அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


சிங்கத்தை அடக்கினேன்!
1

தடுத்தது யார்? துடிப்பது ஏன்?
ஆடுகளுக்கு ஓநாய் இரத்ததானம் தரப் போகிறதாம்!
ஏழையின் பெருமூச்சு பேச்சைவிட வலிவு மிக்கது!
முதலாளிகளிடம் காங்கிரஸ் சிக்கிக்கொண்டது!
சோஷியலிசம் பேசலாம், செயல்படுத்த முடியாது!

தம்பி!

இப்படி ஒரு உரையாடல் உன் செவியில் விழுந்தால் என்ன எண்ணிக்கொள்வாய்?

ஒரு குரல்:- நான் சிங்கத்தின்மீது சவாரி செய்தேன்.

மற்றோர் குரல்:- நான் யானைமீது உட்கார்ந்தேன்.

வேறோர் குரல்:- ஜோரான குதிரைமீது நான் உட்கார்ந்து கொண்டேன்.

இன்னோர் குரல்:- நான் அன்னப்பட்சிமீது உட்கார்ந் திருந்தேன்.

மற்றோர் குரல்:- அழகான மயில்மீது நான் உட்கார்ந்து கொண்டேன்.

இவ்விதமாகக்கூட ஒரு உரையாடல் நடைபெற்றிருக்க முடியுமா? கற்பனை இருக்கவேண்டியதுதான். ஆனால் இப்படியா சிங்கத்தின்மீது அமர்ந்தேன், யானைமீது அமர்ந்தேன் - என்று ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும் நிலைமை எங்கே இருக்க முடியும்? - என்று கேட்கத் தோன்றும்.

இப்படி ஒரு உரையாடல், நடைபெற்றிருக்கவே முடியாது என்று அடித்துப் பேசிவிடாதே தம்பி! நன்றாக யோசித்துப் பார்த்துச் சொல்லு. இவ்விதமான பேச்சு உன் காதில் விழுந்தால், என்ன எண்ணிக்கொள்வாய்? யார் இப்படிப் பேசியிருக்க முடியும்? எந்த இடத்தில் இவ்விதமான பேச்சு இருந்திருக்க முடியும்? விளங்கவில்லையா? சரி! நானே கவனப்படுத்துகிறேன்.

திருவிழா பேரூரில். உள்ளூர் வெளியூர் கூட்டம் நிரம்ப. மகிழ்ச்சி ஆரவாரம்! கடைகள் அலங்காரமாக! களியாட்டம்! கரக ஆட்டம்! மயிலாட்டம்! ஒயிலாட்டம்! சிறுவர் சிறுமியர் ஓடி ஆடி விளையாடுகிறார்கள்! இங்கு ஒரு பக்கத்தில் குடை ராட்டினம் - (சில இடங்களிலே ரங்கராட்டினம் என்பார்கள்) அமைத்திருக்கிறான் ஒருவன், சிறார்களுக்காக. குடைராட்டினம் தெரியுமல்லவா? சிங்கம், புலி, யானை, குதிரை, அன்னம், மயில், மாடு, ஆடு, கட்டில், தொட்டில், சோபா இப்படி மரத்தால் செய்யப்பட்டு வண்ணம் தீட்டப்பட்ட பொம்மைகள் தொங்க விடப்பட்டிருக்கும். காசு கொடுத்துவிட்டு அவரவர் தத்தமக்கு விருப்பமானதன்மீது உட்கார்ந்துகொள்ளலாம். கீழே நின்றபடி, குடைராட்டினக்காரன், அவைகள் சுற்றுவதற்காக அமைக்கப் பட்டுள்ள விசையைத் திருப்பிவிடுவான். உடனே ரங்கராட்டினம் சுழலும் வேகமாக. வேடிக்கையாக சிங்கத்தின்மீது சவாரி செய்வதுபோல, யானைமீது ஏறி ஓட்டுவதுபோல, சிறார்களுக்கு ஒரு மகிழ்ச்சி, குடைராட்டினம் சுற்றச் சுற்ற, சிறார்களுக்குத் தாங்கள் ஏறி உட்கார்ந்துகொண்டிருக்கும் சிங்கம், புலி, யானை, குதிரை ஆகியவைகளைத் தாமே வேகமாக ஓட்டிக்கொண்டு போவதாக ஒரு நினைப்பு. அதிலே ஒரு மகிழ்ச்சி, ஒரு ஆரவாரம்.

அந்த மகிழ்ச்சி ஆரவாரத்தின் விளைவாக சிறுவர் களுக்கிடையே எழும் உரையாடல்தான், நான் முதலில் குறிப்பிட்டிருந்தது.

இப்போது மறுபடியும் துவக்கத்தைப் படித்துப் பார், தம்பி! இவ்விதமான உரையாடல் நடைபெற்றிருக்கவா முடியாது? சொல்லு. இவ்விதமான உரையாடல் உன் காதிலே விழுந்ததும் என்ன தோன்றும்? சிறுவர்கள் மகிழ்ச்சியால் பேசுகிறார்கள்! - என்று தோன்றுமே தவிர, ஏ! அப்பா! எத்தனைப் பெரிய வீரனாக இருக்க வேண்டும் சிங்கத்தின்மீது சவாரி செய்தவன்!! என்று வியந்து, அவன் எதிரே அஞ்சி நின்றிட வேண்டும் என்றா தோன்றும்? குழந்தைகள் பேசுகின்றன! குடைராட்டினத்திலே உட்கார்ந்து மகிழ்ச்சி பெற்றதால் பேசுகிறார்கள்! - என்றுதான் எண்ணிடத் தோன்றும்.

சிறார்கள் மகிழ்ச்சி காரணமாக இதுபோலப் பேசுவதைக் கேட்கும்போது, நமக்கேகூட இனிப்பாக இருக்கும்.

போயும் போயும் உனக்கு ஆடுதானா கிடைத்தது? ஏன் யானை கிடைக்கவில்லையா? என்று கேட்டு மகிழ்வோம்.

ஏ! பயலே! நீ பெரிய போக்கிரியடா! கொஞ்சம்கூடப் பயப்படாமல், அவ்வளவு பெரிய யானைமீது உட்கார்ந்து கொண்டாயே!! என்று கேட்டுக்கொண்டே கன்னத்தைக் கிள்ளிவிடுவோம்.

கேட்டாயா சேதி! நம்ம மகனை என்னமோ மட்டமாகக் கணக்குப் போட்டாயே! தெரியுமா விஷயம்? சிங்கத்தையே அடக்கி, அதன்மீது ஏறி உட்கார்ந்து, பிடரியைப் பிடித்து உலுக்கி எடுத்துவிட்டான் நம்ம மகன்! என்று பெருமிதத்துடன் கூறி மகிழ்வோரும் உண்டு!

ஆனால், சிறார்கள் அல்ல, பெரியவர்கள் - மிகப் பெரியவர்கள் - குடைராட்டினத்துப் பொம்மைகளின்மீது உட்கார்ந்து சுற்றிவிட்டு, உண்மையாகவே சிங்கத்தையும் யானையையும் அடக்கிய மாவீரர்போலப் பேசிடக் கேட்டால் எப்படி இருக்கும்? தாங்கிக்கொள்ள முடியாத எரிச்சலைத்தானே மூட்டிவிடும்?

எவனும் என்னைக் கவிழ்க்க முடியாது!
யாருக்கும் நான் பயப்படமாட்டேன்!
எல்லாப் பணக்காரர்களையும் ஒழித்துக் கட்டிவிடப் போகிறேன்!

இவ்விதம் காமராஜர் பேசுகிறார். குடைராட்டினத்தில் ஏறி, வேடிக்கை பெற்ற குழந்தைப் பருவத்தினரா இவர்? இவரா இப்படி, சிங்க பொம்மைமீது உட்கார்ந்து நான் சிங்கத்தின்மீது சவாரி செய்தேன் என்று குதூகலமாகக் கூவிடும் குழந்தைபோல, பணக்காரர்கள் அமைத்துக் கொடுத்திருக்கும் குடைராட்டினம் போன்ற செல்வாக்கின்மீது அமர்ந்து சுற்றிக்கொண்டு, நான் பணக்காரர்களை ஒழித்துக் கட்டுவேன், ஒருவருக்கும் பயப்பட மாட்டேன் என்று வீராவேசப் பேச்சுப் பேசுவது? ஆனால் பேசு கிறார்! அந்தப் பேச்சு கேட்டு, நாடே, தமது வீர தீரத்தை வியந்து பாராட்டும் என்று வேறு எதிர்பார்க்கிறார்! நாட்டு மக்களை ஏமாளிகள் என்றே தீர்மானித்துவிட்டார்போல இருக்கிறது.

நான் எப்படியும் சோஷியலிசத்தை நடத்தி வெற்றி காணத்தான் போகிறேன்! யாரும் தடுக்க முடியாது! - என்கிறார்.

யாரய்யா பெரியவரே! சோஷியலிசத்தைத் தாங்கள் கொண்டு வருவதைத் தடுக்கிறார்கள்? என்று கேட்டால், எல்லோருந்தான்! கம்யூனிஸ்டு கட்சிகள், பிரஜா - சோஷியலிஸ்டு கட்சி, தி. மு. க., தமிழரசுக் கழகம், சுதந்திரா கட்சி எல்லாமேதான், நான் சோஷியலிசத்தைக் கொண்டு வருவதைத் தடுக்கப் பார்க்கின்றன, கெடுக்கப் பார்க்கின்றன! - என்று இடி முழக்கம் செய்கிறார்.

இந்த நாட்டிலே உள்ள எல்லாக் கட்சிகளுமே, சோஷியலிசத்தை இவர் கொண்டு வருவதைத் தடுக்கின் றனவாம், எதிர்க்கின்றனவாம். இவருடைய கட்சியில் உள்ள முதலாளிகள் தவிர, மற்ற எல்லோரும் சோஷியலிச விரோதிகளாம்!!

தம்பி! குடைராட்டினம் ஏறி மகிழ்ந்திடும் குழந்தைகள்கூட இப்படி ஒரு வேடிக்கை காட்ட முடியாது! அவ்வளவு வேடிக்கை காட்ட இந்த அகில இந்தியா! தம்மைச் சுற்றிலும், பகைவர்கள் நிற்பதுபோலவும், தமது வீர தீரத்தால் மட்டுமே அந்தப் பகையை வீழ்த்தி, சோஷியலிசத்தை வெற்றி பெறச் செய்ய முடியும் என்பது போலவும் பேசிக்கொண்டிருக்கிறார்; அவருடைய பேச்சைக் கேட்டு, அகமகிழ்கிறார்கள். காந்தியார் காட்டிய வழி நடந்த தொண்டர்கள், தியாகிகள் அல்ல, பிரிட்டிஷ் அடக்கு முறைக்கு ஆளான வீரர்கள் அல்ல; சோஷியலிசம் மலர்ந்திடின், புதுவாழ்வு பெறக்கூடிய ஏழை எளியோர் அல்ல; சோஷியலிசம் எனும் திட்டத்தை நிறைவேற்றி வைக்க எதனையும் இழந்திடவும், எவ்வளவு இன்னலையும் தாங்கிக்கொள்ளவும் தயாராக உள்ள இலட்சியவாதிகள் அல்ல. யார் மகிழ்கிறார்கள் தெரியுமா?

வாண்டையார்
வடபாதிமங்கலத்தார்
வாண்டையார்
வடபாதிமங்கலத்தார்
நெடும்பலத்தார்
குன்னியூரார்
மூப்பனார்
மன்றாடியார்
மகாலிங்க ஏழையார்
பேட்டையார்
பெரும்பண்ணையார்
செய்யூரார்
வலிவலத்தார்
இலஞ்சியார்
ராமநாதபுரத்தார்
செட்டிநாட்டார்
சிவகெங்கைச் சீமையார்
மோட்டார் மன்னர்
சிமிட்டிச் சீமான்
இரும்புக் கோமான்
அலுமினிய அதிபர்
ஆலை ஆள்வோர்

இவர்களெல்லாம் தம்பி! ஆனந்தத் தாண்டவமாடுகிறார்கள். ஈடு எதிர்ப்பற்ற எமது மாபெருந் தலைவர், பணக்கார ஆதிக்கத்தை அழித்து ஒழித்து, சோஷியலிசத்தைக் கொண்டுவரப் போகிறார்! யார் தடுத்தாலும், அஞ்சமாட்டார்! எவர் எதிர்த்திடினும் முறியடித்தே தீருவார்! சோஷியலிசம் வெற்றிபெற்றே தீரும்! எமது மாபெரும் தலைவர், எமது உள்ளம் குளிர்ந்திட, உவகை பெருகிட, சோஷியலிசம் கொண்டுவரப் போகிறார்! கம்யூனிஸ்டுகளே, உமது எதிர்ப்பு எமக்குக் கடுகு! சுதந்திராக்களே, உமது எதிர்ப்பைச் சுட்டுப் பொசுக்கிச் சூரணமாக்கிப் போடுவோம்! ஏ! தீனாமூனாக்களே! தீர்த்துக்கட்டிவிடுகிறோம் உங்களை! சோஷியலிஸ்டுகளே! உங்களை ஒழித்துக்கட்டப் போகிறோம் என்றெல்லாம் பாடுகிறார்களாம்; ஆனந்த நடனம் ஆடுகிறார்களாம்; எப்போது வரும் இந்த சோஷியலிசம்! கண் குளிரக் காண வேண்டும் - என்று வழிமேலே விழி வைத்துக் காத்துக்கொண்டிருக்கிறார்களாம்; நம்பச் சொல்லுகிறார் காமராஜப் பெரியவர்.

மதப் புரட்டுகளை ஒழிக்கப் போகிறேன் என்று ரஸ்புடீன் சொன்னதில்லை.

கொடுங்கோலாட்சியை வீழ்த்தப் போகிறேன் என்று ஜார் சொன்னதில்லை.

எதேச்சதிகாரத்தை அழித்திடப் போகிறேன் என்று பிரஞ்சு நாட்டு மன்னன் லூயி சொன்னதில்லை.

ஆனால், காங்கிரசிலே உள்ள முதலாளிகள், சோஷியலிசத்தைக் கொண்டுவரப் போகிறோம், சோஷியலிசத்தைக் கொண்டுவரச் சொல்லி, எமது தலைவர் காமராஜரை வற்புறுத்திக்கொண்டு வருகிறோம், அவர் சோஷியலிசம் கொண்டுவர அரும்பாடுபடுவதற்கு நாங்கள் துணையாக நிற்கிறோம், அவருடைய துணைகொண்டு சோஷியலிசத்தைக் கொண்டு வந்தே தீருவோம் - என்று சொல்லுகிறார்களாம். நம்பச் சொல்லுகிறார்கள், காங்கிரஸ் கூடாரத்தில் நாவாணிபம் நடாத்திடும் நல்லோர்கள்!!

இரத்த சோகை நோயால் பீடிக்கப்பட்டுள்ள ஆடுகளுக்கு, ஓநாய் "இரத்த தானம்' தரப் போகிறதாம்! டாக்டர் காமராஜர் இரத்தம் எடுத்து, ஆடுகளுக்குச் செலுத்தப் போகிறாராம்! நம்பச் சொல்லுகிறார்கள், நாட்டு மக்கள் எதைச் சொன்னாலும் கேட்டுக் கொள்ளுவார்கள் என்று ஒரு தவறான கணக்குப் போட்டுக் கொண்டு.

நிலமில்லாத உழவன்
நிம்மதியில்லாத பாட்டாளி
மாடாய் உழைக்கும் தொழிலாளி
வறண்ட தலையினன்
இருண்ட கண்ணினன்
இல்லையே! இல்லையே! என்று ஏங்குபவன்
கொண்டு போய்விடு கடவுளே என்று இறைஞ்சுபவன்
குளம் தேடுபவன்! மரக்கிளை நாடுபவன்!
குமுறிக் கிடப்பவன்! குற்றுயிரான்!

தம்பி! இவர்களெல்லாம்கூடப் பெற முடியாத ஆனந்தத்தை ஊரை அடித்து உலையிலே போட்டிடும் உத்தமர்கள், ஒன்றை ஒன்பதிற்கு விற்றுக் கொள்ளை இலாபம் அடித்திடும் குணாளர்கள், இருப்பை மறைப்போர், இருப்பதை மறைப்போர், இலாபத்தை மறைப்போர் போன்ற திருவாளர்கள் பெறுகின்றனராம், சோஷியலிசத்தை எப்படியும் கொண்டு வந்தே தீருவேன், எந்த எதிர்ப்புக்கும் அஞ்சமாட்டேன் என்று காமராஜர் கூறுவது கேட்டு நம்பச் சொல்லுகிறார்கள்!

இவர்களை உடன் வைத்துக்கொண்டுதான் காமராஜர் பேசுகிறார், நான் பணக்காரர்களை ஒழித்துக் கட்டுவேன் என்று!

இவருக்குச் சீடர்களாக நின்றுகொண்டுதான், இந்த முதலாளிமார்கள் கூறுகிறார்கள் எம்மை ஒழித்திட வந்த தலைவனே வாழ்க!! எமக்கு முடிவுகட்ட வந்திருக்கும் முதல்வனே வாழ்க! வாழ்க! - என்று. நம்பச் சொல்லு கிறார்கள், தம்பி! எதனையும் ஆய்ந்தறியும் திறனை இயல்பாகவே பெற்றுள்ள தமிழர்களைக்கூட!!

சோஷியலிசம் வெற்றி பெற்றால். . .! என்று கூறிவிட்டு, காங்கிரஸ் பேச்சாளர் - காங்கிரஸ்காரர் அல்ல - பேச்சாளர்! கண்களை மூடுகிறார். அவர் மனக்கண் முன் தோன்றிடும் காட்சிகளை எடுத்துக் காட்டுகிறார்.

மாளிகையிலே சிலர்
மண் குடிசையிலே பலர்!
அரண்மனைகளிலே சிலர்
ஆலமரத்தடியில் பலர்!
செல்வத்தில் புரண்டபடி சிலர்
செல்லரித்த வாழ்வினர் பலர்!

இந்த நிலைமை இருந்திடாது! எல்லோரும் இன்புற்று வாழ்ந்திடலாம்! எங்கும் இன்பம், எவருக்கும் புதுவாழ்வு, நல்வாழ்வு, முழு வாழ்வு!!

இன்று பார்க்கிறோமே, அதோ கோடீஸ்வரர், கப்பல் வியாபாரத்தில் சம்பாதித்தவர்! இதோ பல இலட்சங்களுக்கு அதிகாரி, பல ஆலைகள் நடத்திப் பணம் திரட்டியவர்! அதோ சீமான், வாணிபத்தில் கிடைத்த இலாபம் பெற்றவர்!! பொருளாதாரத் துறையில் இதுபோல "ஏகபோக மிராசு' பாத்யதை பெற்றிருப்பவர்களெல்லாம் இருக்க முடியுமா?

இருக்கவிடப் போவதில்லை! இருக்கவிடமாட்டார் எமது தலைவர்! என்று வீரம் சொட்டச் சொட்டப் பேசுவர். ஆனால் இதனை ஒரு குறும்புப் புன்னகையுடன் யாரார் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்?