அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


'சிலர்' 'பலர்'
1

ஆண்டான் - அடிமை முறை ஜனநாயகத்திற்கு முரண்!
தேர்தல் நடக்கிறது! "எல்லாம் காங்கிரசுக்குத் தெரியும்' என்ற அடிப்படையில்!
"எல்லாம் அவர் அறிவார்; நாம் ஏதும் அறியோம்' என்று பூஜித்ததன் பலன் என்ன?
"போ வெளியே; போகிறேன் வெளியே; போக்கி விடுவேன் வெளியே!'
"பிடித்து வைத்தால் பிள்ளையார்; வழித்து எழுந்தால் சாணி!

தம்பி!

"நாலுபேரைக் கலந்து பேசினீர்களா?''
"நன்றாக யோசித்துப் பார்த்தீர்களா?''
"உங்களுக்குத் தெரியாதா நல்லது கெட்டது?''
"அவருக்குத் தெரியும் எல்லாம்.''
"நமக்கு என்ன தெரியும்?''
"அவருக்குப்போய் நாம் சொல்லுவதா?''
"நாம் சொன்னாலா அவர் எடுத்துக்கொள்ளப் போகிறார்.''
"அவரிடம் போய் யார் பேச முடியும்?''
"யாரை அவர் கிட்டே சேர்ப்பார்?''
"அவரைப்போய்ப் பார்க்க முடியுமா?''
"நம்மை எல்லாம் பார்க்க அவருக்கு ஏது நேரம்?''

இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு கட்டத்தைக் காட்டுவது என்பதை விளக்கத் தேவையில்லை.

கட்டங்கள் என்பது மட்டுமல்ல, ஒவ்வொருவிதமான நிலைமை மாற்றத்தைக் காட்டுகின்றன.

ஊரிலே "பெரியவர்கள்' ஆக முனைபவருக்கும், யாராவது ஒரு பெரியவருடைய சொற்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற இயல்பு கொண்டவர்களுக்கும் இடையே ஏற்படும் "தொடர்பு' பல கட்டங்களை அடைகிறது. அந்தத் தொடர்பு, பல நிலைமை மாற்றங்களை உண்டாக்குகிறது. நல்லதுதான் சொல்லுகிறார் என்ற எண்ணமும், சொல்லுவது நல்லதற்காகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கையும் உள்ள கட்டத்தில், நல்லதுதான் சொல்லுகிறார் என்றாலும், நல்லதற்குத்தான் சொல்லுகிறார் என்ற நம்பிக்கை இருந்தாலும், நல்லது சொல்லத்தக்கவர்கள் வேறு பலர் இருப்பார்களே, அவர்களுடன் இவர் கலந்து பேசி, தான் கூறுவது நல்லதுதான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டால் மேலும் நல்லதாக இருக்குமே என்ற எண்ணத்தைக் கொண்டிருக்கும்போதுதான்,

நாலுபேரைக் கலந்து பேசினீர்களா? என்று கேட்கத் தோன்றும்.

அறிவாளிதான் - நல்லதுதான் சொல்லுவீர்கள் - ஆனால் உங்களுடைய அறிவு மட்டும் போதுமா - அறிந்தவர்கள் பலர் இருப்பார்களே, அவர்களையும் கலந்து பேசினால்தானே நல்லது - உங்களுக்கு மட்டும் "சரி' என்று தோன்றிவிட்டால் போதுமா - உங்கள் பேச்சை மட்டும் நம்பி நாங்கள் உங்கள் யோசனையை ஏற்றுக்கொள்ள முடியுமா - யோசனை கூறத்தக்கவர்கள், நல்லதா கெட்டதா என்று ஆராய்ந்து பார்த்துச் சொல்லத் தகுதி பெற்றவர்கள் பலர் இருக்கிறார்களே, அவர்களிலே நாலு பேரைக் கலந்து பேசினீர்களா என்று கேட்கும் போக்கிலேதான்.

நாலு பேரைக் கலந்து பேசினீர்களா என்று கேட்கிறார்கள்.

அதன் உட்பொருள், யோசனை கூறத்தக்க பலர் இருக் கிறார்கள். அவர்களிலே ஒருவர் நீங்கள்; உங்கள் ஒருவருடையயோசனையை மட்டும் ஏற்றுக்கொள்ளுவது முறையாக இருக்காது; மேலும் பலரும் உங்கள் யோசனையைச் சரியானது என்று ஒப்புக்கொள்கிறார்கள் என்று தெரிந்தால்தான், உங்கள் யோசனையை ஏற்றுக்கொள்ள மனம் இடம் கொடுக்கும் என்பதாகும்.

எல்லா மக்களுக்குமே, நல்லது கெட்டது புரிந்து கொள்ளத் தக்க, பொது அறிவு இருக்கத்தான் செய்கிறது; சிந்திக்கும் திறன் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், சிந்திக்கும் திறனைப் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பும், பக்குவப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பும், கூர்மையாக்கிக் கொள்ளும் வாய்ப்பும் எல்லோருக்கும் கிடைத்துவிடுவதில்லை; எல்லோருக்கும் ஒரு சீராக இருந்துவிடுவதுமில்லை.

அதனால்தான், சிலர், பலருக்கு யோசனை கூறிடும் அவசியமே எழுகிறது. அந்தச் சிலர், எல்லாம் அறிந்தவர்கள், பலர் ஏதும் அறியாதவர்கள் என்பதால் அல்ல.

அந்தச் சிலர், எதையும் சிந்தித்துப் பார்த்திடும் வாய்ப்பை அதிக அளவில் பெற்றுள்ளனர். அந்தப் பலர் அத்தகைய வாய்ப்பை, போதுமான அளவு பெற்றுக்கொள்ள முடிவதில்லை என்பதுதான் உள்ள நிலைமை.

சிந்திக்கும் திறனைப் பயன்படுத்திக் கொள்ளவும் செம்மைப்படுத்திக் கொள்ளவும், "பலர்' வாய்ப்புப் பெற முடியாமலிருப்பதற்குக் காரணம், அவர்களுக்கு அதற்கு ஏற்ற அளவு அறிவுத் தெளிவு இல்லை என்பது அல்ல, அவர்களின் வாழ்க்கை முறை அவர்களுக்கு "இக்கட்டாக' அமைந்து விடுவதுதான் காரணம்.

இந்த அடிப்படையின்மீதுதான், "ஜனநாயகம்' எழுப்பப் பட்டிருக்கிறது; சிலருக்கு "எல்லாம் தெரியும்' - பலருக்கு, "ஏதும் தெரியாது' என்ற ஆணவத்தின்மீது அல்ல.

அந்த ஆணவத்தின்மீது அமைக்கப்படுவது, சர்வாதிகாரம்.

எனக்கும் தெரியும், உனக்கும் தெரியும், முயன்றால் எல்லோருக்கும் தெரியக்கூடியதே. ஆனால் எனக்கு வேறு வேறு பிடிப்புகள், பிரச்சினைகள், இக்கட்டுகள் உள்ளன. ஆகவே நேரம் இல்லை யோசிக்க. உனக்கு அவ்விதம் இல்லை. எதுபற்றியும் சிந்தித்துப் பார்த்திடப் போதுமான வாய்ப்பு இருக்கிறது. ஆகவே உன் "யோசனை'யை நான் கேட்டுக் கொள்ளுகிறேன் என்ற முறையிலே அமையும் தொடர்புதான் ஜனநாயக முறை.

எல்லாம் அவருக்குத் தெரியும் - எனக்கு ஏதும் தெரியாது என்று ஏமாளிகள்கூட ஒப்புக்கொள்ள மாட்டார்கள்; ஆனால் சர்வாதிகாரி, எல்லாம் எனக்குத் தெரியும், மற்றவர்களுக்கு ஏதும் தெரியாது என்று கூறிட முற்படுவான்.

உனக்குத் தெரியும், யோசனை கூறத்தக்கவன்தான் நீ; ஆனால் உன் யோசனை மட்டும் போதாது. வேறு பலரையும் கலந்து பேசி, உன் யோசனையை தாங்கள் ஒப்புக்கொள்ளத் தக்கதாக ஆக்கிக் கொள் என்று கூறிடும் கட்டம், நாலு பேரைக் கலந்து பேசினீர்களா என்பது.

சொல்லுபவர்கள் - கேட்டுக் கொள்பவர்கள் என்ற இரு பிரிவு, பணம், அதிகாரம், ஜாதி போன்ற அடிப்படைமீது அமைக்கப்படாமல், கேட்டுக் கொள்பவர்களின் தெளிவான சம்மதம் பெற்று மட்டுமே சொல்லுபவர்கள் இயங்க முடியும் என்ற அடிப்படையில் அமைவதே அடிமைத்தனத்தைப் புகுத்தாத, ஒரு அன்புத் தொடர்பை உண்டாக்கி வைக்கும். அந்த அன்புத் தொடர்புதான் ஜனநாயகம்.

அந்த நிலையிலே இருந்து மாறினாலோ, அந்த நிலை மாற்றப்பட்டு விட்டாலோ, பலர், சிலரிடம் யோசனை கேட்கும்போது, வேறு நாலு பேருடன் கலந்து பேசினீர்களா என்று கேட்பதே தவறு என்றோர் எண்ணம்கொண்டு யோசனை கூறத்தக்கவர் நாங்கள்தான், அதிலே ஐயப்பாடு இல்லை! தங்களைவிட மேலான யோசனை கூறத்தக்கவர் வேறு எவரும் இருப்பதாக நாங்கள் எண்ணவில்லை. ஆனாலும் இதுபற்றித் தாங்கள் நன்றாக யோசித்துப் பார்த்தீர்களா என்று கேட்க முற்படுகின்றனர்.

இந்தக் கட்டம் பிறக்கும்போதே, ஒரு படி கீழே இறங்கிவிட்ட நிலை ஏற்பட்டுவிட்டது என்பது பொருளாகிவிடுகிறது.

இந்தக் கட்டத்தில், யோசனை கூறுபவர், சற்று உயர்ந்த இடத்திலே அமர்ந்துகொள்ளுகிறார்; கேட்டுக்கொள்பவர்கள், தமது குரலைச் சற்று தாழ்த்திக் கொள்கிறார்கள்; சிலருக்கும் பலருக்கும் இடையே ஏற்பட்டுள்ள அன்புத் தொடர்பு சிறிதளவு கெட்டுவிடுகிறது; அந்த அளவுக்கு ஜனநாயகத்தின் தூய்மையும் பாதிக்கப்பட்டுப் போய்விடுகிறது.

உங்களுக்குத் தெரியாதா நல்லது, கெட்டது என்று பேசும் கட்டம் வந்ததும், ஜனநாயகத்தின் தூய்மை மேலும் கெடுகிறது என்று கூறலாம்.

கூறப்படும் யோசனை நல்லதா? கெட்டதா? இந்த யோசனையை நாலு பேரைக் கலந்து ஆலோசித்துத்தான் கூறு கிறாரா அல்லது தாமாகவே சொல்லுகிறாரா, தீர யோசித்துச் சொல்லுகிறாரா அல்லது மனத்திலே தோன்றியதைச் சொல்லுகிறாரா என்றெல்லாம் எண்ணிப் பார்ப்பதுகூடத் தேவையில்லை, கூடாது, தவறு என்று நினைத்துக் கொண்டு, அவர் சொல்லுவதால் அது நல்லதாகத்தான் இருக்கும். ஏனெனில் அவர் நல்லது கெட்டது தெரிந்தவர் என்று ஒப்புக்கொள்ளும் பணிவு மனப்பான்மை கொண்டு விடுகின்றனர். இதன் மூலம், அந்தப் "பலர்' தாமாகவே தமது நிலையைக் கீழ்மட்டம் கொண்டு செல்கின்றனர். ஜனநாயகத்தின் அடிப்படையான அன்புத் தொடர்பு பாழ்படுத்தப்பட்டு, "தலை அசைக்கும' நிலை ஏற்பட்டு விடுகிறது.

அவருக்குத் தெரியும் எல்லாம்! என்ற பேச்சு, எதற்கும் "ஆமாம்' போடுகிறாயே, அவர் கூறிய யோசனை நல்லதாக இல்லையே, அதை ஏன் ஏற்றுக் கொள்ளுகிறாய் என்று வேறு சிலர் கூறிடும்போது, யோசனை நல்லதுதான் என்று மெய்ப்பிக்கவோ, வாதாடவோ இயலாமல், யோசனை கூறுபவரிடமே விளக்கம் பெறவோ, ஐயப்பாட்டினை நீக்கிக் கொள்ளவோ முனையாமல், அவர் கூறுவதை அப்படியே ஒப்புக்கொள்கிறேன்; புத்தியில்லாததால் அல்ல; அவருக்கு எல்லாம் தெரியும் என்று நான் நம்புவதால் என்று பேசுகின்றனர்.

எதைச் சொன்னாலும் தலை ஆட்டி விடுகிறோமே, அதைச் சிலர் இடித்துக் காட்டுகிறார்களே என்பதை உணரும்போது எழும்பும் எரிச்சலையும் கோபத்தையும் குறைத்துக்கொள்ள

எல்லாம் அவருக்குத் தெரியும் என்று கூறிடத் தோன்றுகிறது.

எல்லாம் அவருக்குத் தெரியும் என்று கூறிட முற்படும் போதே, நான் எதைப்பற்றியும் சிந்திக்க வேண்டிய அவசியமே இல்லை. ஏனெனில் எனக்காக எல்லாவற்றைப் பற்றியும் சிந்தித்து, எனக்கு எது நல்லது என்பதைக் கண்டறிந்து கூறிடும் பொறுப்பை வேறு ஒருவரிடம் ஒப்படைத்து விட்டேன், அவர் எல்லாம் தெரிந்தவர்! என்று நம்பிக்கையை அழுத்தமாகக் கொண்டு விட்டதாக ஆகிவிடுகிறது.

இந்நிலை, அடிமைத்தனத்தை விரும்பி வரவேற்பதாக ஆகிவிடுகிறது.

"ஆண்டான் - அடிமை' எனும் முறை ஜனநாயகத்துக்கு முற்றிலும் முரணானது என்பது மட்டுமல்ல, அந்தக் கேடான முறையை ஒழித்திட வந்த ஏற்பாடே ஜனநாயகமாகும்.

அதே ஜனநாயகத்தில், சிலருக்கும் - பலருக்கும் இடையில் இருக்கவேண்டிய தொடர்பு, அறிவுத் தெளிவின் பேரில் கட்டப்பட்டு அன்புத்தொடர்பாக இருக்க வேண்டும் என்பதை மறந்து போனால், ஆண்டான் - அடிமை என்பதற்குப் பதிலாக எத்தன்-ஏமாளி என்ற முறையிலே தொடர்பு திரிந்து போய்விடும்.

எல்லாம் அவருக்குத் தெரியும் என்று ஏற்றுக்கொள்ளும் போக்கு பிறந்தவுடன், சுய சிந்தனை அடியோடு மடிந்து விடுவதுடன், மற்றவர் கூறுவது சரியா அல்லவா என்று ஆராயும் கடமையும் மறைந்து, எல்லாம் தெரிந்தவரிடம் நாம் இது சரியா அது சரியா என்று கேட்பதுகூடத் தவறு. அடாத செயல் என்று எண்ணிக்கொள்ளும் அசட்டுத்தனம் ஆட்கொண்டுவிடும். அந்த நிலை பிறகு,

நமக்கு என்ன தெரியும்

என்று பேசவைக்கும்: நம்பவைத்துவிடும், தாழ்வு மனப்பான்மை தலைதூக்கும்.

தாழ்வு மனப்பான்மை நிலைத்துவிட்டாலும், "எல்லாம் தெரிந்தவர்' என்று தன்னாலே ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டவரின் யோசனையைக் கண்ணை மூடிக்கொண்டு, பயபக்தி விசுவாசத்துடன் பின்பற்றி நடந்தும், தொல்லை தொலைய வில்லை, துயரம் போகவில்லை என்றாகிவிட்டால், ஒரு கசப்பு, ஒரு ஏமாற்றம், ஒரு வேதனை மெள்ளக் கிளம்புகிறது.

அவர் சொன்னது சரியில்லைபோல இருக்கிறதே, நல்லதற்குத்தான் சொல்வார், அவர் எல்லாம் தெரிந்தவர் என்று நம்பி, எதைப்பற்றியும் நாம் யோசிக்காமல், அவர் சொல்வதைக்கேட்டு நடந்து வருகிறோம். ஆனால் பயன் நலனுள்ளதாக இல்லையோ! அவர் கூறியது சரியில்லையோ! அவர் நாலுபேர்களைக் கலந்து பேசி ஒரு முடிவுக்கு வரவில்லையோ, அவரே சரியாக யோசிக்காமல் அவசரப்பட்டு ஒரு முறையைக் கூறிவிட்டாரோ; அவர் கூறிய முறை சரியில்லை, எதிர்பார்த்த நலனைத் தரவில்லை என்பதை அவருக்குக் கூறினால் என்ன? முறையைப்பற்றி அவரிடம் விவாதித்தால் என்ன? என்று எண்ணிடத் தோன்றும்; வேதனையும் ஏமாற்றமும் தாக்கும்போது. ஆனால் "அவரிடம்' போய்க் கூறத் தைரியம் வராது. ஏன்?

அவர் எல்லாம் தெரிந்தவர்!
நமக்கு என்ன தெரியும்!

என்று நம்பிக் கூறியாகிவிட்டதே! அதனால் ஏற்பட்டுவிட்ட தாழ்வு மனப்பான்மை, தயக்கத்தைத் தந்திடும். அப்போது, தயக்கத்துடன்,

அவருக்குப் போய் நாம் சொல்வதா! என்ற பேச்சு பிறக்கிறது.

"நாம்' பார்த்து "அவர்!' நமக்காக "அவர்' என்றிருந்த நிலைமாறி, அவர், மேலானவர்; நாம் தாழ்நிலையினர்! அவர் எல்லாம் அறிந்தவர்; நாம் ஏதும் அறியாதவர்கள்; அவர் கூறுபவர், நாம், கேட்டுக் கொள்பவர்கள்; அப்படிப்பட்ட அவருக்கு' "நாம்' சொல்லுவதா! - என்று எண்ண வேண்டி வந்ததும், ஜனநாயகத்தின் சாயலையும் பாழ்படுத்திக் கொண்டாகிவிட்டது என்பது பொருளாகி விடுகிறது.

இன்னலால் தாக்குண்ட நிலையில், அவர் பெரியவராக, எல்லாம் தெரிந்தவராகவே இருக்கட்டும். ஏதோ நமக்குத் தெரிந்ததை, நமது நிலைமையை அவரிடம் போய்ச் சொன்னால் என்ன? சொல்லாவிட்டால் அவர் எப்படி நமது நிலைமையைத் தெரிந்துகொள்ள முடியும் என்று எண்ணிக்கொண்டு, மெள்ள மெள்ளத் துணிவைத் தருவித்துக்கொண்டு, "அவரிடம்' போய் தமக்குத் தோன்றியதைச் சொல்லச் சிலர் முற்படுவர்.

இதற்குள் "அவர்' எல்லாம் எனக்குத் தெரியும்! உனக்கு ஒன்றும் தெரியாது! என்று கூறத்தக்க உயரம் சென்றுவிட் டிருப்பார். கூறுவதைக் காது கொடுத்துக் கேட்கமாட்டார்; கூறுவதிலே பொருள் இருக்கிறது என்று ஒப்புக்கொள்ள மாட்டார்; கூறத் தகுதிபடைத்தவர்கள்தான் கூறுகிறார்கள் என்று ஒப்புக் கொள்ளமாட்டார்! ஒரு அலட்சியப் புன்னகையோ கை அசைவோதான் பதிலாகக் கிடைக்கும்.

அந்தக் கசப்பான அனுபவம் பெற்ற பிறகு,

அவரிடம் போய் யார் பேச முடியும்?

என்று ஏக்கப்பேச்சு புறப்படும்,

வேதனை வளர வளர, நாம் போய்ச் சொல்லுவோம், நாமாவது போய்க் கேட்போம் என்று வேறு சிலர் புறப்படுவர். "அவரை'க் கண்டு பேசவே வாய்ப்புக் கிடைக்காது; அனுமதி கிடைக்காது!

அவர் "மேலே' மட்டுமல்ல; நெருங்க முடியாத நிலையில்!! - என்று ஆகிவிடும்.

அப்போது வேதனை ததும்பிடும் நிலையில் பேசுவர்.
யாரை அவர் கிட்டே சேர்ப்பார்!
அவரைப் போய்ப் பார்க்க முடியுமா?
நம்மை எல்லாம் பார்க்க நேரம் ஏது!

என்ற விதமாக.

இதுபோல, "பலர்' பார்த்துச் "சிலர்' தமக்காக ஆட்சி நடத்தட்டும் என்று அனுமதி கொடுத்தான பிறகு; ஜனநாயகத்தின் தூய்மை கெடுக்கப்பட்டுப்போய்விட்டால், "சிலர்' ஆட்டிப் படைப்பவர்களாகவும் பலர் அனுபவித்துத் தீரவேண்டியவர் களாகவும் ஆகிவிடுவர். குடியாட்சியே கொடுங்கோலாட்சி யாகிப் போகும்.

அதுபோல ஆகிவிடக் கூடாது என்பதற்காகவே, அந்தப் "பலர்' ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையாயினும், அந்தச் "சிலர்' எல்லாம் தெரிந்தவர்கள் என்ற எண்ணத்தைக் கொஞ்சம் தளர்த்தி, நமக்காகச் சென்றவர்கள் சரியானபடி சிந்தித்து, சிந்திக்கத் தெரிந்த பலருடைய அறிவுரைகளையும் கேட்டு தமது யோசனையைச் செம்மைப்படுத்திக்கொண்டு, நமக்குப் போதுமான நலன்களை செய்தளித்துள்ளனரா என்று கணக்குப் பார்க்கும் முறை பொதுத் தேர்தல் - வகுத்தளிக்கப்பட்டிருக்கிறது.