அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


ஒலியும் ஒளியும்
2

பிறகு பார்த்தால் பத்து டன்தான் இருந்தது.

எட்டு டன், வழியில் காணாமற் போய்விட்டது.

நஷ்டம் 31,054 என்று அறிக்கை தெரிவிக்கிறது.

நீதித் துறையிலே கையாடல், அதிகத் தொகை கொடுத்ததால் கெட்டது போன்ற வகையில் 3,08,122 ரூபாய்கள். விவசாயத் துறையிலே, என்ஜின்கள் விற்றதிலே நஷ்டம் போன்றவைகளில் 1,70,246. காங்கிரஸ் பொருட்காட்சியிடமிருந்து வசூலிக்கப்பட வேண்டிய தொகையைத் தள்ளுபடி செய்தது 32,936; மற்றும் திட்டங்களிலே பணியாற்றியவர்களுக்கு அதிகப்படியாகப் பணம் கொடுத்த வகையிலும் நீர்ப்பாசனத்துறை திட்டங்களில் ஏற்பட்ட நஷ்டங்களும் சேர்ந்து 1,62,558 ரூபாயும்; மின்சாரத் துறையில் செலுத்தவேண்டிய தொகையை வாங்க இயலாது போய்விட்ட வகையில் 1,33,848 ரூபாயும்; அரிசி, கோதுமை, உரம், ஆகியவற்றின் இருப்பிலே குறைவு ஏற்பட்ட வகையில் 19,95,876 ரூபாயும்; விவசாயத் துறையில், கடனுக்கான வட்டி பெறமுடியாமல் தள்ளுபடி செய்யப்பட்ட வகையில் 80,798 ரூபாயும்; தனித்தனியாகக் குறிப்பிடப்படாமல் விடப்பட் டிருக்கிற, பல்வேறு இனங்களிலே ஏற்பட்ட நஷ்டம், 16,78,784 ரூபாயும்; ஆகமொத்தத்திலே 51,64,905 ரூபாய் வீணாக்கப்பட் டிருக்கிறது என்பதைக், கணக்கு ஆய்வாளர் காட்டுகிறார். காமராஜரோ எங்கள் ஆட்சியைப்போல ஒழுங்கான ஆட்சி வேறு ஏது என்று மார்தட்டுகிறார். கணக்கு ஆய்வாளர் எடுத்துக் காட்டியுள்ள அவலட்சணத்துக்கு என்ன பதில் அளிக்கிறார் அமைச்சர்! சில சில குறைகள் இருக்கத்தான் செய்யும் என்று சமாதானம் கூறுவதானால், ஊழலை ஒழித்துக்கட்ட இயலாத துரைத்தனத் தலைவர்களுக்கு, நாவடக்கமாவது இருக்க வேண்டாமா என்று கேட்கவேண்டாமா, தம்பி!

நாவடக்கமின்றி, ஏதோ நாடாளும் தகுதி, தங்களுக்கு மட்டுமே, நாலாறு தலைமுறையாக, நாதன் அருளால் தரப்பட்டிருப்பதுபோலப் பேசும் அமைச்சர்கள், ஊழல், நிர்வாகத்தை விட்டு ஒழிய முயற்சி எடுத்துக்கொண்டு, வெற்றி பெற்றிருக்கிறார்களா? இல்லை என்பதை 1957-58-ம் ஆண்டுக் கணக்கு ஆய்வாளர் காட்டுகிறார்.

மருத்துவ மனைகளுக்கு இறைச்சி தருவதற்கான காண்ட்ராக்ட்டைச் சரியாகக் கவனித்துச் செய்யத் தவறியதால் 24,634 ரூபாய் அதிகம் செலவழிக்க வேண்டி நேரிட்டதாம். பெரிய சிக்கலான பிரச்சினை அல்ல; இந்தச் சாதாரணப் பிரச்சினையில்கூட இந்த அளவு மதமதப்பு ஏற்படுவானேன் - பொருள் பாழ்படுவானேன்?

கைக்குத்தலரிசி வாங்குவதற்காக, காண்ட்ராக்ட் ஏற்பாடு செய்ததிலும், இதேபோலக் குறைபாடு ஏற்பட்டு, 1,05,412 ரூபாய் அதிகச் செலவாகி இருக்கிறது.

கண்ணுங் கருத்துமாகப் பொறுப்புணர்ச்சியோடு, புத்திக் கூர்மையுடன் காரியமாற்றியிருந்தால், இந்த வீண் செலவு ஏற்படுமா?

சப்-மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டுகளில் - குற்றவாளிகளைக் கண்டறிந்து தண்டிக்கிற இடங்களில்! - கையாடல் நடந்திருக்கிறது 10,044 ரூபாய்க்கு!!

பஸ் டிக்கட்டுகள் தேவையைக் கவனிக்காது "போர் போராக'' அச்சடித்துவிட்டு, அவை நாசமாகிப் போனதால் ஏற்பட்ட நஷ்டம் 37,179 ரூபாய்.

கூட்டுறவு வீடு கட்டும் சங்கமொன்று செலுத்த வேண்டிய "அசலும் வட்டியும்' திருப்பி வாங்க வக்கற்று 1 இலட்சத்து 47 ஆயிரம் ரூபாய், தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.

நெடுஞ்சாலைத் துறையினர், இராணுவத் தளவாடத் துறையினரிடமிருந்து வாங்கிய சாமான்கள், பழுதுபட்டுப் போய்விட்டதால் மட்டும், 71,454 - ரூபாய் நஷ்டம்.

சர்க்கார் நடத்தும் தொழிற் கூடங்களிலே கிடைக்கக்கூடிய சாமான்களை, அங்கு வாங்காமல், தனிப்பட்டவர்களின் தொழிலகங்களிலிருந்து வாங்கிய வகையில் 97,000 ரூபாய் அதிகச் செலவு ஏற்பட்டிருக்கிறது.

விற்பனை வரி தள்ளுபடி, வழக்குக்கான செலவுத் தொகை கட்டிக் கொடுத்தது போன்ற வகையில், 5,94,410 ரூபாய்.

மாஜிட்ரேட் கோர்ட்டுகள் விதித்த அபராதத் தொகையை வசூலிக்க முடியாமற்போன வகையில் 2,93,683 ரூபாய்.

தனிப்பட்டவர் நடத்தும் ஒரு பள்ளிக்கூடத்துக்கு, அதிக அளவு மானியத் தொகையைத் தவறுதலாகக் கொடுத்தவகையிலும், சர்க்கார் பணம் கையாடல் நடத்தப்பட்ட வகையிலும் ஏற்பட்ட விரயம் 60,789.

தவறாக அதிகப் பணம் கொடுத்துவிட்டது, வரவேண்டிய பாக்கியை வசூலிக்காதது ஆகிய வகையில் 4,49,237 ரூபாய் விரயமாகி இருக்கிறது. வீண் செலவு செய்தது, காண்ட்ராக்டருக்கு அதிகப் பணம் காரணமின்றிக் கொடுத்தது ஆகிய வகையில் 72,440 ரூபாய் பாழாயிற்று.

நெல், அரிசி, உரம் ஆகியவற்றின் இருப்பில் குறைவு ஏற்பட்ட வகையில் 3,27,051 ரூபாய் பாழ்!

தனித்தனியாக விளக்கப்படாத, பல்வேறு வகையான நஷ்டங்கள் 11,81,966 ரூபாய் அளவுக்கு; ஆக மொத்தம் 32,04,065 ரூபாய் வீணாக்கப்பட்டிருக்கிறது.

தம்பி! இவ்வளவு குறைபாடுகளை மூடி மறைத்துவிட இவர்களுக்கு இருக்கிற ஒரே ஒரு வழி, இவைகளை எடுத்துக் காட்டுபவர்மீது எரிந்து விழுவது, இகழ்ந்து பேசுவது என்பது தான்.

"கல்வியறிவு அதிகம் பரவாதிருக்கும் நாடாக இன்று இருப்பதால், யார், இந்தக் கணக்குகளை எல்லாம் கவனித்துப் பார்க்கப்போகிறார்கள்,'' என்ற துணிவு இருக்கிறது, ஆட்சி நடத்துபவர்களுக்கு.

பொதுமக்களில் பெரும்பாலோர், கணக்காய்வாளர்களின் அறிக்கைகளைப் படித்துப் பார்க்கவில்லை; உண்மை. ஆனால் அவர்களுக்குப் பொது அறிவும் புத்திக் கூர்மையுமா இல்லாமற் போய்விடும்! விவரங்கள் தெரியாதே தவிர, நிர்வாகத்திலே ஒழுங்கு இல்லை, பணம் விரயம் ஆகிறது, காரணமற்ற செலவு செய்யப்படுகிறது என்பதை, அவர்கள் உணர்ந்துதான் இருக்கிறார்கள். வெளியே எடுத்துப் பேசினால், ஆளுங் கட்சியின் பகையைத் தாங்கவேண்டி வருமே என்று உள்ளபடி பயப்படுகிறார்கள்.

தொடர்ந்து ஏற்பட்டுக்கொண்டிருக்கும் இந்த ஒழுங்கீனங்கள், ஆட்சியை நடத்தும் கட்சியின் திறமைக்குச் சான்றாகுமா? வெட்கமிருக்க வேண்டாமா, தங்கள் ஆட்சியிலே இத்தனை ஊழல்கள் நேரிட்டு விடுகின்றனவே என்று.

எதிர்க்கட்சியினர் இதுபற்றிப் பேசினால், கேட்கும் பொறுமை, பதிலளிக்கும் பொறுப்பு இருக்கிறதா அமைச்சர்களுக்கு. நாங்கள் நாடு மீட்ட பரம்பரை. தெரியுமா! - என்று பழைய பல்லவி பாடி, ஆவேசமாடுகிறார்கள்.

இவர்கள் ஆட்சியின் அவலட்சணத்தை, இவர்களின் கட்சிக்காரர்களேகூட, எடுத்துப் பேசாமல் இருக்கமுடிவ தில்லையே! தெரியுமா அந்த வேடிக்கை. ஒவ்வொரு முறை சட்டசபை கூடும்போது, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், ஆட்சியிலே உள்ள குறைபாடுகள் பற்றி மனம் வெதும்பிப் பேசவேண்டி நேரிட்டு விடுகிறது. காங்கிரஸ் அமைச்சர்கள், முகத்தில் அசடுவழிய உட்கார்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களிலே, சில சாமர்த்திய சாலிகள் இருக்கிறார்கள். அவர்கள், அமைச்சர்களின் காதுபட, உள்ள ஊழல்களை, குறைபாடுகளை விளக்கமாகப் பேசுகிறார்கள்; கோபமாகக்கூடக் கண்டிக்கிறார்கள்; ஆனால் இடையிடையே நமது கழகத்தைக் குறிப்பாகவும், எதிர்க்கட்சி களைப் பொதுவாகவும் இகழ்ந்தும் இடித்தும் பேசி, ஆளுங் கட்சியிலுள்ள தலைவர்களின் நாவிலே தேன் தடவிவிடு கிறார்கள். அந்தச் சுவையே போதுமென்று அவர்களும் இருந்துவிடுகிறார்கள்.

எங்கள் கட்சியிலே உள்ள ஜனநாயக உரிமை அவ்வளவு சிலாக்கியமானது - குற்றங் குறைகளை எடுத்துக்காட்ட எங்கள் கட்சி உறுப்பினர்களுக்கு உரிமை அளித்திருக்கிறோம் என்று அமைச்சர்கள், இதையும் பெருமைக்குரியதாகப் பேசிக்கொள்கிறார்கள்.

"என்ன வலிவு தெரியுமா என் புருஷனுக்கு! கோபத்திலே ஒரு தட்டுத் தட்டினார், கன்னம் எப்படி ஆகிவிட்டது பார்த்தாயா?'' என்று குழாயடியில் பேசும் குப்பி போலாகிறார்கள், கனம்கள்.

சொந்தக் கட்சிக்கே நமது ஆட்சி இவ்வளவு அவலட்சண முள்ளதாகத் தெரிகிறதே, மற்றவர்கள், உள்ள குறையை எடுத்துக் காட்டாமலா இருப்பார்கள்? என்ற எண்ணம் எழக் காணோம்.

இத்தனை குறைகளையும் எடுத்துக்காட்டிச் சொந்தக் கட்சிக்காரர்களே, நமது மானத்தை வாங்குகிறார்களே என்று, "ரோஷம்' பிறந்திடக் காணோம்.

இவைகளை எல்லாம் கட்சிக்கூட்டத்திலே பேசித் தொலைக்கக் கூடாதா, சட்டசபைக்கேதான் கொண்டு வரவேண்டுமா என்று கேட்கும் துணிவுகூட, ஏற்படக் காணோம்.

பேசிவிட்டுப் போகட்டும், நஷ்டம் என்ன நமக்கு? கடைசியில் "ஓட்'' நம் பக்கம்தானே போடப்போகிறார்கள் என்று எண்ணி, அதிலே மகிழ்ந்து நடக்கிறார்கள்.

ஏன், காங்கிரஸ் எம். எல். ஏ. க்கள், குற்றங்குறைகளை எடுத்துக்காட்டிப் பேசுகிறார்கள்? எதிர்க்கட்சியினர், பயன் படுத்திக்கொள்வார்கள் என்பது தெரியாதா? தெரியும். ஆனால், அவர்களுக்கு "ஓட்' அளித்த மக்கள், ஊர் சீர்படாததைக் கண்டு, உள்ளம் நொந்து போயிருக்கிறார்கள்; இவர்களைக் காணும் போதே அவர்களுக்குக் கடுங்கோபம் வருகிறது; கேவலமாகப் பேசுகிறார்கள்.

எங்கள் கட்சி, ஆளுங்கட்சி! எல்லாவற்றையும் சாதிக்கும் கட்சி! என்றெல்லாம் பேசி ஓட்டு வாங்கிக்கொண்டு போனீர்களே, ஆயிரத்தெட்டுக் குறைகள் எம்மைக் கொட்டு கின்றனவே, ஏன் என்று கேட்கக் கூடாதா? ஆட்சியைத் திருத்தக்கூடாதா? தேவைகளை எடுத்துக் காட்டக் கூடாதா? இதற்காகத்தானே, சட்டசபைக்கு அனுப்பிவைத்தோம்! - என்று கேட்கிறார்கள்.

அந்தக் கேள்விக் கணைகள் துளைக்கின்றன.

எனவே, சட்டசபையிலே பேசுகிறார்கள் - தொகுதி வாக்காளர்களின் கோபத்தைத் தணியச் செய்திட.

தம்பி! இது நானாக இட்டுக் கட்டியது என்று எண்ணிக்கொண்டுவிடாதே! ஒரு காங்கிரஸ் எம். எல். ஏ. யின் பேச்சிலேயே, இந்தக் கருத்துத் தொக்கி நிற்கிறது; அதைப் பார்த்ததால் கூறினேன்.

"நில சீர்திருத்தச் சட்டத்தை உடனடியாகக் கொண்டுவர வேண்டுமென்று கவர்னரது உரையின்மீது நிகழ்த்திய பிரசங்கங் களில் ஒரு சிலர் சொன்னார்கள். அதைப் பார்த்துவிட்டு எனது தொகுதியிலிருந்து ஒரு பையன் சொன்னான், இந்தப் பொன்னம்மாளுக்கு ஓட்டுப் போட்டுவிட்டு, அவள் அங்குபோய்த் தண்டத்திற்கு உட்கார்ந்துவிட்டு வருகிறாள். மற்றக் கட்சிக்காரர்கள் இதை உடனடியாகக் கொண்டுவரவேண்டு மென்று பேசியிருக்கிறார்களே, நீ, ஏன் தண்டத்திற்குப் போய் உட்கார்ந்திருக்கிறாய் என்று கேட்டதும் உண்டு.''

தம்பி! அம்மையாரைப்பற்றி மரியாதைக் குறைவாக நான் எழுதிவிட்டேனோ என்று எண்ணிக்கொள்ளாதே. இது, அவர்களே பேசியது; சட்டசபைக் குறிப்பேட்டிலே உள்ளது நிலக்கோட்டைத் தொகுதி உறுப்பினர் திருமதி. ஏ. பொன்னம்மாள் அவர்கள் 1-7-57-ல், சட்டசபையில் பேசியது இது.

ஏன் பேசுகிறார்கள் என்பது விளங்குகிறதல்லவா?

ஒரு பையன் சொன்னானாம்! கவனித்தாயா தம்பி! பையனுக்கே, தெரிந்துவிட்டது; கேட்கத் தோன்றுகிறது! கேட்டே விட்டிருக்கிறான்.

ஒரு பையனே இப்படி எண்ணுகிறான் என்றால், பெரியவர்கள், என்னென்ன எண்ணுவார்கள்! பரிதாபமாக இல்லையா, அம்மையாரின் நிலை கண்டால்!

ஆயினும், ஆட்சிப் பொறுப்பிலுள்ளவர்களோ, தம்மை எவரும் ஏதும் செய்திட முடியாது என்று இறுமாந்து கிடக்கிறார்கள்.

பட்டிதொட்டிகளெல்லாம் செல்வோம், மக்களைக் கண்டு பேசுவோம், அச்சம் தயை தாட்சணியம் எனும் ஏதேனும் ஒன்றுக்கு மக்கள் கட்டுப்பட்டுப் போவார்கள்; அதைச் சாதகமாக்கிக் கொண்டு, மீண்டும் ஆட்சியில் அமர்ந்துகொள்ள வழி காண்போம் என்ற திட்டமிட்டுத்தான், திருஉலா வந்தவண்ணமிருக்கிறார், காமராஜர்.

வெளிப்படையாகத் தெரிவதும், அறிவிக்கப்பட்டிருப்பதும், மக்களாட்சி முறை அல்லவா? மக்களாகத்தானே, தக்கதோர் ஆட்சியை அமைத்துக் கொள்கிறார்கள், ஆட்சியிலே ஊழல், ஒழுங்கீனம், திறமைக் குறைவு, இலஞ்சம் என்பவைகள் இருப்பதாக எதிர்க்கட்சிகள் எடுத்துப் பேசுகின்றனவே, மக்கள் அந்தப் பேச்சை மதித்தால், நம்பினால், மீண்டும் மீண்டும், தேர்தலில் எமக்கு "ஓட்' அளித்து வெற்றி தேடிக் கொடுப் பார்களா! எதிர்க்கட்சிகள் இல்லாததையும், பொல்லாததையும் கூறுகின்றன என்பதை அறிந்துதான், மக்கள் திரும்பத் திரும்பஎங்களையே ஆதரிக்கின்றனர் என்று காமராஜர் கட்சி கூறுகிறது, களிப்புடன்.

தில்லுமுல்லுகள் நடத்தியும், ஜாதி குலம் ஆகியவற்றினைப் பயன்படுத்தியும், ஓட்டுப்பெட்டிகளை நிரப்பிக்கொள்ள முடிகிறது என்பதை, மக்கள் கூடக் கூறுகிறார்கள் - தெரிந்து கொண்டுமிருக்கிறார்கள். எனினும், மீண்டும் மீண்டும், ஒரு கட்சி, எப்படியோ பதவிக்கு வந்தபடி இருக்கிறது என்றால், அந்தக் கட்சியிடமும், ஆட்சியிடமும், அதே மக்களுக்கு, ஒரு வகையான பீதி ஏற்பட்டுப் போய்விடுகிறது.

இந்தப் "பீதி' மக்களாட்சி முறையினையே மாய்த்திட வல்லது.

ஆளும் கட்சியிடம் உள்ள இரும்புப் பெட்டியின் பலம் தெரிந்திருந்தும், தேர்தலில் பல்வேறு தில்லுமுல்லுகள் செய்திடும் வழி பெற்றிருக்கிறது என்பதை அறிந்திருந்தும், வெற்றி தோல்வியைப் பற்றிய கவலையற்று, எதிர்க்கட்சிகள் தேர்தலில் ஈடுபட்டு, ஆளும் கட்சியை எதிர்த்து நிற்பது, முன்னே குறிப்பிட்ட, "பீதி'யைப் போக்கத்தான்.

ஆளுங்கட்சி தன்னை எதிர்த்து வீழ்த்துவார் இல்லை என்று இறுமாந்து, எவரையும் அழிக்கலாம், கேட்பார் இல்லை; எந்த அக்ரமமும் செய்யலாம், தடுப்பார் இல்லை; எவ்விதக் கிளர்ச்சியையும் அடக்கலாம் ஒடுக்கலாம், அடக்குமுறை கொண்டு, என்று துணிந்து, துடுக்குத்தனத்தை அவிழ்த்துவிடும் போது, கொடுமைகளைக் கண்டு அஞ்சாது, கிளர்ச்சிக் களத்தில் நின்று, சித்திரவதைக்கும் சித்தமாக இருக்கிறோம் என்று கூறிடத் தக்க வீரம், பட்டுப்போய்விடவில்லை என்று எடுத்துக்காட்டி, மண்டைகள் உடைபடட்டும், கைகால் அறுபடட்டும், கண் போகட்டும், உயிரே போகட்டும், கலங்கப் போவதில்லை என்ற துணிவுடன், நிமிர்ந்து நின்றிடும் ஆற்றல்கொண்டோர் நடாத்தும் கிளர்ச்சியாலும், ஆணவ அரசுகளை வீழ்த்த முடியும்; மக்கள் மனதிலே மூண்டுகிடக்கும் பீதியைப் போக்க முடியும்.

நீதிக்காக, மக்களுக்காக, இதோ இவர்கள் இன்னுயிர் ஈந்தனர்!

ஆகாதய்யா அக்ரமம் என்றான் இந்த இளைஞன், அடித்து நொறுக்கினர், அவன் மண்டையை!

ஏன் இந்த இறுமாப்பு? என்று கேட்டான் இந்தத் தோழன், இரும்புக் காலின்கீழ் போட்டு மிதித்தனர் - அவன் கூழாகும் வரையில்!

அதோ, மலரிழந்து நிற்கிறாளே ஓர் மாதரசி, அவள் மணாளன், கொடுமையாளரின் குதிரைப் படையால் தாக்கப்பட்டு மடிந்தான்!

வெஞ்சிறையில் தள்ளப்பட்டுக் கிடக்கின்றனர், ஆயிர மாயிரம் வீரர்கள் - என்ற "செய்திகள்' உலகுக்குக் கிடைத் திடத்தக்க, அடக்குமுறைத் தீயிலே குளித்தெழும் வீரர்படை திரண்டால், தேர்தலில் வெற்றி எமக்கே என்று கூறி, உலகை ஏய்த்திடும் அரசுகூட, ஆட்டம் கொடுத்துவிடும்.

இதுவா? அதுவா? என்பதல்ல பிரச்சினை. விடுதலை உணர்ச்சி ஒரு வடிவினதுமல்ல. விடுதலை பெறுவதற்கு உள்ள வழி ஒன்றே ஒன்றுதான் என்றும் கூறுவதற்கில்லை.

மக்களாட்சி முறை ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும், இந்த நாளில், உறுதி படைத்த, உணர்ச்சிமிக்க விடுதலை வீரர்கள், அவ்வப்போது, பதம் பார்த்துப் பார்த்து, முறைகளைப் புதிது புதிதாகக்கூடச் சமைத்துக் கொள்கின்றனர்.

விடுதலை பெறுவதற்கு இன்றியமையாதது, அதற்கான உணர்ச்சிக்கு ஊறு நேரிடாதபடி பார்த்துக்கொள்வதும், உணர்ச்சி பெற்றவர்களின் தொகை வளரும் நிலையை உண்டாக்குவதுமாகும்.

எமது கொள்கைக்கு விடுதலை வேட்கைக்குச் சான்று இதோ, நாங்கள் ஆட்சிமன்றங்களிலே பெற்றுள்ள இடங்கள் என்று காட்டும்போது, உலகம் மதிக்கத்தான் செய்கிறது.

ஆனால், ஆள்பவர்கள் தடி தூக்குகிறார்கள் என்று கண்டதும், தலைதெறிக்க ஓடினால், உலகம், காரித் துப்பத்தான் செய்யும்.

மக்களை அணுகி ஓட்டு வாங்கவும் தெரிய வேண்டும் மார்புக்கு நேரே துப்பாக்கிக் குண்டு பாய வருகிறது என்றால் அதையும் தாங்கிக்கொள்ளவும் துணிவு இருக்க வேண்டும்.

தம்பி! நமது மரபு இந்த வீரத்தை அறியாததல்ல.

மையல்மிக்க மடந்தையின் தொய்யில் தன் மார்பகத்தே படிந்திடக் கண்டு, தமிழன் மகிழ்வான்; மாற்றான் வீசிய வேலால், மார்பிலிருந்து ஒழுகிய இரத்தத்தைக் கண்டும் களிப்புறுவான்!

அவன் வழிவந்தவனே! ஆற்றலுக்குப் பஞ்சமா, உனக்கு! ஆணைக்காக அன்றோ காத்திருக்கிறாய்!

உன்னை ஆண்டிடுவோரின் ஆணவத்தை, நீ அறிந்தது போல் மற்றவர்களும் அறிந்திட, அரசியல் விளக்கம் அளித்து வருகிறாய்.

இந்த அரசு, வடவரசுக்குக் கட்டியங்கூறிக் காலந்தள்ளி வருகிறது என்ற உண்மையை, நீ உணர்ந்து விட்டாய். உன் உள்ளம் பொங்குமாங்கடலாயிற்று, இதனை உணராதாருக்கு உணர்ச்சி ஊட்ட, ஊரெங்கும் சென்று உரைத்து வருகிறாய்.

வடவரசு, நமது மரபு, இனம், அழிந்துபட்டாலன்றித் தனக்கு வாழ்வில்லை என்றறிந்து, மமதையால் மதிகெட்டு, நமது மாத்தமிழை அழித்திடச் சூழ்ச்சி பல செய்கிறது என்பதை அறிந்து, போரிடத் துணிவு பெற்றாய்; மற்றவர்க்கும் அந்தத் துணிவு ஏற்பட, மன்றமேறி முழக்கமிட்டு வருகிறாய்.

ஆட்சியை எதிர்க்கிறார்கள் என்றால், எத்தகைய ஆட்சியை, அந்த ஆட்சியின் அவலட்சணங்கள் எவையெவை என்பதை மக்கள் அறிய வேண்டும் என்பதற்காக, அலசிக் காட்டுகிறாய், அறிவு கொளுத்துகிறாய்.

அந்த உன் பணிக்குத் துணையாகத்தான், இன்றுள்ள துரைத்தனத்தின் "இலட்சணத்தை' எடுத்துரைத்தேன்.

அந்தத் துரைத்தனம், "ஓட்டு' பெறவும் எம்மால்தான் முடியும் "வேட்டு கிளப்பி விடுதலை கேட்போரை வீழ்த்திடவும் முடியும்' என்று கொக்கரிக்கிறது.

அதைக் கேட்டதும், தோள் துடிக்கிறது தெரிகிறது. ஆற்றல் மிக்கோனே! அஞ்சா நெஞ்சினர், இந்தத் தமிழர்கள்; மாற்றான் தாள் வீழ்ந்தறியா மரபினர்! பகைதேடி அலைந்தோரல்ல, பகை கக்கியோரை வீழ்த்தாது விட்டவருமல்லர்; அவர்கள் பொன்னை இழப்பர், பொருளை இழப்பர்; வண்ணத் தமிழை மட்டும் இழந்திடச் சம்மதியார்! என்று நமது முன்னோர் பெயரெடுத்தனர்.

அது, "அந்த நாள்' என்கிறார், அமைச்சரானதால் எதையும் பேசிடும் துணிவுகொண்டோர்.

இது நம்மை அறைகூவி அழைப்பதாகும், வீரத்தைப் பழிப்பதாகும்; மரபினை இகழ்வதாகும், என்று ஆற்றல் மிக்கோனே! ஆர்த்தெழுந்து அறைகிறாய்!! ஒலியும் ஒளியும், கிளம்பிடக் காண்கிறேன்; உவகையுடன் உனை வாழ்த்துகிறேன். வீழ்த்துவோம், அரசின் ஆணவந்தனையே என்று விறுகொண்டுஎழுந்த ஓர் விடுதலைப் படை, பரணி பாடிக் கிளம்பிடும் வேளை, பார்த்திடும் மக்கள் அறிந்திடத்தானே, ஆட்சியால் வந்துள்ள ஆயிரம் கேட்டினை, அலசிக் காட்டிடும் அரும்பணியாற்றி னோம். ஆற்றிய அரும்பணி அளித்திடும் பலன்தனை, அறிந்திட, கணக்கிட, ஆணவ அரசு அளித்திடும் வாய்ப்பினை இழந்திட, நாம் என்ன இளித்தவாயரோ!!

அண்ணன்,

19-6-1960