அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


பறக்கும் குதிரை!
2

மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவன், மன்னன் முன் மண்டியிட்டு, "அரசே! ஒரு வேண்டுகோள்; என்னை இப்போதே தூக்கிலே பேட்டுவிடச் சொல்லாதீர்கள், ஒரு வருடம் எனக்கு அவகாசம் தருக! அதற்குள் நான், தங்கள் பட்டத்துக் குதிரைக்கு "பறந்திட'க் கற்றுக்கொடுக்கிறேன். அதனைக் கண்ட பிறகு, எனக்கு விதிக்கப்பட்ட தண்டனையைத் தள்ளுபடி செய்துவிடலாம். ஒரு வருடத்திற்குப் பிறகு, குதிரைக்குப் பறக்கும் சக்தி வந்திடச் செய்யத் தவறினால் என்னைத் தூக்கிலே போட்டுவிடுங்கள்' என்று முறையிட்டுக்கொண்டான். மன்னன், குதிரையே பறந்திடுமாமே, பார்ப்போமே என்று எண்ணிக்கொண்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தவனுக்கு ஒரு வருடம் விடுதலை தந்தான்.

மரணத்தின் பிடியிலிருந்து தப்பித்துக்கொண்ட அந்த தந்திரக்காரனை அவனுடைய நண்பன் பார்த்து, "ஒரு வருடத்தில் குதிரைக்குப் பறக்கும் சக்தி பெற்றுத் தருவதாகக் கூறிவிட்டு, ஒரு வருட விடுதலை பெற்றுக்கொண்டாயே! ஒரு வருடம் முடிந்ததும், உன்னைத் தூக்கிலே போடாமல் விடுவார்களா? மன்னனுக்கு இப்போது உள்ள கோபத்தைவிட அதிகமாக அல்லவா கோபம் வரும். நம்மை ஒரு ஏமாளி என்றா இவன் எண்ணிக் கொண்டான்? தூக்கு மரத்திலே தொங்கட்டும். இவன் உடலைக் கழுகும் நரியும் விருந்தாக ஆக்கிக்கொள்ளட்டும் என்றல்லவா கட்டளை பிறப்பிப்பான்? என்ன செய்வாய் அப்போது?'' என்று கேட்டான்.

தந்திரக்காரன் சொன்னான்,

ஒரு வருடத்திற்குப் பிறகு நடக்கக்கூடியதுபற்றி இப்போது ஏன் எண்ணிக்கொண்டு வேதனைப்பட வேண்டும்?

தூக்கு மேடையில் இருந்து வெளியே வந்திருக்கிறேன்; ஒரு வருடம் அவகாசமும் கிடைத்திருக்கிறது.

இந்த ஒரு வருஷத்திற்குள் அரசனே இறந்துபடக் கூடும்.

அல்லது நானே மடிந்துபோகக்கூடும்!

அல்லது குதிரை, பறக்க ஆரம்பித்தாலும் ஆரம்பித்து விடக்கூடும்!!

ஒரு வருடத்தில் என்னென்னவோ நடைபெறலாம்.

நம்பிக்கை கொள்ள வேண்டும்! உடனடியாகக் கிடைத்திடும் பலனைத்தான் கணக்குப் போட்டுப் பார்த்திட வேண்டும். ஒரு வருடத்திலே ஏதேதோ நடக்கலாம். அதன் காரணமாக, எனக்கு நிபந்தனையற்ற விடுதலை கிடைத்தாலும் கிடைக்கலாம்.

ஒரு வருடத்திற்கு பிறகு, தூக்கிலே போடுவார்களே என்பது பற்றி இப்போதே எண்ணி எண்ணி மனம் புண்ணவானேன்?

ஒரு வருடம் கிடைத்திருக்கிறது! அந்தக் காலத்தில, பெறவேண்டிய வசதியை, வாழ்க்கை இன்பத்தை ஏன் இழந்திட வேண்டும்? என்று கேட்டானாம்.

அதுபோல காமராஜர், சோஷியலிசம் கொண்டுவரவில்லையே, முடியாமற் போய்விட்டதே என்று எண்ணி ஏக்கம் கொள்ளாமல், குதிரையைப் பறக்க வைக்கப் போகிறேன் என்று பேசி, மரண தண்டனையைத் தவிர்த்துக் கொண்டவன்போலப் பேசுகிறார், சோஷியலிசம் பற்றி.

சோஷியலிசம் பேசி ஓட்டுகளைப் பறித்துக்கொள்வோம் முதலில். பிறகு, சோஷியலிசம் ஏன் கொண்டுவரவில்லை என்று மக்கள் கேட்டுவிட்டுப் போகட்டுமே! கொடுத்த ஓட்டுகளைத் திருப்பியா வாங்கிக்கொள்ள முடியும்? - என்று அவர் எண்ணுகிறார் என்பது விளங்கவில்லையா? தம்பி! ஆம் என்கிறாய். மற்றவர்களும் விளக்கம் பெற்றிடவேண்டாமா?

அதற்காகத் தம்பி! சோஷியலிசம் பேசிடும் காமராஜரின் காங்கிரசிலே, எத்தகைய முதலாளிகள் கொலு இருக்கிறார்கள் என்பதை மக்களுக்கு எடுத்துக் காட்டிட வேண்டும்.

"வலது கரம்' - என்றும், தேர்தல் பிரசார பீரங்கி என்றும் கொண்டாடுகிறார்களே, டி. டி. கிருஷ்ணமாச்சாரியாரை. அவருந்தானே பேசுகிறார், சோஷியலிசமே எமது இலட்சியம் என்று. அவர் நிலை என்ன என்பதை நாடு அறிந்துகொள்ள வேண்டாமா?

ஒருவரிடம், வருவாய் தரத்தக்க தொழில், வாணிப அமைப்புகள் குவிந்துவிடுமானால், மக்களின் உழைப்பினால் உற்பத்தியாகும் செல்வத்திலே பெரும் பகுதி, அந்த ஒருவரிடம் போய்ச் சேர்ந்துவிடுகிறது. ஏழை பணக்காரன் பேதம், அகன்ற வாய்கொண்ட பெரிய பள்ளமாகிவிடுகிறது.

இதைப் போக்குவதுதானே சோஷியலிசம்?

இதைத்தானே காங்கிரஸ் தனது திட்டமாகக் கொண்டுள்ளதாக, டி. டி. கிருஷ்ணமாச்சாரியார் கூறுகிறார்.

"அப்படியானால் அந்த நேர்த்திமிக்க இலட்சியவாதி எந்த நிலையிலே இருக்கிறார்?''

அவருடைய குடும்பத்திடம் உள்ள தொழில் அமைப்புகள், வருவாய்த் துறைகள் எப்படி உள்ளன? அளவும் வளமும் எப்படி இருக்கிறது என்பதனை நாடு தெரிந்துகொள்ள வேண்டாமா?

டி. டி. கிருஷ்ணமாச்சாரியார், தமக்கு இந்தியப் பேரரசில் கிடைத்திருந்த அமைச்சர் பதவியைப் பயன்படுத்தி, தொழில் அமைப்புகளைப் பெரிதாக்கிக்கொண்டார் என்ற புகார் கிளம்பிற்று.

நான் அந்தப் புகார் பற்றிய நோக்கத்துடன் இதனைக் குறிப்பிடவில்லை.

மிக மிக நியாயமான, நேர்மையான முறைகளிலேயே இந்தத் தொழில் வாணிப அமைப்புகள் வளர்ந்தன என்றே வைத்துக் கொள்வோம். ஆனால் இவ்வளவு வருவாய்த் துறைகள், டி. டி. கிருஷ்ணமாச்சாரியாரின் குடும்பம் ஒன்றினிடம் இருந்திடலாமா? இருக்கவிடுவது, சோஷியலிசமா? இருக்கும் போது, அவர் சோஷியலிசம் பேசுவதிலே பொருள்தான் உண்டா? என்ற இவை பற்றியச் சிந்தனையைக் கிளறிவிடுவதற்காகவே கூறுகிறேன்.

வெட்டப்பட்டதோ, வெடிப்பு விரிவானதோ, எதுவாக இருந்தால் என்ன, பள்ளம் பள்ளந்தானே!

தம்பி! சோஷியலிசம் பேசிடும், டி. டி. கிருஷ்ணமாச்சாரியாரின் குடும்பத்திடம் உள்ள தொழில் - வாணிப அமைப்புகளின் பட்டியல் - எனக்குக் கிடைத்துள்ள அளவு - தருகிறேன் - பார்த்திடு! - காங்கிரஸ் பேசிடும் சோஷியலிசம், நம்பத் தகுந்ததுதானா என்பது பற்றிய தெளிவு தன்னாலே வந்திடும்.

டில்லி
கல்கத்தா
விஜயவாடா
பம்பாய்
விசாகப்பட்டினம்
சென்னை
ஐதராபாத்
கொச்சி
பெங்களூர்
ஆமதாபாத்
கோயம்புத்தூர்

இத்தனை நகரங்களிலே, டி. டி. கிருஷ்ணமாச்சாரியாரின் குடும்பத்தாரின் வணிக அமைப்புகள் உள்ளன.

"ஏக பாரதம்' - எத்தனை எழிலுடன் விளங்குகிறது என்பதனை எடுத்துக் காட்ட, இந்தப் "பேரரசு' அமைக்கப் பட்டிருக்கிறது போலும்!

இங்கெல்லாம் உள்ள கம்பெனிகளில், எத்தனை இவர் அமைச்சர் வேலை பெற்ற பிறகு வளர்ந்தன, மூலதனம் எப்படியெப்படி கிடைத்தன என்பன பற்றிய தகவல் அறிந்திட நான் முனையவில்லை.

நான், இந்தப் பிரச்சினையில் ஊழல் இருக்கிறதா, அக்ரமம் நடந்திருக்கிறதா என்ற கேள்வியிலே என்னை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை.

எனது நோக்கமெல்லாம், சோஷியலிசம் பேசிடும் ஒருவரின் குடும்பம், பொருளாதாரப் பேரரசு அமைத்து ஆண்டு கொண்டிருக்கும் விந்தையை நாடு அறியச் செய்ய வேண்டும் என்பதேயாகும்.

கொல்லாமைபற்றி உருக்கமான "உபன்யாசம்' செய்திடும் "குரு' சாப்பிடும் கோழிப் பிரியாணியின் அளவு பற்றிய தகவலைத் தான் நான் தருகிறேன்; கோழி விலை போட்டு வாங்கியதா? கொல்லைப் புறத்தில் மேயவந்த வேறோர் வீட்டுக் கோழியா? என்பது பற்றிய "மர்மம்' நான் தரவுமில்லை. எனக்குத் தெரியவும் தெரியாது. இனி அந்தப் பேரரசைக் காணலாம்.

1. ஓரியண்டல் காஸ்மாடிக்ஸ்
2. டி. டி. கெமிகல்ஸ்
3. டார்டாய்ஸ் இந்தியா
4. ஓரியண்ட் பார்மா
5. கொப்பா பார்மா
6. ரைட் எய்ட்ஸ் ஓரியண்ட்
7. டி. டி. லிமிடெட்
8. டைம் எய்ட்ஸ், இந்தியா
9. லண்டன் ரப்பர் கம்பெனி
10. பாக்வெல் இன்டஸ்ட்ரீஸ்
11. பிரிசைசன் என்ஜினியர்ஸ்
12. இன்டர்நேஷனல் இன்ஸ்ட்ரூமன்ட்ஸ்
13. எல். டி. ஸேமோர் அண் கோ
14. காட்டரி ப்ரை இந்தியா
15. செஸ்பிரோ பிராண்டு இந்தியா
16. இந்தூரிஃபாரம்
17. ஏ. கே. பார்மா கெமிக்ஸ்டிக்ஸ்
18. டி. டி. கிருஷ்ணமாச்சாரி கம்பெனி.

தம்பி! பெயர்கள் யாவும் ஆங்கிலம் - நான் செய்த தவறு அல்ல. அந்தக் குடும்பம் பெற்ற பேறு!!

இந்த அமைப்புகளுடன், நாடெங்கும் மக்கள் விரும்பி வாங்கிடத்தக்க பல பொருள்களுக்கு, இந்தக் குடும்பம், "ஏஜென்சி' உரிமை பெற்றிருக்கிறது.

1. உட்வார்ட்ஸ் கிரைப் வாட்டர்
2. பாண்ட்ஸ் கிரீம்
3. வாட்டர்மென் இங்க்; பேனா
4. பிரஸ்டிஜ் குக்கர்
5. வெஸ்ட்கிளாக்ஸ் கடிகாரங்கள்
6. அதுல் உற்பத்திப் பொருள்கள்
7. நவஸரி ஆயில் மில்ஸ்
8. ஸ்வஸ்திக் ஆயில் மில்ஸ்
9. பக்கிம்ஹாம் கர்னாடிக் மில்ஸ்
10. குட்லாஸ் வால் பிக்மண்ட் அண்டு ரிஸின்ஸ்
11. காட்பெரி சாக்லட்
12. போர்ன்விடா
13. மாத்ஸ்ஃபாக்டர் காஸ்மாடிக்ஸ்
14. எஸ்ஸோவின் பிளிட்
15. மெட்டல் ஸ்ப்ரேயர்கள்
16. டாக்டர் வெஸ்ட்டின் பல் பிரஷ்
17. வில்லியம் ஷேவிங் சோப்
18. காரெட் பிளேடுகள்
19. எபிக் டூத் பேஸ்ட்
20. ஸ்கைலைன் கட்லரி
21. சாயம் - ரசாயனப் பொருள்கள்

அளவும், வகையும் விளங்குகிறதல்லவா? தம்பி!

பிளேடுகூட! பிரஷ்கூட! பல்பசைகூட! பூச்சி மருந்தைக்கூட விடவில்லை!!

இத்தகைய ஒரு பேரரசு இந்தக் குடும்பத்துக்கு, இந்தக் குடும்பத் தலைவர் பேசுவதோ சோஷியலிசம்!! தம்பி! மக்களை ஏமாளிகள் என்றே தீர்மானித்துவிட்டிருந்தாலொழிய, பேசிடும் துணிவு பிறந்திடுமா?

இந்த டி. டி. கிருஷ்ணமாச்சாரியார் காமராஜருக்கு வலது கரமாம்!

ராஜதந்திர முறை கூறிடும் மூளையாம்! பேசிக்கொள்கிறார்கள்.

மக்கள் இதனை அறியமாட்டார்களா? இப்படிப் பட்டவர்களைக்கொண்டு இயங்கி வரும் காங்கிரஸ் கட்சி, எப்படி சோஷியலிசத்தைக் கொண்டு வர முடியும் என்று கேட்கமாட்டார்களா என்ற எண்ணம் ஏற்படவே செய்யாதா காமராஜருக்கு? ஏற்படும்.

ஆனால், கதை தந்துள்ளேனே அதுபோல, குதிரையைப் பறக்கவைக்கிறேன் என்று கூறி, மரண தண்டனையிலிருந்து இப்போதைக்குத் தப்பித்துக்கொள்ளலாம் என்று திட்டமிடு கிறானே தந்திரக்காரன் அதுபோல காமராஜர், பின்னாலே என்னவோ நடந்துவிட்டுப் போகட்டும், இப்போதைக்கு சோஷியலிசம் பேசி மக்களை மயக்கி ஓட்டுக்களைத் தட்டிக்கொண்டு, காங்கிரசு ஆட்சிக்கு ஆபத்து ஏற்படாமல் பார்த்துக்கொள்வோம் என்று திட்டமிடுகிறார். புரிகிறதல்லவா?

அண்ணன்,

13-11-66