அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


சிறை நிர்வாகமே தனி!
1

3-5-1964

தம்பி!

நாளையத்தினம், மதியும் மற்றும் சிலரும் விடுதலை செய்யப்படப்போகிறார்கள் என்று சிறையிலே ஒரு பேச்சு பலமாக அடிபடுகிறது. நானேகூட நம்பிக்கை கொள்ளவேண்டி ஏற்படுகிறது. வெளியில் சென்றதும், தொகுதி திருத்தி அமைப்பதுபற்றி, மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் கலந்து பேசும்படி மதியிடம் கூறினேன். இன்று மறுபடியும் தொகுதிகள்பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். ஏற்கனவே சிறைபட்டிருப்பவர்கள் குறித்தும், வழக்கின் முடிவுக்காகக் காத்துக்கொண்டிருப்பவர்கள் பற்றியும், பேசிக்கொண்டிருந்தோம். கழகம் வகுத்த திட்டத்திலே தோழர்கள் தொடர்ந்து காட்டிக்கொண்டு வரும் ஆர்வமும், மக்கள் தரும் ஆதரவும் அளித்திடும் மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் நிலையில், சிறையிலே ஏற்படக்கூடிய தொல்லைகள் மிகச் சாதாரணமானவைகளாகி விடுகின்றன. ஒன்று மட்டும் மறப்பதற்கில்லை. வேறு எந்தக் கட்சிக்காரர்கள் கிளர்ச்சிக் காரர்களிடம் காட்டாத அளவுக்குக் கசப்பும் கோபமும், இன்றைய ஆளுங்கட்சியினர், கழகத்திடம் காட்டுகின்றனர் என்பதை உணர்ந்துள்ள அதிகாரிகள், அதற்குத் தகுந்தபடி தமது போக்கை அமைத்துக்கொண்டுள்ளனர். "முன்போல அல்ல! இது ஒரு மாதிரியான காலம்!' என்று சிறைக்காவலாளிகளேகூடப் பேசிக்கொள்கிறார்கள். எங்களிடம் பேசவும் பழகவும்கூடப் பயப்படுகிறார்கள். ஆனாலும், சென்னை மாநகராட்சிமன்றத் தேர்தல் வெற்றியைக் கண்ட பிறகு, அவர்களுக்கே ஒரு எண்ணம் - சர்க்காருடைய கொடுமை வளரவளர, பொது மக்களுடைய ஆதரவு கழகத்துக்கு வளரத்தான் செய்கிறது என்ற எண்ணம். இதை அவர்கள் பாபம், பேச்சின் மூலமாக அல்ல, பார்வையின் மூலமாகவே தெரிவிக்கிறார்கள். சில வேளைகளிலே அவர்கள் காட்டும் கண்டிப்புகூட, "ஜாண் வயிற்றுக்காக' என்கிறார்களே, அதுதானே தவிர, எங்களிடம் கோபமோ வெறுப்போ இல்லை என்பதையும் உணருகிறோம். காவலாளிகள் வாழ்க்கையும் எவரும் பார்த்துப் பச்சாதாபப் படக்கூடியதுதான்.

இன்று சீக்கிரமாக "லாக்கப்' செய்துவிட வேண்டும் என்று சில காவலாளிகள் துடித்துக்கொண்டு வருவார்கள். காரணம், எங்களை வெளியே ஒரு அரை மணி நேரம் விட்டுவைக்கக்கூடாது என்ற கெட்ட எண்ணம் அல்ல. ஒவ்வொரு நாளும் வேலை முடிந்து, அந்தக் காவலாளிகள் வீட்டுக்குப் போய்ச்சேர, இரவு ஒன்பது ஆகிவிடுகிறது. ஒரு நாளைக்காவது வீட்டிலே, பொழுது சாயுமுன் போய், குழந்தை குட்டிகளுடன் பொழுது போக்க வேண்டும் என்ற ஆவல் இருப்பது இயற்கைதானே! மொத்தத்திலே இங்கு பார்க்கும்போது, காவலாளிகளின் எண்ணிக்கை மிகக் குறைவு என்பது புரிகிறது. அதனால்தான், காவலாளிகள் கடினமான வேலையில் உழலவேண்டி இருக்கிறது. காவலாளிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான். அளவுக்கு மீறிய வேலை செய்வதால் ஏற்படும் சலிப்பு உணர்ச்சி எழாமலிருக்கும், "வாங்க! வாங்க! மணி ஆறு அடிச்சாச்சி' என்று கூப்பிட்டார் ஒரு காவலாளி கீழே இருந்த எங்களை. குரல் கேட்டதும், இயற்கையாக "இதற்குள்ளாகவா?' என்றுதான் கேட்கத் தோன்றும். எனக்கு உடனே எழுந்து, மாடிக்குச் சென்றுவிட வேண்டும் என்றுதான் தோன்றிற்று. ஏன் என்றால், அவருடைய பேச்சு, அவ்விதம் இருந்தது..

"மூணு ஜென்மம் ஆயிட்டுது, இன்னும் இருப்பது சாராயக் கேஸ் தண்டனை காலம்தான்'' - என்று தன்னைப்பற்றிக் கூறிக்கொண்டார். புரியவில்லையா?

மூணு ஜென்மம், முப்பது ஆண்டுகள்! ஒரு ஆயுள் தண்டனை கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் - ஒரு ஜென்மம். அதுபோல மூணு ஜென்மம் அளவுக்கு, அதாவது முப்பது ஆண்டுகள் வேலை பார்த்தாகிவிட்டதாம். காவலாளி, தன் வேலை நாட்களை கைதியின் தண்டனை நாட்கள் போன்றவை என்று எண்ணுகிறார், ஏக்கத்துடன் பேசுகிறார். நாலு வாரம் தண்டனை என்பது சாராய வழக்கிலே கிடைப்பது. இந்தக் காவலாளி இன்னும் நாலு வாரம்தான் வேலையில் இருப்பாராம் - பிறகு விலகப்போகிறார். வேலையில் இருக்கவேண்டிய நாட்களை, தண்டனை நாட்கள் என்று கருதுகிறார். காவலாளிகளின் வேலை நேரம் - வேலை முறை - இவைகளைப் பார்ப்பவர்கள், அந்த வயதானவர் கூறினதை மறுக்கமாட்டார்கள்.

4-5-1964

ஏமாற்றம்! எதிர்பார்த்தபடி, மதிக்கும் மற்றவர்களுக்கும் விடுதலை கிடைக்கவில்லை; காரணமும் தெரியவில்லை. வழக்கமாக உலவும் வதந்திகளின்படி சர்க்காரிடமிருந்து "உத்திரவு வரவில்லை' என்று தெரிய வருகிறது. உண்மை என்னவென்றால் விடுதலை ஆகப்போகிறார்கள் என்ற செய்திதான் ஆதாரமற்ற வதந்தி.

இன்று, S.S.. ராஜேந்திரன் வந்திருந்தார். நான், மதி, அன்பழகன் மூவரும் கண்டு பேசினோம். சிறை மேலதிகாரியின் அறையில், அவர் முன்னிலையில், நண்பர்களைக் குறித்துக் கேட்டறிந்துகொண்டோம்.

"அண்ணா! ரவி என்ன சொல்கிறான் என்பதைக் கேளுங்களேன்'' என்று பாசத்துடன் ராஜேந்திரன் கூறினார்; ரவி அவர் மகன்.

"அண்ணா! ஜெயில் கதவோட கம்பிகளை எடுத்துட்டு வெளியே வந்துவிடுங்க'' என்கிறானே!

சிறை மேலதிகாரியைக் காட்டி, "இவர் யார் பார்த்தாயா? சும்மாவிடுவாரா?'' என்றேன்; குழந்தை பயந்தேபோனான். இதற்கு முன்பு எப்போதும் என்னைப் பார்த்திராத முற்றிலும் வேறான இடம், அதனால் அச்சம் ஏற்பட்டுவிட்டது. இல்லையென்றால் மிகக் கலகலப்பாகச் சிரித்துப் பேசுவான். நான், அவனுக்கும் "அண்ணா''; அவனுடைய அப்பாவுக்கும் "அண்ணா''; அப்படி அழைத்தே பழகிவிட்டான்.

பார்க்க வருகிறவர்களும், மிகுந்த ஆவலுடன் ஏதேதோ பேச வேண்டும் என்றுதான் வருகிறார்கள். நாங்களும், வருகிறவர்களிடம் நிறையப் பேச வேண்டும், எதை எதையோ கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஆவலாகத்தான் பார்க்கிறோம். ஆனால் பேசும் இடத்தில் குறைந்தது இரண்டு அதிகாரிகளாவது எதிரே, மிக அருகாமையில் உட்கார்ந்து கொள்ளும்போது, எப்படிப் பேச வரும், எதைப் பேசத் தோன்றும்? பார்த்தோம், நலன் கேட்டறிந்துகொண்டோம், அதுபோதும் என்று சில நிமிடங்களிலேயே தோன்றிவிடுகிறது. அப்படித்தான் இன்று ராஜேந்திரனிடமும், மிகச் சுருக்கமாகவே பேச்சை முடித்துக்கொள்ளவேண்டி நேரிட்டது. டில்லி போய் வந்த "சேதி' பற்றி ஒரு விநாடி, நாராயணசாமி மகன் உடல் நிலை பற்றி மற்றோர் விநாடி, இப்படி மூன்று நான்கு விஷயங்கள் பேசி முடித்ததும், மேற்கொண்டு என்ன பேசுவது என்பது இருவருக்கும் புரியவில்லை. பேச விஷயமா இல்லை! கழக விஷயம் பேச ஆரம்பித்தால் நாள் போதாது. ஆனால் "அரசியல்' தான் பேசக்கூடாதே!!

இதைக் கூடவா சர்க்கார் கவனிக்கிறார்கள்? என்று நான் ஒரு சிறை அதிகாரியைக் கேட்டேன். சரியாப்போக்சு. உங்களுக்கென்ன தெரியும்? உங்களைப் பார்க்க யாரேனும் கழகத்தார் வந்தார்கள் என்றால், அவர்கள் உங்களைப் பார்த்துவிட்டுப்போன உடனே, துப்பறியும் துறைக்காரர் வருகிறார். "என்ன பேசினார்கள்?' என்று கேட்கிறார்; "விவரம் விசாரிக்கிறார்'' என்று கூறினார். "கள்ள மார்க்கட்காரனையும் கொள்ளை இலாபம் அடிப்பவனையும் கண்டுபிடித்து அடக்க இந்தத் துப்பறியும் திறமை பயன்படக்கூடாதா? எதையும் ஒளிவு மறைவு இல்லாமல், மக்களுக்கும் சர்க்காருக்கும் அறிவித்துவிட்டுச் செய்யும் எங்கள் கழக சம்பந்தமாகவா இவ்வளவு திறமையையும் வீணாக்க வேண்டும்?' என்று நான் கேட்டேன். "அதெல்லாம் பெரிய விஷயம்!'' என்று சொல்லிக்கொண்டே அந்த அதிகாரி சென்றுவிட்டார். இந்தப் பேச்சை எவனாவது கேட்டுவிட்டு, ஏதாவது கோள்மூட்டிவிடப் போகிறான் என்று அவருக்குப் பயம். சுயராஜ்யம் ஏற்பட்ட பிறகு தொடங்கிய இந்தப் "பயம்' நாளாகவாக வளர்ந்தபடி இருக்கிறது. அதிலே ஒரு கூறுதான் இங்குள்ள அதிகாரிகளின் போக்கிலே நான் காண்கிறேன். இத்தகைய பயம் ஜனநாயகத்துக்கு உகந்தது அல்ல. ஆனால், நடைபெறுவது பெயரளவுக்குத்தானே ஜனநாயகம்!

இன்று நடைபெற்று வரும் போக்குக்கு, காஞ்சீபுரம் கே. டி. எஸ். மணி ஒரு எடுத்துக்காட்டு கூறினார்.

கே. டி. எஸ். மணி, திருவேங்கிடம் இருவரும் காஞ்சி நகராட்சி மன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அப்போது அவர்கள் கைதாகிச் சிறையில் இருந்தனர் - வழக்கு முடிவு பெறவில்லை. இடையில், நகராட்சி மன்றத் தலைவர் தேர்தல். இருவருடைய ஓட்டுகளும் கழக வேட்பாளருக்குக் கிடைக்காதபடி தடுத்துவிட்டு, வேறு சில வேலைகளையும் செய்து முடித்துக்கொண்டால், காஞ்சீபுரம் நகராட்சி மன்றத் தலைவராக ஒரு காங்கிரஸ்காரரைத் தேர்ந்தெடுக்கலாம் என்பது காங்கிரசின் திட்டம். இதைத் தெரிந்துகொண்ட நமது கழகத்தவர், மணி, திருவேங்கிடம் இருவரையும் "பொறுப்பில்' வெளியே கொண்டு வரவேண்டும், தலைவர் தேர்தலில் அவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினர் - பொறுப்பிலே விடுதலை செய்யப்பட்டனர்.

வேடிக்கை என்பதா, விபரீதம் என்பதா கூறுங்கள் - பொறுப்பிலே விடுதலை செய்யப்பட்ட இரு தோழர்களும் காஞ்சீபுரம் திரும்பினார்கள்; மறுநாளே பொறுப்பு ரத்து செய்யப்பட்டு சிறைக்கு மறுபடியும் அழைத்துச் செல்லப் படுகிறார்கள். காஞ்சீபுரத்துக் காங்கிரஸ்காரர்கள் கைகொட்டிக் கேலியாகச் சிரிக்காமலிருக்க முடியுமா? "பயல்களை மறுபடியும் உள்ளே தள்ளியாச்சு!' என்று எக்காளமிடுகின்றனர்.

முன்னாள் பொறுப்பிலே விடுதலை - மறுநாள் அந்த உத்திரவு திரும்பப் பெறப்படுகிறது மறுபடியும், சிறை! யார் காரணம் கேட்பது! எவருக்கு இதற்கான விளக்கம் புரிகிறது! போக்கு எவ்விதம் இருக்கிறது என்பதுதான் நன்றாகத் தெரிகிறது. தெரிந்து?

உயர்நீதிமன்றம் சென்று, அந்த இரு தோழர்களுக்கும், மறுபடியும் பொறுப்பிலே விடுதலை கிடைத்து, அவர்கள் தேர்தலில் கலந்துகொண்டு, கழகத்தவரும் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவ்விதமான போக்கு குறித்து பேசிக்கொண்டிருந்தோம். இதற்குத் தனித்தனியான பரிகாரம் கிடையாது; ஒரே கட்சிதான் நாட்டை ஆளும் என்ற நிலைமையை மாற்றி அமைத்து, உண்மையான மக்களாட்சியை ஏற்படுத்துவது ஒன்றுதான், விரும்பத்தகாத முறைகேடுகளையும், விபரீதமான போக்கினையும் ஒழித்துக் கட்டும் வழி என்று கூறினேன். நண்பர்களின் கண்கள், அடுத்து வர இருக்கும் பொதுத் தேர்தலின்மீது பாய்ந்திடக் கண்டேன். விழிப்புடன் இருக்கிறார்கள், உறுதியுடன் இருக்கிறார்கள் என்ற எண்ணம் இனிப்பளித்தது.

5-5-1964

ஓவியம் வரைவதிலே, மற்ற இரு நண்பர்களும் அக்கறை இழந்துவிட்டனர்; நானோ தொடர்ந்து அதிலே விருப்பம் கொள்கிறேன். இரவு வெகுநேரம் வரையில், வண்ணங்களைக் கலப்பதும், எதை எதையோ வரைவதும், மனதுக்குப் புதுவிதமான மகிழ்ச்சி தரத்தான் செய்கிறது. நண்பர்கள் என்னை மகிழச் செய்வதற்காக, ஓவியம் நன்றாக இருக்கிறது என்று கூறுகிறார்கள் என்பது எனக்கும் புரிகிறது; கண் இல்லையா காண! ஓவியம் வரையத் தெரியாவிட்டாலும், வண்ணங்களைக் குழைத்து எதையாவது வடிவமெடுக்கச் செய்யும்போது களிப்பு எழுகிறது. ஓவியக் கலையில் தேர்ச்சி பெற்றவர்கள், அந்தக் கலையில் எத்துணை இனிமை காண முடியும் என்பதை உணர இது ஒரு வாய்ப்பு. மலையும் மடுவும், மாவும் பலாவும், காலை கதிரவனும் மாலை மதியமும், கோட்டை கொத்தளங்களும் கொடி படர்ந்த குடிலும், வாளேந்திய வீரனும் வேல் விழியாளும், பாசம் நிறைந்த பார்வையும் பகை கக்கும் விழிகளும், மழலைமொழிக் குழவியும் பெருமிதமிகு தாயும், இன்னோரன்ன பிற கட்சிகளைத் தமது கை வண்ணத்தால் ஓவியர்கள் உயிர்பெறச் செய்யும்போது, தனித்தன்மை வாய்ந்த ஓர் மகிழ்ச்சி பிறக்கத்தான் செய்யும். ஓவியக் கலையினர் குறித்து, நான் படித்திருந்த சிறு கதைகள், நெடுங் கதைகள் பலவும் இந்த நேரம் என் நினைவிற்கு வருகின்றன.

இன்றுகூட, உட்அவுஸ் என்பவர் எழுதியுள்ள ஒரு கதைத் தொகுப்பில் ஓவியம்பற்றிய தொடர்புடைய சிறு கதை ஒன்று படித்தேன். ஓவியம் வரைவதிலே விருப்பம் மிகுந்திருந்த வேளை - எனவே, அந்தச் சிறு கதை எனக்கு அதிக அளவு சுவை அளித்தது.

ஓவியம், நூல் எழுதுதல், இசை பயிலுதல், நடனம் போன்ற நுண்கலைகளில் பெரிதும் நாட்டம்கொண்டு, ஆண்டுக் கணக்கில் ஈடுபட்டு, வறுமையால் தாக்கப்பட்டபோதிலும், உலகம் பாராட்டத்தக்க கலைத்திறனை ஒரு நாள் இல்லாவிட்டால் மற்றோர் நாள் பெறத்தான் போகிறோம். பொன்னும் பொருளும் வந்து குவியத்தான் போகிறது என்ற நம்பிக்கையின் துணையுடன் உழல்பவர்களைக் குறித்து, நம் நாட்டில் உள்ளவற்றினைவிட, மேனாடுகளில் அதிக அளவுள்ள கதைகள், கட்டுரைகள், கவிதைகள் வெளிவந்துள்ளன.

உட்அவுஸ், நகைச்சுவை ததும்பும் எழுத்தோவியம் புனைபவர் - வாழ்க்கைச் சிக்கல், பிரச்சினைகள் ஒன்றோடொன்று மோதிப் போரிடுதல் போன்றவைகளைவிட, அசட்டுத்தனம், போலிகளில் மதிப்பு வைத்திடும் பான்மை, மேட்டுக்குடியினரின் மேனாமினுக்கித் தன்மை, போன்றவைகளைப் பற்றி அதிகச் சுவையுடன் எழுதுபவர் - எனினும் அந்த எழுத்தோவியத்தில் வெறும் நகைச்சுவை மட்டுமல்ல, இழையோடுவதுபோல நல்ல கருத்தும் இருக்கும்.

ஒரு வீட்டின் மாடி அறையில் ஒருவன் குடி இருக்கிறான்; கீழ் அறையில் ஒரு பெண் குடி இருக்கிறாள்; வீட்டின் மற்ற மற்றப் பகுதிகளிலும் இதுபோலப் பலர் குடி இருக்கிறார்கள். வாடகை வீடு.

கீழ்த்தளத்தில் குடி இருக்கும் பெண், இசைத்துறையில் வெற்றிபெற விரும்பி வெகுபாடுபடுபவள்; பாடல்கள் புனைகிறாள், பாடிப் பார்க்கிறாள், இசைக் கருவியின் துணையைச் சேர்த்து சுவை எங்ஙனம் இருக்கிறது என்று தெரிந்துகொள்ள முனைகிறாள். சிலருக்கு இசைப்பயிற்சி அளிப்பதிலே கிடைக்கும் சொற்ப ஊதியத்தை வைத்துக்கொண்டு, புன்னகை தரும் பொற்காலம் வரப்போகிறது என்று காத்துக்கொண்டிருக்கிறாள்.

மாடி அறையில் குடி இருப்பவன், இந்தப் பெண்ணுடைய இசை ஈடுபாட்டைக் கலைப்பதுபோல, அறையின் தரையில் தட்டி ஒலி எழுப்புகிறான். அவளோ இசை நுணுக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு, தான் புனையும் பாடல், இசை உலகினால் ஏற்றுக்கொள்ளப்படத்தக்க தரம்பெற என்ன செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் அல்லற்படுகிறாள்! மேலே இருந்து கிளம்பும் ஒலியோ அவளுடைய மனநிலையை, சிந்தனைத் திறனைக் கெடுக்கிறது. பொறுத்துப் பொறுத்துப் பார்க்கிறாள். முடியவில்லை. மளமளவென்று மாடி ஏறி, ஒலி கிளம்பும் அறையைக் கண்டறிந்து, கதவைத் தட்டுகிறாள்; திறக்கப்படுகிறது. உள்ளிருந்து வந்தவனோ, அவளுடைய கோபத்தை, வெறும் பார்வையாலேயே போக்கிவிடக்கூடியவனாக இருக்கிறான். நல்லவனாகவே இருக்கிறான். அழகாகவும்கூட இருக்கிறான். எரிந்துவிழ வேண்டும், பொறிந்து தள்ள வேண்டும் என்ற துடிப்புடன் வந்தவள், அவனுடைய தோற்றத்தைக் கண்டு, மென்மையைக் குழைத்துப் பேச்சை வழங்குகிறாள்.

"மேலே இப்படி ஒலியைக் கிளப்பியபடி இருக்கலாமா? என் வேலையைக் கெடுக்கிறீர்களே! இசைபற்றிய எண்ண ஓட்டம் தடைப்படுகிறது! ஏன் அப்படி ஒலி எழுப்புகிறீர்கள்?''

"அதுவா? அது. . . அது. . . நீங்கள், ஒரே பாடலைத் திரும்பத் திரும்பப் பாடுகிறீர்கள் - சில சமயம் அந்தப் பாடலின் ஒரே அடியைக்கூடத் திரும்பத் திரும்ப பல தடவை பாடுகிறீர்கள். . . சலிப்பு ஏற்படும்படி. . . அது ஏன்?''

"நான், பாடுகிறேன் என்றா எண்ணுகிறீர்கள். பாடகர்களுக்கான புதுப் பாடல்களை இயற்றுகிறேன். அந்தப் பாடல்கள் எப்படி இருக்கும் என்பதைக் கண்டறிய, மெருகேற்ற, திரும்பத் திரும்பப் பாடுகிறேன்.''

"பாடல்கள் புனைவது மற்றவர்களுக்காகவா?''

"ஆமாம், திறமையாகவும் இனிமையாகவும் பாடக் கூடியவர்களுக்காக. அவர்கள் பாடுவதாலே அந்தப் பாடல்கள் புகழ்பெறும் - புகழ் பெற்ற பாடல்களை நாட்டு மக்கள் விரும்பி விலை கொடுத்து வாங்குவார்கள்.''

"அப்படியா? இப்போது உங்களுடைய பாடலை எந்த இசைவாணனும் வாங்கவில்லையா?''

"இல்லையே! ஒரு பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. அதற்கே ஏகப்பட்ட பணச் செலவு?''

"யாருக்குப் பணச் செலவு?''

"எனக்குத்தான். நான் பணம் கொடுத்து வெளியிட்டது தானே. பலரும் வாங்கினால், செலவழித்த பணமும் வரும், வருவாயும் கிடைக்கும். அது சரி, நீங்கள் என்ன?''

"நானா? நான் ஒரு ஓவியன். . . அதாவது ஓவியம் வரைகிறேன். . . வரைந்து வரைந்து திறமை பெற்றால் ஓவியனாகலாம் அல்லவா?''

"ஓவியமா! எனக்கு நிரம்ப விருப்பம் ஓவியம் காண. என்ன வரைந்திருக்கிறீர்கள்?''

அவன் தான் வரைந்திருந்த ஓவியத்தைக் காட்டினான் - ஒரு பூனையை குழந்தை தூக்கிவைத்துக்கொண்டிருக்கும் காட்சி. அந்த ஓவியம் மிக நன்றாக இருப்பதாக அவள் கூறினாள்; அவளுடைய இசைப்புலமையை அவன் புகழ்ந்தான். உலகமோ, இருவருடைய கலையையும் கண்ணெடுத்துப் பார்க்க மறுத்தது. அவர்கள் இருவரும் கண்படைத்த காரணத்தால், ஒருவர் கலையை மற்றவர் புகழ முடிந்தது; அதற்குக் காரணம், ஒருவர் உள்ளத்தில் மற்றவர் இடம் பெற்றதுதான்.

அதே வீட்டில் மற்றோர் அறையில் மற்றோர் ஓவியன் திறமைமிக்கவன் என்ற நினைப்புகொண்டவன்; நிலை சாதாரணம்தான்.

அவன், பூனையும் குழந்தையும் என்ற ஓவியத்தைப் பார்த்துவிட்டு, ஏளனம் செய்கிறான். குழந்தை இப்படியா இருக்கும், பூனைகூடச் சரியாக இல்லையே என்று குத்தல் பேசுகிறான்; அவளுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வருகிறது. இளம் ஓவியனோ, குற்றம் இருப்பதை எடுத்துக்காட்டியவருக்கு நன்றி கூறுகிறான்.

"அந்த ஓவியனுக்கு ஏன் அவ்வளவு பணிந்து போகிறீர்கள். உங்கள் ஓவியம் நேர்த்தியாக இருக்கிறது. இவன் யார், குறைகூற? இவனுடைய ஓவியங்கள் மட்டும், ஊரிலே ஓகோவென்று விலை போகின்றனவோ? இனி அவனிடம் பணிந்து போகக்கூடாது.''

காரிகை, கண்டிப்பாகக் கூறுகிறாள்; காதல் உணர்ச்சி அவளுக்கு அத்தனை சொந்தத்தை ஏற்படுத்தி வைத்துவிடுகிறது.

பெரிய ஓவியனுடைய இயற்கைக் காட்சி ஒன்றை நல்ல விலை கொடுத்து, ஒருவர், வெளியூர்க்காரர் வாங்குகிறார் - பேட்ஸ் என்பது அவர் பெயர். . . முன்னிலும் அதிக முடுக்காகி விடுகிறான் பெரிய ஓவியன்.

இளம் ஓவியன், கடை கடையாகக்கொண்டு போய்க் காட்டுகிறான் தன் ஓவியத்தை. கடைசியில் பெரிய ஓவியனுடைய சிபாரிசின் பேரில், ஒரு கடைக்காரர், "வைத்துவிட்டுப் போங்கள், யாராவது பார்த்து ஆசைப்பட்டால், விற்க முயற்சிக்கிறேன்' என்று கூறி அனுப்பினார்.

"கவலைப்படாதீர்கள். காலம் இப்படியேவா இருந்துவிடப் போகிறது. நல்ல காலம் பிறக்கும். நல்ல விலைக்கு ஓவியத்தை வாங்கப் போகிறார்கள் பாருங்கள்'' என்று பெண், பரிவுடன் பேசி வந்தாள்.

நல்ல காலம் பிறந்தது. நல்ல விலைக்கு விற்க ஆரம்பித்தது. ஓவியம் அல்ல; அவளுடைய பாடல்கள். பல பதிப்புகள் வெளி வந்தன; எல்லாம் உடனுக்குடன் செலவாயின. பணம் குவியலாயிற்று, அவளுக்கு மகிழ்ச்சிதான் - ஆனாலும், பூனையும் குழந்தையும் மட்டும் விலைபோகவில்லையே என்ற விசாரம் அவளுக்கு.