அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


பெரிய புள்ளிகள்
1

குறைமதிச் செல்வன் கருத்துக் கதை -
நேரு, மெண்டாரிஸ் உரையாடல் -
சிங்மன்ரீ -
கழகமும் காமராஜரும்

தம்பி!

எனக்கு எதற்குப் பெருஞ் செல்வம்? கட்டிக்கொள்ள நாலு முழ வேட்டியும். போட்டுக்கொள்ள ஒரு துண்டும், படுக்கப் பாயும், பசிக்குக் கொஞ்சம் சோறும் சாறும் இருந்தால் போதும். பணம் ஏன்? பங்களா ஏன்? பட்டாடை ஏன்? பளபளப்பு ஏன்? என்று காண்போரிடமெல்லாம் கூறிக்கொண்டிருந்தான் - கபடத்தை மறைத்தபடி - ஒரு ஆசாமி.

வேண்டாம்! வேண்டாம்! என்று கூறிக்கொண்டிருந்த போதே, வேறொருவர் பெரும் பொருளைப் பெற்றாலும் பேறு கிடைக்கப்பெற்று பெரும்புகழும் ஈட்டி வாழ்ந்து வருவது கண்டு, உள்ளூர அழுக்காறு கொண்டு, "நமக்குக் கிடைத்திடலாகாதா இந்தப் பேறு! கிடைத்தால், சுவைமிக்க வாழ்க்கையன்றோ!'' என்று எண்ணி எண்ணி ஏக்கமுற்றான்.

செல்வம் பெற்றவர் முன் நின்று பலர் கட்டியங் கூறினர்.

இவர்க்கோ, எட்டி எனக் கசந்தது அவர் பேச்சு.

மாலை மரியாதை, விருந்து, வைபவம், அவருக்கு!

மனக்குறை, நெஞ்சுத் துடிப்பு, இவருக்கு!

எங்கும் வரவேற்பு அவருக்கு! வேண்டா வெறுப்புடன் இவரிடம் உறவாடினர், அவரெலாம்.

இவ்வளவு "பவிசும்' பெரும் பணம் பெற்றதனால் அல்லவா? என்று எண்ணிய போது, ஏக்கம் துக்கமாகி, துக்கம் கோபமாக மாறிற்று; அழுக்காறு ஆத்திரமாக வடிவெடுத்தது; அண்டிப் பிழைப்போர், அடுத்துக் கெடுப்போர், ஆகாவழி அழைத்தேக அறிந்தோர், எனும் வகையினருடன் கலந்து பேசி, செல்வம் பெற்றவரைச் சாய்த்தொழித்து, அந்த வீழ்ச்சியைச் சாதகமாக்கிக் கொண்டு, பெரு நிதிக்கு உரிமை கொண்டாடிப் பெற்று, "பெரிய புள்ளி' ஆகிவிட்டார், பெருஞ்செல்வம் பேய்க்குணத்தை, நாய்க் குணத்தையன்றோ ஏற்படுத்தும் என்று பேசித் திரிந்தவர்!

பெருஞ்செல்வம் கிடைத்ததும், மெள்ள மெள்ளப் பேச்சு, போக்கு, நோக்கு, நடை - யாவும் மாறிடலாயின.

ஐயோ பாவம்! என்று முன்பு கூறி வருந்தினோர், ஐயா! வருகிறார்! என்று அடக்க ஒடுக்கமாகப் பேசிடலாயினர்.

அவர் ஒரு அப்பாவி! தனக்கென்று எதையும் விரும்ப மாட்டார்! - என்று பரிதாபத்தோடு பேசிவந்தவர்கள், "அவர் மனது வைத்தால் போதும்! அவர் தயவு கிடைத்தால் போதும்!' என்று நயமாகப் பேசவும், நாடி வரவும், பாதம் தொடவுமாயினர்.

நிலைமை மாறிடவே, நினைப்பு மாறிடலாயிற்று! நிமிர்ந்த நடை, முறுக்குப் பேச்சு, இவை உடன் வந்துவிட்டன.

பெருஞ்செல்வம் சேரா முன்பு, ஒரு இழவும் பேசவராது என்று கேலியாகக் கூறினவர்களே, "அந்தஸ்த்துக்கு ஏற்ற சுபாவம் அவருக்கு. மற்றவர்போல் வாயாடிக்கொண்டிருக்க மாட்டார்! சுருக்கமாக, இரண்டொரு வார்த்தைதான் பேசுவார் - ஆனால் அவ்வளவும், அர்த்தம் உள்ள பேச்சு!'' என்று பாராட்டலாயினர்.

"செச்சே! ஏன் இந்த ஆசாமி, இப்படி, திருதிருவென்று விழிக்க வேண்டும்' என்று ஏளனம் செய்தவர்கள், அதே பார்வையை, "கெம்பீரம்' என்று சுட்டிக் காட்டினர்.

பரிதாபம் காட்டியவர்கள், பக்கம் நின்று பணிவிடை செய்யலாயினர்! குறும்பாகப் பேசிக்கொண்டிருந்தவர்கள், குற்றேவேல் புரியலாயினர்! ஆசாமிக்கு, தாங்க முடியவில்லை! "ஓஹோ ஹோ! நாம் பெரிய புள்ளிதான் - இதுவரை அதை நாம் தெரிந்துகொள்ளாமலே இருந்துவிட்டோம்'' என்று தனக்குள் கூறிக்கொண்டு, அதட்டிக் கேட்க, பதட்டம் பேச ஆணை பிறப்பிக்க, ஆரம்பித்துவிட்டார்.

எனக்கும் ஏதோ கொஞ்சம் தெரியும் என்று பேசத் தொடங்கி, படிப்படியாகக்கூட அல்ல, தாவிடலானார் மேலே, மேலே; எனக்கு எல்லாம் தெரியும் என்று பேசிடலானார்; எனக்குத் தெரியும் எல்லாம்! என்று கூறினார்; எனக்குத் தான் தெரியும் என்றார்; கடைசியில், உனக்கு என்ன தெரியும்; பேசாமலிரு; எல்லாம் எனக்குத் தெரியும்!! என்று, உருட்டி மிரட்டும் குரலில் பேசிவரலானார்.

அவருக்கு புதிய "அறிவு' கிடைத்துவிட்டது என்பதனால் அல்ல; புதிய அந்தஸ்து, பண பலத்தால் கிடைத்துவிட்டதே என்பதால், மற்றவர்கள், அந்த ஆணவத்தைச் சகித்துக்கொள்ள வேண்டியதாகிவிட்டது.

ஆணவத்தைப் பலரும் சகித்துக்கொண்டதால், "நாமே உலகிலே தலைசிறந்த அறிவாளி! நமது வீரதீரத்துக்கு ஈடு எங்கும் இல்லை! எனவேதான் இத்தனைபேர், நம்மிடம் அடங்கி ஒடுங்கிக் கிடக்கிறார்கள்' என்று அந்த ஆசாமி எண்ணிக் கொண்டு, மனம்போன போக்கிலே நடந்திடலானார்.

ஓவியத் திறனுடையார் அவரைக் கண்டு தம் கைத்திறனைக் காட்டுவர், பாராட்டுவார், பரிசளிப்பார் என்ற எண்ணத்தில். இவரோ, அலட்சியமாகப் பார்த்துவிட்டு, "ஓவியக்கலை என்பதே, காலத்தை வீணாக்கும் காரியம்!' என்று கூறி இகழுவார்.

களத்திலே, இவர் வீரர் என்று ஒருவரை அறிமுகப்படுத்து வார்கள்; "புலி இவரைவிட அதிக ஆட்களைச் சாகடித் திருக்குமே!'' என்று கேலி பேசுவார்.

"இவர் புலவர்!'' என்பார்கள்; "ஐயோ, பாவம்!'' என்று ஏளனம் செய்வார்.

பெருநிதியும் குறைமதியும் கொண்ட அந்தச் சீமானைக் காணச் சென்றான், அறிவுச் செல்வம் நிரம்பப் பெற்றிருந்த வறுமை நிலையினன். செருக்கு மிக்கவனாகத் தன் நண்பன் இருப்பதைக் கண்டான். எனினும், தன்னிடம் மட்டும் ஓரளவு "மதிப்பு' காட்டுவதறிந்தான்? ஆயின், இதுபோதும் என்றெண்ணி இருந்துவிடவில்லை. நண்பனுக்கு அறிவூட்ட விரும்பினான். கண்ணாடி பொருத்தப்பட்ட பலகணி அருகே நண்பனைஅழைத்துச் சென்று, "என்ன தெரிகிறது?' என்று கேட்டான். "ஏன்! எல்லாம்தான்! வெளியே உள்ள தோட்டம்; மலர்கள்; வீடுகள்; வண்டி வாகனங்கள்; நடமாடுவோர்; எல்லாம் தெரிகிறது. கண்ணாடி ஜன்னல்தானே, தெரிவதற்கு என்ன?'' என்றான் செல்வவான். புன்னகை புரிந்தான் அறிவாளன். வேறோர் புறமிருந்த முகம் பார்க்கும் கண்ணாடியைக் காட்டி, "அதைப் பார்! என்ன தெரிகிறது அதிலே?'' என்று கேட்டான். "பொல்லாத கேள்வி கேட்டுவிட்டாய், போ! அதில், நான் தெரிகிறேன்!'' என்றான், சீமான்! "நண்பா! இரண்டும், கண்ணாடிகள்! வெளியே உள்ளது எல்லாம் காண முடிகிறது, ஒன்றின் மூலம்! மற்றொன்றிலோ, உன்னைத் தவிர வேறொன்றும் தெரிவதில்லை. ஏன்? இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? ஒன்றிலே "ரசம்' பூசப்பட்டிருக்கிறது! "ரசம்' வெள்ளியிலிருந்து தயாரிக்கப்படுகிறது! பார்த்தாயா, ஒரு கண்ணாடியில் சிறிது வெள்ளி தடவியதும், வேறெதுவும் தெரியவில்லை; உன்னைத் தவிர! அதுபோலத்தான், உன்னிடம் பணம் குவிந்துவிட்டதால், உன்னைத் தவிர, வேறு எதுவும், உனக்குத் தெரியாது போய்விடுகிறது; பணம், கண்களை மறைத்து விடுகிறது என்றான். வெட்கம், சீமானை, வேலாகக் குத்திற்று.

"ரசம்' பூசப்பட்ட கண்ணாடி, போலாகிவிடுகிறார்கள், பணம் பெற்று, பண்பு கெட்டுவிட்ட நிலை அடைந்தோர்! பணம் மட்டுமல்ல; புகழ், பட்டம், பதவி, எதுவும்தான் பழைமையை மறந்துவிடச் செய்கிறது, புதிய நினைப்பு, முறுக்கு, ஏற்பட்டுவிடுகிறது! இயல்பே, மாறிவிடுகிறது.

பணம் மட்டும் குவிந்திருக்கும்போது, செருக்கு, பிறரைத் துச்சமாக எண்ணும் துடுக்கு, ஏற்பட்டுவிடும். எனினும், இருப்பது போய்விட்டால் என்னாகும், என்ற பயம் கூடவே பிறக்கும். எவன், கொள்ளையடித்துச் சென்றுவிடுவானோ, எவன் கொன்று போட்டுவிட்டுச் சொத்துக்களைப் பறித்துக் கொள்வானோ, என்ற பயம் பீடிக்கும். ஆணவம் ஒரு புறம், அச்சம் மற்றோர் புறம் இரண்டுக்கும் இடையே சிக்கித் தவியாய்த் தவிப்பான். ஆனால் பதவி கிடைத்துவிட்டாலோ, எவரையும் எதுவும் செய்துவிட முடியும் என்ற இறுமாப்பு, எவன் என்ன செய்துவிட முடியும் என்ற மண்டைக் கனம், எவனால் என்ன என்ற போக்கு,எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற பேச்சு, யாருக்கு நான் அஞ்ச வேண்டும்! என்ற நோக்குடன் நடவடிக்கைகள், இப்படிப் பலப்பல "நோய்கள்' ஒரு சேரக் குடி ஏறிவிடும். பதவியும், அதனால் கிடைத்திடும் அதிகாரமும் என்றென்றும் நிலைத்து நிற்கும் என்ற நினைப்பு தடித்துவிடும்; பிறகு நெரித்த புருவம், கனல் உமிழும் பார்வை, கடும் சொற்கள்!!

பொதுத் தேர்தலில் நானூறுக்கு மேற்பட்ட இடங்களைப் பிடித்த, மண்டாரிஸ் பதவி பெற்றதும், இனி எதுவும் செய்யலாம், எவரும் பணிவர் என்றெண்ணிச் செயல்படத் தொடங்கியது, இந்த "வகையைச்' சார்ந்ததே,

எதிர்க்கட்சிகள், இளைத்தும் களைத்தும் காணப்பட்டன நினைத்ததைச் செய்யும் வாய்ப்புக் கிடைத்தது மெண்டாரிசுக்கு! ஆனால் செய்தது என்ன? எந்த மக்கள், பேராதரவு தந்து, பெரியதோர் வெற்றி கிட்டிடச் செய்தனரோ, அவர்களின் நல்லெண்ணத்தை, நேசத்தை மேலும்மேலும் பெறுகிற வகையான காரியமா? அல்ல! அல்ல! கிடைத்த பதவி, என்றென்றும் தன் காலடி கிடந்திட வேண்டும்! கைகட்டி வாய்பொத்திக் கிடக்க வேண்டும், எதிர்க்கட்சிகள்! எவரும், தன்னை நத்திப் பிழைக்க வேண்டும்! என்றென்றும், எதிர்க்கட்சிகள் தலைதூக்க முடியாதபடி, தாக்கித் தகர்த்திடவேண்டும்! - என்ற இவ்விதமான நோக்குடன் காரியங்களைத் துணிந்து செய்து வந்தார். தம்பி! அவர் இப்போது ஒரு கைதி! நான் இதை எழுதும்போது, அவர், பட்டம் இழந்து, பதவி இழந்து, மாளிகைவாசம் இழந்து மாநிதியில் புரளும் நிலை இழந்து, என்ன வழக்குத் தொடரப்படுமோ, தண்டனை எதுவாக இருக்குமோ - சுட்டுத்தள்ளுவார்களோ, சிறையில் போட்டு அடைப்பார்களோ, என்ன நேரிடுமோ? என்ற எண்ணம் குடையும் மனத்தினராகி, மருண்டு கிடக்கிறார், சுருண்டு கிடக்கிறார்! துருக்கியின் துரைத்தனத் தலைவர் என்ற முறையில், ஈடற்ற செல்வாக்குடன் இருந்து வந்தார். இன்று, "ஏன்!' என்ற அதட்டும் குரலில், பாட்டாளத்துக்காரன் கேட்டால், "ஒன்றுமில்லை! மணி என்ன?' என்று பணிவுடன் பேசிடும் நிலைமை!!

ஆற்றலற்றவரோ எனின், அல்ல! மக்களின் பேராதரவைத் தேர்தலின்போது தன் பக்கம் திரட்டிடத்தக்க ஆற்றல் இருந்தது; அது மட்டுமல்ல, குவலயம் புகழப் பணியாற்றிய முஸ்தபா கமால் சமைத்தளித்த புதிய துருக்கியில் எழுச்சி, மறுமலர்ச்சி, விடுதலைஉணர்ச்சி பூத்திடச் செய்திடும் ஆற்றலையும் பெற்றிருந்தவர்தான், மெண்டாரிஸ்.

இரு கிழமைகளுக்கு முன்பு, பாரதப் பிரதமர் நேரு பண்டிதர், அங்காரா சென்றார்; அவரை வரவேற்று விழா நடாத்தியவர், மெண்டாரிஸ்! பவனி நடந்தது, விருந்து உண்டு! கூட்டறிக்கை, வழக்கப்படி!! மெண்டாரிஸ், துருக்கியின் முதல்வர்; நேரு, பாரதப் பிரதமர்! இருவரும் கூடி, உலகிலே சமாதானம் நிலவ, என்னென்ன செய்ய வேண்டும் என்றுகூடக் கலந்துரையாடினர்! அந்த மெண்டாரிஸ், இன்று படையினர் நடத்திய புரட்சியின் காரணமாக, பிடிபட்டு, சிறைப்பட்டு இருக்கிறார்.

நேரு - மெண்டாரிஸ், உரையாடிடக் கூடினரே, அப்போதே. துருக்கியில், குமுறல், பலமாக!! மெண்டாரிஸ் ஆட்சிக்கு எதிராக, இளைஞர்கள், குறிப்பாக மாணவர்கள், பெரியதோர் ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து நடத்திக்கொண் டிருந்தனர். நேருவை வரவேற்க மரியாதைக் குண்டுகள், வெடித்திடவில்லை. துரத்தித் துரத்தித் தொல்லை தந்த மாணவர்களைச் சுட்டுத்தள்ள, மெண்டாரிஸ் ஏவிய போலீஸ் நடத்திய தாக்குதலால், வேட்டுச் சத்தம் கேட்டவண்ணமிருந்தது. நேரு - மெண்டாரிஸ் சந்திப்பு, இந்தச் "சுவையான' சூழ்நிலையில்தான், நடைபெற்றிருக்கிறது. பஞ்சசீலம் பற்றிய பேச்சும், பாரிலே போர் இலாது ஒழிய வழி யாது என்பது பற்றிய உரையாடலும், அதே நேரத்தில்தான் நடைபெற்றிருக்கிறது.

"என்ன கிளர்ச்சி? எதிர்ப்பாளர் யார்?''

"விவரம் தெரியாத பள்ளிக்கூடத்துப் பிள்ளைகள்! செல்வாக்கிழந்த எதிர்க்கட்சிகள் தூண்டிவிட்டபடி ஆடிடும் சிறுவர்கள்.''

"என்ன வேண்டுமாம், அவர்களுக்கு?''

"நான், பதவியை விட்டுவிட வேண்டுமாம்!''

"பார்லிமெண்டில், நம்பிக்கையில்லாத் தீர்மானம், நிறைவேற்றிவிடுவதுதானே. அதுதானே முறை!''

"ஆமாம்! ஆனால் அங்கே வாலாட்ட முடியாதே! என் கட்சிக்கல்லவா, மிகப் பெரிய பலம் - உங்கள் காங்கிரஸ் கட்சிக்கு இருப்பதுபோல!''

"எதிர்க்கட்சிகள், தேர்தலில் போட்டியிடவில்லையோ?''

"காங்கிரசை எதிர்க்கவில்லையா பல கட்சிகள்! அதுபோலத்தான் இங்கும்! மக்கள் ஆதரவு கிடைக்கவில்லை, எதிர்க்கட்சிகளுக்கு.''

"அப்படி இருந்தும்...?''

"இப்போது தேர்தல் நடத்த வேண்டுமாம்...''

"நடத்தினால்...?''

"என் அரசு கவிழ்ந்துவிடுமாம்! மக்கள், ஆதரிக்க மாட்டார்களாம்!!''

தம்பி! நேரு - மெண்டாரிஸ் பேச்சு, இதுபோலத்தானே இருந்திருக்கும். தேர்தலில், ஒருமுறை மக்களின் "வாக்குகளை'த் திரட்டிக் குவித்துக்கொள்ள முடிந்ததால், அந்த மக்கள் ஆதரவு தன் பக்கம் நிலைத்து நிற்கும் என்றுதான், மெண்டாரிஸ், கருதினார். ஆனால் ஆட்சி கவிழ்ந்தது! மெண்டாரிஸ் "கைதி' ஆனார்! இராணுவம், ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டது! என்று அங்காரா வானொலி அறிவித்ததும், மக்கள் திரள் திரளாகக்கூடி, தெருவெல்லாம், களிநடமாடினராம். வீழ்ந்தது சர்வாதிகாரம்! வென்றது ஜனநாயகம்! என்று முழக்கமிட்டபடி, மக்கள், மெண்டாரிசைத் தேர்தலிலே ஆதரித்தனர்; உண்மை; ஆனால் எதற்கு? உரிமைகளைப் பாதுகாத்து வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, நல்லாட்சி நடத்துவார் என்பதற்காக. "ஓட்டு' போட்டாகிவிட்டது, இனி "இதுகளை' அடுத்த முறை அழைத்து ஓட்டு கேட்கிறவரையில், நாம் வைத்ததுதான் சட்டம்! - என்ற போக்கிலே, நடந்து கொண்டார், மெண்டாரிஸ்.

மக்களாட்சி முறையிலே, மறைந்திருந்து கேடு விளை விக்கும் மனப்போக்கு இது. ஒருமுறை "ஓட்' அளித்துவிட்டால், அந்த மக்கள், மறுதேர்தல் வருகிறவரையில், ஆட்சிப் பொறுப்பை ஏற்றோர், எது செய்திடினும் ஏற்றுக்கொள்ள வேண்டும்; எதிர்த்திடலாகாது; ஏமாற்றம் ஏற்பட்டாலோ,எரிச்சல் மூட்டப்பட்டாலோ அடுத்த தேர்தலின்போதுதான், தமது எண்ணத்தை மக்கள் காட்டலாமேயொழிய, இடையில் "ஏன்' என்று கேட்பதும், எதிர்த்துக் கிளர்ச்சி நடத்துவதும், ஜனநாயகப் பண்பு ஆகாது - என்ற கருத்தை, தத்துவமாக்கி, அதைக் கொண்டே மக்களைத் தாக்கி, அடிப்படை உரிமைகளுக்கு உலைவைக்க, ஆட்சியாளர் முனைகின்றனர். மெண்டாரிஸ் அம்முறைதான் கைக்கொண்டார்; இன்று கைதியாகிக் கிடக்கிறார். வேறு பல இடங்களிலே, அதே முறையை, "ஜனநாயகவாதிகள்' கையாண்டு வருகிறார்கள்; உணர்ச்சியற்று, அச்சம் மேலிட்டு மக்கள், அந்தக் கொடுமையைத் தாங்கிக்கொள்கின்றனர் தம்பி! மெண்டாரிஸ் பாலங்கள் கட்டாதிருந்திருப்பாரா, பள்ளிகள் திறந்திடாதிருந் திருப்பாரா, தொழிற்சாலைகள், பாதைகள் விஞ்ஞானக் கூடங்கள், விளையாட்டிடங்கள், எல்லாம்தான் அமைத்திருந் திருப்பார்! எனினும் உரிமையை அழிக்கிறார்; அடக்குமுறையை ஏவுகிறார்; ஒரே கட்சி ஆட்சிக்கு வழிகோலுகிறார் என்று தெரிந்ததும், மக்கள் சீறி எழுந்தனர்: சரிந்தது மெண்டாரிசின் ஆட்சி! உரிமை உணர்ச்சி அந்த வகையில் அங்கு கொழுந்துவிட்டு எரிகிறது. இங்கு? இந்தி படித்தால்தானே, பிழைப்பு!! துணிந்து உத்திரவிடுகிறது, துரைத்தனம்! பணிந்து "பாஷ்யம்' கூறுகிறார்கள், இங்குள்ள மந்திரிகள்! பரிவுடன் ஆதரிக்கின்றன, ஏடுகள்! பல்லிளித்தபடி, படித்தால் என்ன? என்று கேட்கின்றனர். பராக்குக் கூறுவோர். பார்த்தாயா, தம்பி! துருக்கியை!! "கற்கோட்டை' என்றனர், மெண்டாரிசின் கட்சி ஆட்சியை - கலகலத்துப்போய் விட்டது - ஆறே மணிநேரம் நடைபெற்ற இராணுவப் புரட்சியால், எதிர்க்கட்சிகளை ஒழித்திட, போலீசை ஏவினார் மெண்டாரிஸ்; இராணுவம், தன் பலத்தை ஏவி, மெண்டாரிசை வீழ்த்திவிட்டது. இராணுவம் என்றால், வேற்று நாட்டானுடன் போரிட்டு மடிய, ஊட்டி வளர்க்கப்படும் பலிக்கிடாக்கள் உள்ள கொட்டடி என்ற நிலைமாறி, அதிகாரத்தைக் கைப்பற்றினோர், அக்ரமமாக நடக்க ஆரம்பித்தால், மக்களை மதியாது மனம் போன போக்கில் நடவடிக்கைகளை வகுத்துக்கொண்டால், ஜனநாயக முறைக்கு அடிப்படையாக உள்ள "எதிர்க்கட்சி'யை அழித்தொழிக்க அதிகாரத்தைப் பயன்படுத்தினால், குறுக்கிட தடுத்திட, களைந்திட முன்வந்து, நாட்டைக் குழப்பக்காடு ஆகிவிடாதபடி பார்த்துக்கொள்ளும் பொறுப்புள்ளோர் நிரம்பிய பாசறை என்பது விளக்கப்பட்டிருக்கிறது.

நினைத்தபடி "சட்டம்' செய்திடும் வாய்ப்புப் பெற்றிருந் தார், மெண்டாரிஸ். மிகப் பெரும்பான்மையினராக அவருடைய கட்சி, பார்லிமெண்டிலே இருந்ததால்! இங்கு நாம் காணுகிறோமல்லவா, "மெஜாரட்டி' கட்சி நடந்து கொள்ளும் போக்கினை! மக்களாட்சியிலே, எதைக் காட்டியோ, நீட்டியோ, கூறியோ, "ஓட்டுகளை'க் குவித்துக்கொண்டு, ஆளவந்தார், ஆகிவிட்டால், அடே அப்பா! அவர்களுக்குத்தான், எத்துணை ஆணவம் பிடித்துக்கொள்கிறது!

அகில உலகத்து அறிவும், திரட்டி உருட்டித் தம்மிடம் தரப்பட்டிருப்பது போலல்லவா, ஆளவந்தார்கள் மட்டுமல்ல, அங்கு எலும்புத் துண்டுகளுக்காக, நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டிருக்கும் சில்லறைத் தேவதைகள்கூடப் பேசுகின்றன. மற்றவர்களுக்கும், பொறுப்பு உண்டு, புத்தி உண்டு, கடமை உண்டு, என்றா எண்ணுகிறார்கள். நாங்கள் 150! நீங்கள் 15!! போதாதா விளக்கம்! இதைக் காட்டிலும் வேறு என்ன காரணம் நாங்கள் கூறவேண்டும், எங்கள் போக்குக்கு என்றல்லவா பேசுகிறார்கள்.

கவைக்குதவாத பேச்செல்லாம் கற்றறிவாளர் முன் பேசத் துணிகிறார்கள்; கை ஒலியும் எதிர்பார்க்கின்றனர்.

முரண்பாடாகப் பேசுகிறார்கள், சுட்டிக் காட்டினால், அதட்டி உட்கார வைக்கின்றனர்.

"ஊழல் நிரம்பிக் கிடக்கிறதே, ஆட்சியில்' என்று வருத்தம் தோய்ந்த குரலிற் கூறிடும் போதும், "முட்டாள்களுக்கு அப்படித்தான் தோன்றும்' - என்று பேசுகிறார்கள்.

எங்கிருந்து பிறக்கிறது, ஆணவம்? எண்ணிக்கை பலம்!! அசைக்க முடியாது; சட்டசபையில் நாம்தான் "மெஜாரிட்டி' - என்ற செருக்கு. தம்பி! துருக்கியில் நிலைத்ததா, அந்தச் செருக்கு! துக்கம் துளைத்திடும் நிலையில், துரைத்தனம் இழந்து, மெண்டாரிஸ் கிடக்கிறார்; இதுமட்டும்தானா! இன்னும் ஏதேனும், காத்திருக்கிறதா, என்ற அச்சம் இப்போது அவருக்கு!! துருக்கியில் மக்களின் உரிமையை அழித்திடக் கிளம்பும் சக்தி எதுவாக இருப்பினும், அதனைச் சாய்த்திடத்தக்க, ஆற்றல் எழுந்தது; வென்றது. இங்கு? இப்படித்தான் செய்வோம்! தடுத்திட யார்? மக்கள் எங்களிடமல்லவா ஓட் கொடுத்து ஆளச் சொல்லியிருக்கிறார்கள்! தெரியாதா? கூறட்டுமா! நாங்கள் 150!! நீங்கள் 15!! - என்றல்லவா பேசுகிறார்கள். 150 என்ற எண்ணிக்கைஅல்லவா, காமராஜரை, பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவிலும், வழக்கறிஞர்கள் சங்கக் கூட்டத்திலும், பேச வைக்கிறது!! எங்கும் பேசலாம்! எதையும் பேசலாம்! எப்படியும் பேசலாம்!! - என்பது, எவ்விதம் கிடைத்தது? 150! வேறென்ன!!

இதைவிட, மிக அதிகமான அளவிலேதான், மெண்டாரிஸ் கட்சிக்கு, எண்ணிக்கை பலம். ஆயினும், என்ன நடந்தது? எந்த நேரத்திலும், மக்களின் உரிமைக்கு மேலான சக்தி வேறில்லை என்பது நிலைநாட்டப் பட்டுவிட்டது!!

"துருக்கியில் விடுதலைப்போர் மூண்டகாலை, நானாற்றிய வீரத் தொண்டுகளை உலகு அறியுமே! மக்கள் அறியமாட்டார் களா!! கமால் காட்டிய வழியில் துருக்கியை அழைத்துச் செல்லும் ஆற்றல் கொண்டவனன்றோ, நான்! என்னை, எந்த எதிர்க்கட்சி தூண்டிவிட்டாலும், எதிர்க்கத் துணிவார்களா! எதிர்ப்பு முளைத்தாலும், முளையிலேயே கிள்ளி எறிந்திடத் தெரியாதா! சட்டத்தை நிலைநாட்ட, பலாத்காரத்தை ஒடுக்க, பயங்கர இயக்கத்தை அழிக்கத்தானே போலீஸ் இருக்கிறது. அந்தப் போலீஸ், என் சுட்டு விரல் காட்டும் வழி நடக்க இருக்கும்போது, கூச்சல்கள், குழப்பங்கள், ஆர்ப்பாட்டங்கள், எத்தனை நாளைக்கு நடக்கும்? வாய்வலிக்குமட்டும் கத்துவார்கள்! கால் கடுக்குமட்டும் சுற்றுவார்கள்! உதை கிடைக்குமட்டும் உலாவுவார்கள்? - என்றெல்லாமல்லவா, மெண்டாரிஸ், எண்ணி இறுமாந்து கிடந்திருப்பார்.

ஆட்சியைக் கைப்பற்றியதும், அடக்கம் அழிந்துபட்டு விடுகிறது, தம்மைப்பற்றிய நினைப்பு தலைக்கேறி விடும் போக்கினருக்கு!

காரணம் கேட்டால், கோபம் கொப்பளிக்கிறது; வாதாடினால், கண்கள் சிவந்துவிடுகின்றன.

உரிமை முழக்கத்தைக், காட்டுக்கூச்சல் என்றும், கிளர்ச்சியைக் குழப்பமென்றும், வீரர்களைக் காலிகளென்றும் அறிவாலயப் பயிற்சி பெற்றோரைச் சிறுபிள்ளைகள் என்றும், கூறத் தோன்றுகிறது.

சிறு பிள்ளைத்தனம் - காட்டுமிராண்டித்தனம் - அறிவற்ற தனம் - என்று நேரு பண்டிதர், என்னென்ன அர்ச்சனைநடத்தினார், உரிமையை அழிக்கலாமா என்று தமிழர் தலைவர் கேட்டபோது!! மெண்டாரிஸ் அதுபோல, என்னென்ன பேசியிருப்பார்; இழிமொழிகளை வீசியிருப்பார்! கைமேல் பலன் கிடைத்துவிட்டது, மெண்டாரிசுக்கு - கைதியாகிக் கிடக்கிறார்.

பத்து நாட்களுக்கு முன்பு வரை, அவரைப் பார்த்தால் வணக்கம் கூறி நின்றவர்கள்தான், இராணுவத்தார் மரியாதை அணிவகுப்புகளைக் கண்டு பெருமிதமடைந்தவர்தான், மெண்டாரிஸ். இந்த "யோகம்' என்றென்றும் இருக்கும் என்று எண்ணினார், ஏமாந்தார்!!

தம்பி! இந்த மெண்டாரிஸைவிட, வீரதீரமிக்கவர், வெஞ்சமர் நடத்தி வெற்றி பல கண்டவர், தென் கொரிய நாட்டுத் தலைவர் சிங்மன் ரீ! ஹவாய் தீவுசென்று, அடைக்கலம் தேடுகிறார் இன்று!! ஜப்பானை எதிர்ப்பேன்! சோவியத்தை ஒழிப்பேன்! என்று அவர் பேசிய வீரப்பேச்சு கொஞ்சமல்ல. தென் கொரியாமீது, யார் கைவைத்தாலும் ஒழித்துக்கட்டி விடுவேன் என்று உருட்டி மிரட்டிப் பேசிவந்தார், இந்த முதியவர்; வயது 90க்குக் கிட்ட.

தென் கொரியா மட்டுமல்ல, உலகெங்கும், சிங்மன் ரீயின் ஆற்றலை, அஞ்சா நெஞ்சினைப் பாராட்டினர்.

எத்துணை ஆபத்துகளை எதிர்த்து நிற்கிறார்! கஷ்டங்கள் அடுக்கடுக்காக வருகின்றன, கலங்கவில்லை! எங்கும் எதிரிகள் சூழ்ந்துகொண்டபோதிலும் புறமுதுகு காட்டாது போரிடுகிறார். தள்ளாத வயது, எனினும், களம் அமைக்கிறார், படை கூட்டுகிறார், பாசறை ஏற்படுத்துகிறார், இரத்த வெள்ளத்தில் நீந்துகிறார், இவரன்றோ வீரர்! - என்று வியந்து கூறினர். இருபது ஆண்டுகளுக்கு மேலாக, ரீ சொல்வதுதான் சட்டம் - தென் கொரியாவில் நாட்டு மக்கள் அத்துணைபேரும், ரீதான் கண்கண்ட கடவுள், மானத்தைக்காத்த மாவீரன் என்று புகழ் பாடினர். கட்டிளங்காளைகள் ரீயைச் சுற்றி நின்று, கட்டளைக்குக் காத்துக் கிடந்தனர். ஐசனோவர் "என் அருமருந்தன்ன நண்பர்' என்று பாராட்டினார் ரீயை! கேட்ட பணத்தைத் தட்டாமல் தயங்காமல் கொட்டிக் கொடுத்தார்! இடிபாடுகள் நிரம்பிய இடத்தை எழிலிடம் ஆக்குவேன்! பயந்துகிடந்த மக்களை நிமிர்ந்து நடந்திடச் செய்வேன்! என்று சூளுரைத்துப் பணியாற்றினார்; தென் கொரிய ஆட்சியைஎதிர்ப்பின்றி நடத்தி வந்தார். அவர்தான், தம்பி! ஊரறியாமல், ஓடினார், புகலிடம் தேடி!! சிக்கிக்கொண்டால், சித்திரவதை செய்து விடுவார்கள் என்ற கிலி! பிடிபட்டால், பிய்த்தெடுத்து விடுவார்கள் என்ற பீதி! கோபம் காட்டுத் தீ கோலத்தில் தென் கொரிய நாட்டில்! இதிலே வீழ்ந்தால், கருகிப்போய்விட வேண்டும் என்ற கிலி! சென்றிருக்கிறார். அதற்குள், படாத பாடுபட்டு விட்டார்; பணிந்துகிடந்தோர் பதைத்து எழுந்தால் என்ன நேரிடும் என்பதைப் பார்த்துவிட்டார்!

மக்கள் கடலென ஒலி கிளப்பி, அவரை வாழ்த்திய காலம் உண்டு! இப்போது? "பிடித்திழுத்து வாருங்கள் அந்தப் பேயனை' - என்று கூவுகிறார்கள்! அந்தத் தேசியத் தலைவனோடு, களம் சென்று நிற்பது பெரும்பேறு என்று பேசினர், முன்பு; இப்போது அந்தக் கொலைகாரன் எங்கே! கொள்ளையடித்தோன் எங்கே! கொடியோன் எங்கே! என்று தேடுகின்றனர்; ஓடோடிச் சென்று பதுங்குகிறார், ரீ.

அன்பால் அபிஷேகித்தோம், அக்ரமக்காரன் என்பதை அறியாமல்! பக்கம் நின்று பணிவிடைசெய்து வந்தோம் படுகொலைகளைக் கூசாது நடத்திய கொடியோன் என்பதைத் தெரிந்துகொள்ளாமல்! நாட்டை மீட்டவன் என்று பாராட்டினோம், நாசகாலனை!! - என்றெல்லாம் இன்று மக்கள் ஆத்திரத்துடன் குரலெழுப்புகின்றனர்; குலைநடுக்கம் கண்டுவிட்டது சிங்மன் ரீக்கு; குண்டுக்குப் பயந்துகொண்டு ஓடியே விட்டான்.