அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


படமும் பாடமும் (2)
2

உலகமே, ஒரு ஒப்பற்ற சம்பவமாகக் கருதத்தக்க விதத்தில், கேரளத்தில் கம்யூனிஸ்டு கட்சி மகத்தான வெற்றி பெற்றிருக்கிறது - ஆளும் கட்சியாகிவிட்டது.

ஆச்சரியத்தால் மூர்ச்சையானவர்களும், அச்சத்தால் தாக்குண்டவர்களும், கலக்கத்தை மறைத்துக்கொண்டு, கம்யூனிஸ்டுகள் இனிப் பெட்டிப்பாம்புதான் என்றும், சட்டசபை அவர்களுக்குச் சிறைக் கூடமாகிவிடும் என்றும், அதைச் செய்வோம் இதைச் செய்வோம் என்று கொட்டி அளந்து வந்தார்களே கொடி தூக்கிக்கொண்டு, இதோ இனி என்ன சாதிக்கப் போகிறார்கள் பார்த்துவிடுவோமே இவர்களின் ஆற்றலை என்றும் பலவிதத்தில் பேசி, தோல்வியால் ஏற்பட்ட துயரத்தை மறைத்துக் கொள்ள முற்பட்டிருக்கின்றனர், மூக்கறு பட்டவர்கள் - ஆனால், உலக வரலாற்றிலேயே, நேரு பண்டிதரின் புகழ் உலகில் எங்கும் பரவியிருக்கும் நேரத்தில், பாரில் எமது நேருவுக்கு நிகர் யாரே! என்று பாவாணர்கள் பாடிடத்தக்க நிலை இருக்கும்போது, அவருடைய பெரும் புகழொளி கண்டும் மயங்கமாட்டோம், காங்கிரசுக்கு அடிபணிய மறுக்கிறோம் என்று துணிந்து கூறி, கம்யூனிஸ்டு ஆட்சிக்குக் கேரளம் அழைப்பு விடுத்துள்ள சம்பவம், அகில உலகும் அச்சமோடு உணர்ச்சியின் வகை எப்படிப்பட்டதாக இருப்பினும் கூர்ந்து கவனிக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்; வரலாற்றிலே பொறிக்கப்படத் தக்க சம்பவமாகும்.

பளிச்சிட்டுத் தெரியும் இந்தச் சம்பவத்துக்கே, "இந்து' இதழ் புள்ளிவிவரத்தின் துணையைத் தேடி, இடம் அதிகம் கிடைத் திருக்கிறது, என்றாலும் கம்யூனிஸ்டுக் கட்சிக்குக் கிடைத்துள்ள ஓட்டுகள், காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்ததைவிடக் குறைவுதான்! என்று வாதாடுகிறது. கம்யூனிஸ்டு கட்சிக்கு 19,89,369 - காங்கிரசுக்கு 21,62,000 ஓட்டுகள்.

கேரளத்துச் சம்பவத்துக்குப் பயன்படும் வாதம், தி. மு. கழகத்துக்குக் கிடைத்த இடங்கள் பதினைந்துதான் என்றாலும், கிடைத்த ஓட்டுகள் ஏராளம் என்று கூறும்போது மட்டும், சொத்தை வாதம், மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போன்ற பேச்சு என்று எப்படி ஆகிவிடும்.

தம்பி! உன் அரிய உழைப்பும் பிறர்கண்டு பாராட்டத்தக்க ஆற்றலும் வீண்போகவில்லை; நாட்டு மக்களை நித்த நித்தம் சந்தித்து உரையாடி, நமது கொள்கைகளை எடுத்துக்கூறியது பலன் அளிக்காது போய்விடவில்லை; இந்தத் தேர்தலில், மொத்தத்தில் நமக்கு 16 இலட்சத்துக்குமேல் ஓட்டுகள் கிடைத் துள்ளன; ஏ! அப்பா! எத்தனைவிதமான எதிர்ப்புக்களுக்குப் பிறகு. தாக்குதல்கள் எவ்வளவு கீழ்த்தரமானவை, எவ்வளவு ஈனத்தனமான செயல்களால் நம்மை அழிக்க முனைந்தனர், எவ்வளவு மிருகத்தனமான முறைகளைக் கையாண்டனர். தப்பித்தவறி காட்டுவழி சென்றுவிட்டவனைத் தாக்க மிருகங்கள் எப்படிக் கிளம்புமோ, அப்படி அல்லவா, நமது கழகத்தின்மீது பலரும் பாய்ந்தனர்; என்னென்ன பழிச்சொற்கள், எவ்வளவு வதந்திகள்! இவ்வளவுக்கும் நாம் கலங்காதிருந்தோம் என்பதல்ல ஆச்சரியம், இவ்வளவு பேச்சுக்களையும் துச்சமானவை, குப்பைக் கூளம் நொந்துபோன உள்ளத்திலிருந்து கிளம்பும் நாராசம் என்று கருதி, மதிப்பளிக்க மறுத்து, நாட்டு மக்களில் 16 லி இலட்சம் பேர் நமது கழகத்துக்கு ஓட்டு அளித்தனரே, அது அல்லவா ஆச்சரியம். மான்செஸ்டர் கார்டியனுக்கு இது தெரியாது; இப்போது இது தெரிவித்தாலும் புரியாது. ஆனால் இவ்வளவு எதிர்ப்பு நெருப்பை நீந்தி, நம்மில் பதினைந்துபேர் வெற்றியை அடைந்தோமே, அது நேர்மை உள்ளம் படைத்த அனைவருக்கும், நம்மிடம் உள்ள மதிப்பினை, நிச்சயமாக அதிகப்படுத்தி இருக்கிறது என்பதிலே ஐயமில்லை.

நமக்கு எவ்வளவு எதிர்ப்புக்குப் பிறகு இத்துணை ஓட்டுகள் கிடைத்தன என்பது மட்டுமல்ல, நான் உன்னைக் கவனிக்கச் சொல்வது, நாம் எவ்வளவு தவறுகள் செய்திருக்கிறோம், அவ்வளவுக்கும் பிறகு நமக்கு இந்த அளவு ஆதரவு திரண்டதே அதனைக் கவனிக்கச் சொல்லுகிறேன்.

என்னைப் பொறுத்தவரையிலும் சரி, என்னுடன் மிக அதிகமாக நெருங்கிப் பழகிடும் என் தம்பிமார்கள் பலரைப் பொறுத்தவரையிலும்கூட, கடந்த பத்து பதினைந்து ஆண்டு களாகவே தேர்தலில் ஈடுபடுவது என்றாலே, ஒருவிதமான "கசப்பு' இருந்து வந்தது. ஓட்டுக்கேட்பது என்பதையே ஏதோ செய்யத்தகாத, செய்யத் தேவையற்ற ஒரு காரியம் என்று கருதி வந்திருக்கிறோம். இந்த நாட்டு மக்கள் யார் எதைச் சொன்னாலும், இனிக்க இனிக்கச் சொன்னாலும், எதனையும் நம்பிவிடுகிறார்கள். நாம் கூறும் உண்மைகளோ மக்களுக்குக் கசப்பாகவும் கிலி மூட்டுவதாகவும் இருக்கின்றன. அதனாலேயே நம்மை அவர்கள் வெறுக்கிறார்கள். இந்த நிலையில், அவர்கள் நமக்கு ஓட்டுத் தருவார்களா என்ன! செச்சே! நமக்கேன் பல்லிளிக்கும் வேலை! பொறி பறக்கப் பேசுவோம்! அச்சம் தயை தாட்சணியத்துக்கு இடம் வைக்காமல் பேசுவோம்! கேட்டால் கேட்கட்டும், கேட்காவிட்டால் நாசமாய்ப் போகட்டும்! ஊதுகிற சங்கினை ஊதுவோம், பொழுது விடிகிறபோது விடியட்டும்! என்று இவ்விதமாகவெல்லாம் நினைத்துக்கொண்டு இயக்கப் பணியாற்றிக்கொண்டு வந்திருக்கிறோம். அப்படிப்பட்ட நாம் தேர்தலில் ஈடுபட்டபோது, அதிலே மிகுதியான சுவையும், அந்தச் சுவை மட்டுமே தரக்கூடிய சுறுசுறுப்பும், எங்ஙனம் பெற முடியும்.

உன்னிடம் கூறிக்கொள்வதிலே தவறு என்ன தம்பி! நான் காஞ்சிபுரம் பகுதியில், நல்ல முறையில்தான் பணியாற்றினேன். ஆனால், பொதுக்கூட்டத்திலேயும் சரி, தனித்தனியாக மக்களிடம் அணுகியபோதும் சரி, "ஓட்டு' தரச்சொல்லி, கேட்க முடியவே இல்லை; விருப்பமில்லாததால் அல்ல; முறை தெரியாததால்! உடன் வந்தவர்கள்தான் பேசுவர். நான் நாக்கு கட்டுண்ட நிலையில் நிற்பேன்; மெத்தச் சிரமப்பட்டு, நான் சொல்லக்கூடியதெல்லாம்,

பார்த்துச் செய்யுங்கள்
கூட இருங்கள்
வரட்டுமா
என்ன? செய்கிறீர்களா!

என்ற இவைகளேதான்! மேலால் பேசமுடியவில்லை - தெரியவில்லை. அது போன்றே, நான் பேசிய பொதுக்கூட்டங்கள் ஏராளம் - இரண்டே இரண்டு கூட்டங்களிலேதான், எனக்கு "ஓட்டு' போடுங்கள் என்று கேட்க முடிந்தது - உதயசூரியன் பெட்டியில் ஓட்டுப் போடுங்கள் என்று கேட்டேன். உடனிருந்த நண்பர்கூட, அப்பா! பரவாயில்லையே! அண்ணா ஓட்டு போடச் சொல்லிக் கேட்டுவிட்டாரே! என்று வேடிக்கையாக வியந்துரைத்தார்!

என் நிலைதானே, நமது அபேட்சகர்களிலே பலருக்கும் இருந்திருக்கும். பல ஆண்டுக் காலமாக,

பொறிபறக்கப் பேசுவது
கண்டந்துண்டமாக்கிக் காட்டுவது
எதிர்ப்பு வாதங்களை முறியடிப்பது
விளக்கம் தருவது
வீரமுழக்கம் புரிவது
வரலாற்றுச் சம்பவம் தருவது

போன்ற முறைகளிலேயே பழகிப் போயிருக்கிறோம். அப்படிப்பட்ட நாம் மக்களிடம் கனிவாகப் பேசி, அவர்கள் அலட்சியம் காட்டினால் தாங்கிக்கொண்டு, புரியாதவர்களாக இருந்தால் பொறுமையை இழக்காமல், ஓட்டு கேட்கும் முறையை, எப்படி எளிதாகக் கற்றுக்கொள்ள முடியும். கேள், தம்பி! என் கதையை! தங்கவேலர், என்னை "ஓட்டு' கேட்பதற்காக, முதல்நாள் கோவிந்தவாடி என்ற கிராமத்துக்கு அழைத்துக் கொண்டு சென்றார் - அழைத்துக் கொண்டு சென்றார் என்று கூறுவதைவிட, இழுத்துக் கொண்டு சென்றார் என்பதுதான் பொருத்தமாக இருக்கும்.

நாலைந்து கிராமத்துப் பெரியவர்களைச் சந்தித்தோம் - சந்தித்தோம் என்று கூறுவதைவிட, எங்களைப் பார்க்கும்படி, சிரமப்பட்டு அவர்கள் எதிரில் சென்று நின்றோம்.

தங்கவேலர் துவங்கினார், "இதோ - நம்ம அண்ணாதுரை - நம்ம தொகுதிக்கு நிற்கிறார் - சட்ட சபைக்கு - நல்லவர் - படிப்பாளி - தமிழ் நாட்டில் ஒரு தலைவர் -'' என்று விவரித்தார்.

கேட்டுக் கொண்டிருந்தவர்கள் முகத்திலே ஒருவிதமான மலர்ச்சியும் இல்லை; எனக்குச் சிறிதளவு வெட்கமாகக்கூட இருந்தது.

சில நிமிடங்கள் தங்கவேலர் பேசிவிட்டு, பிறகு, கிராமத்துப் பெரியவர்களின் பதிலை எதிர்பார்த்தார்! தம்பி! பதில் வெளிவந்தது, நான் பயந்துபோனேன், கோபம் கூடத்தான்!!

"அது சரிங்க! எலக்ஷனுக்கு வருகிற ஒவ்வொருவரையும் தான் இந்திரன் என்று சொல்றீங்க, சந்திரன் என்று சொல்றீங்க, நாங்க என்னத்தைக் கண்டோம்!''

இது அவர்கள் அளித்த பதில்! ஓட்டு கேட்கச் சென்ற எனக்கு எப்படி இருந்திருக்கும் என்று எண்ணிப்பாரேன் தம்பி!

கோவிந்தவாடி, காஞ்சிபுரத்துக்கு வெகு அருகாமையில் உள்ள சிற்றூர் - ஐந்தாறு மைல்களுக்குத்தான் தொலைவு. அங்கு, இவ்விதம், "வரவேற்பு!'' எப்படி இருந்திருக்கும், என் எண்ணம் என்பதை நினைத்துப் பாரேன்!

ஓட்டு கேட்டுக்கேட்டுப் பழக்கமாகி இருந்தால், இவ்வளவு அக்கறையற்றும் அலட்சியமாகவும் பேசியவர்களிடம், மளமள வென்று பதில் பேசிடத் தெரிந்திருக்கும். நமது கழகம்தான் தேர்தல் அலுவலில் இதுநாள் வரை ஈடுபடவில்லையே, பதில் ஏதும் கூறத் தோன்றவில்லை!

தம்பி! இதே கோவிந்தவாடி, எனக்கு "ஓட்' அளிக்காமல் இருந்துவிடவில்லை; நிறைய அளித்தார்கள்; ஆதரவு கிடைத்தது. தேர்தல் காரியத்திலே ஈடுபாடுகொண்டு, நாம் சுவையும் சுறுசுறுப்பும் வழியும் வகையும் பெறவில்லை.

பொதுவாகவே ஒரு தேர்தலுக்குத் தேவையான அளவு வசதி இல்லை! அத்துடன் இந்தக் குறை வேறு! இந்த நிலையில் நமக்குப் பதினாறு இலட்சத்துக்குமேல் "ஓட்டுகள்' கிடைத்தன என்பதிலேதான் வியப்பு இருக்கிறது!

நாமக்கல் அடுத்த சிற்றூர் ஒன்றிலே, மாலை சுமார் ஐந்து மணிக்கு, நான் பேசிக் கொண்டிருக்கிறேன். ஏழாம் தேதி! திடீரென்று, நண்பர் சித்தய்யன், என் கரத்திலிருந்த "மைக்கை' வெடுக்கெனப் பறித்துக் கொண்டு,

ஒரு சந்தோஷமான செய்தி
ஒரு மகிழ்ச்சியான செய்தி
நம்ம அண்ணா எம்.எல்.ஏ. ஆகிவிட்டார்.
எலக்ஷனில் ஜெயித்துவிட்டார்.

என்று சிரிப்பும் பேச்சும் குழையக் குழையக் கூறினார்.

தம்பி! கோவிந்தவாடி கிராமத்திலே, நான் கண்ட முதற் காட்சியையும், நாமக்கல் அருகே உள்ள சிற்றூரில் சித்தய்யன் என்னிடமிருந்த "மைக்'கைப் பறித்துக்கொண்டு பேசிய காட்சியையும் மனக்கண்ணாலே பார். படமும் தெரியும் பாடமும் கிடைக்கும்.

கோவிந்தவாடி கிராமத்திலே, முதலிலே எனக்கு ஏற்பட்ட திகைப்பு, வெட்கம், கோபம், சலிப்பு இவைகளை, என்னுடன் பணியாற்றியவர்கள், மக்களைச் சந்திப்பதிலும் உரையாடி விளக்கமளிப்பதிலும் தனித்திறமையும் தளராத ஊக்கமும் காட்டி, விரட்டி அடித்து வெற்றி தேடித் தந்தனர்.

தம்பி! நான் இந்தச் சம்பவத்தைக் கூறுவதற்குக் காரணம், நாம் தேர்தலில் ஈடுபட்டோமே தவிர, அதற்கான பக்குவத்தை, பயிற்சியைப் போதுமான அளவு பெறுவதற்கு நமக்குக் காலம் போதுமான அளவு கிடைக்கவில்லை.

இந்தக் குறை மட்டுந்தானா! நாம் - நான் உட்படத்தான் - பல தவறுகளை விவரமறியாத காரணத்தால் புரிந்திருக்கிறோம்.

"தொகுதிகளின் தன்மையை ஆராய்ந்து அறிதல்
எவரெவர் எந்தெந்தத் தொகுதியில் ஈடுபடும் நல்வாய்ப்பு உளது என்பதைத் தெரிந்து கொள்ளுதல்,

போன்ற "அரிச்சுவடி'யே நாம் சரியான முறையில் பெற்றிருந்தோமில்லை.

நமது மாநாடு கூட்டுவதற்கு நாம், "திடல்' தேடிப் பெறுவதற்கு எடுத்துக் கொள்ளும் முயற்சியைவிட, அதிலே காட்டும் திறமையைவிட, குறைவாகவே, தேர்தல் தொகுதிகளை ஆராய்வதிலும், யார் எந்தத் தொகுதிக்கு என்பதுபற்றித் தீர்மானிப்பதிலும் காட்டியிருக்கிறோம்.

இவ்வளவு, "குறைபாடு'கள் இருந்தும், நாம் பதினாறு இலட்சம் வாக்குகளைப் பெற்றோம்!! வானம் பார்த்த பூமி என்ற நிலையிலேயே விளைச்சல் குறிப்பிடத்தக்க அளவு என்றால், நல்ல பாசனவசதியும் கிடைத்துவிட்டால் விளைச்சல், தரமாகத்தானே இருக்கும்! அந்த முறையிலே, எவ்வளவோ

திறமைக் குறைவு
தெளிவுக் குறைவு
வசதிக் குறைவு
அனுபவக் குறைவு

இருந்தும் பதினாறு இலட்சம் "ஒட்'டுகளுக்குமேல் பெற்றிருக்கிறோம் என்றால், முறையும் சரிவர அறிந்து, வசதிகளையும் தேடிப் பெற்று, தேர்தலில் ஈடுபட்டால், இந்த பதினைந்து கண்டே பதறிப்போகிறார்களே சிலர், அவர்கள் மயங்கிக் கீழே சாய்ந்திடும் அளவுக்கல்லவா, வெற்றியின் எண்ணிக்கை உயரும்!!

வசதிகளைத் தேடிக்கொள்வதற்காகக் கூடிக் கூடிப் பேசினோம் - திட்டம் பல தீட்டினோம் - நானும் வீர தீரமாக வாக்களித்தேன். ஐந்து இலட்சம் திரட்ட வழி கண்டுபிடித்து விட்டேன் என்று! ஆனால், அந்தத் திட்டத்தின்படி காரியத்தைத் துவக்கவே இல்லை.

புரட்சி நடிகர் எம். ஜி. ராமச்சந்திரன், நடிப்பிசைப் புலவர் கே. ஆர். ராமசாமி இலட்சிய நடிகர் ராஜேந்திரன், நடிகமணி டி. வி. நாராயணசாமி, இவர்கள், இந்தத் தேர்தல் செலவுக்கென்றே ஒரு நல்ல நிதிதிரட்டி உதவவேண்டும் என்பதற்காக, ஒரு படத்தில் ஊதியமே பெறாமல் நடித்துத் தருவதாக முன் வந்தனர். நான்தான் அவர்கள் தர இருந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்தி, சில இலட்ச ரூபாய்கள் கிடைப்பதற்கான வாய்ப்பைப் பெறத் தவறிவிட்டேன்.

அந்தத் தவறு, என்ன தொல்லையைத் தந்தது என்கிறாய்!!

தேர்தல் நேரத்தில் தாங்க முடியாத பணமுடை!!

நூறு இடங்களுக்குமேல் போட்டியிடுகிறோம்.

பணபலம் இல்லை - அதனை ஓரளவுக்கேனும் பெறத்தக்க வாய்ப்பு கண்ணுக்குத் தெரிந்தும் பயன்படுத்திக்கொள்ளத் தவறி விட்டோம்.

பாய்மரமும் இல்லை - சுழற் காற்றும் அடிக்கிறது - கலம் என்ன கதி? என்று கேட்கும் நிலை அல்லவா இது.

இந்த நிலையிலே, இடம் 15 தான் என்றாலும், கிடைத்த ஓட்டுகள் 16 இலட்சத்துக்குமேல் என்றால், தம்பி! அது உன் அறிவாற்றலின் விளைவு என்பதன்றி வேறென்ன? நாட்டு மக்களுக்கு, நாம் எடுத்துக்கூறி வருவது, புரிந்துவிட்டது என்பதுதானே இதன் பொருள்!

பெருமைக்கும் பூரிப்புக்கும் உரிய நிலைதான் இது - கேபேசுவோரும், உள்ளூர இதனை அறிவர்.

ஐயம் சிறிதேனும் உள்ளவர்களை, வேண்டுமானால், வெற்றிபெற்ற காங்கிரஸ்காரர் படும் வேதனையையும் பார்க்கச் சொல்லு. தோற்றாலும், முக மலர்ச்சியுடன் இருக்கும் நமது கழகத் தோழரையும் பார்த்திடச் சொல்!

தம்பி! கேரளத்தில் கம்யூனிஸ்டு அமைச்சரவை ஏற்பட்டிருக்கிறது. முற்போக்கு எண்ணம்கொண்டவர் அனைவரும் வாழ்த்தி வரவேற்கவேண்டிய மகத்தான நிகழ்ச்சி இது. வெற்றிபெற்று அமைச்சரவை அமைத்த கம்யூனிஸ்டுகளை வாழ்த்துவோம், தம்பி, உளமாற. அமைச்சர் அவைதான் கம்யூனிஸ்டுகள் அமைத்தனரே தவிர, ஆட்சி எம்மிடம்தான் என்று டில்லியில் காங்கிரஸ் தலைவர்கள் எக்காளமிடுகின்றனர்! வெட்கத்தையும் துக்கத்தையும் மறைத்துக் கொள்ள, இது அவர்களுக்கு உதவுகிறது.

சங்கரன் நம்பூதிரிபட் எனும் கம்யூனிஸ்டு தலைவர், அமைச்சர் அவை அமைத்திருக்கிறார்.

கேரளத்துக் கவர்னர் மாளிகையிலே மூவர்ணக் கொடி பறக்கிறது! செங்கொடியைச் சிறப்புடன் பறக்க விட்டிருக்கும் கம்யூனிஸ்டு கட்சி அமைச்சர் அவை அமைத்திருக்கிறது.

தம்பி! கேரளத்துக் காட்சியை மனக்கண்ணாலே காண்கிறாய் அல்லவா!

கேரளத்தில், கம்யூனிஸ்டு கட்சி பெற்றுள்ள ஓட்டுகள். 19,89,369! அமைச்சர் அவை அமைத்து அவனி எங்கும் கவனித்துப் பார்த்திடத்தக்க நிலையைப் பெற்றுவிட்டனர்.

தம்பி, பதினைந்தே இடங்களைத்தானே பெற்றார்கள் என்று நம்மைக் கேலி செய்கிறார்களல்லவா, இந்தக் கேலியைத் தாங்கிக்கொள்ளும் நாம் பதினாறு இலட்சம் ஓட்டுகளுக்கு மேல் பெற்றிருக்கிறோம்.

பத்தொன்பது இலட்சத்துக்கு ஒரு மந்திரிசபை அமைகிறது - கேரளத்தில்!

பதினாறு இலட்சம் நமக்கு - இடமோ பதினைந்துதான்!

என்னதான், ஏளனம் பேசட்டும், தம்பி! 19 இலட்சம் ஓட்டுகள் கேரளத்தில் அமைச்சர் அவை ஏற்பட உதவிற்று என்ற உண்மையை அறிந்த பிறகு, நாம் பெற்ற 16 இலட்சத்தை அலட்சியமாக, கேவலமாகப் பேசத்தோன்றாது, அரசியலில் பொறுப்பும், நேர்மையும் வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களுக்கு. மற்றவர்பற்றி நமக்கென்ன கவலை.

அண்ணன்,

7-4-57