அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


பால் படி எத்தனை?
2

இத்தகைய போக்கினர் பற்றி ஏன் இன்று எழுதுகிறேன் என்றால், தம்பி! இவ்விதமான போக்கு இல்லாமல், உள்ளபடி கழகத்தைப் பற்றிய முழு விவரம் தெரிந்து கொள்ள வேண்டும். உண்மையை அறிந்து கொள்ள வேண்டும் என்ற உணர்வுடன், தமிழகத்துக்கு வெளியே உள்ள பல இதழ்கள், பொது அமைப்பின் நிர்வாகிகள் வருகிறார்கள்; அறிவுத் தெளிவுள்ள கேள்விகளைக் கேட்கிறார்கள்; கழகத்தைப் பற்றி இருந்துவரும் இருட்டடிப்பு போக்கப்பட்டாக வேண்டும் என்ற ஆர்வம் காட்டுகிறார்கள், அவர்களைக் கண்டு பேசும் வாய்ப்பு கிடைக்கிறது; ஆகவேதான் இங்குள்ள சில பொச்சரிப்பாளர்கள் பற்றிய எண்ணம் வந்தது.

இரண்டு திங்களுக்கு முன்பு பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி ஆசிரியர் சிலர், இதழாசிரியர் சிலர் வந்திருந்தனர் - நீண்ட நேரம் பேசிக் கொண்டிந்தனர் - வாதாடக்கூடச் செய்தனர் - விளக்கங்கள் கேட்டறிந்து கொண்டனர் - கழகம் பற்றி இதுவரையில் அவர்களுக்கு கூறப்பட்டிருந்தவைகள் எத்தகைய பொய்யுரைகள் என்பதனை உணர்ந்து கொண்டதாக மகிழ்ச்சியுடன் கூறினர்.

நீங்கள் இவ்வளவு நல்லவராக, இத்தனை சாதுவாக இருப்பீர்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை என்று கூட ஒருவர் சொன்னார்.

சென்ற திங்கள், மராட்டியத்தில் புனாவில் உள்ள கல்லூரியைச் சார்ந்த இரண்டு ஆசிரியர்களும் ஒரு மாணவரும் வந்திருந்தனர். கழகத்தின் வரலாற்றிலே இருந்து மொழிப் பிரச்சினை வரையில், கடவுள் கொள்கையிலிருந்து மாணவர் கிளர்ச்சி வரையில் என்னுடன் "விவாதம்' நடத்தினர்; இறுதியில் நமது கழகத்தின் தூயநோக்கத்தைப் புரிந்து கொண்டதாகக் கூறிச் சென்றனர்.

தமிழகத்தின் நிலைமைகளை உள்ளது உள்ளபடி உணர்ந்து கொள்ள, இங்கிருந்து அடிக்கடி நல்லெண்ணக் குழு மராட்டியம் வரவேண்டும் என்றுகூட அழைத்தனர்.

இவர் போன்றார் தம்பி! ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரையில்கூட, கழகத்தைப் பற்றி ஒரு துளியும் அக்கறை கொள்ளாதவர்கள்; கழகத்தைப் பற்றிய தவறான செய்திகளைப் பற்றி மட்டுமே கேள்விப்பட்டவர்கள்.

அவர்களுக்கெல்லாம் இப்போது ஒரு உணர்வு - நாம் இதுவரையில் கேள்விப்பட்டதுபோல இந்தக் கழகம் கருத்தறியாத, காட்டுப் போக்குடைய, குழப்பவாதிகளின் முகாமாக இருக்குமானால், இத்தனை வளர்ச்சி எப்படிக் கிடைத்திருக்க முடியும்? இந்தியப் பேரரசு ஒரு புதிய சட்டம் போட்டு இதன் நடவடிக்கையை ஒடுக்க முயல வேண்டிய அளவுக்கு எப்படி இந்தக் கழகத்துக்கு வலிவு கிடைத்திருக்க முடியும்? இந்தக் கழகத்திற்கு மக்களை ஈர்க்கும் சக்தி இருக்கிறது. அந்தச் சக்தியை சாய்த்திடக் காங்கிரசின் பெருந்தலைவர்கள் ஓயாமல் உழைக்கிறார்கள், இலட்ச இலட்சமாகப் பணத்தைத் திரட்டுகிறார்கள். இருந்தும் முடியவில்லை; ஆகவே, இந்தக் கழகம் தமிழகத்தில் வேர் கொண்டுள்ள ஒரு பலமான அமைப்பு, இதைப் பற்றிய உண்மையை நாம் தனி நிருபர்கள் மூலமோ காங்கிரஸ் தலைவர்கள் மூலமோ தெரிந்து கொள்ள முடியாது. நேராகவே சென்று விசாரித்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டும். கழகம் அலட்சியப்படுத்தத் தக்கதல்ல, அது ஒரு பிரச்சினையாகி விட்டிருக்கிறது, புரிந்து கொண்டாக வேண்டும் என்ற எண்ணம் பலமாக இருக்கிறது; அது வளர்ந்து கொண்டும் வருகிறது.

மூன்று கிழமைகளுக்கு முன்பு கல்கத்தாவிலுள்ள "ஸ்டேட்ஸ்மென்' எனும் ஆங்கில நாளிதழின் சென்னைக் கிளையின் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ள நண்பர் வந்திருந்தார் - விவரம் கேட்க - விளக்கம் அறிய - கேள்விகளை எழுப்ப - கழகத்தின் வேலை முறையினை அறிந்து கொள்ள மிக நுட்பமான கேள்விகளை, வெகு நேர்த்தியான முறையிலே கேட்கிறார்கள்.

தம்பி! இதிலே எனக்குள்ள மகிழ்ச்சி என்ன என்றால், இவர்கள் நான் கூறுவதை அப்படியே ஒப்புக் கொள்கிறார்கள் என்பது அல்ல - கருத்து மாறுபாடு கொண்டிருக்கிறார்கள் - ஆனால், அவர்கள் வேளைக்கு எத்தனை படி பால் கறக்கிறது என்ற பயனுள்ள விஷயம்பற்றி அக்கறை காட்டுகிறார்கள்; எத்தனை கூடைச் சாணம் என்ற கணக்குப் பார்ப்பதிலே அல்ல.

என்னால் முடிந்த அளவு பொறுப்புணர்ச்சியுடன் இவர்களிடம் கழகம் பற்றிய விளக்கம் தந்து வருகிறேன் - அவர்களும் தத்தமது வாய்ப்புக்கு ஏற்ற முறையில் என்னிடம் கேட்டறிந்து கொண்டவைகளை மற்றவர்களுக்குக் கூறி வருகிறார்கள் - கட்டுரைகள், செய்தித் தொகுப்புகள் மூலமாக.

காங்கிரசாட்சியை நமது கழகம் எதிர்க்கிறது என்பதனால், காங்கிரசின் பெருந்தலைவர்களைப் பற்றி ஏதாவது கேட்டால், எரிச்சல் காரணமாக ஏதேனும் இழிமொழி கூறுவேன் என்று எண்ணிக் கொண்டு சிலர் என்னிடம் கேள்விகளைத் தொடுத்தனர். அதைப் புரிந்து கொண்டதால் அல்ல, எனக்கே எவரையும் இழிமொழியாலே தாக்கும் இயல்பு கிடையாது என்ற காரணத்தால், நான் அவர்களைப் பற்றி மிக்க மரியாதையான முறையிலேதான் பேசினேன்.

குறிப்பாக, இலண்டனிலிருந்து வந்திருந்த டெலிவிஷன் அமைப்பாளர், என்னிடம் ஒரு கேள்வி கேட்டார் - காமராஜர் இந்தியாவின் பிரதமராக வரத்தகுதி உள்ளவர் என்று நீங்கள் கருதுகிறீர்களா? என்று. நான் தட்டாமல் தயங்காமல், ஏன் வரக்கூடாது! என்றுதான் கூறினேன்.

எனக்கு ஒரு எண்ணம் தம்பி! நாம் எவருடன் மாறுபாடான கருத்துக் கொண்டிருக்கிறோமோ, எவரை எதிர்த்து நிற்கிறோமோ, அவர் மிகச் சாமானியமானவர். எந்தவிதமான திறமையுமற்றவர், தகுதியுமற்றவர் என்றிருந்தால், அப்படிப் பட்டவரை எதிர்ப்பதிலே பெருமையே இல்லை என்ற எண்ணம், புலிவேட்டை ஆடுவதிலே வீரமும் களிப்பும் ஏற்படும் - ஆபத்து இருப்பினும்; நான் வேட்டை ஆடுவது மிகச் சாதாரணமான எ-யை என்றால், அந்த வேட்டையிலே பெருமை ஏது! மதிப்பார் யார்? ஆகவே நான் காங்கிரசின் பெருந்தலைவர் களைத் தாழ்வாகப் பேசுவது இல்லை என்பது மட்டுமல்ல, அவர்களைப் பற்றிய தாழ்வான எண்ணமே என் மனத்தில் கிடையாது. அவர்கள் தாழ்வானவர்கள், தகுதியற்றவர்கள் என்றால், அவர்களை எதிர்த்து நாம் போராடி வருகிறோம் என்று கூறிக் கொள்வதற்கே நாம் கூச்சப்பட வேண்டும்!

ஒரு கட்சியில் உள்ளவர்களுக்கும் மற்றோர் கட்சியில் உள்ளவர்களுக்கும் இருக்கும் போட்டி. எந்த முகாமிலே உள்ளவர்கள் "மேலோர்' எவர் தாழ்வானவர் என்பது அல்ல. எவர் காட்டும் வழி நாட்டுக்கு நல்வழி என்பதிலேதான். ஒரு கட்சியில் உள்ளவர்களை மற்றோர் கட்சியில் உள்ளவர்கள் மதித்திடவே கூடாது, மதித்துவிடுவோமானால் பிறகு அவர்கள் முன் மண்டியிட்டு விட நேரிடும் என்று கருதுவது மிகமிகத் தவறு.

நமக்கு நமது கொள்கையிலே அழுத்தமான நம்பிக்கையும், நாம் மேற்கொண்டிருக்கும் தொண்டு கடமை உணர்ச்சியின் மீது கட்டப்பட்டிருக்கிறது என்ற உணர்வும் இருக்குமானால், தகுதி மிக்கவர்கள், நிலைமையில் உயர்ந்தவர்கள், மாற்று முகாமில் இருந்தாலும், அவர்களிடம் நமக்கு மிகுந்த மதிப்பு எழுந்தாலும் கூட, நமது கொள்கையை விட்டுக் கொடுக்கும் மனப்போக்கு வரவே வராது. நமது கொள்கைக்கு மாறான கொள்கை கொண்டுள்ளோரிடம் மதிப்பு வைத்தால், நமது கொள்கை கெட்டொழியும் என்று எண்ணுவது பேதைமை. அது காட்டு முறை; மக்களாட்சி முறையின் மாண்பறியாதாரின் போக்கு.

பத்து நாட்களுக்கு முன்பு சென்னையில் "எகின் பாதம்ஸ்' என்ற புத்தகக்கடைக்கு நான் போயிருந்தபோது, அங்கு அலுவல் பார்க்கும் நண்பர், மறைந்த சத்தியமூர்த்திக்கும் சர். ராமசாமி முதலியாருக்கும் கட்சி வேறு வேறு, போட்டி பலமாக என்று இருந்தபோதும், ஒருவருடன் ஒருவர் மரியாதையுடன் பழகி வந்தனர், அப்படிப்பட்ட பண்பு இப்போது இல்லையே என்று கூறி வருத்தப்பட்டார்.

அவர் கூறியதிலே பெரும் அளவு உண்மை இருக்கிறது; இன்று வெறுப்பு, அருவருப்பு, பகை எனும் உணர்ச்சியின் துணை கொண்டு மட்டுமே அரசியலில் தம்முடன் மாறுபட்டிருப்பவர் களை மட்டந்தட்டி, தாம் சார்ந்திருக்கும் அரசியல் அமைப்பிற்கு ஏற்றம் தேடித்தர முடியும் என்ற எண்ணம் தடித்துக் கிடக்கிறது ஆயினும், ஒன்று நான் இந்தச் சூழ்நிலையிலும் காண்கிறேன், யாரார்க்குத் தாம் ஈடுபட்டுள்ள கொள்கையிலே வற்றாத பற்றும், தளராத நம்பிக்கையும் இருக்கிறதோ அவர்கள் தம்முடன் மாறுபாடான அரசியல் கருத்துக் கொண்டவர்களுடன் மதிப்புடன், நட்புரிமையுடன், நம்பிக்கையுடன் கூடப் பழகிடும் முறையை மேற்கொண்டுள்ளனர். காலஞ்சென்ற சர்தார் வேதரத்தினம் அழுத்தமான காங்கிரஸ்காரர்; இந்தியிலே பிடிவாதமான பற்றுக் கொண்டவர். எனினும், அவர் என்னைப் பகைவனாகக் கருதியதில்லை, கேவலப்படுத்திப் பேசியதில்லை. வேறு பலர் அவர்போல், இன்றும் ம. பொ. சி. அவ்விதமானவரில் ஒருவர்; செங்கல்வராயன் அவ்விதமே; மற்றும் பலப்பலர்.

ஆனால், கொள்கையில் நம்பிக்கை சுரந்ததால் அல்ல, இருந்த இடத்தில் கசப்பு வளர்ந்ததால் காங்கிரசுக்குள் சென்றவர்களோ, பகை கக்கி, இழிமொழி பேசியே மாற்று முகாமினரை ஒழிக்க முடியும் என்ற நினைப்புடன் நாப்பறை கொட்டுகின்றனர், பழுதுபட்ட மங்கை பழுக்க மஞ்சளை முகத்தில் அப்பிக்கொண்டு பத்தினிவேடத் போட்டிடும் கதை போல!!

அவனுக்கு என்ன தெரியும், இவனால் என்ன முடியும்? என்று பேசுவதன் மூலமாகத்தான், தமது பெருமையைத் தம்மவர் ஒப்புக் கொள்ளச் செய்ய முடியும் என்ற நிலை காங்கிரசின் பெரிய தலைவர்கள் சிலருக்கு ஏற்பட்டிருப்பது விருந்துண்ணு பவனைக் கெடுக்க அவன் எதிரே நின்று "வாந்தி' எடுப்பது போன்றது.

மற்றக் கட்சித் தலைவர்களை மதித்திடுவது, நமது கொள்கையை நம்மிடமிருந்து பெயர்த்தெறிந்துவிடும் என்று எண்ணுவது பேதைமை. அதனால்தான் "காமராஜரின் கட்சிப் பற்று எனக்கு அவரிடம் மதிப்பையும், பெரியாரின் ஓயாத உழைப்பு அவரிடம் மதிப்பையும், ராஜகோபாலாச்சாரியாரின் பேரறிவு அவரிடம் மதிப்பையும், ம. பொ. சியின் தியாகம் அவரிடம் மதிப்பையும் எனக்கு அளித்திருக்கிறது' என்று தம்பி கருணாநிதி, ம. பொ. சி விழாவில் பேசியதை அறிந்து நான் மகிழ்ந்தேன்.

எனக்கோர் தணியாத ஆவல் - என் இயல்புகளை என் தம்பிகள் பெற வேண்டும் என்பதில் - ஆற்றலைப் பற்றிய ஐயப்பாடு எனக்கு எழுந்ததே இல்லை - எனக்கென்று அமைந்துள்ள இயல்புகள் என் தம்பிகளுக்கு முழுக்க முழுக்க ஏற்படவேண்டும் என்ற ஆவல். எனவேதான் நான் மகிழ்ந்து வரவேற்கும் இயல்பான, மற்ற கட்சித் தலைவர்களை மதித்திடும் இயல்பு போற்றத்தக்கது என்ற கருத்துப்படத் தம்பி கருணாநிதி பேசியதை அறிந்து மெத்தவும் மகிழ்ச்சி அடைந்தேன்.

தனி நபர்கள்போலவே சில இதழ்களும், மற்றவர்களை மதிப்பது கூடாது, அதிலும் மாற்றுக் கருத்துக் கொண்டவர்களை மனம்போன போக்கில் தூற்றியபடி இருக்கவேண்டும் என்ற போக்குடன் உள்ளன. இந்த நோக்கம் காரணமாகவே, நான் குறிப்பிட்டுள்ளபடி அவைகள், பயனற்ற பகுதிகளைத் தேடிப் பிடித்தெடுத்துக் கழகத்திற்கு இழுக்குத் தேடிட முனைகின்றன. பயனற்ற முயற்சி.

அவ்விதமான வீண் முயற்சியில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளாத ஏடுகளும் உள்ளன என்பதற்கான எடுத்துக்காட்டு சில கூறினேன். அதனை மேலும் மெய்ப்பிக்கத் தக்கபடி "இல்லஸ்ட்ரேடட் வீக்லி' எனும் ஆங்கில இதழாசிரியர், கழகத்தைப் பற்றிய முழு விவரத்தை அறிந்து கொள்ள, சென்ற கிழமை வந்திருந்தார். விரிவாகப் பேசினோம் - விளக்கம் பல கேட்டார் - வினாக்கள் பல எழுப்பினார் - ஐயப்பாடுகளைக் கூறினார் - உண்மையை அறிந்துகொள்ள விழைந்தார்.

என்னுடன் பேசியதன் விளைவாக அவரோ, அவர் சார்ந்திருக்கிற இதழோ கழகத்தின் கொள்கைகளை அப்படியே ஏற்றுக் கொள்ளும் நிலை ஏற்பட்டுவிட்டது என்று நான் கூறவில்லை. அத்தகைய மனமயக்கத்தில் நான் எப்போதும் ஈடுபடுவதில்லை. ஆனால் ஒன்று உணர்ந்தேன். அவர் வினா எழுப்பும்போதும் நான் அளித்த பதிலைக் கேட்டுக் கொண்டிருந்தபோதும், கழகத்திடம் மதிப்புடன் இருந்திடக் கண்டேன். என் மகிழ்ச்சிக்குக் காரணம் அதுதான்.

தம்பீ! வள்ளுவர், போர்முறை இலக்கணம் தெரிவிக்கும் நோக்குடன் கூறினார், தன் வலியும் மாற்றான் வலியும் இரண்டையும் அறிந்து கொள்ள வேண்டும் என்று.

மாற்றானின் வலிமையைக் குறைத்து மதிப்புப் போட்டால், விளையக்கூடிய ஆபத்து கொஞ்சநஞ்சமல்ல. மாற்றானிடம் என்ன வலிமை இருக்கிறது! போர்முறை அறியான்! போர்க் கருவிகள் அற்றவன்! நெஞ்சுரம் இல்லை! - என்று கருதி விட்டால், நமது வலிவைக் கெட்டிப் படுத்திக் கொள்ள வேண்டும், கருவிகளைச் செம்மையாக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எழாது, ஏற்பாடுகளிலே நாட்டம் செல்லாது. முடிவு? மாற்றானை வீழ்த்திவிடலாம் என்ற எண்ணம் மண்ணாகிப் போகும். எனவேதான், வள்ளுவர் மாற்றானின் வலிவு பற்றிய கணக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்றார்.

இன்று தமிழகக் காங்கிரஸ், கழகத்தின் வலிவு பற்றிய கணக்கெடுத்துப் பார்த்துத்தான் தேர்தல் கணக்கில் தேவைப்படும் படைக்கலன்களை மிக்க மும்முரமாகச் சேகரித்தபடி இருக்கிறது. பல காலம் பேசிய பழக்கம் காரணமாகவும், தமது படை வரிசையிலே கிலி மூண்டுவிடக் கூடாது என்பதற்காகவும், கழகத்தைப் பற்றிக் கேவலமாகவும், அதனைத் தமது கோபப் பார்வையாலேயே சுட்டுப் பொசுக்கிவிட முடியும் என்ற பாணியிலும் பேசி வந்தாலும், கழகம் வலிவுள்ளது என்பதனை உள்ளூர உணர்ந்து, இலட்சக் கணக்கிலே பணம் குவித்திடுவதிலும், அலங்கார ஊர்வலங்கள், ஆர்ப்பாட்ட விளம்பரங்கள், பகட்டான பயணங்கள் நடாத்துவதிலும் முனைந்திருக்கிறன்றனர்.

பொதுத் தேர்தல் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகுதான் வரப்போகிறது என்றாலும், அதற்கு இப்போதிருந்தே காங்கிரஸ் கட்சி முஸ்தீப்புகளைச் செய்து வருவதும் முகாம்கள் அமைத்து வருவதும் எதைக் காட்டுகிறது? எளிதாகத் தேர்தல் களத்து வேலை நடவாது, கழகத்தைச் சந்திப்பது சாமானியமான காரியமல்ல, துளி ஏமாந்தாலும் வீழ்ந்துபடுவோம் என்ற அச்சம் பிடித்து ஆட்டுகிறது தமிழகக் காங்கிரசை.

படைக்கலன்களை - பண மூட்டைகளைச் சேகரிப்பது மட்டும் போதாது என்று, காங்கிரஸ் கட்சி, நான் குறிப்பிட்ட இதழ் சிலவற்றின் துணைகொண்டு கழகத்துக்கு இழுக்குத் தேடிட எண்ணுகிறது. இந்த இதழ்கள் சில வேளைகளில் "ஜனநாயகம்' பற்றியும் சிந்து பாடுகின்றன!

ஜனநாயகக் கடமையாற்றிடும் வலிவு கொண்ட அமைப்பு இன்று தமிழகத்தில், கழகம் என்ற பேருண்மையை எவரும் மறுக்க முடியாது. இந்த நிலையில், காரணம் எதுவாக இருப்பினும், கழக வலிவைக் குலைத்திடும் முயற்சியில் எவர் ஈடுபட்டாலும், வளரும் ஜனநாயகத்தைக் கெடுப்பதாகவே பொருள்படும்.

"இல்லஸ்ட்ரேடட் வீக்லி' இதழாசிரியர் என்னிடம் கேட்டபோது, நான் கூறினேன், கழகத்தின் இலட்சியம், ஜனநாயகப் பாதுகாப்பு என்று.

தம்பி! மொத்தமாக எமக்குள் நடைபெற்ற உரையாடலைக் கூறினால் மட்டுமே, தரமுள்ள வட்டாரங்கள் என்னென்ன விவரம் அறிந்துகொள்ளும் ஆர்வம் கொண்டுள்ளன என்பது புரியும். அடுத்தகிழமை அது குறித்து எழுதுகிறேன் - இப்போது இதனை மட்டும் கூறுகிறேன் - அந்த இதழாசிரியர், பால் படி எத்தனை என்று அறிந்து கொள்ளத்தான் ஆர்வம் காட்டினார்; சாணம் எத்தனை கூடை என்பது பற்றி அல்ல.

அண்ணன்,

4-7-65