அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


இராஜ்ய சபையில். . .(2)
1

பிரிவினைத் தடைச் சட்ட மசோதா பற்றிய மாநிலங்களவைப் பேச்சு
போர் ஆதரவு முயற்சிக்கு ஒத்துழைப்பு
அரசியல் நேசத் தொடர்பு வேறு - தேர்தல் நேசத் தொடர்பு வேறு - இலட்சியம் என்பது வேறு.
தேசிய ஒருமைப்பாட்டுக்குழு எங்களைக் கலக்காதது ஏன்?
அரசுரிமை என்றால் என்ன?
ஓரரசு முறையை எதிர்க்கும் ஈட்டிமுனை தி. மு. க.
மனமாற்றம் ஏற்படுத்த முயலுக!

தம்பி!

பழக்கடைக்குச் செல்பவன், முழம் என்ன விலை என்று கேட்க மாட்டான்; துணிக்கடை சென்று படி என்ன விலை என்று கேட்கமாட்டான்; சராசரி அறிவுள்ளவன்!

ஆடை அணி அணிந்துகொண்டு ஆற்றிலே இறங்குபவன், சேற்றினை எடுத்துச் சந்தனமாகப் பூசிக்கொள்பவனுக்கு, அண்ணன், வேறென்ன! திருக்குறள் படிப்பவன் பெரிய திருவடியின் வாலின் நீளம் எவ்வளவு என்பதனை அறிய, அந்த நூலைத் துருவித் துருவிப் பார்த்திடுவானா? தென்னை ஏறித் தேன் கதலி தேடுபவன் உண்டா?

உன் அண்ணனுக்கு, என்ன அளவற்ற ஆற்றலோ! அகிலத்தில் எவருக்கும் இல்லாத அறிவாற்றல் கொண்டவனோ, என்று எவரேனும் கேட்டிடும்போது, தம்பி, இதனை எண்ணிக் கொள், எனக்குத் தெரிந்தது குறைவு, ஆனால், அதிலே தெளிவு மிகுதியும் இருக்கவேண்டும் என்பதிலே நான் நிரம்ப அக்கறை கொண்டவன்; ஆர்வம் உள்ளவன்; எதையும் செய்திட வல்லேன் என்ற இறுமாப்புக்கொள்பவன் அல்ல; எதை எப்படிச் செய்தால் என்ன என்று அக்கறையற்று நடப்பவன் அல்ல.

பழக்கடை செல்வேன், முழம் என்ன விலை என்று கேட்க மாட்டேன். துணிக்கடை போனால், படி எட்டணாவா என்று கேட்டு, ஏமாளியாக மாட்டேன். தேன் கதலி தேடித் தென்னை ஏறமாட்டேன்.

எதை எதை எங்கெங்குப் பெறமுடியும் என்று தெளிவுடன் பணியாற்றுவேன்.

புதுடில்லி சென்றிருந்தேன், கம்பளிப் போர்வைக்குள்தான் இருந்தேன் - கொட்டும் குளிர் அங்கு - இப்போது.

அதே டில்லியில் முன்பு சென்றிருந்தபோது சட்டைகூடப் போட முடியவில்லை - அவ்வளவு வெப்பம்!

அண்ணாதுரை அடியோடு மாறிவிட்டான் - ஒரே கம்பளி மயம் இப்போது - என்று யாராவது பேசினால் - நகைச்சுவைக் காக என்று கருதிக்கொண்டு பேசினால்கூட - கருத்தற்றவன் என்றுதான் பேசுபவர்பற்றி அறிவுலகம் கூறும். நான் அறிந்த உலகத்திலே இதற்குத்தான் அபாரமான மதிப்பு என்று எவரேனும் சொல்ல முனைந்தால், "சபாஷ் தம்பி! வெளுத்து வாங்கு!'' என்று கூறிவிட்டு, வேறு வேலை பார்ப்பவன் நான்.

சென்ற பொதுக்குழுவின்போது நான் விளக்கிக் காட்டியதுபோல, தி. மு. கழகத்துக்கு மிகப் பெரிய - அது தோன்றிய நாளிலிருந்து ஏற்படாத விதமான - நெருக்கடி ஏற்படுத்த, நாசமாக்க, பலத்த முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.

திராவிடநாடு கேட்பது - அரசியல் சட்டத்துக்கு விரோத மானது என்று ஏற்படுத்த, அரசியல் சட்டம் திருத்தப்படுகிறது.

இது, அரசியல் சட்டத்துக்கு ஏற்படும் பதினாறாவது திருத்தம்.

ஆங்கில மொழி நீடித்திருக்கச் செய்வதற்காக, ஒரு திருத்தம் அரசியல் சட்டத்தில் செய்யப்பட இருந்தது; பண்டித நேரு உறுதி அளித்திருந்தார்; ஆனால், இப்போதுள்ள சூழ்நிலையில் கசப்புணர்ச்சி ஏற்படக்கூடாது என்பதனால், கருத்து வேறுபாட்டுணர்ச்சியைக் கிளப்பத்தக்க, பிரச்சினையைப் புகுத்தவேண்டாம் என்ற காரணம் காட்டி, வந்திருக்கவேண்டிய திருத்தத்தை நிறுத்தி வைத்துவிட்டார்கள்.

ஆனால், பேச்சு உரிமையைப் பறிக்கும் 16ஆம் திருத்தம், பல கருத்து வேற்றுமைகளைக் கிளறிவிடத்தக்கது என்று தெரிந்திருந்தும், கொண்டுவந்துவிட்டனர்.

அந்தப் பிரச்சினைபற்றி இராஜ்ய சபையில் நான் பேசியதைத் தமிழாக்கித் தந்துள்ளேன்.

அதிலே, பழம், டஜன் என்ன விலை என்ற முறைதான் இருக்கும், முழம் என்ன விலை என்று இருக்காது!

அப்படியா கேட்பது - கூடை என்ன விலை என்றல்லவா கேட்டிருக்கவேண்டும் என்று கூறுபவர் இருப்பர் - உலகிலே பலர் பலவிதம்! கூடை என்ன? அம்பாரம் என்ன விலை என்று கூடக் கேட்கட்டும்; நான் தடுக்கவில்லை! ஆனால், பழக்கடை சென்று, முழம் என்ன விலை என்று கேட்கவேண்டும் என்று மட்டும் சொல்லாதிருந்தால் போதும் - சொல்பவர்கள் சரியாகத் தான் இருக்கிறார்கள் என்ற எண்ணம் ஏற்படும்.

தம்பி! பேச்சைப் படித்துப்பார்!!

பேச்சுரிமைக்காக வாதாடி இருக்கிறேன்.

இராஜ்யங்களுக்கும், இன்றைய அரசியல் சட்ட திட்டத்தின்படியே, அரசுரிமை (நர்ஸ்ங்ழ்ங்ண்ஞ்ய்ற்ஹ்) உண்டு என்று எடுத்துக்காட்டி இருக்கிறேன். பிரசாரத்தைப் பிரசாரத் தால்தான் எதிர்க்கவேண்டும் - சட்டத்தின் பாதுகாப்புத் தேடிக் கொண்டு அல்ல என்று எடுத்துச் சொல்லி இருக்கிறேன்.

பிரிவினை கேட்கும் பேச்சு உரிமைக்காகப் பேசியிருக்கிறேன்!

பலே! பலே! அகப்பட்டுக்கொண்டான் உங்கள் அண்ணாத்துரை! பார்த்தீர்களா, பிரிவினைக்கான பேச்சு உரிமைதான் கேட்டிருக்கிறான், பிரிவினை அல்ல!! - என்று பேசுவதை, வெறுங் குரலொலி - வெறுங் குரலொலி அல்ல - வெறுப்புக்கொண்டவரின் குரலொலி என்று கருதிக் கொள்கிறேன்.

இராஜ்ய சபையில் நடைபெற்ற விவாதம், பேச்சு உரிமை தரும் அரசியல் சட்டதிட்ட விதியைத் திருத்துவதற்கான மசோதாபற்றி! பழக்கடை! முழம் என்ன விலை என்று கேட்கவில்லை!!

என்ன பேசினேன் என்பதை, நீயே படித்துப்பார், தம்பி! ஆனால் ஒரு நிபந்தனை. சர்க்காரின் இந்தப் போக்குப்பற்றிக் கோபம் கொந்தளித்தாலும், நீக்கிக்கொள்ளவேண்டும் - கசப்புணர்ச்சி மேலிட்டாலும் போக்கிக்கொள்ளவேண்டும்; இதை விவாதப்பிரச்சினையாக்கி, பொதுமக்களிடம் சென்று முறையிடத் தேவை இல்லை. கொழும்பு மாநாட்டு ஏற்பாடு, என்பது, அடியோடு போர் நீங்கிவிட்ட நிலையல்ல; சமாதானம் நிலைத்துவிட்டது என்றும் பொருள் அல்ல - ஆகவே, உன் தூய்மைமீது நம்பிக்கை வைத்து, நான் கொடுத்துள்ள வாக்குறுதி, காப்பாற்றப்பட்டாகவேண்டும் - சமாதானம் நிலைநாட்டப் படுகிற வரையில், நாம் சச்சரவு மனப்பான்மை ஒரு துளியும் கொள்ளக்கூடாது; நமது ஆதரவு அன்றுபோல் இன்றும் உண்டு - சீனனை விரட்ட.

இந்த உறுதியைத் துளியும் குறைத்துக்கொள்ளாமல், பிரச்சினையைக் கவனித்துப் புரிந்துகொள்.

வம்புக்கு இழுப்பதுபோல, கிளறிவிடுபவர்கள் கேட் பார்கள் - என்ன செய்யப் போகிறீர்கள்? என்று. இப்போது நாங்கள் போர் ஆதரவு முயற்சிக்கு எமது ஒத்துழைப்பைத் தந்து வருகிறோம்! போர்க்கோலம் நீக்கப்பட்டு, அமைதியும், மகிழ்ச்சியும் அரசோச்சும் காலம் ஏற்படுகிற வரையில், எமக்குள்ள பணி அதுதான் என்று கூறுங்கள்!

அண்ணன்

 

3-2-1963

(பிரிவினைத் தடைச்சட்ட மசோதாபற்றிய விவாதம் 25-1-63இல் இராச்சிய சபையில் நடைபெற்றபோது, அதன் அவசியமற்ற தன்மையை விளக்கி ஆற்றிய ஆங்கில உரையின் தமிழாக்கம் இங்குத் தரப்படுகிறது)

சி. என். ஏ. : சமரசம் பேசுவதற்காகச் சீன ஆக்கிரமிப்பாளருடன் மேஜைமுன் அமர நமது விருப்பத்தையும் சம்மதத்தையும் தெரிவித்தான உடனே, எதிரியை அல்ல, ஒரு இலட்சியத்துக் காகப் பணியாற்றுபவனை அழிக்க, சர்க்காருக்கு ஒரு புதிய சட்ட ஆயுதத்தைத் தருவதற்காக, அரசியல் சட்டத்துக்கும் கொண்டு வரப்படும் ஒரு திருத்தம்பற்றி நாம் இன்று விவாதித்துக்கொண் டிருப்பது வேதனையுள்ள விசித்திரம்போலும்! மன்றத்தின் இரண்டு தரப்புகளிலிருந்தும் கூறப்பட்ட பல கருத்துரைகளை நான் மிகுந்த அக்கறையுடன் கேட்டுக்கொண்டிருந்தேன். சட்டத்தைத் துணைகொண்டு அடக்கிவிட நீங்கள் முயலும் அந்த இலட்சிய எண்ணத்தைப் புகுத்தியவன் என்ற முறையில், என் நோக்கத்தை மீண்டும் விளக்க அல்ல, ஆனால் எமது கோரிகைக் குறித்து ஏற்பட்டுள்ள சில தப்பர்த்தங் களைப் போக்க, அந்த இலட்சியம்பற்றிய விளக்கத்தையும் வரலாற்றையும் எடுத்துக்கூற விரும்புகிறேன். கனம் உறுப்பினர் ஒருவர் பிசோ கேட்டதைக் கண்டு அல்லது அதைத் தொடர்ந்து திராவிடஸ்தான் கேட்கப்படுகிறது என்று கூறினார். உண்மை, அதற்கு வெகு தூரத்தில் இருக்கிறது. சுதந்திரம் வந்தபிறகு இப்படிப்பட்ட பிரிவினை உணர்ச்சிகள் கிளம்பின என்று மற்றோர் உறுப்பினர் கூறினார். இது உண்மைக்கு நெருங்கி வருவதாகும்; ஆனால், உண்மை இது அல்ல. தி. மு. கழகம் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்த அமைப்பு. திராவிடர் கழகம், சுதந்திரத்துக்கு மிக நீண்ட காலத்துக்கு முன்பே இருந்து வந்திருக்கிறது. எதிர்கால அரசியல் முறை அமைப்புப் பற்றிச் சர்ச்சைகள், பிரச்சினைகள், கொள்கைகள் எழுந்தபோது, திராவிடர் கழகம் - அந்த அமைப்பின் பொதுச்செயலாளனாக நான் இருந்திருக்கிறேன் - தென்னகத்துக்கு, ஒரு அரசியல் ஏற்பாடுபற்றித் திட்டம் அறிவித்தது. அதனுடைய தொடர்பாகத் தான், திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து வளர்ந்த திராவிட முன்னேற்றக் கழகம் அந்த இலட்சியத்தை எடுத்து விளக்கிக் கொண்டு வருகிறது. எனவே, இது ஆளுங்கட்சியின் செயல்கள் அல்லது செயலாற்றாத தன்மை ஆகியவைகளைப் பொறுத்த தாக அமையவில்லை. நாட்டின் வேறு இடங்களிலே இது போன்ற அல்லது இதைவிடப் பயங்கரமான எந்தப் பிரச்சினைகளுக்கும் இதற்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லை. பிரச்சினையின்மீது பாய்வதற்கு முன்பு, கனம் உறுப்பினர்கள், பிரச்சினையை அலசியாவது பார்க்கவேண்டுமென்று நான் விரும்புகிறேன்.

இரண்டாவதாக, ஒரு ஆக்கிரமிப்பாளனைச் சந்தித்துச் சமரசம் பேசச் சம்மதத்தைத் தெரிவித்த சீக்கிரத்தில், பெருமை மிக்க நாட்டு மக்கள் என்ற முறையில், எங்கள் பிரசாரத்தைத் தடைபோட்டு நிறுத்துவதற்கு முன்பு, எங்களைப் புரிந்துகொள்ள வாவது முயலக்கூடாதா, என்பதைச் சுட்டிக் காட்ட விரும்பு கிறேன். நாங்கள் என்ன அவ்வளவு தாழ்ந்து போய்விட்டவர்களா, அரசியல் அரங்கத்திலே எங்களைத் தீண்டப்படாதவர்கள்போல நடத்துவதற்கு! எங்கள் கோரிக்கை மிக முக்கியமானதல்லவா - நீங்கள் எங்கள் மனத்தைத் திருப்திப்படுத்தவும், மக்கள் ஒத்துக் கொள்ளக்கூடிய முறையை மேற்கொள்ளவும் முயற்சி எடுத்துக் கொள்ளவேண்டாமா? காரணகாரிய விளக்கங்களைக் கேட்க ஒருப்படாதவர்களா நாங்கள்? அந்த முயற்சி செய்து பார்த்தீர் களா? இந்த மன்றத்தில் இதுதான் என் முறையீடு. கட்சித் தொடர்புகள்பற்றிய கவலையின்றி, இந்த மன்றத்தில் உள்ள உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் இந்த அம்சம்பற்றித் தங்கள் சீரிய கவனத்தைச் செலுத்தவேண்டுகிறேன் - எங்களைக் கலந்து பேசிக் கருத்தறிந்தார்களா? - பிரச்சினையை அலசிப் பார்க்க, ஆளுங்கட்சி சிரமம் எடுத்துக்கொண்டதா? நான் ஆளுங்கட்சி என்று ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், எதிர்க்கட்சிகள் பலவும் பிரச்சினையை அலசிப் பார்க்க முயற்சி எடுத்துக்கொண்டன. அதனால், இன்று காலையில், ஒரு உறுப்பினர், இந்தப் பிரச்சினையில் கம்யூனிஸ்டு கட்சி எங்களுடன் நேசத் தொடர்பு கொண்டிருந்தது என்று சொன்னார். எங்கள் கொள்கையை ஒப்புக்கொள்ளவேண்டுமென்று, நாங்கள் கேட்டபோது, முடியாது என்று கம்யூனிஸ்டு கட்சி கூறியது - பெருமைப்படத் தக்க விதத்தில் துணிவுடன் கூறிற்று. இலட்சியங்களுக்கும், தேர்தல் தொடர்புகள், உடன்பாடுகள் ஆகியவற்றுக்கும் சம்பந்தம் இல்லை. எனவே, நாங்கள் கம்யூனிஸ்டு கட்சியையோ, வேறு கட்சிகளையோ கொள்கை அடிப்படை வைத்து அல்ல, அரசியல் நேசத் தொடர்புகள் கொள்ளவேண்டும் என்ற நோக்கத்துடன்தான் அணுகி இருந்திருக்கின்றோம். இப்போது கூட, இன்றுகூட, சென்னை மேயர் தேர்தல் சம்பந்தமாக, சென்னைக் காங்கிரஸ் கட்சியும் தி. மு. கழகமும் ஒரு ஏற்பாட்டில் இணைந்து உள்ளன. இந்த மன்றம் இதை அறிய அக்கறை காட்டும் என்று எண்ணுகிறேன். எனவே, அரசியல் நேசத் தொடர்பு என்பது ஒரு விஷயம், தேர்தல் நேசத் தொடர்பு என்பது மற்றொன்று; இலட்சியம், முற்றிலும் வேறான விஷயமாகும்.

கோபார்கடே (மராட்டா): அப்படியானால், காங்கிரசே, பிளந்து போவதை ஆதரிக்கிறது!

சி. என். ஏ. : அதனால்தான் சொல்லுகிறேன், தேர்தல் நேசத் தொடர்பு என்றால் இலட்சித்தை இழந்துவிட்டதாகப் பொருள் இல்லை, என்று. தன் இலட்சியத்தைக் காத்திடும் வலிவு சென்னைக் காங்கிரசுக்கு இருக்கிறது. காங்கிரஸ் இலட்சியத்திலே சென்னை முதலமைச்சருக்கு வலிவான நம்பிக்கை இருக்கிறது. நமது விவாதங்களில் சென்னைக் காங்கிரஸ்பற்றியோ, முதலமைச்சர் பற்றியோ தப்பான வியாக்கியானங்கள் கொள்வதை நான் விரும்பவில்லை. தம்முடைய இலட்சியங்களை விட்டுக்கொடுக் காமலேயே, தேர்தல் நேசத்தொடர்புகள் கொள்ளமுடியும் என்பதைக் குறிப்பிடவே இதைச் சொல்கிறேன். ஆனால், நான் இலட்சியத்தை உணரவேண்டும், அலசிப் பார்க்கவேண்டும், ஆய்ந்து பார்க்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இப்போது இந்த மசோதா, இந்தியாவுடைய அரசுரிமை யையும் பிரதேச ஒற்றுமையையும் பாதுகாக்க, நிலைநிறுத்தக் கொண்டுவரப்பட்டிருக்கிறது. அந்த அரசுரிமைக்கு என்ன ஆபத்து வந்திருக்கிறது - எனக்குத் தெரியாது - எனக்குத் தெரிவிக்கவும் இல்லை. ஒருசமயம் சட்ட மந்திரி - புதிய சட்டம் ஏதாவது தயாரித்துக்கொண்டிருப்பார்போலிருக்கிறது, அதனால் தான் சபையில் இல்லை - அவர் இங்கு இருந்திருப்பாரானால், திரும்பிப்பார்த்துச் சொல்லுவார்; நாட்டிலே பிளவுச் சக்திகள் உள்ளனவே, அறியாயா? இந்தக் காரியத்துக்காகவே தேசிய ஒருமைப்பாடு கமிட்டி அமைத்தோமே, அறியாயா? தேசிய ஒருமைப்பாடு கமிட்டி கூறிய யோசனைகளை ஒட்டியே நடவடிக்கை எடுத்திருக்கிறோம், தெரியாதா என்றெல்லாம் கேட்டிருப்பார். துணைத்தலைவர் அவர்களே! தேசிய ஒருமைப் பாட்டுக் கமிட்டி திறமைமிக்க டாக்டர் சர். சி. பி. இராமசாமி ஐயர் தலைமையில் அமைக்கப்பட்டதை நான் நன்றாக அறிந்திருக்கிறேன். - இந்தியாவின் வல்லமையுடையது அல்லது அரசுரிமை, பிரதேச ஒற்றுமை என்பனவற்றில் திடமான நம்பிக்கையுடன் பரிந்து போரிடத்தக்க வீரர்! எந்த அளவு நம்பிக்கைகொண்ட வீரர் என்றால், திருவிதாங்கூர் திவான் என்ற முறையில், திருவாங்கூர் தனி சுதந்திர நாடு ஆகிவிட்டதாகப் பிரகடனம் செய்தவர்! பாகிஸ்தானுடன் ஒப்பந்தம் செய்து கொண்டதாக அறிவித்தவர்!! இன்று காங்கிரசின் அதிர்ஷ்டம், அவர் கூட்டுச்சேராக் கொள்கையினர்! எனவே, அவரை நீங்கள், கமிட்டித்தலைவர் ஆக்கிக்கொண்டீர்கள். இந்தக் கமிட்டி எவ்விதம் பணியாற்றிற்று என்பதை அலசிப் பார்க்கும்படி, இந்த மன்ற உறுப்பினர்களைக் கேட்டுக்கொள்கிறேன். தேசிய ஒருமைப்பாட்டினை எப்படி ஏற்படுத்துவது என்பதற்கான வழி கூறும்படி, இந்தக் கமிட்டி பணிக்கப்பட்டது - பிரிவினைப் பிரசாரத்தை ஒடுக்கிவிடமட்டும் அல்ல. தேசிய ஒருமைப் பாட்டை ஏற்படுத்தச் சிறந்த வழி என்ன என்பதனைக் கண்டறியும் வேலை அதற்குத் தரப்பட்டது; ஆக்க வேலைக்காக அது தந்த யோசனைகள் யாவை? ஆக்க வேலைக்கான திட்டங்கள் யாவை? தேசிய ஒருமைப்பாடு கமிட்டியுடைய யோசனைகளிலிருந்து பிறந்துள்ள, தடைச்சட்டம் தவிர. துணைத் தலைவர் அவர்களே! தேசிய ஒருமைப்பாடு கமிட்டி, இந்தியா முழுவதும் உலா வந்தது - எங்கள் மாநிலத்துக்கும் வரவேண்டு மென்ற மரியாதை காட்டிற்று. பல்வேறு அரசியல் கருத்தினர் களைக் கண்டு கருத்தறிந்தது; ஆனால் தி. மு. கழகத்தினரைப் பார்க்க இயலவில்லை. ஏனெனில் அதற்கிடையில், எங்களுக்கு எங்கள் மாநில அரசு, வேலூர் மத்திய சிறையிலே அறைகள் கொடுத்துவிட்டது! எங்களைச் சந்திக்காததற்கு, கமிட்டி கூறிய காரணம் இதுதான். ஆனால், அப்போது தேசிய ஒருமைப் பாட்டுக் கமிட்டி, எங்கள் நோக்கத்தைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம்கொண்டிருந்தால், தொடர்புகொள்ளவேண்டுமென்று விரும்பி இருந்தால், எங்கள் அமைப்பு செயலாளர் என். வி. நடராசன் ஜெயிலுக்கு வெளியேதான் இருந்தார்; மனோகரன் எம். பி., வெளியில்தான் இருந்தார்; இராசாராம் எம். பி., வெளியில் இருந்தார்; இவர்களில் யாராவது ஒருவரைக் கண்டிருக்க முடியும். டாக்டர் இராமசாமி ஐயர் ஜெயிலுக்கு வந்து எங்களைப் பார்த்திருக்கவேண்டும் என்று நான் கூறமாட்டேன் - மற்றவர்களை ஜெயிலுக்கு அனுப்பி அனுபவம் பெற்றவர் அவர்; ஜெயிலுக்கு அவர் போனதில்லை! - ஆகவே, அவர் நெடுந்தொலைவு கடந்து ஜெயிலுக்கு வந்து எங்களைப் பார்க்கவேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நாங்கள் சாமானியர்கள். அப்படிப்பட்ட பெரியவர்களைக்கொண்ட கமிட்டி அத்தகைய தாராளத்தனம் காட்டியிருக்கவேண்டும் என விரும்பவில்லை, ஆனால், வெளியே இருந்த சிலருடன் தொடர்புகொள்ளச் சிரமம் எடுத்துக்கொண்டிருக்கலாம்! மன்றத்திலுள்ள ஒவ்வொரு உறுப்பினரையும் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன் - ஒரு கணம் எங்கள் கோரிக்கையின் பயங்கரத் தன்மை -அதன் ஆபத்தான விளைவுகள் - ஆகியவைபற்றி மறந்துவிடுங்கள் - தயவுசெய்து இதற்குப் பதில் கூறுங்கள் - எனக்கு வார்த்தைகள்கூட வேண்டாம் - இலேசான புன்னகை - மகிழ்ச்சியுடன் கண் சிமிட்டல் - நேசப் பான்மையுடன் தலையை அசைத்தல், இவைபோதும் - சாதாரண மரியாதைக்காக, மக்களாட்சி முறையின் நாகரிகத் தன்மைக்காகவாவது எங்கள் கட்சியினருடன், இந்தக் கமிட்டி தொடர்புகொண்டிருக்க வேண்டாவா! இல்லை! அவர்கள் அதைச் செய்யவில்லை! ஆனால், அவர்கள் ஒரு அறிக்கை தந்தனர். இந்த மசோதாவின் விளக்கத்திலும் நோக்கத்திலும், தேசிய ஒருமைப்பாட்டுக் கமிட்டியின் யோசனையை முற்றிலும் ஒட்டியே மசோதா வருவதாகக் கூறப்பட்டிருக்கிறது. ஆகவே, மசோதாவின் பிறப்பே, முற்றிலும் மக்களாட்சி முறைக்கு மாறானது. இந்தக் கருத்தை உங்கள் முன் வைக்கவே, உமது பொறுமையைப் பாதிக்கும் தொல்லையைத் தர நேரிட்டது.

நான், மற்றொரு விஷயத்துக்கு வருகிறேன் திராவிடஸ்தான் கோரிக்கை ஆபத்தானது என்கிறார்கள் - தவறாக! ஆளுங்கட்சிப் பிரமுகர்கள் பலர். சில மாதங்களுக்கு முன்புகூட, சில வாரங் களுக்கு முன்புவரைகூட, நாங்கள் என்ன கேட்கிறோம் என்பது தங்களுக்குப் புரியவே இல்லை என்று கூறிக்கொண்டு வந்துள்ளனர். அவர்கள் புரிந்துகொள்ளவில்லை! ஆனால், இது ஆபத்துத் தரத்தக்கது என்று மட்டும் புரிந்திருக்கிறது! இது எப்படிப் பகுத்தறிவாகும்? தத்துவ சாஸ்திர அறிவாகும்? அரசிய லாகும்? எனக்குப் புரியவில்லை! இந்த மன்றத்திலேயோ, அந்த மன்றத்திலேயோ - எனக்குத் திட்டவட்டமாகத் தெரியவில்லை, உள்துறை அமைச்சர் சொல்லியிருக்கிறார், கட்டுக்கு அடங்காது போனால், குறிப்பிட்ட எல்லையை மீறிப்போனால், பிரிவினை சம்பந்தமான எல்லாப் பிரசாரமும் ஒடுக்கப்படும் என்று. ஒருவரும் அதற்கு விளக்கம் அளிக்கும்படி கேட்கவில்லை - ஏனெனில், சட்டத்தை மீறிய நடவடிக்கைகளில் ஈடுபட்டாலோ, வன்முறைச் செயலில் ஈடுபட்டாலோ, பிரிவினைப் பிரசாரம் தடுக்கப்பட்டுவிடும் என்று எண்ணிக்கொண்டார்கள். இது சில மாதங்களுக்கு முன்பு, உள்துறை அமைச்சர் பேசியது. இந்த இடைக் காலத்திலே என்ன நேரிட்டுவிட்டது? நாங்கள் என்ன மண்டை ஓடுகளையும் தலைகளையும் வேட்டையாடிப் பெறுபவர்கள் ஆகிவிட்டோமா? ஏதாவது சட்டத்தை மீறிய நடவடிக்கைகளிலே ஈடுபட்டுவிட்டோமா? இல்லை! மாறாக, சீன ஆக்கிரமிப்பு ஏற்பட்ட உடன் தங்கு தடையற்ற, உள் உணர்ச்சியுடன் கூடிய ஒத்துழைப்பைத் தந்தோம், போர் ஆதரவு முயற்சிக்கு. சட்ட மந்திரி இப்போது இங்கு இல்லாததுபற்றி நான் மகிழ்ச்சி அடைகிறேன். . .

ஒரு உறுப்பினர்: அவருடைய துணை மந்திரி இங்கு இருக்கிறார்.

சி. என். ஏ. : ஏனெனில், எங்கள் கட்சியின் தலைவர், அந்த மன்றத்தில் இதே கருத்தைப்பற்றிக் கூறியபோது, சட்ட மந்திரி எழுந்து நின்றார் - புன்னகையுடன் அல்ல - கடுமையான பார்வையுடன் - கரங்களைக் கெம்பீரமாக அசைத்தபடி சொன்னார், அதெல்லாம் இந்திய பாதுகாப்புச் சட்டத்தினால் ஏற்பட்ட நிலைமை! என்று. சட்டமந்திரி என்ற நிலையில், சட்டத்துக்குக் கர்த்தா என்ற முறையில், சட்டத்துக்கு உள்ள வீரியம்பற்றித் தூக்கி பேசும் உரிமை பெற்றவர் அவர்; ஆனால், சட்டத்தின் சக்தியைப் பெரிதாக்கிப் பேசும் ஆர்வத்தில், அவர் தமது மனத்திலிருந்து, சாதாரண மரியாதை காட்டும் உணர்ச்சியைத் துரத்தி அடித்துவிட்டார்! தி. மு. கழகத்துக்கு, சட்ட மந்திரி, நல்வார்த்தை கூறிச் சிபாரிசு செய்யவேண்டும் என்று நான் விரும்பவில்லை. மக்களுடைய நல்லாதரவு நிரம்ப நாங்கள் பெற்றிருக்கிறோம், சட்ட மந்திரியின் நல்லுணர்வு சிபார்சு ஒன்றும் அதனை மேலும் வலுவுள்ள தாக்கிவிட முடியாது! மற்றும் ஒன்று கூறுகிறேன். சட்டத்தின் சக்தியை உயர்த்திக் காட்டவேண்டும் என்ற ஆர்வத்தில், அவர் மற்றோரு முக்கிய மான விஷயத்தை மறந்துவிட்டார். இன்று காணப்படும் ஒருமித்த நோக்கம், தேசிய ஆர்வம் எல்லாம், இந்திய முதல் அமைச்ச ருடைய திறமையாலும், அவர் கொண்டுள்ள மேலான எண்ணங் களாலும், ஏற்பட்டவை. சட்டங்களைவிட வலிவு மிக்கது, அது. சட்டங்கள், தடுக்க, திருத்த, உள்ளவை. இதைச் செய்யாதே! அதைச் செய்யாதே! என்று கூறுகிறது சட்டம். கட்சித் தொடர்பு களைக் கடந்து, பல இலட்சக்கணக்கான மக்களின் மனத்தைத் தன் வயப்படுத்தும் முதலமைச்சரின் திறமைக்கு உள்ளதுபோன்ற வலிவு சட்டத்துக்குக் கிடையாது. சட்டத்தின் வலிவை வலியுறுத்திக் காட்டும் ஆர்வத்தில், சட்டமந்திரி, எதற்காகப் பிரதம மந்திரியின் செல்வாக்கைக் குறைத்து மதிப்பிட்டு விட்டார் என்று எனக்குப் புரியவில்லை! இன்று காணப்படும் கூடிப் பணியாற்றும் ஆர்வம் பண்டித ஜவஹர்லால் நேருவின், வசீகரிக்கும் தன்மையாலும், ஜனநாயகப் பண்பாட்டு உணர்ச்சி யாலும் விளைந்திருக்கிறது என்பதையாவது அவர் சொல்லி யிருக்கலாம். மந்திரி சபைக்குள்ளே என்ன நடக்கிறது என்பது எனக்குத் தெரியாது. வெளியார் எவராவது, சட்ட மந்திரியின் உரையைப் படித்தால், என்ன எண்ணம் ஏற்படும்? நாட்டிலே அமைதி இருக்கிறது! எதனால்? இந்திய பாதுகாப்புச் சட்டத்தி னால்!! இல்லையானால், அனைவரும், தேச விரோதிகளாவர், தேசபக்தி அற்றவர்களாவர், தொல்லை கிளம்பியிருக்கும்!