அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


ஒன்றாகக் கூடி, இன்பத் திராவிடம் தேடி!
2

நாமும் மிகப்பெரிய படையினைத் திரட்டிவைத்துக் கொண்டுள்ள, காங்கிரஸ் கட்சியைக் களத்திலே சந்திக்க வேண்டும் - ஆற்றல் மிக்கது நமது படை, எனினும், அவர்கள் திரட்டிக்காட்டத்தக்க அளவு, மிகப் பெரிதாகவே அமையும், அறிந்திருக்கிறோம்.

இத்தகைய போரில் நாம், முறைகள், அணிகளின் வரிசைகள், திறமைகளின் வகைகள், அவைகளிலே உள்ள ஏற்றத் தாழ்வுகள், இவை குறித்துப் பேசிக் கிடப்பது, நேரக்கேடு. திறமை துருப்பிடிப்பது என்பவைகளை, நாமே வலியத்தேடிப் பெற்றுக் கொள்ளும் தற்கொலைத் திட்டமாக முடியும்.

மாற்றார், நமது முறை, முகாம் வரிசை, திறமைகளின் வகை, என்பன பற்றி அறிந்திடவும், அறிவதால் கலாம் விளை வித்திடவும், வழி ஏற்படச் செய்து வைப்பது, நமது படை வரிசையை நாமே, நம்மையும் அறியாமல், காட்டிக் கொடுத்து விட்டுப், பிறகு கண் கசக்கி நிற்கும் கருத்தற்றோர் ஆக்கி விடும்.

முறைகளிலே, நிலைமைகளுக்கேற்பத் திருப்பங்கள், திருத்தங்கள், புதுமைகள் கண்டிடத் தெரிந்தாலன்றி கேடயம் கக்கிய ஒளியினைக் கொண்டே, எதிரிப்படையினை அழித் தொழித்துச் சாலமன் பெற்ற வெற்றி போல, நமக்கு வெற்றி கிட்டுவதும், இயலாததாகிவிடும்.

இப்போது, சொல்லு தம்பி! நாம் மேற்கொண்டுள்ள குறிக்கோள் வெற்றிபெற வேண்டுமானால், நாம் எத்துணை விழிப்பாக இருத்தல் வேண்டும் என்பது புரிகிறதல்லவா?

***

இனி, ஒரு விடுதலை இயக்கம், தன் குறிக்கோளில் வெற்றி பெற, என்னென்ன வகையான திறமைகளைப் பெற்றிருக்க வேண்டும் என்பது பற்றியும், எண்ணிப்பார். அந்தத் திறமைகளை தமது தனித்திறமையாகப் பெற்றுத் திகழும், தம்பிமார்களின் முகாமல்லவா, நமது கழகம் என்பதையும் நினைத்துப் பார் - அப்போதுதான் நமது கழகத்தின் அளவு மட்டுமல்ல, இயல்பு விளங்கிடும் - ஏற்றம் தெரிந்திடும்.

மாற்றார், மேடை தவறாமல், சிக்கலான கேள்வியை எழுப்பி, நமக்குத் தொல்லை தருகிறார்களே? என்ன கூறி, இந்தச் சிக்கலை அறுப்பது என்று எண்ணிடும்போது, தம்பி! சிற்றரசு உன் நினைவிற்கு வருகிறாரல்லவா! ஆமாம்! அவர் பேசினால், இந்தச் சிக்கலையே சின்னாபின்னமாக்கி எறிவார் என்று தோன்றுகிறதல்லவா?

கேட்பவர்கள் கிடுகிடுக்க, எதிரிகள் படை நடுங்க, நமது படை எக்களிக்க, சம்மட்டி அடி கொடுப்பதுபோல, மொழியும் விழியும் உறுதியையும் உணர்ச்சியையும் கொட்டிடத் தக்கபடி பேசினால், மாற்றார் மமதை மடியும், என்ற எண்ணம் தோன்றும் போது, சம்பத் தெரியவில்லையா உன் கண் முன்பு!

நெஞ்சம் நெக்குருக, இதயம் விம்மிட., கண்களில் நீர் துளிர்த்திட, நரம்புகள் புடைத்திட, ஓசை நயமும் சொல்லடுக்கு அழகும் துலங்கிடப் பேசி, நமது கொள்கைவழி, கேட்போரை ஈர்த்திடவேண்டும் என்று எண்ணும்போது, கருணாநிதியைக் காண்கிறதன்றோ உன் மனக்கண்.

ஆரியப்படை கடந்தானின் ஆற்றல், இமயம் முட்டிய பெரும்படை நடாத்தியவனின் பெருமை, சாவகம் யவனம் சிங்களமெனும் பலநாடு சென்று பரணி பாடிய அடலேறுகளின் அஞ்சா நெஞ்சம், பரணி பாடித் தரணியாண்ட பைந்தமிழ் வேந்தரின் புகழ்க்கொடி பட்டொளி வீசிப் பறந்திட்ட மாட்சி, இவைதமை, முகபடாம் போர்த்த யானை மீதமர்ந்து, முரசொலித்துச் செல்லும் ஆணையாளன் போலவும், இன்று இயற்றும் இன்கவிதை என்றும் நிலைத்து நின்று அறிவு புகட்டும் என்று அறிந்து கவிதை ஆர்த்திடும் அருந்தமிழ்ப் புலவோன் போலவும், தமிழழகும் இலக்கியச் செறிவும் மிளிர, இனிமை துள்ளிட, ஏறுநடையில் பேசினால், தமிழகத்தின் தொன்மை அறிந்த கற்றோர் களிப்படைவர், கழகத்தின் மாண்பறிவர், என்று எண்ணிடும் வேளையிலே, நாவலர் நெடுஞ்செழியன், நினைவிலே வந்து நின்று, அன்புகெழுமிய தோழர்களே! தோழியர்களே! என்றழைக்கும், பாங்கு தெரியாமலிருக்குமா?

பிரச்சினைகளை அலசி, எளிதாக்கி, தொடர்புடையன, தொக்கி நிற்பன, துணை வருவன, என்னும் வகையினதான கருத்துக்களையும் பிணைத்து, ஆசிரியர்போல எடுத்துக் கூறிக் கேட்போர்க்குத் தெளிவளித்து, நம் பக்கம் அவர்தம் ஆதரவைத் திரட்டிட வேண்டும், என்று எண்ண தோன்றும்போது, பல ஆண்டுகள், பச்சையப்பன் கல்லூரியில் தமிழாசிரியர் பணிபுரிந்து, இன்று விடுதலை இயக்கத்தின் வீரர் கோட்டத்திலே திகழும், அன்பழகன் அழைக்கப்பட வேண்டும் என்று தோன்றுகிறதல்லவா?

கட்டையாய் குட்டையாய் உள்ள இந்த இளைஞன், கல்லூரியில் படித்த நாள் தொட்டு, காண்போரைக் கண்களால் கவ்வி, எண்ணங்களை எடுத்து இயம்பும்போது, கேட்போர், ஏற்றுக்கொண்டனர் என்று அறிந்தாகவேண்டும் என்ற இயல்புடன், நிறுத்தி நிறுத்திப் பேசி, உலைக்கள நெருப்பு வளரட்டும் என்று காத்திருந்து, தழல் கொழுந்துவிட்டதும் இரும்பினைப் பழுக்கக் காய்ச்சி எடுத்துச் சம்மட்டி அடி கொடுக்கும் பான்மைபோல, எண்ணி எண்ணித் துவக்கி, பின்னர், மேலை நாட்டு வரலாற்றுச் சம்பவங்களைப் பின்னி, கொள்கைக் கனலைச் சொற்களாக்கித் தருகிறான் - இத்தகு, திறமுடையான் இளைஞர்தமை நமது இயக்கம் ஈர்த்திடத்தக்க வழிமுறை கொண்டான், என்றன்றோ மதியழகனைக் குறித்து, எண்ணுவீர்!

நாடு நமது ஆகாதிருப்பதால் வந்துற்ற நலிவு, நாடாள்வோர் எதனையும் நன்முறையில் கவனியாது இருப்பதால் ஏற்படும் இன்னல், வடவரிடம் சிக்கியதால் வந்துற்ற சீர்கேடு, இவவை குறித்துக் கேட்போர் மனதில் குமுறல் எழவேண்டும், எனில், உருக்கமும் உழைப்பாளியின் உள்ளம் அறிந்த தன்மையும், வேதனையைக் காட்டிடும் குரல் கம்மலும், எளியார்க்கே இக் கழகம் என்பதனை எடுத்துக் காட்டிடும் தோற்றமும் கொண்ட முறையில் பேசிப், பாட்டாளிகள், நமக்கேற்ற பாசறை, தி.மு.க. என்று உணரச் செய்தல்வேண்டும், என்ற எண்ணம் எழும்போது, நடராசன் என்று நினைவு செல்கிறதன்றோ.

தம்பி! இஃதேபோல, ஒவ்வொருவர், குறித்தும், என் எண்ணத்தைக் கூறப்புகின் ஏடு கொள்ளாது - நாடு மதித்திடத் தக்க நல்ல திறமையினைப் பெற்றிருப்போர், நமது பெரும் படையில், உள்ளனர். நான் என் பணியினை எளிதாக்கிட, உடன் இருந்து உழைத்து வெற்றி தேடிட முனைந்து, இப்போது செயலாற்றும் செம்மல்களை மட்டும், குறிப்பிட்டேன் - மற்றவர் பற்றிக் கூறிட ஏதும் இல்லை என்பதால் அல்ல - ஏட்டில் இடம் இராது என்பதால்.

ஒரு விடுதலை இயக்கம் இதனினும், சிறந்தோர் பாசறையை இவ்வளவு குறுகிய காலத்திலே, பெற்றது இல்லை.

இதனை எண்ணி மகிழவும், இந்த நிலைமையைத் தக்கபடி பயன்படுத்திப் பலன் பெறவும், நாம் ஒவ்வொருவரும் முனைந்து நிற்க வேண்டுமேயன்றி, மாற்றார், நமது முறை பற்றிக் கூறிடும் மருளுரை கேட்டு, மனம் தடுமாறிடப் போமோ!!

பார்! பார்! பயல்கள் நாலே நாட்களில், பிளவுபட்டு, ஒருவரை ஒருவர் ஏசிக் கொண்டும், எதிர்த்துக் கொண்டும், திக்காலொருவராக ஓடப்போகிறார்கள் - என்று கூறினாராம், காமராசர் - "தீர்க்கதரிசனம்' - தெரிந்தவர் - முதலமைச்சர் அல்லவா!!

ஆனால், நடந்தது என்ன?

ஆராய்கிறார்களாம், அரசியல் வட்டாரத்தில் - இதன் பொருள் என்ன? நோக்கம் என்ன? விளைவு யாதாக இருக்கும் என்று.

***

தம்பி! பொதுக் குழுவு எடுத்த முடிவு, மாற்றார்களின் முகாம்களிலே, உலவிக் கிடக்கும், ஒற்றர்கள், உளவாளிகள் அங்கிருந்து கிளம்பிப், பிற இடங்களில் உறவாடிக் கெடுத்திட நினைக்கும் நயவஞ்சகர்கள் ஆகியோர்களுக்கு, அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டதாம்.

ஆயிரத்தெட்டு ஆராய்ச்சிகள் நடத்திக்கொண்டு, அவர்கள் கிடக்கட்டும் - தம்பி! - உனக்கு வேலை, நிரம்ப இருக்கிறது - தொடர்ந்து செய்யப்படவேண்டிய பணி.

ஒருவர், முன்பு - இப்போது, அதே பணியினைச் செம்மையாகவும், வளர்ச்சிக்கு ஏற்ற வண்ணமும் நடத்திச் செல்லப் பலர்!

மாற்றம் இவ்வளவே - திருப்பம், இதுதான்.

உள்ள திறமைகள் அவ்வளவையும், திரட்டிப் பயன்படுத்த வேண்டிய நேரமிது.

ஒவ்வொருவரும் ஒவ்வோர் துறை நின்று, முன்நின்று, வழி கண்டு, வல்லமையை ஈந்து, பணிபுரிந்து, பொது நோக்கம் ஈடேறப் பாடுபடவேண்டிய வேளை இது?

எந்த ஒரு கட்சியிலும், முதல் கட்டத்தில், யார் உங்கள் கட்சிக்குத் தலைவன்? என்று பிறர் கேட்கக்கூட மாட்டார்கள்?

இன்றும் அதுபோலக் கட்சிகள் பல உள.

இரண்டாவது கட்டத்திலே, அலட்சியத்துடனும் கேலிச் சிரிப்புடனும், இவன்தானே உங்கள் கட்சிக்குத் தலைவன்? என்று கேட்பர்.

மூன்றாவது கட்டம் வந்ததும், யார் உங்கள் கட்சிக்குத் தலைவர், அவரா? இவரா? எவர்? என்று கலாம் விளைவிக்கும் நோக்கத்துடன் கேட்பர்.

நாலாவது கட்டத்தின்போது, கட்சித் தலைமைக்காக அவனும் இவனும் மோதிக்கொள்ளப் போகிறார்கள், அமளி எழப் போகிறது, கட்சி அழியப்போகிறது, என்று ஆரூடம் கணிப்பார்கள்.

ஐந்தாவது கட்டத்தில், எமகாதகப் பேர்வழிகளப்பா இவர்கள், என்னமோ பேதம் என்றார்கள், பிளவு என்றார்கள், குழப்பம் வரும் என்றார்கள், குட்டிக் கலகம் ஏற்படும் என்றார்கள் - கடைசியில் பார்த்தால் எல்லோருமே ஒன்றாகத் திரண்டு நின்று, இதுதான் எமதுகட்சி தெரிகிறதா புரிகிறதா, என்று கேட்கிறார்களே, ஏ! அப்பா! சாமான்யப்பட்டவர்களல்ல, இவர்கள் - என்று பேசிக் கொள்வார்கள்.

அதுதான், தம்பி! இது!! நாம், வளர்ச்சி பெற்றிருக்கிறோம். மாற்றார் எதை எதையோ எண்ணி எதிர்பார்த்து, ஏமாந்து, ஏக்கமுற்றுப் போகும் நிலையிலும், அளவிலும், நாம், வளர்ந்திருக்கிறோம்.

ஏமாளிகள், எண்ணிக் கொண்டார்கள், நமது கழகம் பிளவுபடும் என்று - நாம் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து போவோம், என்று. நான் நமது கழகத்தைக் குறித்துக் கொண்டுள்ள நம்பிக்கை, நமது உடன் பிறந்தார்கள் பற்றி எனக்குள்ள மதிப்பும் பற்றுப் பாசமும், எத்தகையது என்பதை அவர்கள் எங்ஙனம் அறியமுடியும்?

இருவர் மட்டும் செல்கின்றனரே, ஐந்து நூறுபேர் உள்ள அயலார் கோட்டை சென்று, உரிமை முழக்கமிட, என்ன நேரிடுமோ? எவன் தாக்குவானோ? என்றெண்ணிச், சம்பத்தை, டில்லிக்கு வழியனுப்பி வைத்தபோது, என் கண் கலங்கியதை மாற்றுக் கட்சி முகாமில் இருந்துகொண்டிருக்கும், "இடம் பிடித்தான்களால்' எப்படி, உணர்ந்துகொள்ள முடியும்?

கண்ணதாசனைச் சுட்டுக் கொன்றுவிட்டார்களாமே! - என்றோர் வதந்தி, மும்முனைப் போராட்டத்தின்போது, சிறை நுழைந்து என் காதினில் நுழைந்ததால், சோற்றுத் தட்டிலே சிந்திய, என் கண்ணீர்பற்றி, மாற்றுக் கட்சியினர் எங்ஙனம் தெரிந்துகொள்ள முடியும்? அந்தக் கண்ணீரின் மதிப்பும் சக்தியும் இன்னது என்றுதான், அவர்களால் எப்படிக் கணித்திட இயலும்!

நாடகமாடுவதை இயக்கத் தொண்டாகவும், தொழிலாகவும் கூடக்கொண்டு, கருணாநிதி இருந்த நாட்களில், எதிரிகள் இழுத்துப்போட்டு, அடித்து, பிணமானான் என்று கருதிப் பெருஞ் சிரிப்புச் சிரித்துவிட்டுச் சென்றனர் என்பதைக் கேள்விப்பட்ட உடன், தம்பிக்கு வந்துற்ற ஆபத்தினைத் தடுத்திடும் ஆற்றலும் அற்ற நிலையிலே இருக்கிறேனே! என் போன்றார் மொழி கேட்டும், காட்டும் வழிநடந்தும் பணியாற்றிய, வாழ்க்கையைச் சுவைத்திடாப் பருவத்தினனை, மாபாவிகள், நொறுக்கினரே, அடிபட்டபோது, இரத்தம் கொட்டியபோது, கயவர் கத்தியைக் காட்டியபோது என்னென்ன எண்ணினானோ! எனக்கு ஒரு அண்ணன் உண்டு! அவன் சொல்லில் எனக்குப் பற்று உண்டு! அவன் இருக்க நாம் அச்சமடையத் தேவை இல்லை என்றெண்ணி இருந்தேன். இதோ நான் கொல்லப் படுகிறேன், எங்கு இருக்கிறான் என் அண்ணன்? என்றெல்லாம் எண்ணித் திகைத்தானோ - இதுபோலெல்லாம் எண்ணிப், புதுவையிலிருந்து விழுப்புரம் வந்து சேரும் வரையில், விம்மிக் கிடந்தேன் - இடம் தேடி அரசியலை நாடியோருக்கு அந்த இதயத் துடிப்பு எப்படித் தெரிய முடியும்?

அடையாற்றில், காந்திநகரில், நடிப்பிசைப் புலவரின் வீட்டு மாடியில் படுத்துப் புழுவெனத் துடித்துக் கிடந்தேன். நண்பர் நடராசனை, குன்றத்தூரில் 144 தடையை மீறச் சென்றதற்காக, போலீஸ் தாக்குதல் நடத்தி, துப்பாக்கிச் சூடு எழுப்பினார்கள். நடராசன் என்ன ஆனாரோ தெரியவில்லை என்று, செய்தி தெரிவிக்கப்பட்டபோது.

பாராங்கல்லைத் தூக்கி மண்டையில் போட்டு, நாவலரைக் கொன்றுவிடத் தேனியில் முயற்சி செய்யப்பட்ட செய்தி கேட்டு, பழந்தமிழரின் வீரத்துக்கு உறைவிடம் என்று கூறத்தக்க, கட்டுடல் கொண்டவர் தானெனினும், குழந்தை உள்ளமாயிற்றே நெடுஞ்செழியனுக்கு, கொடியவர்கள், கொலைக்கஞ்சாப் பாதகர்கள் சூழ்ந்தகாலை, எப்படி எப்படிப் பதறினாரோ, எதை எதை எண்ணித் துடித்தாரோ என்றெண்ணித் துடிதுடித்துப் போன என் முகத்திலே, கப்பிக்கொண்டிருந்த வேதனையை, வேற்றுக் கட்சிக்காரர்கள், எப்படிப் பார்த்திருக்க முடியும்?

தம்பி! நம்மில், ஒருவர் மாற்றாரால் வதைக்கப்பட்டதைக் கேட்டு, மற்றவர் மனம் குமுறிக் குமுறி, ஒரு குடும்பத்தினரான வர்கள் - ஒரு கட்சியின் உறுப்பினர்கள் மட்டுமல்ல.

இதோ இப்போது பொதுக்குழு கூடும் சமயத்தில், கையிலும் காலிலும் வெட்டுக் காயத்துடன், தள்ளாடித் தள்ளாடி நடந்து வந்த குன்றத்தூர் சம்பந்தத்தையல்லவா, கண்டேன் - கட்சிக்காரர் என்றா எண்ணத் தோன்றும் - நமது குடும்பத்தவரிலே ஒருவன் - நாம் கொண்ட கொள்கைக்காகக் கொடியவர்களின் தாக்குதலைத் தாங்கித் தத்தளிக்கும் உடன் பிறந்தான், என்ற எண்ணமல்லவா எழுகிறது.

இத்தகைய ஒரு குடும்பத்திலே, முறைகளைப் புதுப்பிக்க, எழும் வேகம் அல்லது ஆர்வம், பணியாற்றுவதிலே எவரெவர் எந்தெந்தத் துறை நிற்பது என்பது குறித்து எழும் எண்ணங்கள் ஒன்றோடொன்று உராய்ந்துகொள்வது போன்ற இவைகளைக் கேட்டும், காட்டியும், பிளவு ஏற்படும் என்று எதிர்பார்ப்பது பேதைமை - பிளவு மூட்டிவிட வேண்டும் என்று முயற்சிப்பது கொடுமை - பிளவு ஏற்படவில்லையே என்று திகைத்தும் திகிலுற்றும் பேசிக் கிடப்பது, மடமை.

தம்பி! மாற்றார், இது குறித்து எப்படி வேண்டுமானாலும் எண்ணிக் கொள்ளட்டும், கதைத்துக்கொள்ளட்டும் - உனக்கும் எனக்கும் அது குறித்துக் கவலை எழக் காரணம் இல்லை.

***

பொதுத் தேர்தலை எதிர்நோக்கி நாம் இருக்கும் நேரமாகப் பார்த்து, என்னை இழுத்து உட்காரவைத்துவிட்டார்கள் - பொதுச் செயலாளராக.

அமைச்சர்கள், புகாத ஊரில்லை, போகாத நாளில்லை, பேசாத புளுகு இல்லை, ஏசாத வேளையில்லை என்று ஆகி விட்டிருக்கிறது.

மற்றோர் புறமோ, தாக்குவது, குத்துவது, வெட்டுவது, கோணல் வழக்குகள் தொடுப்பது, என்ற முறையில் அமளி மூட்டிவிடும் நடவடிக்கைகள், அவிழ்த்துவிடப்பட்டிருக்கின்றன.

பணம் படைத்தோரைப் பயமூட்டியும், ஆசை காட்டியும், தேர்தல் நிதி மிகப்பெரிய அளவிலே திரட்டி வருகிறது காங்கிரஸ் கட்சி.

முன்பு நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது, ஐந்து கோடி ரூபாய் செலவிட்டது காங்கிரஸ் கட்சி என்று, வெட்கமின்றி, வீராப்புடன், காங்கிரஸ் அமைச்சர் ஒருவரே பேசினார், பதினைந்து நாட்களுக்கு முன்பு.

நமது கழகப் பிரசாரத்துக்குக் குந்தகம் விளைவிக்கும் முறை, பல வழிகளில் கையாளப்பட்டு வருகின்றன.

அதிகார வர்க்கமே ஓட்டுப் பெற்றுத்தர, ஏவி விடப்படக் கூடும் என்று ஐயப்படத்தக்க சூழ்நிலை, இப்போதே தெரிகிறது. இந்த ஐயம் நீங்கவும், பொதுவாழ்வுத் துறையிலே ஒழுக்கம் ஓங்கவும், தேர்தலுக்கு ஆறு திங்களுக்கு முன்பு, காங்கிரஸ் அமைச்சர்கள், தமது பதவியை விட்டு விலகுவது, அறமாகும் என்று அன்பர் ஆச்சாரியார் பேசுகிறார் - அது எள்ளி நகையாடப்படுகிறது.

புயல் பலமாகத்தான் இருக்கும் - சந்தேகமில்லை.

நாம், அதனை எதிர்த்து வெற்றி பெற்றாக வேண்டும் - ஏனெனில், நாம், தனி ஆட்களுக்காக அல்ல, அரசியல் கட்சி என்பதற்காக அல்ல - விடுதலை இயக்கம் இது - இதற்கு மக்களிடம் ஆதரவு நாளுக்கு நாள் பெருகி வருகிறது என்பதை உலகறியச் செய்தாக வேண்டும் - அதற்காக நாம், தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டும்.

தம்பி! உன் நினைவிலே இந்த நிலைமைதான், பளிச்சிட்டுக் கொண்டிருக்க வேண்டுமேயன்றி, இவரிவர் இன்னின்ன இடத்தில் இருப்பது எதற்கு என்ற, பிரச்சினை அல்ல; அந்தப் பிரச்சினை சூடுதரும், சுவை தாராது. சூடே சுவைதான் என்று வாதிடுவரேல், அந்தச் சுவையின் மூலம், கழகம் பலன் பெறாது என்றுதான் கூறவேண்டும்.

எனவே, தம்பி! நமது கழகத்தின் கட்டுக் கோப்பினைக் குறித்தும், ஒன்றுபட்டுப் பணியாற்றும் மாண்பு குறித்தும், நாட்டவருக்கு எடுத்துக் கூறு.

நாட்டவரின் நலிவு போக, வாழ்வு துலங்க, நாம் எடுத்துக் காட்டும் வழியின்றிப் பிறிதோர் வழி இல்லை என்பதை எடுத்துக் கூறு.

அனைவரையும் ஆற்றல் படைத்தோராக்கு; வீரர்களாக்கு; விடுதலைப் போரார்வம் கொண்டவர்களாக்கு!

அண்ணனைச் சிக்கவைத்துவிட்டோம், என்பதிலே மட்டும் அகமகிழ்ச்சி கொள்வதிலே, அர்த்தமில்லை.

எனக்கு இது முதன் முறையுமல்ல, பூரிக்க, வாழ்த்துக் களைப் பெற்று இன்புற.

நான் தம்பி! திராவிடர் கழகமாக நாம் இருந்தபோதே, பொதுச் செயலாளன்தான்.

என் நிலைமையிலோ, பெறும் இடத்திலோ ஏற்றம் இல்லை; மாற்றம் இல்லை. என் இயல்பிலேயும் மாற்றம் எழாது.

எளிதிலே திருப்திபெற்றுவிடுபவன், என்னைக் காட்டிலும் ஒருவர், உனக்குக் கிடைப்பது அரிது.

ஆனால், காரியம் சரியாகச் செய்யப்படவில்லையோ என்ற எண்ணம் ஏற்படும்போது, மற்ற எவரையும்விட அதிகமாக ஏக்கம் அடைபவன் நான்.

அச்சம் வேண்டாம் அண்ணா! நானிருக்கிறேன், துணை நிற்கிறேன்! என்று உன் போன்றோர் பல இலட்சம், கூறிடும் காட்சியை மனக்கண்ணால் காண்கிறேன். காண்பதனால்தான், "சுமைதாங்கி' வேலைக்கு இசைவு தந்தேன்.

என் வேலையை எளிதாக்குவதும், சுவைமிக்கதாக்குவதும், பயனுள்ளதாக்குவதும், வெற்றியுள்ள தாக்குவதும், உன்னிடம் தான் தம்பி, இருக்கிறது.

சிதறிச் சிதறிக் கிடந்த சக்திகளை, பத்தே ஆண்டுகளிலே ஓரிடம் கொணர்ந்து, ஒன்றுபடுத்தி, ஓர் எழிலுருவம் தந்த செயல்வீரனல்லவா! என்னை மகிழ்வித்து, வெற்றிப் பாதையில் கழகத்தை அழைத்துச் செல்லவா உன்னால் முடியாது!!

வா, தம்பி! வா! அந்த எழுச்சியூட்டும் நம்பிக்கையுடன் நாம் ஒன்றாகக்கூடி, இன்பத் திராவிடம் தேடி, நடைபோடுவோம்.

பிறந்த பொன்னாட்டுக்கு விடுதலை பெற்றுத்தர, நாம் நம்மை ஒப்படைத்துவிட்டோம். வெற்றி நமதே!

அண்ணன்,

2-10-'60