அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


செந்தமிழே வா!
1

நீலமேக நகரில் மாநில மாநாடு!
பேரணி அன்று, போரணி!
குருதி கொடுத்துக் கொடி காத்தோர் நினைவு தெரிந்திடும்!
புத்தாட்சி அமைத்துப் புதுவாழ்வு அளித்திடச் செந்தமிழே வா!
பாசறையைப் பார்வையிட வருகிறாய், தம்பி!

தம்பி!

என்ன ஒரே மகிழ்ச்சி! கொந்தளிப்பு அளவுக்குக் களிப்பு! முகத்திலே ஓர் புதுப்பொலிவு! இதழோரம் ஓர் கனிவு! நடையிலேயே ஓர் முடுக்கு!! என்ன காரணம்? புரிகிறது, தம்பி! புரிகிறது! மாநில மாநாட்டுக்குப் புறப்படும் ஏற்பாடு உனக்கோர் புதுத்தெம்பைக் கொடுத்திருக்கிறது. கழகத்தவர் இலட்சக் கணக்கில் திரண்டிடும் திருநாள்; அன்று நாட்டிற்கான ஓர் பொற்காலம் காண விழைவோரெல்லாம் கூடிடுகின்றனர். உரை கேட்டு மகிழவும், உணர்ச்சியினை ஊட்டவும், உவகை பெறவும், தரவும் கூடுகின்றனர். கழகம் பெற்றுள்ள வளர்ச்சியின் உயிரோவியம் அன்று உலவிடும் கழகத் தோழர்களின் உறுதியை அவர்களின் ஒளிவிடு கண்கள் காட்டுவனவாகிடும்!

பேட்டையாரா? பெரும்பண்ணையூராரா? அதோ மாயவரத்தார், அவர் மன்னார்குடியார், மயிலாப்பூராருடன் வருகின்றாரே அவர் காயல்பட்டினம், எதிர்பார்த்தபடி வருகிறார் சேலத்து நண்பர், கோவைக் குமரர்கள் நேற்றே வந்துவிட்டார்கள், காஞ்சிபுரத்துத் தோழர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பே வந்து விட்டனர், காவேரிப்பாக்கத்தார், கருங்குழியார், கலசபாக்கத்தார், கருந்தட்டாங்குடியார், கலையூராம் தஞ்சைப் பகுதியின் தோழர்கள், வேலூரார், வாணியம்பாடியார், சிதம்பரத்துச் செம்மல்கள், சீர்காழித் தோழர்கள், பேராவூரணியார், பெரிய பாளையத்தார், அதோ காரைக்குடியார் வட மதுரைத் தோழருடன், மறவர் கோட்டத்து மாமணிகள் பற்பலர், மதுரையம்பதியின் மாவீரர் அணி அணியாய், கருநாடகப் பகுதிவாழ் கடமை வீரர்கள், ஆந்திர மாநிலத்து அருமைத் தோழர்கள், பண்ணைக்காட்டார், பாபநாசத்தார், குத்தாலத்தார், குடவாசல் தோழர்கள், குடந்தை தந்திட்ட குணக்குன்று, நெல்லை நண்பர்குழாம், திருச்சி தீரர்கள், திங்களூர் தோழர்கள், உடுமலைவாழ் அன்பர், பொள்ளாச்சித் தோழர்கள், ஈரோடு நகரத்துத் தோழர்கள், உவகை தரும் முகவை மாவட்டத் தோழர்கள், அணி அணியாய் வருகின்றார், அழகு தருகின்றார், குடும்பம் குடும்பமாகக் கூடுகின்றார் குதூகலமாக!

காண்கின்றாயே பெண்ணே! இன்றென்ன கூறுகின்றாய்? கழகம் கழகமென்று கூவிக்கிடக்கின்றீரே, கழகம் என்னதான் சொக்குப்பொடி போட்டதுவோ? என்றெல்லாம் கேட்பாயே, எழிலரசி! காண் இன்று! இதுதான் என் கழகம்! இவரெல்லாம் என் குடும்பம்! இவர் கூடும் இடம் எனக்கு, திரு இடம், தீரர் இடம்! பெறுமகிழ்ச்சி பலவற்றுள் இதற்கீடு இல்லையன்றோ! வாழ்வளிக்கக் கூடுகின்றார், வன்கணாளர் கொட்டமடக்கிடுவார், கோல் கொண்ட காரணத்தால் கொடுமை உமிழ்ந்துலவும் கூட்டத்தை விரட்டிடுவார், அவர் பெற்ற உறுதியின் அடிப்படை அறிவாயோ? தன்னலம் மறுத்திட்ட தக்கோரின் உழைப்பேதான்! தன்னைத்தான் ஒப்படைத்த தகுதி மிக்கோரின் அறிவாற்றல்; தொண்டு! கூடுகின்றோம் இன்று இங்கு, கொடி பறக்கக் காண்கின்றோம், முரசொலி கேட்கின்றோம் என்றால், முழுமதியே! இந்த நிலை நாம் பெற்றிடவே, எத்தனையோ தோழர்கள் கொட்டினர் குருதியினை. கொடுவாளுக்கஞ்சாமல், பழி தாக்கியபோதும் பதறாமல் களம் நின்று, என் கழகம்! என் குடும்பம்! என்று கூறி நின்றார், ஏற்றார் எதிர்ப்புகளை, அவர் கண்ட தொல்லைக்கோர் அளவே கிடையாது!

ஆண்டை எதிர்த்திருப்பார், அடி ஆள் எதிர்த்திருப்பார்; வேலை இழந்திருப்பார் வேதனையில் உழன்றிருப்பார், என்றாலும் எப்போதும், எது வந்திடினும் அஞ்சிடப்போவதில்லை. நெஞ்சத்துக் குடிகொண்ட உண்மைக்கே பணிந்திடுவேன் என்றுரைத்து என் கழகம்! என் குடும்பம்! எனக் கூறிக் களம் நின்றார். எண்ணற்றவர் என் உடன் பிறந்தார்! இதோ! இதோ எங்கும்! காணடி என் உள்ளம் வென்றவளே! காட்சி இதுபோலக் கண்டதுண்டோ கூறிடுவாய். அங்கே உலவுகின்ற அறிவரசன் அறிவாயா ?

அகமும் புறமும் கற்ற அருந்தமிழ்ப் புலவரவர் ஊரின் கோடியில் உள்ளதோர் சிறு குடிலில் வாழ்கின்றார். அவர் திறனோ, நாட்டிற்கே நல்லதோர் அணிகலனாம்! நம் தமிழர் வாழ்ந்த விதம், நடுவில் வந்துற்ற நலிவு, அதன் காரணம், இன்று நாம் பெற்றுள்ள விழிப்புணர்ச்சி, அதன் விளைவு, இத்தனையும் கூறிடுவார், தித்திக்கும் செந்தமிழில். அதோ காண்பாய், அவர்தான் எழுத்துலகு தன்னில் ஏற்றமிகு இடத்தைத் தனக்கெனப் பெற்றிட்ட பேரறிவாளன். முத்தமிழை அவர் வடித்துத் தந்திடுவார், பருகிடுவோர் பெற்றிடுவார் தனிச்சுவையை. உள்ளத்துப் பாங்குகளை உன்னதமாய் காட்டவல்லார், உயர உயரச் சென்றேன் என்று உரைத்திடும் பணந்தேடிப் புலவரெல்லாம், ஊர் பகைக்கும் என்றஞ்சி உண்மையினை உணர்த்திடாமல் ஒதுங்கி நின்ற காலத்தில் உச்சி பிளந்திடினும் ஊராள்வோர் பகைத்திடினும், மெச்சிப் புகழ்ந்திடவே வாரார் எவரும் என்று எச்சரிக்கை கிளப்பிடினும், இல்லம் இழந்திடினும் இன்னுயிரே போகுமென்ற நிலையே உறுத்திடினும் உண்மையின் பக்கமே உறுதியுடன் நான் நிற்பேன், உலகு உணருமட்டும் உரைத்தபடி இருப்பேன் என்று கூறி நின்றார், பழந்தமிழர் பண்புக்கோர் எடுத்துக்காட்டாய்!

கலகலப்பு அதிகமாகக் காணுதே, காண்கின்றாய்! காரணம் அறிவாயோ! கலை உலகில் நிலையான புகழ் பெற்ற தோழரவர், கழகத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாய் உள்ளார்; நேர்த்திமிகு கலைத்திறனால் நாட்டார் நெஞ்சத்தில் இடம் பெற்றார்; புகழ் மணக்க வாழ்கின்றார்.

ஆயின் பூந்தோட்டம், இசை களியாட்டம் பொற்குவியல் என்பனவற்றில் இல்லை இன்பம், புன்னகை பூத்த முகத்தோடு என் தோழர் நின்று வாழ்க! வாழ்க! என்று எழுப்பிடும் வாழ்த்தொ-யே இசையாகும் என்ற கருத்துடையார். இளஞாயிறுகள்! எழு ஞாயிறுகள்! எல்லோரும் என் தோழர்! விலை ஏறிவிட்டதனால் வேதனையுறுகின்றார், வேண்டாம் விபரீதம், விளைவு நல்லதல்ல என்று ஆண்டிடும் பெரியோர்க்கு அறிவுரை கூறியதால் அடைபட்டார் அதோ அந்தத் தோழர் சிறைதனில் ஓராண்டு! இளைத்த உடல், காண்கின்றாய்; ஆனால் உள்ளம் எஃகு! ஆமாம்! அவரே கரம் கூப்பி நிற்கின்றார் மாதெதிரில்! ஏனென்று அறிந்துகொள் ஆரணங்கே! மாத்தமிழ் காத்திடவே புறப்பட்டான் ஓர் காளை! இந்தி தமிழர்க்குச் செந்தீ என்றான், காரணம் பல காட்டி! எப்பக்கம் வந்து புகுந்துவிடும்? இந்தி எத்தனை பட்டாளம் கூட்டி வரும்? என்ற பண் எழுப்பிப் புறப்பட்டான். பதைக்கச் சுட்டு வீழ்த்தினர் அத்திருமகனை! அந்த மாது அவன் மாதா? நாடு வாழ மகனைப் பறிகொடுத்தாள் மாதா! அவள் கால்பட்ட மண், மணம் பெற்றிடும் என்றிடலாம். மகனை இழந்திட்டேன், மாத்தமிழுக்கு அளித்துவிட்டேன், ஒருவனை நான் கொடுத்து இதோ இத்தனைப் பிள்ளைகளை நான் பெற்றேன்! இவர்களிடம் உள்ளவன் என் மகன், இறந்தானில்லை! இவர்களோடு கலந்துவிட்டான், மடியவில்லை! மலரினின்று கிளம்பும் மணம் கலந்திடும் காற்றில் என்பர். என் மகன் நறுமணமானான்; பிணமானான் என்று எண்ணிடுதல் பேதமை! என்று எண்ணித்தானோ அந்த மாது நடக்கின்றாள் எழுச்சி யூட்டி! - இதுதானடி தேனே! என் கழகம்!

சொக்குப்பொடி என்ன போட்டதுவோ என்று கேட்டாய் அன்று; இன்று சொல்லுவாய் காண்கின்ற காட்சி பற்றி உன் கருத்தை. இதுதான் என் கழகம்! என் குடும்பம்! - என்று கூறுகின்றான், மயிலாள் கடைக்கண்ணால் பார்க்கின்றாள். "களுக்'கென்று சிரிக்கின்றாள், காரணம் அறியாது திகைக்கின்றான் மணவாளன்; ஒன்றும் தெரிவதில்லை உங்களுக்கு என்கின்றாள்; என் கழகம்! என் குடும்பம்! என்று கூறுகின்றீர், உம்மில் நான் கலந்து ஓருயிராய் ஆன பின்னும்! உமக்கு இது குடும்பம் எனில் என் குடும்பம் ஈதன்றோ என்கின்றாள். பூரித்துப் போகின்றான். என்ன இனிமையுடன் எனக்களித்தாய் நல்லுணர்வு! தவறே செய்துவிட்டேன், தந்தையே இஃது நம் கழகம்! நம் குடும்பம்! என்று கூறுகின்றான்.

காட்சிகள் இதுபோலக் கண்டிடவும், கருத்து விருந்து பெற்றிடவும் மாநில மாநாடு செல்லப் போகின்றோம் என்ற செந்தேனை உண்டதினால் புதுப் பொலிவே நீ பெற்றாய். தம்பி! உன்னைக் காணும்போது உள்ளபடி நான் உதயசூரியனைக் காண்கின்றேன்; உலகுக்கு ஒளியூட்டி, உயிரூட்டி வந்திடுவது உதயசூரியன். அஃது இல்லையெனில் வேறு எதுவும் இல்லை என்பர்! அதனிடம் தொடர்பு கொள்ளப் பொருள் எதுவும் பொருளாகாது என்றுரைப்பர்! உதயசூரியன் போன்று இன்று தமிழகத்துக்கு நீ இருந்து வருகின்றாய். காரிருளை ஓட்டிவிட்டாய்! காலை மலர்ந்தது மாந்தர் கண் மலர்ந்து நடமாடுகின்றார் என்றாரல்லவா புரட்சிக் கவிஞர். தம்பி உதயசூரியன்போல நீ புறப்பட்டாய், நாட்டவர் உள்ளம் மலர்ந்தது. நம்பிக்கை எழுந்தது. நாடு வாழ்ந்திட நற்பணியாற்றிடும் ஆற்றல்மிகு தோழர்களின் அணிவகுப்பு கண்டோம், நாம் பட்டி தொட்டி எங்கும் பாங்குடனே அமைத்துள்ள அணிவகுப்பு எல்லாம் ஓரிடத்தில் பேரணியாய் சீரணியாய் கூடுகின்றதன்றோ. மாநில மாநாடெனில் இஃதேயன்றோ பொருளாகும்.

பேரணி மட்டுமன்று, இதுபோது கூடிடுவது; போரணி! ஆமாம். வலியோர் சிலர் எளியோர்தமை வதையே புரிகுவதா? மகராசர்கள் உலகாளுதல் நிலையாம் எனும் நினைவா? என்று முழக்கம் எழுப்பி, வீரர்காள் புறப்படுவீர்! கோழைகளே! ஓர்புறம் ஒதுங்கிடுவீர்! என்று பரணி பாடி, ஆதிக்கக் கோட்டையினைத் தாக்கித் தகர்த்திடக் கூடிடும் போரணி.

பற்பல நாட்களாகப் பல்லாயிரம் கூட்டங்களிலே எடுத்துரைத்தவைகளை எல்லாம் செயலில் காட்டிடக் கிடைத்திடும் வாய்ப்பாம் பொதுத் தேர்தல் களம் சென்று, புல்லர்களின் கொட்டமது அடக்கி, புத்தாட்சி அமைத்திடக் கிளம்பிடும் போரணி!

தமிழர் பெரும்படை நடைபோடும் காட்சி காணாத கண்ணென்ன கண்ணோ! - என்று பாடிடக்கூடத் தோன்றுகிறது; பயிற்சி இல்லை, குரலிலே குளிர்ச்சி இல்லை.

மறவர் படை எழுப்பிடும் முழக்கமதைக் கேளாத காதென்ன காதோ? என்று இசைத்திட எண்ணம் எழுகிறது. இசைக் கலைக்கு நாம் ஏன் இழுக்குத் தேடுவது என்ற எண்ணம் குறுக்கிட்டுத் தடுக்கிறது.

ஆனால் தம்பி! நமது உடன் பிறந்தார் கூடிடும் மாநாட்டில், பேச்செல்லாம் இசையே! ஐயமுண்டோ!!

கோட்டை கொத்தளம் அமைத்து இந்த மாநில முழுதும் ஆண்டிருந்தார் நம் முன்னோர் என்று படிக்கின்றோம். தாரணி மெச்சிட வாழ்ந்திருந்தார் என்று அறிகின்றோம். கத்தும் கடல் அடக்கி வென்றார். கடாரம் கண்டார், முத்தும் பவழமும் யவனம் கொண்டு சென்றார், உலகின் மூத்தகுடி தமிழ்க்குடியே என்பதனை மெய்ப்பித்தார் என்றெல்லாம் படிக்கின்றோம். ஓரோர் வேளை, மெய்யாக அந்த நிலை இருந்திருக்கக் கூடுமோ, இல்லை வெறும் கற்பனையோ என்று ஐயம் எழக்கூடும்; ஆயின் தாழ்வுற்று நிலைகெட்டு, தாள் தொட்டால் பிழைத்திடுவீர் என்று கூவிக் கொக்கரிக்கும் கொடியோரால் கொட்டப்பட்ட நிலை எனினும், எத்தனை வீரமதைப் பெற்றுள்ளார் இம்மறவர்! உறுதியின் தன்மை எத்தனை உன்னதமாய் உள்ளது இங்கு என்பதனை மாநில மாநாடதனில் காண்போர் ஐயம் அகன்றிடும்; அத்தனையும் உண்மையே; இற்றை நாளிலேயே இவர்க்கு இந்த ஆற்றல் உள்ளதெனில், அந்நாளில் பெரும் புலவர் கூறினரே அதுபோல ஏன் இருந்திக்கமாட்டார்கள்! - எனக் கேட்டு, மரபின் பெருமைதனை முற்றும் உணர்ந்து, இதனை இழந்திடுதல் பெரும் தவறு என உரைத்து, மரபு காத்திடவும், அதன் மாண்பு வளர்த்திடவும் உறுதி பூண்டிடுவர், உண்மை. வெறும் புகழ்ச்சி இல்லை.

வாழ்வின் சுவைதன்னை வகையாய்ப் பல்லாண்டு உண்டு, உடல் பெருத்து ஊழியர் புடைசூழத் தண்டு தளவாடமுடன் தார் அணிந்து தேரேறும் அரச குமாரர், செல்வர்

ஆகியோருக்காக நடத்தப்படுவது அல்ல, நமது கழகம்; ஆயினும் அத்தகையோர் பல இலட்சம் கொட்டி நடத்திடினும் எழ முடியாததோர் எழில், நீலமேகம் நகரில் எழச் செய்துள்ளனர்.

மாநாட்டுத் திடலை நான் சென்று முதலில் பார்த்தபோது, பள்ளமும் மேடும் பயமூட்டின; கள்ளியும் காளானும் மிரட்டி நின்றன; கல்லும் முள்ளும் தைத்தன; ஆனால் நமது தோழர்களின் கரம்பட்டு, எப்படி இருக்கிறது என்கிறாய்! நான் சொல்வானேன்! வந்து பார்க்கத்தானே போகிறாய்.

தம்பி! ஒரு விதத்திலே பார்த்தால் உனக்குக் கிடைத்திடும் வாய்ப்பு சிறப்புடையது. அந்த வெட்ட வெளியை, மணிப்பிரவாள நடையிலே கூறுவதானால் "ஜெகஜ் ஜோதி'யாக விளங்கிடும் நிலை பெற்ற பிறகு, நீ காண்கிறாய். உன் கண்களிலே, நான் கண்ட மேடும் பள்ளமும் படாது. பட்டொளி வீசிப் பறந்திடும் கழகக் கொடியும், அதனை ஏந்தி நின்றிடும் வீரனின் உருவமும், அந்தக் கொடிகாத்து நின்றதால் கொடியோர்களால் தாக்குண்டு இறந்துபட்டோரின் உடலங்களும், படுகாயமுற்ற மாவீரர்களின் உருவங்களும் தெரிந்திடும். கண்டதும் நாம் நடந்து வந்த பாதை எப்படிப்பட்டது என்பதும் நமக்காக உயிர் நீத்தோர்கள் எத்தகைய உத்தமர்கள் என்பதும் நன்கு விளங்கிடும்.

கொடி ஏந்தி நின்றிடும் வீரர் கோட்டம் எழுச்சியூட்டும் விதமாக அமைந்திருக்கிறது. கண்டு கண்டு களித்திடுவாய் - திண்ணம்.

நாம் சாமான்யர்கள். மாளிகையும், ஆங்கோர் செயற்கைக் குளமும், அதிலே குடைந்தாடும் குமரிகளும், ஊர்ந்திடும் அன்னங்களும், பூங்காவும், ஆங்கு பாடிடும் புள்ளினங்களும், அணி மணி பூண்ட ஆரணங்குகளும் கண்டா களிப்படையப் போகிறோம்.

நாம் எவ்வளவு பெருந் தொகையினராக வளர்ந்திருக் கிறோம் என்பதனை எடுத்துக் காட்டும் காட்சியே நமது கண்களுக்கு விருந்தாகும். சொல்லப் போனால், அந்தக் காட்சிக்குச் செல்வவான்கள் காணும் காட்சி எந்த விதத்திலும் ஈடாகாது! காணும்போது, அண்ணன் சொன்னது முற்றிலும் உண்மை என்பதனை ஒப்புக்கொள்வாய்.

குடிமகனாய் உள்ளோன், ஊர் சுற்றும் உழைப்பாளி, தோள் குத்தும் முட்கள் நிறை மூட்டைதனைச் சுமப்போன், தாங்கொணாப் பாரந்தனைத் தூக்கித் தத்தளிப்போன், கலத்தில் பணி புரிவோன், உலைக்கூடத்தில் உழல்வோன், ஏதோ இசை எழுப்பி அதில் இனிமை காண நினைப்போன்! ஏரடிப்போன்! தூக்கம் தொட்டிழுக்கும் துயர் கக்கும் கண்கொண்டோன்,

இத்தகையோர் அமைத்துள்ள பாசறை, தி.மு.க. ஆனால் இவர்கள் முயன்றால் எதனையும் முடித்திட வல்லார் என்பதனை நாடு அறியும். அவர்தம் முயற்சிக்கு ஒரு அழகுமிகு சான்றாக அமைகிறது நீலமேகம் நகர் - மாநில மாநாடு!