அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


படமும் பாடமும் (2)
1

தேர்தலில் தி.மு.க. பெற்ற வெற்றியும் விளக்கமும் -
காங்கிரசும் கம்யூனிஸ்டும்.

தம்பி!

"கண்ணே! காதற்கனியே! இன்னும் ஓர் திங்களில் நான் வந்து சேருகிறேன். தென்றலும் திங்களும், தேன்மொழியாளே! உன்னைத்தான் வாட்டுகின்றன என்று எண்ணாதே; என்னை அவை இரண்டும் ஈட்டி எனக் குத்துகின்றன. எனினும், என் அன்பே! உனக்கு, முத்துமாலையும் தங்கவளைகளும், உன் அழகுக்குத் தக்கதான அணிபணி பலவும் பூட்டி அழகுகண்டு பெருமைப்படத்தானே, நான் இங்கு அல்லும் பகலும், கொல்லும் நினைப்பினையும் ஒருபுறம் நிறுத்தி வைத்தபடி, பாடுபல பட்டவண்ணம் இருக்கிறேன். பால் வண்ண நிலவே! விரைவில் வருகிறேன்! நான் உனக்குக் கொண்டுவர இருக்கும் அணிகளை அணிந்துகொண்டு, அன்னமென நீ நடந்து செல்ல, ஆரணங்குகள் பலரும் உன்னைக் கண்டு, பெற்றாள் பெருமைக்குரிய மணாளனை! அதனால் அழகு மயிலாள் ஆனந்தவாழ்வு பெற்றாள்! என்று புகழ்ந்துரைக்கக் கேட்டு, அன்று உன்னை, முதன் முதலாக முந்திரிச் சோலையிலே அந்திசாயும் வேளையிலே தொட்டிழுத்து முத்தமிட்டேனே துணிவுடன். நீயும், துரையே! இதென்ன துடுக்குத்தனம் என்று கொதித்துக் கூறுவதுபோலத் துவக்கி, மறுகணமே, புன்னகையுடன் என் மார்பகத்தில் சாய்ந்தனையே, அன்று கண்ட இன்பத்துக்கு இணையான இன்பம் பெறுவேன்! அதற்கே, இந்தப் பிரிவு! அஞ்சாதே! நெஞ்சில் உறைபவளே! வழிமேலே விழிவைத்துக் காத்துக்கிடக்கிறாயே, வஞ்சி! உனைவிட்டுச் சென்றவன், அப்படி என்னதான் கொண்டு வந்து உன்முன் குவித்திடப் போகிறானோ! என்று மகளிர் சிலர் எள்ளி நகையாடிப் பேசுவதாகக் குறித்திருக்கிறாய். கேலி பேசிய அந்தப் பாதி மதியினர், அகலக் கண் திறந்து, ஆச்சரியம் கொள்ளத்தக்க விதத்தில், நான் உனக்கு, ஆடை அணி கொண்டுவந்து தருகிறேன். தந்து, உன்னிடமிருந்து பெறவேண்டியதைப் பெறுகிறேன்!!

பொருள் தேடச் சென்ற தலைவன், பிரிவாற்றாமைப் பெருந்துயரில் சிக்குண்ட தலைவிக்கு இதுபோலன்றோ மடல் எழுதுவான். ஏந்திழையின் உள்ளத்திலே எத்தனை எத்தனையோ சுவைமிகு எண்ணங்கள் கூத்தாடும். பிறகோர் நாள், திரும்பிய தலைவன் தலைவிக்கு எண்ணற்ற முத்தங்களைத் தந்துவிட்டு, தத்தை மொழியாளே! உனக்கென நான் ஏதேதோ தேடிப் பெற்றுவர வேண்டுமென்றுதான் படாதபாடு பட்டேன்; எனினும் உன் அழகுக்கு ஏற்ற அணிபணி கொண்டுவந்தே னில்லை; முயன்று பார்த்தேன், முடியவில்லை! செல்வம் குவிந்திடும் செய்தொழிலால் என்று எண்ணினேன்; ஆனால் ஏய்ப்பவன் இழுத்த பக்கமே செல்வம் செல்கிறது; உழைப்பவனை உதாசீனம் செய்கிறது என்ற உண்மையைத்தான் கண்டேன்; உனக்கு ஏமாற்றம் தருகிறேனே என்று எண்ணும்போது, துக்கம் துளைக்கிறது, வெட்கம் வேலாகக் குத்துகிறது; என் செய்வேன்! என்னால், உனக்கென்று கொண்டுவர முடிந்தது இது ஒன்றுதான்'', என்று கூறியபடி, அவளிடம் ஒரு கைவளையோ, காலுக்குத் தண்டையோ, கூந்தலிற் செருகிக்கொள்ள ஒரு திருகோ, கழுத்திலே பூட்டிக்கொள்ள ஒரு மாலையோ, மட்டும் கொடுத்திடுகிறான் என்றால், அவன் இதய ராணி, "செச்சே! இதுதானா! இவ்வளவுதானா! உமது ஆற்றல் இதற்குத்தானா பயன்பட்டது! இந்த இலட்சணத்துக்கா, ஈராறு மாதங்கள் உழைக்கிறேன், உழைக்கிறேன் - கொண்டுவந்து குவிக்கிறேன் குவிக்கிறேன் என்றெல்லாம் கூறிக்கூறி என்னை ஏய்த்து வந்தீர்! எங்கோ வெளியூர் சென்றிருக்கிறார் மணவாளர், எனக்காகக் கரியும் பரியும் கட்டித் தங்கமும் கல்லிழைத்த நகைகளும் கொண்டு வரப்போகிறார் என்றெல்லாம் கூவிக் கிடந்தாயே, விவரமறியாதவளே! உன் கணவன் கொண்டு வந்தது இதுதானா! என்று என் தோழிகள் கேலி பேசுவரே என்றெல்லாமா, பேசுவாள்! "அன்பே! திரும்பி வந்து உமது அன்பைப் பொழிந்தீரே, அது போதும் எனக்கு! உமது புன்னகையை எனக்களித்துவிட்டீர், அதனினும் மேலான அணியும் பணியும் அவனியில் உண்டா? இந்த நகைகூட, எனக்கு நீர் கொண்டு வந்திராவிட்டாலும், நான் வருத்தப்பட்டிருக்க மாட்டேன்! எனக்கு ஏதேதோ அணிபணிகள் பெற்றுத் தரவேண்டும் என்பதற்காக அல்லவா, கண்காணா நாடு சென்று கடினமான உழைப்பிலே ஈடுபட்டீர், எவ்வளவு அன்பு, உமக்கு என்னிடம் என்று எண்ணும்போதே, என் உடல் புளகாங்கிதமாகிவிடுகிறது - என்றல்லவா கூறுவாள்.

அதுபோலத்தான் தம்பி! நூறு இடங்களுக்குமேல் தேர்தலில் போட்டியிட்ட நாம், 15 இடங்களை மட்டுமே பெறமுடிந்தது என்று துக்கத்துடனும் வெட்கத்துடனும் எடுத்துக் கூறும்போது, நாட்டிலுள்ள நல்லோர், ஆயாசப்பட வேண்டாம்! கிடைத்தது குறைந்த அளவு என்றால் என்ன! உங்கள் முயற்சியின் தரத்தையும் திறத்தையும் கண்டு நாங்கள் மகிழ்கிறோம்! பெற்ற வெற்றி, பெற்றிருக்க வேண்டிய வெற்றியைக் கவனப்படுத்துவதாக அமைகிறது, கவலைப்படவோ, கலக்கமடையவோ அல்ல! என்று கூறி, நம்மை ஊக்குவிக்கிறார்கள், உற்சாகப்படுத்துகிறார்கள்! நமக்கு அதிலும் குறிப்பாக எனக்கு, இவ்வளவு குறைந்த அளவு மட்டுமே கிடைத்ததே என்ற எண்ணம் ஒவ்வொரு கணமும் நெஞ்சைக் குடைகிறது - என்றாலும், இந்த வெற்றியை எங்ஙனம் காதலன் கடும் உழைப்புக்குப் பிறகு, கொண்டு வந்து கொடுத்திடும் கைவளையையோ, காதணியையோ, அன்பின் காணிக்கை என்ற முறையில், காதலி பெற்று அகமகிழ்ந்து பூரிப்படைவாளோ, அதுபோலவே நாம் பதினைந்தே இடங்களிலே மட்டுமே பெற்ற வெற்றியை, நல்லோர், பெருமைக்குரியதாகக் குறிப்பிட்டு, நம்மைப் பாராட்டுகிறார்கள்.

மலையைக் கெல்லி எலியைப் பிடித்தனர்! என்று நம்மைப் பற்றிக் கேவலமாகப் பேசுவோர் இருக்கத்தான் செய்கிறார்கள். - நாடு என்றால், நல்லதும் கெட்டதும், நொந்ததும் வெந்ததும், பலபட இருக்கத்தானே செய்யும். நல்லோர் கூறுவது, மலையைக் கெல்லி எலியைப் பிடித்தார்கள் என்பதல்ல; மலையைக் கெல்ல முடிந்ததே, கிடைத்தது எலிதானே என்று கவலைப்படத் தேவை யில்லை; மலையைக் கெல்லும் ஆற்றலையும் கெல்ல முடியும் என்ற நம்பிக்கையையும் பெற்றீர்களல்லவா, அது சாதாரணமானதல்ல; பெற்ற வெற்றி, இனிப் பெறவேண்டிய வெற்றிக்கு அச்சாரம் என்று கொள்ளுங்கள்; முறை புரிந்துவிட்டது, இனி அடுத்த முயற்சி பலன் அதிகம் பெற்றுத் தரும் என்று கூறி வாழ்த்துகிறார்கள்.

மலையைக் கெல்லினோம் - எலிதானே கிடைத்தது என்று நானேகூடச் சிறிதளவு சோகமாகக் கூறும்போது, அந்த நல்லவர்கள், "இதற்கேன் கவலைப்படுகிறாய்! என்றுமே உன்னைப் பற்றியும் உன் முயற்சிகளைப்பற்றியும் குறைத்து மதிப்பிட்டுக் கொண்டு, இழிமொழியைக் கக்கிக்கக்கி தமது நெஞ்சிலே உள்ள பாரத்தைக் குறைத்துக் கொள்ளுபவர்கள்தானே, இப்போதும் மலையைக் கெல்லினார்கள் எலி பிடித்தார்கள் என்று ஏளனம் செய்கிறார்கள் - சொல்லட்டுமே, அதனால் என்ன, மலையைக் கெல்லினார்கள், எலியைப் பிடித்தார்கள் என்று அவர்கள் சொன்னால், வலையை வீசினார்கள் பாசியைப் பெற்றார்கள், குப்பையைக் கிளறினார்கள் குண்டூசியைக் கண்டெடுத்தார்கள் என்று ஏதாவது திருப்பிச் சொல்லிவிட்டுப் போயேன். என்று கூடச் சொல்லித் தருகிறார்கள். நான்தான் தம்பி! பதில் கூறிக் காலத்தை வீணாக்கிக் கொள்வதில்லையே!! அதனால், மலையைக் கெல்லி எலி பிடித்தார்கள்; மண்ணைக் கவ்வினார்கள், செம்மையாக உதைபட்டார்கள் என்றெல்லாம் சிலர் பேசுவது கேட்டுப், பதில் அளித்திடாமல், அவர்கள் அவ்விதமாகப் பேசுவதை, நாம், நமது கழகத்துக்கு எந்த வகையிலே பயன் படுத்திக்கொள்வது என்ற ஆராய்ச்சியிலே ஈடுபடுகிறேன். அது பலன் அளிக்கிறது; நிச்சயமாகவே!!

நாடு, நாம் பெற்ற இடங்கள் பதினைந்து என்றபோதிலும் அது குறித்துத்தான் பேசுகிறது - ஏன் இவ்வளவு குறைவாகப் பெற்றார்கள் என்று ஒரு சாராரும் - இவ்வளவுதானா பெற முடிந்தது என்று மற்றோர் சாராரும் - இவ்வளவுகூட எப்படிக் கிடைத்தது என்று வேறோர் சாராரும் - இவ்விதம் பல்வேறு வகையாக - நாடு பேசுகிறது!! இதன் பொருள் என்ன? நாட்டவரின் விழி, நம்மீது இருந்த வண்ணம் இருக்கிறது என்பதல்லவா பொருள்!

அந்த "நிலை'யை அடைவதென்பது, சாமான்யமானது அல்ல என்பதை அரசியல் தெளிவு படைத்தவர் அனைவரும் அறிவர். அந்த "நிலை'யைப் பெற முடிந்தது நமது கழகத்துக்கு, நாட்டு மக்கள் கூர்ந்து நோக்கி, மதிப்பிட்டுப் பார்க்கத்தக்க கட்டம் வந்திருக்கிறது என்பதனால்தான், நாட்டிலே உள்ள நல்லவர்கள், பதினைந்து இடங்களிலே நாம் பெற்ற வெற்றியை, காதலன் தன் காதலிக்குத் தந்த பரிசுப் பொருள் போன்றது என்ற முறையில் மகிழ்ந்து கொண்டாடி, வரவேற்பளித்து வாழ்த்துகிறார்கள்.

வாட்போரில் ஈடுபட்ட இரு வீரர்களில், வென்றான் ஒருவன், வீழ்ந்தான் மற்றவன் என்றால், வீர மரபு அறிந்தவனாக வென்றவன் இருந்தால், வீழ்ந்தவனைக் கேலி செய்யமாட்டான்; வீழ்ந்துவிட்டான் இம்முறை எனினும், அவன் நல்ல திறமை பெற்றிருக்கிறான், மிகமிகக் கஷ்டப்பட்ட பிறகே அவனை வீழ்த்த முடிந்தது, வீச்சு முறை நேர்த்தியாக இருக்கிறது, மேலும் சிலகாலம் பயிற்சி இருந்தால், நம்மை நிச்சயம் வீழ்த்தியிருப்பான் என்று எண்ணிக்கொள்வான். இடி இடியெனச் சிரித்து, "ஏடா மூடா, என்னிடமா போரிடத் துணிந்தாய்! என் வாள் வீச்சுக்கு முன்பு நீ எம்மாத்திரம்? பிழைத்தோடிப்போ! இனி, உன் கரத்தால் கத்தியைத் தொடாதே!' - என்று கடுமொழியைச் செருக்குடன் வென்றவன் பேசுகிறான் என்றால், அவன் வீரமரபு அறியாதவன் என்றே விவேகிகள் கூறுவர். தம்பி! வென்றவன் நம்மைப் பார்த்து வீழ்ந்தவனே! என்று கேலி பேசிடக்கூட இல்லை! ஆனால், "வென்றவனுடன் இருந்தோம்' என்பதை பெறுவதற்கரிய விருது என்று எண்ணிக் கொள்பவர்கள், நம்மை கேலி பேசுகின்றனர், வீழ்ந்தாயா! வீழ்ந்தாயா! செம்மையாக விழுந்ததா அடி!! ஹை, ஹை! ஹி!, ஹி!, ஹா, ஹா! என்று கூவுகிறார்கள் - அதனை வீரமுழக்கம் என்று வேறு எண்ணிக்கொள்கிறார்கள்.

வீரர் இருவர் குறித்த எடுத்துக்காட்டினைத் தொடர்ந்து கற்பனை செய்து பார், தம்பி! வென்றவன், வீழ்ந்தவனுடைய வீச்சுத் திறமையை வியந்துகொண்டிருக்கும் வேளையில், வேறோர் ஆசாமி அங்கு வந்து, கெக்கலி செய்தபடி "வீழ்ந்தாயா, வீழ்ந்தாயா! வேண்டும்! வேண்டும்! தலை வேறு உடல் வேறு ஆகியிருக்க வேண்டும், ஏதோ தப்பித்துக்கொண்டாய்! வாட்போர் ஒரு கேடா உனக்கு!'' என்று கேலி பேச, "ஐயா! யாரே நீவிர்' என்று வீழ்த்தப்பட்ட வீரன் கேட்கும்போது, "தெரியவில்லையா பயலே! நான்தான் உன்னை வீழ்த்திய வீரன், கைவாளுக்குத் தைலம் பூசியவன்! இப்போது தெரிந்துகொள் நீ, யாரால் தோற்கடிக்கப்பட்டாய் என்பதை'' என்று கூறினால், வென்றவன், வீழ்த்தப்பட்டவன் எனும் இரு வீரருமேயன்றோ. கைகொட்டிச் சிரித்தபடி, "பலே! பலே! வீரதீர கெம்பீரச் சிங்கமே! வாழ்க! வாழ்க!'' என்று கூறுவர்.

அது போலத்தான், 150 - இடங்களைப் பிடித்த காங்கிரஸ், 15 - இடங்களை மட்டுமே பெறமுடிந்த, நம்மிடம் வாள்வீச்சுத் திறமை வகையாக இருக்கிறதே என்றெண்ணி வியந்துகொண் டிருக்கும் வேளையில், காங்கிரசுக்குத் தேர்தல் களத்திலே வாளுக்குத் தைலம் பூசிக்கொடுக்கும் திருப்பணியாற்றியவர்கள், வீழ்ந்தாயா! வீழ்ந்தாயா என்று நம்மை நோக்கி நையாண்டி செய்கிறார்கள். காங்கிரசும், இந்தக் "கேலிக்கூத்து' கண்டு கைகொட்டித்தான் சிரிக்கிறது! நாம் அதுகூடச் செய்வது, நேரக்கேடு என்று கருதி, 150 இடங்களைக் காங்கிரசினால் எப்படிப் பெறமுடிந்தது, நாம் ஏன் 15 - இடங்களை மட்டுமே பெற்றோம், நமது முறையிலே என்ன கோளாறு இருக்கிறது, என்பதைக் கண்டறிந்து, எதிர்காலத்துக்கான காரியத்தை உருவாக்குவதிலே ஈடுபடுகிறோம்.

150 இடங்களிலே வெற்றி பெற்ற காங்கிரசுக்கு, நிச்சயமாகத் தெரியும் பதினைந்தே இடங்களைப் பெற்ற நமது கழகம், எந்த அளவுக்குத் தேர்தல் களத்திலே திறமையைக் காட்ட முடிந்தது என்ற உண்மை; இடையே இருந்தவர்கள், யாதறிவர் பாபம்! அவர்கள் அறிந்ததெல்லாம், ஆத்திரம் தீரத் திட்டித் தீர்த்தோம்! ஆபாச அகராதியை ஒப்புவித்துக் காட்டினோம்! அதுவும் மற்றவர் செலவில்!! என்பதுதான் - வேறு என்ன! காங்கிரஸ் அபேட்சகர்களுக்கல்லவா தெரியும், பட்ட கஷ்டம், கொட்டிய பணம்; கால்கடுக்கச் சுற்றியவர்களுக்குத்தானே எரிச்சல் தெரியும் - கையும் மனமும் வலிக்க வலிக்கப் பணத்தைக் கரைத்தவர்களுக்குத்தானே அதன் கஷ்ட நஷ்டம் தெரியும் - இடையே இருந்தவர்களுக்கு என்ன! வாய்வலிக்க நம்மைத் திட்டினார்கள். அவ்வளவுதானே! இதில் என்ன கஷ்டம் அவர்களுக்கு! வழக்கமாகச் செய்துகொண்டு வருகிற காரியம் - அதுதவிர வேறு எந்தக் காரியத்திலும் அவர்களுக்கு நாட்டமே செல்ல முடியாத அளவுக்கு, அந்த ஒரு காரியத்தில் ஈடு எதிர்ப்பற்ற திறமை பெற்றல்லவா விளங்குகிறார்கள்!

காங்கிரஸ் கட்சி நாம் 15 - இடங்களில் மட்டும்தானே வெற்றி பெற்றோம் என்று கேவலமாகக் கருதவுமில்லை; அலட்சியமாக இருந்துவிடவுமில்லை, மாறாக ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்; தோல்வி ஏற்பட்ட காரணங்கள் குறித்து விளக்கம் கேட்கிறார்கள். தம்பி! காஞ்சிபுரம் தொகுதியில், காங்கிரஸ் தோற்றதன் காரணத்தைக் கண்டறிந்து, நிலைமையைச் சரிப்படுத்துவதற்காகவே அமைச்சர் ஒருவர் தமது அலாதியான அறிவாற்றலைச் செலவிட்டிருக்கிறார்!!

திராவிட முன்னேற்றக் கழகத்தை நாங்கள் குறைத்து மதிப்பிட்டுவிட்டோம், அதனால்தான் எங்களுக்கு இவ்வளவு தொல்லையும் தோல்வியும் வந்தன என்று கம்யூனிஸ்டு வட்டாரம் கருதுவதாகப் பத்திரிகைச் செய்தி ஒன்று பார்த்தேன்.

பிரஜா - சோμயலிஸ்டு கட்சியின் தலைவரும், என் நண்பருமான சின்னதுரை, திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டாக இருந்து தேர்தலில் ஒரு அணி ஏற்படுத்தாது போனதனால்தான், காங்கிரஸ் இத்தனை இடங்களைப் பிடித்துக் கொண்டது என்று கூறுகிறார்.

சோஷியலிஸ்டு வட்டாரத்திலும், இதுபோன்றே கருதப் படுவதாக அறிகிறேன்.

தேர்தல் களத்திலே ஈடுபட்ட ஒவ்வொரு கட்சியும் திராவிட முன்னேற்றக் கழகம் பெற்ற வெற்றி 15 இடங்களிலே தானே என்று அலட்சியம் காட்டவில்லை; ஆராய்கிறார்கள்; மேற்கொண்டு எடுத்துக்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்துப் பேசுகிறார்கள்; தைலம் தடவியவர்கள் மட்டும்தான், கேலி பேசுகிறார்கள், 15 இடங்கள்தானே என்கிறார்கள். புலியுடன் போரிட்டு, உடலெங்கும் புண்ணாகிக்கிடக்கும் வீரனை, பாராட்டுவர், கேலி பேசமாட்டார்கள். அஃதேபோல, இன்றளவு வரையில் "இந்தியாவிலே' ஏகசக்ராதிபத்யம் செய்வதற்கான கட்சி என்று புகழப்பட்டுவரும் காங்கிரசைத் துணிந்து எதிர்த்து நின்று, பதினைந்து இடங்களில் வெற்றி பெற்ற நமது கழகத்தைக் கேலி பேசுகின்றனர் - பேசுபவர்கள். எங்கள் ஆற்றலைக் காணீர்! நாங்கள் காங்கிரஸ் கட்சியை ஓட ஓட விரட்டி அடித்தோம், எல்லா இடங்களிலும் வெற்றிக்கொடி நாட்டினோம் என்று பட்டியல் காட்டுகிறார்களா என்றால், அதுதான் இல்லை! போகட்டும், பாவம், நம்மைக் கேசெய்வதன் மூலம், தமக்கோர் "தெம்பு'' தேடிக்கொள்கிறார்கள்.

தம்பி! பதினைந்து இடங்களிலே மட்டுமே வெற்றி பெற்றோம்; இது நமக்கு ஏமாற்றத்தைத் தரத்தான் செய்கிறது; எனக்கோ பெரியதோர் ஏமாற்றத்தைத் தருகிறது. போட்டியிட்ட இடங்களிலெல்லாம் வெற்றி பெற்றுவிடுவோம் என்று நான் எண்ணி ஏமாற்றம் அடையவில்லை. நான் குறைந்தது 30 இடங்கள் மட்டிலுமாவது கிடைக்கும் என்று கணக்கிட்டிருந் தேன். பதினைந்துதான் கிடைத்தது, இது எனக்கு வேதனை தரத்தான் செய்கிறது. இந்த வேதனை எனக்கு எப்போது குறைகிறது என்றாலோ, இதற்கும் வக்கற்றுப்போய், இரு கொடி ஏந்திகளாகி, அழையாமலே நுழைந்துகொண்டு, தேர்தல் முரசாகப் பயன்பட்டவர்கள், பதினைந்துதானா! பதினைந்தே பதினைந்துதானா என்று பரிகாசம் பேசுகிறார்களே, அப்போது தான் குறைகிறது! இப்படியும் சில விசித்திர சித்தர்கள் இருக்கிறார்களே என்பதைக் காணும்போது, எனக்கு வேதனை மறைகிறது, வேடிக்கையாக இருக்கிறது.

தம்பி! பத்து ஆண்டுகளாகத் தொடர்ந்து பதவியில் இருந்தும், பலபல கொடுமைகளை இழைத்தும், இந்த முறையும் நாட்டு மக்கள், காங்கிரசு கட்சியையே "ஆளவந்தார்'களாக்கி விட்டனர். மான்செஸ்டர் கார்டியன் பத்திரிகை, இது குறித்து வியந்து பாராட்டி எழுதுகிறது. கார்டியன் வியப்புடன் இதனைப் பாராட்டுவதற்குக் காரணம், ஜனநாயகத்திலே பண்பட்ட பிரிட்டன் போன்ற நாடுகளிலே, மக்கள் விழிப்புணர்ச்சியுடன் இருக்கிறார்கள். ஆளும் கட்சி, அறிவீனத்தாலோ, அகந்தையாலோ, அலட்சியத்தினாலோ, மக்கள் நலனுக்கு ஊறுநேரிடும் காரியம் செய்து விட்டால், மக்கள் சீறி எழுந்து ஆளும் பொறுப்பை மீண்டும் அந்தக் கட்சியிடம் தர மறுக்கிறார்கள். இங்கோ காங்கிரஸ் கட்சி ஆயிரத்தெட்டு தவறுகளைப் புரிந்தும், பொறுப்புமிக்க தலைவர்களும் பொறுப்புள்ள பத்திரிகைகளும் அத்தவறுகளைக் காட்டி இடித்துரைத்தும், ஓட்டுகளை மட்டும் காங்கிரசு கட்சியினால் தட்டிப் பறிக்க முடிகிறது! இதுதான், மான்செஸ்டர் கார்டியன் பத்திரிகைக்கு வியப்பாக இருக்கிறது. இது ஒரு புறம் இருக்கட்டும்; நான் கூறவந்தது தம்பி! இப்படி மக்களிடம் ஓட்டுகளைத் தட்டிப் பறிக்கும் "மகத்துவத்தை' இன்றும் குன்றாமல் பெற்றிருக்கும் ஒரு பலம் பொருந்திய கட்சியுடன் போட்டியிட்டு நாம் பதினைந்து இடங்களைப் பெற்றோம்; அதனை, காங்கிரஸ் கட்சியின் எதிர்ப்பு எனும் சூறாவளியில் சிக்கினால் புயலிற்பட்ட கலமாவோம் என்று அஞ்சி ஒதுங்கிக் கொண்டவர்களும், அடிபணிந்து அக்காரவடிசல் பெற்றவர்களும், கேலியாகப் பேசிக்கொண்டு போகட்டும்; தங்கள் இயலாமையை இதன் மூலம் காட்டிக் கொள்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சிக்கு இன்றளவும் பத்திரிகை பலம், பிறர் கண்டு வியந்திடத்தக்க அளவு இருந்திடக் காண்கிறோம்.

முதலாளிகள், தங்கள் இலாப வேட்டைக்கு வாய்ப்பும் வசதியும் பெற, காங்கிரசை ஆதரிக்கவேண்டும் என்ற தத்துவத்தைப் பொன்னெனப் போற்றி வருகிறார்கள்.

டாட்டா போன்றோரின் பணம் பெட்டிகள், காங்கிரசின் ஓட்டுப் பெட்டிகளுக்குத் துணையாக நிற்கின்றன.

இவ்வளவு "வல்லமை' படைத்த ஒரு கட்சியை, தோள் வலியும் வாள்வலிவும் படைத்த ஓர் தூர்த்தனை, தொலைவிலிருந்து "கவண்கல்' வீசியே வீழ்த்த முற்பட்ட அஞ்சா நெஞ்சனைப்போல், வசதியற்ற நிலையையும் மறந்து, நாம் எதிர்த்து நின்றோம். நமது கோபப்பார்வை போதும் இவர்களைச் சுட்டுச் சாம்பலாக்க என்று கொக்கரித்தனர்; கலங்கினோ மில்லை; தேர்தலில் ஈடுபடுவது ஜனநாயகக் கடமை, வெற்றி பெற்றே தீரவேண்டும் என்று ஒன்றும் இல்லை, கூடுமான வரையில், முடிந்த அளவு, பலமான எதிர்ப்பினை உருவாக்கிக் காட்டப்போகிறோம் என்று கூறிவிட்டு, களத்தில் இறங்கிக் கடமையைச் செய்தோம், 15 இடங்களில் வெற்றி கிடைத்தது. மற்றவர்கள் கண்டு புகழ்ந்திட, வியந்திடவேண்டிய சம்பவமே தவிர, கேலி பேசும் சம்பவமாகுமா இது!!

பதினைந்து இடங்கள்தான் பெற்றோம். ஆனால் மொத்தமாக நமக்கும் கிடைத்துள்ள ஓட்டுகள், சாமான்யமல்லவே! கட்சி என்ற முறையில், காங்கிரசுக்கு அடுத்தபடியாக சென்னை ராஜ்யத்தில் தி. மு. கழகமே "ஓட்டுகள்' பெற்றிருக்கிறது என்பதை வியந்தே, பல இதழ்கள் எழுதியுள்ளன.

கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற பழமொழி போலல்லவா இது இருக்கிறது, இடங்கள் அதிகம் கிடைக்காவிட்டாலும் ஓட்டுகள் ஏராளம் கிடைத்தன என்று "விண்ணாரம்' பேசுவது என்று சிலர் கூறக்கூடும்.

ஒரு ஜனநாயக நாட்டிலே இடங்கள் ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை எத்தனை கிடைத்தன என்பதை மட்டுமல்ல, ஓட்டுகளின் எண்ணிக்கையையும் கூர்ந்து பார்த்துத்தான், அரசியல் போக்கு, எப்படி உருவாகிறது என்பதைத் தெரிந்து கொள்வார்கள் - எதிலும் தெளிவு வேண்டும் என்ற கொள்கை கொண்டவர்கள். அந்த முறையிலே, தி. மு. கழகம் பெற்றிருக்கும் ஓட்டுகளின் எண்ணிக்கை, பலப்பல அரசியல் தலைவர்களை, மலைக்கச் செய்திருக்கிறது. அதனை மறைத்துச் சிலர் பேசுவர், உண்மையை நேருக்கு நேர் சந்திக்கக் கிலி கொள்பவர்கள், உள்ளதைக் காண மறுக்கிறார்கள்.