அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


ஒலியும் ஒளியும்
1

ஜனநாயக ஆட்சியில் ஊழல்கள் -
சட்டசபையில் உறுப்பினர் தண்டம் -
ஓட்டும் வேட்டும்

தம்பி!

"கடும் பனி! உடல் வெடவெடுக்கிறது! காரிருள்! எந்தப் பொருளும் சரியாகத் தெரியவில்லை! காலிடறிக் கீழே வீழ்ந்தேன், கருங்கல்லில் தலை மோதிக்கொண்டது! கலங்கினேனா? இல்லை! நடந்தேன், நடந்தேன், தோட்டம் நோக்கி; ஆனால் அங்கோ கதவு தாளிடப்பட்டுக் கிடந்தது. தவித்துப் போனேன். பக்கத்துச் சுவரோரம் பதுங்கிப் பதுங்கிச் சென்றேன். பழுதையென்று எண்ணித் தொடப்போனேன், அசைந்திடக் கண்டு பாம்பென்றறிந்து பயந்து விலகினேன்! நா உலர்ந்து விட்டது! இப்படியா இருக்க வேண்டும் நம் கதி என்று எண்ணினேன். துக்கம் துளைத்தது. எவரேனும் கண்டுவிட்டால்? என்று எண்ணும்போதே, பயம் கப்பிக் கொண்டது. திடீரென்று, ஏதோ ஒன்று என்மீது விழுந்தது, பதறினேன், மறுகணம், வீழ்ந்த பொருளைக் கண்டேன். என்னவென்கிறாய், என் காதலியின் கூந்தலில் இடம் பெற்றதால் மணம் பெற்ற மலர்! எடுத்தேன், கண்களில் ஒத்திக்கொண்டேன் - அதரத்தில் கொண்டு சென்று அகமகிழ்ந்தேன்! பட்ட கஷ்டமனைத்தையும் மறந்தேன்! இதோ வெற்றி! சுவைமிகு வெற்றி! மணமிகு வெற்றி! என் காதலி தந்திடும் அன்புக் காணிக்கை! உன்னை மறந்திடவில்லை, இதோ என் மலர், உனக்காக! என்று கூறுகிறாள் என் குயில் மொழியாள், இந்தமகிழ்ச்சியைப் பெற, கடும்பனி, காரிருள், கரடுமுரடான வழி, இடறி விழுந்திடும் இன்னல் என்னும் எதுவாக இருந்தால் என்ன! இதைவிட ஆபத்து நிரம்பியதாக இருப்பினும், செல்வேன், வெல்வேன்.''

இடர்ப்பாடுகளை மறந்திடச் செய்யும் வகையான வெற்றி பெற்ற காதலன், இதுபோலக் களித்துக் கூறுவான். இத்துணை கஷ்டங்களைத் தாங்கிக்கொண்டு சென்றவன்மீது, காதலியின் கூந்தலுக்கு அணிசெய்திருந்த மலர் வீழாமல், அவளுடைய பாட்டனார் எறிந்த கைத்தடி வீழ்ந்திருந்தால் - எப்படி இருந்திருக்கும் அவன் மனநிலை! அதுகூடச் சகித்துக் கொள்வான். வீழ்ந்தது, காதலி வீசிய மலராக இராமல், அவன் தன் அன்பின் அடையாளமாக முன்னமோர் நாள் அவளுக்கு அளித்த "கணையாழி' யாக இருந்தால், எவ்வளவு கலங்குவான்! அதுகூடப் பரவாயில்லை! மேலே வீழ்ந்தது, ஒரு காலணியாக இருப்பின்! கோபம் பிறக்கும்!! எப்படி வீழ்ந்தது என்று பார்த்தறியும்போது, சுவரின் மறுபுறமிருந்து, இப்புறம் இறங்கிடும் ஒரு ஆடவன் காலிலிருந்து கழன்று வீழ்ந்தது என்பது தெரிந்தால், கடுங்கோபம் ஏற்படுமல்லவா! தன்னைச் சொக்கவைத்துவிட்டு வேறோர் வாலிபனுக்கு விருந்தாகி விட்டாள், காதலியாக நடித்த காதகி; அவளைக் கண்டு இதழமுதுண்டு திரும்புகிறான் இந்தக் கள்ளன்; அவசரத்திலே காலினின்றும் கழன்று வீழ்ந்தது காலணி என்று தெரிந்தால், கோபம், வெட்கம், துக்கம் எல்லாம் சேர்ந்தல்லவா அவனைத் துளைக்கும். கொலைகாரனாக வேண்டும் அல்லது குத்திச் சாக வேண்டும் - வேறென்ன செய்யத் தோன்றும், அந்த வேளையில்!

இவ்வளவு இடர்ப்பட்டு வந்தது, இந்த இழி நிலையைக் காணவா? என்று எண்ணும்போதே மனம் உடைவது போலாகிவிடாதா!

சர்வாதிகார ஆட்சி, உரிமையை அழிக்கும், நடுநடுங்கச் செய்யும், சிறையை, தூக்குக் கயிறைக் காட்டி மிரட்டும், எனினும் சில சர்வாதிகார ஆட்சிகள், மற்ற ஆட்சி முறையிலே இருந்து வந்த ஊழல், மந்தம், திறமைக் குறைவு, தெளிவின்மை போன்ற குறைகளை நீக்கி, மக்கள் நிம்மதியான வாழ்க்கையைப்பெறவாகிலும் வழி செய்தளிக்கும். காதலியின் மலராக இலாது போயினும், மரத்திலிருந்து உதிர்ந்த கனியாவது மேலே வீழ்வது போன்ற நிலை என்று வைத்துக்கொள்ளேன்.

கடுமையான முறைகளைப் புகுத்துகிறான், சர்வாதிகாரி. ஆனால், எதற்கு? நாட்டிலே விரைவாக, நல்ல காரியம் நடந்திட வேண்டும் என்பதற்காக! முறைகள் கடுமையானவை என்பதனால், பலனில் கிடைக்கும் சுவையை மறந்திட முடியுமா? கடும்பனியின் கொடுமையைத் தாங்கிக்கொண்ட பிறகு, காதலியின் மலர் கிடைத்தால், பட்டபாடுதனை மறந்து, மகிழ்ச்சி கொள்வா னன்றோ! ஆட்சியின் பலன், இழிதன்மை, வறுமை, அவல நிலைமை என்றிருக்குமானால், அது காதலியைக் காணச்சென்று, காலணி கண்டது போலன்றோ இருந்திடும்.

சர்வாதிகாரத்திலே, பேச்சுரிமை கிடையாது - இம்மென்றால் சிறைவாசம் - எதிர்த்தால் சாகடிக்கப்படுவர் - என்று பேசி, ஜனநாயகத்தை வாயாரப் புகழ்கின்றனர். ஆனால், அந்த ஆட்சியிலே, சர்வாதிகாரியின் "கட்டுக்காவல்' முறையை மட்டும் புகுத்திச் சர்வாதிகாரி சமைத்தளிக்கும் சுவையும் பயனும் மிக்க வெற்றிகளைத் தராவிட்டால், அந்த ஜனநாயகத்தை, மதிக்கத்தான் முடியுமா - மகிழ்ச்சிதான் பிறக்குமா?

இத்தனை கடும்பனியில் காரிருளில், எங்கே செல்கிறாய்? என்று கேட்டிடும்போது, "என் இதயம் வாழ்பவளைக் காண!'' என்று கூறிடும் வாய்ப்பு இருந்தாலாவது மகிழ்வர் - மதிப்பர்!

"எங்கு?'' என்று கேட்டதும், "எட்டிக்கொட்டை வேண்டும் சாப்பிட! அதைக் கொண்டுவரச் செல்கிறேன்'' என்று கூறிட வேண்டியதாக இருந்தால் - மதித்திடவா செய்வோம்.

ஆட்சி சர்வாதிகார முறையினதா? ஜனநாயக முறையினதா? என்பதுகூட இருக்கட்டும், கிடைத்திடும் பலன் என்ன? முறை நமக்குப் பிடிக்காதது என்றாலும்கூட, நாம் விரும்பத்தக்கதாக இருந்தால், பல்லைக் கடித்துக்கொண்டு சகித்துக் கொள்வார்களல்லவா!

காமராஜர், செல்லுமிடமெல்லாம், இந்த ஆட்சிக்கு ஈடு வேறு கிடையாது! மக்களுக்கு வயிறாரச் சோறு போடவேண்டும் என்பதுதான், என் திட்டம். என் ஆட்சியிலேதான், அந்தத் திட்டம் வெற்றி பெறும். எத்துணையோ நன்மைகளைச் செய்கிறோம். இதைக் காட்டிலும் அதிகமாக எவரும் செய்ய முடியாது. இந்த ஆட்சிபோல், நேர்த்தியான ஆட்சியை யாராலும் நடத்த முடியாது - என்று பேசி வருகிறார். உடனிருந்து உவகைகொள்ளும் ஊர்ப் பெரியவர்கள், "எவ்வளவு தெளிவு! என்ன எளிமை! புட்டுப்புட்டுக் காட்டுகிறாரே!'' என்று பாராட்டுகின்றனர் - அவர் எதிரில். ஆனால், உள்ளபடி ஆட்சி, பாராட்டுதலுக்குரியதாகத்தான் இருக்கிறதா? மக்களின் அடிப்படைத் தேவைகளையேனும் கவனித்துக் கிடைக்கச் செய்துள்ளனரா, ஆட்சியினர்? நாம், ஆட்சியாலே, நன்மை விளையாதது மட்டுமல்ல, கேடுகள் பல ஏற்பட்டுள்ளன என்று கூறும்போது, காங்கிரசாருக்குக் கடும்கோபம் வருகிறது. குறைகூறுவதேதான் வேலையா? என்று கேட்கிறார்கள். தம்பி! மக்கள் நல்வாழ்வு பெறத்தக்க, ஊழலற்ற, நேர்த்தியான ஆட்சி அல்ல அவர்கள் நடத்துவது. ஏட்டில் இனிக்க இனிக்க எழுதிக் காட்டுகிறார்கள்; நாட்டு மக்களுக்கோ, ஒரு சுவையும் கிடைப்ப தில்லை. தொண்டுபுரிவதே எமது நோக்கம் என்கிறார்கள், தொல்லையைக்கூறி உதவி கேட்டால், துரத்தி துரத்தித் தாக்குகிறார்கள். புடம்போட்ட தங்கம், பாரத பூமியை மீட்ட சிங்கம் என்றெல்லாம் பெருமை பேசிக்கொள்கிறார்கள் - வெள்ளையரின் பொருளாதாரப் பிடியை நீக்கிக்கொள்ளத் துணிவின்றிக் கிடக்கிறார்கள். திறமையாக நடக்கிறது எமது ஆட்சி என்கிறார்கள், ஒவ்வோர் துறையிலும் ஒழுங்கீனமும் ஊழலும் நாற்றமடித்தபடி இருக்கிறது.

துரைத்தனம் மேற்கொள்ளும் எந்த அலுவலுக்கும், திட்டமிட வேண்டும், இவ்வளவு செலவாகும் என்பது அதிலே குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும், கூடுமானவரை திட்டமிடப் பட்ட தொகை அளவுக்கே வேலை முடிய வேண்டும், வேலை தரமுள்ளதாக இருக்க வேண்டும், நிர்வாகத்தில் ஒழுங்கு இருக்க வேண்டும். நடுக்கொள்ளை, வீண் செலவு, ஆகாவழி சென்றதால் அதிகச் செலவாதல் போன்றவைகள் இருத்தல் கூடாது; திட்டம் நிறைவேற்றப்பட்டதும் அதன் மூலம் எதிர்பார்க்கிற பலன், அளவும், வகையும் குறையாமல் கிடைக்க வேண்டும்.

புரட்சிகரமான ஆட்சிகூட இதற்கு வேண்டாம்; பொறுப் புணர்ச்சி உள்ள ஆட்சி போதும்.

மக்களுக்காக அரசாளுகிறோம், நாம் மகா பெரிய அறிவாளிகள் என்பதைக் காட்டிக்கொள்ள அல்ல என்ற அடக்க உணர்ச்சி இருந்தால் போதும்.

நிர்வாகத்திலே, பலதிறப்பட்ட குறைபாடுகள் இருப் பதற்குப் பொறுப்பேற்றுக்கொண்டு பதில் கூறவேண்டியவர்கள், அமைச்சர்கள். குற்றம் குறை இருந்தால், கண்டறிந்து கூறவேண்டிய பொறுப்பு, கணக்கு ஆய்வுக்குழுவுக்குடையது.

காமராஜர் கூறுகிறார், நாங்கள் எல்லாவற்றையும் ஒழுங்காகத்தான் செய்கிறோம் என்று. எதிர்க்கட்சியினர் எடுத்துரைக்கின்றனர், ஆட்சி ஒழுங்காக இல்லை என்பதை. இருதரப்பினர் கூறுவதிலே, எது சரி, எது தவறு என்பதைப் பொதுமக்கள் கண்டறிய வழி இருக்கிறது; கணக்காய் வாளர்களின் அறிக்கையைப் பார்த்தால் போதும், தம்பி! அந்த அறிக்கையிலே, நிர்வாகத்திலே காணப்படும், ஒழுங்கீனம் விரயம், ஊழல், முறைகேடான செயல் போன்றவைகள் எடுத்துக்காட்டப் பட்டிருக்கின்றன. அந்த ஆய்வாளர்கள், கட்சிக் கண்ணோட்டம் கொண்டவர்களல்ல; துரைத்தனத்தாரேதான் அந்தக் குழுவை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

அமைச்சர்கள் கொள்ளையடித்துவிட்டார்கள், இலஞ்சம் வாங்கினார்கள் என்றால் மட்டும்தான் நிர்வாகத்திலே ஊழல் ஏற்பட்டுவிட்டது என்று பொருள் கொள்ளக்கூடாது. அமைச்சர்கள் ஒரு துரும்புகூடத் தமக்காக எடுத்துக்கொள்ளாத "தர்மவான்களாக' இருக்கலாம்; ஆனால் அவர்கள் நடத்தும் துரைத்தனத்தில், ஆறு இலட்சத்திலே கட்டி முடிக்கப்பட வேண்டிய ஒரு பாலம் எட்டு இலட்சம் விழுங்குகிறது என்றால், அதிலே ஒரு காசுகூட அமைச்சருக்கு செல்லாவிட்டாலும், நஷ்டம் நஷ்டம்தான், நிர்வாகம் ஒழுங்கில்லை என்றுதான் பொருள்.

நாங்கள் என்ன, பொருளை எங்கள் வீட்டுக்கா எடுத்துக் கொண்டு போய்விட்டோம்! என்று பட்டம் பறக்கவிடும் பள்ளிச்சிறார்போல், அமைச்சர் ஒருவர் பேசியதாகப் பத்திரிகையில் பார்த்தேன். அப்படி யாரும் சொல்லவுமில்லை; செய்தால் மக்கள் சும்மாவும் விடமாட்டார்கள்.

"வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள்' என்று யாரும் கூறவில்லை. ஆனால், இவர்கள் வீட்டுக்குப் போய்விட்டால், இந்த ஒழுங்கீனம், ஊழல் இருக்காது என்று கூறுகின்றனர்.

சுவைமிகு உண்டி தயாரித்திருக்கலாம். ஆனால் அதைக் காலங்கடந்து தந்தால், பலன் குறைவாகத்தானே இருக்கும்!

அதுபோல், பாசன வசதியை நேர்த்தியாகச் செய்தளித் திருக்கலாம். ஆனால் அது விவசாயம் செய்யவேண்டிய காலம் தவறிக் கிடைத்தால், பலன் என்ன? செலவாகி இருக்கிறது, அது விரயம்தானே, வீண்தானே! இதற்கு யார் பொறுப்பு?

கணக்காய்வாளர்கள் கண்டறிந்து கூறியுள்ளவைகளைப் பார்க்கும்போது, எப்படிப்பட்ட கண்மூடித் தர்பார் நடக்கிறது என்பது நன்றாகப் புரிகிறது. சில குறிப்புக்களைக் காட்டுகிறேன், தம்பி! படித்துப் பார்! பராக்குக் கூறிக்கொண்டு திரிகிறார்களே, காங்கிரஸ் அமைச்சர்களுடன், அவர்களிடம் எடுத்துக் கூறு.

1954-55 அரிசி கொள்முதல் செய்து கிடங்கில் வைத்திருந்து, பிறகு விற்பனை செய்ததில், இரண்டு மாவட்டங்களில் மட்டும், முறையே 44,215 ரூபாய்களும் 1,25,256 ரூபாய்களும் நஷ்டம் ஏற்பட்டதாக அறிக்கை கூறுகிறது.

குழாய்கள், அதற்கான கருவிகளை வாங்கி, விற்றதிலே மொத்தத்தில் ஏற்பட்ட நஷ்டம் ஏழு இலட்சமாம்!

அரிசியை, பற்றாக்குறை மாவட்டத்துக்காக உபரியாக உள்ள மாவட்டத்திலிருந்து வாங்கும் அதிகாரம் பெற்ற 14 வியாபாரிகள், சர்க்காருக்கு 2,40,616 ரூபாய் தரவேண்டி ஏற்பட்டது. ஐந்தாறு ஆண்டுகளாக அந்தப் பணத்தைச் சர்க்கார் கேட்டு வாங்கவில்லை. 1954-ல், வழக்குத் தொடுத்தார்கள். அதற்குள் இரண்டு வியாபாரிகள் இறந்துவிட்டனர். சொத்து ஏதும் இல்லை என்று ஏற்பட்டது. இதனால் 35,525 ரூபாய் நட்டம்! மற்றும் இரண்டு இலட்சத்துச் சொச்சத்துக்காக வழக்காடவேண்டிய நிலை!

நிர்வாகம் செம்மையாக இருப்பதற்கான சான்றா இது!!

கரம்புகளைத் திருத்திக் கழனிகளாக்க, "டிராக்டர், புல்டோசர்' போன்றவைகள் கிட்டத்தட்ட அறுபது இலட்ச ரூபாய் மூலதனம் போட்டு வாங்கிப் பயன்படுத்தப்பட்டன. இலாபமும் வேண்டாம், நஷ்டமும் ஏற்படக் கூடாது; அந்தமுறையில் இந்தத் துறை பணியாற்ற வேண்டும் என்பது, கொள்கை. ஆனால் அதிலே ஏற்பட்ட நஷ்டம் 52,32,876 என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது! பலே பலே! நம்முடைய துரைத்தனம் எவ்வளவு திறமையாக வேலை செய்கிறது, என்றா மக்கள் பாராட்டுவார்கள், இந்தத் தகவலைப் படித்துவிட்டு.

இராணுவத்திடமிருந்த ஒரு விமானதளத்தை, பாகிஸ்தானி லிருந்து வரும் அகதிகளுக்குப் பயன்படுத்தும் எண்ணத்துடன் 86,000 ரூபாய் கொடுத்துத் துரைத்தனத்தார் வாங்கினர். வாங்குவதற்கு முன்பு, இடம் தக்கதுதானா என்று யோசித்துப் பார்த்திருக்க வேண்டாமா? நம்மைத்தான் மக்கள் நம்பிக்கொண் டிருக்கிறார்களே, எதை எப்படிச் செய்தால் என்ன என்ற போக்கிலே, தளம் வாங்கி, பிறகு அது பயனில்லை என்று கண்டு, விற்றுவிட்டனர்.

அந்த வகையிலே ஏற்பட்ட நஷ்டம் 73,643 ரூபாய்.

குடிதண்ணீர் திட்டத்துக்காக, 87,838 ரூபாய் செலவில் ஒரு அமைப்பு ஏற்பாடாயிற்று. அந்தத் திட்டம் ஒரு காண்ட்ராக்டரிடம் விடப்பட்டது. வேலை தொடங்கி ஓரளவு முடியும் தருவாயில், "சானிடரி என்ஜினியர்' வேறோர் இடமே, குடி தண்ணீர்த் திட்டத்துக்கு ஏற்றது, இந்த இடமல்ல, என்று கூறிவிட்டார். பழைய இடம், அங்கு அதுவரையில் நடைபெற்ற வேலை, கைவிடப்பட்டுவிட்டது. காண்ட்ராக்டருக்கு 37,550 ரூபாய் தரப்பட்டது.

திட்டத்தைத் துவக்கு முன்பு, ஆர அமர யோசித்து, அந்தத் துறை நிபுணர்களைக் கலந்து பேசி, அவர்களின் ஒப்புதலைப் பெற்றிருந்தால், இந்த நஷ்டம் ஏற்பட்டிராதல்லவா?

விற்பனை வரி அலுவலகத்தார், குறைத்து மதிப்பிட்ட தாலும், காரணமின்றி வரியைத் திருப்பித் தந்த வகையிலும் 36,510 ரூபாயும், நீதித்துறையிலே, கையாடல், பணத்தைத் திருப்பிப் பெறுவதிலே ஏற்பட்ட நஷ்டம் போன்ற வகைகளுக்காக 2,63,123 ரூபாயும், உருளைக்கிழங்கு காண்ட்ராக்டில் ஏற்பட்ட நஷ்டம் 59,452 ரூபாயும், விவசாயத்துறை அலுவலகத்தில் சரக்கு இருப்பில் குறைவு ஏற்பட்டது, களவு, சரக்கு வாங்குவதிலே ஏற்பட்ட நஷ்டம்போன்ற வகைகளால் 2,31,041 ரூபாயும், கடனைத் திருப்பி வாங்காதது போன்றவைகள் மூலம் 34,707 ரூபாயும், இரும்புக் கம்பிகள் களவுபோன வகையில் 64,274 ரூபாயும், அரிசி, கோதுமை மற்ற வகைத் தானியங்கள் இருப்பிலே, குறைவுஏற்பட்ட வகையில் மொத்த வியாபாரிகளுக்கு நஷ்ட ஈடு தரப்பட்ட வகையில் 36,50,114 ரூபாயும், ஆக மொத்தத்தில் 50,55,008 ரூபாய்கள், வீணாகிவிட்டதாக 1954-55-ம் ஆண்டு, கணக்கு ஆய்வாளர் அறிக்கை தெரிவிக்கிறது. எனினும், எங்கள் ஆட்சின் நேர்த்தியே நேர்த்தி, எமது அமைச்சர்களின் கீர்த்தியே கீர்த்தி என்று துந்துபி முழக்கித் திரிகின்றனர், தேர்தல் தரகர்கள்.

1955-56லும் இதே சோகக் காதைதான் தொடருகிறது. விவசாயத் துறை அலுவலகம், பொறியியல் துறை அலுவலகம் ஆகியவற்றிலே சரக்கு இருப்பிலே ஏற்பட்ட குறைவு வகையில் 66,386; கப்பலில் வந்த அரிசியில், அளவு குறைந்ததால் ஏற்பட்ட நஷ்டம் 1,92,151; தகவல் சரியாக விசாரிக்காமலே ஒரு கலெக்டர் அரிசி மூட்டைகளை விற்ற வகையில் ஏற்பட்ட நஷ்டம் 29,120; அலுவலகத்தார் கையாடல் வகை 25,000; மாவட்ட அலுவலகங்களில் கையாடல் 30,247; இருப்புக் குறைவானது, கையாடல் போன்றவைகள் நீதித் துறையில் ஏற்பட்ட வகையில், 1,41,034; போலீஸ் துறையிலே, நிபுணர் யோசனையின்படி அல்லாமல் வேறுவிதமாகச் சைகிள்கள் வாங்கிய வகையில் ஏற்பட்ட நஷ்டம் 50,000, ஆசிரியர்களுக்கு மானியம், முறையற்ற வகையில் தரப்பட்டது, தரவேண்டியதைவிட அதிகத் தொகை உபகாரச் சம்பளமாகக் கொடுத்தது போன்ற வகைகளில், கல்வித் துறையில், 2,98,651; சரக்குக் கெட்டுப் போனது, இருப்பு குறைந்தது, உரம் குறைந்துவிட்டது போன்ற வகைகளால் விவசாயத் துறையில் 2,31,714; கருவிகள் கெட்டுவிட்டது, பட்டுச் சரக்கு இருப்பு பாழாகி விட்டது, நஷ்டத்துக்கு விற்றது, காண்ட்ராக்டர் தரவேண்டிய தொகையைத் திருப்பி வாங்காதது போன்ற வகைகளில் தொழிற்கூடத் துறையில், 1,45,894; இலவசச் சம்பளம் அளித்ததில் தவறுதலாக அதிகத் தொகை தந்துவிட்ட வகையில் அரிஜன நலத்துறையில் 60,597; தவறுதலாகத் தேவையற்ற ஒரு குறிப்புப் புத்தகத்தை அச்சிட்ட வகையில் 33,733; கொடுத்த முன்பணம் திரும்ப வராதது போன்ற வகையில், 1,15,807; குழாய்கள், கருவிகள், அரிசி, நெல் போன்ற தானியங்கள் இருப்பிலே குறைவு ஏற்பட்ட வகையில், 24,82,191 மற்றும் பல்வேறு, வகையான நஷ்டங்கள் 54,92,373; ஆக மொத்தம், 99,14,228 ரூபாய் விணாக்கப்பட்டிருக்கிறது என்று 1955-56-ம் ஆண்டு கணக்கு ஆய்வாளர்கள் அறிவிக்கின்றனர். அமைச்சர்களோ, அடித்துப் பேசுகின்றனர், எம்முடைய ஆட்சியே அப்பழுக்கற்றது என்று.

1956-57-ல், இந்த ஓட்டைகள் அடைபட்டுப் போய் விடவில்லை; விரயம் தொடருகிறது!!

உணவுத்துறையினர் விற்பனைவரி வசூலிக்காததால் ஏற்பட்ட நஷ்டம் 5 இலட்சம். குழாய்கள் வாங்கிய வகையில் ஏற்பட்ட அதிகச் செலவு, 5,57,000.

ஒரு நீர்ப்பாசன திட்டத்துகாகக் குன்றின் பக்கமாக மண்ணால் ஒரு அணைகட்டத் திட்டமிட்டனர்.

1,12,929 ரூபாய் இதற்காகச் செலவிடப்பட்டது.

பிறகு நிபுணர்கள், அந்தக் குன்று, பாறைகள் கொண்டது; எனவே அதைப் பலப்படுத்த மண் அணை தேவையே இல்லை என்று தெரிவித்தனர். அணைகட்டுவது கைவிடப்பட்டது. ஆன செலவு நஷ்டம், 1,12,929 ரூபாய்!!

குப்பைக் காகிதங்களை மொத்தம் 91 ரூபாய்க்கு விற்றனர் அலுவலகத்தார். ஆய்வாளர்கள் கணக்குப் பார்த்தனர். இதேபோன்ற குப்பைக் காகிதத்தை முன்பு விற்றபோது, கிடைத்த தொகை அதிகம் என்று தெரிகிறது. அந்த வகையில் நஷ்டம். 15,500 அதாவது, 15 ஆயிரம் ரூபாய்க்குமேல் மதிப்புள்ள காகிதத்தை 100-ரூபாய்க்கு விற்றனர். ஏன்? காரணம் கேட்டுப் பாரேன், "கனம்'களைப் புகழ்ந்து உலாவும் பேர்வழிகளை.

புத்தகமொன்று 15-ரூபாய் வீதம் 2,284-புத்தகங்களை 1952-ல் துரைத்தனத்தார் விலை கொடுத்து வாங்கினார்கள்.

மூன்று ஆண்டுகளாகப் புத்தகம் விலைபோகவில்லை. 2,102-புத்தகங்கள் விற்பனை யாகாமலிருந்தன.

விலையைக் குறைத்து விற்கலாமென்று எண்ணி 3 ரூபாய் என்றனர். 2 ரூபாய்க்கும் தயாராயினர்; அந்த விலை கொடுத்து வாங்கவும் அதிகம்பேர் முன் வரவில்லை.

எனவே; 1,775 புத்தகங்களை, குப்பைக் காகிதமென்று 778 ரூபாய்க்கு விற்றனர்.

இந்த வகையிலே ஏற்பட்ட மொத்த நஷ்டம் 29,616 ரூபாய். ஏன் ஏற்பட வேண்டும் இந்த நஷ்டம்?

வரி வசூலிக்கும் அதிகாரிகள் கையாடல் தொகை 50,672 என்று அறிக்கை அறிவிக்கிறது.

பதினெட்டு டன் சந்தனக் கட்டையை அனுப்பி வைத்தனர், துரைத்தனத்தார்.