அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


'சிலர்' 'பலர்'
2

அந்தச் சமயத்தில், "பலர்' எந்த அளவு கணக்குப் பார்க்கும் திறமையைச் செய-லே காட்டுகிறார்களோ அதைப் பொறுத்தே சிலர்' சீலர்களாக இருப்பதும் இல்லாமற்போவதும் இருக்கிறது.

எல்லாம் அவருக்குத் தெரியும்
நமக்கு என்ன தெரியும்

என்று ஜெர்மானிய மக்கள் எண்ணிக்கொண்ட கட்டம் வந்ததறிந்த இட்லர், தேர்தலையே நிறுத்திவிட்டான்!

நம் நாட்டில் தேர்தலை நிறுத்தவில்லை; நடத்துகிறார்கள்; ஆனால், எந்த அடிப்படையில் என்றால்,

எல்லாம் காங்கிரசுக்குத் தெரியும்
மற்ற யாருக்கும் எதுவும் தெரியாது

என்ற அடிப்படையில்!

இந்த அடிப்படையை ஏற்றுக்கொண்டு, தேர்தலில் ஈடுபடுவது, இருப்புப் பெட்டியைத் திறந்து அதிலிருந்து திருவோடு எடுத்துக் கொண்டு, பிச்சைக்குக் கிளம்புவது போன்ற கேலிக் கூத்தாகிப் போகும்.

காங்கிரசின் மூலவர்களின் மனப்போக்கு,

எல்லாம் எமக்குத் தெரியும்
மற்றவர்களுக்கு ஏதும் தெரியாது

என்று அடித்துப் பேசிடும் விதமாக இருக்கிறது என்பதை அக்கட்சியின் தலைவர்களின் பேச்சிலேயே தெரிந்து கொள்ளலாம்.

எந்தக் கட்சிக்கும் எந்தத் தகுதியும் கிடையாது என்பதுடன், எத்தகையவர் தம்முடன் சேர்ந்தாலும் அவர் எல்லாத் தகுதியும் பெற்றுவிடுகிறார் என்றும் கூறிடும் துணிவு தலைவிரித்தாடுகிறது.

அதுமட்டுமல்ல, தம்மோடு இல்லாதவர்களை, தகுதி யற்றவர்கள் என்று தாக்கிப் பேசிப் பேசி, அவர்களை மனம் உடையும் நிலைபெறச் செய்து, சிறிது அவர்கள் தடுமாற்றம் அடைந்ததும், "கதவு திறந்தே இருக்கிறது! வருக!' என்று அழைப்பு விடுவதும், வந்தடைந்ததும் அவர்களை இந்திரனென்றும் சந்திரனென்றும் புகழ்வதும் காண்கின்றோம்.

சுதந்திரக் கட்சி, ராஜாக்கள் கட்சி என்று கேலி பேசினர். யாரார் அந்த ராஜாக்கள் என்று விவரம் தந்தனர்! இத்தகையவர்கள் மக்களின் ஆதரவைப் பெறத் தகுதி பெற்றவர்களா என்று கேட்டனர்.

அப்படிப்பட்டவர்களிலே ஒருவர் ராம்கர் ராஜா.

அவர் இப்போது தமது படையுடன், காங்கிரஸ் கட்சியிலே சேருகிறார்.

சேர்த்துக்கொள்ளலாமா என்று ஒரு குரல் கிளம்புகிறது.

தலைவருக்கு அதிகாரம் இருக்கிறது என்ற பதில் கிடைக்கிறது.

இன்னின்ன ஆற்றல் உள்ளவர்கள் எமது கட்சியில் உள்ளனர். ஆகவே எமது கட்சிக்கே எல்லாத் தகுதியும் உண்டு, மற்ற எந்தக் கட்சிக்கும் தகுதி இல்லை என்றுகூட விளக்கம் தருவதில்லை.

எல்லாம் எமக்குத் தெரியும்

என்று ஏற்றுக்கொண்டுவிட்டீர்கள்; இனி எவனும் எம்மை எதுவும் கேட்கக்கூடாது; எவனும் எதுபற்றியும் சிந்திக்கக் கூடாது! - என்று கூறத் தலைப்பட்டு விட்டனர்.

எம்முடைய தகுதிபற்றி மட்டுமல்ல, எம்முடன் எவர் வந்து சேர்ந்திடினும் அவர்களின் தகுதி பற்றிக்கூட எவரும் ஏதும் கேட்கக் கூடாது என்று பேசுகின்றனர்.

இது ஜனநாயகம் ஆகாது! இந்நிலை வளர்ந்திடின் பிறகு, "பலர்' பார்த்துச் "சிலர்' ஆட்சி நடத்திடும் அனுமதி தருகிறார்கள் என்ற நிலையே போலியாகிப் போகும்; "சிலர்' இடத்தைப் பிடித்துக்கொண்டு, "பலர்' சிந்திக்க, உரிமை கேட்க, நல்வாழ்வு பெற வழி தராமல், ஆட்டிப்படைக்கிறார்கள் என்ற பயங்கரம் நிலைத்துப் போய்விடும்.

"சிலர்' என்று நான் குறிப்பிடுவது காங்கிரசின் பெருந்தலைவர்களை மொத்தமாகக் குறிப்பது என்றாலும், அந்தச் "சிலர்' ஒருமித்த கருத்து கொண்டவர்களுமல்ல. அவர்களிலே யாரிடம் சூத்திரக்கயிறு சிக்கிக்கொள்கிறதோ அந்தச் "சிலர்' அதே கட்சியிலுள்ள "பலர்' அடங்கி ஒடுங்கிக் கிடந்திடும் நிலைமை உண்டாக்கி விடுகின்றனர்.

காங்கிரசில் இருந்துகொண்டே, குற்றம் குறைகளை எடுத்துக்காட்டித் திருத்தலாமே, மாற்றுத் திட்டங்களைத் தந்திடலாமே, ஏன் கட்சியை விட்டு வெளியே சென்று எதிர்ப்புக் காட்டவேண்டும், எதிர்க்கட்சி ஏன் அமைக்க வேண்டும் என்று சில நேரங்களில் தேனொழுகப் பேசுகின்றனர், சூத்திரக்கயிற்றைப் பிடித்துக்கொண்டுள்ளவர்கள்.

ஆனால், காங்கிரசில் இருந்து கொண்டே, அதில் உள்ள குற்றம் குறைகளை எடுத்துக் கூறினால், மாற்றுத் திட்டங்களைத் தந்தால் அவைகளுக்குத் துளியேனும் மதிப்புத் தருகின்றனரா என்றால், இல்லை!

அவர் எப்போதும் அப்படித்தான்.
எதையாவது பேசிக் கொண்டிருப்பார்.
எதிலேயும் குறை கண்டுபிடிப்பார்.
தனக்கு நிரம்பத் தெரியும் என்று காட்டிக்கொள்ளும் போக்கு

என்றெல்லாம் "மூலவர்கள்' கேலி பேசுவர்; அலட்சியம் செய்வர்.

குற்றம் குறைகளை அதிக வன்மையாகத் தொடர்ந்து கண்டித்தபடி சிலர் இருக்கின்றனர் என்றால்,

அவர்களை ஏதாவது பதவியில் இழுத்துப் போட்டு "வாய்மூடி' ஆகிவிடும்படி செய்வதும்.

சரியான சந்தர்ப்பம் பார்த்து அவர்கள்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்துக் கட்சியிலிருந்து துரத்தி விடுவதும்,

சூத்ரதாரிகள் கையாளும் தந்திர முறைகளாகும்.

சென்ற திங்கள், நண்பர் ராஜாராமும் நானும், டில்லியில் பாராளுமன்ற கட்டிட மாடியில் அமைந்துள்ள உணவு விடுதியில் ஒரு பிரபலமான, முன்னணிக் காங்கிரஸ் தலைவரைப் பார்த்தோம்.

எனக்கு அவர்களிடம் பேசுவது அவ்வளவு எளிதாக இருப்பதில்லை; ஒரு கட்சியில் மிக முக்கியமான நிலையில் உள்ளவர்களிடம் எதையாவது பேசிடின் எரிச்சல் கொள்வார்களோ என்னவோ என்ற ஒரு எண்ணம்.

என்னைக் காட்டிலும் அதிகத் தாராளமாக அவர்களுடன் பழகுவார் நண்பர் ராஜாராம்.

அவர் அந்தக் காங்கிரஸ் தலைவரைப் பார்த்துக் கேட்டார், "என்ன 1967 தேர்தலில், சட்டசபைக்கு நிற்கப் போகிறீர்களா? அல்லது பாராளுமன்றத்துக்கா?' என்று.

அவர், ஏதோ சிந்தனையுடன். "கடைசி நேரத்தில்தான் தீர்மானிப்பேன்'' என்றார்.

விடவில்லை ராஜாராம், வெடுக்கென வேறோர் கேள்வியை எழுப்பினார். "காங்கிரசில்தானே நிற்கப் போகிறீர்கள்?'' என்று.

எனக்கு அந்தக் கேள்வி தூக்கிவாரிப் போடுவது போலிருந்தது. ஒரு பிரபலமான, பழம்பெரும் காங்கிரஸ் தலைவரைப் பார்த்து, "காங்கிரஸ் அபேட்சகராகத்தானே நிற்கப் போகிறீர் தேர்தலில்' என்று கேட்பது, அவரைக் குத்துவது போல அவமானப்படுத்துவதுபோல அல்லவா இருக்கும்; இப்படிக் கேட்டுவிட்டாரே டிலக்சில் போகப் போகிறீரா? கிராண்ட்டிரங்கில் புறப்படப்போகிறீரா? என்று ரயில் பயணம் பற்றிக் கேட்பார்களே, அப்படியா தேர்தலைப் பற்றி இத்தனை பெரிய தலைவரைக் கேட்பது; அவர் கோபித்துக் கொள்ள மாட்டாரா? என்று எண்ணிப் பதறிக் கிடந்தேன்.

நான்தான் அதுபோலப் பதறிக் கிடந்தேனே தவிர ராஜாராமின் கேள்வி அந்தக் காங்கிரஸ் தலைவருக்குத் துளியும் கோபத்தையோ எரிச்சலையோ, தந்ததாகத் தெரியவில்லை; அவர் மிக அமைதியாகச் சொன்னார், "அதுகூடப் போகப் போகத்தான் தெரியும்!'' என்று.

இவ்விதமான நிலையில் பலர் இன்று காங்கிரஸ் கட்சியில் இருக்கிறார்கள்.

அந்தப் பழைய பிடிப்பு, எழுச்சி, ஆர்வம் துளியும் கிடையாது!

ஏதோ இருக்கிறார்கள்; வேறு எங்கே போவது என்று தெரியாததால் இருக்கிறார்கள்,

அதிலே கிடைக்கும் வசதிகளை இழந்துவிட மனமின்றி இருக்கிறார்கள்.

இவ்வளவு காலம் இருந்துவிட்டோமே என்பதால் இருக்கிறார்கள். இதன் காரணமாகவே அவர்கள் உண்மையான பற்றுக் கொள்ளுவதில்லை; அதுபோலவே தங்கள் கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றனவா என்பது குறித்தும் கவலைப்படுவதில்லை.

நாம் சொல்லுவதைச் சொல்லிவைப்போம்; நடப்பது நடக்கட்டும் என்று இருந்துவிடுகிறார்கள்.

இந்த முறையிலே எடுத்துக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைக் கூடக் கேட்டுக் கொள்வதற்கான பொறுமை, காங்கிரசின் பெருந்தலைவர்களிடம் இல்லை என்பதை, இப்போது நடைபெற்ற அ.இ.கா.க. கூட்டம் எடுத்துக் காட்டிற்று.

கிருஷ்ணமேனன்
மாளவியா
பகவத்ஜா அஜாத்
தாரகேஸ்வரி சின்கா

என்போர், காங்கிரஸ் கட்சி, நாடாளும் பொறுப்பை ஏற்றுக் கொண்டு செம்மையாகச் செயல்படவில்லை என்பதுபற்றிக் கொதிப்புடன் பேசினர்.

ஆண்டு பதினெட்டு ஆகிவிட்டன; ஏழையின் வாழ்விலே ஏற்றம் இல்லை; வேதனைப் படுகுழியில் தள்ளப்பட்டிருக் கிறான்; இத்தனை காலம் பொறுத்துக்கொண்டான் இனி பொறுத்துக்கொள்ள மாட்டான்; பொங்கி எழுவான்; புரட்சி வெடித்துக் கிளம்பிடும் என்று மாளவியா கோபாவேசமாகப் பேசினார்.

கல்கத்தாவிலும் பம்பாய் பஞ்சாப் போன்ற இடங்களிலும் நடைபெற்ற கிளர்ச்சிகளைக் காங்கிரசின் மூலவர்கள், பலாத்காரம் என்றும், கலகம் என்றும், மனமுடைந்து கிடக்கும் அரசியல்வாதிகளின் வாண வேடிக்கை என்றும் கண்டித்தனர்.

அந்தச் சம்பவங்கள் புரட்சியின் பொறிகள் என்று மாளவியா கூறினார்.

ஏட்டிலே தீர்மானங்களை எழுதிவிடுகிறீர்கள் ஒய்யாரமாக! ஒன்றையாவது செயல்படுத்தி நாட்டை வாழ வைத்தீர்களா என்று இடித்துக் கேட்டார் பகவத்ஜா அஜாத்.

அமெரிக்காவிடம் கடன் வாங்கி வாங்கி நாட்டைக் குட்டிச் சுவராக்குகிறீர்கள்! இது அடாத செயல்!! - என்று கண்டித்தார் கிருஷ்ணமேனன்.

இந்தக் கண்டனங்கள், காங்கிரஸ் விரோதிகளின் பேச்சல்ல! காங்கிரஸ், தாங்கள் எதிர்பார்த்தபடியும், நாட்டுக்கு நலன் கிடைக்கிற முறையிலும் நடந்துகொள்ளவில்லையே என்று மனம் குமுறி, காங்கிரசைத் திருத்த வேண்டிய கடமை தமக்கு உண்டு என்ற மெய்யுணர்வுடன் எடுத்துக் கூறப்படுபவை. ஆனால் இவற்றினுக்குத் தரப்படும் மதிப்பு எந்த அளவு இருக்கிறது?

கேட்பாரில்லை
மதிப்பளிப்பாரில்லை

என்ற நிலை மட்டுமல்ல, மூலவர்கள் சீறியே விழுகிறார்கள்.

இந்திரா காந்தி அம்மையார் மெத்தக் கண்டிப்புடனும் கோபத்துடனும் பேசினார்களாம்.

போய்விடட்டும் வெளியே

என்றே கூறிவிட்டார்களாம். அம்மையாரின் கோபம் அத்துடன் நிற்கவில்லை.

என் தலைமையை நீங்கள் விரும்பவில்லை என்று தெரிந்தால் நான் பதவியில் ஒட்டிக் கொண்டிருக்க மாட்டேன், வெளியே போய் விடுவேன்.

என்றே பேசிவிட்டிருக்கிறார்கள்.

எல்லாம் அவர் அறிவார்! என்ற "பஜனை' எந்த நிலைமையை உண்டாக்கிவிட்டது என்பது தெரிகிறதல்லவா!

போ! வெளியே!!
போகிறேன் வெளியே!!

என்ற ஆத்திரப் பேச்சு கிளம்பிடக் காண்கிறோம்.

இது சரியா?
இது முறையா?

என்ற கேள்வி, உள்ளிருந்து எழுப்பப்பட்டதும்.

பகவத்ஜா அஜாத் காங்கிரஸ் மூலவர்கள், சொல் வேறு செயல் வேறு என்ற விதமாக இருந்து வருகிறார்கள் என்று கேசெய்து பேசியதைப் பார்வையாளர்கள் மிகவும் சுவைத்துக் கேட்டுக் கொண்டிருந்தனராம்.

இதுகண்ட மூலவர்களின் "குடிபடை'யினரில் ஒருவர், இப்படி எல்லாம் பேசலாமா? என்று குரல் எழுப்பினாராம். உடனே பலருடைய குரல், பேசட்டும்! பேசட்டும்! பகவத்ஜா பேசட்டும்! அவர் பேச்சை நாங்கள் கேட்க விரும்புகிறோம்!! என்று எழும்பிற்றாம். ஒரே மகிழ்ச்சி ஆரவாரம்.

இதைக் கண்ட காமராஜர் கடுங்கோபங் கொண்டு இப்படி ஆரவாரம் செய்தால், உங்களை இந்த இடத்தை விட்டு வெளியேற்றிவிடுவேன் என்றாராம்,

எல்லாம் அவர் அறிவார்! நாம் ஏதும் அறிவோம்!! - என்று பலகாலும் கூறிக் கூறி மூலவர்களைப் பூஜித்ததன் பலன், மனக்குறையை ஒரு சிறு அளவு எடுத்துக் கூறினாலும்,

போ! வெளியே!
போய்விடுவேன் வெளியே?!
வெளியே துரத்திவிடுவேன்!

என்ற முறையிலே மூலவர்களைப் பேசவைக்கிறது.

என்ன சொல்லுகிறார்கள் என்று யோசிப்பதில்லை மூலவர்கள். ஏன் இப்படிக் குறைகூறிப் பேசுகிறார்கள்? எதை எதிர்பார்த்து? என்ன ஏமாற்றம்? என்ன கேட்டார்கள், எதை நாம் கொடுக்கவில்லை? என்ற முறையிலேதான் எண்ணுகிறார்கள். ஏதாவது பதவி கொடுத்தால் பசி அடங்கிவிடும்; பசி அடங்கிவிட்டால் படுத்துறங்கப் போவார்கள்; பரபரப்பு, பதைப்பு, கொதிப்பு, கோபம் எதுவும் இருக்காது என்று எண்ணுகின்றனர். அதற்கு ஏற்றபடி செயல்படுகின்றனர். ஆகவே அத்தகைய எதிர்ப்பு, வலிவற்றதாகிப் போகிறது. மெள்ள மெள்ளக் குரல் மங்கிப்போகிறது!

நமக்கென்ன ஏதோ நடக்கட்டும்
நாம் இருக்க முடிகிறவரையில் இருப்போம்.

என்ற மனப்போக்கு வளர்ந்து விடுகிறது. எத்தனை காலம் காங்கிரசிலே இருப்பாயோ, எப்போது வெளியேற்றி விடுவார்களோ என்ற எண்ணம் மனத்திலே குடைந்தபடி இருக்கிறது.

அந்த நிலையின் காரணமாகத்தான், நீங்கள் அடுத்த முறை காங்கிரசில்தானே தேர்தலில் நிற்கப் போறீர்கள் என்று ராஜாராம் கேட்டதற்கு அந்தக் காங்கிரஸ் தலைவர்.

போகப்போகத் தெரியும்!

என்று பதில் அளித்தார்; இவ்வளவு நிலையற்ற வாழ்க்கை!

ஆனால் தம்பி! எனக்கும் தெரியும்! என்ற நம்பிக்கை கொண்டவர்களுக்காகத்தான் ஜனநாயக முறை வகுக்கப்பட்ட தேயன்றி, எனக்கு என்ன தெரியும்! என்ற இழுப்புப் பேச்சுக்காரர்களுக்காக அல்ல.

"பலர்' - என்றென்றும் ஒதுங்கி ஒடுங்கிக் கிடப்பார்கள் என்று எண்ணிக்கொண்டுதான் காங்கிரசின் பெருந் தலைவர்கள் "தர்பார்' நடத்துகின்றனர்; உலா வருகின்றனர்.

ஆனால் நாட்டு மக்களோ அந்தப் பெருந் தலைவர்கள் கருதிக் கொண்டிருப்பதுபோல இல்லை.

"பலர்' அனுமதித்தால்தான் "சிலர்'

என்ற பேருண்மையைத் தெளிவாகத் தெரிந்து கொண்டுள்ளனர்.

எமக்கும் தெரியும் என்று எடுத்துக் கூற முன் வந்துவிட்டனர்.

எம்மைப்போல இருந்தவர் தாமய்யா நீவிர்! எங்கிருந்தோ வந்துதித்த அற்புதங்கள் அல்ல!! என்று கூறத் துணிந்துவிட்டனர்.

கொச்சையாகக் கூறுவதானால் தம்பி! பொதுமக்கள் இன்று, எல்லாம் எமக்குத் தெரியும்! மற்ற எவருக்கும் எதுவும் தெரியாது! என்று இறுமாந்து பேசுபவர்களைப்பற்றி

பிடித்து வைத்தால் பிள்ளையார்!
வழித்தெடுத்தால் சாணி!

என்ற முறையிலேதான் கருதுகிறார்கள்.

இலக்கிய நடையில் இது கூறப்பட வேண்டுமா, தம்பி! பிடித்தால் கற்றை விட்டால் கூளம்!

என்று "மனோன்மணியம்' தெரிவித்திருப்பதைத் தருகிறேன்.

"பலர்', "சிலர்' - ஆகியோருக்கு இடையே உள்ள தொடர்பு ஆண்டான் - அடிமை என்பது அல்ல அது அன்புத் தொடர்பு - அறிவுத் தெளிவின் பேரில் கட்டப்பட்ட தொடர்பு என்பதை, இன்று ஆளப் பிறந்தவர்கள்தாமே என்ற அளவு ஆணவம் பிடித்து அலைவோர் உணர்ந்திடத் தக்கவிதமாக, 1967 அமைய வேண்டும்.

அந்த தூய பணிக்காகத் தொண்டாற்றுகிறோம் என்ற உணர்வு, தம்பி! உன் ஆற்றலைப் பன்மடங்காக்கும். உன் வெற்றியிலே ஜனநாயகத்தின் எதிர்காலமே அடங்கியிருக்கிறது.

அண்ணன்,

29-5-66