அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


பகைவன் பணியலானான்
1

நம்பிக்கோட்டைச் செம்பிய மாதேவரின் மனக்குமுறல்
களம் காட்டும் காதைகள் பற்றி எழுத்தோவியங்கள்
தேவை
இலாபவேட்டை நோக்கத்தை விட்டுவிடுவதே நெறி
"எல்லாம் எல்லார்க்கும்' எனும் முறை அறிந்தவனே இறையவன்.
போர்க்காலத்தில் நாசவேலைக்காரருக்கு நாடு இடம் தரக்கூடாது.

தம்பி,

மன்னனாம் மன்னன்! மன்னன் மகனானதால் மன்னனானோன், திறமையாலா! நாட்டுக்கு ஒரு மன்னன் தேவை என்பதால், மன்னனாக்கப்பட்டோன், மன்னர்க்கு வேண்டிய அறிவாற்றல் இருப்பதனாலா! மணிமுடி ஒளி விடுகிறது! கண்கள்? துளியாவது வீரஒளி காண்கிறோமா? வீரம் இருந்தால்தானே! கண் வழியாக வழிகிறது மமதை! மன்னன் என்பதால் அதனைக் கெம்பீரம் என்கிறார்கள் - புலவர்கள்கூட. மார்பிலே புரள்கின்றன விதவிதமான மாலைகள்; ஒரு வெற்றி மாலையையாவது பெற்றதுண்டா அந்த மார்பு! களமே கண்டதில்லை, பெயர் மட்டும் வெற்றி பல கண்டோன்! - என்பதாக. பொருளற்ற பட்டம்! பொறுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது - மன்னன் ஆக்கப்பட்டுவிட்டானே, என்ன செய்வது! நாடு வாழ்ந்திட, தொழில் பெருகிட, செல்வம் மிகுந்திட, கலை வளர்ந்திட, செய்தது என்ன? உள்ளது உருக்குலைந்து போவதனைக் கூடத் தடுத்திட ஆற்றலற்று, உள்ளதில் உருசிமிக்கவை எனக்கே என்று கூறிடும் குரல் மட்டும் கொண்டவனாக உள்ளான் - கொற்றவன் என்பது பட்டம்! மற்றவர் அதனை மறுத்திட இயலுமா - அவனோ மன்னன்!

கோட்டைகள் கலனாகிக் கிடக்கின்றன, கொத்தளங்கள் செம்மையாக இல்லை; அரண்களிலே பிளவு. அகழிகள் தூர்ந்து போன நிலையில் - என்று படைத் தலைவர்கள் கூறுகின்றனர் - என்னிடம்! மன்னனிடம் கூறுவதுதானே என்கிறேன்; மன்னனிடமா என்று கேட்கிறார்கள்! இவன் ஒரு மன்னனா என்று கேட்பது போலிருக்கிறது அவர்களின் முகக்குறி! இப்படி ஒரு மன்னன்! என்று எண்ணி எண்ணி எரிச்சல்பட வேண்டி இருக்கிறது.

வரி கேட்டுப் பெறுவதிலே மட்டும், வல்லவனாக இருக்கிறான் - தொட்டதெற்கெல்லாம் வரி! - தொடர்ந்து வரி! - தொல்லைதரும் முறையிலே வரி! இவ்வளவா என்று கேட்போரும், எமக்கா என்று கவலைப்படுவோரும், எங்கிருந்து கட்டுவது என்று ஏக்கம் கொள்வோரும் நிரம்ப! பலர் என்னிடம் வந்து முறையிடுகிறார்கள்! என்னிடம்! மன்னனிடம் முறையிட வேண்டும், ஆனால் என்னிடம் முறையிடுகிறார்கள்! நீங்கள் சொல்லக்கூடாதா, நீங்களெல்லாந்தானே சொல்ல வேண்டும், நீங்களெல்லாம் சொன்னால் கூடவா கேட்கமாட்டார் என்று கூறுகிறார்கள்! சொல்வதைப் புரிந்து கொள்கிற திறமை கொண்டவன் மன்னனாக இருப்பதாக எண்ணிக் கொண்டு! சொல்வதைப் புரிந்து கொள்ளும் திறமை இருக்கிறதா என்பது கூட இருக்கட்டும் ஒருபுறம் - தெளிவளிக்க முடியும் எவ்வளவு மந்த மதியினனுக்கும் - ஆனால், இந்த மன்னன், எதையாவது சொல்ல இடம் கொடுத்தால்தானே எதையாவது சொல்லத் தொடங்கிய உடன், கரம் காட்டுகிறான் நிறுத்து என்பதாக! கனைக்கிறான், கண்களை உருட்டுகிறான், எல்லாம் தெரியும் என்கிறான்! சொல்லாததற்கு முன்பாகவே, எல்லாம் தெரியும் என்கிறான்! என்ன செய்வது! எமது மன்னன் என்று நானுமல்லவா மற்றவர்களுடன் சேர்ந்து கூறவேண்டி இருக்கிறது, இத்தனை மண்டைக்கனம் மிகுந்தவனை.

மன்னனின் முறையை மக்களுக்கு ஏற்றதாக, அவர் நலன் காத்திடத்தக்கதாக மாற்றி அமைக்க வேண்டும் என்று கூறிடவே துணிவு வரவில்லை, பலருக்கு; மெள்ள மெள்ளத்தான் அந்தத் துணிவு பிறந்தது; வியந்திடத்தக்க அளவு வளர்ந்தது. ஆயினும் என்ன? கலக்கம் கொண்டானோ? இல்லையே! கவலைப்படு வதாகக்கூடக் காட்டிக் கொள்ளவில்லை. எவரெவர் எதிர்ப்பு பேசுகிறார்கள் என்று கண்டறியச் செய்து, ஆசாபாசத்திற்கு அடிமைப்படக் கூடியவர்களை இழுத்துக் கொண்டு விட்டான். எக்காளமிட்டுக் கொண்டு வந்ததுகளெல்லாம் இளித்துக் கிடக்கின்றன! மன்னன் மன்னன்தான்! என்று தத்துவம் பேசுகின்றன. இவ்விதமான இயல்பு இருந்திடும் நாட்களில் மன்னன் மேற்கொண்டுள்ள முறைகளை மாற்றிடும் முயற்சியில் வெற்றி எங்ஙனம் கிடைத்திடும், முறை மாற வேண்டும் என்று என்னிடம் முறையிடுகிறார்கள். அனைவரும் சேர்ந்து பணியாற்றினால் மட்டுமே, முறையினை மாற்ற முடியும் என்று கூறி அழைத்தாலோ, அங்காடி வேலை மும்முரம் என்கிறான் ஒருவன்; அரண்மனையின் அலங்கார வேலைக்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுவிட்டேன், என் செய்வது என்கிறான் மற்றொருவன்; புதிய நூலொன்றினை அரங்கேற்ற அரச மண்டபம் தந்திருக்கிறார்கள், அந்நிலையின் நான் எப்படிச் சேர முடியும் என்கிறார் இன்னொருவர் - ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு காரணம்!! மொத்தத்தில், தயக்கம், தடுமாற்றம்!! குறை கூற மட்டும் தயக்கமில்லை - என்னிடம் வந்து பேசுகிறார்கள்.

ஆத்திரம் ஆத்திரமாகப் பேசினார், நாடே கெடும்! வாழ்வே பாழ்படும்! என்றெல்லாம் அரிமானூரார்; ஆச்சரியப்பட்டுப் போனேன்! அடுத்த திங்கள் பார்க்கிறேன். அரசனுடைய அரண்மனைக் காவற்படைக்குக் கௌரவ தளபதியாகி விட்டிருக்கிறார்! இவர் போன்றாரை நம்பி என்ன செய்திட முடியும்!!

நாலு இடத்தில் சற்றுக் கொதிப்புடன் பேசினால் போதும், அவர்களை நாடி வருகிறது பட்டம், பதவி, செல்வம், சீர்! உடனே அவர்களுக்கு "ராஜபக்தி' பொங்கி வழிகிறது, நான் என்ன செய்ய!!

கீர்த்தி மிக்க மரபினர்! அப்பழுக்கற்ற இயல்பினர்! பலருக்குப் பரிவு காட்டி வாழ்வு அளித்தவர்! களம் பல கண்டவர்! எவர் கரத்தையும் நம்பிப் பிழைத்திட வேண்டிய நிலையினர் அல்ல! ஆடம்பர வாழ்க்கை தேடி அலைபவரல்ல! அடிவருடிகளைத் தேடிக் கொள்பவருமல்ல! இளித்துக் கிடந்திட இசைபவருமல்ல. அரசர் அவையிலே இடம் கேட்பவரும் அல்ல; ஆங்கு இடம் பெற்றாரிடம் பொறாமை கொண்டவருமல்ல. உழவும் தொழிலும் அறிந்தவர்; உள்ளது போதும் என்ற நினைப்பினர்; ஊர் சீர்பட ஏதேனும் செய்திட வேண்டு மென்பதிலே பெருவிருப்பம் கொண்டவர். அதற்குத் தக்கதாக அரசு மாற வேண்டும், மாற்றப்பட வேண்டும் என்பதிலே, மிகுந்த நாட்டம் கொண்டவர் நம்பிக்கோட்டைச் செம்பிய மாதேவர். அவருடைய மனக் குமுறலையே மேலே காண்கின்றோம், எனினும். . .

இளவரசன் தொட்டால், பூங்கொடி பொற்கொடி யாகும் என்பதனைக் கூறுவதுதானே. . .

கூற இடம் கொடுத்தால்தானே அந்தக் குலக்கொடி. . . இழுத்துவரச் சொல்லி எட்டு பேர்களை இப்போதே அனுப்புக! என் கட்டளை! இனி அந்தப் பெண்ணிடம், கொஞ்சப் போவதில்லை, கெஞ்சிடப் போவதுமில்லை! மஞ்சம் வந்தாக வேண்டும்! மன்னன் மகனுக்கு விருந்தாக வேண்டும்! இது அரசனாகப் போகின்றவன் ஆணை! மந்திரியாக வேண்டும் என்ற விருப்பம் இருப்பின், இன்றிரவே, இந்த என் ஆணையை நிறைவேற்றிடுக!

இவ்விதம் கெடுமதி கொண்டு களியாட்டம் ஆடிடும் போக்கினன், இளவரசன். ஆனால், அத்தகையவனும். . .

உழைத்து உழைத்து உருக்குலைந்து போகிறோம், மாடாக உழைத்து ஓடாகிக் போகிறோம், ஏன் பிறந்தோம் என்ற ஏக்கம் தாக்கிடத் தத்தளிக்கிறோம் என்று கதறிக் கிடந்திடும் நிலையில் பாட்டாளி! ஆனால் அவனும். . .

நாட்டைத் தாக்கிடப் பகைவன் வந்திடும்போது,

எல்லையைத் தாண்டி எதிரிப் படை நாட்டுக்குள்ளே பாய்ந்திடும்போது,

கோட்டைகளை இடித்திட, கொத்தளங்களைப் பிளந்திட, மாற்றான் படை வருகிறபோது,

அடித்து நொறுக்குகிறார்கள், அழிவை ஏவு கிறார்கள், அடிமை கொள்ள வருகின்றார்கள் அன்னிய நாட்டினர் நம் நாடு நோக்கி என்ற சேதி செந்தீயெனக் கிளம்பிடும்போது,

எடடா வாளினை! தொடடா போரினை! தாக்கிடக் கிளம்புக! தருக்கரைச் சாடுக! போரிட வந்திடுக! புயலெனக் கிளம்பிடுக! - என்று முழக்க மெழுப்பி, திரண்டெழுந்து சென்று, பகைப் படையினைத் தாக்கி, இன்னுயிர் இழந்திடவும் துணிந்து போரிட்டு, நாட்டைக் காத்திட, மானம் காத்திடவே முனைந்து நிற்பர்!

காவியம் புனைந்திட, ஓவியம் தீட்டிட, கட்டிப் பொன்னைப் பெற்றுக் குவித்திட, காதலின்பத்தில் திளைத்திட இதுவல்ல நேரம்! எதிரியின் மார்புக்கு நேராக நம் ஈட்டியினைப் பாய்ச்சிட வேண்டிய நேரமிது! வேறு எது குறித்தும் நினைத்திட, கதைத்திட நேரமல்ல இது! எதிரியின் கால் நம் நாட்டு மண்ணில் பட்டுவிட்டது! நாட்டின் மாண்புக்குப் பங்கம் ஏற்பட்டுவிட்டது, பழி துடைப்போம்! பகை முடிப்போம்! என்று வீரவுரையாற்றி வாளொடு கிளம்புவர், வென்று திரும்புவர், பலர் வெஞ்சமரில் வீழ்ந்து படுவர். விந்தையா? வீரத்தின் இயல்பு!!

நாடு காத்திடும் நற்பண்பு கொண்டோர், நாட்டுக்கோர் ஆபத்து என்றதும், தத்தமது மனக்குமுறல், உல்லாச இயல்பு, சலிப்பு, தவிப்பு எனும் எதனையும் மறந்திடுவர்; நாட்டுக்கு வந்துற்ற ஆபத்தினைப் போக்கிடத் துடிதுடித் தெழுவர், வீரப் போரிடுவர்.

அன்றோர் நாள் இருந்த இயல்பு மட்டுமல்ல இது, என்றும் எழுந்திடும் இயல்பு!

இன்று நாட்டுக்கு ஆபத்து என்ற நிலை பிறந்ததும், ஆட்சி முறை தன்னில் மாற்றம் பல காண எண்ணி "மக்கள் மன்றமதில் பணியாற்றிடும் கட்சியினர் அனைவருமே இதற்கு இது நேரமல்ல! எதிரி நுழைந்துள்ளான் என்றுணர்ந்து ஆர்த்தெழுந் தார், பொங்குமாங் கடல்போல! புலிபோலப் பாய்கின்றார், புல்லர்களைச் சாடுகின்றார். புவியுள்ளோர் புதுமை இது! புதுமை இது! எனப் புகல்கின்றார்!

பிற நாடுகளிலே நடைபெற்ற போர் குறித்து, விவரம் பல கொண்ட விளக்க ஏடுகள் பல உண்டு. படைத்தலைவர் பற்பலரின் திறமைதனைக் காட்டிடும் காட்சிகள் பலவற்றைப் படம் பிடித்துக் காட்டுதல்போல், வரலாற்றில் இணைந்துள்ளார். படித்திடும் அந்நாட்டு மக்களிடம் வீரம் கொழுந்துவிட்டுக் கிளம்பிடவும், நாட்டைக் காத்திட எத்தனை எத்தனை வீரர்கள் குருதியினைக் கொட்டினர் என்ற சேதி அறிந்ததனால் எழுச்சி மிக்க கொண்டிடவும் வாய்ப்பு நிரம்பஉண்டு படைத்தலைவர் குறிப்புகளும், களம் அமைந்த விவரமதும், போர்மூண்ட வகையதுவும், மூண்ட போரில் முன்னணியின் செயல் முறையும் துணையணியின் செயல்முறையும், கருவிகளின் வகையும், அளவும், இன்னபிற விவரங்கள் தெரிந்திடவும், தெரிவதனால் போர் முறைகள் பல பற்றி அறிந்திடவும், அறிவதனால் ஆற்றல் மிகுந்திடவும் வழி உண்டு; மற்றைய நாட்டில்.

மாவீரன், மண்டலம் பல வென்ற தீரன், எந்நாடு சென்றாலும், அதனைத் தன்நாடு ஆக்கிக் கொண்டோன் என்றெல்லாம் புகழ்பெற்ற ஜூலியஸ்சீசர், களந்தன்னில் கடும்போரிட்டு வந்த காலை, ஒவ்வொரு நாளிரவும் அன்று நடந்ததனை விளக்கமாகக் குறிப்பெழுதி வைத்தனனாம்; அந்தக் குறிப்பு, பிறகோர் ஏடாகி, போர்முறை பயில்வோர்க்கு அருமை மிகு நூலாகி நின்றது.

வேறுபல போர்த்தலைவர் ஆற்றிய வீரச் செயல்கள், ஏடாகி நாடதனின் நற்புகழை விளக்கிடவும், உலகோர் கற்றுப் புத்தார்வம் பெற்றிடவும் வாய்ப்பளித்துள்ளன.

போர்முறை பற்றி மட்டுமன்றி, களந்தன்னில் வெற்றி கிட்டியதற்கும், சில வேளை தோல்விவந்து தாக்கியதற்கும் விளக்கமாய்க் காரணங்கள் தந்துள்ளார் ஏடுகளில்.

எத்தனையோ வீரப்போர் நடத்தினோர் நம் தமிழர்! மன்னர்கள் ஆண்டபோது!!

கங்கை கொண்டானென்றும் கடாரம் வென்றானென்றும், ஈழம் சென்றானென்றும் இமயமதில் கொடி பொறித்தா னென்றும், வாதாபிப்போரதனில் வாகை சூடினானென்றும், எத்தனையோ உண்டிங்கு; எல்லாம் கதையாக!

சிற்சிலவற்றினை உள்ளடக்கிச் செந்தமிழின் சுவை கூட்டத் தந்துள்ளார் இலக்கியத்தில் எனினும் விவரம் விளக்க, போர் முறையின் வகை பற்றிய தகவல் மிகக் கொண்ட ஏடாக்கித் தரவில்லை, நாடதிர நடாத்திய போர் பற்றி, குறிப்பெழுதும் வழக்கமில்லை, ஏடு கிடைத்திடவில்லை, கற்பனை நயத்துடனே க-ங்கத்துப்பரணி உண்டு; சுவையும் பயனும் அதில் மிகுதி, ஐயமில்லை; ஆயினும், வரலாற்று ஏடல்ல, போர்வகை அறிந்து பயன்பெற வழிகாட்ட வல்லதா. ஓசை நயத்தாலேயே போர்க்களம் காட்டுகின்றார் புலவர் பரணிதனில்! ஆம்! படித்தோர் எழுச்சி கொள்வர்!! ஆயினும், களந்தன்னில் இன்னபடை இப்புறத்தில் இன்னவிதம் தாக்கிடின், எதிர்த்திட வழி இஃது என்று காட்டும் கண்ணாடியாகிடுமோ! இல்லை! கவிதைச் சிறப்புண்டு, சுவையுண்டு!!

போர்வெறுத்த இயல்பதனால், போரே பொல்லாங்கு அதனைத் தவிர்த்திடலே முறை எனும் நெறியதனால், போர் பற்றி ஏடெழுதப் புலவோர் மறுத்தனர் என்று கூறுவரேல், உண்மை அதில் ஓரளவு உண்டென்போம், எனினும், போர் பற்றி மட்டுமல்ல, மற்ற பொன்னான பலபற்றியும் இதே போக்கினிலே இருந்ததனை மறந்திட இயலாதே. இம்மன்னன் மகன் இன்னான், இவ்வூரில் இடம் பெற்றான், இத்தனை ஆண்டுகளிருந்திட்டான், இந்நிறத்தான், இன்ன இயல்புடையான், இவனுக்குற்ற நண்பரிவர், இவன் நாட்டம் இதில் என்பன போன்றவையும் எடுத்துரைக்க ஏடில்லை எங்கெங்கோ தேடி, கல்வெட்டு காண்கின்றார்; இதற்கு இது பொருள் என்றுரைப்பார் ஒருவர்; இல்லை! பொருள் இஃதல்ல! என்று கூறி வேறொருவர் மறுத்திடுவார். இரு கருத்தும் கொண்டு குழம்பிடுவார் படித்திடுவோர், இது நிலைமை. எனவேதான், வீரம் செறிந்திருந்த நம் நாட்டின் புகழ்க்காதை முழு அளவில் தெரிந்திட வழி இல்லை, மற்றைய நாட்டில் நிலை வேறு.