அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


சிங்கத்தை அடக்கினேன்!
2

பெரிய நிலச்சுவான்தாரர்கள்
மாஜி - மன்னர்கள்
பல கம்பெனிகளின் அதிபர்கள்

என்ன எண்ணிக்கொண்டு, இவர்கள் காமராஜர் பேசுவதையும் அவருக்கு "லா-' பாடிடுவோர் பேசுவதையும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்?

துவக்கத்திலே நான் காட்டினேனே உரையாடல், நான் சிங்கத்தின்மீது சவாரி செய்தேன், நான் யானைமீது சவாரி செய்தேன், நான் குதிரையை ஓட்டிச் சென்றேன் என்று குடைராட்டின வேடிக்கை பெற்ற குழந்தைகள் பேசிக்கொள்வதாக, அந்தப் பேச்சு போன்றது, காமராஜரும் அவருடைய புகழ்பாடிகளும் பேசுவது என்றுதான் எண்ணிக்கொள்வார்கள்.

சிறார்களின் பேச்சு எப்படி சிந்துபோல இனிக்கிறதோ, பெற்றோர்களுக்கு, அதுபோல காமராஜர் கூட்டத்தாரின் பேச்சு இனிக்கிறது அவர்களை ஊட்டி வளர்த்திடும் முதலாளிமார்களுக்கு.

ஆகவே அவர்கள் அத்தகைய பேச்சைக் கேட்டு வேடிக்கை பெறுகிறார்கள். மேலும் பேசச் சொல்லி உற்சாகப்படுத்துகிறார்கள்!

உள்ளபடி சோஷியலிசத்தைக் கண்டிடும் நடவடிக்கையிலே ஈடுபட்டாலோ, பெரிய புள்ளிகளின் இலாபவேட்டைக்குக் குந்தகம் விளைவிக்கும் செயலில் இறங்கினாலோ, இந்த "இலாப வேட்டைக்காரர்கள்' இப்படியா மகிழ்ச்சி தெரிவித்துக்கொண்டிருப்பார்கள்?

பேதையும் அவ்விதம் கூறிட மாட்டானே!

சிறார்களின் பேச்சுக் கேட்டு மகிழ்ந்திடும் பெற்றோர்போல, சோஷியலிசம் பேசும் காங்கிரஸ் தலைவர்களிடம் முதலாளிகள் நடந்துகொள்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம்,

காங்கிரஸ் பேசிடும் சோஷியலிசம் வெறும் பேச்சு என்பதை அவர்கள் உணர்ந்திருப்பதனால்தான்.

காங்கிரஸ், சோஷியலிசத்தைப் பேசிக்கொண்டே முதலாளிகள் மேலும் மேலும் பணம் திரட்டிக்கொள்ள வழி செய்து கொடுக்கிறது, துணை நிற்கிறது என்பதனை முதலாளிகள் அறிந்திருப்பதனால்தான்.

அதே முதலாளிகள், காங்கிரஸ் தலைவர்களின் பேச்சு, பேச்சோடு நிற்கப்போவதில்லை. செய-லே அவர்கள் ஈடுபடப் போகிறார்கள், முதலாளிகளின் ஆதிக்கத்தை முறியடிக்கப் போகிறார்கள் என்று தெரிந்துகொண்டால், இன்று காட்டுகின்ற கனிவா காட்டுவார்கள்? இன்று அவர்கள் காங்கிரசிடம் கனிவு காட்டுவது மட்டுமல்ல, சோஷியலிசத்துவத்திடமேகூட அல்லவா கனிவு காட்டுகிறார்கள்!! வேங்கை சைவத்தின் மேன்மை பற்றி உருகிப் பேசுவதுபோல அல்லவா, இந்த முதலாளிகள், சோஷியலிசம் கொண்டுவரப் போவதாகக் கூறும் காங்கிரஸ் கட்சியின் மேன்மைபற்றி உருக்கத்துடன் பேசுகின்றனர்.

ஏழ்மையும் அதன் விளைவாக அறியாமையும் இந்த நாட்டிலே எவ்வளவு அழுத்தமாகக் கப்பிக்கொண்டிருப்பினும், வெகு எளிதாக மன மயக்கம் கொண்டுவிடக்கூடிய நிலையிலே பெரும்பாலான மக்கள் இருந்திடினும், இவ்வளவு பச்சையான புரட்டுப் பேச்சை, இவ்வளவு வெளிப்படையாகத் தெரிகிற முரண்பாடுள்ள போக்கை மக்கள் நம்பிடப்போவதில்லை. முதலாளிகள் கூடி, சோஷியலிச விழா நடாத்தி, காமராஜர் சோஷியலிசச் சிற்பி என்று பேச்சாளர்களை விட்டு பொழியச் செய்து மகிழ்வதைக் காணும்போது, என்ன நேர்த்தியான நாடகம் நடத்துகிறார்கள்! என்று எண்ணாமலிருக்க முடியுமா?

கடன் கொடுத்து, தவறான கணக்குக் காட்டி, நிலபுலத்தைக் கைப்பற்றிக்கொண்டவன்.

விளைந்தது அவ்வளவையும் அறுத்தெடுத்துக் குவித்ததும், களஞ்சியத்திலே கொண்டுபோய்ச் சேர்த்துக் கொண்டு காலம் முன்போல இல்லை! கலம் நெல் கூலியாகத் தருவதற்கு இல்லை! - என்று பேசி, உழைத்தவன் வயிற்றில் அடித்திடும் உத்தமன்.

கள்ளச் சந்தையில் திரட்டிய பணத்தைத் தங்கக் கட்டிகளாகவும், மின்னும் வைரங்களாகவும் மாற்றிப் பதுக்கி வைத்துக்கொண்ட பரந்தாமன்.

இவர்களெல்லாம் கூடி, காங்கிரசை சோஷியலிசம் பேசச் சொல்லிக் கேட்டு மகிழ்கிறார்கள் என்பதனைப் புரிந்து கொள்ளவா, ஏழை எளியோர்களால் முடியாது? அவர்கள் அச்சம் காரணமாகப் பேசுவதில்லை. பேசினால் ஏடு கொள்ளாது! நாடாள்வோர் தாங்கிக்கொள்ளமாட்டார்கள்! வேடிக்கையா காட்டுகிறீர்கள் வேடிக்கை! வேதனையிலே எங்களைத் தள்ளிவிட்டவர்கள் நீங்கள்! எமது உழைப்பின் பலன் எமக்கு வந்திருந்தால் நாங்கள் ஏன் இப்படி உழல்கிறோம்? அந்தப் பலனை அபகரித்துக்கொண்டு, சீமானாகி கனவானாகி, இப்போது எங்களையே பார்த்து ஐயோ! பாவம்! துரும்பாக இளைத்துவிட்டாயே! பால் தருகிறேன் குடி! பழம் தருகிறேன் சாப்பிடு! - என்றா பசப்புப் பேச்சுப் பேசுகிறீர்கள் - என்றெல்லாம் கொதித்துக் கூறுவான். ஆனால் அவனை, அவனுடைய ஏழ்மை மனத்தில் பட்டதைச் சொல்ல முடியாதபடி தடுக்கிறது.

ஏழை ஏதும் பேசாது இருப்பதையே அவன் தன் ஒப்புதலைத் தந்துவிட்டான் என்று காங்கிரஸ் தலைவர்கள் கருதிக்கொள்கிறார்கள்.

ஏழை பேசவில்லை! பெருமூச்செறிகிறான்! அந்தப் பெருமூச்சு பேச்சைவிட வலிவு மிக்கது.

பெருமூச்சு வளர்ந்து வளர்ந்தே, புரட்சியாக வடிவம் கொண்டிருக்கிறது பல்வேறு நாடுகளில்.

ஏழையை ஏய்த்துவிட்டோம், மயக்கிவிட்டோம் என்ற எண்ணத்துடன் முதலாளிகள் முகத்திலே புன்னகையும், அக்ரமம் நடக்கிறது, அதனைத் தடுக்க முடியவில்லை, அக்ரமம் நடக்கிறது என்று வெளியே பேசவும் முடியவில்லையே என்று குமுறி ஏழையிடமிருந்து கிளம்பிடும் பெருமூச்சும் - இன்று காண்கின்றோம். தம்பி! நெருக்கடி மிக்க கட்டம் என்பதனைத்தான் இந்த நிலை எடுத்துக் காட்டுகிறது.

நிலை இது போலிருக்க, "அகில இந்தியா' மார்தட்டுகிறார். என்னை யாரும் கவிழ்க்க முடியாது. நான் யாருக்கும் அஞ்சப்போவதில்லை, சோஷியலிசம் ஏற்பட்டே தீரும் என்றெல்லாம் பேசுகிறார்.

வேடிக்கையான பேச்சு! குழந்தை வீரத்தைப் பொழிந்து தள்ளுகிறது!! என்று பெற்றோர் குழந்தையைத் தட்டிக் கொடுப்பதைப்போல காமராஜரைத் தட்டிக் கொடுக்கிறார்கள், பேசு! பேசு! நன்றாகப் பேசு! நிறையப் பேசு! சோஷியலிசம் பேசு! கேட்டு, கை தட்டுகிறோம்! என்று முதலாளிகள் கூறுகிறார்கள்.

அதே முதலாளிகளுக்கு ஏதாகிலும் தமக்குக் கேடு தரும் காரியம் நடந்துவிடக்கூடுமோ என்ற சந்தேகம் துளி தோன்றினாலும், தட்டிக் கொடுப்பதை நிறுத்திவிட்டு கூப்பிட்டுக் கேட்கிறார்கள், "என்ன இது, பேச்சு ஒரு தினுசாக இருக்கிறதே?'' என்று.

பார்த்தோமல்லவா, பாங்குகளை நாட்டுடைமையாக்க வேண்டுமென்று எர்ணாகுளத்திலே காங்கிரஸ் ஒரு பேச்சுப் பேசியதும், முதலாளிகள் சீறியதை?

பம்பாயில் அமைச்சர் பட்டீலை, அழைத்து வந்து தம் எதிரிலே நிற்கவைத்துக்கொண்டு செல்வபுரியினர், விளக்கம் தந்திடச் சொன்னார்களே!

அமைச்சர் பட்டீலும், அடக்க ஒடுக்கத்துடன், பற்று பாசத்துடன், முதலாளிகளிடம் விளக்கம் அளித்தாரே! இதழிலே கண்டோமல்லவா?

ஒரு தீர்மானம், ஒப்புக்குப் போட்டோம் பாங்குகளைத் தேசிய மயமாக்குவோம் என்று. அதற்கேவா இப்படி அச்சம் கொள்வது என்றெல்லாம் பட்டீல் சமாதானம் செய்திருக்கிறார்.

உண்மையாகவே சோஷியலிசம் கொண்டு வருபவர்களாக இருந்தால் இப்படியா, முதலாளி ஒரு துளி கவலைப்பட்டாலும், முகத்தைச் சுளித்துக்கொண்டாலும், அவன் முன் முழங்காற் படியிட்டுவிடுவார்கள்?

ஏன் அந்தவிதமான அச்சம் முதலாளிகளிடம், சோஷியலிசம் பேசுபவர்களுக்கு? காரணம், பட்டீல் அறிவார். காமராஜருக்கும் தெரியும். அவர்கள் ஊட்டி வளர்ப்பவர்கள்! அவர்கள் கொடுத்தபடி இருக்கும் பல இலட்சக்கணக்கான தொகையைக் கொண்டுதான் காங்கிரசின் தேர்தல் வேட்டையே நடந்து வருகிறது. அத்தகைய முதலாளிகள் தயவு கிடைக்காமற் போய்விட்டால், தேர்தல் களத்திலே என்ன கதி நேரிடுமோ என்று எண்ணுகிறபோதே நடுக்கம் எடுக்கிறது. அதனால் முதலாளிகளின் மனம் கோணாதபடி நடந்துகொண்டாக வேண்டும் என்ற அச்சம் பிடித்தாட்டுகிறது!

இந்த இலட்சணத்தில் வீரப் பேச்சு வேறு!!

முதலாளிகள் காங்கிரசை எந்த அளவுக்கு ஆட்டிப் படைக்கிறார்கள் என்பதை எடுத்துக் காட்டும் ஒரு நிகழ்ச்சி, டில்லியில் சில நாட்களுக்கு முன்பு நடந்தது.

காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த, பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கூடிப் பேசியிருக்கிறார்கள். எதைப் பற்றி?

முதலாளிகள் காங்கிரசுக்குள் நுழைந்துகொண்டு ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பது பற்றி.

முதலாளிகளுக்கும் அவர்களின் தயவு பெற்றவர் களுக்குமே தேர்தலில் வேட்பாளர்களாக நிற்கும் வாய்ப்புத் தரப்படுகிறது என்பதுபற்றி.

காங்கிரஸ் கட்சியை முதலாளிகள் ஆட்டிப்படைக் கிறார்கள் என்று தம்பி! நாம் சொல்லும்போது, சீறிச் சீறிப் பேசுகிறார்களே, அவர்கள் இதற்கு என்ன சொல்லப் போகிறார்கள்? காங்கிரஸ் எம். பி. க்களே அல்லவா கூடி, கை பிசைந்துகொள்கிறார்கள்; கண்களைக் கசக்கிக்கொள்கிறார்கள்!

காங்கிரசிலேயே ஒரு பகுதியினர் கூடிக் கதறிடும் நிலைமையே உருவாகிவிட்டிருக்கிறது, முதலாளிகளிடம் காங்கிரஸ் சிக்கிக்கொண்டதன் விளைவாக!

காங்கிரஸ் கட்சியையே தமது கருவியாக்கிக்கொண்டிட முதலாளிகளால் முடிந்திருக்கிறது. அந்த முதலாளிகளிடம் சிக்கிக் கொண்டுள்ள காங்கிரசைத்தான், சோஷியலிசத்தை நிறைவேற்றப் போகும் கட்சி என்று காமராஜர் கூறுகிறார். கூறுகிறாரா? முழக்கமிடுகிறார்!!

காங்கிரஸ் கட்சியே முதலாளிகளிடம் மண்டியிட்டுக் கிடக்கவேண்டி நேரிட்டுவிட்டது என்று காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் குமுறிப் பேசியிருப்பது பற்றி, டில்லி, "Patriot' - பேட்ரியட் - எனும் ஆங்கில நாளிதழ், அக்டோபர் 20லில் எழுதியிருப்பதனைத் தருகிறேன். தம்பி, காங்கிரஸ் சோஷியலிசத்தைக் கொண்டு வர முடிகிறதா இல்லையா என்பதுகூட ஒருபுறம் இருக்கட்டும், காங்கிரஸ் கட்சி, தன்னைத்தான் காப்பாற்றிக்கொள்ளும் வலிவுடனாவது இருக்க முடிகிறதா என்பது பற்றி எண்ணிப் பார்க்கும்படி, காங்கிரஸ் நண்பர்களைக் கேட்டுக் கொள்.

At a meeting in the Capital on Tuesday a large number of Congress M. P. 's expressed concern at the infiltration of the Congress by Big Business and feudal relics. The fears expressed by M.P. 's are based on a major concerted effort being made by reactionary elements and their intelligent stooges to gain entry on a large scale into the legislative organs on the Congress ticket. The warning is timely because in many states Congress Bosses are hob - nobbing with Capitalists and former princelings and in some case have entered into secret alliances with them.

செவ்வாயன்று தலைநகரில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் பலர், ஜெமீன் பரம்பரையினரும் பெரிய முதலாளிகளும், காங்கிரசுக்குள் நுழைந்துகொண்டு விட்டிருப்பது பற்றி கவலை தெரிவித்துப் பேசினர். காங்கிரஸ் கட்சியின் "டிக்கட்' பெற்று ஆட்சி மன்றங்களிலே இடம் பிடித்துக்கொள்ள, முதலாளிகளும் பிற்போக்காளரும் அவர்களின் கைக்கூ- அடிமைகளும் திட்டமிட்டு வருகின்றனர் என்ற ஆதாரமே, காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்டுள்ள அச்சத்துக்குக் காரணம் (அவர்களின்) எச்சரிக்கை சரியான நேரத்தில் தரப்பட்டிருக்கிறது; ஏனெனில் பல மாநிலங்களில் காங்கிரஸ் பெருந்தலைவர்கள் மாஜி - மன்னர்களுடனும் முதலாளி களுடனும் கூடிக் குலவிக்கொண்டு வருகின்றனர். சில இடங்களில் இரகசிய ஒப்பந்த உறவுகளையும் ஏற்படுத்திக் கொண்டுள்ளனர்.

தம்பி! பேட்ரியட் தலையங்கத்தின் கருத்தைத் தமிழாக்கித் தந்துள்ளேன்.

நிலைமை இவ்விதம் இருக்கிறது, ஆனால் காமராஜரோ நீண்ட பேச்சுப் பேசுகிறார்; சோஷியலிசம் கொண்டுவரப் போகிறேன் என்று. அதனைச் செய்திட காங்கிரஸ் கட்சியால்தான் முடியும் என்று நம்பச் சொல்கிறார். எப்படி நம்பிக்கை கொள்ள முடியும்? - நடுக் கொள்ளைக்காரர்கள் அவ்வளவு பேர்களும் அங்கு நடு நாயகர்களாக இருப்பது கண்கூடாகத் தெரியும்போது.

சோஷியலிசம் பேசுகிறார் காமராஜர் என்றால், பேசுவதற்கு முதலாளிகள் அனுமதித்து இருப்பதால் பேசுகிறார்.

ஏழை எளியோர் காதுகளுக்கு இசையாக இருக்கட்டும் என்பதற்காகப் பேசுகிறார்.

செயலில்? முடியாது! விடமாட்டார்கள்! இன்று காங்கிரஸ் கொண்டுள்ள அமைப்பு முறை அதற்கு இடம் கொடுக்காது; அது முதலாளிகளின் "பாசறை'யாக ஆகிவிட்டிருக்கிறது.

சோஷியலிசம் பேசலாம்; செயல்படுத்த முடியாது என்று தம்பி! நான் கூறுகிறபோதுதான் கோபம் கோபமாக வருகிறது அவர்களுக்கு; ஆனால் அவர்களின் பெருந்தலைவர் காமராஜரே, ஜெய்பூர் மாநாட்டிலே பேசினார்; தெரிந்துதான் பேசி இருக்க வேண்டும்! என்ன பேசினார் என்பதனை நான் ராஜ்ய சபையிலேயே எடுத்துரைத்தேன்.

பதினோரு ஆண்டுகளாக நாம் சோஷியலிசம் பேசுகிறோம்; ஆனால் செயல்படுத்தவில்லை.

ஏழை - பணக்காரர் பேதத்தைப் போக்க முடிய வில்லை என்பது மட்டுமல்ல, அதனைக் குறைக்கக்கூட நம்மால் முடியவில்லை.

இந்தக் கருத்துப்படவே காமராஜர் பேசியிருக்கிறார்.

அதனையே நாம் சுட்டிக் காட்டும்போது "சுரீல்' என்று கோபம் பிறக்கிறது; விட்டேனா பார்! என்று வீறாப்பு பேசுகிறார்.

காங்கிரசில், மாஜி - மன்னர்களையும் தொழில் அதிபர் களையும் ஆதிக்கம் செலுத்தும் அளவுக்குச் சேர்த்துக்கொண்டு, அவர்களிடம் இலட்ச இலட்சமாகப் பணமும் "கைநீட்டி' வாங்கிக் கொண்டு, அதைக்கொண்டு ஓட்டு வேட்டை ஆடிக்கொண்டு, நான் சோஷியலிசத்தைக் கொண்டுவரப் போகிறேன் என்று பேசி வருவது, குடைராட்டினத்துச் சிங்கப் பொம்மைமீது உட்கார்ந்து கொண்டு என்னைச் சாமான்யமாக எண்ணிக்கொள்ளாதீர்கள்; நான் சிங்கத்தையே அடக்கி, அதன்மீது சவாரி செய்பவன்! என்று சிறுவர்கள் பேசி, கேட்பவர்களுக்குச் சிரிப்பு மூட்டுவதற்கு ஒப்பானதாகும் இல்லையா?

அண்ணன்,

6-11-66