கிறோம் தமிழர் என்ற பெயரையும் சூட்டிக் கொண்டு!!

வாங்கின கடனைக் கொடுக்க வக்கு இல்லாவிட்டாலும், சரிகை வேட்டிக்குக் குறைவில்லை! என்று வரதப்பனைக் கேபேசி, மூலையைக் காட்டி உட்காரச் சொன்னானே, திருமண வீட்டில். அதுபோலத்தான், உலக அரங்கிலே, உரிமையுடன் அதனால் உவகையுடன் அரசோச்சி வாழ்கிறார்களே, அவர்களெல்லாம், தமிழ் அன்னை பூண்டிருக்கும் அணிபணி கண்டு கேலி பேசுகிறார்கள் - திருக்குறள் என்றோர் அறநூல், உலகிலே வேறு எங்கும் இல்லை அதற்கு ஈடு! சிலப்பதிகாரம், சுவைமிகு காவியம்! அதிலே முத்தமிழ் ஒளி விடுகிறது! - என்று, வரதப்பன் போட்டிருக்கும் சரிகை வேட்டிபற்றிப் பேசியது போலப் பேசிவிட்டு, அவனை மூலையில் உட்காரச் சொன்னது போல, தமிழ்த் தாயை, அடிமைச் சாவடியில் தள்ளி வைத்திருக்கிறார்கள், அவனியோர் - அவள் ஈன்றெடுத்த அருமருந்தன்ன மக்கள், மூன்று கோடி! குன்றெடுக்கும் நெடுந்தோளும், கொடை கொடுக்கும் கரமும் கொண்டோராக இருக்கலாம் - இருக்கிறார்கள். செந்தமிழ் பயின்ற வாயினர் - ஆம்! அதிலே குறைவு இல்லை. ஆனால், தாயின் தாளிலேபூட்டப்பட்டுள்ள தளைகளை நொறுக்கிடத் துணிகின்றனரோ? அதுதான் இல்லை!

காஞ்சிபுரம் குண்டஞ்சி! வெள்ளிச் சரிகை, கருக்காது! நூறாம் நம்பர் மிக நேர்த்தியானது - என்று வரதப்பன், தன் சரிகை வேட்டிபற்றிப் பெருமை பேசுகிறான் என்று வைத்துக் கொள், தம்பி! அதைக் கேட்பவர்கள், ஆமாம்! என்று கூறி, அந்தச் சரிகை வேட்டியைப் போட்டுக்கொண்டிருப்பதற்காகப் பாராட்டவா செய்வார்கள்?

சரிகை வேட்டியின் பெருமை போதுமய்யா, மறைக்காமல் சொல், நேற்றிரவு, பட்டினிதானே? உண்மையைச் சொல்! வட்டித் தொகை கட்டாததற்காகக் கடன்காரன், வீடு புகுந்து பெட்டியையும் தட்டுமுட்டுச் சாமான்களையும் எடுத்துக் கொண்டு போனானாமே, உண்மைதானே! வேறு வேலை கிடைக்காததால், விறகுக் கடையிலே எடுபிடியாக இருக்கிறாய் - மறுக்க முடியுமா? - என்றெல்லாமல்லவா கேட்பார்கள். அதுபோலத்தான் தம்பி! தாழ்நிலை பெற்று, தருக்கரின் பிடியில் சிக்கி, கட்டுண்டு கிடக்கும் தமிழகத்தின் தனிச் சிறப்புகள் எனப்படும், அகம், புறம், குறள் போன்றவைபற்றி, பெருமிதத் துடன் கூறிடும்போது, உலக அரங்கிலே, கேட்கிறார்கள்.

அத்தகைய தமிழகம் இந்தியப் பேரரசில் பெற்றிருப்பது அடிமை நிலைதானே?

அவ்வளவு இலக்கிய வளம் இருந்தும், தமிழ் தாழ்நிலைதானே பெற்றிருக்கிறது?

முன்னாள் கொடிகட்டி வாழ்ந்த தமிழர், இன்று கூலிகளாகித் தானே உழல்கிறார்கள்?

எல்லா வளமும் கொண்டது தமிழ் என்கிறீர்கள்; உங்களுக்கும் ஆட்சிமொழி இந்திதானே?

என்றெல்லாம் கேட்கிறார்கள். வாழ்ந்து கெட்ட வரதப்பனைக் கண்டே, துக்கம் துளைத்ததே, இந்தக் காட்சியைக் காணும்போது, வேதனை எத்துணை வேகமாகத் தாக்கும். நாம் அதனால் தத்தளிக்கிறோம் - ஆனால் வேறு சிலர் இருக்கிறார்களே, இதுபற்றிய நினைப்புமற்று - அந்தக் கொடிய குற்றம் இழைப்போர்களை, தாய்த் திருநாட்டுக்காக வரிந்து கட்டிக்கொண்டு பரிந்து போராட முன்வராதவர்களை, போரிடுவோரை முதுகில் குத்தவும் துணிந்திடும் ஈனர்களை -இழி தன்மைமிக்க குற்றம் செய்து, கொழுத்து வாழ்ந்திடும் போக்கினரை, யார், கூண்டிலேற்றி, விசாரணை நடத்தித் தண்டனை தரப்போகிறார்கள்! என்னைப் பிடித்திழுத்து நிறுத்துகிறார்கள், வழக்கு மன்றத்தில்!! ஓராண்டுச் சிறையாம்! ஆயிரம் ரூபாய் அபராதமும் உண்டாம்!! துரைத்தனத்தார் நடமாடவிட்ட அவசரச்சட்டம், வேலைசெய்கிறது!! போகட்டும், இவ்வளவு பெரிய வேலை நிறுத்தம் நடைபெற்றதே, அதனால் நேரு சர்க்காருக்கு ஏற்பட்ட மானக்குறைவும், அது மூட்டிவிட்ட மன எரிச்சலும், என்னை ஓராண்டு உள்ளே தள்ளிவைப்பதனால், ஓரளவுக்குக் குறையும் என்றால், நான், மகிழத்தானே வேண்டும். அவ்வளவு பெரிய மனிதருக்கு, என்னால் இந்த அளவுக்காகிலும் "உபகாரம்' செய்ய முடிகிறதல்லவா! அதுவும் நல்லதே - மகிழத்தக்கதே, நானும் அந்த மகிழ்ச்சியுடனேதான், வழக்குமன்றம் சென்றேன், - மீண்டும் செல்வேன்.

தம்பி! அண்ணன் உள்ளேபோய் உட்கார்ந்து விட்டால், கிழமைதோறும் வரும் கடிதம் வாராதோ என்று எண்ணி இப்போதே மனம் குழம்பாதே! உன் நிலை என்ன ஆகிறதோ, விரைவில், யார் கண்டார்கள்? உன்னை மட்டும், வெளியே உலவவிட்டு வேடிக்கை பார்ப்பார்களா!! அப்படி வெளியே இருப்பதானாலும் - இருக்கும் வரையிலும் - என் கருத்துரைகள் கிழமை தோறும் கிடைக்க, ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறேன் - வெளியே இருக்கும் வாய்ப்பிலே பெருமளவு, உனக்காக எழுதி அடிகளிடம் சேர்ப்பித்துவிட்டுச் செல்லவே; - ஆகவே அந்தக் கவலை வேண்டாம்.

உனக்கும் எனக்கும் இருக்கவேண்டிய கவலை எல்லாம் என்ன வழக்குத் தொடுக்கிறார்கள், தண்டனை எவ்வளவு கடுமையாகத் தருகிறார்கள் என்பதுபற்றி ஏன் இருக்கப்போகிறது - நாம் கவலைப்படவேண்டியதெல்லாம், நாம் ஈடுபட்டிருக்கும் காரியம் நியாயமானதுதானா, கொண்டுள்ள கொள்கை ஏற்புடையதா என்பதுபற்றித்தான், பெறநினைக்கும் பொருளுக்குத் தக்க விலை கொடுக்க எவர் தயங்குவர்; தயங்கிடின் தரணி இந்த அளவு செழித்திருக்கத்தான் முடியுமா?

ஆதிக்கக்காரனெல்லாம் கோலாகல வாழ்வு நடத்துகிறான் - சுவைமிகு வாழ்க்கை - ஆளப்பிறந்தவன், கட்டுண்டு கிடக் கிறான். உல்லாசபுரியிலே உலவி, மாளிகையிலே மகிழ்ந் திருக்கிறான், ஆதிக்கம் செலுத்துவோம். அவனை நத்திப் பிழைத்திடும் நாட்டுப்பற்று அற்றதுகளும், அவன் வீசியதைவிலாப் புடைக்கத்தின்று, அதுவும் வாழ்க்கை என்று பெருமைப் பட்டுக்கொள்கின்றன. ஆனால் நாட்டுமக்களின் வாட்டம் போக்கிடப் பணியாற்றியவன், அடிமைகளாகிக் கிடந்த மக்களை ஆண்மையாளராக்கியவன், உரிமைக் குரலெழுப்பி ஊமைகளையும், என் நாடு, என் அரசு என்று பேசவைத்தவன், நாட்டுக்கு உழைப்பதன்றி நமக்கு வேறு வேலை இல்லை என்று கூறி, தன்னைத்தானே அந்தத் திருப்பணிக்கு ஈடுபடுத்திக் கொண்டவன், கொடுமை பலவற்றைத் தாக்கிக் கொண்டவன், மனம் குலையா மாவீரன், இன்று பாலைவனப் பகுதியில், பட்டியொன்றிலே, சிறைப்பட்டுக் கிடக்கிறான்; ஆண்டுபல ஆகின்றன; அவன் மூட்டிய விடுதலைக் கனல் பெருந்தீ ஆகிவிட்டது; நாட்டுமக்கள் ஆர்த்தெழுந்து அவன் ஆணைக்கு எதிர் நோக்கி நிற்கிறார்கள், அவனோ, நாட்டைவிட்டுக் கடத்தப்பட்டு, உரிமைகள் பறிக்கபட்டு, "கைதி' என்ற நிலையில் உழல்கிறான். உண்ணலாம், உலவலாம், உறங்கலாம், இதழ் படிக்கலாம், கடிதம் எழுதலாம், ஆனால் தாயகம் வரக்கூடாது! தம்பி! கெனியா நாட்டு மக்கள், கண்கண்ட கடவுள் என்று போற்றிக்கொண்டாடும், விடுதலை வீரன், ஜோமோ கெனியாடாவைப் பற்றிக் கூறினேன், அத்தகைய கஷ்ட நஷ்டங்களைத் தாயகத்துக்காக ஏற்றுக்கொள்ளும் துணிவு, நமது கொள்கையிலே நமக்கு ஏற்பட்டுள்ள தூய்மைமிகு பற்றுதல் ஏற்படுத்திவைத்திருக்கிறது.

உலகிலுள்ள பல்வேறு நாடுகளும், எந்த அமெரிக்கப் பேரரசிடம் கெஞ்சி நிற்கின்றனவோ, அந்தக் "குபேரபுரி'யைக், கொள்கை வீரம் கொழுந்துவிட்டெரியும் செஞ்சினன் ஒருவன் துச்சமாக மதித்துப் பேசி வருகிறான்! ஏழை நாடு! இன்னும் சரியாக எழுந்து நிற்கக்கூடிய வலிவுகிடைக்காத நிலையில் உள்ள நாடு! எனினும், அந்நாட்டுத் தலைவன், "என் நாட்டை அடிமைப் படுத்த எண்ணும் நாடு, எத்துணை பெரிதாக இருப்பினும் எனக்கென்ன? அங்கு தங்க ஓடுகள் வேயப்பட்ட மாடமாளிகைகள் இருக்கலாம், சீமான்கள் பவழம் பதிக்கப்பட்ட கோப்பையிலே பழரசம் ஊற்றி, வைரம் ஜொலிக்கும் உடலினள் மின்னிடும் கண்ணினாள், இடை துவள நடையழகு காட்டிவந்து கொடுக்கலாம். மலைமலையாகப் பண்டங்கள் இருக்கலாம் பாளம் பாளமாகத் தங்கம் இருக்கலாம். என்ன இருந்தால் என்ன? என் நாட்டில் உரிமைக்கு ஈடோ, அவை? என்ற நினைப்பால் உந்தப்பட்டு, எதிர்த்து நிற்கிறான், எடுத்தேன் கவிழ்த்தேன் என்றுகூடப் பேசுகிறான்.