அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


சிறை நிர்வாகமே தனி!
2

ஒரு நாள், டெலிபோனில் யாரோ பேசுகிறார்கள் - அவள் பதில் அளிக்கிறாள்.

"பேட்ஸ் இருக்கிறாரா?''

"இல்லையே. அப்படி ஒருவரும் இங்கு கிடையாதே.''

"எட்டாம் நம்பர் வீடுதானே?''

"ஆமாம்.''

"மாடி அறையில் இருக்கிறாரே. . . அவர்தான் பேட்ஸ். . . தெரியாதா. . . பரவாயில்லை. . . அவர் வந்ததும் நான் சொன்னதாகச் சொல்லுங்கள். . .''

"நான் என்றால், யார்?'' "பேட்சுடைய நண்பன். அவனுடைய விடுதியில் தங்கி இருப்பவன். அவனுக்குத் தெரியும். உங்களுக்கு, ஏன் அந்த விவரமெல்லாம். வந்த உடன் அவனைக் கேளுங்கள். கட்டு கட்டாக பாடற் புத்தகங்கள் வந்து குவிகின்றனவே; இடம் கொள்ளாமல், அவைகளை என்ன செய்வது? என்று கேளுங்கள். நான் குடி இருக்க இடமே கொஞ்ச நாளில் இல்லாமல் போய்விடும்போல இருக்கிறது. அவ்வளவு கட்டுகள் ஒவ்வொரு நாளும் - ஒரேவிதமான பாடல். . . அதுமட்டுமா, எத்தனை பெரிய படம், இயற்கைக் காட்சியாம், சிகப்பும் நீலமும், பச்சையும் மஞ்சளுமாக குழைத்து வைத்திருக்கிறார். அதை என்ன செய்வது. . .?''

"பாடல், யார் வெளியிட்டது? எந்தக் கம்பெனி?''

பாடல் வெளியிட்ட கம்பெனியின் பெயரை டெலிபோனில் அந்த ஆசாமி சொன்னதும், அவளுக்கு எல்லாம் புரிந்து விட்டது. மாடி ஆசாமி ஓவியன் அல்ல - சீமான். அவன்தான், விலை போகாதிருந்த பாடல்களை வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கிறான் - தன்னை உற்சாகப்படுத்த, பெரிய ஓவியன் படத்தை வாங்கியதும் மாடி அறை சீமானேதான் என்பது புரிந்தது. கோபமும் வந்தது, ஒரு புன்னகையும் தவழ்ந்தது. அவனும் எல்லாவற்றையும் ஒப்புக்கொண்டான். காரணமும் கூறினான்; காதல்.

அது மட்டுமா சொன்னான்? என்னுடைய ஓவியத்தைக்கூட விலை கொடுத்து வாங்க ஒருவர் முன்வந்திருக்கிறார்; இதோ, கடைக்காரருக்கு, அவர் அனுப்பிய கடிதம் என்று கூறி ஒரு கடிதத்தைக் காட்டினான். அவள் கூச்சத்துடன் தலை கவிழ்ந்தபடி நிற்கிறாள் - கடிதம் அவள் எழுதியது.

இந்தக் கருத்துடன் தீட்டப்பட்ட சிறுகதை, நான் படித்தது. ஆரவனும் ஆரணங்கும், கதையில்; எனவே காதல் காரணமாக அமைந்தது. நான் வரையும் ஓவியங்களை நண்பர்கள் பார்த்து மகிழ்ச்சி தெரிவிக்கிறார்கள் என்றால், அதற்குக் காரணம், என்னை மகிழச் செய்ய வேண்டும் என்ற எண்ணம்தான் - வேறென்ன? அப்படிப்பட்ட பற்றும் பாசமும் கொண்ட நண்பர்களின் முகாமாக உள்ள கழகத்தில் இருக்கிறோம் என்பதிலே நாம் ஒவ்வொருவரும் பெருமிதம் அடையத்தான் செய்வோம். இவ்விதமான பற்றும் பாசமும், கலையாமல் குலையாமல் இருக்கும் வரையில், நமது கழகத்தை எத்தனைப் பெரிய வலிவுள்ளவர்கள் கூடித் தாக்கினாலும் அச்சமில்லை என்ற உணர்ச்சி என்னை ஊக்குவித்தபடி இருக்கிறது.

6-5-1964

பகல் பொழுதைக் கழிப்பதைவிட, இரவுகள்தான் அதிகமாகத் தொல்லை தருகின்றன. அதிலும் இப்போது மிகக் கடினமாக இருக்கிறது. செங்காய்களைப் பறித்து வந்து, அவை கனிவதற்காக வைக்கோற் போரில் போட்டு ஒரு அறையில் போட்டு மூடிவைப்பார்கள், குமுறிக் கனிவதற்காக. இரவு, அறைகளிலே உள்ள நிலைமை இதுபோல். காற்று துளியும் கிடையாது. வியர்வை பொழிந்தபடி, இரண்டு மணிக்காவது முன்பு தூக்கம் வரும். இப்போது மூன்று, நான்குகூட ஆகி விடுகிறது. பகலில் உள்ள வெப்பத்தை இயற்கையாக வீசும் காற்று தணியச் செய்கிறது; இரவில் ஒரே புழுக்கம். நாங்கள் உள்ள பகுதியில் உள்ள மரங்களில் சிலவற்றில் இலை உதிர்ந்து மொட்டையாகி நின்றன. பாதாம் மரத்தின் இலைகள் பச்சையாக இருந்தவை, இரத்தச் சிகப்பாக மாறின; பார்ப்பதற்கு அழகாகவும் இருந்தது; ஆனால் சிகப்பு கருஞ்சிவப்பாகி, மஞ்சள் கலந்ததாகி, சருகாகி உதிர்ந்துவிட்டன.

நான்கூட வேடிக்கைக்காக நண்பர்களிடம் இங்கே கூறினேன் - உங்களுக்கெல்லாம், எப்போது தெரியுமா? இந்த பாதாம் மரத்திலுள்ள மற்ற இலைகளும் உதிர்ந்தது என்று. இலைகள் உதிர்ந்து, மொட்டையாகிவிட்ட அந்த மரம், இந்த நிலையில் தன்னை உலகம் விரும்பாது என்பதால் மேலும் மறுபடியும் துளிர்க்கத் தொடங்கிவிட்டது. மரத்திலேயே கல்லறையும் தெரிகிறது, தொட்டிலும் தெரியத் தொடங்குகிறது. இங்கு உள்ள அரச மரம் முன்பு சளைத்தும் இளைத்தும் காணப்பட்டது. இப்போது பச்சைப் பசேலென மாறிக்கொண்டு வருகிறது. தொலைவிலிருந்து பார்க்கும்போது, இலைகளை எடுத்துத் தடவி மகிழலாமா என்றுகூட ஆசை பிறக்கிறது. சற்றுத் தொலைவில், நாங்கள் உள்ள பகுதிக்கு வெளியே மற்றோர் அரச மரம். அந்த மரம், இந்த நேரத்தில், மொட்டையாகிக்கொண்டு வருகிறது; பத்து நாட்களுக்கு முன்பு இலைகள் அவ்வளவும் மஞ்சளாகி, காலைக்கதிரவன் ஒளியில் பொன் தகடுகள்போலக் காட்சி அளித்து வந்ததைக் கண்டேன். இப்போது, இலைகள் வேகவேகமாக உதிர்ந்துவிடக் காண்கிறேன்; வெகு விரைவில் மொட்டையாகி வருகிறது, அந்த அரச மரத்தில், காக்கை கூடு ஒன்று அமைத்துக்கொண்டிருக்கிறது, உச்சிக்கு அருகில். இங்கு அறையிலிருந்து பார்த்தாலேகூடத் தெரிகிறது. முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் நிலைபோலும். அதனால், காக்கை காவல் காத்தபடி இருக்கிறது; ஒரு காக்கை காவல் பார்க்கும்போது மற்றோர் காக்கை இரைதேட வெளியே செல்கிறது. முறை போட்டுக்கொண்டு வேலை பார்க்கின்றன. இதைப் பார்த்துவிட்டு, எனக்குக் காட்டி, என்னையும் பார்க்கச் சொன்னவர் அன்பழகன். எதற்காகப் பார்க்கச் சொன்னாரோ தெரியவில்லை! ஒருவேளை, காக்கை குருவிகள்கூடக் குடும்பத்தைக் கட்டிக்காத்து வருகின்றனவே, நீ, எங்களை எல்லாம் குடும்பத்தைக் கட்டிக் காத்திடும் கடமையையும் மறந்து சிறையிலே வந்து வாடும்படி செய்திருக்கிறாயே, நியாயமா என்று கேட்கிறாரோ! தெரிய வில்லை. அவர் அவ்விதமான எண்ணம் கொண்டிருந்தாலும் கொண்டிராவிட்டாலும், பலருடைய குடும்ப வாழ்க்கையில், சோகப்புயல் வீசும் நிலை ஏற்பட்டிருக்கிறது என்பதை நான் உணருகிறேன்; ஆனால் அவர்கள் தங்கள் நெஞ்சு உரம் காரணமாக, அந்தச் சோகத்தைத் தாங்கிக்கொள்கிறார்கள் என்பதையும் நான் உணர்ந்து பெருமிதமடைகிறேன்.

நாட்டு மக்களை, இன்றுள்ளவர்களை மட்டுமல்ல, எதிர் காலத்தவர்களையும் வாட்டக்கூடிய ஒரு கேட்டினை எதிர்த்து, சிலராவது, தம்மைத்தாமே வருத்திக்கொள்வது தூயதோர் தொண்டு என்ற உணர்ச்சி, தனிப்பட்ட வாட்ட வருத்தத்தை விரட்டிவிடக்கூடிய, வலிவு கொண்டது, மேன்மை நிறைந்தது. கழக வளர்ச்சியைக் கெடுக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள், நமது அறப்போர் குறித்துக் கேலி பேசுவதை அறிந்து, துவக்கத்தில், சிறிதளவு துக்கப்பட்ட தோழர்கள்கூட, தாங்கள் சிறை புகுந்திருப்பது நல்ல காரியத்துக்காக, அதன் பலன் உடனடியாக இல்லாவிட்டாலும் ஓர் நாள் கனிந்தே தீரும் என்ற நம்பிக்கை பெறுகிறார்கள், இந்தி ஆதிக்கத்தைத் தமிழர்கள் எதிர்க்கின்றனர் என்று இன்று எடுத்துக்காட்டுவது மட்டுமல்ல, எதிர்ப்புணர்ச்சி காட்டப்பட்டது என்று என்றென்றும் கூறித் தீரவேண்டிய, ஒப்புக்கொண்டாகவேண்டிய ஒரு நிலை ஏற்படத்தான் போகிறது. கொடுமைகளை எதிர்த்து பல்வேறு நாடுகளில், பல்வேறு காலங்களில் சிறை சென்றவர்களைப்பற்றிப் பேசி, எழுச்சி பெறுவதிலே தனி இன்பம் காண்கிறோம். இந்த சென்னைச் சிறையில் நான் இந்தி எதிர்ப்பு காரணமாகவே முதன்முதலாகவே 1939லில் புகுந்தேன். அந்த நாட்களைப்பற்றி, நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். சிறையில், அப்போதும் இதேபோலக் கெடுபிடி இருந்ததா? என்று நண்பர்கள் கேட்டார்கள். இல்லை! அப்போது இருந்த முறையிலே பெரும் மாற்றம் ஏற்பட்டுவிட்டிருக்கிறது, அப்போது ஒரு பகுதியில் உள்ள நமது தோழர்கள் மற்றோர் பகுதியில் உள்ள நமது தோழர்களைப் போய்ப் பார்த்துவிட்டு வரக்கூட அதிகாரிகள் அனுமதி அளித்தார்கள். வாராவாரம் நடத்தப்படும் "பார்வையிடும்' சடங்கிலேகூட, எங்களை ஈடுபடுத்துவதில்லை. இப்போது காங்கிரஸ் அரசுக்கு நாம் விரோதிகள். ஆகவே, நாம் எவ்வளவுக்கெவ்வளவு கொடுமைகளை அனுபவிக்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு காங்கிரஸ் அரசு மகிழ்ச்சி அடையும் என்ற ஒரு இலக்கணத்தை வைத்துக்கொண்டே, சிறை நிர்வாகிகள் நடந்துகொள்கிறார்கள் என்று தோன்றுகிறது. முன்பு, இவர்கள் இந்தியை எதிர்க்கிறார்கள் என்று மட்டுமே, காங்கிரஸ் அரசு நினைத்தது; இப்போது இவர்கள் இந்தியை அல்ல, காங்கிரஸ் அரசை எதிர்க்கிறார்கள் என்று நினைக்கிறார்கள். அந்த நினைப்பு காங்கிரஸ் ஆட்சியாளர்களுக்குக் கசப்பையும் கோபத்தையும் கிளப்பிவிடுகிறது, ஒரு கட்சி அரசு நடத்துவதை எதிர்த்து ஆட்சி நடத்தும் வாய்ப்பினை எமக்குத் தாருங்கள் என்று பொது மக்களை அணுகிக் கேட்கும் உரிமைதான், ஜனநாயகத்துக்கு அடிப்படை. இந்த அடிப்படையில் நம்பிக்கை அற்றுப்போகிற காரணத்தால், காங்கிரஸ் அரசையா எதிர்க்கிறீர்கள் என்று, காங்கிரஸ்காரர்கள் கனல் கக்குகிறார்கள். அந்தக் கனலின் சிறு பொறிகள், இன்றைய சிறை நிர்வாகத்தில் நிரம்பி இருக்கக் காண்கிறேன். முன்பு நிலைமை இப்படி இல்லை என்று நான் விவரம் கூறினேன்.

7-5-1964

மாயவரத்திலிருந்து தருவித்த எண்ணெய் பல நாள் தடவியும், கை வலி நீங்கவில்லை. சலித்துப்போய், இன்று அந்த எண்ணெய் தடவிக்கொள்வதை நிறுத்திவிட்டேன். வெளியே வந்த பிறகு தக்க முறையில் மருத்துவம் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதை நண்பர்கள் வலியுறுத்தினார்கள். நானும் அது தேவைதான் என்பதை உணருகிறேன்.

இராமாயணப் பிரசாரம், கதா காலட்சேபமாகச் சென்னையிலும் வெளி இடங்களிலும் வேகமான அளவிலே நடத்தப்பட்டு வருவது கண்டு, பெரியார் கடுங்கோபம் கொண்டிருக்கிறார்; எதிர்ப்பிரசாரத்துக்காகத் தொண்டர் படை நடத்தப்போகிறார் என்று செய்தி வந்திருப்பது பற்றி இன்று நண்பர்கள் என்னிடம் பேசிக்கொண்டிருந்தனர். பெரியார், எந்த நேரத்தில் எவ்விதமான போக்குடன் நடந்துகொள்வார் என்பதை நம்மாலே கூறமுடியாது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், இத்தகைய எதிர்ப்பு காங்கிரசுக்குக் கேடாக முடியும் என்று அவருக்கு எடுத்துக் கூறப்பட்டால் போதும், தமது திட்டத்தை விட்டுவிடுவார்.

இதிலே ஒரு வேடிக்கை என்னவென்றால், இராமாயண காலட்சேபம் செய்யும் கிருபானந்தவாரியாரும், இராமாயண எதிர்ப்புப் பிரசாரம் செய்யும் பெரியாரும் காங்கிரசுக்கே ஓட்டுச் சேகரிக்கும் காரியத்தைச் செம்மையாகச் செய்கிறார்கள். இராமாயண ஆதரவு இராமாயண எதிர்ப்பு எனும் இரண்டுமே காங்கிரசுக்கு ஓட்டுப் பெற்றுத்தரப் பயன்படுகிறது. பகுத்தறிவாளர், பழமை எதிர்ப்பாளர், துடிப்புள்ள போக்கினர் ஆகியோரிடம் பெரியார் இராமாயண எதிர்ப்புப் பிரசாரம் செய்யட்டும், கையோடு கையாகக் காங்கிரசுக்கு ஓட்டு திரட்டித் தரட்டும், பெற்றுக்கொள்ளலாம்; பழமை விரும்பிகள், பக்தர்கள் ஆகியோரிடை கிருபானந்தவாரியார் இராமாயண காலட்சேபம் சுவையாகச் செய்யட்டும், அதே மூச்சில் காங்கிரசுக்கு ஓட்டு வாங்கித் தரட்டும், பெற்றுக்கொள்ளலாம்; நமக்கு இந்த இரண்டு உத்திகளில் எது கெலித்தாலும் எது தோற்றாலும் கவலை இல்லை, நமக்கு வேண்டியது ஓட்டு; இருவரும் அதை நமக்கு வாங்கிக் கொடுக்கட்டும், என்பது இன்று தமிழகக் காங்கிரசை நடத்திச் செல்லும் முதல்வருடைய எண்ணம். நாட்டு மக்கள் மனதை, இராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் என்ன, நமக்கு வேண்டியது நாட்டை ஆளும் ஓட்டு வலிவு - அதை இராமனைக் கடவுள் அவதாரம் என்று கூறிக் கொள்பவரும், கபட வேடதாரி என்று கண்டிப்பவரும், நமக்காக அரும்பாடுபட்டு பெற்றுத் தர முன்வருகின்றபோது, நாம் ஏன் அந்தப் பொன்னான வாய்ப்பை இழந்துவிட வேண்டும் - இராமாயண காலட்சேபமும் நடக்கட்டும், எதிர்ப்பும் நடக்கட்டும் என்று காங்கிரஸ் கட்சி கருதுகிறது என்பது குறித்து எடுத்துச் சொன்னேன்.

பெரியாரின் போக்கு எப்போது எப்படி வடிவமெடுக்கும் என்று அறிந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கு ஏது - முன்போல. இன்று இந்தப் பேச்சு எழுந்தபோது அவருடன் இருந்த நாட்கள், பிரிந்து வந்த நிலை இவைபற்றி எண்ணிப் பார்த்தேன். கணக்கெடுத்துப் பார்க்கும்போது, பெரியாருடன் இணைந்திருந்து நான் பணியாற்றிய காலத்தைவிட, அவரை விட்டுப் பிரிந்து வந்து பணியாற்றிவரும் காலம் அளவில் அதிகம் என்பது தோன்றிற்று, நான் அவருடன் மிக நெருக்கமாக இருந்து பணியாற்றிய காலம் 1939லிருந்து 1949 வரை - பத்தாண்டு காலம் - அவரை விட்டுப் பிரிந்து பணியாற்றத் தொடங்கி இப்போது பதினைந்து ஆண்டுகள் ஆகின்றன. இந்தக் கணக்கு பார்த்தபொழுதுதான், எனக்கே வியப்பாக இருந்தது - நேற்று - பிரிந்ததுபோல ஒரு நினைப்பு இருந்து வந்தது - அது எத்தகைய பொய்த் தோற்றம் என்பதை, இந்தக் கணக்கு மெய்ப்பித்தது.

இன்று எனக்கு ஒரு புதிய நட்பு கிடைத்தது - எதிர்பாராத முறையில். நூற்றுக்கணக்கான சிட்டுக் குருவிகள் இங்கு உள்ளன என்பதுபற்றி முன்பு குறிப்பிட்டேன். அந்தக் குருவிகளில் ஒன்றை, பக்குவமாகப் பறந்து தப்பித்துக்கொள்ள முடியாததை, ஒரு காக்கை கொத்திவிட்டது. - இங்குள்ளவர்கள் காக்கையை விரட்டி குருவியைக் காப்பாற்றினார்கள் - என்னிடம் வந்து சேர்ந்தது. எனக்குத்தான், பறவைகள் வளர்ப்பதிலே மிகுந்த விருப்பமாயிற்றே, குருவி கிடைத்ததாலே மிகுந்த மகிழ்ச்சி. அதை எப்படி வளர்ப்பது என்பதுபற்றி நெடுநேரம் பேசி, நாளையத் தினம் ஒரு கூண்டு செய்வது என்று முடிவு செய்து, இன்றிரவு மட்டும் ஒரு பெரிய கூடையில் குருவியைப் போட்டு வைக்கலாம் என்று திட்டமிட்டோம். பகலெல்லாம் குருவியைப் பார்ப்பதிலேயும், அதற்குத் தீனி தருவதிலேயும் தனியான மகிழ்ச்சி பெற்றேன். மாலை, அறை பூட்டப்படுகிறபோது பெரிய ஏமாற்றம் என்னைத் தாக்கிற்று, குருவி எப்படியோ எங்கேயோ பறந்துபோய்விட்டது. தேடிப் பார்த்துப் பலன் காணவில்லை. அந்தக் கவலையுடன் இன்றிரவைக் கழிக்கவேண்டியதாகிவிட்டது.

இன்று பிற்பகல், மதியை பெரிய மருத்துவமனைக்கு நாளையத்தினம் அனுப்பப்போவதாக, டாக்டர் கூறிவிட்டு சென்றார்; என் கை வலிக்கும் ஊசி போட்டார்.

8-5-1964

குருவி காணாமற் போய்விட்டதுபற்றி நான் மிகுந்த கவலையாக இருப்பது தெரிந்த நண்பர்கள், இன்று விடிந்ததும், குருவியைத் தேட ஆரம்பித்திருக்கிறார்கள். அந்தக் குருவி, தப்பிச் சென்றதே தவிர, நீண்டதூரம் பறந்துபோக முடியாததால், காக்கைக்குப் பயந்துகொண்டு, என் அறைக்கு எதிர்ப்புறத்தில் இருக்கும் மாமரத்தில் பதுங்கிக்கொண்டிருக்கிறது. விடுவார்களா! பிடித்துக்கொண்டு வந்து கொடுத்தார்கள் - மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். அதை மீண்டும் ஒரு முறை இழந்துவிடலாமா? ஆகவே உடனே, கூண்டு தயாரிக்கும் வேலையைத் தொடங்கினோம். தோழர்கள் கே. டி. எஸ். மணியும், ஏகாம்பரமும், இரண்டு அட்டைகளை, மூங்கில் குச்சிகள், தென்னை ஈக்குகளைக் கம்பிகளாக்கி, கூண்டாக மாற்றிவிட்டார்கள். உள்ளே குருவி உட்கார, ஊஞ்சல்போன்ற அமைப்பு - தீனிக்கு ஒரு சிறு குவளை - பல்பொடி டப்பா - மற்றோர் குவளை தண்ணீருக்கு! இத்தனை ஏற்பாடுகளையும் செய்து முடித்துக் கொடுத்தார்கள் - குருவி கூண்டிலே, முதலில் கவலையுடன் இருந்தது - ஆனால் மெல்ல மெல்ல இரை தின்னத் தொடங்கிற்று. அதை வேடிக்கையாகப் பார்த்துக்கொண்டிருப்பதிலேயே, நீண்ட நேரம் ஈடுபட்டிருந்தேன் என்ன இருந்தாலும் தன்னிச்சையாக பறந்து திரிந்து மகிழ்ந்து கொண்டிருந்த குருவியைப் பிடித்துக் கூண்டிலிட்டு இம்சிக்கலாமா; பாபம் அல்லவா என்று கேட்கத் தோன்றும் பலருக்கும். இந்தக் குருவி, இப்போதுள்ள நிலையில் வெளியே விட்டால், காக்கையால் கொத்தப்பட்டுச் சின்னாபின்னமாகி விடும். ஆகவே இப்போது அதைக் கூண்டிலே போட்டிருப்பது, அந்தக் குருவிக்கே நல்லதுதான்.

பாபம் என்று கூறுவார்களே என்ற எண்ணம் எனக்குத் தோன்றாமலில்லை! இரண்டு நாட்களாக நான் படித்துக் கொண்டிருக்கும் புத்தகம், பாபம் என்றால் என்ன - வினாவுக்கு விடைகாணும் முயற்சிபற்றியது. சித்திரலேகா எனும் கதை; ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கிறது. மொழிபெயர்ப்பு. சாம்ராஜ்யம் அமைத்து அரசாண்ட சந்திரகுப்தன் காலத்தையொட்டிப் பின்னப்பட்டுள்ள கதை. இதிலே, பாபம் என்றால் என்ன என்ற பிரச்சினை விவாதிக்கப்படுகிறது. அந்தப் பிரச்சினையைச் சுவையான ஒரு கதையாக்கித் தந்திருக்கிறார் ஆசிரியர்.

ரத்னாம்பர் என்றோர் யோகி - அவருக்கு சிவதாண், விசால்தேவ் எனும் இரு சீடர்கள். உபதேசம் முடிந்து, சீடர்கள் குருவைவிட்டுப் பிரியும் நேரம் - அவர்களுக்கு ஒரு ஐயப்பாடு எழுகிறது. பாபம் என்றால் என்ன என்பது பற்றியே ஐயப்பாடு. குரு கூறினார், பாபம்பற்றிய விளக்கம் அவ்வளவு எளிதாகக் கூறிவிட முடியாது, வெறும் தத்துவ விளக்கத்தால் மட்டும் புரிந்துவிடக்கூடியதல்ல. அனுபவத்தின் மூலம்தான், பாபம்பற்றிய விளக்கம் பெறமுடியும். வாருங்கள் உங்களை நான் அதற்கான "யாத்திரை'யில் ஈடுபடுத்துகிறேன் என்று கூறி, மலைச் சரிவை விட்டுக் கிளம்பிச் சென்று, விசால்தேவ் எனும் சீடனை குமாரகுரு எனும் யோகியிடம் அழைத்துச் சென்று, இவன் என் சீடன் - பாபம்பற்றி விளக்கம் பெற விழைகிறான், முற்றும் துறந்தவரான தங்களிடம் ஓராண்டு சீடனாக இருந்து அந்த அறிவு பெறட்டும் என்று கூறுகிறார். சிவதாண் என்பவனை, பாடலிபுரத்தில் காமக்களியாட்டத்திலே மூழ்கிக்கிடக்கும் ஒரு சீமான், பீஜகுப்தா எனும் பெயரினன், அவனிடம் அழைத்துச் சென்று விவரம் கூறி, அங்கு இருந்துகொண்டு, பாபம் என்றால் என்ன என்பதற்கான விளக்கம் பெற்றுக்கொள் என்று கூறுகிறார். இரு சீடர்களும் ஓராண்டுக்குப் பிறகு தன்னை வந்து பார்த்து, பெற்ற பாடம்பற்றிக் கூறவேண்டும் என்பது குருவின் ஏற்பாடு.

பாடலிபுரம் முழுவதும் மதிப்பு மிகப்பெற்ற யோகி குமாரகிரி - சாணக்கியரிடமே தத்துவார்த்த வாதம் புரிகிறார் - அரச அவையில் தனி இடம் பெற்றவர் - முற்றுந் துறந்தவர்.

பாடலிபுரத்திலேயே இவனைப்போல குடியிலும் கூத்தியரிடம் கூடிக் கிடப்பதிலும் எவரும் இல்லை என்ற பெயரெடுத்தவன் பீஜகுப்தா. பீஜகுப்தா ஆடலழகி சித்ரலேகாவிடம் மையல் கொண்டு, அவளுடன் காமக் களியாட்டம் நடத்திக் கிடப்பவன். அங்கு சிவதாண்.

சித்ரலேகா ஆடற் கலையில் வல்லவள் - பேரழகி - மன்னர் அவையிலும் மாளிகை வட்டாரத்திலும், அவளுடைய அழகொளி, கலையொளி, புகழொளி பரவி இருந்தது. பொற்கொடி போன்ற சித்திரலேகா, இளம் விதவை; பார்ப்பன குலம்.

ஒவ்வொரு நாளும், சித்ராவும் பீஜகுப்தாவும் மது அருந்தி, மகிழ்ச்சியில் மூழ்குவர் - பாப விளக்கம் பெற வந்திருந்த சிவன், மதுவை உட்கொள்ள மறுக்கிறான், சில நாட்கள். துவக்கத்தில் சித்ரா சிரிப்பொலி காட்டுகிறாள். அவன் மதுக் கிண்ணத்தைத் தூக்கிக்கொள்கிறான். போதையின் இனிமையைப் பெறுகிறான். இளைஞன் என்று கெக்கலி எழுகிறது.

காமக் களியாட்டத்தில் ஈடுபட்டுக் கிடக்கும் அந்த இருவரிடமும், யோகியிடம் சீடனாக இருந்து மிகுந்த உபதேசம் பெற்ற சிவன், துளியும் வெறுப்பு கொள்ளவில்லை, கோபம் கொள்ளவில்லை - பீஜகுப்தாவின் தாராளத்தன்மையும், சித்ராவின் லலிதமும் அவனை அவ்விருவரிடம் மிகுந்த நட்பு கொள்ளச் செய்கிறது.

ஒரு நாள் அரச அவையில் தத்துவ விவாதம் - சாணக்கியன் ஒருபுறம், குமாரகிரி போன்ற யோகிகள் மற்றோர் புறம்.

அண்ணன்

28-2-1965