அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


இராஜ்ய சபையில். . .(1)
2

"வருமான வரித்துறையைப் பொறுத்தவரையில், பொதுமக்கள் முறையிடுவது என்னவென்றால், சாமான்யர் களை, காரணமின்றித் தொல்லைப்படுத்துகிறார்கள், ஆனால் பல இலட்சக்கணக்கில் வரிகொடுக்காமல் ஏமாற்றித் திரிபவர்கள் தப்பித்துக்கொண்டு விடுகிறார்கள் என்பதுதான். வருமானவரி விசாரணைக் குழுவினால் சரியான எந்தப் பலனையும் பெற்றளிக்கமுடியவில்லை. துளிகூடக் கவலையின்றி, மிகத் துணிகரமாக, வரி ஏமாற்றும் பேர்வழிகள், தங்கள் நடவடிக்கைகளை நடத்திக் கொண்டு போகிறார்கள். இதைக் காணும்போது, மிகுதியும் செல்வாக்குள்ள செல்வவான்களுடன் மோதிக் கொள்ள நேரிடும்போது, இந்தச் சர்க்காரின் கையாலாகாத் தனம்தான் தெரிகிறது, என்ற நம்பிக்கை மிகப் பரவலாக இருக்கிறது.

கையாலாகாத்தனம் என்பது வார்த்தை. நான் அவ்வளவு கடுமை யான வார்த்தையைக் கூற ஒருமுறைக்கு இருமுறை யோசித்து இருப்பேன். ஆனால், பொது நிர்வாக சீரமைப்புக்கான வழி கூறும்படி சர்க்காராலேயே அமைக்கப்பட்ட காரணத்தால், கோர்வாலா அவர்கள் சர்க்காரின் கையாலாகாத் தன்மை என்று கூறுகிறார். உங்கள் சர்க்கார் கையாலாகாதது என்று கோர்வாலா கூறியிருக்கும்போது, கோடிகோடியாகப் பணம் தரும்படி நீங்கள் எந்த யோக்கியதையின்பேரில் கேட்கிறீர்கள் என்று மந்திரி சபையினரைக் கேட்கலாமல்லவா? எனவே, நிர்வாக அமைப்பிலே இன்னும் சற்று உயிர்ப்புச்சக்தி, செயலாற்றும் திறன் ஏற்படவேண்டும் என்று விரும்புகிறேன்.

இதோ மற்றோர் கண்டனம்; இது வர்த்தகத்துறை அமைச்சுப் பற்றியது.

பெரிய வணிக முதலாளிகளின் விருப்பத்துக்கு இசைவு தருவதிலே வணிகத்துறை அமைச்சு மிகவும் கெட்டபெயர் எடுத்துக்கொள்ளும் அளவுக்கு நடந்து கொண்டிருக்கிறது;

வேங்கைகள் உலவுகின்றன என்று டி. டி. கிருஷ்ணமாச்சாரி சொன்னது, ஒருவேளை இதை எண்ணித்தான் போலும். வேங்கைகள் வெளியே உலவுகின்றன என்ற முடிவுக்கு அவர் எப்படி வந்தார் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிய வில்லை; துணிந்து யூகமாகச் சொல்வதானால், வர்த்தகத் துறை அமைச்சராக அவரே முன்பு இருந்ததால், அவருக்கு அப்படிப்பட்ட விசித்திரமான அனுபவம் ஏற்பட்டிருக்கக்கூடும்; எது எப்படி இருப்பினும், வணிகக் கோமான்களுக்கு லைசென்சுகள் வழங்குவதிலே, வணிகத்துறை அமைச்சு கெட்டபெயர் எடுத்திருக்கிறது.

இவைகளெல்லாம் திருத்தப்பட்டால், எனக்கு முன்பு பேசியவர் குறிப்பிட்ட மக்களின் ஆர்வமான ஆதரவு, திட்டத்துக்குக் கிடைக்கக்கூடும். ஆனால், வரிகள் ஏறிக் கொண்டே போவதையும், விலைகள் ஏறிக்கொண்டிருப்பதையும், வேலையில்லாத் திண்டாட்டத்தின் அளவு பெரிது பெரிதாக வளர்ந்து கொண்டு போவதையும், வாழ்க்கைத் தேவைகளைக் கூட, இன்றுள்ள அரசாங்க அமைப்பினால் தர இயலாதநிலை இருப்பதையும் காணும்போது, திட்டங்களில் ஆர்வம்காட்ட மக்கள் முன்வருவார்கள் என்று எப்படி எதிர்பார்க்கமுடியும்? சர்க்காருடைய வரிவிதிப்புக் கொள்கையிலே இந்த அம்சம் சரி, அந்த அம்சம் சரி என்று ஆதரித்துச் சிலர் கூறுகிறார்கள்.

இந்தியாவிலிருந்து திராவிடநாடு பிரியவேண்டும் என்று வற்புறுத்தும் கட்சியைச் சேர்ந்தவன் நான் என்றாலும், நீங்கள், தொழில் வளர்ச்சிக்காகத் திட்டமிட்ட முறை இருக்கிறதே, அது இந்தத் துணைக்கண்டத்திலே பெறக்கூடிய முழு அளவு செல்வ வளர்ச்சியைப் பெறத்தக்கவிதமாக இல்லை என்பதையும் எடுத்துக்காட்ட விரும்புகிறேன். பொருளாதாரச் செயல்முறைகள் ஒரு சீராக அமையவில்லை, தொழில் வளர்ச்சித் திட்டங்கள் ஒரு சீராக அமையவில்லை. மிகுந்தகால தாமதத்துக்குப் பிறகுதான். . . .

பூபேஷ் குப்தா:- திராவிட நாட்டை விட்டுவிடுங்கள், இந்தியக் குடிஅரசில் ஒரு பகுதியாக இருந்து. தமிழ்நாடு, அதிக தொழில் திட்டங்கள் பெற நாம் ஒன்றுபட்டுப் போராடு வோம். அந்த ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்வோம் - அந்த ஒப்பந்தத்தை பெற்றுக்கொள்கிறீரா?

சி. என். ஏ.:- என்னுடன் இருக்கவேண்டுமென, ஆவலாக இருப்பதற்காக, நான் பூபேஷ்குப்தாவுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன். ஆனால், எனது இலட்சியத்தை விட்டுக் கொடுத்துவிட்டு அவரைக் கூட்டாளியாக்கிக்கொள்ள நான் விரும்பவில்லை.

நீண்டகால தாமதத்துக்குப் பிறகுதான், சர்க்கார், தமது தொழில்வளர்ச்சித் திட்டம் ஒரு சீரானதாக இல்லை என்பதை உணர்ந்துகொண்டார்கள். இப்போது அவர்கள் ஒரு பொருளா தாரப் பிரச்சினை பேசுகிறார்கள் - அதன் அடியில் பல அரசியல் தத்துவங்கள் உள்ளன - அதுபற்றிப் பேசுபவர்கள், அந்தத் தத்துவங்களின் பொருளை, முழுவதும் வெளியே காட்டிப் பேசுவதில்லை. பிரதேச பொருளாதாரச் சீரமைப்பு என்பதுபற்றிப் பேசுகிறார்கள். சில பிரதேசங்கள் பொருளாதாரத்தில் மிகுதியான வளர்ச்சி அடைந்துள்ளன. சில பகுதிகள் முன்னேற்றம் அடையவில்லை. எனவே, தொழில் வளர்ச்சியைப் பொறுத்தமட்டில், நாட்டிலே புறக்கணிக்கப்பட்டுப்போன பகுதிகளில் விசேஷ கவனம் செலுத்துவது இனி இந்திய சர்க்காரின் கொள்கையாக இருக்கும் என்கிறார்கள். ஆகவே, திட்டமிட்டுக்கொண்டிருந்த இந்த 12 ஆண்டுகளும் நீங்கள் தவறான முறையிலே திட்டமிட்டுக்கொண்டு இருந்தீர்கள், ஒரு சீரான பொருளாதார வளர்ச்சித் திட்டம் போடாமலிருந் திருக்கிறீர்கள்.

முன்பொருநாள், திருமதி. தேவகி கோபிதாஸ், வளர்ச்சித் திட்டங்களிலே கேரளம் எப்படிப் புறக்கணிக்கப்பட்டுவரப் படுகிறது என்பதனைத் தெளிவாக எடுத்துக் கூறிக்கொண்டு வந்தபோது, திட்டம் தீட்டப்படும்போது, கேரளத்தின் தனித் தன்மைகள், தனியான இயல்புகள் ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டு, பரிகாரம் தேடவேண்டும், இல்லையேல், இந்திய யூனியன் வளர்ச்சிக்கு அது ஒரு முள்போல் இருக்கும், இந்திய யூனியன் வளர்ச்சி பாதிக்கப்படும் என்று கூறினார். இந்தக் கருத்துரை, இந்தியா ஒன்று, பிரிக்கப்படக்கூடாதது என்ற நம்பிக்கை கொண்டவரிடமிருந்து வெளிவருகிறது. கேரளத்தின் தனித்தன்மைகள், தனிஇயல்புகள் ஆகியவற்றைக் கவனிக்கா விட்டால், கேரளம் முள்போல இருக்கும் என்கிறார்.

P.A. சாலமன்:- காங்கிரசுக்குள்ளேகூட திராவிட கழக ஆட்கள் இருக்கிறார்கள்.

சி. என். ஏ. :- காங்கிரசிலே, திராவிட கழக மனப்பான்மை கொண்டவர்கள் இருக்கக்கூடும். ஆனால் நான் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவன். . .

P.A. சாலமன்:- நான் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தான் குறிப்பிடுகின்றேன். . . .

துணைத்தலைவர்:- மேலும், எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்ள விரும்புகிறீர்கள்?

சி. என். ஏ. :- மேலும் ஒரு ஐந்து நிமிடங்கள் எடுத்துக்கொள்ள அனுமதியுங்கள். திருமதி அவர்களே! இந்திய யூனியனுக்கு ஒரு முள்ளாக இருக்கும் என்று அம்மையார் குறிப்பிட்ட தைச் சொல்லிக்கொண்டிருந்தேன். துணைத்தலைவர் அவர்களே! இதில் கவனம் செலுத்தும்படி, தங்கள் மூலமாக பூபேஷ் குப்தா அவர்களைக் கேட்டுக்கொள் கிறேன். அம்மையார் இந்திய யூனியனுடைய வளர்ச்சிக்கு ஒரு முள்போலிருக்கும் என்று கூறுகிறார்கள். முட்களை என்ன செய்கிறோம்? வெளியே எடுத்து விடுகிறோம்! அதுதான் நாம் செய்வது. அரசியல் அமைப்பிலாயினும் சரி, உடலில் ஆகிலும் சரி, முள் இருப்பின், அந்த முள்ளை வெளியே எடுத்து விடுகிறோம்.

பூபேஷ் குப்தா:- என்ன சொன்னீர்கள்? நான் கவனிக்க வில்லை. . . .

சி. என். ஏ. :- உம்முடன் இதுபற்றி விவாதித்துக்கொண்டிருக்க எனக்கு நேரம் இல்லை, பிறகு விவாதிக்கலாம். எனவே, திருமதி அவர்களே! இந்திய ஒருமைப்பாட்டிலே நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பினும், தாம் வாழும் பகுதியில் தொழில்துறையிலே கட்டுப்பாடான வளர்ச்சி ஏற்பட வில்லை என்றால், இந்திய ஒருமைப்பாடு எனும் பிரச்சினை தீர்க்கப்பட்டதாகக் கருதுவதற்கில்லை என்று எண்ணு கிறார்கள்.

பூபேஷ் குப்தா:- தமிழ்நாட்டிலே உள்ள ஜனநாயக இயக்கத்தை உங்கள் பிரிவினை இயக்கம் வலிவற்றதாக்கிவிடும் என்று நான் நினைக்கிறேன். தமிழ்நாட்டுக் கோரிக்கையையும் அது கெடுத்துவிடும். நீங்கள் விரும்புவதும் கிடைக்காது - அதனை நாங்கள் விரும்பவில்லை - அந்தப் பகுதிக்கு தொழில் வளர்ச்சியும் ஏற்படாது.

துணைத்தலைவர்:- நீங்கள் பேசி முடியுங்கள்.

சி. என். ஏ. :- பூபேஷ் குப்தாவின் ஆலோசனைக்கு நான் மிகுந்த கவனம் செலுத்துகிறேன். எவ்வளவுக்கெவ்வளவு ஜனநாயக முறையில் இருக்கமுடியுமோ அப்படி இருக்க முயற்சிக் கிறோம். ஆனால், அதேபோல் நடந்துகொள்ளும் என்று நான் கம்யூனிஸ்டு கட்சியிடம் எதிர்பார்க்கவில்லை.

பூபேஷ் குப்தா:- நாங்கள் முழுக்க முழுக்க ஜனநாயக வாதிகள். உங்கள் யோசûனையை நான் ஏற்றுக்கொள்கிறேன். நல்ல யோசனை யாரிடமிருந்து வந்தாலும் ஏற்றுக்கொள்வதிலே தவறில்லை. ஆனால், என் யோசனையை ஏற்றுக்கொண்டு, திராவிடநாடு முழக்கத்தை, இந்தியாவிலிருந்து பிரிவது என்ற கோஷத்தை விட்டுவிடுவாரா? துணைத்தலைவர் அவர்களே! நான் அவருடைய யோசனையை ஏற்றுக் கொண்டிருக்கிறேன்.

துணைத்தலைவர்:- காலம் மிகவும் குறைவாக இருக்கிறது. தயவுசெய்து முடித்துக்கொள்ளுங்கள்.

மொரார்ஜி தேசாய்:- அடிக்கடி எழுந்திருந்து, மற்றவர்களின் நேரத்தை பூபேஷ் குப்தா எடுத்துக்கொள்கிறார். அவர் தமது நேரத்தைச் செலவிட்டுவிட்டார். ஏன் அடிக்கடி எழுந்து நிற்கிறார்.

பூபேஷ் குப்தா:- தி. மு. க. ஸ்லோகங்களில் அவருக்கு மிகுதியாக அனுதாபம் இருப்பதுபோல் தெரிகிறது.

சி. என். ஏ. :- துணைத்தலைவர் அவர்களே! நேரம் போதவில்லை. இல்லையென்றால், இதுபற்றி விவாதித்துக்கொண்டே போகலாம், ஆனால் பிரச்சினைகளை இம்மாதிரியான முறையில் தீர்த்துவிட முடியும் என்று நான் கருதவில்லை, பிரதேச ஏற்றத் தாழ்வு இருக்கிறது என்பதுபற்றி, எல்லா அரசியல் காட்சியினரிடமும் மனக்குறை உண்மையிலேயே இருக்கிறது என்பதை விளக்கிக்காட்ட முற்படுகிறேன். இதனை நான் எடுத்துக்காட்டுவது, பிரிவினைக்கு ஆக அல்ல. ஒரு சீரான பொருளாதார வளர்ச்சி இல்லாததால், நாட்டிலே மொத்தத்தில் கிடைக்கக்கூடிய செல்வ வளர்ச்சி கிடைக்கவில்லை என்பதை எடுத்துக்காட்ட இதனைக் கூறுகிறேன். அதுதான் என்னுடைய குறி. பிரிவினைக்காக வேறு பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால் அவை பற்றிப் பேசிப் பேச்சை வேறு திசை கொண்டுசெல்ல விரும்பவில்லை. ஒரு அங்கத்தினர் அப்படித் திசை தவறிச் சென்று, என்னை சிலோன்போய்ப் பிரசாரம் செய்யும்படி கூட விந்தையாகக் கூறி இருக்கிறார்! அவருக்கு என்னிடம் அதிகமான பற்றும் பாசமும் இருக்கிறதா, அல்லது சிலோன் நாட்டிடம் பற்றும் பாசமும் இருக்கிறதா என்று தெரியவில்லை. எப்படி இருப்பினும் அவர், தாம் ஒரு திராவிடர் என்பதை ஒப்புக்கொண்டார். நான் பேச்சின் திசையைத் திருப்பிவிடப்போவதில்லை. ஆனால் திட்ட வட்டமாக ஒன்று கூறுவேன். எரிகுண்டு, இழிமொழி எதுவும் என்னை ஏற்றுக்கொண்டுள்ள புனிதப்பணியி லிருந்து தடுத்து நிறுத்தப்போவதில்லை. அதுகுறித்துப் பேரப்பேச்சுக்கு இடமே இல்லை. எனவே நான் பேச்சின் திசையைத் திருப்பப்போவதில்லை. பிரதேச ஏற்றத்தாழ்வுப் பிரச்சினைக்கு வருவோம். பிரதேச ஏற்றத்தாழ்வு இருக்கிறது என்பதற்கு, பொருளாதாரக் கண்ணோட் டத்தின்படி ஒரு சுவையான தகவல் தருகிறேன். வருமானவரி நிலுவைகளைப்பற்றிக் குறிப்பிட்டேன். இராஜ்யவாரியாக அல்லது வட்டாரவாரியாக அந்தத் தகவல் தரப்பட்டிருக்கிறது. பம்பாய் நகரம் (1) பம்பாய் நகரம் (2) மத்திய பம்பாய் சேர்ந்து 36 கோடி ரூபாய் நிலுவை; மேற்குவங்கம், கல்கத்தா நகரம் உட்பட, 43 கோடி ரூபாய் நிலுவை! எனவே மிகப் பெருந்தொகை நிலுவையாக உள்ள அந்த இரண்டு பிரதேசங்களின்பேரிலும், நிதி அமைச்சர் தமது துப்பாக்கியைத் திருப்பவேண்டும்.

பூபேஷ் குப்தா:- மேற்கு வங்கத்தில் பெரிய முதலாளிகள் இருக்கிறார்கள். சாந்தி பிரசாத் ஜெயின் என்பவர், சமீபத்தில் 60 இலட்ச ரூபாய் விலையில் ஒரு வீடு வாங்கினார்.

சி. என். ஏ. :- மேற்கு வங்கத்தில் உள்ள முதலில், பெரும் பகுதி வெளி இடத்திலிருந்து வந்தது. பொருளாதார ஏற்றத் தாழ்வு, இராஜ்யத்துக்கு இராஜ்யம் உள்ள விவசாயத்துறை வருமானப் புள்ளிவிவரத்தைப் பார்த்தால்கூடப் புரியும். 1958-59ஆம் ஆண்டில், சென்னையில் எங்களுக்கு 343.3 கோடி ரூபாய் கிடைத்துள்ளன. உத்தர பிரதேசத்துக்கு 1,146 கோடி ரூபாயும், மேற்கு வங்கத்துக்கு 427 கோடி ரூபாயும் கிடைத்துள்ளன. உத்தர பிரதேசமோ மேற்கு வங்கமோ வளம் கொழிக்கும் செல்வ பூமியாவதை நான் குறைகூறவில்லை. ஆனால், திட்டங்களை நிறைவேற்றி யதில், முறைகேடான, சீரற்ற பொருளாதார ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படாமலிருந்திருந்தால், விவசாயத்துறையில், உத்தரப் பிரசேத்தைவிட மிக அதிகமான வருவாய் நாங்கள் பெற்றிருக்கமுடியும். இப்போதுகூட எங்களுக்கு ஒரு பக்ரா - நங்கல் இல்லை, சிறிய நீர்ப்பாசன திட்டங்களும் அதிகம் இல்லை. என்றாலும் இந்தியாவிலேயே தமிழ்நாட்டிலே தான், ஏக்கர் ஒன்றுக்கு அதிகமான விளைச்சல் ஆகிறது.

எஸ். சென்னாரெட்டி:- உங்களுக்குக் குந்தா திட்டம் இருக்கிறது.

சி. என். ஏ. :- அது பாசனத்துக்காக இருப்பதைவிட மின்சார உற்பத்திக்காகத்தான் பெரிதும் இருக்கிறது. அத்தகைய உதவிகளின்றி, எமது விவசாய உற்பத்தி வளர்ச்சி அடைந் திருக்கிறது. அப்படிப்பட்ட கடுமையாக உழைக்கத்தக்க, புத்தி கூர்மையுள்ள, விஷயங்களை ஆராய்ந்து அறிந்து கொள்ளும் பக்குவம் உள்ள உழவர்கள் இங்கு இருக்கும் போது, விவசாயத்துறைக்கான திட்டம் தீட்டியபோது, தெற்குப் பகுதிமீது பார்வை சென்றிருக்க வேண்டாமா? தெற்கே, மீன்பிடித் தொழிலை வளர்ச்சி அடையச் செய்திருக்கலாம். போக்கு வரத்துச் சாதனத்துறையிலே வளர்ச்சி கண்டிருக்கலாம். . . எத்தனையோ உள்ளன செய்வதற்கு. எவ்வளவோ வாய்ப்புகள் உள்ளன. வாய்ப்பு களைப் பயன்படுத்தத் தவறிவிட்டது மட்டுமல்லாமல், பிரச்சினையை எடுத்தாலே, பிரச்சினையைத் தள்ளிப்போட முற்பட்டார்கள். அப்படிப்பட்ட பிரச்சினைகளை எழுப்பிய போது, எங்கு மூலப்பொருள்கள் கிடக்கின்றனவோ, அங்குதான் தொழில்திட்டம் அமைக்கமுடியும்; அதுதான் கண்டிப்பான பொருளாதார தத்துவம் என்று கூறிக்கொண்டு வந்தார்கள். ஆனால், இப்போதுதான், இனிப்பிரதேச ஏற்றத் தாழ்வினை ஒழித்தாகவேண்டும் என்ற கொள்கைளை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். சபையினர் அறிந்துகொள் வதற்காக, ஒன்று கூறுகிறேன். இதுபோன்றதோர் பிரச்சினை இத்தாலியில் எழுந்தது. வட இத்தாலியுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, தெற்கு இத்தாலி தொழில் வளர்ச்சியில் மிகவும் பிற்போக்காக இருந்தது. இத்தாலிய சர்க்கார் அறிவுத்தெளிவும், துணிவும்மிக்க நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டார்கள். தெற்கு இத்தாலிக்கு எனத் தனியான திட்டங்கள் வகுத்தார்கள். இத்தாலியின் தெற்குப்பாகத்தை வளமாக்க, உதவித்தொகை, கடனுதவி ஆகிய சலுகைகளை வழங்கினார்கள். நான் உங்களை வசீகரமான பாதைவழியே அழைத்துச் செல்வதாக எண்ணாதீர்கள். அவ்வழியே சென்று, திரும்பிப்பார்த்து, நாங்கள் இத்தாலி கையாண்ட முறைகளை முன்மாதிரி யாகக்கொள்கிறோம் என்று கூறப் பார்க்காதீர்கள். நீங்கள் அந்த முறையைப் பின்பற்றக்கூடும். அந்த முறையைப் பின்பற்றவேண்டாம் என்று நான் உங்களுக்குக் கூறவில்லை. பின்பற்றி நடவுங்கள். ஆனால், அதனால் சமாதான மாகி, எனது அரசியல் கட்சி தனது அரசியல் தத்துவத்தை விட்டுக்கொடுத்துவிடும் என்று நான் உத்தரவாதம் தரமுடியாது. தரத் தேவையில்லை. தரமாட்டேன். அதனுடைய தத்துவம் பேரப்பேச்சு, சலுகைகள் பெறுவது போன்றவைகளிலிருந்து முற்றிலும் வேறானது. தெற்குப் பகுதியின் பொருளாதாரத்தைச் சரியானபடி கவனித்திருந்தால், இந்நேரம், செல்வம் மிகுதியாக உற்பத்தி செய்திருக்கமுடியும் என்பதை மட்டுமே நான் சுட்டிக் காட்டுகிறேன். உலகிலேயே மிகச் சிறந்ததோர் கடலோரம் தெற்கே இருப்பது. துறைமுகங்கள் நிரம்ப! பயன்பட்டுக்கொண்டு வருபவை, பயன்படாமலிருப்பவை உள்ளன. என் மதிப்புமிக்க நண்பர் தாயாபாய் படேல் கோபத்துக்கு வரமாட்டார் என்று நம்புகிறேன். அவருக்குக் கண்டாலா துறைமுகம் கிடைத்து விட்டது, எமக்கோ இன்னமும் தூத்துக்குடி துறைமுகம் அமைக்கப்பட்டாகவில்லை. வணிகர் சங்கக் கூட்டத்தில் பேசும்போது, எங்கள் இராஜ்ய தொழில் மந்திரி, இரண்டு நாட்களுக்கு முன்பு திட்டங்களை ஏற்றுக்கொள்வதாகக் கூறிவிட்டால் போதாது, இந்திய சர்க்கார் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் காரியத்தை விரைவுபடுத்த வேண்டும் என்று கூறி இருக்கிறார். எனவே, பொருளாதாரச் சீரமைப்பு நாடெங்கும் ஏற்பட்டிருக்குமானால், குறிப்பாகப் புறக்கணிக்கப்பட்டுக் கிடக்கும் தெற்குப் பகுதியில் ஏற்பட்டிருக்கு மானால், வரி செலுத்தும்படி அமுல் செய்யும்போது, அவ்வளவு கடினமாகத் தோன்றாமல் இருந்திருக்கும். நான் இந்தப் பிரச்சினையில், வரி செலுத்தும் முறைபற்றி மட்டுமே இப்போது கூறுகிறேன். தன் பிரதேசத்துக்காகக்கூட அல்ல, வேறு பிரதேச வளர்ச்சிக்காக, தன்மீது வரி சுமத்தப்படுகிறது என்று தெற்கு உணருகிறது. உணருவதால், வரிக்கொடுமை இரட்டிப்பு மடங்காகத் தெரிகிறது. எனவே நிதி அமைச்சருக்கும், அவர் மூலம் மற்ற அமைச்சர்களுக்கும், எனது வேண்டுகோள் என்னவென்றால், செல்வ வளர்ச்சி அதிகப்படவும், வரிவிதிப்பு குறையவும் ஏற்ற விதமாகத் தென்னகத்தைப் பொருளாதாரத் துறையில் எப்படித் திருத்தி அமைப்பது, சீர்படுத்துவது என்பதுபற்றி வழி காணவேண்டும் என்பதாகும்.

ஆளுங் கட்சியினர் மற்றோர் தவறான கருத்து ஏற்படச் செய்து வருகின்றனர். இப்போது இலாபத்தைப் பங்கிடுவதுபற்றி, பிரித்துக் கொடுப்பதுபற்றிப் பேசாதீர்கள். உற்பத்தியைப் பெருக்குங்கள், உற்பத்தியைப் பெருக்குவது உமது கடமை. எனவே, மேலும் மேலும் உற்பத்தியைப் பெருக்குங்கள். பகிர்ந்து கொள்வதுபற்றி இப்போது பேசாதீர்கள். ஏனெனில் பகிர்ந்து கொள்வது என்பது, உற்பத்தி முடிந்த பிறகுதான் இயலும் என்று பேசுகிறார்கள். பொருளாதார பாடப் புத்தகங்களிலேதான், முதல் அத்தியாயம் உற்பத்தி, இரண்டாவது அத்தியாயம் விநியோகம் என்று இருக்கும் என்பதைக் கூற விரும்புகிறேன். ஆனால் நடைமுறையிலே, உற்பத்தி செய்துகொண்டிருக்கும் போதே விநியோகமும் நடந்துகொண்டுதானிருக்கும். உற்பத்தி செய்துமுடித்துவிட்டு, எல்லாவற்றையும் குவியலாக ஒரு இடத்தில் கொட்டிவைத்தான பிறகு, ஒரு நல்ல நாளில், இனி விநியோகிக்கலாம் என்று நாம் கூறுவதற்கில்லை. பொருளாதார நடவடிக்கைகள் அந்த முறையிலே செயல்பட்டுக்கொண்டில்லை. பொருளாதார பாடப் புத்தகங்கள் எழுத மட்டுமே அது முறையாகக்கொள்ளப்படுகிறது. எனவே, ஆளுங் கட்சியினர் அத்தகைய சொத்தைக் காரணத்தைக் காட்டக்கூடாது. இந்தப் புறத்திலுள்ள நாங்கள், உற்பத்தி செய்யப்படுவது, சரியான முறையில் பகிர்ந்தளிக்கப்படவில்லை என்று கூறுகிறோம். பண்டங்கள் சரியான முறையிலே விநியோகமாயிருந்தால், செல்வம் சரியானபடி பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தால், நமது நாட்டில், இவ்வளவு வறுமை இருந்திருக்கிறது. வறுமை எந்த அளவு இருக்கிறது என்றால், அனாதைகளாக உள்ள முதியவர் களுக்கு எங்கள் இராஜ்யத்தில் உதவித்தொகை தரப்படவேண்டி ஏற்பட்டிருக்கிறது. எனது இராஜ்ய சர்க்கார் அப்படி ஒரு ஏற்பாடு மேற்கொண்டிருப்பது எனக்கு மகிழ்ச்சி தருகிறது என்றாலும், அது எங்கள் பகுதியிலே உள்ள தரித்திரத்தைக் காட்டும் குறியாக இருப்பதனையும் கூறுவேண்டி இருக்கிறது. இத்துணை செல்வம் உற்பத்தி செய்யப்பட்ட பிறகும் இவ்வளவு வறுமை இருக்கக் காரணம் என்ன? காரணம் என்னவென்றால், பகிர்ந்தளிக்கும் பிரச்சினைமீது சரியான முறையில் அக்கறை செலுத்தப்படவில்லை. ஆகவேதான், செல்வம் வளருகிறது; புதிய புதிய காடிலாக் கார்களும், புதிய புதிய மாளிகைகளும், புதிய புதிய தொழிலகங்களும் காண்கிறோம். சர்க்காருக்கே தேவைப்படும் அளவு சிமிட்டி கிடைக்காதபோது, தனிப்பட்ட கண்ட்ராக்டர்களுக்கு எவ்வளவு அளவுக்கு வேண்டுமானாலும் சிமிட்டி கிடைப்பது தமக்குத் தூக்கிவாரிப் போடுவதாக இருக்கிறது எனப் பிரதம மந்திரி பேசியதாக அன்றோர் நாள் பத்திரிகையில் பார்த்தேன். கள்ள மார்க்கட். கருப்புப் பணம் - என்ற இரண்டு வார்த்தைகள் புழக்கத்திலிருக்கிறதே, இந்த நிலை இந்தத் தேசிய சர்க்காருக்கு அவமானகரமானது என்று கூற விரும்புகிறேன் - அவமானகரம் என்ற பதம், மிகக் கடினமானதோ என்னவோ எனக்குத் தெரியவில்லை. இந்தப் பதங்களை மிகச் சாதாரணமாக நாம் உபயோகப்படுத்துகிறோம். எந்தப் பண்டத்தைப்பற்றியாவது பேச்சு எழும்போது, அங்காடியில் என்ன விலை? கள்ள மார்க்கட்டில் என்ன விலை? என்று கேட்கிறோம். இரும்புச் சாமான் கள்ளமார்க்கட்டில் என்ன விலைக்கு விற்கப்படுகிறது என்பது நமக்கு மிக நன்றாகத் தெரியும் என்று மந்திரிசபையினர் ஒருவர் பேசியதாகப் பத்திரிகையிலே பார்த்தேன் - திடுக்கிட்டுப் போனேன். சொன்னவர் இப்போதுள்ள இரும்புமந்திரி அல்ல. எனவே, கள்ள மார்க்கட் இருப்பது சர்க்காருக்குத் தெரியும், கள்ளமார்க்கட் எப்படி நடத்தப்படுகிறது என்பதும் தெரியும். ஆனால் அந்தக் கள்ளமார்க்கட்காரர் மீது நடவடிக்கை எடுத்துக் கூண்டில்கொண்டுவந்து நிறுத்தினால், தேர்தல்களில் தீர்த்துக்கட்டிவிடுவார்கள் என்பதும் சர்க்காருக்குத் தெரிகிறது. ஆகவேதான் கள்ள மார்க்கட் கொட்டம் அடிக்க விடப்பட்டிருக்கிறது. கள்ள மார்க்கட் இருக்கும்போது, கருப்புப் பணம் உண்டாகிறது. இந்தக் கருப்புப் பணத்தைத் தொழிலுக்கு முதலாகப்போட முடிவதில்லை. தனிப்பட்ட ஒரு அமைப்புக்குத் தொழிலிலே இலாபம். வெளிப்படையாகக் கிடைத்தால், அந்தப் பணத்தை வேறு வியாபாரத்தில் கொண்டுவந்து போடலாம். ஆனால், கணக்கிலே காட்டப்பட முடியாத கருப்புப் பணம் கிடைக்குமானால், அதனைத் தொழிலிலே கொண்டுபோய்ப் போடமுடியாது. ஆகவே, அந்தப் பணம் டம்பாச்சாரி வாழ்வுக்குச் செலவாகிறது, இத்தகைய டம்பாச்சாரிப் போக்கைத் தடுக்கவேண்டும் என்றுதான் அந்த நிதி மந்திரி, செலவு வரி விதித்தார். ஆனால், இன்றுள்ள நிதி மந்திரி, டம்பாச்சாரி செலவு மட்டுப்பட்டுவிட்டது என்பதாலோ, அல்லது டம்பாச்சாரிப் போக்கு நல்லது என்பதாலோ செலவு வரியை எடுத்து விட்டார். அதனால் அதிகமான வருவாய் கிடைக்காமல் இருந்திருக்கலாம். 77 இலட்ச ரூபாய்தான் கிடைத்ததாகத் தெரிகிறது - பத்திரிகைச் செய்திகளிலிருந்து. ஆனால் தொகை எந்த அளவாக இருப்பினும், அந்த வரிக்கு அடிப்படையாக அமைந்திருந்த சமுதாயக் கருத்து முக்கியமானது - எனினும் அந்த வரியை இவர் நீக்கிவிட்டார். அதற்கு மாறாக, கிரசின், தீப்பெட்டி, புகையிலை இவைகள்மீது உள்ள வரிகளை மேலும் மேலும் அதிகமாக்கி இருக்கிறார், அன்று நிதி அமைச்சர், லோக்சபையிலே. . . . .

துணைத்தலைவர்:- ஐந்து நிமிடம் வேண்டுமெனக் கேட்டீர்கள் - ஆனால் பத்து நிமிடங்களுக்குமேல் எடுத்துக்கொண்டு விட்டீர்கள்.

சி. என். ஏ. :- இன்னும் ஒரு இரண்டு நிமிடங்களில் முடித்து விடுகிறேன்.

துணைத்தலைவர்:- தயவுசெய்து முடித்துவிடுங்கள், ஏனெனில் குறுகிய கால அளவே இருக்கிறது.

சி. என். ஏ. :- அன்று லோக்சபையில் நிதி அமைச்சர் ஒரு தீப்பெட்டியை எடுத்துக்காட்டி, இதோ வத்திப்பெட்டி, இதனை நியாயமான விலைக்கு வாங்கி இருக்கிறேன் என்று கூறினார். இப்போது போய் வாங்கும்படி நான் அவரைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது வத்திப்பெட்டியின் விலையும் ஏறிவிட்டது. மற்ற சாமான்களின் விலையும் ஏறிவிட்டது. ஏனெனில் கான்யூட் மன்னனைப் போல, நிதி அமைச்சர் விலைகள் ஏறாது என்று கூறினார் என்றாலும், கான்யூட் முன்னர் கடல் அலை ஓய்ந்து விடவில்லை; விலைகளும் நிதி மந்திரியாரின் பேச்சினால் ஏறாமல் நின்றுவிடவில்லை. எந்தெந்தச் சமயத்தில் வரி போடப் படுகிறதோ, அப்போதெல்லாம் விலைகள் ஏறிவிடத்தான் செய்யும். விலைவாசி ஏற்றத்தை இந்தச் சர்க்கார் கட்டுப்படுத்த முடிந்தாலாகிலும், புதிய வரிகளுக்கு அதனைக் காரணமாகக் காட்ட முடியாவிட்டாலும், மறைமுகவரி போடப்படுவதற்கு மன்னிக்கும்படி கேட்டுக் கொள்ள வசதியாகவாவது இருந்திருக்கும். எனவே, இந்த வரி மசோதா, ஒரு கசக்கிப் பிழியும் திட்டமாகும். கம்பளி நெய்வதற்காக, ஆடுகளின் ரோமத்தை வெட்டி எடுக்கிறீர்கள்; புரிகிறது. ஆனால் நீங்கள் மக்களைக் கசக்கிப் பிழிகிறீர்கள் ஏழைகளைக் கசக்கிப் பிழிகிறீர்கள்; திட்டத்தின் பெயரால் ஏழைகளைக் கசக்கிப் பிழிகிறீர்கள். அதனால், மக்கள், திட்டத்தையே மிரட்சியுடன் பார்க்கச் செய்து விட்டீர்கள். மக்கள் திட்டம்வேண்டும் என்கிறார்கள். ஆனால், திட்டம் காரணமாகத்தான் இந்த வரிகளெல்லாம் போட வேண்டி இருக்கிறது என்று நீங்கள் கூறும்போது, மக்கள் வரிகளை மட்டும் கண்டிக்கவில்லை, திட்டத்தின் அவசியம் பற்றியே சந்தேகப்படத் தொடங்கு கிறார்கள். எனவே, ஒரு விதத்தில் எந்தத் திட்டத்துக்கு நீங்கள் கட்டுப்பட்டிருக்கிறீர்களோ, அதே திட்ட ஏற்பாட்டையே நீங்கள் குலைத்துவிடவும் செய்கிறீர்கள். வாதங்கள், இடையிடையே புள்ளி விவரங்களை வைத்து அடைத்த மறுப்புரைகள் ஆகியவற்றை நீட்டி முழக்க வேண்டாம்; வறுமையில் நெளியும் மக்கள், அவர்கள் படும்பாடு, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவைகளைக் கருத்தில் கொள்ளுங்கள் என்று நிதி அமைச்சரைக் கேட்டுக்கொள்கிறேன். வரி செலுத்தக்கூடிய சக்தியின் கடைசிக் கட்டம் வந்தாகி விட்டது. எனவே மறைமுக வரிகளை, அதிலும் அத்தியாவசியப் பண்டங்களின்மீது விதிக்கப்பட்டுள்ள மறைமுக வரிகளை நீக்கிவிட்டு, வேறு இடத்திலிருந்து பணம் தேடிக்கொள்ள முற்படுங்கள். இந்த வரிகள் எல்லாம் நீக்கப்பட்டுவிட்டாலும் அவருக்கு நிரம்ப வருவாய் கிடைக்க இருக்கிறது என்று உறுதி கூறுகிறேன். ஏனெனில், எப்போது வரவு செலவு திட்டத்தைக் கொடுத்தாலும், வருவாய் வரக்கூடியது என்று தரப்படும் புள்ளியைக் குறைவாகவே தருவது வாடிக்கை; பிறகு சபையிலே மந்திரவாதி போல் எழுந்து நின்று நான் 23 கோடிதான் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன், ஆனால் 32 கோடி கிடைத்தது என்று பேசுவார். ஆகவே இத்தகைய மறைமுக வரிகளுக்கு அவசியம் இல்லை; மக்களைக் கசக்கிப் பிழிய வேண்டியதில்லை என்று கூறுகிறேன்.

தம்பி! இன்னும் என்னென்னவெல்லாமோ சொல்லவேண்டு மென்று நினைத்தேன். நேரம் இல்லை. சரி! அடுத்தடுத்து அவைகளை உன்னிடம் கூறி, என் கடமையை நிறைவேற்றி களிப்புத் தேடிக்கொள்கிறேன்.

கடமையாற்றுவதிலே தன்னிகரற்ற தீரம் காட்டிடும், தம்பி! 30ந்தேதிதான் முழக்கம் எழுப்பப்போகிறாயே, விலை ஏற்றம், வரிப்பளு இவைகளைக் கண்டித்து, சட்டமன்றத்துக்கு எதிரே,

கோட்டைக்கு எதிரே அணிவகுப்பு! கடலலையின் ஒலிக்கும், உன் முழக்கத்துக்கும் கடும்போட்டி! பார்ப்போம், ஆளவந்தார்கள் மனம் மாறுகிறதா என்று.

அண்ணன்,

1-7-1962