அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


ஒன்றாகக் கூடி, இன்பத் திராவிடம் தேடி!
1

தி.மு.க. பொதுச் செயலாளர் பொறுப்பு -
சாலமன் வெற்றி -
கழகத் தோழர்களுக்கு அறிவுரை.


தம்பி!

புரிகிறது, புரிகிறது, உன் குறும்புப் புன்னகை. எப்படி அண்ணா எமது திறமை!! தம்பிகள் இருக்கிறார்கள் எதையும் தாங்கிட! அறிவாற்றலிருக்கிறது அவர்களிடம் நிரம்ப; எதனையும் செய்து முடிக்க! எனக்கென்ன குறை! எதையும் அவர்களைக் கொண்டே செய்து முடிப்பேன் என்றெல்லாம் கூறி, நிம்மதியாக, ஓய்வாக, இருந்துவிடலாம் என்றல்லவா எண்ணிக் கொண்டிருந்தாய். பார்த்தனையா, இப்போது, பிடித்திழுத்து வந்து இருக்கையில் அமர்த்திவிட்டோம், பொதுச் செயலாள ராக்கி விட்டோம்! என்று கேட்கிறாய், குறுநகை மின்னிட. வசமாகச் சிக்கிக் கொண்டு விட்டேனே, நான். அன்புக் கயிற்றி னாலே பிணைத்துவிட்டாய்! நீ ஆட்டிவைக்கிறபடி ஆடித்தீர வேண்டியவனாகி விட்டேன். வேறென்ன முடிகிறது என்னால்... ஆண்டு பல உழைத்தோம், கள்ளமின்றி, உள்ளத் திறமத்தனை யையும் ஒப்படைத்துவிட்டு; நிலைமையிலே மகிழத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. இனித் தம்பிகளிலே எவரேனும் ஒருவர், மற்றவர்களின் மகிழ்ச்சி கலந்த ஒத்துழைப்பைப் பெற்றுத், தானையினை நடாத்திச் செல்லவேண்டும் என்று தான், சொன்னேன், "தவம் கிடந்தேன்' என்றே கூறலாம். ஆனால். . .

மீண்டும் "சுமைதாங்கி' யாக்கப்பட்டு விட்டேன்!!
விடுவதாக இல்லையே, நீயும் உன் போன்றாரும்.

குன்றெடுக்கும் நெடுந்தோள் எனக்கு இல்லை. எனினும், என் தோளின்மீது பொறுப்புகளை எடுத்துவைத்துச் சுமந்திடச் சொல்வதிலேயோ, உனக்கோர் தனிச்சுவை ஏற்பட்டுவிடுகிறது; நான் என்ன செய்வேன்? தாங்கிக் கொள்கிறேன்.

என்னைப் பிடித்திழுத்து இருக்கையிலே அமர்த்துகிறார் களே. ஏனோ நமக்கு இனியும் இந்த இக்கட்டு என்றெண்ணித் தம்பி! நான் இடர்ப்பட்ட நேரத்தில், "ஏனண்ணா! வீண் கலக்கம், எழுந்து நில், எம்முடனே!! என்று கூறுவதுபோல, தம்பிகள் நாவலரும், சம்பத்தும், கருணாநிதியும், மதியும், நடராசனும் அன்பழகனும், சிற்றரசும், எனைச் சுற்றி வளையம் அமைத்துக் கொண்டனர் - என் செய்வேன்! - தப்பி ஓடிடவா முடியும் - உம்! என்று இழுத்தேன், உட்கார்! என்றனர், வேறென்ன செய்ய இயலும் - பொறுப்பேற்றுக் கொண்டேன்! அல்ல! அல்ல! பொறுப்பேற்றுக் கொண்டேன் என்று கூறிவிட்டேன்! பொறுப்புகளை நிறைவேற்றிட இயலும் என்பதில் எனக்குத் துளியும் ஐயமில்லை - ஏனோவெனில் - வீரர்களாம் என் தம்பிமார்கள், ஒவ்வொருவர் ஒவ்வோர் துறையிலே அரசோச்சி, அருந்திறன் காட்டிப் பெறப்போகும் பலன்களை, நாட்டு மக்களைக் கூட்டிக் காட்டி மகிழத்தானே, நான் பொறுப் பேற்றுக் கொண்டிருக்கிறேன்! அவர்கள் செய்தளிக்கும் அணிபணியினை, அனைவரும் கண்டு மகிழ, கொண்டு வந்து காட்டிட, நான் "பொது'ச் செயலாளன் ஆக்கப்பட்டிருக்கிறேன். இதை எண்ணும்போது, முதலில் எழுந்த திகைப்புத் தகர்ந்து, தித்திப்புத் தட்டுகிறது.

தம்பி! அலைகடலில் கிடக்கிறது முத்து. மண்ணடியில் கிடக்கிறது தங்கம்! பிறகோ, கைத்திறன், தொழில் நுட்பம் பெற்றோரின் கரம் வந்தடைகிறது; பிறிதோர் நாள், மனதை மயக்கும் பருவத்தாளின் மார்பினில் புரள்கிறது, மாலையாகி!

எங்கெங்கு இருந்த பொருள், எவரெவர், எத்தகைய திறம் காட்டிக் கொணர்ந்தனர் - கொண்டு வந்த பின்னர், வண்ணம் வளரத்தக்க வடிவம் பெற்று, ஒன்றுடன் மற்றொன்று பொருத்தமான முறையில் இணைக்கப்பட்டு, பிறகு இருக்குமிடம் சென்று, எழில் எழிலோடு சேர்ந்துவிடுகிறதல்லவா? அஃதே போல், பல்வேறு துறைகளிலே, பணிபல புரிந்து, என் தம்பிகள் தேடிக்கொண்டு வந்தளிக்கும், பொன்னும் மணியும், முத்தும் பிறவும், கோர்த்தளித்து, அதனைத் தாயகம் அணிந்து, பெருமிதம் கொண்ட நிலையில் இருந்திடக்கண்டு, மகிழ, நீயும் நானும் இருக்கிறோம், மூழ்கியும் கல்லியும், முறியடித்தும் பகை முடித்தும், அவர்கள் தேடிக் கொண்டுவந்து அளிக்கும் "செல்வத்தை' நாட்டுக்குக் காட்டி, "காணீர்! என்னருந் தம்பிகளின் ஆற்றலை!' என்று கூறி மகிழ்ந்திட, நான். ஆம்! ஆம்! கடற்கரைக் கூட்டத்திலேயே, அதனைத்தான் நான் கூறினேன். அதற்குத் தடை ஏதும் இல்லை என்றே, அவர்தம் முகப் பொலிவும் பொலிவளிக்கும் கண்ணொளியும் காட்டின. மட்டற்ற மகிழ்ச்சி.

திராவிட முன்னேற்றக் கழகம், ஈடுபடும் எந்தக் காரியத்தை யும், எடுத்துக்காட்டும் எந்தப் பிரச்சினையையும், மேற்கொள்ளும் எந்த நடவடிக்கையையும், நாடு இன்று கூர்ந்து பார்த்து, "இதற் கென்ன பொருள்? இது எதைக் காட்டுகிறது? இதற்கு என்ன நோக்கம்? இது எதன் விளைவு?' - என்றெல்லாம், ஆராய்ந்திடவும், உரையாடிடவும் காண்கிறோம்.

எங்கோ, எதுவோ, நடந்தது - என்ற முறையில் அல்ல, ஏன், இது, இவ்வண்ணம், இதுபோல, நடைபெற்றது? என்று, நமது ஒவ்வொரு நடவடிக்கையையும், ஏற்படும் ஒவ்வொரு நிலைமையையும், அலசிப்பார்த்திட இன்று, எல்லா அரசியல் கட்சிகளுமே முயற்சிக்கின்றன. அலசிப்பார்த்து உண்மையை, அந்தக் கட்சிகள் கண்டறிந்துவிட்டன, என்று கூறுவதற்கு இல்லை! ஆனால், முயற்சியிலே மட்டும், மும்முரமாக ஈடுபடுகின்றன.

இது, நமது கழகம், இன்று பெற்றுள்ள வளர்ச்சிக்கு மிகச் சிறந்த சான்று.

தம்பி! நாம் கவனிக்கப்பட்டு வருகிறோம் - நமது நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் கவனிக்கப்பட்டு வருகின்றன - என்பதுதான் பொருள். அதிலே தொக்கி நிற்பது, சுவைதரும் மற்றோர் உண்மை. எவரும் அலட்சியப்படுத்த முடியாத நிலையில், இன்று நம் கழகம் இருக்கிறது. அனைவரும் கூர்ந்து கவனிக்கிறார்கள் - திகிலுடன் சிலர், திடுக்கிட்டுப் போன நிலையில் சிலர், அருவருப்புடன் சிலர், பொறாமையுடன் வேறு சிலர் - அவரவர், தத்தமது நிலைக்கு ஏற்ற நினைப்புடன் - ஆனால், எவரும் கூர்ந்து கவனிக்கிறார்கள்.

அடவியில் சென்று கொண்டிருக்கிறான் ஒருவன் - கதிரவன் களைத்துப் போய், இளைத்துப்போய், மறையும் நேரம் - கால் கடுக்க நடக்கிறான் - சற்றுத் தொலைவில், மரம் அடர்ந்த இடத்தில், சிறு பொறி காண்கிறான் - உற்றுப் பார்க்கிறான் - பொறி பெரிதாகக் காண்கிறான் - நடையை நிறுத்திக் கொள்கிறான் - தீப்பந்தங்கள் போலத் தெரிகின்றன - அசைவற்று நிற்கிறான் - புலியின் கண்களே, அதுபோலத் தெரிகின்றன, என்று எண்ணுகிறான் - திகிலன்றோ அவன் நெஞ்சில் தீயெனப் புகும்.

மாலை வேளை! ஆற்றோரச் சோலை! அழகு தமிழ்ப் பாடலை இசைத்தபடி, நடக்கிறான், ஒரு இளைஞன்! யார்? என்றா கேட்கிறாய்? என்ன தம்பி! நேரம், இடம், கூறினேனே - இதற்கு மேலுமா விளக்கம் வேண்டும்? - சொல்லிவிடட்டுமா அதனையும் - கெண்டை விழியாளைக் கண்டு, அவள் தனக்குச் செண்டு தந்து, பின்னர் இன்பம் மொண்டு உண்டிடச் செல்லும் காதலன், போதுமா! - சரி, அவன் செல்கையில், குக்கூ! குக்கூ! என்ற ஒலி செவியில் வீழ்கிறது. என்ன செய்வான்? முகமலர்ச்சி யுடன், தருக்களைக் கூர்ந்து கவனிக்கிறான். எங்கு ஒளிந்து கொண்டு இன்னிசை எழுப்புகிறது, குயில் என்று கண்டறிய, திகிலுணர்ச்சியா, அவனுக்கு - தித்திப்பு உணர்ச்சி!

அஃதேபோல, அவரவர், தத்தமது நிலைமைக்கு ஏற்ப, எதிர்ப்படுவனவற்றைக் கூர்ந்து கவனிப்பர்.

வழியே கிடக்கும் எருக்கஞ்செடியினையும், எலும்புத் துண்டுகளையும், சோளக் கொல்லைப் பொம்மைகளையும், வயல் வளைவாழ் எலிகளையும், கத்திக்கத்திச் செத்த தவளைகளையும், காலில் உதையுண்டு சிதறிய ஒட்டாஞ் சல்லிகளையுமா, கூர்ந்து கவனிப்பார்கள். உலகம் என்ன அவ்வளவு விவரமறியாதவர்களின் இருப்பிடமாகவா, உளது! இல்லை, தம்பி! நிச்சயம் இல்லை! எதைக் கூர்ந்து கவனித்தாக வேண்டும் என்பது, மிக நன்றாக உலகுக்குத் தெரிகிறது - அதிலும் அரசியல் உலகு இருக்கிறதே, அதற்கு இந்தத் துறையில் தனியானதோர் திறமை, மிக வேகமாக வளர்ந்துவிட்டிருக்கிறது.

அத்தகைய அரசியல் உலகம், நமது கழகத்தின் ஒவ்வொரு அசைவையும், நமது பேச்சின், "அசை'யைக்கூட மிக உன்னிப் பாகக் கவனித்து வருகிறது: காரணம் தேடுகிறது, பொருளை ஆராய்கிறது, இயன்றால், எவ்வழியில் அதனைப் பயன்படுத்தி, நம்மை வீழ்த்தலாம், என்ற நினைப்புடன்.

நெடுந் தொலைவிலிருந்து வர இருக்கும் எதிர்ப்படை கண்ணுக்குத் தெரியுமுன்பே, தூசி கிளம்பிடக் கண்டதும், படை வருகிறது, என்பதனைக் கண்டறிய முடிகிறதல்லவா? மண் காற்று அடிக்கிறது - அதனைப் போய் இத்துணைக் கூர்மையாகக் கவனிக்கவேண்டுமா என்று கருதுபவன், அந்தத் துறையிலே ஓர் மதியிலியன்றோ!

அதுபோலத்தான், நமது ஒவ்வொரு நடவடிக்கையும், மாற்றாரின் கண்களிலே, நடவடிக்கை உருவாகு முன்பே, தூசி அளவாக இருக்கும்போதே, தெரிந்துவிடுகிறது.

எனவே, தம்பி! நாமும் நமது நடவடிக்கைகள், திருப்பங்கள், முடிவுகள், முயற்சிகள், முகாம் அமைப்புகள் என்பவைகளை எதிரிகள் கூர்ந்து கவனித்த வண்ணம் இருக்கிறார்கள் என்பதை அறிந்து, அதற்கேற்ப, நமது செயல் முறைகளை மட்டுமல்ல, பேச்சு முறைகளைக்கூட செம்மையானவையாக மட்டுமல்ல ஆற்றல் மிக்கவையாக மட்டுமல்ல, எவரும் பாராட்டத் தக்கவையாக மட்டுமல்ல, எதிரிகள் கண்டு, இதற்கு இதுவா பொருள்? யாமறியாமற் போனோமே? இதற்கா இந்த நடவடிக்கை, எமக்கு முதலில் விளங்காமற் போய்விட்டதே? இவ்விதமாகவா முடிவு செய்தனர், இது திடீர் நடவடிக்கையாக வன்றோ இருக்கிறது? - என்று எண்ணித் திணறத்தக்க விதமாகக், கூடுமானவரையில் அமைத்தல்வேண்டும் - ஆனால், இது இயற்கையானதாகவும் பலனளிக்கத்தக்கதாகவும், வளர்ச்சியைக் காட்டுவதாகவும், இருத்தலும்வேண்டும்.

பரபரப்புணர்ச்சிக்காகப் பலனளிக்காத் திட்டங்களை மேற்கொள்வதும் தீங்கு பயக்கும்; அமைதியே ஆனந்தம் என்ற போக்குக்காகச் சொரணையற்றுக் கிடப்பதும் அழிவுதரும், தேய்வினை உண்டாக்கும்.

கரிப்படைகள் மட்டுமே இருந்தால் போதும், வலிவுமிக்க கோட்டைகளையும் தூள் தூளாக்கலாம் என்றெண்ணிப் பிற வகைகளை அமைக்காதிருப்பவன் வெற்றியா பெறுவான்?

கேடயம் ஏந்தாத வாள் வீரன் உண்டோ?

திறமைகள் பலப்பல - அவைகளை இணைத்திடும் முறையோ மிகப் பெரியது, மிக மிகத் தேவையானது.

இன்றல்ல நேற்றல்ல, ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பு வள்ளுவப் பெருந்தகை கூறிய இப்பேருண்மையை, நமது நாவலர் விளக்கிக் கூறிடக் கேட்டு இன்புற்று இருப்பாயே!

இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.

அஃதேபோல, நமது கழகத்துக்குக் கிடைத்துள்ள ஒப்பற்ற, ஓய்வறியா வீரர் குழாத்திலே, பல்வேறு துறைகளிலே, பார்மெச்சும் தனித்திறமை பெற்றோர் உளர் - அவர் ஒவ்வொரு வரிடமும், அவரவரின் தனித்திறமையினைக் காட்டிக் கழகத்துக்கு வலிவு ஈட்டிடச் செய்திடும் நோக்குடன், ஒவ்வோர் துறை ஒப்படைக்கப்படல் வேண்டும் - அவர்களே தேர்ந்தெடுத்தல் எனினும், சாலச் சிறந்ததே - அவரவர் தனித் திறமையினைக் காட்டிடத், தமக்கேற்ற துறையினிலே ஈடுபட்டு, ஈட்டிடும் கூட்டுச் சக்தியினை, பொது வலிவினை, வடித்தெடுத்து, உம்மிடம் தந்திட, நான் - அந்த நோக்கத்துடனேயே, என்னை "இருக்கைக்கு' இழுத்து வந்துள்ளனர், என்று உளமார நம்புகிறேன்.

தம்பி! கரிப்படை வலிவளிக்குமா, கரிப்படை வெற்றி தேடித் தருமா, என்பதுபற்றிக் காலாட்படை, பேசியபடி காலத்தை ஓட்டினால், களத்திலே வெற்றியா, கிட்டும்?

அதுபோலவே, நமது கழகத்தவரில், சிலரோ, பலரோ, திறமைகளிலே, எந்தத் திறமை பெரிது, உயர்வுடையது, எது முன்னணி, எது மூன்றாமணி என்று ஆராய்வதிலும், உரையாடிக் கிடப்பதிலும், ஆர்வம் செலுத்திக் கொண்டிருந்தால், திறமை களைக் காட்டிக் கழகத்துக்கு வலிவு ஈட்டிட, மனமும் வராது, திறமும் குறையும், நேரமும் கிடைக்காது.

திறமைகளின் வகை வளர வளர, இந்தப் பிரச்சினையில், சுவைமிகு சிக்கல் நிச்சயம் ஏற்படும் - அதனை எத்துணை பொறுப்புணர்ச்சியுடன், தன்னல மறுப்புணர்ச்சியுடன், தீர்த்துக் கொள்கிறோமோ, அதைப் பொறுத்தே, நமது வெற்றி உளது.

சென்ற கிழமை, இரு நாட்கள், தொடர்ந்து ஒரு ஆங்கிலப் படம் பார்த்தேன்.

ஆமாம், தம்பி! ஏன் திகைக்கிறாய்? கழகத்திலே பெரிய பிளவாமே! குழப்பமாமே! அப்படிப்பட்ட நேரத்திலே, படக் காட்சிக்குச் செல்வதா, கவலையில்லாத மனிதனா நீ! - என்று தானே, கேட்கிறாய்- தம்பி! இதிலிருந்தே, நீ தெரிந்து கொள்ள வேண்டும், பெரிய பிளவு - குழப்பம் - என்பன மாற்றாரின் மனதிலே மூண்ட அற்ப ஆசைகளின் ஓசைகள்!!

எனவேதான், நான் படம் பார்க்கச் சென்றேன் - அங்கும் பாடம் தேடிப்பெறும் பக்குவம் எனக்கு நீண்டகாலமாகவே உண்டு. ஆதலால்.

மதத் தொடர்புடைய கதை - சாலமனும் ஷீபா நாட்டு அரசியும் என்ற படம்.

சாலமன், எகிப்து நாட்டிலிருந்து கிளம்பிவந்த மிகப் பெரும்படையால் தாக்குண்டு, தன் படை சின்னாபின்னமாகிப் போனது கண்டு, மனம் வெதும்பிக் கிடக்கிறான்.

இரவு, இருளை ஏவி, அவனையும் அவன் படையினரையும் அரவணைத்துக் கொள்ளச் செய்கிறது. துக்கம் துளைக்கிறது; தூக்கம் இல்லை.

காலையில், சாலமன் கவலையுடன் உட்கார்ந்திருக்கிறான் - களம் சென்றாக வேண்டும் - காற்றெனக் கடுகிவரும் எதிரிப் படையுடன் போரிட - புயலின் வேகம் எதிரிப் படைக்கு - கிளைகள் முறிந்த மரம் போல், இவன் படை.

எதிர்ப்புறம், ஓர் ஒளிப்பிழம்பு, ஊடுருவிக் கிளம்பிடக் காண்கிறான்.

இருளைக் கிழித்துக் கொண்டு, ஞாயிறு எழுந்தான் - ஞாயிற்றின் ஒளியின் இடையிலேயே, தனிப் பளபளப்புடன், மற்றோர் ஒளி, காண்கிறான். வியந்து, இதற்குக் காரணம் யாது என்று பார்க்கிறான் - அவனிடமிருந்த, கேடயத்தின்மீது கதிரவன் ஒளி படுவதால், காண்போரின் கண்களைக் கூசிடச் செய்திடும் ஒளிப்பிழம்பு உமிழப்படுகிறது என்பதறிந்தான்.

படையினரை விளித்துக் கேடயங்களைப் பளபளக்கச் செய்து வைத்துக்கொள்ளச் செய்தான்.

பாய்ந்து வந்த எகிப்தியப்படை, குன்றின் முகடு வரும் வரையில் காத்திருந்து, சாலமன் படையினர், தமது கேடயங் களைக் கதிரவன் ஒளி அவைமீது விழும் வண்ணம், ஏந்தி நின்றனர் - ஒளிப்பிழம்புகள், ஆயிரமாயிரம் கிளம்பின - எதிரிப்படையினரின் கண்களைத் துளைத்தன! வாளுக்கு வாள்! வேலுக்கு வேல்! இது போர்முறை! ஆனால் இங்கோ, ஒளிப் பிழம்புகள் தாக்குகின்றன; கண்கூசுகிறது! வழி தெரியவில்லை; பாதை தவறுகிறது! ஒளிப்பிழம்பைக் காண மாட்டாமல், வீரர்கள் விழிகளை இறுக மூடிக்கொள்கிறார்கள். குதிரைகள் மிரண்டோடுகின்றன. வழி தவறி. படையிலே குழப்பம்! கிலி! விவரமறியாததால் திகில்! படை, மலை முகடு சென்று, படுகுழியில் வீழ்கிறது - சின்னா பின்னமாகிறது. தாக்காமலேயே, தாக்கவந்த பெரும்படையை வீழ்த்துகிறான் சாலமன், அறிவாயுதம்கொண்டு. பளபளப்பான கேடயம், கூர்மையான வாளேந்திய குதிரை வீரர்களை வீழ்த்திவிடுகிறது. ஒளிப்பிழம்பு கிளம்பிப் பெரும் படையைப் பிளந்தெறிகிறது.

தம்பி! கேடயத்தின் பளபளப்பை, ஒளிப்பிழம்பாக்கி, எதிரிப் படையை முறியடிப்பது, சாலமன், செய்துகாட்டும் வரையிலே போர் முறைகளிலே, ஒன்று அல்ல! நிலைமை, ஒரு புது முறையை அளித்தது; வெற்றியும் கிடைத்தது.