அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


சட்டம் - வழக்குமன்றத்தில்
1

தொழிலாளர் வேலை நிறுத்த வழக்கு -
ஆப்பிரிக்காவில் சட்டம்

தம்பி!

வழக்குமன்றம் சென்றாக வேண்டும். அழைப்பு அனுப்பி விட்டார்கள். பெற்றுக்கொண்டேன். செல்லுகிறேன். ஆனால், துணையின்றியும் அல்ல! உள்ளத் தூய்மையற்ற நிலையிலும் அல்ல!!

தொழிலாளர்களை வேலை நிறுத்தம் செய்யும்படி, தூண்டிவிடும் முறையில் பேசினோம் என்று எடுத்துகாட்டி, எனக்கும் தம்பி சம்பத்துக்கும், தொழிலாளர் தலைவர் அந்தோணிப்பிள்ளை, கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்கள் கலியாண சுந்தரம், சித்தன் ஆகியோர்மீதும் தொடரப்படும் முறையில் வழக்குத் தொடரப்படுகிறது.

அவசரச் சட்டம் அல்லவா அமுலில் இருக்கிறது, அதன் ஐந்தாம் பிரிவின்படி, நாங்கள் பேசியது குற்றம் என்று கூறி, என்ன பதில் அளிக்கப்போகிறீர்கள்? வந்து நில்லுங்கள் வழக்கு மன்றத்தில்! பதில் சொல்லுங்கள்! - என்று கேட்டிருக்கிறார்கள்.

ஓராண்டு சிறைவாசமாம் - ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கலாமாம், வழக்கறிஞர்களாக உள்ள நண்பர்கள், சுட்டிக் காட்டுகிறார்கள்.

வழக்கு, பொதுவாகக் கூறுகிறேன், இந்த வழக்குப்பற்றி அல்ல; இன்னவிதமாக நடந்தால், இன்னின்ன காரியத்தைச்செய்தால், அதனால் இன்னின்ன வகையான கேடுபாடுகள் விளையும்; ஆகவே, கேடுபாடுகள் விளைவதற்குக் காரண மாகவும், உடந்தையாகவும் இருந்த குற்றத்துக்காக, அவ்விதமான குற்றம் செய்தால் என்ன தண்டனை தரப்படவேண்டும் என்று சட்டம் சாற்றுகிறதோ, அந்த முறைப்படி தண்டனை தருவதற்கு முன்பு, குற்றம் செய்ததாகக் கருதப்பட்டவர்களை மன்றத்தில் நிறுத்திவைத்து, விசாரிப்பது - பிறகு தீர்ப்பளிப்பது - என்ற முறையில் இருந்துவருகிறது.

பசி ஐயா! நாலு நாட்களாகப் பட்டினி! பாதை ஓரத்திலே இருந்தது பொட்டலம்! கமகமவென மணம் வீசிற்று! எடுத்தேன், பிரித்தேன், தின்றுவிட்டேன்!! - என்று சோற்று மூட்டையைக் களவாடித் தின்றவன், கூறக்கூடும், உருக்கமுடன்; கேட்போர் மனம் உருகும் விதமாகக்கூட. ஆனால் வழக்கு மன்றம்,

உண்மையாக அவனுக்குப் பசியா?

நாலு நாட்கள் பட்டினியா?

என்று கேட்காது - அறிந்துகொள்ள முயற்சி எடுத்துக் கொள்ளாது.

"அவன், அந்தச் சோற்று மூட்டையை எடுத்தானா? பிரித்தானா? தின்றானா? அந்த மூட்டை வெறொருவ னுடையதா?'' இவைபற்றித்தான் கேட்கும், அறிந்துகொள்ளும். அறிவிக்கும், அந்தக் கட்டம் முடிந்ததும், அந்தச் செயல் குற்றம் என்று கூறும் கட்டம். பிறகு அந்தக் குற்றத்துக்கு என்னவிதமான தண்டனை தரப்படலாம் என்ற சட்டம் காட்டப்படும் கட்டம்; பிறகு தண்டனை அளிக்கப்படும் கட்டம்! வழக்குமன்றத்தின் வேலை அவ்வளவோடு முடிவடைகிறது. தீர்ப்பைக் கூறிவிட்டுக், கசியும் கண்ணீரைத் துடைத்துக்கொள்ள, குமுறி எழும் பெருமூச்சை அடக்கிக்கொள்ள, வழக்குமன்றத் தலைவர், தமது தனி அறைக்கோ, மாளிகைக்கோ செல்லலாம் - மன்றத்திலே சட்டம் காட்டும் வழிதான் நிற்க வேண்டும்.

மாளிகையில் சென்று, மலர்விழியாளைக் கண்டும் மகிழ்ச்சி பெறாது, குழலையும் யாழையும் மீட்டி நிற்கும் குழவிகளிடமும் கொஞ்சாமல், தீர்ப்பளித்தவர், கவலை குடையும் உள்ளத்தினராகி உழலக் கூடும். ஆனால், மன்றத்தில், அவரைக் கட்டுப்படுத்துவது சட்டம்.

"நேரம் போவதே தெரியவில்லையா? எந்தக் கோட்டை யைப் பிடிக்க, இவ்வளவு பலமான யோசனை! எழுந்திருங்கள், சாப்பிட.''

என்று அன்புக்கரசி அழைக்கக்கூடும். பசியில்லை என்று சுருக்கமாக, அவர் பதில் அளிக்கக்கூடும்; அளித்துவிட்டு, வேதனை கலந்த ஒரு சிரிப்பொலி எழுப்பக்கூடும். உள்ளம் கூறும்.

"உனக்குப் பசி இல்லை!
அவனுக்குப் பசி!!
நீ, தீர்ப்பளித்தாய்!
அவன் திருடினான்!
உனக்கு உணவு காத்துக் கிடக்கிறது!
அவனைப் பசி விரட்டிற்று!
நீ, நீதிபதி!
அவன் குற்றவாளி!!
நீ, மாளிகையில்
அவன், சிறையில்!!''

தீர்ப்பளித்தவர், திகைக்கக் கூடும், உள்ளம் கூறுவனவற்றைக் கேட்டு, மாளிகையில்! ஆனால், மன்றத்திலோ, அவருக்குச் சட்டத்தின் பிடி! பிரிப்பார், பிடிப்பார், தண்டிப்பார்!

வேறென்ன செய்ய முடியும்? உணர்ச்சிகளுக்கு இடமளித்துச், சட்டத்தை மறந்தால், சமுதாயம் என்ன ஆகும்? என்று கேட்போர், பலர் இருக்கிறார்கள், தம்பி, அவர்கள், என்னைப்பற்றித் தவறாத எண்ணிக்கொள்ளப் போகிறார்கள் - நான், வழக்கு மன்றங்கள்; சட்டத்துக்குக் கட்டுப்பட்டு நடக்கத்தான் உள்ளன, நடக்கத்தான் வேண்டும் என்ற பொது நீதியை மறுப்பவனல்ல, வெறுப்பவனல்ல. நான் எண்ணிக் கொள்வதும், எண்ணிப்பார்க்கும்படி மற்றவர்களைக் கேட்டுக் கொள்வதும், வேறு ஒன்றினைப்பற்றி - அடிப்படையான ஒரு பொருள்பற்றி!

சட்டம் இயற்றப்படும் விதம் என்ன? என்பது பற்றித்தான் நான் எண்ணிப் பார்க்கச் சொல்கிறேன் - வழக்குமன்ற முறை சரியா அல்லவா? என்பதுபற்றி அல்ல.

தொல்காப்பியம் கூறுகிறது, வேறோர் பொருள் பற்றிய விளக்கமளிக்க,

"பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் வகுத்தனர் கரணம் என்ப''

அஃதேபோல, இயற்றப்படும் ஒவ்வொரு சட்டமும், ஏதோ ஒரு நிலைமையைச் சீர்படுத்த, குற்றம் எழாதிருக்கச் செய்ய, முறைப்படுத்தத்தான் இயற்றப்படுகின்றன. ஆனால், இயற்றும் சட்டம் இயற்றும் நிலைபெற்றோரின் ஆதிக்கத்தை நிலைநாட்டிக்கொள்ள என்றால், சட்டம் என்பது பெயரள வுக்குத்தான் பொருந்தும் - ஆனால், நீதிக்கும், அந்தச் சட்டத்துக்கும் தொடர்பு அற்றுப்போய்விடும்.

கதை படிக்கக் கேட்டிருப்பாயே, தம்பி! வேளைக்கு ஒரு ஆள் தரவேண்டும், என் பசி போக்கிக்கொள்ள; தவறினால் ஒரே நாளில் ஊரையே அழித்துவிடுவேன் என்று கட்டளையிட்ட பூதம்பற்றி - சிறியவனாக இருந்தபோது.

பூதம்கூட சட்டம்தான் இயற்றிற்று! ஆனால், யாருக்காக? தனக்காக!! சட்டம் நீதியை உள்ளடக்கியதாகவா இருக்கிறது? பித்தனும் அவ்விதம் பேசத் துணிந்திடமாட்டான்.

தம்பி! மழை காலத்தில், சீமானின் தூக்கத்தையும் சீமாட்டிகளின் களியாட்டத்தையும் கெடுக்கும் விதமாகக் கத்திக்கிடக்கும் தவளைகளை, உழுது பிழைக்கும் ஊழியர்கள், இரவு முழுவதும் விழித்திருந்து கல்லால் அடித்துக் கொன்றாக வேண்டும் என்று சட்டம் இருந்தது, புரட்சிக்கு முன்பு, பிரான்சில்!

மீறினோர், சட்டப்படி விசாரிக்கப்பட்டுத் தண்டிக்கப் பட்டனர். ஆனால் இதிலே கவனிக்கவேண்டிய மிக முக்கியமான விஷயம் என்ன தெரியுமா தம்பி! தண்டனை பெற்றோரின் தொகை வளர வளர, அந்தச் சட்டம் தகர்ந்தது - சட்டம் மட்டுமல்ல, அத்தகைய சட்டத்தைக் காட்டிக் கொட்டமடித்துக் கொண்டிருந்த பிரபுக்களின் பிடி! மன்னனின் மணிமுடியே பறிக்கப்பட்டது!! ஆனால், அது, பிறகு, நடந்த கதை நெடுங்காலம், சட்டம்தான் மேலிடத்தில்! தண்டனை தந்தபடி!!

ஐரோப்பாக் கண்டத்தில், ஏழெட்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு, சில நாடுகளில் சட்டம் ஒன்று இருந்தது; அதை அடிப்படையாக வைத்துப் பின்னப்பட்ட ஒரு கதையைப் படித்திருக்கிறேன் - இப்போதல்ல; நேரம் ஏது! நீ, விட்டால் தானே!! - சில ஆண்டுகளுக்கு முன்பு.

பண்ணையாள், திருமணம் செய்துகொண்டால், "முதல் இரவு' அவனுக்கு அல்ல! பண்ணையாருக்கு!!

ஆமாடா, தம்பி! ஆமாம்! அப்படிப்பட்ட "சண்டாளத் தனம்' - சட்டம்!

"குட்டி யார்? மான்விழி! சிற்பி செதுக்கிய சிலை போன்ற உடல்! பருவக் கருவமிகுந்த, வயது! யார் இந்தக் காட்டு ரோஜா?''

"என் வீட்டுக்கு வந்தவள் - என்...''

"மனைவியா! பலே! பலே! வேறெந்த வேலையிலும் திறமை இல்லாவிட்டாலும், பயலே! உனக்கு,

"உருப்படி'யைத் தேடிப் பிடிக்கும் திறமை மட்டும் நிரம்ப இருக்கிறது. எங்கு கிடைத்தாள், இந்த எழிலரசி?''

"இவளை நான் திருமணம் செய்து கொண்டேன்.''

"அது தெரிகிறதடா; முட்டாளே! தேடிக் கிடைக்காத பொருள்... உனக்கு எப்படியடா கிடைத்தது?''

"திருமணம்...''

"செய்துகொண்டாய்; ஆமாம்! நன்றி! மிக்க நன்றி! போய் வா!''

தம்பி! அவன் போய்விட வேண்டும் வெளியே! அவள் தங்க வேண்டும், மாளிகையில்! முதல் இரவு அங்குதான்! பிறகு, சீமான் வேறு "சிட்டு' தேடிக் கொண்டால், இந்தக் கசங்கிய மொட்டு, வீசி எறியப்படும்! கட்டியவன் அழைத்துச் செல்வான். தம்பி! இது சட்டமாக இருந்தது!!

சீமான், "முதல் இரவு' வேண்டாமென்று கூறி, அதற்கு ஈடாக, ஊழியக்காரனிடம், பணம் பெறுவதுமுண்டு.

"செச்சே! இழுத்துச் செல்லடா, சப்பை மூக்கை! "முதல் இரவுக்கு' ஈடாக, பணம் கட்டு'' - என்று கேட்பதுண்டு சீமான்!

"ஆண்டவனே! அவள் அழகற்றவளாக இருந்ததால், நான் மானமற்றவனாகாது இருந்திட முடிந்தது'' என்று கூறித் தொழுது, பணம் அழுதுவிட்டுப், பணியாள் செல்வான்.

கற்பைச் சூறையாடுவதல்லவா இது? என்று, இன்று எவரும் கேட்பார் கொதிப்புடன். அன்று, அது சட்டம்!! எதிர்ப்பது, பாவம்! எதிர்த்தால், அதற்கு வேறோர் சட்டம்!! கடும் தண்டனை!!

ஆனால், தம்பி! மனிதகுலத்தின் மாண்பினையே அழித்திடத்தக்க அந்தச் சட்டம், காலம் கிளப்பிய சூறாவளியால், சுக்கு நூறாயிற்று.

காலம், சூறாவளியைக் கிளப்பிவிடுமுன்பு, குறிகளைக் காட்டத் தவறவில்லை. ஆதிக்கக்காரர்கள் குறிகளைக் காண வில்லை; கண்ட பிறகும் கருத்திலே, தெளிவு ஏற்படவில்லை; இறுமாப்பு அவர்களைப் பிடித்தாட்டிற்று; அவர்கள் வாழ்ந்த கோட்டைகளின் இடிபாடுகள்கூட இன்று இல்லை!

"இப்படி ஒரு சட்டமா?' என்று, துக்கம், வெட்கம், துளைத்திடும் நிலையில், கேட்டிருப்பான் ஒரு காளை! அவனைக் கண்டதுண்டமாக்கிக், காக்கைக்கும் கழுகுக்கும் இரையாக்கி விட்டு, அவன் மணமுடித்த கட்டழகியை அந்த மனிதக் கழுகு கொத்தி மகிழ்ந்திருக்கும்.

இதுதான், சட்டமா? என்று எதிர்த்திருப்பான் ஒருவன்; அவன் தலை உருண்டிருக்கும்.

நீ இட்டது, சட்டமா? என்று, எதற்கும் துணிந்து வேறொருவன் கேட்டு, வெட்டுண்டு மாண்டிருப்பான்.

யாருக்காக ஐயா! இந்தச் சட்டம்?

யாரைக் கேட்டுக்கொண்டு இந்தச் சட்டம்?

என்று, விளக்கம் கேட்டிருப்பான், வேறொருவன்; அவன் "இராஜத் துரோகி'யாக்கப்பட்டுத், தூக்கு மரத்தில் தொங்க விடப்பட்டிருப்பான்.

இவை யாவும், முறைப்படி விசாரணை நடத்தி, வழக்கு மன்றம், அளித்த தீர்ப்புகள்!!

வழக்கு மன்றங்களை அல்ல; தீர்ப்பு அளித்தவர்களை அல்ல; விசாரணை முறையை அல்ல; சட்டத்தின் இலட்சணத்தைப் பற்றியே, கேட்கலாயினர்! சூறாவளி கிளம்பிற்று! சுக்குநூறாயிற்று, அக்ரமக்காரர் ஆதிக்கம்.

இன்று, கேட்டால், கைகொட்டிச் சிரிப்பார்கள். அல்லது கோபத்தால் கண்கள் கொவ்வைபோலாகி விடும்; அப்படிப் பட்ட விதமான, சட்டங்கள் பல இருந்திருக்கின்றன; மனித குலம் தாங்கிக் கொண்டிருந்திருக்கிறது! மாவீரர் பலர் மடிந்தனர்; பச்சை இரத்தம் பரிமாறிய பிறகு, சட்டம் காட்டிக் கொட்டமடித்து வந்த சழக்கர்களின் ஆதிக்கம் அழிந்து பட்டது.

மூன்று "இராஜத் துரோகிகள்' வழக்குமன்றம் இழுத்து வரப்பட்டனர்; அழைத்து வந்திருக்கிறேன் மூன்று குற்றவாளிகளை என்று அறிவித்தான், அமுல் நடத்தும் அதிகாரி. கனல் உமிழும் விழி, வழக்குமன்றத் தலைவருக்கு. விவரம் அறியாததால், திகைப்பு மூவருக்கும்.

"எங்கிருந்து இவர்களைப் பிடித்து வந்தாய்?''

"இதோ நிற்கிறானே, முதலில், இவன் நடத்தும் உணவு விடுதியில்.''

"உணவு விடுதியிலா? என்ன செய்தான், இவன்?''

"இராஜத் துரோகம்.''

"விளக்கம்.''

"இராஜத் துரோகிகள் பதுங்கிக் கிடக்கும் இடங்கள் பற்றிய உளவு அறிந்து சென்று, கையும் பிடியுமாக அவர்களை இழுத்து வந்து, தங்கள் முன் நிறுத்துவது, என் கடமை...''

"ஆம்! கடமை தவறாத அதிகாரி என்று, புகழ்பெற்று விளங்குகிறாய். என் பாராட்டுதல்.''

"நன்றி! மிக்க நன்றி! தங்கள் பாராட்டுதலைப் பெற நான் பாக்கியம் செய்தவன். தங்களின், சட்டம் காக்கும் திறம், இந்த நாட்டுக்கே தனிச்சிறப்பு அளிக்கிறது.''

"இவன் செய்ததைக் கூறும். நாம் இருவரும் நமது கடமையைச் செய்கிறோம்.''

"உணவு விடுதியில், நமது மன்னரின் படம்...'' "காலஞ்சென்ற மன்னரின்...''

"ஆமாம்... மறந்து போனேன் கூறிட! காலஞ்சென்ற மன்னரின் படம், தொங்கவிடப்பட்டிருந்தது...''

"இராஜத் துரோகம் செய்தவன் என்றீர்...''

"ஆம்! படம், செல்லரித்த நிலையில் இருந்தது.''

"செல்லரித்துக் கிடந்ததா? மன்னரின் படமா?''

"முகம், விகாரமாகிக் கிடந்தது; அழுக்கேறிய படம்!''

"அதைப் பலர் வருகிற இடத்தில் தொங்கவிட்டிருந்தான்... உம்!''

"பார்ப்பவர், சிரிக்க! கேலி பேச! இழிவுபடுத்தினான் மன்னரை!''

"மறுக்கிறானா?''

"மண்டைக் கர்வம் பிடித்தவன்; மறுக்கவில்லை, விளக்கம் தருகிறான்.''

"விளக்கம் தருகிறானா, விவேகி. அவனிடம், விளக்கம் ஏன் கேட்டாய்? வீண் வேலை!''

"கேட்டது நானல்ல. இதோ நிற்கிறானே, பக்கத்தில் இவன் கேட்டான்.''

"என்ன கேட்டான், இந்தத் துரோகி.''

"சிறிதளவு விவரமாகப் பேச அனுமதி தாருங்கள். உணவு விடுதி சென்று, இவர்களுக்கு அருகே உட்கார்ந்தபடி யாரார் என்னென்ன போக்கிலே இருக்கிறார்கள் என்பதை உன்னிப்பாகக் கவனித்தபடி இருந்தேன். என்னைக் கண்டதும், ஏதும் பேசாமல் இருந்தனர் - கொஞ்சநேரம். நானாக, பேச வைத்தேன். வருத்தமாக இல்லையா உனக்கு? என்று கேட்டேன் இவனை. எனக்கென்ன வருத்தம், என்றான்...''

"நாடு துக்கத்தில் மூழ்கிக் கிடக்கிறது, மன்னர் படுகொலை செய்யப்பட்டது கேட்டு. இவன்...'' "துளியும் வருத்தப்படவில்லை. துணிந்து எனக்கென்ன வருத்தம்? என்று, என்னையே கேட்டான். நமது மன்னர் படுகொலை செய்யப்பட்டது தெரியுமல்லவா? என்று கேட்டேன். நான் அவரைப் பார்த்ததுகூட இல்லை என்றான்.''

"மன்னரைப் பார்த்ததில்லை என்று கூறினானா! அட! படுபாவி! மன்னன்தானே கண்கண்ட கடவுள்.''

"அவ்வளவு இராஜத் துரோகம் இவனுக்கு. இவன், நான் மன்னனைப் பார்த்ததுகூட இல்லை என்று சொன்னதும், இதோ இவன், உணவு விடுதிக்காரன், படத்தைக் காட்டி, இதோ, மன்னர்! என்றான்.''

"செல்லரித்த படத்தைக் காட்டி!''

"மன்னன் அவ்வளவு குரூபி என்று மற்றவர்கள் எண்ணிக்கொள்ள...''

"இழிவு படுத்தினான்.''

"படத்தைப் பார்த்ததும், இந்தப் பயல், நீ, மன்னனை முன்பே அழித்துவிட்டாய்! என்று கூறிச் சிரித்தான். அவன், நானா? செச்சே! செல் அரித்துவிட்டது!!' என்றான். அதாவது மன்னனை, மனிதன்கூட அல்ல, கேவலம் பூச்சி புழுக்களே அழித்துவிடும் என்று சபித்தான். இருவரையும், அதே இடத்தில் இராஜத் துரோகி என்று குற்றம் சாட்டி, விலங்கிட்டேன்...''

"இந்த மூன்றாவது ஆசாமி?''

"இவன், இந்த இருவரையும்விட, மோசமானவன். இராஜத் துரோகிகளை நான் கண்டுபிடித்துக் கைகளுக்கு விலங்கிட்டு, இழுத்து வருகிறேன். இவன் ஒரு துளிகூடப் பதறாமல், மன்னரையா இந்த மாபாவிகள் இழிவுபடுத்தினார்கள் என்று கொதித்தெழுந்து கூறாமல், இத்தகைய இழிமக்களைக் கண்டுபிடித்த என்னைப் பாராட்டாமல்...''

"என்ன செய்து கொண்டிருந்தான்?'' "காப்பி குடித்துக் கொண்டிருந்தான்!''

"பதறாமல்.''

"அமைதியாக!''

"அழுத்தக்காரன்! மூவருக்கும் மரண தண்டனை!''

"தம்பி! ஐரோப்பாக் கண்டத்திலே ஒரு நாட்டின் நிலையை விளக்க, இப்படி ஒரு விசாரணைபற்றி எழுதப்பட்டிருந்தது; படித்திருக்கிறேன்.

மன்னனை இழிவுபடுத்துவது குற்றம்! அதை மறுக்க வேண்டியதில்லை.

ஆனால், இந்த மூவர் மன்னரை இழிவுபடுத்தியதாக எடுத்துக்காட்டிட என்ன கிடைத்தது, கவனித்தாயா?

அது போதுமானதாக இருந்தது, மரண தண்டனை தர.

இப்படிக்கூட இருக்குமா, நடக்குமா? சட்டம் என்றா இவைகளைக் கூறுவது? விசாரணை என்றா இதற்குப் பெயர்? காட்டுமிராண்டிக் காலத்து அமுல் அல்லவா இது? அரசியல் தெளிவும், உரிமை உணர்வும், மிகுந்திருக்கும், இந்த நாட்களிலே எவர் ஏற்றுக்கொள்வர், இத்தகு அக்ரமத்தை? - என்றெல்லாம்கேட்கப் போகிறாய் - தெரியுமே, எனக்கு மக்களாட்சியின் மாண்புபற்றியும் உரிமை உணர்ச்சி வெற்றி பல பெற்றதுபற்றியும், நிரம்ப அறிந்திருக்கிறாய். ஆனால், தம்பி! காட்டுமிராண்டிக் காலம் என்று ஒன்றும், தெளிவுள்ள காலம் என்று மற்றொன்றும் தனித் தனியாக இருக்கும் என்று எண்ணாதே! முழு நிலவு தவழ்ந்திடும் வானவீதியிலேயேதான், கும்மிருட்டு - அமாவாசை - இருந்திடக் காண்கிறோம்.

இப்போதுகூடக், காட்டுமிராண்டிக் காலத்தவை என்று எள்ளி நகையாடத்தக்க சட்டங்கள், ஜனநாயக நாடுகள் என்ற பட்டியலில் இடம் பொறித்துக்கொண்டுள்ள சில நாடுகளில், அமுலில் உள்ளன.