அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


ஒளி படைத்த கண்ணினாய்!
2

என் நாட்டுச் சர்க்கரை வாங்குவதைக் கொஞ்சம் கொஞ்சமாக, அமெரிக்கா குறைத்துக்கொண்டு வம்புக்கு நின்றால், என் நாட்டிலுள்ள, அவர்களுக்குச் சொந்தமான சர்க்கரை ஆலைகளை ஒவ்வொன்றாகக் கைப்பற்றிக்கொண்டு விடுவேன்!

அவர்கள் இங்கு தொழிலில் போட்டிருக்கும் மூலத்தனத் தைப் பறிமுதல் செய்து செய்து, கடைசியில் அவர்களுக்கு ஒரு காசும் மிச்சமில்லாதபடி செய்துவிடுவேன்.

வணிகத் துறையில் வஞ்சகத் திட்டத்தைப் புகுத்தி, என் நாட்டுப் பொருளை வாங்காமல் முடக்கிப், பணத்தட்டு ஏற்படச் செய்து, எங்களை பட்டினிபோட்டுப் பணியவைக்கலாம் என்று சூது நிரம்பிய அமெரிக்க நாடு கருதினால், அமெரிக்க நாட்டுப் போர்வீரர்களின் கால் செருப்பிலே அடித்திருக்கும் ஆணிகூட அவர்களுக்குக் கிடைக்க முடியாதபடி செய்துவிடுவேன்!

உலகையே அழித்திடக்கூடிய அணுகுண்டுகளைக் குவித்து வைத்திருக்கிறது அமெரிக்கா - கால் செருப்பாணிகூட மிஞ்சாதபடி செய்துவிடுவேன் என்று பேசுகிறான், அளவில், அரசிடம் செல்வாக்கில், பொருளாதாரத் துறையில், குறைந்த நிலையில் உள்ள, க்யூபா நாட்டுத் தலைவன், காஸ்ட்ரோ.

வீரம் நிரம்ப இருக்கிறது - அளவுக்கு அதிகமாகவேகூட - ஆனால் விவேகம் அல்லவே. இப்படிப் பொறிபறக்கப் பேசுவது, என்று தொல்லைகளால் தாக்கப்படாமல் தொலைவிலே உள்ள பார்வையாளர்கள், அறிவுரை கூறலாம். ஆனால், அல்லலை அனுபவித்துக்கொண்டிருப்பவன், அந்த நாட்டுத் தலைவன் - அவன் மனக்கொதிப்புக்கான காரணத்தை, அவனன்றி வேறு யார், உணர முடியும்!

இன்று, காஸ்ட்ரோ கனல் கக்குகிறானே! என்று கடிந்துரைக்கப் பலர் உளர்; ஆனால், அவன் க்யூபா நாட்டைக் கெடுத்தழித்துக் கொண்டிருந்த ஆட்சியை ஒழிக்கக் கடும் போர் நடாத்திய காலை, அவனைச் சூழ்ந்துகொண்டிருந்த ஆபத்தை, யார் அப்போது அறிந்து ஆறுதல் கூற முன்வந்தனர்? வாலிபப் பருவம்! வழக்கறிஞர் தொழில்! காஸ்ட்ரோ "கனவானாகி' விட வழிபல இருந்தன. ஆனால் அவன், காட்டுப் பாதையிலே சென்றான், நாட்டைக் காக்க! தன் இளவலுடன், துணைவர்கள் சிலருடன். காஸ்ட்ரோ புரட்சிக் கொடியை உயர்த்தியபோது, வேட்டை நாய்களால் விரட்டப்படும் மானினம் போன்றதல்லவாநிலைமை! சிக்கினால், சித்திரவதை! பிடிபட்டான், சிறைப்பட்டான் - 15 ஆண்டுகள் சிறை!! ஆமாம், தம்பி, பதினைந்து ஆண்டுகள்! ஆணவ அரசு அவ்வளவு காலம், தன் ஆதிக்கம் இருக்குமென்று எண்ணி மனப்பால் குடித்தது. ஆனால், இடையிலேயே ஆட்சி கலகலத்துப் போயிற்று. அடித்தளத்தில் ஏற்பட்டுவிட்ட அழிவு கண்ணுக்குத் தெரியாததால், ஆட்சியாளர், போனால் போகட்டும், போட்டடைத்து வைப்பானேன் இந்தப் போக்கத்ததுகளை; திறந்து வெளியே துரத்துங்கள், எதையோ தேடித் தின்று பிழைத்துப் போகட்டும், என்று இறுமாப்புடன் எண்ணிக்கொண்டு, காஸ்ட்ரோவை விடுதலை செய்தனர். வெளியே வந்த வீரன், பட்டது போதும், இனிப் பட முடியாது துயரம் என்றல்ல, பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகல்லவா, தாயகத்துக்குப் பணிபுரிய முடியும் என்று எண்ணி, மனம் நொந்து கிடந்தேன் - இதோ வாய்ப்புக் கிடைத்துவிட்டது, விட்ட இடத்திலிருந்து வேலையைத் தொடங்க, என்றான். படைதிரட்டினான், பாய்ந்து தாக்கினான், பகை அழிந்தது, க்யூபாவின் தலைவனானான்.

தம்பி! காஸ்ட்ரோ என்னென்ன முறைகளைக் கையாண்டான் என்பது அல்ல, நாம் கவனிக்கவேண்டியதும், கையாள வேண்டியதும். நாம் கூர்ந்து பார்த்திடவேண்டியது, அவன் எத்துணை கடுமையான விளைவுகளுக்குத் தயாரானான், ஈடுகொடுத்தான் என்பதுதான்.

விடுதலை! விடுதலை! விடுதலை! என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாடு, பண்ணிசைத்து வருகிறது, பார்க்கிறோமல்லவா!!

கானா, டோகோலாண்டு, மாலி, சோமாலிலாந்து, மடகாஸ்கர் - என்று பட்டியல் வளர்ந்தபடி இருந்திடக் காண்கிறோம்.

அந்த நாடுகளிலெல்லாம், விடுதலை ஆர்வம், உரிமை உணர்ச்சி, எழுந்த விதம், வளர்ந்தவகை, எம்முறையிலிருந்தன என்பதுகூட, இனித்தான், உலகு தெரிந்துகொள்ள வேண்டும். அந்த நாட்டு விடுதலை வீரர்கள் பற்றிய குறிப்புகள், அவர்கள் அமைத்த அணிவகுப்புகள் பற்றிய விவரம் இனி வெளியிடப்பட வேண்டிய வீரக் காதைகள்! அந்த நாட்டுக்காக உழைத்தவர்கள், உழைப்பின் பலன் காணா முன்பே கொல்லப்பட்டவர்கள், உழைத்து உருக்குலைந்தவர்கள், அவர்களைத் தீண்டிய ஆபத்துகள், சூழ்ந்துகொண்ட தீச்சுழல்கள் போன்றவை பற்றியவிவரங்கள், இனி வெளியிடப்படவேண்டிய காப்பியங்கள். விடுதலை கிடைக்கும் வரையில், அந்த நாடுகளைப்பற்றி, இதழ்கள், இருட்டடிப்பு நடத்தி வந்தன! இன்று தேடித்தேடிச் சென்று பேட்டி காண்பதும், பெரிது பெரிதாகப் படங்களை எடுப்பதும், பக்கம் பக்கமாகச் செய்திகளைத் தருவதுமாக உள்ளன, ஏடுகள்! நாடு மீட்டிட, நடத்தப்பட்ட போரின்போது, கேட்பாரற்று, கவனிப்பாரற்றுக் கிடந்தனர் - இன்று அந்த விடுதலை வீரர்கள் வெற்றிபெற்றனர். எனவே அவர்களைச் செய்தி தேடுவோர், மொய்த்துக்கொள்கின்றனர்.

விடுதலை முழக்கம் எழுப்புபவனை, வெறியன் என்று ஏசுவதும், அவன் கையாளும் முறைகளைக் காட்டுமிராண்டித் தனம் என்று கூறுவதும், கூர்த்தமதியற்ற காரணத்தால், மிகப் பலருக்கு வாடிக்கையாகிவிட்டது. வெற்றி கிட்டியதும், வியர்க்க ஓடோடிச் சென்று, வீரனே! தீரனே! என்று புகழ்பாடி, புன்னகைக்குக் காத்துக் கிடப்பதும், அத்தகையோரின் வாடிக்கை.

ஆனால், விடுதலை இயக்கம் இருட்டடிப்பினால் மாய்ந்து போகாது; புகழ்பாடுவோர் கிடைக்காததால், புகைந்து போய் விடாது.

விடுதலை இயக்கம், பலி கேட்கும் - தன்னிடம் பற்றுக் கொண்டவர்களை. பலி, பயங்கரமானதாகக்கூட இருக்கும். பலர், பலியான பிறகு, கடைசி அணிவகுப்புக்கு வெற்றி கிடைக்கக் கூடும்.

அந்த அணிவகுப்புத்தான் உலகிலே, பளிச்செனத் தெரியும்.

முன்னால் அழிக்கப்பட்ட அணிவகுப்புகளைப் பற்றி, உலகம் கவனம் செலுத்தி இருக்காது, வாடிக்கை இல்லை.

முதல் தாக்குதலில் கொல்லப்பட்ட கொள்கை வீரர்களின் புதைகுழிகளை, வெற்றிக்குப் பிறகு, நாட்டவரும், மற்றவரும் தேடிக்கண்டறிவார்கள். பிறகு, அவை வழிபடும் இடங்களாகும் திருத்தலங்களாகும்!

தம்பி! எப்படிப்பட்ட இடம் பெறத்தக்க வாய்ப்பு, நமக்கு இருக்கிறது என்பதை எண்ணும்போதே, இணையற்ற ஓர் எழுச்சி பெறுகிறோமல்லவா! அதை உணரமுடியாதவர்கள்தான், இடுக்கணும் இன்னலும் தாக்கினால், நாம் தகர்ந்து போவோம் என்று தப்புக் கணக்குப் போடுகிறார்கள்.

ஒரு அரசியல் கட்சி நடத்தி, அதிலே தேர்தல் பலன் கிட்டவில்லை என்றால், அந்தக் கட்சி கலகலத்துப்போகும். விடுதலை இயக்கம் அப்படி அல்ல. ஒரு அணிவகுப்பு அழிக்கப்பட்டால், புதியதொன்று எழும்! அழிப்பவனின் கரம் துவண்டுவிழும் வரையில் அணிவகுப்புகள் எழுந்தவண்ணம் இருக்கும் - வெற்றி கிட்டும் வரை!

காங்கிரஸ் கட்சியில் உள்ளோர் ஒரு பெரும் தவறு செய்கிறார்கள்; நாம் ஒரு வெறும் அரசியல் கட்சி நடத்துகிறோம், ஆகவே, இருட்டடிப்பால், ஏளனத்தால், சதிச் செயலால், கலாம் மூட்டிவிடுவதால், வழக்குகள் தொடுப்பதால், தேர்தலில் தோற்கடிப்பதால், நம்மை ஒழித்துவிடலாம் என்று எண்ணுகிறார்கள்.

சின்னாட்களுக்கு முன்பு, நான் எப்போதும் அளந்துதான் பேசுவேன் என்று கூறிக்கொள்ளும் அமைச்சர் பக்தவத்சலனார் பேசினாராமே, தி. மு. க. வினருக்கு, அரசியல் ஞானமே இல்லை என்று!

ஏன், அவ்விதம் சொன்னார்? அவ்விதம் ஏளனம் பேசி னால், எரிச்சல் ஏற்படும்; அந்த எரிச்சலைத் தாங்கிக்கொள்ள மாட்டார்கள் - துளைக்கப்பட்டுப் போய் விடுவார்கள் என்று நினைக்கிறார்.

அவர்கள், நாம் ஒரு விடுதலை இயக்கத்தை நடத்துகிறோம் என்பதை உணரவில்லை.

விடுதலை இயக்கம் நடத்துவதற்கான காரணம், ஆயிரம் உள்ளன என்பதையும் அறியவில்லை.

அவர்கள்தான், தம்பி! தமிழ் மொழியினைச் சூழ்ச்சித் திட்டத்தால் அழித்தொழிக்க முற்படும்போதுகூடத் தமிழர்கள், வாய்திறவாதிருப்பர், கைகட்டிக் கிடப்பர் என்று எண்ணுகிறார்களே! அவர்களின் அரசியல் "ஞானம்' அவ்வளவு "அபாரம்!!' நம்மால் முடியுமா, அவர்களுடன் போட்டியிட! கடினம்! மிகக் கடினம்!

அவர்கள் கிடக்கட்டும், தம்பி! தமிழ்மொழி கற்றறிந்தோர்! உரிமை வேட்கை குறித்து, நாடு பல சுற்றியும் ஏடு பல படித்தும் வித்தகரானோர்! இவர்களாகிலும் மொழிக்கு வர இருக்கும் ஆபத்தை அறிந்து துடித்தெழக், காண்கிறோமா? இந்தி ஆதிக்கம், வெறி அளவு வளர்ந்திருக்கிறது, இது ஆகாது கூடாது, தீது, என்று எடுத்துரைத்தால், என்ன கெட்டுவிடும்.

பிராங்கோவின் ஆட்சியிலே, சர்வாதிகார நோய் பிடித்துக் கொண்டிருக்கிறதைக் கண்டித்துப் பேச்சுரிமை இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி, 329 மதகுருமார்கள் கையொப்ப மிட்டுக் கடிதம் அனுப்பினார்கள் என்று மாட்ரிட் செய்தி அறிவிக்கிறது.

பிராங்கோவின் ஆட்சிமுறையைக் குறை சொன்னால், என்ன நடக்கும்? தெரியாதா, அவர்களுக்கு? துணிந்துதான், கண்டிக்கிறார்கள், சிலராகிலும், துணிந்து எதற்கும் தயாராகி உண்மைக்காகப் பரிந்து பேசாவிட்டால், உலகில் அறம்தான் தழைக்குமா? நீதிதான் நிலைக்குமா? எனவேதான், அந்த மதகுருமார்கள், ஆபத்தைத் துச்சமென்று கருதி, பிராங்கோ ஆட்சிமுறையைக் கண்டித்துள்ளனர்.

இங்கு? சீவக சிந்தாமணியில் குறிப்பிடப்பட்டிருக்கும் வானவூர்திக்கும், இப்போது விஞ்ஞானம் சமைத்தளித்துள்ள வானவூர்திக்கும் ஒப்புவமை காட்டிப் பேசச் சொல்கிறீர்களா? உம்! மணி மூன்றுக்குக் குறையாமல் மூச்சைப்பிடித்துக் கொண்டு பேச, மேதைகள் இருக்கிறார்கள். முகவரி வேண்டுமா?

நாட்டுப்பற்று எப்படி ஏற்படுகிறது என்பதுபற்றி விரிவுரை வேண்டுமா, உலகப்பெரும் பேராசிரியர்களின் மேற்கோள் களுடன் ஒன்றரை மணி நேரம் பேசிவிட்டுப், பிறகு ஒன்பது நாள், நண்பர்களிடம் அந்தப் பேச்சின் அருமை பெருமைபற்றிப் பேசிட ஆசாமிகள் இருக்கிறார்கள்!

ஆனால், ஆட்சிமொழியாக இந்தி வந்தே தீரும் என்று குடியரசுத் தலைவர் ஆணை பிறப்பித்துவிட்டார், குமுறுகிறார்கள் நாட்டு மக்கள், ஒரு குரல் கேட்கிறதா, அதைக் கண்டித்து அந்த மேதைகளிடமிருந்து!

பிராங்கோவை எதிர்த்தால் மரணதண்டனை கிடைக்கக் கூடும்.

இந்தி ஆட்சிமொழி ஆகக் கூடாது என்று கூறினால், ஆக்கக் கூடாது என்று உறுதி பேசினால், ஆக்கினால் ஆபத்து விளையும் என்று எச்சரிக்கை விடுத்தால், இந்த மேதைகளுக்கு என்ன ஆபத்து வந்துவிடும்!

கை குலுக்குவதும், கனவானே! நலமா? என்று கேட்பதும், குறையக்கூடும- அடியோடு நின்றுவிடாது! இதைக்கூடவா தாங்கிக்கொள்ளக் கூடாது.

பாகிஸ்தானில், நடப்பது, இராணுவ ஆட்சி, அயூப்கான் மிக்க கண்டிப்பானவர். அரசியல் தலைவர்களை எல்லாம் அடைத்துவிட்டார் சிறையில்!

எனினும், பாகிஸ்தானில் மக்களாட்சி முறை ஏற்பட்டாக வேண்டும். கட்சி அரசியல் முறை தோற்றுப்போய்விட்டதாக அயூப்கான் சொல்வது சரியல்ல.

புதிய அரசியல் சட்டத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள்தான், தீட்ட வேண்டுமே தவிர, அயூப்கானால் நியமிக்கப்படும் குழு தீட்டுவது சரியல்ல என்று அறிக்கை வெளியிட்டு, ஆயிரக்கணக்காக அந்த ஏடுகளை, நாடெங்கும் பரப்பி இருக்கிறார்கள், பாகிஸ்தானில் உள்ள 19 உலமாக்கள் - மதத்தின் வித்தகர்கள்.

பயம் அவர்களைப் பிய்த்துத் தின்றதா? இங்கு? பேசச் சொல்லுங்கள், துணிவுடன்! ஏ! அப்பா! என்ன பயம்! எவ்வளவு நடுக்கம்! நமக்கேன் வம்பு என்ற போக்கு.

பாகிஸ்தானில், உலமாக்கள் போலவே, உயர்நீதி மன்ற நீதிபதியும், இப்போதைய ஆட்சி முறையைக் கண்டித்திருக்கிறார்.

சர்வாதிகார நாடுகளில் ஏற்பட்டிருக்கும், இந்த நெஞ்சுரம், பேச்சுரிமை, எழுத்துரிமை தரப்பட்டுள்ள "ஜனநாயக' நாட்டிலே உள்ள மேதைகளுக்கு ஏற்படவில்லையே! வெட்கப்படுவதா, வேதனைப்படுவதா? சொல்லு, தம்பி!

இந்த கழகத்துக்காரர்கள், வீணாகப் பயம் காட்டு கிறார்கள்; இந்தி ஆட்சிமொழியாகி, ஆங்கிலம் அறவே ஒழிந்துபோய் விடாது; தமிழ்தான் வளரும்; வழக்கு மன்றங்களே கூடத் தமிழில்தான், நடவடிக்கைகளை நடத்தும் என்று சுவை சொட்டச் சொட்டப் பேசுகிறார் சுப்பிரமணியனார் - அமைச்சர்!

சரியான போடுபோட்டார், பயல்கள் திணறுவார்கள் என்று, தெந்தினம் பாடிடுவோர் பேசினர். ஆனால், அமைச்சர் சுப்பிரமணியம் சுருண்டு கீழே விழத்தக்க, அறை கொடுத்தார், டில்லியில் அரசோச்சும் சட்டத்துறை அமைச்சர், சென்.

சுப்பிரமணியனார் செப்பினார், தமிழிலேயே, வழக்குமன்ற நடவடிக்கைகள் இருக்கும் என்று. டில்லி அமைச்சர், இது யார் பைத்தியக்காரத்தனமாகப் பேசுபவர்! என்ற எண்ணிக் கொண்டவர்போல உண்மையைக் கக்கிக் காட்டினார்.

சுப்ரீம் கோர்ட்டிலே இந்தி மொழியில்தான் 1965-க்குப் பிறகு நடவடிக்கைகள் இருக்க வேண்டும்.

அப்போது, இராஜ்யங்களில் அந்தந்த இராஜ்ய மொழியில் வழக்குமன்ற நடவடிக்கைகள் இருந்தால் குழப்பமாகி விடும்.

எனவே, இராஜ்யங்களில் உள்ள வழக்குமன்றங்களிலும், இந்தி மொழியிலேயே நடவடிக்கைகள் இருக்க வேண்டும்.

எனவே, சட்டங்களையும், வழக்காடலில் தேவைப்படும் நுணுக்கச் சொற்களையும், ஆங்கிலத்தில் உள்ளதை, இந்தி மொழியில் பெயர்த்திடக், குழு விரைந்து வேலை செய்ய வேண்டும்.

கனைத்தாவது காட்ட வேண்டுமே, கனம் சுப்ரமணியம்; உஹும்! கப்சிப்! வாய் திறக்கவில்லை! நம்மைப்பற்றிப் பேசச் சொல்லுங்கள். நாராசம், தாராளமாக, ஏராளமாக! "எஜமானர்' இடிக்கிறார். இவர் "படிதாண்டாப் பத்தினி'யாகக் கோலம் பூண்டாக வேண்டுமே! எனவே, வாய்திறந்து அழக்கூட மறுக்கிறார்.

தமிழ் மொழி, இராஜ்ய வழக்குமன்றத்தில் அரசோச்சும் என்று பேசிவிட்டோமே, - நமது பேச்சினைத் துச்சமென்றாக் கிடும் முறையில், தமிழாவது தெலுங்காவது, இந்திதான் இராஜ்ய வழக்குமன்றங்களில் என்று டில்லி அமைச்சர் சென் அறைகிறாரே, மக்கள் நம்மை மதிப்பார்களா? என்று எண்ணினாரா?

ஐயோ! ஆபத்தான எண்ணமல்லவா அது! அது வேகமாக வளர்ந்தும் விடுமே! வளர்ந்துவிட்டால், என்ன கதி ஆவது? அரும்பாடுபட்டுப் பெற்ற பதவி அல்லவா பறிபோய்விடும் - என்று நினைக்கிறார், நடுக்கமெடுக்கிறது. பல்லைக் கடித்துக் கொண்டு இருக்கிறார் - பிறகு இருக்கவே இருக்கிறது, வாய்க்கு வேலை, கழகத்தைத் தாக்குவது!

ஸ்பெயினில், பாகிஸ்தானில் உயிர்போவது பற்றிக்கூடக் கவலைப்படாமல் உண்மைக்குப் பரிந்து பேசுகிறார்கள்.

இங்கு, இருக்கும் பதவி பறிபோய்விடுமே என்ற பயத்தால் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசித் திரிகிறார்கள்.

பதவிதானே! பறிபோனால்தான் என்ன? என்று, தம்பி! நீ, வெகு எளிதாகச் சொல்லிவிடுவாய்: அவர்களுக்கல்லவா,அதனுடைய அருமை தெரியும்! அது போய்விட்டால், பிறகு இவர்கள் இருக்குமிடம் நோக்கி, யார் திரும்பிப் பார்ப்பார்கள்? இவர்கள் சென்று சென்று பார்த்தாலும், யார் முகம் கொடுத்துப் பேசுவார்கள்? நீ கூறிவிடலாம், பதவியா பெரிது என்று! பதவிதானே, அவர்களின் நிலையைப் பெரிது ஆக்கிற்று! அதைப்போய் இழப்பது என்றால்!!

தம்பி! இங்கு இருப்பதுபோலத்தான் எங்கும் என்று எண்ணிவிடாதே.

நரேஷ்சென் குப்தா
நரேந்திர தேவ்
திரிகுண சென்
சுபீந்திரநாத் தத்தா
ராதாராணி தேவி
பேராசிரியர் குகா
புத்ததேவ போஸ்
பிரமாதநாத் பிசி
நிர்மல்சௌத்ரி பட்டாச்சாரியா
காஜிஅப்துல் வாதுத்
சுஜேந்திரநாத் சென்
அபு சையத் அயூப்
டாக்டர் அதீந்திரநாத் போஸ்
விவேகானந்த முகர்ஜி
மைத்ரேயி தேவி
புரோதீவா போஸ்
சாகராமாய் கோஷ்
அமலன் தத்தா
கே. கே. சின்கா
ஹிரேன் குமார் சன்யால்

இவர்கள், தம்பி! வங்காளத்திலே உள்ள மேதைகள். ஒவ்வொருவர் ஒவ்வொரு துறையில் வித்தகர்கள், புலவர்கள், பெரும் பேராசிரியர்கள், கல்வித்துறை நிபுணர்கள்.

இவர்கள் கையொப்பமிட்டு, ஒரு அறிக்கையை இந்தத் திங்கள் துவக்கத்திலே வெளியிட்டிருக்கிறார்கள்.

இந்திய தேசிய மொழிகளின் வளர்ச்சிக்கான மன்றம் ஒன்று, பணியாற்றி வருகிறது; அந்த மன்றத்தின் சார்பில், இந்தஅறிக்கை. அதிலே இந்தி ஆட்சிமொழி ஆவது பற்றிக் குடியரசுத் தலைவர் விடுத்துள்ள ஆணை கண்டிக்கப்பட்டிருக்கிறது.

ஆணை கண்டோம், ஏமாற்றமடைந்தோம்.

ஆணையில் தெளிவு, விளக்கம் சரியாக இல்லை.

இந்தி மொழியின் சார்பில் ஒருதலைப்பட்சமான அக்கறை காட்டப்பட்டிருக்கிறது.

இந்தி பேசுவோருக்குத் தனிச்சலுகை, மேலிடம் அளிக்கப் படுகிறது.

இந்தி அல்லாத மற்ற மொழி பேசுவோருக்கு, இது பெருத்த அநீதி இழைப்பதாகும்.

இந்தி பேசாத மக்களுடைய ஒப்பம் பெறாமல், ஆங்கிலத்தை அகற்றிவிட்டு, இந்தி ஆட்சி மொழியாகப் புகுத்தமாட்டோம் என்று 1959-ம் ஆண்டு செப்டம்பர் நாலாம் நாள், பாராளுமன்றத்தில் பண்டித நேரு வெளியிட்ட கொள்கை, திட்டவட்டமாகக், குடியரசுத் தலைவரால் ஏற்றுக்கொள்ளப் பட்டுவிடும் என்று இந்த மன்றம் எதிர்பார்த்தது; ஏமாற்ற மடைந்தது.

குறுகிய கால அளவுக்குப் பிறகு, அகில - இந்தியத்துறை அலுவலகப் பணிகளுக்கான தேர்வுகள், இந்தியில் நடைபெறும் என்று ஆணையில் குறிப்பிட்டிருப்பதை இந்த மன்றம் பலமாகக் கண்டிக்கிறது.

இந்தத் தேர்வுகளில், இந்தியாவின் மற்றத் தேசிய மொழிகள் குறித்து யோசிக்கக்கூட இல்லை என்பது கண்டிக்கத்தக்கது.

இந்த ஏற்பாட்டினால் இந்தி பேசும் மக்களுக்குத்தான் மற்றவர்களை மிஞ்சக்கூடிய சலுகை கிடைக்கும்.

இந்த நிலைமையினால் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கே ஆபத்து விளையக்கூடும்.

முதலமைச்சர் நேரு கொடுத்த வாக்குறுதியின்படி, காலக் கெடுவின்றி, ஆங்கிலம் துணை ஆட்சிமொழியாக இருக்கும் விதத்தில், குடிஅரசுத் தலைவர் தமது ஆணையைத் தெளிவாக்கும்படி இம்மன்றம் கேட்டுக்கொள்கிறது.

தம்பி! குமாரபாளையத்திலே, நாம் கூடி, குடியரசுத் தலைவரின் ஆணை குறித்து, என்ன கருத்தினை வலியுறுத்தி னோமோ, அது ஏதோ "பக்தவத்சலனாரின் பாஷைப்படி "அரசியல் ஞானம்' அற்றவர்களின் போக்காக இருக்கட்டும்; மந்திரி சுப்ரமணியத்தின் வாதப்படி, விவரம் தெரியாதவர்களின் பேச்சாக இருக்கட்டும்; எல்லாமறிந்த காமராஜரின் பேச்சுப்படி, விளையாட்டுத்தனமாக இருக்கட்டும்; இதோ, வங்க நாட்டு வித்தகர்கள் அதே கருத்தினைத் தெளிவுடன், துணிவுடன், எடுத்துக்காட்டி அறிக்கை வெளியிட்டனரே, இதற்கு என்ன பதில் அளிக்கப்போகிறார்கள், பதவி பெற்றவர்கள்! இத்தனை வித்தகர்களும், அரசியல் ஞானமற்ற, விவரம் தெரியாத விளையாட்டுக்காரர்களா? நிந்தித்து நிந்தித்துப் பழகிப்போன மந்திரிகளின் நாக்குக்கூடக் கூசுமே, அப்படிச் சொல்ல! இவர்கள் ஒவ்வொருவரும், தத்தமது துறை, தொழில், கொள்கை ஆகியவைகளைப்பற்றிக் கவலைப்படாமல், பதவியில் உட்காரவேண்டுமென்றால், காமராஜர்கள் ஆகிவிடலாமே! அதாவது மந்திரிகளாகலாமே! இவர்களல்லவா குடியரசுத் தலைவரின் ஆணையைக் கண்டிக்கிறார்கள்; குலைநடுக்க மல்லவா எடுக்கிறது இங்கு உள்ள கற்றறிவாளர்களுக்கு!!

தம்பி! இந்த மன்றத்தார் நம்மைவிட ஒரு படி மேலே சென்றுவிட்டார்கள்.

மற்ற மொழிகளின் வளர்ச்சிக்காக அளிப்பதைவிட மிக அதிகமான தொகையை இந்தி மொழி வளர்ச்சிக்காக, இந்திய சர்க்கார் தரக்கூடாது என்பதை அறிக்கை வலியுறுத்துகிறது.

இந்த நாட்டு வித்தகர்கள், தங்களை மெத்தச் சொத்தை உள்ளத்தினர் என்று காட்டிக்கொள்வது கண்டு, வருந்திக் கிடக்கும் வேளையில், வங்கத்திலிருந்து இந்தத் தேன்மொழி கிடைக்கிறது. தம்பி! நாம் கொண்ட கருத்துக்கு மேற்கொண் டுள்ள போக்குக்கு, எத்தகைய நேர்த்தியான இடமிருந்தெல்லாம் இசைவு இருக்கிறது என்பதைக் காணும்போது, புதியதோர் எழுச்சி பிறக்கிறதல்லவா!

அந்த எழுச்சி நிரம்பிய உள்ளத்தினராக நாமிருக்கும் போது அடக்குமுறை காட்டியா, நமது உறுதியை அழித்துவிட முடியும்.

நான்தான், காணப்போகிறேனே உறுதிபடைத்த நெஞ்சினரை! ஒளிபடைத்த கண்ணனரை! பலப்பல ஆயிரக் கணக்கில்! இந்தி எதிர்ப்பு மாநாட்டில்!

இந்தத் திங்கள் 30-ல் என்னை வழக்குமன்றம் காணப் போகிறது.

மறுநாள், 31-ந் தேதி நான், என் எண்ணற்ற உடன்பிறந்தார்களைக் காண இருக்கிறேன்.

வழக்குமன்றத்திலே இருக்கும்போது, உன்னைத்தானே காண்கிறேன்.

நான் கண்டு களித்திட, பெருமைப்பட, உணர்ச்சி பெற உறுதிபெற, எழுச்சிபெற, வேறு என்ன வேண்டும்?

நீ செல்லும் பாதை சரியானதுதான் என்று உலகிலே நடைபெற்ற, இன்றும் நடைபெறும் உரிமைக் கிளர்ச்சிகள் விடுதலை இயக்கச் செய்திகள் எடுத்துக்காட்டுகின்றன.

வழக்குமன்றமோ, நீ கவனிக்கப்படுகிறாய் என்று கூறுகிறது.

தம்பி! நீயோ? தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்று நீதானே அண்ணா!

கூறினாய் என்று கேட்கிறாய். எனக்கோ, எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்ற கவிதை மனப்பாடம்.

ஆயினும், கவிதைகள் கட்டுரைகள், வீரக்காதைகள், வெற்றிக் காப்பியங்கள், ஆகியவைகளால் கூட அளித்திட முடியாத எழுச்சியை, உன் கண்ணொளி எனக்கு அளிக்கிறது, அந்த ஒளியைக் காட்டிட, 31-ந் தேதி, சென்னை வருகிறாயல்லவா?

அண்ணன்,

24-7-1960