அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


பன்னீர் தெளித்தாலும். . .
1

ஓ. என்ரியின் கதை கொடுமையிலும் கொடுமை
உணவுப் பொருள்களின் விலை ஏற்றம்
விலைவாசி ஏற்றத்துக்குக் கறுப்புப் பணமே மூல காரணம்
உணவுத்துறையின் மோச நிலைக்கு முழுப்பொறுப்பு காங்கிரஸ் ஆட்சியே!

தம்பி!

ஒரு சீமானின் மகனைப் பற்றிய கதை கூறப்போகிறேன் - ஏழைகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைப் பற்றி அறிந்து, உள்ளம் உருகி, தக்கதோர் பரிகாரம் தேடித் தந்திட வேண்டும் என்ற உள்ளத் துடிப்புக் கொண்ட வாலிபன் பற்றிய கதை.

தகப்பனார் திரட்டிய திரண்ட செல்வத்துக்கு அதிபதியான இந்த மகன், அவருடைய கல்லறையில் கண்ணீர் உகுத்தான்; சொத்தின் அளவுபற்றிக் குடும்ப வழக்கறிஞர் கூறிய விவரம் கேட்டு, வியப்பல்ல, அதிர்ச்சியே அடைந்தான்; மொத்தத்தில் 2,000,000 டாலர்களை வைத்துவிட்டுச் சென்றார் அந்தச் சீமான்.

ரொட்டிக்குத் தேவைப்படும் கோதுமை வியாபாரத்திலே குவித்ததே அவ்வளவு செல்வமும்; கோதுமை வியாபாரம் என்றால், பெரிய பெரிய கிடங்குகளைப் பல இடத்திலே அமைத்துக்கொண்டு, கோதுமையை மூட்டை மூட்டையாக அடைத்து வைத்துக்கொண்டு பலருக்கும் விற்பனை செய்தது என்பதல்ல பொருள். கோதுமை விளைந்து அறுவடையாகிச் சந்தைக்கு வந்து விலையாகு முன்பே, வயலில் கோதுமைக் கதிர்கள் காற்றினால் அசைந்தாடிக் கொண்டிருக்கும்போதே, இன்ன விலைக்கு, இத்தனை அளவு கோதுமையை, இன்ன மாதத்தில் வாங்கிக்கொள்கிறேன் அல்லது விற்கிறேன் என்று "பேரம்' பேசி வைத்துக்கொண்டு, அதிலே இலாபம் சம்பாதிக்கும் முறை.

ஏழை எளியோருக்குத் தேவை ரொட்டிதானே! தேவை மட்டுமா? அதுதானே அவர்களால் பெறமுடியும்; மற்ற மற்ற உயர்ந்த விலையுள்ள உணவுப் பண்டங்களை அவர்கள் எங்கே வாங்கப் போகிறார்கள்? என்ன விலை ஏறினாலும், விலை ஏற்றம் எத்தனை தாறுமாறாக இருப்பினும், ரொட்டி வாங்கித்தானே ஆகவேண்டும். போகப் பொருளாக இருப்பின், விலை ஏறிவிட்டது என்று தெரிகிறபோது வாங்காமல் இருந்துவிடலாம்! இது வயிற்றுக்குத் தேவையான பொருள் - ஏழைகள் பெற்றே தீரவேண்டிய ஒரே பொருள்; எனவே, அநியாய விலையாக இருக்கிறதே என்று அழுகுர-ற் கூறிக்கொண்டாகிலும் வாங்கித் தீரவேண்டிய பொருள்.

இந்தப் பொருளை, இலாபவேட்டைப் பொருளாக்கினான் சீமான்; ரொட்டியின் விலை ஏறிற்று; சீமானுக்குச் செல்வம் குவிந்தது; ஏழைகள் கைபிசைந்துகொண்டனர்; அந்த ஏழைகளுக்காக ரொட்டிக் கிடங்கு - ரொட்டிக் கடை நடத்திய நடுத்தர வகுப்பினர் நொடித்துப் போயினர். சீமானோ சில ஆண்டுகளில் பெரும் பொருள் குவித்துக்கொண்டான்; களவாடி அல்ல, கள்ளக் கையொப்பமிட்டு அல்ல; புரட்டு புனைசுருட்டால் அல்ல, வியாபார மூலம்!

கஷ்டப்பட்டுச் சேர்த்தான் இத்தனை செல்வம் என்றோ, அதிர்ஷ்ட தேவதை அணைத்துக்கொண்டாள். அவன் சீமானானான் என்றோ தானே எவரும் கூறுவர். உலக வாடிக்கை வேறாகவா இருக்கிறது?

மகன், திரண்ட செல்வத்தையும் பெற்றான், அந்தச் செல்வம் எப்படித் திரட்டப்பட்டது என்ற உண்மையையும் அறிந்து கொண்டான். அவன் மனம் என்னவோ போலாகிவிட்டது, ஆயிரமாயிரம் ஏழை எளியோர்களின் வயிற்றில் அடித்தல்லவா அப்பா இவ்வளவு பணம் சேர்த்தார். அந்தப் பணத்துக்கல்லவா நாம் அதிபதியானோம். ஐயோ! பாவமே! எத்தனை எத்தனை ஏழைகள், அப்பாவின் வியாபார முறை காரணமாக கோதுமை விலை ஏறிவிட்டதால், குமுறினரோ, கலங்கினரோ, கதறினரோ, துடித்தனரோ, துவண்டனரோ! அவர்களின் கண்ணீர் அல்லவா, என் கரத்தில் விளையாடும் காசுகளாகிவிட்டன. இது அநீதி! இது இரக்கமற்ற செயல்! ஏழை இம்சிக்கப்பட்டிருக்கிறான், அதன் விளைவாகக் கிடைத்த பணம் என்னிடம் குவிந்திருக்கிறது. நான் இதயமுள்ளவன்! ஏழைக்கு இரக்கம் காட்டும் எண்ணம் கொண்டவன்! என்னால் கூடுமான மட்டும், ஏழைகளுக்கு இதம் செய்வேன்; அப்பாவின் பேராசையால் அலைக்கழிக்கப் பட்டவர்களை நான் கை தூக்கிவிடுவேன்; என்னிடம் உள்ள செல்வத்தைக்கொண்டு இந்தத் திருத்தொண்டு புரிவேன் என்று தீர்மானித்தான்.

பள்ளியில் அவனுடன் படித்த ஒரு நண்பன், பொருளாதாரக் கருத்துக்களையும் சமுதாயத் திருத்தத் தத்துவங்களையும் நன்றாக அறிந்திருந்தான். கல்லூரியில் அவன் பயிலச் செல்லவில்லை; தகப்பனாரின் நகைக் கடையில் வேலை தேடிக்கொண்டான்; கடிகாரம் பழுது பார்த்துத் தரும் நுட்பமான தொழிலிலும் பழகிக் கொண்டிருந்தான். அவனைத் தேடி வந்தான், சித்தம் உருகிய நிலையினனான சீமான் மகன். விவரம் கூறினான்.

"ரொட்டிக்காக அந்த ஏழைகள் அதிகமாகக் கொடுத்த பணத்தை அவர்களிடம் திருப்பித் தர விரும்புகிறேன். உள்ளம் கொதிக்கிறது உண்மை அறிந்த பிறகு. ஏழையிடம் அநியாயமாகப் பறித்ததைத் திருப்பித் தந்தால்தான் என் மனம் நிம்மதியாகும். இதை எப்படிச் செய்யலாம்; ஒரு யோசனை சொல்லு'' என்று கேட்டான் சீமான் மகன்.

இலட்சியங்களைக் கற்றிருந்த அவன் நண்பன், தீப்பொறி பறக்கும் கண்ணினனானான்; ஏற இறங்கப் பார்த்தான். சீமான் மகனின் கரத்தை இழுத்துப்பிடித்துக்கொண்டு கூறினான்.

"ஏழைக்கு இதம் செய்ய எண்ணுகிறாயா? அது உன்னால் முடியாது. உன்போல அநியாய வழிகளிலே பணம் திரட்டும் பேர்வழிகளுக்கு என்ன தண்டனை தரப்படுகிறது தெரியுமா! நீங்களாக உண்மையை உணர்ந்து, உள்ளம் உருகி, அநீதியைத் துடைத்து இதம் செய்ய வேண்டும் என்று நல்லெண்ணத் துடிப்புக் கொண்டாலும், இதம் செய்யும் ஆற்றலற்றுப்போனவர்களாகி விடுகிறீர்கள். உன் நோக்கம் சிறந்தது. ஆனால், வஞ்சிக்கப்பட்ட, இம்சிக்கப்பட்ட ஏழைக்கு இதம் செய்ய உன்னால் முடியாது; காலம் கடந்துவிட்டது; விஷயம் முற்றிவிட்டது; ஏழையின் வாழ்வு பாழ்பட்டுவிட்டது; உன்னால் விளக்கேற்ற முடியாது'' என்றான்.

சீமான் மகன், "இம்சிக்கப்பட்ட ஏழைகள் அனைவரையும் தேடிக் கண்டுபிடித்து, ஒவ்வொருவருக்கும் இதம் செய்திட முடியாதுதான். ஆனால், என்னால் இயன்ற மட்டும், என்னிடம் உள்ள செல்வத்தை இதற்குப் பயன்படுத்துவேன்'' என்றான்.

அந்த நண்பன், அக்கறையற்ற குரலில், "எத்தனையோ தர்ம ஸ்தாபனங்கள் உள்ளனவே, உன் பணத்தைப் பெற'' என்றான்.

சீமான் மகனோ, "கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைக்கும் கதை அல்லவோ அது. வேண்டாம். நான் ரொட்டி வாங்கிக் கஷ்டநஷ்டப்பட்டவர்களுக்கே உதவி செய்ய விரும்புகிறேன்'' என்றான்.

"கோதுமையை உன் தகப்பனார் மடக்கிப் போட்டு விலை ஏற்றத்தை மூட்டிவிட்டாரே அதன் காரணமாக, ஏழைகள் உணவு பெறுவதிலே, ஏற்பட்ட நஷ்டத் தொகையைத் திருப்பித்தர, எவ்வளவு பணம் தேவைப்படும் தெரியுமா?'' என்று கேட்டான். "எனக்குத் தெரியாது. ஆனால் என்னிடம் உள்ள பணம் 2,000,000 டாலர்கள்'' என்றான் சீமான் மகன். "கோடி டாலர்கள் இருந்தாலும் போதாதப்பா, கொடுமைக்கு ஆளான மக்களுக்கு இதம் செய்ய; நியாயம் வழங்க. அநியாய வழியில் திரட்டப்படும் பணத்தால் முளைத்திடும் ஆயிரத்தெட்டுக் கேடுகளை நீ என்ன அறிவாய்!! ஏழையிடம் கசக்கிப் பிழிந்து வாங்கப்பட்ட ஒரு காசு, ஓராயிரம் தொல்லையை ஏழைக்குத் தருகிறது. உன்னால் முடியாது, தந்தையின் வாணிப முறையின் காரணமாகக் கொடுமைக்கு ஆளான ஒருவருக்குக்கூட இதம் செய்ய'' என்றுரைத்தான். சீமான் மகனுக்குப் புரியவுமில்லை; இந்தப் பேச்சு பொருளுள்ளதாகவும் தெரியவில்லை.

"முடியும் நண்பா! முணுமுணுக்காமல், விவரம் கூறு.'' என்று கேட்டான், "கூறவா! கூறுகிறேன் கேளப்பா, கருணாகரா! அதோ அடுத்த தெருவில் ஒருவன் ரொட்டிக் கடை வைத்திருந்தான்; எனக்குத் தெரியும். பரம ஏழைகள் அந்தக் கடையில் ரொட்டி வாங்குபவர்கள். விலையைத்தான் ஏற்றிவிட்டாரே உன் தகப்பனார்; இவன் ரொட்டியின் விலையை ஏற்றினான்; ஏழைகளால் அந்த விலை கொடுத்து வாங்க முடியவில்லை, கடை தூங்கிற்று; அவன் கடையில் போட்டிருந்த ஆயிரம் டாலர் அடியோடு நஷ்டமாயிற்று. அவனிடம் இருந்த மொத்த ஆஸ்தியே அதுதான். அவ்வளவும் போய்விட்டது'' என்றான்.

அழுத்தந்திருத்தமாகப் பேசலானான் சீமான் மகன், "அப்படிச் சொல்லு விவரத்தை! வா! உடனே போய், அந்த கடைக்காரன் இழந்த ஆயிரம் டாலரைத் திருப்பிக் கொடுத்து அவனுக்கு ஒரு புதிய ரொட்டிக் கடையும் வைத்துக் கொடுக்கலாம்'' என்றான். "எழுதப்பா, செக்! ஆயிரம் டாலருக்கு மட்டுமல்ல; அவன் நஷ்டமடைந்ததால் ஏற்பட்ட விபரீத விளைவுகளின் காரணமாக ஏற்பட்ட நஷ்டங்கள் எல்லாவற்றுக்கும், செக் எழுதிக் கொடு! ஐம்பதாயிரம் டாலர் செக் ஒன்று கொடு! ஏனென்கிறாயா? கடை திவாலாயிற்றா, அவன் அதன் காரணமாகக் குழம்பினான், பித்துப் பிடித்துவிட்டது, அவன் இருந்துவந்த இடத்தைவிட்டு அவனை வெளியேறச் சொன்னார்கள், அவன் அந்தக் கட்டடத்துக்குத் தீயிட்டான். ஐம்பதாயிரம் டாலர் பாழ்! அவனோ பித்தர்விடுதியில் அடைபட்டான், செத்தும் போனான். அடுத்த செக் பத்தாயிரம் டாலருக்கு. ஏனா? அவன் மகன், தகப்பனை இழந்ததால் தறுதலையானான்; கெட்டலைந்தான்; அவன்மீது ஒரு கொலைக் குற்றம்; மூன்று ஆண்டுகள் வழக்கு; அதற்கான செலவு நீதித்துறைக்கு, பத்தாயிரம் டாலர். அதையும் நீதானே கொடுக்க வேண்டும்; கொடு.''

"சர்க்காருக்கான செலவு இருக்கட்டும்; நமது உதவி தேவையில்லை சர்க்காருக்கு; ரொட்டிக் கடைக்கு ஏற்பட்ட நஷ்டம் வரையில் கொடுத்திடலாம், முடியும்'' என்றான் சீமான் மகன்.

"விலை ஏற்றத்தை மூட்டிவிட்டதனால் ஏற்பட்ட விபரீத விளைவுகளில், இன்னொன்று பாக்கி இருக்கிறதே! காட்டுகிறேன் வா!'' என்று கூறி அந்த நண்பன் சீமான் மகனை அழைத்துக் கொண்டு, ஒரு முட்டுச் சந்திலிருந்த ஒரு நிலையத்துக்குள் சென்று, அங்கு, சட்டை தைத்துக்கொண்டிருந்த இளமங்கையைக் காட்டினான். அவள் ஒரு புன்னகை உதிர்த்தாள். "இன்று நாலு டாலர் கிடைக்கும் எனக்கு'' என்றாள் அந்தப் பெண். நண்பன், சீமான் மகனை அவளுக்கு அறிமுகம் செய்து வைத்தான்.

"ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கோதுமை விலை ஏறிவிட்டதே; அந்த விலை ஏற்றத்தை மூட்டியவரின் மகன் இந்த இளைஞன். தன் தகப்பனாரின் செயலால் சீரழிக்கப்பட்டவர்களுக்கு ஏதாகிலும் இதம் செய்ய வேண்டுமென விரும்பி வந்திருக்கிறார்'' என்றான். அந்தப் பெண்ணின் புன்னகை மடிந்தது; முகம் கடுகடுத்தது; எழுந்தாள், சீமான் மகனை நோக்கி வெளியோ போ! என்று கூவவில்லை, கையால் குறி காட்டியபடி நின்றாள்.

தம்பி! கதையை இந்த அளவுடன் நிறுத்திவிட எண்ணுகிறேன். ஏனெனில், என் நோக்கம், இரு இளைஞர்கள், ஒரு மங்கை, இவர்கட்கு இடையிலே ஏற்பட்ட தொடர்பு பற்றிய விவரம் கூறுவது அல்ல. உணவுப் பண்டங்களின் விலை ஏற்றம், சீமான்களின் வாணிப முறையின் விளைவு என்பதைக் காட்டவும், அந்த விலை ஏற்றத்தால் தாக்கப்படும் ஏழைகளுக்கு ஏற்படும் இன்னல், அதிக விலை கொடுத்ததால் ஏற்பட்ட பண நஷ்டம் மட்டுமல்ல விபரீதமான பல விளைவுகள் ஏற்பட்டுவிடுகின்றன என்பதையும் எடுத்துக்காட்டவே இந்தக் கதையைக் கூறினேன். கதையும் என் கற்பனையில் உதித்தது அல்ல. அல்லற்படுவோர் களின் உள்ளத்தைப் படம் பிடித்துக் காட்டத்தக்க விதமான சிறு கதைகளைத் தீட்டிய வித்தகர் ஓ. என்ரியின் கற்பனை; நான் அதிலிருந்து கருத்தினை எடுத்து என் வழியில் எழுதித் தந்திருக்கிறேள்.

ஓ. என்ரி, சிறுகதை தீட்டுவதிலே வல்லவர் மட்டுமல்ல; அதிலே விந்தை பல இழைத்தளிப்பவர், இந்தக் கதையிலும், விலைவாசி விஷம்போல் ஏறுவதால் - ஏற்றிவிடப்படுவதால் - விளையும் விபரீதம்பற்றிக் கூறிவிட்டு, ஒரு விந்தையை இழைத்திருக்கிறார். இரக்க மனம் படைத்த சீமான் மகன், இலட்சியம் அறிந்த ஒரு வா-பன், கொடுமை கொட்டியதால் கொதிப்படைந்த ஒரு குமரி! இந்த மூன்று பேர்களை வைத்துக் கொண்டு, உணவுப் பொருளின் விலையை, இலாபவேட்டை நோக்கம்கொண்ட வணிகர்கள் விஷம்போல ஏற்றிவிட்டு விடுவதனால், ஏற்படும் விளைவுகளை, நாம் உணரவும் உருகவும் செய்துவிடுகிறார்.

பிறகு? பிறகு? என்ன செய்தான் அந்தச் சீமான் மகன்? அந்தக் குமரி? என்று கேட்கிறாய். ஆவலாகத்தான் இருக்கும், அறிகிறேன், ஓ. என்ரியின் முறை என்ன தெரியுமா, தம்பி! சிறு கதையின் கடைசி இரண்டொரு வரிகளில், யாரும் எதிர்பார்க்காத ஒரு திருப்பம் அளித்து முடிப்பார்! அந்த இரண்டொரு வரிகளில், ஒரு பெரிய தத்துவமே கிடைத்திடும்.

சே! இந்த ஏழைகளுக்கே ஆணவம் அதிகம்! - என்று வெகுண்டுரைத்து விட்டுச் சென்றான் சீமான் மகன் என்று முடித்திடலாம், கதையை.

இலட்சியமறிந்த இளைஞன், சீமான் மகனின் கண்கள் தளும்பக்கண்டு, "பாவம்! இவன் நல்லவன். இதயம் கொண்டவன். இவனை வெறுக்கக்கூடாது. தகப்பனார் செய்துவிட்டுப்போன கொடுமையை எண்ணி இவன் உள்ளம் உருகிக்கிடக்கிறான்'' என்று பரிந்து பேசினான்; மூவரும் நண்பர்களாயினர் என்று கதையை முடித்திருக்கலாம்.

"என்ன காரியம் செய்துவிட்டோம். உதவி செய்ய வந்த உத்தமனை உதாசீனம் செய்துவிட்டோமே! அவன் உள்ளம் என்ன பாடுபட்டிருக்குமோ?'' என்று எண்ணிய பெண், அவனிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டாள் என்று முடித்திருக்கலாம். பலவிதமான முடிவுகள். தம்பி! உனக்கும் எனக்கும் தோன்றும். ஆனால் விந்தையான - உலக நடை முறையை விளக்கிடத்தக்க - முடிவு என்னவாக இருக்க முடியும் என்பதைக் கண்டறிந்து கூறிடும் திறன் ஓ. என்ரிக்குத்தான் உண்டு.

இந்தக் கதையின் மூலம் என்ன தெரிவிக்க விரும்புகிறார் ஓ. என்ரி?

சீமான் மகனின் மனமும் திருந்திவிடும்; இம்சை செய்யப் பட்டவர்களுக்கு இதம் செய்திடுவான் என்ற கருணை பற்றிய விளக்கமளிக்க அல்ல அவர் விரும்பியது.

ஏழைக்கு இழைக்கப்படும் இன்னலுக்கு. இன்னல் இழைத்தவர்களே பிறகோர் நாள் இதம் செய்திட விரும்பி முன்வந்தாலும், நொந்துபோன ஏழையின் வாழ்வை, இரக்கம், கருணை, உதவி மூலம் மலரச் செய்திட முடியாது. கசங்கிய மலர், மீண்டும் தண்ணீருக்குப் பதில் பன்னீர் தெளித்தாலும், எழில் பெற முடிகிறதா? அதுபோலத்தான்.

இந்தக் கருத்தை விளக்கவே அவர் கதை புனைந்தளிக்கிறார்.

இரக்கம், பரிவு, பாசம் இவை தனிப்பட்டவர்களின் உள்ளங்களில் எழக்கூடும், நத்தையிலும் முத்துக் கிடைப்பது போல! ஆனால், ஏழை நொந்த வாழ்வு பெறுவது, ஒரு கொடிய முறை காரணமாக. அந்த முறையை, தனி ஒருவனின் இரக்கம், பரிவு, தானம், தருமம் போன்றவைகளால் போக்கிடவோ, அந்த முறை காரணமாக ஏற்பட்டுவிடும் விபரீதங்களை நீக்கிடவோ முடியாது. இதைக் கூறும் துணிவே, பலருக்கு ஏற்படாது. ஓ. என்ரி இதனைக் கூறுவது மட்டுமல்ல, ஒரு சீமானின் மகன், ஏழையிடம் இரக்கம் காட்டும் பயணத்தைத் துவக்கினால், அந்தப் பயணம், எதிலே போய் முடியும், நடக்கக் கூடியது எதுவாக இருக்க முடியும் என்பதை, நகைச்சுவையுடன், ஆனால், அதேபோது இரண்டு சொட்டுக் கண்ணீரும் கிளம்பிடத்தக்கதானதாகக் கூறுவார்.

சரி! கதையை முழுவதும் கூறத்தான் வேண்டும்; கூறிவிடுகிறேன், தம்பி! கூறவேண்டியது அதிகமுமில்லை.

எங்கே நிறுத்தினேன் கதையை? ஆமாம்! அவள் கோபத்துடன், சீமான் மகனை வெளியேற்றுகிறாள்; அந்தக் கட்டத்தில்தான் நிறுத்தினான்.

அடுத்த கட்டம் என்ன தெரியுமா, தம்பி?

இரண்டு மாதங்களுக்குப் பிறகு, அந்தக் கட்டம்.

இலட்சியமறிந்த நண்பன் இருக்கிறானே, அவனைக் காண்கிறோம். ஒரு பெரிய ரொட்டிக் கடை முதலாளியின் "தங்க பிரேம்' போட்ட மூக்குக் கண்ணாடியைச் சரிபார்த்து, எடுத்துக் கொண்டு போகிறான், கொடுத்திட, ஒரு உரையாடல் அவன் காதில் விழுகிறது.