அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


சிறகு விரித்து ஆடுவதெல்லாம் மயிலாகுமா?
1

ஏழைக்கும் வருவாய் உழைக்கும் ஓரிடத்தில் மட்டும்!
ஏழ்மை ஒரு நோய்; ஒட்டுவார் ஒட்டி!
புலித்தோலில் அமர்ந்தவன் யோகியாகிவிட முடியுமா?
காங்கிரஸ் ஆட்சி கனதனவான்களின் ஆட்சியே!
ஏழை - பணக்காரன் "ஓட்டில்' இல்லையாம்!
பூ எனக் கூவி முருங்கைப்பூ விற்பரோ?

தம்பி!

இல்லாமையும் போதாமையும் கொட்டிக்கொண்டுள்ள இடத்திலேயே உழன்றுகொண்டிருக்கிறாயே, வாயேன் சிறிது நேரமாகிலும் "உல்லாசபுரி' சென்று பார்ப்போம். அண்ணன் என்றால் இப்படி அல்லவா இருக்க வேண்டும், இன்னலைத் துடைத்து இதம் அளித்திட வேண்டும் என்றெல்லாம் எண்ணி அகமகிழ்ச்சியை அளவு கடந்துகொண்டுவிடாதே! நான் உன்னை அழைப்பது "உல்லாசபுரி'யில் இருந்திட அல்ல! பார்த்திட! கற்பனைக் கண்களால்!

மாளிகைக் கூடம், தம்பி! அதோ அமர்ந்திருக்கிறாரே, அவர்தான் பெருநிலக்கிழார் பேயாண்டி! பெயர் என்னவோ போல இருக்கிறதே என்று எண்ணிக்கொள்ளதே; "சாமி' பெயர்!!

எதிரே அடக்க ஒடுக்கமாக நின்று கணக்கேட்டைப் புரட்டிப் படிக்கிறாரே "காரியஸ்தர்', கவனி.

கானூர் வரவு ஆறு ஆயிரத்து நானூற்று எழுபது
சீனூர் வரவு எட்டாயிரத்து ஐம்பது.
சோரனூர் வரவு பத்தாயிரத்து எழு நூறு.
கல்லூர் வரவு ஆயிரத்து அறுநூறு.
மாந்தோப்புக் குத்தகை வரவு ஐயாயிரத்து ஐந்நூறு;
சவுக்குத் தோப்பு ஏல வரவு ஏழாயிரத்து நானூறு;
முந்திரித் தோப்புக் குத்தகை வரவு மூன்றாயிரத்து இரு நூற்று அறுபது.
ஆக மொத்தம். . . . .

தம்பி! பேயாண்டி பேசுவதைக் கேள். "ஆக மொத்தம்' இருக்கட்டும் ஓய்! கானூர் என்ன இப்படிக் குறைந்துவிட்டது? முந்திரி போன வருடம் நாலு இந்த வருடம் மூணு ஆகிவிட்ட காரணம் என்ன? சூளை போட இடத்தைக் குத்தகைக்கு விட்ட கணக்கையே காணோம். என்ன பெரிய புரட்டு நடக்குது என்றே தெரியவில்லை.

தம்பி! காரியஸ்தர் ஏட்டைப் புரட்டுகிறார்; ஏதாவது காரணம் கிடைக்கும்; கூறுவார்; ஐயா சமாதானமாகமாட்டார்; ஏசுவார்; அதைக் கேட்டுக்கொண்டிருப்பானேன், வா, வா! போய்விடலாம்! "உடையவர்' வருவாய் எத்தனை வழிகளிலே பெறுகிறார் என்பதைக் காண வேண்டும் என்பதற்குத்தான் இங்கு அழைத்து வந்தேன். கவனித்தாய் அல்லவா, கானூர், சீனூர், சோரனூர், கல்லூர், இப்படிப் பல சிற்றூர்களிலே உள்ள நில புலத்திலிருந்து வருவாய். மாந்தோப்பு, முந்திரித்தோப்பு, சவுக்குத் தோப்பு இவைகளிலிருந்து வருவாய், வாடகைப் பணம், வட்டிப் பணம், வியாபார இலாபம் இப்படி வேறு வகையிலும் வருவாய்; கோயில் கும்பாபிஷேகம் நடத்தியது, தருமகருத்தா வேலை பார்த்தது, சத்திர நிர்வாகம் போன்ற "புண்ணிய' காரியத்தின் மூலம்கூட "வருவாய்' உண்டு. தம்பி! நாம் தெரிந்துகொள்ள வேண்டியது விவரம் அல்ல; அவைகளுடன் பிணைந்துள்ள ஒரு பொது உண்மை;

சீமான் பல வழிகளில் வருவாய் பெறுகிறார் என்பதுதான்.

ஏழைப் பாட்டாளி அதுபோல, சிம்சன் கம்பெனி மூலம் ஆறு ரூபாய், சிவராமன் கடை மூலம் மூன்று ரூபாய், ராம் சேட் மண்டி மூலம் நாலு ரூபாய், சுந்தரம் ஸ்டோர் மூலம் எட்டு ரூபாய், ஆகமொத்தம் கிடைத்த வருமானம். . . என்று கணக்குக் கூற முடியாதல்லவா? அவன் பெறக்கூடிய வருவாய், இவைகளிலே ஏதாவது ஒரு இடத்தில் மட்டுந்தான்; அதுவும் வேலை நிலைத்திருந்தால்.

ஏழைக்கு வருவாய் உழைக்கும் இடம் ஒன்றில் இருந்து மட்டுமே கிடைக்கும்.

சீமானுக்கு வருவாய் பல இடங்களிலிருந்து கிடைக்கும்.

ஏழைக்கும் சீமானுக்கும் ஒரே வயிறுதான்; அதிலே வித்தியாசம் இல்லை.

ஆனால் வருவாய்த்துறை ஏழைக்கு பல இருப்ப தில்லை; சீமானுக்குப் பலப் பல.

ஆகவே ஏழை உழைக்கிறான் பிழைத்திருக்க!

சீமான், மேலும் சீமானாகிறான், பணம் குவிகிறது; குவிந்த பணம் சீமானுக்குப் புதுப் புது வருவாய்த் துறைகளைப் பெற்றுத் தருகிறது.

கானூர் நிலத்திலே கிடைத்த வருவாய் குவியக் குவிய, சீனூரில் புதிதாக நிலம் வாங்க முடிந்தது - சீமானால். கானூரில் இவருடைய நிலத்தை உழுதுகொண்டிருக்கிறானே, அவனுக்கு இவர் மூலம் கிடைத்த வருவாயைக் கொண்டு அவன் பெற முடிந்தது என்ன? கேட்டுப் பார்த்தால், கண் கலங்குவாய்! "அவளுக்கு ஆஸ்த்துமா! எனக்குக் குடல் நோய்! என் தாயாருக்கு முடக்கு வியாதி! பிள்ளையா? அதைப்பற்றிக் கேட்க வேண்டாமய்யா, அது எனக்குப் பிள்ளை அல்ல, என்னைச் சாகடிக்க வந்துள்ள எமன்!!' - என்று சொல்லிப் புலம்புவான்.

கானூர் நிலத்தை வாங்கிய வேளை நல்ல வேளைங்க . . . . அதற்குப் பிறகுதான், பகவானோட கடாட்சத்தாலே, முந்திரித் தோப்பும், மாந்தோப்பும் கிடைச்சுது என்று "அம்மா' பேசுவார்கள், "ஐயா' சந்தோஷமாக இருக்கும் போது.

அங்கே பணம், பணத்தைப் பெற்றுத் தருகிறது.

இங்கே (ஏழையிடம்) உழைப்பு உடலை வாட்டி, உள்ளத்தைக் கசக்கிப் போடுகிறது.

அங்கே, செலவு போக இருந்திடும் மிச்சம் முந்திரித் தோப்பாக, மூன்றடுக்கு மாடியாக மாறுகிறது.

இங்கே உழைத்து உழைத்து உருக்குலைந்ததன் பலன், காசம், குன்மம், கடன் இப்படி.

இந்த நிலை, சமூகத்திலே பெரும் அளவு பரவி இருக்கும் கொடுமையை நீக்கினாலொழிய மனித குலம் நிம்மதியாக வாழ்ந்திட முடியாது என்பதனை உணர்ந்ததன் விளைவு தந்த திட்டந்தான் சோஷியலிசம்.

ஏழை - பணக்காரன் பேதத்தைப் போக்கியாக வேண்டு மானால் ஏழை - பணக்காரன் பேதம் எப்படி ஏற்படுகிறது என்பதைக் கண்டறிந்தாக வேண்டும்.

ஏழ்மை ஒரு நோய்; அது யாரைப் பீடித்துக்கொள்கிறதோ அவனை மட்டுமல்ல, அவனைச் சூழ உள்ளவர்களை, அவன் உலவும் சமூகத்தையே பீடித்துக்கொள்வது; ஒட்டுவார் ஒட்டி! ஆகவே அந்த நோயைப் போக்குவது, அவனிடம் பரிவும் பச்சாதாபமும் காட்ட வேண்டும் என்பதற்காக மட்டும் அல்ல; அவனைப் பீடித்துக்கொண்டுள்ள நோய் மூலம் கிளம்பிப் பரவிடும் கிருமிகள், சமூகத்தின் நல்லவைகள் யாவற்றையும் அரித்து அழித்துவிடும்; அந்த நோயைத் தடுத்தாக வேண்டும் என்பதற்காக; சமூகத்தைக் காப்பாற்ற; எதிர்காலத்தைப் பாதுகாத்திட.

கானூருக்கும் சீனூருக்கும் சொந்தம் கொண்டாடும் சீமானுக்கும் அவரிடம் கைகட்டி வாய்பொத்தி வேலை செய்யும் பாட்டாளிக்கும், பஞ்சம், பிணி, குழப்பம், கலகம், போர் போன்ற விபத்துக்கள் ஒரே விதமான இன்னலையும் இழப்பையும்தான் தரும் ஐயமில்லை.

ஆனால், "உடையவர்' அந்த விபத்துக்களைத் தாங்கிக்கொள்ள முடிகின்ற அளவுக்கு உழைப்பாளியால் முடிவதில்லை.

அதனால்தான் பணம் படைத்தவர்கள் பல்வேறு விதமான அரசியல் மாறுதல்களையும், அதிர்ச்சி தரத்தக்க மாறுதல் களையும் தாங்கிக்கொண்ட பிறகும், "சகஜ' நிலைமை ஏற்பட்டதும், மெள்ள மெள்ள, தங்களின் பழைய நிலையைப் பெற்றுக்கொள்ள முடிந்தது. இந்தப் பொது விதிக்கு, சில குறிப்பிடத்தக்க விலக்குகள் இருக்கலாம், இருக்கின்றன. ஆனால் பொதுவான உண்மை என்னவென்றால்,

பணம், பயங்கரமான விபத்துக்களையும் தாங்கிக் கொள்ளச் செய்திடும் கேடயமாக, பணக்காரர்களுக்கு பயன்படுகிறது.

அதிலும், அரசியல் சூழ்நிலையில் ஏற்படும் மாறுதல்கள் கேடு பயப்பனவாக இருந்திடின், அந்தக் கேடுகளின் முழுத் தாக்குதல், ஏழையின்மீதுதான் விழும்; பணக்காரனைத் தாக்கிடக் கிளம்பிடும், அவன் பணம் எனும் கேடயம் கொண்டு தடுத்துக் கொள்கிறான்.

இந்தியாவின் வரலாற்றிலே இதற்கான சான்றுகளை நிரம்பக் காணலாம்.

வெள்ளையர் வந்தனர்; சிற்றரசர்களும், சீமான்களும் போர்ச் சூழ்நிலை காரணமாக அல்லற்பட்டனர்; ஆனால் விரைவிலேயே நிலைமை அவர்களுக்குச் சாதகமாக அமைந்து விட்டது. எதிர்த்து நிற்க முடியாது - என்பதைக் கண்டுகொண்ட - சீமான்கள், வெள்ளையரை "எஜமானர்கள்' என்று ஒப்புக் கொண்டனர்; அந்தச் சரணாகதியை ஏற்றுக்கொண்ட வெள்ளை அரசு, சீமான்களைத் தமது கொலுப் பொம்மைகள் ஆக்கிக் கொண்டது? அந்தக் கொலுப் பொம்மைகள், எப்போதும்போல கோலாகல வாழ்வு நடாத்தவும், கானூர் வரவு என்ன? வானூர் வரவு என்ன என்ற கணக்குப் பார்க்கவும், ஏழைகளின் உழைப்பை மிரட்டிப் பெற்றுக்கொள்ளவும் முடிந்தது. வெள்ளை அரசு அதனை அனுமதித்தது!!

பணம் படைத்தவர்கள் எந்த அரசு அமைந்திடினும் அதனைத் தமக்குச் சொந்தமுள்ள அரசு ஆக்கிக்கொள்வர்; தமது பண பலத்தைக் காப்பாற்றிக்கொள்ள.

இந்த நிலைமை, வெள்ளை அரசு அமைத்ததோடு முடிந்துவிடவில்லை.

காங்கிரஸ் அரசு அமைந்ததும், அதே சீமான்கள் அந்த அரசைத் தமக்குச் சொந்தமுள்ள அரசாக ஆக்கிக்கொண்டுவிட்டுள்ளனர்.

சான்று வேண்டிடுவோர் தத்தமது வட்டாரத்தில் உள்ள "பெரிய புள்ளிகள்' இன்று எந்தக் கட்சியில் இடம் பெற்றுள்ளனர் என்பதனைக் கணக்கெடுத்தாலே போதும்.

முதலமைச்சர் இருக்கிறாரே பக்தவத்சலனார், அவருடைய குடும்பத்தினரே, நவாப் காலத்திலே "மானியம்' வாங்கிய குடும்பமாம். விவரம் கேட்கிறாயா, தம்பி! விசாரித்துச் சொல்கிறேன்,

ராமநாதபுரம் ராஜா குடும்பம் இருக்கிறதே, "சேதுபதிகள்' வெள்ளையர் காலத்திலும் இதே செல்வாக்குத்தான்; ராஜாக் களையும் ஜெமீன்தாரர்களையும் அழித்துவிட்டதாகக் கூறிக்கொள்ளும் காங்கிரஸ் அரசின்போதும் அதே செல்வாக்குத்தான்!

வெள்ளைக்காரன்கூட, சேதுபதிகளை, ராமநாதபுரம் ராஜாவாக மட்டுமே இருக்கச் செய்தான்.

காங்கிரசாட்யிலேதான் ராமநாதபுரம் ராஜா, தமிழ் நாடு முழுவதற்கும் "மந்திரி'யாகி ஆட்சி நடத்தினார்.

சிவகங்கை ராஜா குடும்பம் அதே நிலைமை!

செட்டி நாட்டு ராஜா குடும்பம்? அதே நிலைமை!!

வெள்ளையர் ஆண்டபோது, எப்படி அவர்கள் இந்தப் பெரிய புள்ளிகளைத் தமது கொலுமண்டபத்தில் இடம் கொடுத்து, துணைக்கு, துதி பாடவும் வைத்துக்கொண் டிருந்தனரோ, அதுபோலவேதான், காங்கிரஸ் ஆட்சியும் பெரிய புள்ளிகளைத் தமது நண்பர்களாக்கிக்கொண்டு விட்டிருக்கிறது.

பணம் படைத்தவர்களை எந்த அரசும், தனது பரிவாரத்தினர் ஆக்கிக்கொள்ளும் என்பதையும், இந்த எழுதாத ஒப்பந்தம் இன்று நேற்றல்ல, நெடுங் காலமாக இருந்து வருகிறது என்பதையும் உணர்ந்திடின் இன்றைய அரசியல் நிலைமை நன்கு விளங்கும்.

காங்கிரஸ் கட்சி ஆட்சி நடத்துவது என்பது, ஆராய்ந்து பார்க்கும்போது, இதற்கு முன்பு அமைந்திருந்த ஆட்சிகளின் போது, எந்தச் சீமான்கள் - பெரிய புள்ளிகள் - செல்வாக்குப் பெற்று வந்திருந்தனரோ, அதே திருக்கூட்டத்தார், தமது நிலைமையை உறுதிப்படுத்திக்கொள்ளவும், வாழ்வை வளமாக்கிக் கொள்ளவும் நடத்தப்பட்டு வரும் ஆட்சி என்பது புரிகிறது. அதனால்தான், நாம் அந்த ஆட்சியை மாற்றியாக வேண்டும் என்கிறோம்.

புலித்தோல்மீது அமர்ந்து கண்களை மூடிக் கொள்வதாலேயே, முன்னாள் வழிப்பறிக்காரன், யோகியாகி விட முடியாது.

சில காலம், விவரம் தெரியாதவர்கள் மயங்கிக் கிடக்கலாம்.

எல்லோரும் ஏமாளிகளாகிவிட மாட்டார்கள்.

ஏமாளிகளாகிவிடுபவர்களும் கடைசி வரையில் விழித்துக்கொள்ளமாட்டார்கள் என்று எண்ணுவதும் பேதைமை.

அந்த விழிப்புணர்ச்சியை, தமிழகத்தைப் பொறுத்தவரையில், ஏற்படுத்துவதிலே நமது கழகத்துக்குச் சிறப்பான பெரும் பங்கு உண்டு - அந்தப் பெருமைக்கு முழு உரிமை பெற்ற உன்னைத் தம்பியாய்க் கொண்டதனால் நான் மகிழ்ச்சி கொள்கிறேன்.

காங்கிரஸ் ஆட்சி என்பது கனதனவான்களின் ஆட்சிதான் என்பதை மக்கள் உணரத் தலைப்பட்டு விட்டார்கள் என்றவுடன்தான், காங்கிரஸ் கட்சி, எங்களைச் சாமான்யமாக எண்ணிவிடாதீர்கள், நாங்கள் ஏழை பணக்காரன் வித்தியாசத்தை ஒழிக்கப்போகிறோம்; சோஷியலிசம் கொண்டு வரப்போகிறோம் என்று அறிவிக்கிறார்கள்.

தம்பி! நான் உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது, ஒரு வேடிக்கை நடைபெற்றது.

அன்னியச் சாமான்களை விலக்குவது என்ற திட்டம் மும்முரமாகப் பரவிய நேரம்.

குறிப்பாக அன்னிய ஆலைத் துணிகளைப் போட்டுக் கொளுத்தும் திட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம்.

என் நண்பன் ஒருவன், "சிகரெட்' பிடிப்பவன்; முன்பு மறைவாகப் பிடித்து வந்தவன், தைரியமாக நாலு பேருக்கு முன்பாகவே சிகரெட் பற்றவைக்கத் தொடங்கினான்.

திடுக்கிட்டுப் போனவர்கள் அந்த நண்பனைக் கேட்டார்கள், இப்படிச் செய்யலாமா? என்று.

ஒரு குறும்புப் புன்னகையுடன் அந்த நண்பன் சொன்னான், "நான் என்ன செய்கிறேன் என்று எண்ணிக்கொண்டீர்கள்? நான் அன்னியச் சாமானைக் கொளுத்துகிறேன்; இது இங்கிலாந்து நாட்டுச் சிகரெட்டு; இதைக் கொளுத்தித் தள்ளுகிறேன்'' என்றான்.

இது வேடிக்கை நிகழ்ச்சி! காங்கிரஸ் கட்சியோ, ஏழை பணக்காரன் பேதத்தை ஒழித்துக் கட்டுகிறோம்! எப்படி என்றால், ஏழை பணக்காரன் இருவரையும் "ஓட்டர்கள்' ஆக்கி, அந்த ஓட்டுகளிலே, இது ஏழையின் ஓட்டு, இது பணக்காரன் ஓட்டு என்று பாகுபாடு பார்க்காமல், இரண்டு பேர்களுடைய ஓட்டுகளையும் கேட்டு வாங்கிக்கொள்கிறோம்; பேதத்தை ஒழிக்கிறோம் என்று வாதாடும்போல இருக்கிறது.

யார் தங்கள் செல்வத்தையும் செல்வாக்கையும் கெட்டிப்படுத்திக்கொள்ளக் காங்கிரஸ் கட்சியிலே புகுந்துகொண்டுள்ளனரோ, அந்தப் பெரிய புள்ளிகளைக் கொலு மண்டபத்திலே வைத்துக்கொண்டே ஏழை. . . பணக்காரன் வித்தியாசத்தை ஒழிக்கப் போகிறோம் என்று பேசுவது, காளையைக் காட்டி கலம்பால் கறந்து தருகிறேன் என்று கூறுவதற்கு ஒப்பானதாகும்.

தம்பி! குள்ளர்களை ஒழிக்கப் போகிறேன் என்று நான் பேசினால் எப்படி இருக்கும்? உறுதி! உறுதி! உறுதி! காங்கிரஸ் கொள்கையிலே நாங்கள் உறுதியாக நிற்போம் என்று "புகுந்தவர்கள்' முழக்கமிட்டால் எப்படி இருக்கும் கேட்க! தாடி ஒழிப்புச் சங்கத்தைப் பெரியாரும், மீசை ஒழிப்புச் சங்கத்தை நண்பர் ம. பொ. சிவஞானமும் துவக்கினால் எப்படி இருக்கும், தாடியும் மீசையும் இப்போது உள்ளபடியே வைத்துக்கொண்டு. காங்கிரஸ் கட்சி ஊரில் உள்ள எல்லாப் பெரிய புள்ளிகளையும் உடன் வைத்துக்கொண்டு, நாங்கள் சோஷியலிசம் கொண்டு வரப்போகிறோம் என்று பேசுவதை நினைக்கும்போது, எனக்கு இவ்விதமெல்லாம் தோன்றுகிறது.

ஆனால் பேசுகிறார்களே! தம்பி, துணிந்து! நாடு கேட்டுக் கொள்ளும், ஏற்றுக்கொள்ளும் என்று எதிர்பார்க்கிறார்களே! எதனால்? எதைச் சொன்னாலும் கேட்டுக்கொள்ளும் இயல்பினர் நாட்டிலே ஏராளமானவர்கள் உள்ளனர் என்ற எண்ணம். ஆனால் நாடு இன்று அவ்விதமாகவா இருக்கிறது? நாட்டு நிலையை நன்கு பார்க்கிறாயே, தம்பி! எதைச் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளும் நிலையிலா நாட்டவர் உள்ளனர்? இல்லையே! மக்களின் கண்களே கேள்விக் குறிகளாக அல்லவா உள்ளன!!

முதலாளிகளை ஒழிப்பதுதான் சோஷியலிசம் என்று கருதாதீர்கள், அவர்களையும் வாழவிட்டு, ஏழையையும் வாழ வைப்பதுதான் எங்கள் சோஷியலிசம் என்று விசித்திரமாக வாதாடுகிறார்கள்.