அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


பால் படி எத்தனை?
1

காவிரி ஆற்றைக் காண்போர்க்கு ஏற்படும்
கருத்தோட்டங்கள்
பயனற்ற பகுதிக்கு முக்கியத்துவம் தரும் இதழ்கள்
தன் வலி, மாற்றான் வலி அறிந்திடுதல் வேண்டும்
மற்றவர்களை மதிக்கத் தெரிந்திடுக!
கழகத்தின் இலட்சியம் ஜனநாயகப் பாதுகாப்பே!

தம்பி,

புதிதாக ஒரு ஊருக்குச் செல்பவர்கள், அல்லது முன்பு கண்ட இடமாக இருந்தாலும் ஆண்டு சிலவற்றுக்குப் பிறகு அதே இடத்திற்கு மறுபடி செல்பவர்கள் ஊரின் வளம் பற்றியும், அங்குள்ள வியப்புக்குரிய பொருள் அல்லது நிலைமை பற்றியும் கேட்டறிந்துகொள்ள ஆவல் கொள்வார்கள்; தேவை என்று கூடச் சொல்லலாம். ஆனால், என்னென்ன விஷயம் குறித்து அறிந்துகொள்ள ஆவல் காட்டுவார்கள் என்பது அவரவர்களின் இயல்பு, நோக்கம் அலுவல் இவற்றைப் பொருத்தே அமைந்திருக்கும். காவிரி ஆற்றையும் அதன் எழிலையும் காணும் உழவுத் தொழிலில் பற்றும் தொடர்பும் கொண்டவன், பொன்னி தந்திடும் வளம் பற்றிய விவரத்தைக் கேட்டறிந்து இன்புறுகிறான்; பயன்பெறுகிறான். பொறியியல் துறையில் தொடர்புள்ளவன் மேலும் வளமளிக்கத்தக்க விதமாகக் காவிரியில் வேறு எங்கெங்கு என்னென்ன விதமான அமைப்புகளை ஏற்படுத்தலாம் என்பது பற்றிய விவரம் கேட்டறிந்து கொள்கிறான்; போக்குவரத்துத் துறை வளர்ச்சிக்கான நாட்டம் கொண்டவன் படகுகள் மூலம் போக்குவரத்துக்கான ஏற்பாட்டினை எவ்வகையில் மேற்கொள்ளலாம் என்று அறிந்து கொள்ளும் விழைவு கொண்டு அதற்குத் தேவைப்படும் தகவல்களைக் கேட்டறிந்து கொள்ள முற்படுகிறான்; தமிழ்ப் புலவரோ, காவிரி குறித்து உவகை பொங்கிடக் கூறப்பட்டுள்ள கவிதைகளை நினைவிலே கொள்கிறார்; காவிரி பாயும் நாடதனில் தோன்றிய புலவர் பெருமக்களைப் பற்றி எண்ணி எண்ணி மகிழ்கிறார்; இதுபோது இப்பகுதியில் உள்ள தமிழ்ப் புலவர் எவரெவர் என்று கேட்டறிந்து பெருமிதம் கொள்கிறார். மீன்பிடி தொழிலினில் ஈடுபட்டோன் ஆற்றிலே எந்தெந்தக் காலத்தில் என்னென்ன வகையான மீன்கள் எந்தெந்த அளவு கிடைத்திடும் என்பதற்கான தகவல் பற்றிய அக்கறை காட்டுகிறான். பழமையில் மூழ்கிக் கிடப்போன், காவிரி ஆற்றினிலே ஆங்காங்குக் காணக் கிடைக்கும் படித்துறைகளின் "மகத்துவம்' பற்றிய தகவலைச் சேகரித்துக் கொள்கிறான். போலீஸ் துறையினர் வெள்ளம் பெருக்கெடுத் திடும்போது எந்த அளவு உயிர்ச்சேதம் ஏற்படுகிறது என்பது குறித்தும், தற்கொலை செய்து கொள்பவர்கள் காவிரியில் எந்தெந்தப் பகுதிகளை அதிக அளவில் உபயோகப்படுத்திக் கொள்கிறார்கள் என்பது குறித்தும் தகவலைக் கேட்டறிந்து குறித்து வைத்துக் கொள்கிறார்கள்.

இயல்பு, நோக்கம், அலுவல் ஆகியவற்றிலே பல்வேறு வகையினராக உள்ள இவர்கள் அனைவருக்கும், அவர்கள் விரும்பிப் பெற்றிடத்தக்க தகவல்களைத் தந்தபடி, முத்து நகையழகி கொத்தவரும் கண்பார்வை பல தன் மீது வீழ்வது கண்டு எள்ளி நகையாடிச் சென்றிடுதல்போல பொன்னி ஓட்டம் பெருநடையாய், தனக்கென்று அமைந்த வழிதன்னில் சென்றபடி இருக்கின்றாள்; மாந்தரில் எத்தனை எத்தனை இயல்பினர் உளர் என்பது பற்றி எண்ணிச் சிற்சில வேளை தன்னில் "க்ளுக்'கெனச் சிரித்திடுகின்றாள்.

பல்வேறு வகையான இயல்பு கொண்டோர் தன்னைக் குறித்துக் கொண்டிடும் கருத்து பற்றிக் கவலையற்று, தனக்கென்று அமைந்துள்ள இயல்பு கெடாமல் காவிரி இயங்கிவரக் காண்கின்றோம்.

எப்பொருளாயினும் அப்பொருளின் மெய்ப்பொருள் கண்டறிதல் வேண்டுமெனக் கூறினார் வள்ளுவப் பெருந்தகை. எனினும், எல்லாப் பொருளிலும் பயனற்ற பகுதியை மட்டும் மெத்தக் கஷ்டப்பட்டுத் தேடிப் பெற்றிடுவோர் உளர்; மிகச் சிறிய எண்ணிக்கையினரும் அல்ல அவர் போன்றார். சுளையின் சுவை அறிôயது அதனை வீசி எறிந்துவிட்டுத் தோ-னைச் சுவைத்திடுவோரைப் பித்தர் என்கின்றோம்; தெளிந்த நீரிருக்கச் சேற்றினிலே புரண்டு மகிழ்ச்சி பெறுவதை எருமை என்கின்றோம்; தழையும் தானியமும் அல்ல சருகாகிக் போன காகிதத்தைத்தின்று காலந்தள்ளும் பிராணிகளும் உள்ளன, கேவலம் என்கிறோம். ஆனால், மாந்தரிலேயுமன்றோ உளர், பயனற்ற பகுதியினைப் பாடுபட்டுத் தேடிப்பெற்று, பயனுள்ள பகுதியினை இழந்துவிடும் இயல்பினர்!

"தலைமுடி என்ன இவ்வளவு நரைத்துவிட்டதே?'' என்ற கேள்வியையா, முதலாவதாக முக்கியமானதாகக் கொள்வது, நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திக்கும் நண்பனைப் பார்த்திடும் போது? அல்லது மிகப் பெரியவர், மிக நல்லவர் என்று கேள்விப்பட்டு ஒருவரைக் காணச் செல்லும்போது? இல்லை என்பாய். ஆனால், தம்பி! அத்தகைய இயல்புள்ளவர்கள் இருக்கின்றார்கள்.

ஆண்டு பலவற்றுக்கு முன்னே ஜனாப் ஜின்னாவைக் காணச்சென்ற என் நண்பரொருவர், அவரைப் பார்த்ததும் கேட்ட முதல் கேள்வி, "மாதம் எத்தனை ஆயிரம் உங்களுக்கு வருமானம் கிடைக்கிறது வக்கீல் தொழிலில்'' என்பதாகும். அந்தக் கேள்வி கேட்ட அந்த விநாடியே, என் நண்பரைப் பற்றி மிகக் குறைவான மதிப்புக் போட்டு, அவரிடம் முகம் கொடுத்துப் பேசுவதையும் நிறுத்திக் கொண்டுடார் ஜனாப் ஜின்னா.

அறிந்து கொள்ளத்தக்கனவற்றிலே ஆவலும் அக்கறையும் காட்டுவது அறிவாளர் இயல்பு; அக்கப்போரில் ஈடுபடுவோர், அறிந்து கொள்ளத்தக்கவை அல்லாதவைகளிலேயே அளவு கடந்த ஆவல் காட்டுவர், கொள்வர். அவை பற்றியே பேசுவர், ஆர்வக் கொந்தளிப்புடன். திருவிழாக் காணச் செல்லும் சிறுவன் தன் விழிகளை அகலமாகத் திறந்து, மெத்த ஆவலுடன் எதைப் பார்க்கிறான்? உலாவரும் உற்சவரையா? இல்லை! பலாப்பழக் கடையில் மொய்த்திடும் ஈக்களை!

சிலருடைய இயல்பு இதுபோன்றிருக்கிறது என்பது மட்டுமல்ல, சிலர் தாம் காணும் பொருளில் எது பயனற்றதோ, தேவையற்றதோ, தரமற்றதோ, அதைப் பற்றி மட்டுமே அக்கறை காட்டி, அதுபற்றி மட்டுமே வெளியே பேசுகின்றனர்; இயல்பு காரணமாக மட்டுமல்ல, அந்தப் பொருள்மீது பகை மூட்ட வேண்டும், பழி கூறவேண்டும் எனும் கெடு நோக்குடன். இயல்பு கெட்டவர்களைக் காட்டிலும் இவர் போன்றவர்களால் சமூகத்துக்குக் கேடு அதிகம் ஏற்படும். இவர் போன்றார் பற்றித் தம்பி! மிக மிக விழிப்புடன் இருக்க வேண்டும்.

எப்பொருள் யார் யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு

என்றும்,

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

என்றும், வள்ளுவர் கூறியது, விந்தை மிகு இயல்புள்ளவர்கள் மாந்தர் என்ற பேருண்மையை நன்கு அறிந்திருந்ததாலும், மாந்தரில் பலர் மெய்ப்பொருளை அறிந்துகொள்வதிலே கொண்டிடும் நாட்டத்தைவிட அதிக அளவு போலிகளைக் காண்பதிலே கொள்கின்றனர் என்பதனை நன்கு கண்டிருந்ததாலுமாகும்.

தம்பி! நமது கழகம் பற்றிச் சிலர் காட்டிடும் போக்கு, மெய்ப்பொருளைக் கண்டறிய வேண்டும் என்ற நோக்க மற்றதாகவும், உள்ளதிலே எது பயனற்றதோ அதனை மட்டுமே வெகு பாடுபட்டுத் தேடிப் பெற்றிடும் இயல்பு கொண்டதாகவும் இருந்திடக் காண்கின்றேன்; எனவேதான் இதனை எடுத்துரைத்தேன்.

இன்னிசை கேட்டிடச் செல்பவன். இராக இலக்கணம் அறிந்துகொள்ள முடியாவிட்டாலும், இனிமையாக இருக்கிறது, உள்ளத்துக்கு ஒரு குளிர்ச்சி அளிக்கிறது என்பது மட்டுமாகிலும் உணர்ந்து கொண்டால், இசை கேட்டதிலே பயன் உண்டு. அவ்விதமின்றி மூன்று மணி நேரம் பாடிடக் கேட்டுவிட்டு வீடு திரும்பி, என்ன விசேஷம் இன்றைய இசை நிகழ்ச்சியில் என்று கேட்பவரிடம், பக்கத்துக் கடையொன்றில் வெங்காய வடை சுட்டுக் கொண்டிருந்தார்கள், வாசனை "கமகம'வென்று வந்தது, வாயிலே தண்ணீர் சுரந்தது என்றோ பாடியவர் பதினோரு முறை இருமினார், ஆறு முறை தும்மினார், மூன்று முறை ஏப்பம் விட்டார், நாலு முறை பால் சாப்பிட்டார் என்றோ கூறினால், "மந்த மதியினனே! இதற்கோ நீ இசைக்கூடம் சென்றாய்?'' என்றன்றோ கேட்கத் தோன்றும்? இசை நுகரும் உணர்வு அற்றவர்களன்றோ, இசை நயம் பற்றிக் கவனிக்காமல் ஏப்பம், தும்மல், இருமல் பற்றிக் கவனம் செலுத்தி இருப்பார்கள்.

இவர்கள் மந்த மதியினர்; பரிதாபத்துக்குரியவர்கள்; ஆனால் ஆபத்தானவர்கள் அல்ல!!

ஆபத்தானவர்கள் எவர் என்றால், இசை நயம் உணர்ந்திருந்தும் அந்த அருமையினை எடுத்துக் கூறிட மனமின்றி, இசைவாணனுக்கு இழுக்கு ஏற்படுத்த வேண்டும் என்ற அழுக்காறு காரணமாக, இசை பற்றிக் கூறாமல், இருமல், தும்மல் பற்றி எடுத்துக் கூறி, இசை நிகழ்ச்சியைக் கேவலப்படுத்த முயல்பவர்கள்.

நமது கழகத்தைப் பற்றியும், அதனுடைய கொள்கை- தொண்டு, அது ஏற்றுள்ள இன்னல், தாங்கிக்கொள்ளும் இழிவு, உழைப்பால் அதற்குக் கிடைத்த உயர்வு என்பன பற்றி உணர்ந்து கொள்ள முடியாதவர்கள் சிலர், உணர்ந்துகொண்ட பிறகும்கூட, அதனை ஒப்புக்கொள்ள மனமற்று, கழகத்துக்கு இழுக்கு ஏற்படுத்த வேண்டும் என்ற கெடுமதியுடன், இருமல், தும்மல், ஏப்பம் போன்றவைகளைக் கண்டறிவதிலே தீவிரமான திறமை காட்டி, அது தமது மேதாவித்தனத்துக்கு ஒரு எடுத்துக்காட்டு என்று எண்ணிக் கொள்பவர்களாகச் சிலரும் உளர்.

அவர்களின் எண்ணிக்கையும் நாளாகவாகக் குறைந்து கொண்டும் வருகிறது; அவர்களின் இட்டுக் கட்டும் பேச்சுகளுக்கு இருந்து வந்த "பிடிப்பும்' வெகுவாகத் தளர்ந்து போய்விட்டது; எனினும், வலிவிழந்த பயில்வான், "கிருதா'வை மட்டும் காட்டிக் கொண்டு உலவுவது போலச் சிலர் இன்னமும் நப்பாசை கொண்டுள்ளனர்.

அந்தச் சிலரில் முன்னணியில் நிற்கின்றன சில இதழ்கள்!

அதனால்தான் நான் நீண்ட நாட்களுக்கு முன்பே கூறியிருக்கிறேன். இத்தகைய இதழ்களின் நோக்கமும் போக்கும் அறிந்து, நமது தோழர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று. என் வேண்டுகோள் நான் மகிழத்தக்க அளவு பலன் கொடுத்திருக் கிறது; நமது தோழர்கள், கழகத்தைப் பற்றி இழிவாகவும் பழி சுமத்தியும், இட்டுக் கட்டியும் அவ்வப்போது எழுதிக் காட்டும் ஏடுகளை மதிக்கத்தக்கன என்று கொள்வதில்லை. ஆனால், குப்பை கிளறிக் கிளறிப் பழக்கப்பட்ட கோழி, பாறையைக் கூடக் கிளறுமாம், பழக்கக் கொடுமை காரணமாக; - அதுபோலச் சில இதழ்கள் இன்னமும் நடந்து கொள்கின்றன.

சிந்திப் பசு வேளைக்கு எத்தனைப் படி பால் கறக்கும், ஓங்கோல் பசு எவ்வளவு தரும். புங்கனூர் எவ்வளவு கொடுக்கும் என்ற கணக்கறிந்து கூறுவது பயன் தரும் வேலை; பாராட்டத் தக்கதும்கூட. ஆனால், அதை விட்டு விட்டு, ஒவ்வோர் வகையான பசு ஒரு நாளைக்குத் தந்திடும் "சாணம்' எத்தனை கூடை என்ற கணக்கு அறிய, குப்பைக் கூடையும் கூட்டுக்கோலும் தூக்கிக் கொண்டு திரிபவர்களைப், பாராட்டவா முடியும்? பரிதாபப்பட வேண்டும்.

முன்பெல்லாம் தம்பி! பல இதழ்கள், பொதுத் தொண்டாற்றுவோர் பற்றிப் பெரிதும் இந்தப் போக்கிலேயே இருந்து வந்தனர்.

ஆயிரக்கணக்கிலே மக்கள் கூடுவர்; வாதத் திறமை காட்டி கொள்கை விளக்கமளிப்பார் பேச்சாளர். ஒரு வரி வெளியிட மாட்டார்கள்; ஆனால் அத்தகைய ஒரு கூட்டத்தில் எவனோ விரட்டிவிட்ட பன்றி நுழையும், மறுநாள் எட்டுக் கலத்தில் கொட்டை எழுத்தில் அந்தச் செய்தி வெளிவரும். அவர்களின் எண்ணம் அவ்விதமான செய்தியைப் படித்ததும் மக்கள் அருவருப்பு அடைவார்கள் என்பது! அருவருப்பு அடைந்தார்கள் மக்கள் - கழகத்தின் மீது அல்ல! கழகக் கூட்டத்திலே பன்றியை விரட்டிவிட்ட பெரிய கட்சிக்காரரிடம்!!

நடைபெற்ற நிகழ்ச்சியொன்று நினைவிற்கு வருகிறது. 1938 என்று கருதுகிறேன். ஆச்சாரியார் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கிய நேரம் - இந்தி எதிர்ப்புப் பிரசாரம் சென்னையில் வெகு மும்முரமாக இருந்த நாட்கள். தியாகராய நகரில் - அப்போது மிகச் சிலரே தியாகராய நகர் என்று கூறுவார்கள் - மாம்பலம் என்ற பெயர்தான் பிரபலம். அந்த நாட்களில் - ஒரு இடத்திலே இந்தி எதிர்ப்புக் கூட்டம். பலர் பேசினார்கள்; நானும் பேசச் சென்றிருந்தேன். சென்னையில் என்னைப் பலருக்குத் தெரியாத காலம் அது; ஆகவே நான், பத்திரிகை நிருபர்களுக்கு மத்தியில் உட்கார்ந்திருந்ததை யாரும் கவனிக்கவில்லை. கூட்டத்தில் துவக்க முதலே தொல்லை, கல்வீச்சு; கேலிச் சிரிப்பு, கேள்வித் தாள்கள், நிருபர்களின் கெக்கலி; போலீசாரின் பரிகாசம்கூட!

ஒரு நிருபருக்கு அவசரமான வேலைபோல இருக்கிறது. அவர் மற்றவர்களிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினார்; கிளம்பும்போது ஆங்கிலத்திலே கூறினார்: "நான் போகிறேன்; பத்திரிகையில், "கூட்டம் குழப்பத்தில் முடிந்தது என்ற தலைப்புடன் செய்தி வெளியிடச் சொல்லிவிட்டு வீட்டிற்குப் போகப் போகிறேன்'' என்றார். மற்றவர்கள், "ஆமாம்' நாங்களும் அதுபோன்ற தலைப்புத்தான் போடப் போகிறோம்'' என்று கூறினார்கள்.

என்னைப் பேச அழைத்தார்கள்; எழுந்து சென்றேன்; மேடை ஏறினதும் சொன்னேன், "வீணாக ஏன் கூச்சல் கிளப்பிக் கஷ்டப்படுகிறீர்கள். இந்தக் கூட்டம் மிக அமைதியாக நடைபெற்றால்கூட நாளைய பத்திரிகையில் கூட்டம் குழப்பத்தில் முடிந்தது என்ற தலைப்புடன் செய்தி வரப் போகிறது. நிருபர் சொல்லிவிட்டுத்தான் போயிருக்கிறார். இதோ உள்ள மற்ற நிருபர்களிடம். ஆகவே சிரமப்படாதீர்கள்; எங்கள் பேச்சைக் கேளுங்கள். உங்கள் விருப்பம்போலச் செய்தி நாளையப் பத்திரிகையில்தான் வரப்போகிறதே ஏன் இப்போது காரணமற்ற கஷ்டத்தை அனுபவிக்கிறீர்கள், நிம்மதியாக இருங்கள்'' என்று சொன்னேன்; கூட்டத்திலும் அமைதி ஏற்பட்டது; மறுநாள் இதழ்களிலும், இந்தி எதிர்ப்புக் கூட்டம் என்ற தலைப்புடன் செய்தி வந்தது.

அப்படிப்பட்ட காலம் இருந்தது. இதழ்களின் போக்கு இப்போது வெகுவாக மாறிவிட்டிருக்கிறது. நமது கழகம் ஜனநாயகக் கடமையாற்றத் தகுதி பெற்ற ஒரு அமைப்பு; இந்தக் கடமையைச் செய்திட இது போன்ற வேறோர் அமைப்பு இல்லை என்ற உணர்வு வலிவு பெற்றிருக்கிறது. எனினும் சில இதழ்கள், இன்னமும் பழைய இயல்பில் சிற்சில வேளைகளில் நடந்து கொள்கின்றன.

இரண்டு கிழமைகளுக்கு முன்பு தஞ்சை மாவட்டத்தில் பல இடங்களிலே பேசினேன் - பயனுள்ள கூட்டங்கள் என்றுதான் நம்புகிறேன். இந்த இதழ்கள் கூட்டத்தைப் பற்றி என்ன செய்தியைப் பெரிதாக்கிப் போட்டன தெரியுமா தம்பி! பாம்பு நுழைந்ததாம் கூட்டத்தில் - அதற்குத்தான் மரியாதை!! அண்ணாதுரை கூட்டத்தில் பாம்புகள் படைஎடுப்பு என்பது தலைப்பு!!

இரண்டொரு இதழ்கள் ஒரே அடியாகக் காங்கிரசில் சேர்ந்து கொண்டு கழகத்தை எதிர்ப்பது கூடாது - காங்கிரசை எதிர்ப்பது போல "வேடம்' போட்டுக் கொண்டு, அதே போக்கில் கழகத்தை இழிவுபடுத்த வேண்டும் என்ற போக்கில் நடந்து வருகின்றன; இது நாடறிந்த உண்மை காங்கிரசிலுள்ள சில பெருந் தலைவர்களுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தின் விளைவு இது என்கிறார்கள்.

அத்தகைய இதழ்கள்தான், நான் துவக்கத்தில் கூறியுள்ளபடி, பயனுள்ள பகுதியைக் கண்டறிந்து கூறாமல், பயனற்ற பகுதியை எடுத்துக் காட்டிக் கொண்டு எக்காளமிடுகின்றன.

என்னைத் தேடி இத்தகைய இதழினர் வருகின்றனர், சிற்சில சமயம். வருகிறபோது எந்த அரசியல் சிக்கல் பற்றியோ, பொருளாதாரப் பிரச்சினை பற்றியோ கேட்பதில்லை. மாறாக, போராட்டம் உண்டா? இல்லையா? தோல்வி காரணமாகப் போராட்டத்தை நிறுத்தி விட்டீர்களா? என்ற முறையில் எதையாவது கேட்பது; இதற்குப் பதில் கூறத் தேவையில்லை என்று நான் கூறுவேன். மறுநாள் போராட்டம் இல்லை - என்று செய்தி வெளியிடுவார்கள்; உடனே இரண்டு மூன்று போர் முனைகளில் ஏககாலத்தில் படைகளைச் செலுத்தி வெற்றிமேல் வெற்றிபெற்ற வீரத்தலைவர்கள் சிலர், "செச்சே! போராட்டம் இல்லையா; அப்படியானால் கழகம் எதற்கு? என்று முழக்கம் எழுப்புவார்கள் - கூட்டத்தில்கூட அல்ல - காகிதத்தில் எழுதி அச்சுக் கோப்பவரிடம் காட்டுவதன் மூலம்! போராட்டம் தேவை என்பதிலே அடக்க முடியாத தாகம் இருந்து, கழகம் போராட்டத்தை நடத்தாதாமே என்ற கவலை இருந்தால், இந்த வீரத்தலைவர்கள் உடனே துந்துபி முழக்கி, ஜல்லடம் கட்டி, தொடை தட்டி, வாளை உருவிக்கொண்டு, வந்தது வரட்டும் என்று களம் நோக்கி பாய்கின்றனரா என்றால், அந்த யோக்கியதையைக் காணோம் - போராட்டம் உண்டு என்று அறிவிக்கக் காணோம் - கழகம் ஏன் இருக்கிறது என்று கேட்டு, தமக்கு உள்ள பொச்சரிப்பைக் காட்டிக் கொள்ளத்தான் கிளம்புகிறார்கள்.