அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


இராஜ்ய சபையில் இம்முறை. . .(1)
1

இராஜ்யசபையில் இம்முறை டில்லி இராஜ்யசபையில் திராவிடநாடு பிரச்சினை

தம்பி! தில்லிக்கு மறுபடியும் சென்றிருந்தேன் - திரும்பியும் வந்திருக்கிறேன் - மீண்டும் ஆகஸ்டு திங்களில் செல்ல இருக்கிறேன்.

இது ஒரு பெரிய செய்தியா? என்று கேட்பார்கள், காங்கிரஸ் வட்டாரத்தினர். நிச்சயமாகப் பெரிய செய்தி அல்ல - முக்கியமான செய்திகூட அல்ல; ஆனால் காங்கிரசில் ஈடுபட்டு அமைச்சர் வேலை பார்க்க அழைக்கப்பட்ட அஞ்சா நெஞ்சுடையவர், தம்மைத்தவிர மற்ற யாவரும் நோன்ஜான்கள் என்று எண்ணிக்கொண்டு நான் தில்லியில் பேசிவிட்டு உடனே திரும்பிவிட்டேன் - இரயிலில் வந்தால் என்ன ஆகுமோ என்று பயந்துகொண்டு விமானம் ஏறி வந்துவிட்டேன் என்று பேசி, நான் தில்லி சென்று வருவதையே, மேடையிலே ஆராய்ச்சி செய்து காட்டித் தீரவேண்டிய ஒரு செய்தியாக்கிவிட்டாரே, நான் என்ன செய்ய!! அதனால்தான், நான் மறுமுறையும் தில்சென்றே ன் - பேசினேன் - அமைச்சரின் பதிலுரை கேட்டேன் - மற்ற உறுப்பினர்கள் பேசக் கேட்டேன் - மேலும் இரண்டோர் நாள் அங்கு இருந்தேன் - திரும்பி வந்திருக்கிறேன் - இரயிலில் - யாரும் எந்தவிதமான ஆபத்தையும் ஏற்படுத்தவில்லை - இழி மொழி பேசவில்லை - எரிச்சல் காட்டவில்லை. அமைச்சர்தம்மிடம் ஏராளமாகவும் தாராளமாகவும் கைவசம் உள்ள சரக்கான, குத்தல் பேச்சைக் கொட்டிக் கடைவிரித்துக் காட்டினாரே, அதுபோல், அங்கு ஒருவரும் காட்டவுமில்லை, கொட்டவுமில்லை என்ற செய்தியைத் தெரிவிக்கவேண்டி நேரிடுகிறது.

வேகவேகமாக முன்னேறி, நேரு பெருமானுக்குப் பக்கத்திலே இடம் பெற்றுக்கொண்டுள்ள இரும்பு மந்திரியார் பேச்சைக் கேட்டு, எங்கே உனக்கேகூட ஏதேனும் ஐயப்பாடு ஏற்பட்டுவிடுகிறதோ என்ற எண்ணத்திலே, இதனை விளக்கினேன். இல்லையெனில், அன்றாடம் தில்லி சென்று வருகிற ஆயிரத்தோடு நான் ஒருவன்தான்!

அண்ணாதுரையின் திராவிடநாடு வாதத்துக்குப் பலமான எதிர்ப்பு! சீறிவிழுந்தனர்! சின்னாபின்னமாக்கினர்!! என்றெல் லாம் ஏடுகள் எழுதி இருந்தன.

அந்தப் புயலைத் தொடர்ந்து மாமேதைகள் பலர் கூடினர், பிரிவினைக் கிளர்ச்சி ஒடுக்கப்படவும், தேசிய ஒற்றுமை ஏற்படவும் வழிவகை காண. எனவே தில்லியில், பாராளு மன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும், அலுவலகங்களில் அங்காடியிலும் இதுகுறித்தே பேச்சு இருக்கும், கொதிப்பு இருக்கும், கோபமாகப் பார்ப்பார்கள், எதிர்ப்புக் காட்டுவார்கள் என்றெல்லாம் பலரும் எண்ணிக்கொண்டிருந்தனர் - என்னிடம் சொல்லக்கூடச் செய்தனர். ஆனால் அங்கு அவ்விதமான நிலைமையே இல்லை. முன்பு இருந்தது போலவே, பழக, பேச, நட்புக் கொண்டிட முனைந்தபடிதான் உள்ளனர்?

எப்போது உங்கள் இடிமுழக்கம்? இன்று உண்டா? - என்று கேட்டபடி இருந்தனர், பல நண்பர்கள், இராஜ்யசபை உறுப்பினர்கள்.

திராவிட முன்னேற்றக் கழகம் பாராளுமன்றத்தில் செயலாற்றுவதாலும், தமிழ்நாட்டிலே அதற்குச் செல்வாக்கு மிகுதியும் இருப்பதாலேயும்தான், இம்முறை, தில்லி மந்திரி சபையில் 7 தமிழ்நாட்டவருக்கு இடம் கிடைத்தது; இதை மறுக்க முடியாது என்று, அங்கு சர்வ சாதாரணமாகப் பேசிக் கொள்கிறார்கள் என்று, நமது நண்பர்கள் என்னிடம் கூறினார்கள். எப்படி இதனை நம்புவது என்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன் - ஒருவிதமான தயக்கம். ஒருநாள், நான் தருமலிங்கத்துடன் மனோகரன், இராஜாராம், முத்து, செழியன்ஆகியோர் உடன்வர, பாராளுமன்றத்திலே மாடியிலே அமைந் துள்ள சாப்பாட்டு விடுதி செல்ல, மின்சாரத் தூக்கி அறை சென்றோம். அங்கு என் தயக்கம் போகும்படி, ஒரு காங்கிரஸ் நண்பர், தென்னாட்டவர், பார்லிமெண்டரி காரியதரிசியாக உள்ளவர், தழதழத்த குரலில் எங்களைப் பார்த்து,

நீங்கள் தான் எங்கள் பாதுகாவலர்
நாங்கள் அதனை மறக்கமாட்டோம்.

என்று சொன்னார்.

முகத்துக்கு இச்சையாக எங்களிடம் பேசவேண்டிய நிலை எவருக்கும் இல்லை அல்லவா? எனவே, ஆளுங்கட்சியில் உள்ளவரும், அதிகாரத்தில் இருப்பவருமான அந்த நண்பர், வேண்டுமென்றே, மேலுக்கு, போலியாக எம்மிடம் அவ்விதம் பேசியிருக்கமாட்டார் அல்லவா! உள்ளத்தில் பட்டதை உரைத்தார் என்பது அவருடைய பேச்சு இருந்த பாணியினாலும், அவர் காட்டிய கனிவினாலும் விளக்கமாகத் தெரிந்தது.

நமது நண்பர்களிடம், ஒருநாள், இலாக்கா இல்லாத மந்திரி, T.T. கிருஷ்ணமாச்சாரியார் அரைமணி நேரம் அளவளாவிக் கொண்டிருந்ததாகக் கூறினார்கள். தமிழ்நாட்டு நிலை குறித்து மிகுந்த அக்கரை காட்டிப் பேசிக்கொண்டிருந்தாராம் - பாராளுமன்ற மைய மண்டபத்தில்.

சென்றமுறை, குடிஅரசுத் தலைவர் உரைமீது விவாதம் - எனவே பொதுப் பிரச்சினைகள் குறித்துப் பேச நல்ல வாய்ப்புக் கிடைத்தது - திராவிடநாடுபற்றி ஓரளவு பேச முடிந்தது.

இம்முறை, வரி விதிப்பு மசோதாமீதுதான் பேசும் நிலை ஏற்பட்டது. இதிலே, வேண்டுமென்றே திராவிடநாடு பிரச்சினையைச் சொருகிப் பேசவேண்டி நேரிடுமோ என்னவோ என்று ஒரு கவலை இருந்தது. ஆனால் அந்தக் கவலையைப் போக்கும் விதமாக ஒரு உறுப்பினர் - வடாற்காடு மாவட்டத்தவர் - திராவிடநாடு குறித்துக் கண்டனம் தெரிவித்துப் பேசினார் - எனவே, அதைச் சுட்டிக்காட்டி, நானும் சில வார்த்தைகள் பேசும் பொருத்தம் ஏற்பட்டது. நான் அவ்விதம் பொருத்தம் பார்த்துப் பேசுவதற்கு முன்பாகவே, கம்யூனிஸ்டு நண்பர் பூபேஷ் குப்தா அவர்கள், என் பேச்சில் குறுக்கிட்டு, திராவிட பிரிவினையைக் கைவிட்டு விடுங்கள் என்று என்னைக் கேட்டுக்கொண்டார்; எனவே திட்டவட்டமாக, திராவிடநாடு இலட்சியம் குறித்துப் பேசும் வாய்ப்பு மிகப் பொருத்தமாகக் கிடைத்தது.

நான் இந்தியாவிலிருந்து திராவிடநாடு பிரிந்தாக வேண்டும் என்ற கொள்கையைக்கொண்ட கட்சியினன்

என்பதைக் கூற இடம் தானாக ஏற்பட்டது.

எரிகுண்டு வீசினாலும் இழிமொழி பேசினாலும் என்னை நான் மேற்கொண்டுள்ள புனிதப் பணியிலிருந்து தடுத்துவிடமுடியாது.

என்று, தம்பி! உன் ஆற்றலிலே அளவிடற்கரிய நம்பிக்கை வைத்து, அந்த அவையிலே கூறிவிட்டு வந்திருக்கிறேன்.

இந்தப் பிரச்சினையிலே பேரப் பேச்சுக்கு இடம் இல்லை.

சலுகைகள் தருவதன் மூலம் இந்தப் பிரச்சினைக்கு முடிவு கட்டிவிடலாம் என்று எண்ணாதீர்கள்.

என்றெல்லாம் கூறிவிட்டு வந்திருக்கிறேன். துண்டு துண்டாகக் கூறுவானேன் தம்பி, மாநிலங்கள் அவையிலே நான் பேசியதைத் தமிழாக்கித் தந்திருக்கிறேன்.

விழிப்புற்ற திராவிடத்தின் வீரத் திருமகனே! உன் உள்ளத் திலே கொந்தளித்துக்கொண்டுள்ள எண்ணம்யாவற்றையும் எடுத்துக்கூற நேரம் கிடைக்கவில்லை - இந்த அளவு பேசுவதற்கே, அவையின் துணைத்தலைவர் அவர்கள், இரண்டு மூன்று முறை, நேரம் அதிகமாகிவிட்டதைச் சுட்டிக்காட்ட நேரிட்டுவிட்டது.

விழிப்புற்ற, விடுதலை ஆர்வம்கொண்ட ஒரு இனத்தின் எண்ணத்தை, எடுத்துக்கூற நாட்கள் பலவும் போதாதே - பேசத் தரப்படும் சில நிமிடங்களிலே எப்படி எல்லாவற்றையும் எடுத்துரைக்க முடியும். ஆனால், பேசும் வாய்ப்பு மேலும் கிடைக்கும் அல்லவா, பையப்பைய, நமது கருத்துகளை எடுத்து கூற இயலும்.

இந்தத் திங்கள் இருபதாம் நாள் பகல் 12-30 மணிக்குமேல் பேசினேன். துணைத் தலைவர் திருமதி வயலட் ஆல்வா தலைமை வகித்தார்கள். நிதி அமைச்சர் மெரார்ஜி தேசாய் அவையிலிருந்தார். அமைச்சர் அழகேசன் இருந்திடக் கண்டேன். அமைச்சர் டி. டி. கிருஷ்ணமாச்சாரியாரும் இருந்திருக்கிறார். நமது தோழர்களும், தமிழ்நாட்டுக் காங்கிரஸ் லோக்சபை உறுப்பினர்கள் பலரும் பார்வையாளர் இடத்தில் வீற்றிருந்தனர்.

பத்திரிகைகள் யாவும் அந்தப் பேச்சிலே, சில இடங்களைக் கோடிட்டுக் காட்டியிருந்தன என்றாலும், முழுப் பேச்சையும் ஒரு சேரப் படித்தால்தான், பொருள் பலன் உள்ள முறையில் கிடைக்கும் என்பதால், இங்கு முழுப் பேச்சையும் தந்திருக்கிறேன் - தம்பி! படித்து மகிழமட்டுமல்ல - அதுகுறித்துப் பேச, உன் யோசனைகளை உருவாக்கிக்கொள்ள - எனக்கு உன் எண்ணத்தை எடுத்துக் கூற.

இராஜ்ய சபையில் பேசியது

துணைத் தலைவர் அவர்களே,

வரி மசோதா (லோக்சபை) மற்றோர் சபையிலே விவாதிக்கப்பட்டது; இப்போது இந்த அவையில் விவாதிக்கப் பட்டு வருகிறது - இப்புறமும் எதிர்ப்புறமும் உள்ள உறுப்பி னர்கள் எடுத்துக்கூறிய நல்ல பல யோசனைகளை நான் கேட்டுக் கொண்டிருந்தேன்.

மக்களுக்கு இந்த முறையிலே வரி விதிக்கப்படுவது ஒருவருக்கும் திருப்தி அளிக்கவில்லை என்பது விவாதத்தைக் கேட்டதிலிருந்து தெரிகிறது.

புதிய வரிகளுக்கான காரணங்கள் என்ன காட்டப்படினும், இந்த அவையிலுள்ளவர்களிலே எந்தப் பகுதியினரும் சரி, வெளியே உள்ள பொதுமக்களில் எந்தப் பிரிவினரும் சரி, புதிய வரிச்சுமையைத் தாங்கத் தயாராக இல்லை. மேலும் மத்திய துறைத்தனத்தாரின் இந்தப் புதிய வரிச்சுமைக்கு முன்பு இரயில்வே அமைச்சு வரி விதித்திருக்கிறது. இதைத் துரத்திக் கொண்டு இராஜ்ய சர்க்கார்களும் புதிய வரிகளைப் போடப் போகிறார்கள். எனவே, வரி மசோதாவைப் பார்க்கும்போது, உடனே ஏற்படுகிற எண்ணம் என்னவென்றால், தற்போதுள்ள சர்க்கார், தங்களின் தோல்விகளால் திகைத்துப்போய், பொது மக்களை தேவையற்ற பளுவைச் சுமக்கும்படி கேட்கிறது என்பதுதான். தற்போதுள்ள சர்க்கார், தனது தோல்விகளுக்கும், தனது செய்கையாலும் செய்யத் தவறியவையாலும் ஏற்பட்ட கேடுகளுக்கும் சமாதான விளக்கம் தர இயலவில்லை; ஒன்றுதான் கூறமுடிகிறது, திட்டம் நிறைவேற்றப்படவேண்டி இருப்பதால் ஒவ்வொரு பளுவையும் மக்கள் சுமக்கவேண்டும் என்பதுதான். இவர்களின் திட்டத்தின் தன்மை என்ன, திட்டம் சமதர்ம அடிப்படையில் இருக்கப்போகிறதா அல்லது வேறுவிதமாகவா என்று ஆய்வாளர்கள் கேட்டால், இவர்கள், "நாங்கள் மிகநல்லவர்கள், இங்கொரு துண்டும் அங்கொரு துண்டுமாக எடுத்து, அவைகளை ஒன்றாகக் கலந்து, ஒரு கலப்புப் பொருளாதார திட்டம் தயாரிக்கிறோம்' என்கிறார்கள்.

துணைத் தலைவர் அவர்களே! கலப்படம் ஒரு குற்றம் என்பதைத் தாங்கள் அறிவீர்கள், நிதிமந்திரி, கலப்படக் குற்றத்தைக் கோபத்துடன் கண்டித்துப் பேசினார் லோக்சபையிலே. கலப்படம் செய்யும் குற்றவாளிகளைக் கண்டுபிடித்தால், அவர்களைச் சவுக்காலடிப்பது மட்டுமல்லாமல். . .

மொரார்ஜி தேசாய் :- நான் அதைச் சொல்லவில்லை. அவர்களைச் சவுக்காலடிக்கவேண்டுமென்று ஒரு யோசனை கூறப்பட்டது.

சி. என். ஏ .:- ஆகவே, நிதிமந்திரி அவர்களைத் தண்டிக்கவும் இஷ்டப்படவில்லை! என்றாலும், கலப்படம் ஒரு குற்றம்; பொருளாதார தத்துவக் கலப்படம் எத்தகைய குற்றம் என்றால், அதற்கான வினையை, இக்கால மக்கள் மட்டு மல்லாமல் வருங்கால மக்களும் அனுபவித்தாகவேண்டும், அத்தகைய குற்றம். எனவே, இன்றைய சர்க்கார், பொருளாதார தத்துவ அடிப்படை யிலே, தமது கொள்கையை வகுத்துக்கொள்ளவேண்டுமென விரும்புகிறேன். ஆனால் அவர்கள் எந்தப் பொருளாதார தத்துவத்துக்கும் புதிய வியாக்யானம் வேண்டும் என்கிறார்கள். அவர்களுக்குச் சாதகமாக இருக்கும்போது பழைய வியாக் யானத்தை எடுத்துக்கொள்கிறார்கள். சாதகமாக இல்லாத போது, நாங்கள் தத்துவத்திலே மூழ்கிவிடுபவர்கள் அல்ல; நாங்கள் செயல்முறையில் நாட்டம் உள்ளவர்கள் என்று கூறிவிடுகிறார்கள். தொல்லை அவ்வளவும் எதனால் ஏற்படுகிறது என்றால், இந்தச் சர்க்காருக்கு ஒரு தத்துவம் இல்லை; பொருளாதார இலட்சியம் இல்லை; நாட்டிலே பணியாற்றுகிற ஒவ்வொரு அரசியல் கட்சியிலிருந்தும் புகழ்தரும் இலட்சியங் களைக் களவாடிக்கொள்ள விரும்புகிறார்கள். பொது உடைமைக் கட்சியிடமிருந்து, சுதந்திரக் கட்சியிடமிருந்து, மற்ற எல்லா அரசியல் கட்சிகளிடமிருந்து, கருத்துக்களைக் களவாடிக் கொள்ள விரும்புகிறார்கள். இங்கு வேறு எந்த அரசியல் கட்சியும் இருக்கத் தேவையில்லை. ஏனெனில், நாங்கள் சமதர்மவாதி களாகவும் இருக்கிறோம், முதலாளித்துவ வாதிகளாகவும் இருக்கிறோம், எம்மிடம் கூட்டுப் பொருளாதாரத்துவம் இருக்கிறது என்கிறார்கள். எனவே, இன்றைய சர்க்காருடையகொள்கையின் அடிப்படையில் காணப்படும் பொருளாதார தத்துவம் பற்றிய திட்டவட்டமான விளக்கம் தரப்படுமானால், மற்றக் கட்சிகள் தமக்குரிய தத்துவங்களை எடுத்துவைக்க முடியும். கனம் பூபேஷ் குப்தா, எடுத்துக் காட்டினார். காங்கிரசில் இரண்டு கோஷ்டிகள் உள்ளன, ஒரு கோஷ்டி வலதுசாரி பக்கம் வலிக்கிறது, மற்றொரு கோஷ்டி இடப்பக்கம் இழுக்கிறது என்றும்; கம்யூனிஸ்டுகட்சி வலதுசாரிக் கோஷ்டியை வெளியேற்ற, (காங்கிரசில் உள்ள) இடதுசாரிக் கோஷ்டிக்கு உதவிசெய்யும் என்று திட்டவட்டமாகக் கூறினார். துரதிர்ஷ்ட வசமாக, பூபேஷ் குப்தா அவர்கள், இன்றைய நிதி அமைச்சரை வலதுசாரிக் கோஷ்டியில் சேர்த்துப் பேசினார்; வெளியேற்றப் படவேண்டிய கோஷ்டியில்.

வரிவிதிப்புக் கொள்கையின்கீழ் எத்தகைய தத்துவம் காணப்படினும், நேர்முக வரி, மறைமுக வரி இவைகளிலே செய்யப்பட்டுள்ள மாறுதலால், மொத்தத்தில் 71.7 கோடி ரூபாய் ஒரு முழு வருடத்தில் வருவாய் கிடைக்கிறது, இதுவே 45.5 கோடி ரூபாய் மறைமுக வரியாகவும் 27.2 கோடி நேர்முக வரியாகவும் பெறப்பட இருக்கிறது. இந்த ஏற்பாடுகளால், வருவாய் வர இருக்கிறது என்று, துன்பம் கண்டும் துணுக்குறாத முறையிலே, ஒருவிதமாக மகிழ்ச்சியுடன் நிதி அமைச்சர் கூறுகிறார். தாங்க முடியாத வரியைச் செலுத்தும்படி கேட்கும்போது, வற்புறுத்தப் படும்போது, மக்கள் அடைகிற உணர்ச்சிகளை அவர் உணர வில்லை. வேதாந்திபோலப் பேசுகிறார், பணம் படைத்தோர், மேலும் மேலும் அதிக அளவு வரி செலுத்தவேண்டும், ஏழைகள், இவைமூலம் முன்னேற்றத்தை அதிகமாகப் பெறவேண்டும், இது எமது சமதர்ம அரசுக் கொள்கையின் ஒரு பகுதியாகும் என்கிறார். இந்த இரண்டு அம்சங்களையும் நிதி அமைச்சர் மெய்ப்பித்துக் காட்டவேண்டுமென்று பெரிதும் விரும்புகிறேன். பணக்காரர் வரிப்பளுவின் அதிகமான பாகத்தை ஏற்றுக் கொள்ளும் முறையிலும், அதன் பலன்களை ஏழைகள் அதிக அளவில் பெறும் தன்மையிலுமா, நிதி அமைச்சர் தமது வரிக் கொள்கையை வகுத்துக்கொண்டிருக்கிறார்? மந்திரி சபையின் மற்றோர் உறுப்பினர் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர் கூறியுள்ள ஒரு கருத்தை - அதனைக் கண்டனம் என்றே கூறலாம் - எடுத்துரைக்க விரும்புகிறேன். இந்திய சர்க்கார் கையாண்டு வருகிற வருவாய் வரிவிதிப்புப் கொள்கை காரணமாக, ரூபாயின் மதிப்புக் குறைந்து கொண்டு வருகிறது, நூற்றுக்கு தொண்ணூற்று ஐந்து மக்கள் இழுத்துப் பறித்துக்கொண்டு வாழும் நிலையிலும்,அதற்கும் மட்டமாகவும் இருக்கிறார்கள். அதிகமான செல்வம் குறிப்பிட்ட சிலரிடம் போய் முடங்கிக்கொள்கிறது என்று அவர் கூறியிருக்கிறார். இப்புறத்தில் உள்ள உறுப்பினர்கள் ரூபாயின் மதிப்புக் கீழே விழுந்துகொண்டிருக்கிறது என்று சொன்னால், முழுத் தகவல்களும் தெரியாது இவர்களுக்கு என்று சொட்டு சொல்லிவிடுவார்கள், ஆனால் நான், இலாக்கா இல்லாத மந்திரி, தில்லியைவிட்டு வெளியேறுகிறேன், ஏனெனில், இங்கு வேங்கைகள் உலாவுகின்றன என்று கூறிவிட்டுச் சென்ற, கனம். டி. டி. கிருஷ்ணமாச்சாரியாரின் கருத்தை எடுத்துக் கூறினேன். வேங்கையைத் துரத்தி அடித்துவிட்டார்கள் என்று நம்புகிறேன், அல்லது கெட்டிக்கப்பட்ட துப்பாக்கியுடன் அவர் மீண்டும் இங்கு வந்திருக்கக்கூடும். எது எப்படி இருப்பினும், ரூபாயின் மதிப்புக் குறைந்துகொண்டு வருகிறது என்று பொறுப்புமிக்க பதவியில் உள்ள பொறுப்புமிக்க டி. டி. கிருஷ்ணமாச்சாரியார் கூறியுள்ளார். பொறுப்புமிக்கவர் என்று எதனால் கூறுகிறேன் என்றால், அவரிடம் எந்த இலாகாவும் ஒப்படைக்கப்படவில்லை; எனவே, எல்லா இலாகாவும் அவருடையதே என்பதனால், ரூபாயின் மதிப்பு வீழ்ந்திருப்பதற்கு, யார் குற்றம் சாட்டப்பட வேண்டியவர்கள். . . .? எதிர்க்கட்சி வரிசையில் உள்ளவர்களா? ஆளுங்கட்சி உறுப்பினர்கள், திட்டங்களை உருவாக்கும்போது, மரியாதைக்குக்கூட எங்களைக் கலந்தாலோசிப்பதில்லை. செல்வ வான்களின் பணத்தையும் ஏழைகளின் ஓட்டுகளையும் அதிகாரக் குரலிற் கேட்டுப்பெறும் அரசியல் கட்சியினால் நடத்தப்பட்டு வரும் தேசிய சர்க்கார் 15 ஆண்டுகள் இருந்தும், ரூபாயின் மதிப்பு வீழ்ந்து வருகிறது, 100க்கு 95 மக்கள் இழுத்துப் பறித்துக்கொண்டு கிடக்கிறார்கள் என்பதனை, டி. டி. கிருஷ்ணமாச்சாரியார் எடுத்துக் காட்டும் நிலைமை இருக்கிறது. இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்கள் முற்றுப்பெற்று மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் நடுவிலே இருக்கும் இந்த நிலையில், மந்திரி சபை உறுப்பினராக உள்ளவரின் கண்டனம் இப்படி இருக்கிறது. 100-க்கு 95 பேர் இழுத்துப் பறித்துக்கொண்டுள்ள இந்த நேரம்தானா, மக்களுக்கு வரிபோடுவதற்கு ஏற்ற நேரம்? அதிலும் மறைமுக வரிகள்! மற்றும் ஒரு புள்ளி விவரம் - சர்க்கார் அமைத்த தேசிய ஆய்வுக்குழு கூறியிருப்பது. 270 இலட்சம் மக்களுக்கு ஒரு நாளைக்கெல்லாம் ஒரு மணி நேரம்தான் வேலை கிடைக்கிறது; 200 இலட்சம் மக்களுக்கு இரண்டு மணி நேரம், 450 இலட்சம் மக்களுக்கு 4 மணி நேரம், வேலை கிடைக்கிறது. மற்ற நேரத்தில் வேலை இல்லை. கோடி கோடியாகப் பணத்தைச் செலவழிக்கிறோம் -மக்களிடமிருந்துபெற்ற பணம் - கடனாகவும் உதவித் தொகை யாகவும் வெளியே இருந்து பெற்ற பணம் - பதினைந்து வருடச் சுயராஜ்யத்துக்குப் பிறகு, பன்னிரண்டு வருடத் திட்ட வேலைக்குப் பிறகு, 270 இலட்சம் மக்களுக்கு, ஒரு நாளைக்கு ஒரே ஒரு மணி நேரம்தான் வேலை கிடைக்கிறது. திட்டங்களுக் காக மக்களைக் கசக்கிப் பிழிந்த பிறகு, திட்டங்களுக்காக இவ்வளவு தொகை செலவிட்டான பிறகு, இந்த நிலை இருக்கக் காரணம் என்ன? என்ன விளக்கம் இதற்கு?

மற்றோர் நிலைமை என்னவென்றால், நமது வெளிநாட்டு இருப்புக் கரைந்துவிட்டது. ஏற்றுமதி விழுந்துவிட்டது. வெளி நாடுகள் தரக்கூடிய உதவித்தொகையில் வெட்டு விழும்போல் தெரிகிறது, மறைமுக வரிகள் வளர்ந்தபடி உள்ளன, விலைகள் ஏறியபடி உள்ளன. நேர்முக வரியைச் செலுத்தாமல் நழுவி விடுகிறார்கள். கருப்புப் பணம் பெருகிக்கொண்டு வருகிறது. 118 கோடி ரூபாய் வருமான வரி நிலுவை இருப்பதாகக் கூறப் படுகிறது. ஏன் இவ்வளவு பெரிய தொகை வசூலிக்கப்படாமல் இருக்கிறது என்று நிதி அமைச்சரைக் கேட்கிறேன். திட்டங் களுக்காக வரி செலுத்தியாகவேண்டும் என்று, மக்களிடம் எந்தத் துணிச்சலில் வருகிறார்? 118 கோடி ரூபாய் வருமான வரி நிலுவை இருக்கிறதே, அவர்களிடம் காட்டுவதுதானே கண்டிப்பு, இந்த 118 கோடி ரூபாயில் ஒரு பாதியையாவது, இவர் அக்கரை எடுத்துக்கொண்டு, கண்டிப்பான முறைகளைக் கையாண்டு வசூலித்திருப்பாரானால், மக்களுக்கு வரி போடவேண்டிய அவசியமே ஏற்பட்டிருக்காதே! ஆனால் அவர் துண்டு விழுவதைச் சரிக்கட்ட வரிபோடுபவரல்ல, பாதுஷாபோலக் கூறுகிறாரே, 71 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கப்போகிறது என்று. அவருக்கு வரி வசூலிக்கும் கலெக்டர் மனப்பான்மை இருக்கிறதேயன்றி, இந்தப் பெரிய துணைக்கண்டத்து வளர்ச்சியைக் காணவிரும்பும் அதிகாரியின் மனப்பான்மை இல்லை. அதனால்தான், எனது நண்பர் பூபேஷ் குப்தா, இவர்களின் பொருளாதார திட்டங்களின் அடிப்படையில் உள்ள அரசியல் தத்துவம் என்ன என்று அறிந்துகொள்ள விரும்பினார். எனவே, நான் சாட்ட விரும்பும் முதல் குற்றச் சாட்டு, இதுவே; உங்களிடம் எந்தத் திட்டவட்டமான அரசியல் தத்துவமும் இல்லாததால், நீங்கள் குருட்டாம் போக்கிலே, நாட்டை முட்டுச்சந்துகளிலே இழுத்துக்கொண்டு செல்கிறீர்கள்! ஆகவே இந்த வரிவிதிப்புகளால் ஏற்படக்கூடிய விளைவுகள் என்ன என்றுகூடத் தெரிய முடியவில்லை. வரியும், வரிஅதிகரிப்பதும், சுபீட்சத்தின் அறிகுறி என்று அவர்கள் பேசிக் கொண்டு போகிறார்கள். சுபீட்சத்தின் அறிகுறி என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் யாருடைய சுபீட்சம் என்பதற்குப் பதில் அளித்தீர்களா? மக்களின் எந்தச் சாராரின் சுபீட்சம்? அதற்குப் பதில் அளிக்கப்படவில்லை. எனவே மறைமுக வரிகளை, குறிப்பாக அடிப்படையில் மிகத்தேவைப்படும் பண்டங்களின்மீது விதிக்கப்பட்டுள்ள வரிகளை, வரி மசோதா, லோக்சபையில் நிறைவேற்றப்பட்டிருந்தபோதிலும், நீக்கிவிட வேண்டும். நிதி அமைச்சர் வேதாந்த மனப்பான்மைகொண்டவர் என்று புகழப்படுகிறார் - ஆளுங்கட்சி உறுப்பினர்களின் கண்டனங் களை அவர் கணக்கிலெடுத்துக்கொண்டிருப்பாரானால், ஒருவரும் இந்தப் புதிய வரிகளை ஆதரிக்கவில்லை என்பதை அறிந்துகொள்ளமுடியும். கட்சி கொடுத்த கொறடாவினால் ஓட்டுகள் சாதகமாகக் கிடைத்தன - கட்டுப்பாட்டுக்குப் பணிந்து ஆதரவு அளித்தனர். எனவே அவர் இந்த வரிகளை விதிக்க தர்மம் இடம் தரவில்லை. எனவே அவர், அவருடைய ஆளுங் கட்சி உறுப்பினர்களே சொல்லியுள்ள கண்டனத்திற்கு மதிப்பளிப்பாரானால், அவர் இந்நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல, எந்த வேதாந்தத்தை அவர் மணந்து கொண்டிருப்பதாகக் கூறப் படுகிறதோ, அதற்கேகூட பெரிய மதிப்பு அளித்தவராகத் திகழ்வார். துணைத்தலைவர் அவர்களே! இந்தச் சந்தர்ப்பத்தில், இந்நாட்டிலே, விசித்திரமான, எங்கும் காணாத விந்தையான முறையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஜனநாயகம்பற்றிச் சிறிதளவு கூற விரும்புகிறேன். இப்புறத்தில் உள்ள உறுப்பினர்கள் போலவே, கோபதாபமாகத்தான், இரு சபைகளிலும் உள்ள ஆளுங்கட்சி உறுப்பினர்கள், புதிய வரி ஏற்பாடுகளைக் கண்டித்துப் பேசினர். ஆனால் வெளியே சென்றாலோ, இன்றைய சர்க்காரை அவர்கள் ஆதரித்துத் தீரவேண்டி இருக்கிறது; கொறடா கொடுக்கப்படுகிறது; அதனால் சர்க்காருக்குச் சாதகமாக "ஓட்' அளிக்கிறார்கள். இந்த மாதம், விரைவில், கம்யூனிஸ்டு கட்சி, ஜனசங்கம், சுதந்திரக் கட்சி, நான் எந்தக் கட்சியில் இருப்பதைப் பெருமையானதாகக் கருது கிறேனோ அந்தக் கட்சியும், நாங்கள் எல்லோரும் தனித்தனியாக, வரிப்பளுவைக் கண்டித்து, கண்டனக் கூட்டங்கள் நடத்த இருக்கிறோம். மக்களிடம் சென்று, இந்த வரிவிதிப்பு நடைமுறைக்கு ஏற்றதல்ல, ஏற்கனவே வறுமையால் வதைபடும் மக்களை இந்த வரிகள் மேலும் வாட்டி எடுக்கும் என்று நாங்கள் பேசும்போது, இதே காங்கிரஸ் உறுப்பினர்கள், ஆளுங்கட்சிஉறுப்பினர்கள்தான், முன்வந்து, சர்க்காரைப் பாதுகாக்க ஆதரவுப் பிரசாரம் செய்யப்போகிறார்கள். ஆனால், மக்கள் உங்கள் வார்த்தைகளை ஏற்றுக்கொள்வார்கள் என்று எண்ணாதீர்கள். சர்க்காரை ஆதரிக்க, இந்தச் சபைக்கு வெளியே என்ன பேசப்படுகிறது என்பதை மட்டுமல்ல. சபையிலே என்ன சொல்லப்படுகிறது என்பதையும் அவர்கள் படிக்கிறார்கள். எனவேதான், ஆளுங்கட்சி உறுப்பினர்கள், நிதி அமைச்சர் விதித்துள்ள மறைமுக வரிகளைச் சரியான முறையிலும், துணிவுடனும், கண்டித்ததுபற்றி நான் மகிழ்ச்சி அடைகிறேன். நிதி அமைச்சர், திரும்பிப் பார்த்து, ஆனால் எனக்குப் பணம் வேண்டுமே! என்று கேட்கக்கூடும். பணம் பெற நான் கூறக்கூடிய வழிகளிலே ஒன்று, வருமான வரி நிலுவையை வசூலிப்பது. ஏமாற்றுபவர்களைக் கண்டுபிடியுங்கள், நிர்வாகத்தில் உள்ள ஓட்டைகளை அடையுங்கள்! என் நண்பர் பூபேஷ் குப்தா சொன்னவற்றை எல்லாம் நான் மறுபடியும் கூறத் தேவையில்லை - உங்களால் ஜீரணிக்க முடியாமற் போகக்கூடும் - ஆனால், இப்போது உள்ள அமைப்பு முறையின்படியே கூடப் பல்வேறு இலாக்காக்களிலே சிக்கனம் ஏற்படுத்தினால், நிர்வாக அமைப்பு களிலே உள்ள சந்து பொந்துகளை அடைத்து சீர்படுத்தினால், நிர்வாகத்தை நடத்திச் செல்லத் தேவைப்படும் பணமும் கிடைக்கும், திட்டத்தை நடத்திச்செல்லக்கூடப் பணம் கிடைக்கும். ஆனால், எப்போது இந்தப் பகுதியில் உள்ள நாங்கள், நிர்வாக அமைப்பு முறைகேடாக இருக்கிறது, இலஞ்ச ஊழல், பதவி தருவதில் சலுகை போன்றவைகள் உள்ளன என்று எடுத்துச் சொன்னாலும், மந்திரிசபை உறுப்பினர்கள் "நிரூபித்துக் காட்டு' என்று அறைகிறார்கள்.

ஹைதராபாத் சிக்கனக் குழு, இலஞ்சப் புகாரை மெய்ப்பித்துக் காட்டுவது கடினம் என்று அடிக்கடி கூறப் படுகிறது. அதனாலேயே, புகார் எழுகிறபோதெல்லாம், விசாரணை நடத்த துளிகூடத் தயக்கம் காட்டக்கூடாது என்று ஏற்படுகிறது - என்று குறிப்பிட்டிருக்கிறது. என்றாலும், இன்றைய சர்க்கார் மேற்கொண்டுள்ள போக்கு எப்படி இருக்கிறது? முந்திரா ஊழல் நடவடிக்கையின்போது, குற்றம் செய்தவர் என்று காட்டப்பட்ட - இந்திய சர்க்கார் அதிகாரி ஒருவர் - ஐ. ங. படேல் என்பவர், நர்மதா பள்ளத்தாக்கு கார்ப்பரேஷனில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருக்கிறார். பத்திரிகையில் பார்த்தேன். தற்காலிகப் பதவிதான். அந்தச் சபையில் இதுகுறித்துக் கேள்வி கேட்கப்பட்ட போது, பிரதம மந்திரி எழுந்திருந்து. . . . .

பூபேஷ் குப்தா:- இரண்டு வருஷங்களுக்குப் பிறகு, அவருக்கு பத்ம விபூஷன் பட்டம் கொடுப்பார்கள். . . .!

சி. என். ஏ.:- என், மந்திரிசபையிலேயே இடம் கிடைக்கக் கூடும். லோக்சபையில் கேள்வி கேட்கப்பட்டபோது பிரதம மந்திரி எழுந்திருந்து தனக்கு அதுகுறித்துத் தெரியாது என்று பதில் அளித்தார். அவர் அவ்விதம் சொன்னது கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஏனெனில், அவர் ஆமாம், யார் நியமிக்கப்பட்டார்கள் என்பது எனக்குத் தெரியும் - என் ஒப்புதலும் அதற்கு உண்டு என்றுகூறி இருந்திருப்பாரானால், நான் திடுக்கிட்டுப் போயிருப்பேன். நல்ல வேளையாக, எனக்கு அது தெரியாது என்று அவர் பதில் அளித்தார். இராஜ்ய சர்க்காருக்கும் மத்திய சர்க்காருக்கும் உள்ள தொடர்பு இப்படித்தான் இருக்கிறது. நாடெங்கிலுமிருந்து அறிவாளர்களைத் திரட்டிக் கொண்டு வந்து, தேசிய ஒருமைப்பாட்டுக்கு வழி காட்டுங்கள் என்று கேட்கிறீர்கள். முதலில் உங்கள் சர்க்கார்களிலே ஒருமைப்பாடு ஏற்படுத்துங்கள்! ஏன் அவர் வேலைக்கு அமர்த்தப்பட்டார், எப்படி அமர்த்தப்பட்டார் என்பது எனக்குத் தெரியாது என்று கூறுகிற ஒரு பிரதம மந்திரி இருக்கிறார். இதுபற்றிப் படிக்கும்போது, மக்களுடைய தீர்ப்பு என்னவாக இருக்கும்? முந்திரா ஊழல் பிரச்சினையில், இந்த அதிகாரி பிணைக்கப்பட்டிருந்தார் என்பது மக்களுக்குத் தெரியும். அப்படிப்பட்டவர் பசையுள்ள ஒரு வேலையில் அமர்த்தப்பட்டிருக்கிறார் என்று பத்திரிகைகளில் படித்தால், மக்கள் என்ன சொல்லுவார்கள்? உங்களுடைய சமதர்மப் பேச்சு, சமதர்ம தத்துவம் கிடக்கட்டும், (இந்த நியமனம்பற்றி) மக்கள் என்ன பேசுவார்கள்? அதனால்தான், நிர்வாகத்தில் உள்ள ஓட்டைகள் அடைக்கப்படவேண்டும் என்கிறேன்; ஓட்டை களை அடைக்க வேண்டுமென்றால், உண்மையான, நிரந்தரமான மாறுதல் நிர்வாக அமைப்பில் ஏற்பட்டாக வேண்டும்.

நிர்வாகத்தில் என்ன சீரமைப்புச் செய்யவேண்டும் என்பது பற்றி ஆய்வுரை கூற அமைக்கப்பட்ட, கோர்வாலா தமது அறிக்கையில், வருமான வரிமுறைபற்றிக் குறிப்பிடுகையில், இது போலக் கூறியுள்ளார்.