அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


பெரிய புள்ளிகள்
2

சீங்மன் ரீகூட மக்களிடம், மலைக்கத்தக்க அளவு செல்வாக்குப் பெற்றிருந்த தலைவன்தான்! மழைக் காலத்துக் காளான் அல்ல! இரத்தத் தடாகத்திலே பூத்ததோர் புரட்சி மலர் என்ற புகழுரையைப் பெற்றவன்.

தேர்தலில் சிங்மன் ரீயின் கட்சிக்குத்தான், மிகப் பெரிய வெற்றி! மற்ற கட்சிகளில் பலர், மண் கவ்வினர்!! ஆட்சி மன்றத்திலே, ரீ கட்சிதான் மிகப் பெரிய எண்ணிக்கை பலத்துடன். அந்த எண்ணிக்கை பலத்தைக் காட்டி, சிங்மன் ரீ, காட்டாட்சி நடாத்திடலானான். என்றென்றும் அதிகாரம் தன்னிடம் இருக்க வேண்டும் என்ற நோக்கம்கொண்டு மாற்றுக் கட்சியினரை. அழித்திடலானான். மக்கள் நீண்ட நாட்கள், ரீயின் போக்குக்கு, இடமளித்து வந்தனர்.

கோபவெறி பிடித்து அவன் அலைந்தபோதும், "என்னமோ சுபாவம் இப்படிக் கெட்டுவிட்டது; என்றாலும், தென் கொரியநாட்டுக்காக, ரீ ஆற்றிய மகத்தான பணியினை மறந்திடலாமா!' - என்று பேசினர் - பணிவுடன் நடந்துகொண்டனர்.

ஆணவச் செயல்களை துவக்கத்திலே, எதிர்த்திடவில்லை; சிங்மன் ரீ தானாகத் திருந்திவிடுவான் என்று எதிர்பார்த்தனர்.

சிங்மன் ரீயோ, தென் கொரிய நாடு இன்றுள்ள நிலையில், நாம்தான் "இரட்சகன்' ஆகவேண்டும் என்று எண்ணினான்.

தேர்தல் வரட்டும், நமது தீர்ப்பைத் தருவோம் என்று மக்கள் துடித்துக் கிடந்தனர். "தேர்தல் தானே! அதை எப்படி நடத்துவது என்பதுதானா, எனக்குத் தெரியாது! தேர்தலில் வெற்றிபெற்றுக் காட்ட வேண்டும்; அவ்வளவுதானே! இதோ, காட்டுகிறேன் வெற்றி!! என்றான், தில்லுமுல்லுகள் பல செய்து, தேர்தலில் மீண்டும் தன் கட்சிக்கே, மிகப்பெரிய அளவில் வெற்றி என்று அறிவித்தான். மக்கள் திகைத்தனர்.

ஊரெல்லாம் எதிர்த்து, உணர்ச்சி உள்ளோரெல்லாம், ரீ ஆட்சிக்கு எதிர்ப்பு காட்டினர்! எனினும் ரீ கட்சி அல்லவா, மீண்டும் வெற்றி பெற்றிருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். எப்படிக் கிடைத்தது இந்த வெற்றி? எவரைக் கண்டபோதும், உழவராயினும், தொழிலாளராயினும், பாமரராயினும் படித்தோராயினும், இம்முறை எமது ஆதரவு ரீ கட்சிக்கு இல்லை என்றல்லவோ, கூறி வந்தனர். எனினும் வெற்றிப் பட்டியலைக் காட்டுகிறாரே, சிங்மன் ரீ எப்படி முடிகிறது, வெற்றி பெற!! - என்று திகைத்த மக்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக் கொண்டனர்.

வெற்றி காட்டுகிறார்! பெறவில்லை!! - என்பது விளங்கிற்று. வெகுண்டெழுந்தனர் அந்தச் சூது அம்பலமானதும்.

ஆட்சிப் பீடத்தில் அமர்ந்திருந்ததால், அதிகாரிகளை ஏவி மக்களை மயக்கவும் மிரட்டவும் முடிந்தது. பணப்பெட்டிகளைப் பெற்றிருந்ததால், ஓட்டுகளை' "விலை' கொடுத்து வாங்கிட முடிந்தது. மக்கள் மனமுவந்து தராவிட்டாலும், "ஓட்டுகளை'த் தம் பெட்டியில் போட்டுக்கொள்ளும் வழி, ஆட்சிப் பீடத்தில் இருந்ததால் கிடைத்தது. பெட்டிகளையேகூடக், குறைக்க, மறைக்க, உடைக்க, முடிந்தது! எல்லாவிதமான சூது சூழ்ச்சிகளையும் செய்து தேர்தல் வெற்றியைத் தயாரித்துக்கொள்ள முடிந்தது. அந்த வெற்றிப் பட்டியலை நீட்டி, முணுமுணுத்துக் கிடந்தோரே! இப்போது என்ன சொல்லுகிறீர்கள்? எதிர்த்துப் பேசினோரே! மக்கள் எவர் பக்கம் என்பதை எடுத்துக் காட்டி விட்டதேதேர்தல் வெற்றி. இனி என்ன இருக்கிறது பேச? - என்று சிங்மன் ரீ கட்சியினர் கொக்கரித்தனர்.

ஏமாற்றப்பட்டுவிட்டோம்! சூது நடந்துவிட்டது! வெற்றி வெற்றி என்று வெறிக் கூச்சலிடுகிறார்கள் - பெற்றது வெற்றி அல்ல, வெறும் புரட்டு! வன்கணாளரை வீழ்த்தி வாகை சூடிடலாம் என்று நம்பிக்கொண்டிருந்தோம். எப்படியோ வஞ்சிக்கப்பட்டுப் போய்விட்டோம்! - என்று மக்கள் கொதித்தெழுந்து கூறினர். காட்டிடேன், வெற்றி போதாதா? என்று பேசிச் சிரித்தான், சிங்மன் ரீ!

கழகம் வளருகிறது வளருகிறது என்று பேசுகிறார்களே, கூட்டம் கூடுகிறது கூடுகிறது என்று கூறுகிறார்களே, ஓட் டெல்லாம் எமக்கன்றோ கிடைக்கிறது, பார்க்கிறீர்களல்லவா, என்று இங்கு பேசவில்லையா காமராஜர்! பண பலம், பத்திரிகை பலம், அதிகாரம் தரும் பல்வேறுவிதமான வாய்ப்புகள் இவை யாவும் சேர்ந்து, தேர்தலில் வெற்றிபெற்றுத் தருகிறது; இதை மக்கள் ஆதரவு என்றல்லவா கூறுகிறார் காமராஜர்! அவருக்குக் கிடைத்திருப்பதைவிட, மிக அதிகமான வாய்ப்புகள் வசதிகள் ரீக்கு! எனவே எல்லா வகையான புரட்டுகளையும் செய்து, பெட்டிகளை நிரப்பிக்கொள்ள முடிந்தது. புரட்டு வென்றது, புரட்சி அழிந்தது என்று எண்ணினார் ரீ; ஆனால் புரட்சி அழிந்துபடவில்லை, புது வேகம் பெற்றது. சிங்மன் ரீ ஆட்சியிலே நடக்கும் அக்ரமங்களிலே, அநீதிகளிலே, ஒன்று இந்த தேர்தல் வெற்றி! - என்று மக்கள், பேசலாயினர். தோற்றதால் குளறித் திரிகிறார்கள் என்றனர், ரீயினர் பெற்றது வெற்றி அல்ல, என்பதை உலகறியச் செய்வோம் என்று ஆர்த்தெழுந்தனர் மக்கள் - மாணவர் முன்னணி நின்றனர் - ரீ, போலீசை ஏவினார் -மக்கள் தாக்கப்பட்டனர் சுட்டுக் கொல்லப்பட்டனர், உடனிருந்தோர் பிணமானது கண்டதும், மற்றையோரின் குருதி கொதித்தது. இரத்த வெள்ளத்திலே, தமது நண்பர்கள் வீழ்ந்திருக்கக் கண்டதும், மற்றவர் சீறும் புலியாயினர். இதுதானே முடியும் உன்னால் சாகடிக்க! சரி! மானமழிந்து, மண்டியிட்டுக் கிடப்பதைவிட, இதோ இறந்துபட்டனரே, எமது ஆருயிர்த் தோழர்கள், அதுபோல மடிந்து போவதே மேல்; ஆனால் இறந்துபடுமுன்பு, இந்தக் கொடியோரின் கோல் முறிந்திட வேண்டும். குத்தட்டும், வெட்டட்டும் குண்டடி தரட்டும், அஞ்சப்போவதில்லை, இந்த ஆட்சியின். சூது சூழ்ச்சியினை அம்பலப்படுத்தியே, தீருவோம் என்று முழக்கமிட்டனர், மக்கள்.

பல்கலைக் கழகம் சென்று படித்து, டாக்டர்களாய், வழக்கறிஞர்களாய், பொறியியல் வல்லுநராய், ஆசான்களாய், விஞ்ஞானிகளாய், தளபதிகளாய், நிர்வாகிகளாய், திகழ வேண்டிய மாணவமணிகள், குண்டடிபட்டனர். இரத்தம் "குபுகுபு'வென வெளிவரக் கண்டும் கலங்காது, புன்னகை புரிந்து, உயிர்போகப் போகிறது! கவலையில்லை! கடமையைச் செய்தேன்! விட்ட இடத்திலிருந்து தொடங்கி, மற்றதைச் செய்து வெற்றிபெற நீவீர் இருக்க, நான் கவலைப்படுவானேன்! என் பங்கு நான் செலுத்திவிட்டேன்! என்று கூறிச் சாய்ந்தனர்! இறந்துபட்ட இளைஞர்களின் இரத்தத்திலே, சாக அஞ்சாத மற்றவரின் கண்ணீர் கலந்தது. அணுபிளக்கப்பட்டது போன்றதோர், நிலை! புதியதோர் சக்தி பிறந்தது! புயல் வீசிற்று! போரிலே பழக்கம், ரீக்கு பயிற்சியும்கூட ஆனால் இந்தப் புயல் வேறுவிதமானது! அடக்கப் பார்த்தார், அலுத்துப் போனார்! ஆட்சி கவிழ்ந்தது! ஆணவம் அழிந்தது! வெளியே தலைகாட்ட அஞ்சினார்! விரண்டோடிவிட்டார், ஹவாய் தீவுக்கு!!

தேர்தலிலே, எப்படியோ வெற்றிபெற்றுக் காட்டி விட்டால் போதும், நாடு காலடி கிடக்கும், மக்கள் மண்டியிட்டுக் கிடப்பர், எதிர்ப்பு இருக்குமிடம் தெரியாமல் அழிந்தொழியும் என்று எண்ணுவது எத்துணை பேதமை என்பதைத் தென் கொரிய நாட்டு நிகழ்ச்சி காட்டிவிட்டது! ஆனால் அது தென் கொரியா! உரிமை உணர்ச்சியால் உந்தப்பட்டவர்கள், உயிர் கொடுத்தேனும் உரிமையைக் காத்திட வேண்டும் என்று கிளர்ந்தெழுந்தனர். இது? தெளிவுபேசித் தேம்பிக்கிடந்திடப் பழகிப்போன தமிழ்நாடு! எனவேதான் இங்கு தேர்தலில் வெற்றிபெற்றுக் காட்டினால் போதும் என்ற போக்கிலே காங்கிரஸ் தலைவர்கள் நடந்துகொள்கிறார்கள். அவர்களை எதிர்ப்பானேன், அல்லற்படுவானேன்! - என்று எண்ணிடும் போக்கினர் மிகுந்துவிட்டனர். தம்பி! உன்போன்றார் மட்டும் போர்க்கொடி உயர்த்தியபடி உள்ளனர். மற்றவர்கள் மண்டியிட்டுக் கிடக்கும்போது, இதுகளுக்கு, எவ்வளவு மண்டைக் கனம், நம்மை எதிர்க்கிறார்களே என்று எண்ணி, காமராஜர் கடுங்கோபம் கொள்கிறார். காலை மாலை என்று பாராமல், காடு மேடு என்றும் யோசிக்காமல், சுற்றிச்சுற்றி வருகிறார், திட்டித்திட்டுத் திரிகிறார். பட்டிதொட்டி எல்லாம் அவர் பரணி! பத்திரிகைகளிலே, அவர் பேச்சு!!

மெண்டாரிஸ் "கைதி' ஆகியுள்ள நேரம், சிங்மன்ரீ விரண்டோடிய காலம், காமராஜர், பவனி வருகிறார் எதிர்க்கட்சிகளை ஒழித்துக்கட்டுவேன், என்னை எவன் என்ன செய்ய முடியும்? - என்று, கொக்கரித்தபடி!

தம்பி! மெண்டாரிஸ் முழக்கமிடத் தெரியாதவரல்ல! அவர் "கைது' செய்யப்பட்ட நேரம்கூட, அவர் முழக்கமிட ஒரு மாவட்டத்திலே சுற்றுப்பயணம் நடத்திக்கொண்டிருந்த நேரம் தான்!! இராணுவம் தலையிட்டு, அவரைச் சிறைப்படுத்தா திருந்தால், மெண்டாரிசும், காமராஜரைவிடக் காரசாரமாக ஊரூர் சென்று பேசித்தான் இருப்பார், "எவனும் எதுவும் செய்ய முடியாது! எவனுக்கும் எதுவும் தெரியாது! எந்தக் கட்சியும், எம்மை அசைக்க முடியாது! எங்களால்தான். ஆட்சி நடத்த முடியும்!'' என்றெல்லாம். அவ்விதமான பேச்சைக் கேட்டுக் கேட்டுப் புளித்துபோய் விட்டது. ஆளவந்தாராக இருக்கிற ஒரே காரணத்துக்காக, பேசுவதைக் கேட்டுக்கொள்கிறார்களேயன்றி, பேச்சிலே அறிவு ததும்புகிறது என்பதனால் அல்ல! மக்கள் மனம் கொதித்துக் கிடக்கிறது, எந்தச் சமயத்திலே வந்தது வரட்டும் என்று கிளம்புவார்களோ, என்னென்ன அழிவுகள் நேரிட்டுவிடுமோ! - என்று எண்ணினர், இராணுவத்தினர். இனியும் இந்த போலித்தனத்தை, கேலிக்கூத்தை விட்டுவைக்கக் கூடாது என்று முடிவு செய்தனர். மெண்டாரிசைக் கண்டு அழைத்தனர்; எங்கு? என்று கேட்டார், மெத்த உழைத்துவிட்டீர்கள், எனவே சிறிது காலம், ஓய்வு எடுத்துக்கொள்ள வாருங்கள்! - என்றனர். சிறையா? என்று குழம்பிக் கேட்கிறார், மெண்டாரிஸ்! செச்சே! அங்கு அனுப்புவோமா தங்களை! அனுப்பினால் உயிரோடு திரும்பி வெளிவரத்தான் முடியுமா! உண்மையை உரைத்ததால், உரிமைக்குப் பரிந்து பேசியதால், நீதி கேட்டதால், நேர்மையைக் காட்டியதால் உமது கோபத்துக்கு ஆளாகி, உள்ளே தள்ளப்பட்டிருக்கிறார்களே பலர், அவர்களின் கோபப் பார்வை போதுமே, உம்மைச் சாகடிக்க! சிறை சென்றால் சித்திரவதை நேரிடும்! உம்மை அங்கல்ல, அழைத்துச் செல்வது! எமது முகாமுக்கு!! என்று கூறி இழுத்துச் சென்றனர்,

* * *

கபிஸ்தலம் மூப்பனார், பூண்டி வாண்டையார், நெடும் பலத்தார், வடபாதிமங்கலத்தார், எனும் "ஏழைகள்' புடைசூழ, "வீடு நமக்குத் திருவலங்காடு, உண்டு கையில் திருவோடு' என்ற பாசுரம் பாடிடும் பற்றற்ற காமராஜர், மக்களை நேரடியாகக் கண்டு பேச, குறைகளை அறிய, தீர்க்க, தஞ்சைத் தரணியிலேசுற்றுப்பயணம் நடத்தினார் - அதுமட்டுமல்ல அவர் நோக்கம்; மிட்டா மிராசுகளின் கையாட்களாக உள்ள தீனாமூனாக்காரர் களையும் அழித்திட வேண்டும் என்பதாம். கபிஸ்தலம் மூப்பனார், வடபாதிமங்கலத்தார், நெடும்பலத்தார் என்போரெல்லாம், தெரியுமா தம்பி! காலையிலே கலப்பை தூக்கிக்கொண்டு கழனி சென்றால், மாடு அலுத்துப் படுத்தாலும் தாம் படுத்திடாமல், பாடுபடும் ஏழை உழவர்கள்! கடித்துக்கொள்ள ஒரு துண்டு மிளகாய் வத்தல்கூடத் தேடாமல், புளித்த கஞ்சியைக் குடித்துவிட்டுப், பாடுபடும் விவசாயிகள்! ஓலைக்கொத்துக் குடிசை! கந்தல் பாய்! கைதான் தலையணை, இவர்களுக்கு. உழைத்துப் பிழைத்திடும் உத்தமர்கள். ஊரார் வாழ உழைத்திடும் உத்தமர்கள்! காடு திருத்திக் கழனியாக்கி நாடு வாழ நற்பணியாற்றிடும் நல்லவர்கள்! அவர்கள் பட்டுப் பட்டாடையைத் தொட்டும் பார்த்ததில்லை, தங்க நகையைத் தீண்டினதில்லை. வைரம் தெரியுமா? என்று கேட்டால் எந்த மரம் வைரம் பாய்ந்திருக்கிறது? என்றுதான் கேட்பார்கள் - விலையுயர்ந்த அணி வைரம் என்பதும் அறியாதவர்கள். அப்படிப்பட்ட ஏழைகளை அழைத்துக்கொண்டு, மூன்று மிட்டாக்களுக்குச் சொந்தக்காரரான குடந்தை நீலமேகமும், இரும்புப் பெட்டியிலே எட்டு இலட்சம் வைத்திருக்கும் சின்னத் தம்பியும், கரும்புத் தோட்டத்திலே வருஷம் கால் கோடி பெற்றிடும் இளங்கோவும், பஸ் முதலாளி பட்டுவும், ஆலை முதலாளி பெத்தண்ணனும், கோலாகல வாழ்வு நடாத்திடும் கொடவாசல் கிருஷ்ணமூர்த்தியும், வட்டி வியாபாரத்தில் பெரும் பொருள் ஈட்டிடும் மாயவரம் கிட்டப்பாவும், மாளிகைகளை ஊரூர் அமைத்துக்கொண்டு மனோஹர வாழ்வு நடாத்தும் மன்னார்குடி நாராயணசாமியும் - என்று இவ்விதம் இருக்கிறார்களல்லவா, நமது கழகத்தவர், இவர்களிடமிருந்து நாட்டைக் காப்பாற்றி, நான் முன்பு காட்டினேனே, பாட்டாளித் தோழர்கள், உழைப்பின் உருவங்கள், ஊர் வாழ உழைப்போர், சொத்து சுகம் இல்லாதவர், கடினமான உழைப்பாளிகள், கபிஸ்தலம், நெடும்பலம், வடபாதிமங்கலம் போன்றாரிடம், நாட்டை ஒப்படைக்க வேண்டும். அப்போதுதான் நாடு சீர்படும், நல்லாட்சி ஏற்படும் என்ற திருத்தொண்டிலே ஈடுபட்டு, அந்தத் திருவாசகத்தை ஊரெல்லாம் முழக்கிக் கொண்டு, "புனித யாத்திரை' நடாத்திக்கொண்டு வருகிறார். பெண்டா பிள்ளையா எனக்கு, எனக்கென்ன மாதச் சம்பளம் ஆயிரத்துக்குமேல், எனக்கு வேண்டியதெல்லாம் கட்டிக் கொள்ள நாலுமுழ வேட்டியும், போட்டுக்கொள்ள ஒரு துண்டும், படுக்கப் பாயும்,பசிக்குக் கொஞ்சம் சோறும் சாறும் இருந்தால் போதும் என்று அறிவித்துவிட்டு, மாதம் சுளைசுளையாக ஆயிரத்துக்கு அதிகமாகச் சம்பளம் வாங்காத, "சத்புருஷர்' "சன்யாசி' காமராஜர்!

* * *

தம்பி! எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தால், தஞ்சையிலேயே பெரிய புள்ளிகள் என்று எவரும் கூறிடக்கூடிய மிட்டா மிராசுகளை, கபிஸ்தலம் நெடும்பலங்களைக் கூட வைத்துக்கொண்டு, நான் ஏழைபங்காளன், எங்கள் கட்சி ஏழைகள் வாழ வழிவகுத்திடும் கட்சி! மிட்டா மிராசுகளுக்கு, கையாட்கள், தி. மு. கழகத்தார் - என்று கூறிடத் தோன்றும், எத்துணை மனம் மரத்துப் போயிருந்தால் அல்லது அச்சம் குடி கொண்ட மனதினராகிப் போயிருந்தால், அந்தப் பொருளற்ற பேச்சைக்கேட்டும், வாளா இருந்திருப்பர்! நாம், மிட்டா மிராசுக் கட்சி, காமராஜரின் காங்கிரஸ் கட்சி பஞ்சை பராரி பகல் பட்டினி இராப்பட்டினி என்போரின் கட்சி! எதிரே உள்ளோர்களை எவ்வளவு இளித்தவாயர்கள் என்று எண்ணிக் கொண்டிருந்தால், இந்தப் பேச்சுப் பேசத் துணிவு பிறந்திருக்கும். பேசினார், நமது கழகத்தை ஏசினார். அந்தத் துணிவுக்குக் காரணம் என்ன? எவர் எதிர்த்துக் கேட்க முடியும் என்ற போக்குத்தான். மெண்டாரிசும், சிங்மன் ரீயும், இது போன்ற போக்கினராகத்தான் இருந்தனர். அவர்களின் ஆட்சி இறந்த காலமாகிவிட்டது. ஏனெனில், அவர்கள் நடத்தி வந்த ஆணவ ஆட்சியால் ஏற்பட்ட கொடுமைகளையும் தாங்கிக் கொண்டு, மக்களிலே குறிப்பிடத்தக்க பகுதியினர் "தாமாக' எண்ணிப் பார்த்திடலாயினர்; உண்மை விளங்கிற்று; உரைத்தனர்; அடக்குமுறை அவிழ்த்துவிடப்பட்டது; அவதி பல கண்டனர்; எனினும் அடங்கிக் கிடந்துவிடவில்லை; அஞ்சப் போவதில்லை, சாகவும்! என்று ஆர்த்தெழுந்தனர்; அசைக்கவே முடியாது என்று அனைவரும் ஒரு காலத்தில், உள்ளபடி நம்பிக்கிடந்த ஆணவ அரசுகள், அழிந்தொழிந்து போயின!

என்ன செய்தாலும் தாங்கிக் கொண்டு, எதைப் பேசினாலும் கேட்டுக்கொண்டு, எவ்வளவு ஏசினாலும் இளித்துக் கொண்டு கிடந்தனரே, தலையாட்டிகள்போல, வாயில்லாப் பூச்சிகளாக, இந்த மக்கள்; இவர்களுக்கு எங்கிருந்து வந்தது திடீரென்று இந்தத் துணிச்சல்! அச்சம் கப்பிய முகத்தினராக இருந்து வந்தனர், இன்று பொறி பறக்கிறதே பேச்சில்! எங்கேஒளித்துவைத்திருந்தனர், இந்தப் புரட்சிக் கனலை எல்லாம், என்று வீழ்ந்த எதேச்சாதிகாரிகள், எண்ணி எண்ணி ஆச்சரியப் பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நீரிலிருந்து நெருப்புப் பிறக்கும் என்பதை, கூறினால் நம்புவார்களா? நடுக்கும் குரலில் பேசிக் கொண்டுள்ள இந்த மக்களுடைய உள்ளத்திலே, ஆணவ அரசுகளை அழித்திடத்தக்க ஆற்றல், குமுறல் வடிவிலே இருக்கிறது என்று கூறினால் நம்ப முடியுமா, கொடிகட்டி ஆண்டிடும் கொடியவர்களால்!

தம்பி! தண்ணீரைத் தேக்கிவைத்து, வேகமாகக் கீழே விழச்செய்து, விழும்போது ஏற்படும் சக்தியைக் கொண்டு "மின்சாரம்' தயாரிக்கிறார்கள்! பார்க்கிறாயல்லவா?

கொடுமைக்கு ஆளாக்கப்படும் மக்கள் வடிக்கும் கண்ணீர் வெள்ளம், ஓர் நாள் மாபெரும் "அழிவுச்சக்தி'யைப் பெற்றெடுக் கிறது. ஆனால், அந்த நிலை ஏற்பட வேண்டுமானால், "சுய சிந்தனை' - கட்டுக்காவலுக்கு அஞ்சாமல், இட்டுக் கட்டியதற்குப் பணிந்து விடாமல், தாமாக, ஒவ்வொரு பிரச்சினைபற்றியும், நிகழ்ச்சி குறித்தும், எண்ணிப் பார்த்திடும் திறம், ஏற்பட வேண்டும். அந்தத் திறன் மக்களிடம் அற்றுப் போனால், தொடை நடுங்கிகளெல்லாம்கூட, செங்கிஸ்கான்களாகிவிட முடியும்; சர்வாதிகார வெறி வெற்றிபெற்றுவிடும். ஈராயிரம் ஆண்டு களுக்கு முன்பே கிரேக்கத் தத்துவாசிரியர்கள், இதைக் கருத்திலே கொண்டுதான், "மனிதன் சிந்திக்கும் திறன் உடைய மிருகம்' என்று கூறினர். மனிதனிடமிருந்து சிந்திக்கும் இயல்பைப் பறித்து விட்டாலோ, அடக்கி ஒடுக்கிவிட்டாலோ, மிருகத்தை வேட்டை யாடுவதுபோல மனிதனை, மாபாவிகள் வேட்டையாடிப் பிடிக்கலாம், விரட்டலாம், கொன்று குவிக்கலாம்!

எடுத்துக் காட்டுக்கு இது; தலைவாழை இலையில், சீரகச் சம்பா சாதத்தை வெள்ளி "அன்னகுத்தி'யால் எடுத்துப்போட்டு அதிலே வெண்ணெய் காய்ச்சிய நெய்யை உருக்கி வார்த்து. நேர்த்தியான பருப்பும் சுவைமிகு காய்கறியும் துணைக்கு இட்டு, பக்கம் நின்று பணிவிடை செய்து, எந்தக் கறியிடம் அவர் பரிவு காட்டுகிறார் என்பதைக் கவனித்து, எடுபிடியை அழைத்து, அந்தக் கறியை மேலும் இலையில் இடச்சொல்லி, பக்குவமான உபசாரத்தை நடத்தி வரும் மிட்டா மிராசுகளுடன் கூடிக் கொட்டமடித்துக் கொண்டே, கூசாமல், "நாங்கள் ஏழை பங்காளர்!' என்று பேசி வருகிறாரே, பெரிய பதவியில் அமர்ந்து விட்டதால் "பச்சைத் தமிழர்' ஆகிவிட்ட காமராஜர், அவரிடம்"ஐயனே! அடுக்காது இந்தப் பேச்சு! அண்டப்புளுகன்றோ, நீர் பேசுவது; ஊரை அடித்து உலையில் போடுவோர், உழைப்பாளியின் இரத்தம் உறுஞ்சுவோர், தலைமுறை தலைமுறையாகச் சுரண்டிச் சுகபோகம் கண்டோர், உம்மைச் சூழ நிற்கிறார்கள்; அவர்களை, ஏழைக்குழைப்போர் என்று கூற, எப்படி மனம் இடந் தந்தது? உழைத்து உருக்குலைந்து போனோர், உழைத்திடவும் வாய்ப்புக் கிடைக்காததால் மனம் உடைந்து போனோர், தி. மு. கழகத்தில், பெரும்பாலோர்! அவர்களை மிட்டா மிராசுகளின் கையாட்கள் என்று கூறிடலாமா! அது நியாயமாகுமா? மிட்டா மிராசுகள் தமது கையாட்களுக்கு, சுவைமிகு உணவளிப்பர்! இப்போது உமக்களித்தனர்!! ஏனென்று எண்ணிப் பார்த்தீரா? உம்மிடம் பரிவு சுரந்ததாலா? உமது பதவிக்கு உள்ள பெருமையை அறிந்ததாலா? அதோ, ஆயிரம் ரூபாய், ஏழைப்பிள்ளைகளின் மதிய உணவுக்காக அளிக்கிறேன் என்றுகூறி உம்மைக் களிப்படையச் செய்கிறாரே, "சமயமறிந்தார்'; அவர் ஏவிவிட்டதால், கொளுத்தப்பட்ட குடிசைகளும், அறுக்கப்பட்ட தாலிகளும் எவ்வளவு என்று உமக்குத் தெரியுமா? அடிஆட்கள் உடன்வர, சேரி புகுந்து அவர் நடத்திய கொடுமைகள் உமக்குத் தெரியுமா? - என்றெல்லாம் ஆத்திரத்தை அடக்க முடியாது ஒருவன் பேசி விடுகிறான் என்று வைத்துக்கொள் தம்பி!

என்ன நேரிடும் அவனுக்கு? அமைச்சர் முன் காலித்தனம் செய்தான் என்று பிடித்திழுத்துச் செல்வர் - சட்டம் அவனைக் கொட்டும். தம்பி! சர்வாதிகாரிகளிடம் சிக்கிய நாட்டிலே "குற்றவாளி'க் கூண்டிலே எவரெவர் நிறுத்தப்படுவர், வழக்கு விசாரணை எப்படி இருக்கும் என்பதை விளக்கிடும் ஓரங்க நாடகமொன்று சின்னாட்களுக்கு முன்பு படித்தேன்.

அடுத்த கிழமை அந்தக் "குற்றவாளி'யைக் காணலாம், இந்தக் கிழமை கபிஸ்தலம், வடபாதிமங்கலம் போன்றாருடன் கூடி, ஏழைகளைக் காப்பாற்றக் கிளம்பிய காமராஜரைக்கண்டது போதும். பெரிய புள்ளிகள் என்ன கதியானார்கள் என்பதை எண்ணிப் பார்த்துப் பாடம் தேடச் சொல்லுவோம் அவர்களை.

அண்ணன்,

5-6-1960