அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


பறக்கும் குதிரை!
1

ஓநாயும் இருக்கும், முயல்களும் ஓடி ஆடும்!
காமராஜர் தேர்தலிலே நிறுத்த இருப்போர் விளைந்த காட்டுக் குருவிகள்!
பள்ளம் பள்ளம்தானே!
கொல்லாமை பேசும் குரு தின்பது யாது?
பேரரசு நடத்தும் காமராஜரின் வலக்கரம் சோஷியலிசம் பேசலாமா?

தம்பி!

வெகு வேகமாகக் கிளம்பி, மிக மிடுக்குடன் பேசி, வழக்கறிஞர்களையும் மருத்துவர்களையும் பொதுவாகப் படித்தவர்களையும் காங்கிரசுக்குள் கொண்டுவந்து சேர்த்துவிடப் போவதாகச் சூள் உரைத்து, பொதுத் தேர்தலிலே காங்கிரஸ் கட்சியின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்பதைக் கண்டறிவதாக அறிவித்து, ஆரவாரத்துடன் நமது கழகத்தை ஏசி வந்த முன்னாள் நிதி அமைச்சர் டி. டி. கிருஷ்ணமாச்சாரியார், ஏன் திடீரென்று வாய் மூடிக்கொண்டுவிட்டார்? கூவி விற்றிட இருந்த சரக்கு தீர்ந்துபோய்விட்டதா? அல்லது விற்பனை எதிர்பார்த்த விதமாக நடைபெறாததால், "கடை'யை மூடிவிட்டாரா? என்ன காரணம் அந்த "மேதை'யின் சந்தடி அதிகமாகக் காணோமே? என்று நண்பரொருவர் கேட்டார். உடனிருந்த மற்றோர் நண்பர் - அவர் பெரியார் கட்சி - ஒரு நேர்த்தியான புன்னகையை உதிர்த்துவிட்டுச் சொன்னார்:

காரணம் விளங்கவில்லையா? அய்யா, ஒரு ஜாடை காட்டினார் காமராஜருக்கு; போயும் போயும் இந்த ஆசாமியையா நம்புகிறாய் என்பதாக; உடனே காமராஜர், கிருஷ்ணமாச்சாரியாரைக் கூப்பிட்டு "போதும் அய்யரே! உம்முடைய வேலை!'' என்று சொல்லிவிட்டார்!

என்று விளக்கம் அளித்தார்.

"அப்படி ஒரு மனப்பால் குடிப்பதானால் குடித்தபடி இரும்!'' என்று கூறிவிட்டு, ஒரு கனைப்பு, ஒரு முறைப்புடன், மற்றோர் நண்பர் பேசலானார்: அவர் காங்கிரசை ஆதரிப்பவர்.

பெரியார் சொல்லுவதைக் கேட்டு அதன்படி நடந்திடவா எங்கள் பெரியவர் இருக்கிறார்? அவர் என்ன பெரியாரைப்போல, பிராமணர்களைப் பார்ப்பான் என்று பேசிடும் போக்கினரா? எத்தனையோ கீர்த்திமிக்க அய்யர் - அய்யங்கார் - சாஸ்திரி - சர்மாக்கள் - காமராஜருக்கு நண்பர்கள்! டி. டி. கே. இப்போது அதிகமாகப் பேசப் போவதில்லை; காரணம் அவர் காங்கிரஸ் சர்க்காரின் நிலைமையிலே ஏற்பட்டுள்ள நெருக்கடிகள், அதிர்ச்சிகள் ஆகியவைபற்றி அதிகக் கவலை கொண்டுள்ளார். இருக்குமல்லவா? பாருங்கள், இப்போது இந்த நந்தா விலகிவிட்டார்; இந்திரா காந்தியார் உடனே, அனுபவம் மிக்க டி. டி. கிருஷ்ணமாச்சாரியாரை அழைத்துப் பொறுப்பை ஒப்புவிக்கவேண்டுமல்லவா? செய்தாரா? இல்லையே! அதைப் பார்க்கும்போது அவருடைய மனம் வேதனையாகத்தானே இருக்கும் என்றார்.

நான் எந்த ஒரு விளக்கமும் கொடுக்காமலிருக்கக் கண்ட அவர்கள், என்னைப் பார்த்தபடி "உங்கள் கருத்து என்ன?' என்று கேட்டார்கள்.

"திட்டவட்டமாக ஏதும் கூற முடியாது; ஆனால் ஒரு எண்ணம் தோன்றுகிறது எனக்கு. டி. டி. கிருஷ்ணமாச்சாரியார், காங்கிரசுக்காகப் பிரசாரம் செய்வது, அதிலும் சோஷியலிசம் பேசுவது, கேட்பவர்களுக்கே ஏதோ ஒரு கேலிக் கூத்து போல இருப்பதை அவரே உணர்ந்துகொண்டுதான், தமது பிரசார வேகத்தைக் குறைத்துக்கொண்டிருக்கக்கூடும் என்று எண்ணுகிறேன்'' என்று நான் கூறினேன்.

எதையாவது சொல்லி வைக்கலாம் என்ற போக்கிலே சொல்லவில்லை. உள்ளபடி டி. டி. கிருஷ்ணமாச்சாரியார் போன்றவர்கள், சோஷியலிசம் பேசுவதைக் கேட்கும்போது, மக்கள் ஒரு கேலிச் சிரிப்பொலிதான் எழுப்புகிறார்கள்.

காங்கிரசிலே "தூண்களாக'வும், வலது கரங் களாகவும் உள்ளவர்கள், எப்படிப்பட்ட முதலாளிகள் என்பதை நமது கழகப் பேச்சாளர்கள் எடுத்து விளக்கிவிட்டு, இத்தகையவர்களைக் கொண்டுள்ள காங்கிரஸ் கட்சிதான் சோஷியலிசம் பேசுகிறது என்று கூறும்போது எழும் கையொலி வெறும் ஒலி அல்ல; உணர்ந்திருப்பாய் என்று நம்புகிறேன்.

மக்களுக்கு மயக்க மூட்டும், சொக்கவைக்கும் என்ற நினைப்புடன்தான், பாவம், காங்கிரசின் தலைவர்கள், சோஷியலிசம் பேசுகிறார்கள். ஆனால் அவர்கள் அந்தத் தத்துவத்திற்குத் தந்திடும் விளக்கம் இருக்கிறதே அதனைக் கேட்டதும், மக்கள் அடைகின்ற எரிச்சலும் ஏமாற்றமும் கொஞ்சமல்ல. இதைத்தான் சோஷியலிசம் என்கிறீர்களா? இவர்களை வைத்துக்கொண்டுதான் சோஷியலிசம் கொண்டு வரப் போகிறீர்களா? இவர்களெல்லாம் இப்போது உள்ளது போலவே இருப்பார்கள், ஆனால் சோஷியலிசமும் இருக்கும் என்கிறீர்களா? ஓநாயும் இருக்கும், முயல்களும் ஓடி ஆடியபடி இருக்கும்; புலியும் இருக்கும் புள்ளிமான்களும் இருக்கும்; அப்படித்தானே இருக்கும் என்கிறீர்கள்! - என்று கேட்கிறார்கள்; வாய் திறந்து அல்ல; தமது குறும்புப் புன்னகையால்; கேலிப் பார்வையால்!

இதனைக் கண்டறிந்ததால் டி. டி. கிருஷ்ணமாச்சாரியார் வெட்கப்பட்டுக்கொண்டு சே! நாம் போய் மேடைமீது நின்றுகொண்டு சோஷியலிசம் பேசினால் எப்படி நம்புவார்கள்? வீண் முயற்சி; விளைவு விபரீதமானாலும் ஆகிவிடக்கூடும் என்று எண்ணிக்கொண்டுதான், தமது இடி முழக்கத்தை நிறுத்திக்கொண்டிருந்திருக்க வேண்டும்.

மக்கள் தெளிவற்றவர்களாகவே இருந்துவிடுவார்கள்; பசப்பு மொழி கேட்டு மயங்கிவிடுவார்கள்; இரு பொருள் தந்திடும் பேச்சைப் பேசி அவர்களை ஏய்த்துவிடலாம் என்று நினைத்திடும் காங்கிரஸ் தலைவர்கள் உளர்.

டி. டி. கிருஷ்ணமாச்சாரியார் போன்றவர்கள் பேசும்போது, மக்கள் மிக எளிதாக அவர்கள் பேசும் சோஷியலிசம்,

வஞ்சகமானது
பசப்பு மிக்கது
இரு பொருள் கொண்டது

என்பதனை உணர்ந்துகொண்டுவிடுகின்றனர்.

மக்கள், உண்மையை உணர்ந்துகொண்டுவிட்டனர் என்பதனைக் கண்டறிந்த பிறகு எப்படி அவர்களுக்குப் பேச இயலும்? கடையைக் கட்டிக்கொள்கிறார்கள்!!

டி. டி. கிருஷ்ணமாச்சாரியார் போன்றவர்கள் பேசிடும் சோஷியலிசம், உண்மையான சோஷியலிசமாக இருக்க முடியாது; ஏனெனில் அவர்களே, முதலாளித்துவ அமைப்பின் பாதுகாவலர்கள்; அந்த அமைப்பிலே இருந்துகொண்டே, மக்களுக்கு இனிப்பளிக்கும் என்பதற்காக சோஷியலிசம் பேசுகிறார்கள் என்பதைப் பொது மக்கள் அறிந்துகொண்டுவிட்டனர்.

டி. டி. கிருஷ்ணமாச்சாரியார் தமது மின்னல் வேகச் சுற்றுப்பயணத்தை நிறுத்திவிட்டதற்கும்,

காமராஜர்கூட, சோஷியலிசம் என்ற பேச்சுப் பேசி மக்களை மயக்க முடியவில்லை என்பதை உணர்ந்து கொண்டு,

நில வரியை எடுத்துவிடுகிறேன்!
ஆளுக்கு ஒரு வீடு தருகிறேன்!

பார்க்குமிடம் எங்கும் பள்ளிக்கூடங்கள் கட்டித் தருகிறேன் என்றெல்லாம் பேசிச் சுவைப் பண்டங்கள் வீசி மக்களை மயக்கலாமா என்று இப்போது முயற்சி செய்திட முனைவதற்கும் இஃதே காரணம்.

***

எல்லோரும் பேசும் விதமாகப் பேசக்கூடாது; பேச்சிலே ஒரு புதுமை வேண்டும்; புது முறையாகத் தன் பேச்சு அமைய வேண்டும் என்று நினைத்துக்கொண்ட ஒரு வாலிபன், திருமணம் செய்துகொள்ளச் சம்மதம் தரும்படி தன் காதலியிடம் கேட்டிடலானான். எப்படி?

"கண்ணே நீ என் குழந்தைகளுக்குத் தாயாக வேண்டும்.''

காதல் செய்த எந்தப் "பயலும்' கேட்காத விதமான பேச்சு இது; மற்றவர், வாழ்க்கைத் தோணியிலே போகலாமா என்றோ, என் மன மாளிகையிலே உள்ளவளே! என் வீட்டின் திருவிளக்குமாக வேண்டும், சம்மதந்தானே கண்ணே! என்றோ கேட்டிருப்பான்; நாம்! கேட்ட உடன், அவள் சொக்கிப்போய்விடுவாள்; அப்படியே தோளின்மீது சாய்வாள்; அடிமூச்சுக் குரலாலே, "அத்தான். . . .' என்பாள், அள்ளி அணைத்திடலாம், இன்பம் பருகிடலாம் - என்றெல்லாம் அவன் எண்ணிக்கொண்டான்.

ஆனால், கன்னியோ, கடுங்கோபம் கொண்டவளாகி அவனைப் பார்த்து.

"காதகா! இத்தனை காலமும் என்னைக் காதலிப்பதாக ஏமாற்றிக்கொண்டிருந்தாயா? ஏற்கனவே மணமாகி, குழந்தைகள் உள்ளவனா நீ? என்னை இரண்டாந்தாரமாக்கிக்கொள்ளவா இத்தனை காதல் நாடகமாடினாய்?'' என்றெல்லாம் கடிந்துரைத்து விட்டு, எழுந்தோடிவிட்டாள்!

அவன், புது முறையிலே பேசுவதாக எண்ணிக்கொண்டு, கடிமணமாகி, காதற்கனி பிறந்திடும் நிலை பெற்றிடலாம் என்ற கட்டத்தைக் கூறினான். பெண்ணோ, "என் குழந்தைகள்' - என்று அவன் குறிப்பிட்டது, ஏற்கனவே ஒருத்தியை மணந்து அவன் பெற்ற குழந்தைகள் என்று எண்ணிக்கொண்டு, எரிச்சலும் ஏமாற்றமும் கொண்டாள்.

தம்பி! சொல்ல நினைப்பதை விளங்கும்படியும், வேறு பொருள் கொண்டிட முடியாத விதத்திலும் கூறிட வேண்டும். இல்லையேல் விபரீதமான விளைவுகள் நேரிடக்கூடும் என்பதனை விளக்கிடும் கதை இது.

இந்தக் காதலன் வஞ்சகன் அல்ல! புத்திசாலித் தனத்தைக் காட்டிவிட வேண்டும் என்று துடித்திட்ட ஏமாளி.

வஞ்சகன் தன் நிலையை மூடிமறைத்திட முயலுவான்;

என் இதயத்தில் முதன் முதலாக இடம் பெற்றவள் நீயே!

இல்லறம் என்ற நல்லறம் நடாத்திடவே உன்னை நாடுகிறேன்!

என்று எதையாவது இனிப்புள்ளதாகக் கூறிவைப்பான். பெண் மயங்கி மனத்தைப் பறிகொடுத்தான பிறகு, அவன் ஏற்கனவே வேறோர் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டவன் என்பதனை அறிந்து பதறும்போதுகூட, வஞ்சகன் கூசாமல் கூறிடுவான்,

என் இதயத்தில் அவளுக்கு நான் இடம் அளித்திட வில்லை! வீட்டில் மட்டுந்தான்; அதுவும் பெற்றோர் கொடுத்த தொல்லைக்காக மட்டுமே!

அவள் வீட்டில் இருக்கிறாள். ஆனால், அவளுடன் சேர்ந்து நான் இல்லறம் நடாத்தவில்லை. அதனை நான் முன்பே உனக்குக் கூறினேனே! கவனிக்கவில்லையா?

என் இதயத்தில் முதன் முதலாக இடம் பெற்றவள் நீயே - என்று அன்று சொன்னேன்; இன்றும் அதனையே கூறுகிறேன்; மனைவி என்ற பெயருடன் ஒருத்தி என் வீட்டில் இருப்பதாலேயே என் இதயத்திலும் இருப்பாள் என்று எண்ணிக்கொள்ளலாமா? அங்கு உனக்குத்தான் இடம்! உனக்கு மட்டுந்தான்!

என்று பசப்புவான்; தன் உள்ளத்தைப் பறிகொடுத்துவிட்ட பாவை என் செய்வாள்?

இவ்விதமான பேச்சு, இரு பொருள் தருவதாக அமைவது, உண்மையை மறைத்திட, பொய்மைக்கு ஒரு பொலிவளிக்கும் பூச்சுச் சேர்த்துத் தந்திடும் முறை.

அவ்விதமான பேச்சு பலன் தரவில்லை என்பதனை உணர்ந்துகொண்ட பிறகு, காங்கிரஸ் தலைவர்களுக்குத் தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பதிலே எப்படித் "தெம்பு' பிறந்திட முடியும்?

காமராஜரோ, "தெம்பு' இருக்கிறதோ இல்லையோ இந்த சோஷியலிசப் பேச்சு தவிர, மக்களுக்குச் சுவையூட்டும் பேச்சு வேறு இல்லை என்பதை உணருவதாலே, அதனைப் பேசி வருவது என்று தீர்மானித்துவிட்டார். வேறு என்ன செய்வார்?

கட்டிய பள்ளிக்கூடங்களைப் பார்த்தீர்களா? என்று காமராஜர் கேட்டால், கொட்டிக் கொடுத்த வரிப் பணம் கொஞ்சமா? என்று மக்கள் கேட்கிறார்களே! பதில் என்ன சொல்ல முடியும்?

பார்! பார்! மின்சார விளக்கு பார்! - என்கிறார்; இதைவிட அதிசயத்தைக் காட்டினான் வெள்ளைக்காரன்- ஆகாய விமானமே காட்டினான்! அவன்கூட, இப்படி, பார்! பார்! என்று கூவிடவில்லையே என்று மக்கள் எண்ணிக் கொள்கிறார்கள்! காமராஜரின் பேச்சு அவர்கள் மனத்திலே அவர் எதிர்பார்க்கின்ற ஒரு களிப்பினை ஊட்டிட முடியவில்லை.

எப்படிப்பட்டவர் தெரியுமா தலைவர்? உலகப் பெருந் தலைவர்!! என்று உடனிருப்போர் உடுக்கை அடிக்கிறார்கள்! ஆமாமய்யா ஆமாம்! அவர் புகழ் ஏறுகிறது உச்சிக்கு; எங்கள் வயிறு காய்கிறது பட்டினியால்! - என்று மனம் நொந்து கூறுகிறார்கள் மக்கள்.

ஆகவே காமராஜர், காங்கிரசின் சாதனைகள்பற்றிய பட்டியலை நீட்டி, ஓட்டுக் கேட்டிட முடியவில்லை. தேர்தலிலே நிற்பதற்காக அவர் தேடிப் பிடித்து இழுத்து வந்திடுவோரும், காங்கிரசிலே நீண்ட காலமாக இருந்து பணியாற்றி, இன்னல் இழப்புக்களுக்கு ஆளானவர்கள் அல்ல.

விளைந்த காட்டுக் குருவிகள்! ஆகவே, இருப்பதற்குள் ஓரளவு சுவையூட்டக்கூடிய பேச்சு, சோஷியலிசம்தான் என்று அவருக்குத் தோன்றுகிறது. ஆகவே ஒரு நாலு கூட்டத்தில் அது பற்றிப் பேசிப் பார்க்கிறார்.

சோஷியலிசம் பேசுகிறீர்கள்; ஆனால் இத்தனை சீமான்களையும் உடன் வைத்துக்கொண்டிருக்கிறீர்களே - எப்படி இது பொருந்தும்? மக்கள் நம்புவார்களா? என்று அவரிடம் யாராவது கேட்டால், தம்பி! ஒரு பெரிய வெடிச் சிரிப்புச் சிரித்துவிட்டு,

சோஷியலிசம் பேசிவிட்டால், ஓட்டு வந்து குவிந்து விடுமா?
நோட்டுகள் வேண்டாமா - தேர்தலை நடத்த!!
நோட்டுகளை யார் தருவார்கள்? ஓட்டர்களா?
ஓட்டாண்டிகளிடம் ஏது நோட்டு?

நோட்டுப் பெற்றிட சீமான்கள் தேவைப்படுகிறார்கள்; ஓட்டு வைத்திருக்கும் ஏழைகளுக்குத் தித்திப்புத் தந்திட சோஷியலிசம் பேசவேண்டி இருக்கிறது என்று பச்சையாகவே சொல்லிவிடுவார்! பச்சைத் தமிழரல்லவா? தம்பி! காங்கிரஸ் கட்சியின் அமைப்பை எடுத்துக்கொண்டு பார்த்தாலும், காங்கிரஸ் ஆட்சியின் செயல் முறைகளை ஆராய்ந்து பார்த்தாலும், சோஷியலிசம் வருவதற்கான சூழ்நிலையே இல்லை என்பது நன்றாகப் புரிகிறது.

என்றாலும், காமராஜர், சோஷியலிசம் பேசுகிறார்; எந்தத் துணிவு காரணமாக? அதனை விளக்கிட ஒரு சிறு கதை கூறியாக வேண்டும், தம்பி! கூறட்டுமா?