அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


செந்தமிழே வா!
2

தம்பி! 1967 வந்து நம் கதவைத் தட்டுகிறது. ஒலியே கேட்கத் தொடங்கிவிட்டது, விழி! எழு! - என்று கழகம் மாநில மாநாடு மூலம் கூறுகிறது. பரணி பாடிடும் முன்னணியினர், நாட்டு நிலைமையினை எடுத்துக் காட்டி, அதனை மாற்றி அமைத்திடும் வழிவகை கூறி, செயலார்வம் தந்திடப் போகின்றனர்.

புத்தாண்டிலே அடி எடுத்து வைக்கின்றோம் என்பதனை விளக்கிடும் முறையிலே அமைந்துள்ள முகப்பும், கைத்திறன் கொண்டோர் கட்டி அளித்திட்ட கொட்டகையும், அதிலே பகலெது இரவெது என்று தெரிய ஒட்டாது அமைந்துள்ள ஒளி முறையும், ஓர் புறம் கலைக் கண்காட்சியும், எங்கு பார்த்திடினும் சிலை வடிவங்களும், தம்பி! புறத்தோற்றமே எவருக்கும் பூரிப்புத் தரத்தக்கதாக அமைந்துள்ளது; அக மிக மகிழ்ந்திடுவாய்.

இத்தனை கோலமும் உண்டாகிட உழைத்தவர் எவர்? எவர் கரம் பட்டு இந்த எழில் உண்டாயிற்று! நமது உடன் பிறந்தார் உருவாக்கினர் அந்தத் திருவினை. அவர்களைத்தான் அரசியல் ஆதிக்கக்காரர்கள், ஏனோதானோக்கள், எச்சிற் கலையங்கள், சாவு வரும் வரையில் சளைக்காது போரிடும் கந்தலுடைக்காரர் என்றெல்லாம் - ஏசி வருகின்றனர்; அறிவாய்.

அந்த "ஏனோதானோக்கள்' இன்று கழகம் கண்டு, நாட்டு நிலையையும் நினைப்பையும் மாற்றிவிட்டுள்ளனர். இன்று "ஏனோதானோக்கள்'' எத்தர்களைக் கேட்கின்றனர் "இன்னும் எத்தனை நாள் உமக்கு இந்த வாழ்வு?'' என்று. இடிச் சிரிப்புடன் இறுமாப்புடன் ஆதிக்கக்காரர் கூறுகின்றனர், "என்றென்றும்'' என்று! என்றென்றுமா? அப்படி ஒரு நினைப்பா? காலம் மாறி விட்டது அறியாமல் பேசுகிறீர். காலம் பிறந்துவிட்டது; கணக்குக் கேட்கும் காலம், பிப்ரவரியில் கணக்குக் காட்டியாக வேண்டும், கவனமில்லையா? கணக்குத் தீர்த்துவிடப் போகிறார்கள் மக்கள். புரியவில்லையா? என்று கூறுகின்றனர் மக்கள்.

"எமது ஆதிக்கத்தை எதிர்த்திடும் துணிவும் ஆற்றலும் படைத்த ஒரு படையும் உண்டோ?'' - அவர்கள் கேட்கின்றனர்.

"உண்டு! உண்டாகிவிட்டது! திரண்டு நிற்கிறது!'' - மக்கள் கூறுகின்றனர்.

"எங்கே அந்தப் படை? எவ்விடம் உளது?'' - அவர்கள் கேட்கின்றனர்.

"அந்தப் போரணி காண வேண்டுமா? இந்தத் திங்கள் 29-ல் கூடுகிறது. ஜனவரித் திங்கள் முதல் நாள் வரையிலே காணலாம் அந்தப் போரணியை'' - என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.

அந்தப் போரணியைக் கண்டு களித்திடப் புறப்படுவதற்கான ஏற்பாட்டிலே ஈடுபட்டிருப்பதனால்தான், உன்னிடம், தம்பி! ஓர் புதுப்பொலிவு தெரிகின்றது.

எப்போது நடந்திடினும் நமது கழக மாநாடு ஓர் எழுச்சியூட்டும் நிகழ்ச்சி; இம்முறையோவென்றால் ஓர் தனிச்சிறப்பு தன்னாலே வந்துள்ளது.

பொதுத் தேர்தலுக்கு நாம் எந்த விதமாகப் பக்குவப் பட்டிருக்கிறோம் என்பதை நாடு காணக்கூடிய விதத்திலும்,

ஏன் நாம் ஓர் புதிய ஆட்சிமுறையினை காண விழை கின்றோம் என்பதற்கான விளக்கம் அளித்திடும் முறையிலும்,

எந்தவிதமான கட்டுக்கோப்புடனும் பண்பு பயிற்சியுடனும் போரணி திரண்டிருக்கிறது என்பதனை எடுத்துக் காட்டும் வகையிலும், இம்முறை மாநில மாநாடு அமைகின்றது.

படைக்கலன் யாது உமக்கு? - என்று கேட்பர் பட்டத்தரசராகிவிட்டோர்!

ஏழை அழுத கண்ணீர் கூர்வாளொக்கும் என்றார் வள்ளுவப் பெருந்தகை.

குமுறிடும் நெஞ்சினர், கசிந்திடும் கண்ணினர், காலமெலாம் உழைத்துழைத்து வியர்வை சிந்தினோர் - புரட்சிகளே போதும் என்கிறார்கள் இப்படைக்கலன்! பொதுத் தேர்தலிலே வெற்றி ஈட்டிடப் போதாவா, இப்படைக்கலன்கள்!!

ஆகவே தம்பி! இம்முறை மாநில மாநாடு காண வருவது, விளக்கம் பெற்றிட மட்டுமல்ல, விருந்து பெற்றிட மட்டுமல்ல, பாசறையைப் பார்வையிட வருகின்றாய்! ஆமாம் தம்பி! பாசறை!!

தேர்தல் அறிக்கையும் வேட்பாளர் பட்டியலும், இம் மாநாட்டிலேதான் வெளியிட எண்ணியுள்ளேன்.

கழகக் காவலர்கள் கருத்து விளக்கம் அளித்திட வருகின்றனர்.

கனிவு கொண்டுள்ள ஆதரவாளர்களான பெரியவர்கள் பலரும் கலந்துகொள்கின்றனர். வாழ்த்தளிக்கின்றனர்.

நானும் சில பேசுவேன்; எனக்குத் தம்பி! பேசுவதைக் காட்டிலும், உன் பேசிடும் கண்களைக் கண்டு களித்திடவே மெத்த விழைவு. எனினும் ஏதாகிலும் பேசத்தானே வேண்டும். பேசுகின்றேன்.

தம்பிதான் திறப்பாளர்; தென்றல் காண்பாய், புயலும் வீசும்! தேனும் உண்டு, வாள் வீச்சும் காண்பாய்! எல்லாவற்றிலும் ஒரு தனித்தன்மை இருந்திடக் காண்பாய், அதிலும் எம்முறையும் இல்லாத அளவு இம்முறை தம்பியின் பேச்சு அமைந்திருக்கும். பத்து இலட்சமாயிற்றே! பேச்சு சுவைமிக்கதாகத்தானே இருக்கும், பத்து இலட்சம் ரூபாய்களைத் திரட்டிக் கொடுத்து விட்டல்லவா, தம்பியைப் பேசச் சொல்லுகிறாய்! எழுச்சி மிக்கதாகத்தானே பேச்சு அமையும்?

மாநாட்டிற்கான முதற் கட்டமே நாம் பெருமிதம் கொள்ளத்தக்கதாக அமைகிறது.

சுயமரியாதை இயக்க நாள் தொட்டு நமது இயக்கத்திற்கு உயிர்ப்புச் சக்தி ஊட்டி வரும் காஞ்சி க-யாண சுந்தரம் கொடி ஏற்றி வைக்கிறார்.

வாய்ப்புகள் அதிகம் கிடைப்பதில்லையே தவிர, கிடைத்திடும் போது, நான் அரசியல், பொது இயல் பிரச்சினைகள் பற்றிப் பேசி மகிழ்ந்திடுவது, காஞ்சியார் போன்றாரிடமே! என்னிடம் மற்றவர்கள் கூறுவதற்குக் கூச்சப்பட்டுக் கொண்டிருப்பர் பல விஷயங்கள் பற்றி. காஞ்சியார் அவ்விதம் அல்ல! ஒளிவு மறைவு கிடையாது! இயக்கத்திடம் உள்ளன்பு. என்னிடம்? பாசம்! அளவு கடந்த பாசம்! முன்பு நடைபெற்ற மாநில மாநாட்டில், எனக்கு மாலை அணிவித்துவிட்டு கட்டிப்பிடித்துக்கொண்டு குழந்தை போல அழுத காட்சி என்றும் என் மனத்தைவிட்டு அகலக் கூடியது அல்ல. அவர் கொடி ஏற்றி வைக்கிறார் மாநில மாநாட்டில் இப்போது! நாட்டிலே நமது கொடியினை அவர் பல ஆண்டுகளுக்கு முன்னாலேயே ஏற்றி வைத்திருக்கிறார்.

கழகத்திலே நேரடியாக ஈடுபாடு கொள்ளாததற்கு முன்பே, "பொறுப்பாளர்' என்ற நிலையினைப் பெறுவதற்கான நேசத் தொடர்பு எனக்கும் நண்பர் A. கோவிந்தசாமி அவர்கட்கும். எளிமை மாறாமல், எப்போது அழைத்து என்ன பணி தந்திடினும் பொறுப்புடன் நிறைவேற்றி வரும் பண்பினர். சட்டமன்றத்தில் வீற்றிருந்து நற்பணியாற்றிடும் தகுதி மிக்கவர். அவர் கலைக் கண்காட்சியினைத் துவக்கி வைக்கின்றார்.

அரிமா போன்றார் மாற்றாருக்கு; நமக்கோ அண்ணன். அனுபவக்கனிக் கொத்து; அருமையான நகைச்சுவைப் பெட்டகம். எதிர்ப்பு பல கண்டவர்; அன்பர்க்கன்றி வேறு எவருக்கும் அஞ்சிட மறுப்பவர்; அவர் கால்படாத கிராமம் இல்லை தமிழகத்தில் என்று கூறத்தக்க விதமாகப் பல ஆண்டுகள் சுற்றிச் சுழன்று வருபவர். மேலவையில் உறுப்பினர் - சிற்றரசு. அவர் தியாகிகள் கோட்டத்தைத் திறந்து வைக்கின்றார். நமக்காக வாழ்ந்து நமக்காக உழைத்து, நமக்காக உயிர் ஈந்த தியாகிகட்கு நாம் நமது வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்வது முறைதானே!

அந்தக் கோட்டத்தைத் துவக்கி வைத்திட அவர் மிகத் தகுதி பெற்றவர்; அவர் உரை உணர்ச்சி ஊட்டும் எழுச்சி கூட்டும் என்பதனை எடுத்துச் சொல்லவா வேண்டும்? உடல் தளர்ந்த நிலையிலும், உள்ள உறுதி தளராதிருக்கும் அண்ணனல்லவா சிற்றரசு!

மற்றவர்! மற்றவரா? முரசு! முழவு! யாழ்! குழல்! வாள்வீச்சு? வேலெறிதல்! எல்லாம் உண்டு! மேடை அதிர, மாற்றார் நெஞ்சு அதிர, காங்கிரசாட்சியின் கொடுமைகளை எடுத்துரைக்கும் மதியழகன் இருக்கின்றார், சங்கப் புலவர்கள் இவ்விதந்தான் அரச அவை தன்னில் உரையாற்றி இருப்பரோ என்று எண்ணி வியந்து பாராட்டிடத்தக்க விதமான பேருரை ஆற்றிடும் நாவலர் நெடுஞ்செழியன் இருக்கின்றார்; அவர் கழக மாநாட்டுப் பொறுப்பாளர். அவர் "தம்பி' இருக்கின்றார், வாதத் திறமையுடன் புள்ளி விவரம் பல அள்ளி அளித்திட, மல்லிகை மலரெடுத்து மாலையெனத் தொடுத்திடும் நேர்த்திபோல, சொல்லில் சுவை கூட்டி பொருளில் தோய்த்து பொருத்தமுறப் பேச்சாக்கித் தருகின்ற மனோகரன் இருக்கின்றார்; சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், ஒன்றிப்புமன்றத் தலைவர்கள், நகராட்சித் தலைவர்கள், ஊராட்சி மன்றத்தார், ஏ! அப்பா! எவ்வளவு உள்ளார் நமது அணி வகுப்பில்!

ஒவ்வொருவர் திறன் குறித்தும் கூறிச் செல்வதெனில், இதழ் போதாதென்பதன்றோ, அவர் பற்றிய விளக்கம் அளிக்காது விட்டதன் காரணம்? பெரியதோர் பூந்தோட்டம்; எல்லா மலரும், எழில் மலர்; நறுமணம்; வடிவழகு! மாவட்ட செயலாளர் நமது கழகத்திலுள்ளார்; எத்தனை நேர்த்தியான செயல் திறமை மிக்கவராயுள்ளார்! பேச்சு மட்டுமென்ன? பெருமரத்தை வீழ்த்தவல்ல புயலா? காணலாம்! கோடைக் களைப்பாற்றும் பூங்காற்றா? கிடைக்கிறது! வாதத் திறமையா? நிரம்ப! குறைவற்ற செல்வம் பெற்றுள்ளேன்.

தம்பி! உன்னையெல்லாம் வரவேற்று, கருத்து விருந்து தரப்போகும் வரவேற்புக் குழுத் தலைவராம் நீலநாராயணனும், மாநாட்டுச் செயலாளர்களாம் மன்னை ப. நாராயணசாமி, ஈ. ஆர். கிருட்டிணன், சி. வி. எம். அண்ணாமலை, கோ. செங்குட்டுவன் ஆகியோரும், தொண்டர் படைத் தலைவர் கே. எம். கண்ணபிரானும், துணைத் தலைவர்கள், சு. பாலன், தி. அ. நல்லதம்பி, எஸ். வி. வேலு, அலமேலு அப்பாதுரை, சாகுல் அமீது ஆகியோர் மட்டுமென்ன! போரணியின் முன்னோடிகள் அல்லவோ!

கலை உலகிலுள்ள கழகத் தோழர்களின் பாங்குதனை எண்ணி எண்ணி நான் மகிழாத நாள் உண்டா? விதை தூவி, முளை காண நாம் பாடுபட்ட காலை, தமது இசையைப் பாய்ச்சிக் கழக வயல் செழிக்கச் செய்த, என் அருமை கே. ஆர். ராமசாமியின் தோழமை உள்ளந்தனைக் கண்டு பாராட்டாதார் உண்டா? கருத்து விருந்தளிக்க, பாடமாட்டேன்! - என்று பாடக்கேட்டு மகிழாதார் உண்டா? தமிழகத்தின் கண்மணியாய், கலை உலக நன்மணியாய், அன்பு மணியாகத் திகழ்ந்திடும் புரட்சி நடிகர் எம். ஜி. ராமச்சந்திரன், பொதுத் தேர்தலில் ஈடுபட இருக்கின்றார்; என்னிடம் தனியாகப் பேசுங்காலை எந்த அளவு தயக்கமும் கூச்சமும் தென்படுகிறதோ, அந்த அளவு, மேடை ஏறிப் பேசும்போது எழுச்சி கலந்திருக்கக் கேட்டின்புற்றிருக்கின்றேன். அவர் உரை கேட்குங் காலை, தேனுண்ட வண்டாகிக் கழகத் தோழர் சொக்கிடுவர். காண்கின்றாய். இலட்சிய நடிகர் இராஜேந்திரனும், நடிகமணி டி. வி. நாராயணசாமியும், என்னுடன் உண்டு உறங்கி, உரையாடி உவகையூட்டிய, எங்கள் குடும்பத்துப் பிள்ளைகள். நாடக நடிகர்களாக இருந்த நாள் தொட்டு, பொதுத் தொண்டாற்றும் ஆர்வம் மிக்கார், அரசியல் பிரச்சினைகளை ஆய்ந்து பார்த்துப் பேச வல்லார், அவர்களின் உரைகேட்டு அகமகிழ்வுடன் தெளிவும் பெற்றிடலாம்.

மற்றும் நடிகர்கள் ஆனந்தன், கண்ணன், வாசு போன்றார், நமது இயக்க வளர்ச்சியிலே நாட்டம் காட்டிப் பணியாற்றி வருகின்றார். மகிழ்ச்சி. நன்றி. என்னிடம் பற்றுக்கொண்டுள்ள நண்பர்கள், சற்றுத் தொலைவிலே நின்றுள்ளார் என்றால், பழகிடக் கூச்சம் என்பதுதான். மற்றும் பலர். கலை உலகத் தோழர்களின் கனிச்சாறுபோன்ற உரை பல உண்டு.

வழக்கறிஞர்! ஆம், தம்பி! கழகத்தில் பற்றுமிகக்கொண்டு பணியாற்றி வருகின்ற வழக்கறிஞர்கள் தஞ்சையில் மாநாடே நடத்திவிட்டார். எத்தனை எத்தனை இளைஞர்கள்! எவ்வளவு தெளிவு! கழகத்திடம் எத்தனை கனிவு! அவரெல்லாம் வருகின்றார்.

தமிழ் நாடெங்கும் சென்று கழகக் கொள்கைதனை எடுத்துரைத்து வலிவு சேர்க்கும் பேச்சாளர் இவ்வளவும் காண்கின்ற திரு இடம் நீலமேகம் நகர். ஒவ்வொருவரையும் காட்டி மகிழ விருப்பம் மிக உண்டு. நேரம் இல்லை. போதுமான தாளும் இல்லை. அவர்கள் எல்லாம் என் நெஞ்சில் இடம் பெற்றார். அவர்கள் சென்று குவித்துத் தந்திடும் கருவூலத்தைப் பெற்றுத் திகழ்பவனே நான்.

அவர்களை எல்லாம் காணவும், அவர் உரை கேட்கவும், எனக்கு உவகை ஊட்டவும், எல்லாவற்றிற்கும் மேலாக, மக்களுக்கு நல்வாழ்வு அளிக்கத்தக்க புத்தாட்சி அமைத்து நடத்திடும் ஆற்றல் பெற்றோர் நாம் என்பதனை நாட்டுக்கு எடுத்துக் காட்டவும், தம்பி! மாநில மாநாடு வந்திடப்போகின்றாய்! ஒவ்வொருவரும் தம் வாழ்வில் பெறத்தக்க ஒரு சில எழுச்சியூட்டும் நிகழ்ச்சிகளில், தலையாயது இம்மாநில மாநாட்டு நிகழ்ச்சி. அதனை எண்ணி எண்ணி நீ மகிழ்ந்திருக்கும் வேளையில், அரசியல் பற்றிக்கூட பேச விருப்பமில்லை. புறப்படு, தம்பி! புறப்படு! நாவலர் சொல்வது கேட்கிறதல்லவா, "சிறுத்தையே! வெளியே, வா!'' நான் வயது முதிர்ந்துகொண்டு போகும் நிலையினன் அல்லவா! ஆகவே அவர்போல அழைக்கவில்லை. "செந்தமிழே வா!'' என்று அழைக்கின்றேன்.

அண்ணன்,

25-12-66