அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


சட்டம் - வழக்குமன்றத்தில்
1

தம்பி! மறந்துவிடாதே, முறைப்படி நிறைவேற்றப்பட்ட சட்டங்கள்!! எவனோ எதேச்சாதிகாரியின் இறுமாப்பின் விளைவு அல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, மக்களாட்சி நடத்திவரும், மக்களின் தலைவர்கள், மக்களுக்காக, மக்களின் ஆதரவுபெற்று, மக்கள் மன்றத்திலே பேசி, முடிவு எடுத்து, நிறைவேற்றப்பட்டு, அமுலில் இருந்துவரும் சட்டங்கள்!!

டாக்டர் வெர்வுட்! தென் ஆப்பிரிக்க அரசுக்கு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் முதல்வர். கண்ணை மூடிக்கொண்டு, அவரைத் தேர்ந்தெடுத்தார்கள் என்றும் கூறிவிட முடியாது. உருட்டி மிரட்டிப் பதவியைத் தட்டிப் பறித்துக்கொண்டார் என்றும் குற்றம் சுமத்த முடியாது. நல்லாட்சிக்கு வழி என்று எந்தத் தேர்தல் முறையைப் பல நாடுகள் மேற்கொண்டுள்ளனவோ, அதே போன்ற முறையிலே அமைக்கப்பட்ட, அமைச்சர் அவையின் தலைவர், டாக்டர் வெர்வுட்.

அவர் உலகமறியாதவருமல்ல - அறநூற்களைத் தெரியாதவருமல்ல.

அவர் நாட்டிலே கருப்பர் என்பவர்கள் படும்பாடு, உலகிலே உள்ள நல்லறிவாளர்களின் உள்ளத்தை வேகவைப்ப தாக இருக்கிறது.

நாட்டிலே, கருப்பர், வெள்ளையர் கண்படாத இடத்தில், தனியாகத்தான் இருக்க வேண்டும்.

மருத்துவராக இருக்கலாம், மத குருவாகப் பணியாற்றலாம், வழக்கறிஞராக, பேராசிரியராக, வணிகராக, எப்படிப்பட்டஅறிவாற்றல் மிக்கவராக இருப்பினும் சரி, கருப்பர் என்றால், ஊரிலே, ஒரு ஒதுக்கிடம் - பொது இடத்தில் அல்ல - வெள்ளையர் வாழுமிடத்தில் அல்ல.

கலந்து இருந்து வருகிறோமே என்கிறார்கள் கருப்பர் - இனி அது கூடாது - என்று சட்டம் கூறுகிறது - விரட்டுகிறது.

வாழுமிடங்களில் மட்டுமல்ல, இந்த வேதனை தரும் வேற்றுமை - தொழிலிடம், கல்விக்கூடம், தொழுகை இடம் - கேளிக்கைக் கூடம் எங்கும் - வேறு வேறுதான்!

பல அலுவலகங்களில், வேறு வேறு இடங்களில்தான் இருக்க வேண்டும் என்பது மட்டுமல்ல - நுழைவு இடங்களே தனித் தனி.

வெள்ளையருக்கு மட்டும் என்று இருக்கும் நுழைவு இடத்தில், கருப்பர் சென்றால், கடும் தண்டனை - கசையடி கூட!!

இரயிலில், பஸ்ஸில், மருத்துவமனையில், எங்கும், தாழ்நிலை, இழிநிலை, கருப்பர் என்போருக்கு!

தம்பி! கொடிய நோய்வாய்ப்பட்டவர்களுக்கு இரத்தம் சுண்டிப்போனால், புதிய இரத்தத்தை உள்ளுக்குப் புகுத்துகிறார் களல்லவா - அதிலேகூடக் கருப்பருக்கு, கருப்பரின் இரத்தம்; வெள்ளையருக்கு வெள்ளையரின் இரத்தம்! இதுவும் சட்டப்படி; மீறினால் கடும் தண்டனை!!

உலகிலுள்ள நல்லறிவாளர்களெல்லாம் கண்டிக்கிறார்கள். டாக்டர் வெர்வுட், சட்டப்படி நடக்கிறேன், தவறா? என்று கேட்கிறார். இது சட்டமல்ல என்று எவரேனும் வாதாடினால், ஜனநாயக முறைப்படி அமைக்கப்பட்ட, மக்கள் மன்றத்தில். பெருவாரியான உறுப்பினர்களின் ஒப்புதல் பெற்றுச் சட்டம் இயற்றப்பட்டது என்று எடுத்துக் காட்டுகிறார்.

இருப்பினும், இது சட்டம் அல்ல! சட்டம் என்று ஏற்றுக்கொள்ளமாட்டோம்! சட்டம் என்று நீங்கள் கூறலாம், ஆனால் நாங்கள் அதை மதிக்கமாட்டோம்! என்று பலரும் கூறுகின்றனர்.

இருப்பினும் இது சட்டமல்ல! - என்று கூறப்படுகிறதே, தம்பி! இதை வழக்குமன்றம் ஏற்றுக்கொள்ளாது; வழக்கு மன்றத்தில் கூறவும் மாட்டார்கள். வழக்குமன்றம், தரப்பட்டுள்ள சட்டப்படி, குறிப்பிடப்பட்டுள்ள தண்டனையைத் தருகிறஇடம்! சட்டத்தின் பிறப்பு வளர்ப்பு பெற்றோர் உற்றார் இவைபற்றிய விசாரணை நடத்தும் இடம் அல்ல!!

சட்டத்தின்படி நடந்துகொள்கிறோம் என்று வழக்கு மன்றத்தினர் பேசுவர்; ஆனால் சமுகத்தில் உள்ள நல்லறிவாளர் கள், சட்டத்தை நிறுத்தி வைத்து, விசாரணை நடத்தித் தீர்ப்பளிக்க வேண்டும்.

குற்றவாளியின் பெயர், வயது, தொழில், ஊர் இவைகளை, வழக்குமன்றம் விசாரிக்கும்.

சமுகம், சட்டத்தின் பிறப்பு - இலட்சணம் - இதன் விளைவுகள் - இவைகளை விசாரித்துப் பார்த்து தீர்ப்பளிக்க வேண்டும்.

வழக்கு விசாரணை நாட்கணக்கில், மாதக்கணக்கில், மிகச் சிக்கலானதாக இருப்பின், வருடக்கணக்கில்கூட நடந்தேறி முடிவடையும்.

சமுகம், சட்டத்தைப்பற்றிய விசாரணை நடத்தித் தீர்ப்பளிக்க, ஆண்டுகள் அல்ல, நூற்றாண்டுகள் பிடிக்கும்

அதற்கு இடையில் பலர், பலியாக வேண்டும் - சட்டம் தன் வேலையைச் செய்துகொண்டேதான் இருக்கும்.

பெற்ற தாயிடமிருந்து குழந்தையைப் பிரிப்பது, தாங்கிக் கொள்ளக்கூடிய கொடுமையா? எவ்வளவு இரக்கமற்ற மனம் இருந்தால், அதுபோல் செய்வார்கள்? மனித மிருகங்கள் என்பாய், அப்படிப்பட்டவர்களை! சட்டப்படி அந்தக் காரியம் நடத்திருக்கிறது என்று காட்டுகிறேன். என்ன சொல்கிறாய்? என்றோ ஒரு நாள் - மனித குலம் முன்னேறாத நாட்களில் நடந்திருக்கும் என கூறித், தப்பித்துக்கொள்ள முடியாது தம்பி! இது இப்போது நடைபெற்றது.

ஜொஹானா செலிமா முனேனி - ஒரு குழந்தையின் பெயர்.

இதில், முனேனி என்பதற்கு, என்ன பொருள் தெரியுமா? "எம்மைப் பிரியாள்' என்பது பொருள். அவ்வளவு அன்புடன், செல்லமாகப் பெயரிட்டனர் குழந்தைக்கு. ஆனால் அந்தக் குழந்தை, பெற்றோருடன் இருக்கக்கூடாது என்று சட்டம் கூறுகிறது - டாக்டர் வெர்வுட்டின் சட்டம்!

பாட்ரிக் மாடிம்பா என்பவர், தந்தை; வழக்கறிஞர்; வயது முப்பதுக்குள்; ஆப்பிரிக்கர்; டாக்டர் வெர்வுட்டின் மொழிப்படி கருப்பர்!

அவர் டச்சு நாட்டைச் சேர்ந்த ஒரு மங்கையை மணம் செய்துகொண்டார், இங்கிலாந்தில் படிக்கும்போது. அவள், வெள்ளையர் இனம்!

முனேனி பிறந்தாள். மூவருமாக ஆப்பிரிக்கா வந்தனர்.

அங்கு சட்டம் கட்டளையிடுகிறது, தாய் டச்சு நாட்டு வெள்ளைக்காரி, எனவே, அவள் வெள்ளையர் வாழும் பகுதியில் தான் இருக்க வேண்டும்; தந்தை கருப்பர், எனவே வேறு இடத்தில் கருப்பருக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இடத்திற்குப் போயாக வேண்டும், குழந்தை கலப்பு இனம் - எனவே, இரு இடத்திலும் இருப்பதற்கில்லை, கலப்பு இனம் வாழவேண்டிய இடம் கொண்டுபோகப்பட வேண்டும் என்று சட்டம் ஆணையிடுகிறது.

"எம்மைப் பிரியாள்'' என்று தாயும் தந்தையும் குழந்தையைக் கொஞ்சிக் கொஞ்சி முத்தமிட்டிருப்பர்; குழந்தையும் தாயிடம் தாவித் தாவிச் சென்று விளையாடி இருக்கும், தந்தையின் கன்னத்தில் முத்தமிட்டிருக்கும்; ஆனால் சட்டம், தாயையும் சேயையும் பிரிக்கிறது! இப்படி ஒரு சட்டமா? என்று கேட்பதே சட்ட விரோதம்.

இது நாடு அல்ல, காடு! சட்டமல்ல, சண்டாளத்தனம்! என்று ஆப்பிரிக்காவில் இருந்துகொண்டு அல்ல, வெளி ஏறி வேறு நாடு சென்றுதான், அவர்கள் பேச முடிகிறது. சட்டம் பார்த்தாயா, தம்பி! 1960ல்!! மக்களாட்சியில்!!

அந்தச் சட்டத்தை, வழக்குமன்றம், மதித்தாக வேண்டும்! ஆட்சியாளர் அதை அமுல் நடத்தித் தீருவார்கள். அறிவுலகம் கண்டிக்கும்! ஆனால், அந்தச் சட்டம் அமுலில் இருக்குமிடத்தில், அதை மதிக்க மறுப்போரும், மீறி நடப்போரும், தண்டிக்கப்படுகிறார்கள் - சட்டப்படி!!

மக்களால் அமைக்கப்பட்ட அரசு, மக்கள் மன்றத்தில் பேசி முடிவு எடுத்து, சட்டம் இயற்றுகிறது. சட்டம்பற்றிப் பேசப்படும்போது, பலரும் தத்தமது கருத்துரைகளை வழங்குகிறார்கள், திருத்தங்களைத் தருகிறார்கள், வாக்கெடுப்பு நடக்கிறது. பிறகே சட்டமாகிறது. ஆகவே, சமுகம், அந்தச்சட்டத்தை ஏற்றுக்கொள்கிறது என்று கூறுவது கேட்டிருப்பாய். அப்பழுக்கற்ற வாதம்! திறமை மிகுந்ததுங்கூட!

ஆனால், அடிப்படையில் உள்ள நிலைமையைக் கவனித்தாயா?

மக்களாட்சி முறைப்படி, பெருவாரியான இடங்களை, மக்கள் மன்றத்திலே பெற்ற கட்சியினர், என்ன தேவை என்று நினைக்கிறார்களோ, அவ்விதம் சட்டம் இயற்றிக்கொள்ள முடிகிறது.

எதிர்ப்பு இருக்கலாம், அந்த எதிர்ப்புரையில் நியாயம் இருக்கலாம்; நிபுணர்கள் சிக்கல்களை எடுத்துக்காட்டலாம், அவை உண்மையாக இருக்கலாம்; ஆனால், கடைசியில், "ஓட்' தானே - சட்டமாகி விடுகிறது. ஆளும் கட்சியின் விருப்பம், எதைச் சொன்னால் என்ன? நிதி மந்திரிபோல் வாதத் திறமையைக் காட்ட வாய்ப்பு என்று எண்ணி, எதிர்ப்புரைகளின் உள்ளே நுழையாமல், பேசுவோர்மீது கேலி வீசி, மேதை என்று அரசியல் பந்துக்களிடம் பெயரெடுக்கலாம்; சட்டம் நிறைவேறிவிடும். அல்லது அந்த வீண் வேலைதான் நமக்கேன் என்ற போக்கில், அமைச்சர் பக்தவத்சலத்தைப் போல, எதிர்த்தரப்பினர் ஆவலுடனும், நம்பிகையுடனும் எடுத்துச் சொல்வதை எல்லாம், துளி அளவு உணர்ச்சியும் காட்டாது கேட்டுக்கொண்டிருந்துவிட்டு, எழுந்து நின்று, கனம் இன்னார் சொன்னதை ஏற்றுக்கொள்வதற்கில்லை, என்று பேசிவிட்டு, உயர்த்தப்படும் கரங்களைத் துணைக்கு அழைத்துக் கொள்ளலாம்.

இந்த விதத்தில், சட்டங்கள் இயற்றிக்கொள்ள வாய்ப்புப் பெற்ற ஆளுங்கட்சியை, ஆட்சிப் பொறுப்பில் மக்கள் அமர்த்தியது, இந்த விதமான சட்டங்கள் இயற்றுவார்கள், இயற்ற வேண்டும் என்பதற்காக அல்ல. வேறு பொதுவான நல்லியல்புகளோ, சுவையுள்ள வரலாறோ, திறமையோ இருப்பதாகக் கண்டறிந்த காரணத்தால், பந்தல்போட வந்தவன், சொந்தம் கொண்டாடத் தொடங்கினால், வந்த வேலையைப் பார்த்து விட்டுப்போ! என்போம்; ஆளுங் கட்சியை அவ்விதம் சொல்ல முடியாதே, ஐந்தாண்டுகள் வரையில்!!

சட்டம், பிறப்பது இவ்விதத்தில்.

அதிலும், இப்போது எங்கள்மீது தொடரப்படும் வழக்கு. மக்கள் மன்றத்தில் பேசி, விவாதித்து, முடிவு கண்டு, இயற்றப் பட்ட சட்டம் அல்ல. இது அவசரச் சட்டம்.

சட்டத்தில், அவசரம் இருக்கக்கூடாது - எனினும், இது அவசரச் சட்டம் என்றே பெயரிட்டு அழைக்கிறார்கள். ஏனோ!

இந்த அவசரச் சட்டம், மிக நிதானமாக யோசித்து உரையாடி, விளக்கம் பெற்று, விவாதித்து, பல நாடுகளிலே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள, வேலை நிறுத்த உரிமை சட்டபூர்வமானது என்பதையே மறுக்கும் சட்டம்

! தம்பி தசரதன் ஒரு நாள் கூறக்கேட்டேன் - அங்காடியில் கிடைத்தது, திடீர்ப் பாயாசம் என்று. என்னவென்று கேட்டதில், திடீரெனப் பாயாசம் தேவைப்பட்டால், ஒரு பிடி அந்தத் தூளை எடுத்து கொதிக்கும் தண்ணீரில் போட்டுக் கலக்கினால் பாயாசமாகுமாம் - பருகலாமாம் - பருகினதாகச் சொன்னார்.

பாயாசம் செய்யப்படும் முறையோ, மிகப் பக்குவமானது. நன்றாகக் கலந்து, குழம்பி, கொதித்து, பதமான பிறகு பாயாசமாகும்; நேரம் பிடிக்கும்; நொடியில் ஆகாது. ஆனால், அங்காடியில் கிடைக்கிறதாமே திடீர்ப் பாயாசம். அதுபோல அரசியல் அங்காடி, அவசரச் சட்டம் தருகிறது. இது தனி தனியான மகத்துவம் வாய்ந்தது. இதைத் திறம்படப் பயன் படுத்திப் பலன் காணும் இதே காங்கிரசார், வெள்ளையர்கள் அவசரச் சட்டம் போட்டபோது பேசிய பேச்சினை நான் கேட்டிருக்கிறேன்; நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாகலாம் என்று தோன்றும் வெள்ளைக்காரருக்கு, அந்தப் பேச்சுகளைக் கேட்டிருந்தால்.

பேசினார்கள் அப்போது, இப்போது வெள்ளையராகி வெறியாட்டம் ஆடுகிறார்கள்.

அந்த வெறியாட்டத்தையே நாடு தாங்கிக்கொள்கிற போது, நம்மிலே சிலர் வழக்குகள், விளைவுகள் ஆகியவற்றையா, தாங்கிக்கொள்ளக் கூடாது!

வழக்கு என்றதும், எனக்கு என்னவோ உன்னிடம் பொதுவாகவே, சட்டம் என்பதுபற்றிய பேச்சுப் பேசலாமா என்று தோன்றிற்று; ஆனால்தான் இது.

சட்டம், தூய்மையான உள்ளத்துடன், நெறி தவறா முறையில் இயற்றப்பட்டாலும், இயற்றியவர்கள் சமுகத்தில் எவ்விதமான அமைப்பு இருக்க வேண்டும் என்று விரும்பி, அதனைத் தமது குறிக்கோள் ஆக்கிக்கொள்கிறார்களோ, அதனை நிலை நிறுத்தவும், மற்றவர்களும் விரும்பினாலும்விரும்பாவிட்டாலும் ஏற்றுக்கொள்ளவும் செய்வதற்காக வடித்தெடுக்கப்படும், கருவி - வேறென்ன!

சமுக அமைப்பிலே, ஒரு அடிப்படை மாறுதல் தேவை என்று நெஞ்சார உணர்ந்து, அதற்கான குறிக்கோளைச் சமைத்தளிக்கும் ஒரு இயக்கம் அல்லது சிலர் அந்தக் குறிக்கோளுக்காகப் பாடுபடும்போது, ஏற்கனவே உள்ள சட்டங்களின் காரணமாக, வழக்கு மன்றம் இழுக்கப்பட்டால், வருத்தமடையாது செல்வதும், கடும் தண்டனை தரப்பட்டால், கலங்காது ஏற்றுக்கொள்வதும், அவர்கள் செலுத்தவேண்டிய காணிக்கை! அதனைத் தருவதற்கு எனக்கு வாய்ப்புகள் கிடைக்குமானால், அதைவிடப் பேறு வேறென்ன இருக்க முடியும்!

குறிக்கோளைப் பெரிதெனக் கொண்டவர்கள், அந்தக் குறிக்கோளை நாடு ஏற்றுச் செயல்படுவது எப்போது என்பதில் நாட்டம் கொண்டவர்கள் மீது சட்டமாகட்டும், அவசரச் சட்டமாகட்டும் வீசப்பட்டால் விசாரப்படவா செய்வர்? வழக்குமன்றம் தன் கடமையைச் செய்கிறது, நாம் நமது கடமையைச் செய்வோம் என்றே இருப்பர்.

விடுதலை விரும்பிகள் அந்த மனநிலையைப் பெறுவதற்கு, வழக்குமன்றங்கள் மெத்தப் பயன்பட்டிருக்கின்றன.

இடையிலே வந்தது இருக்கட்டும். இந்தி விஷயத்தை எடுத்துக்கொள். அதுகூடச் சட்டம்தான்! இந்திய அரசியல் சட்டம்! அதிலே, 1965லில் இந்தி ஆட்சி மொழி ஆகியே தீரவேண்டும் என்று இருக்கிறது. அடடா! சட்டம் அப்படி இருக்கிறதே, நாமென்ன செய்வது என்றா இருக்கிறோம்? முடியுமா! இருக்கலாமா! இருந்திடுவோர் தமிழரா!!

அது ஆகாது, தீது, ஏற்கமாட்டோம், என்று தமிழகம் கூறுகிறது.

சட்டமய்யா சட்டம்! - என்று ஆர்ப்பரிக்கின்றனர், ஆளவந்தார்கள்.

பதில் என்ன தருகிறோம், யார் போட்ட சட்டம்? யாருக்காகப் போடப்பட்ட சட்டம்? எப்படிப் போடப்பட்ட சட்டம்? ஏன் அப்படி ஒரு சட்டம்? என்றெல்லாம் கேட்கிறோம்.

கவனித்தாயா, தம்பி! சட்டத்தைச் சமுகம் விசாரிக்கிறது! உன் பிறப்பு என்ன, வளர்ப்பு என்ன, இலட்சணம் என்ன என்று!!

என்னையும் நண்பர்களையும் வழக்குமன்றத்தில் நிற்க வைத்து, விசாரணை நடத்துவார்கள்.

ஆனால் சுவையுள்ள, பயனுள்ள, சிறப்புமிக்க, வரலாற்றில் இடம் பெறத்தக்க விசாரணை, சமுகம் நடத்திக்கொண்டிருக்கிறது - சட்டத்தைக் கூண்டில் நிறுத்தி!!

காணவேண்டிய காட்சி, கேட்டு இன்புறவேண்டிய செய்தி, அதுதான்.

தொழிலாளர்களைத் தூண்டிவிடப் பேசியதாக வழக்குத் தொடரப்படுகிறது.

நானும் நீயும், தம்பி! மிகப் பெரிய குற்றம் ஒன்றினைச் செய்துகொண்டே இருக்கிறோம். சட்டத்தைக் கூண்டிலேற்றி விசாரணை நடத்தச் சொல்லிச் சமுகத்தை - தூண்டுவது அல்ல - தட்டி எழுப்பியபடி இருக்கிறோம்.

அந்த விசாரணை நாளைத்தான், நாம் எதிர்பார்த்த வண்ணம் இருக்கிறோம்.

இந்திய அரசியல் சட்டமே! எல்லா அதிகாரத்தையும் மத்திய சர்க்காரில் குவித்துக்கொண்டு, மாநிலங்களை மட்ட மாக்கி வைத்திருக்கிறாயே! ஏன்? என்று சொல்! நியாயமா? என்று கூறு!

வளமெல்லாம் ஓரிடத்திலும், வறுமை பிறிதிடத்திலும் இருக்கும் விதமான, ஆட்சி அமைப்புக்கு வழி வகுத்து விட்டாயே, ஆகுமா இந்த அநீதி?

வரலாற்றுச் சிறப்புப்படைத்த மொழியைப் பெற்றுப் பெருமைகொண்டவர்கள்மீது இந்தியைத் திணிக்கலாமா?

குறிப்பிட்ட சில மாநில மக்களின் தாய்மொழியான இந்தியைப் பொது ஆட்சி மொழி ஆக்கத் துடிக்கிறாயே அதன் விளைவாக அந்த மக்களை மேலோர் ஆக்கி எம்மைத் தாசர்கள் ஆக்கிடும் சூழ்ச்சியைச் செய்யலாமா? - என்றெல்லாம், சமுகம், கேட்கப் போகிறது - கேட்கும் தெளிவு பரவிவிட்டது, துணிவும் துளிர்த்துக் கொண்டிருக்கிறது.

அந்த விசாரணை நாள், விரைந்து பெறப்பட வேண்டும். அந்தப் பணியில் ஈடுபட்டிருப்போர், எத்தனை முறை, வழக்கு மன்றம் செல்லவேண்டி வந்தாலும், அவை, வாய்ப்புகள் என்றே கொள்ள வேண்டும்,

அத்தகைய வாய்ப்பு எனக்கு கிடைக்கிறது! உனக்கு? எப்போது?

அண்ணன்,

17-7-1960