அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


சிற்றன்னையின் இறுதி. . .
1

தம்பி!

26-2-1964 நீண்ட நாட்களுக்குப் பிறகு, விட்ட இடத்திலிருந்து எழுதத் தொடங்குகிறேன் - தொடர்ந்து எழுதுவதா வேண்டாமா என்று சில நாட்கள் எண்ணியபடி இருந்தேன். ஒரு முடிவுக்கு வர இயலாத நிலையில். எழுதும்போதே, அடக்கிவைத்திருக்கும் வேதனை பீறிட்டுக்கொண்டு வெளிவந்து, என்னைச் செயலற்றவனாக்கிவிடும் என்ற அச்சம் என்னைப் பிடித்து உலுக்கியபடி இருக்கிறது. என் இயல்பையே கருக்கிவிடத்தக்க பெருநெருப்பு என் இதயத்திலே நுழைந்தது. எத்துணை சமாதானங்கள், தத்துவ விளக்கங்கள், உலகியல் நிலைமைகள் தெரிந்திருந்தாலும், ஒவ்வொருவருக்கும் தாங்கிக்கொள்ள முடியாத துக்கம் மூண்டிடும் சம்பவம் நேரிடும்போது, அவர்கள் தமது வேதனையைத் துடைத்துக்கொள்ள முடிவதில்லை. கவிதைகள், கதைகள், விளக்கங்கள், மேற்கோள்கள் எத்துணை எத்துணை எடுத்துக் கூறப்பட்டபோதிலும், அவை யாவும் வெந்த புண்ணின்மீது தடவப்படும் கார மருந்தாகிறது - எரிச்சலை அதிகமாக்கிவிடுகிறது. இறுதியில் புண்ணை ஆற்றக் கார மருந்து பயன்படும் என்றபோதிலும், துவக்கத்தில், எரிச்சல் அதிகப்படத்தான் செய்யும்.

என் சிற்றன்னையை, நான் இழந்தேன். எனக்கே ஐம்பத்து ஐந்து வயதாகிறது என்றால், என்னை ஆளாக்கிவிட்ட என் சிற்றன்னைக்கு வயது, எழுபது அளவுக்கு இருக்கவேண்டுமே - அந்த வயதிலே அவர்கள் மறைந்ததை எண்ணி, அதிகமான வேதனைப் படலாமா என்று சிலர் சொல்லக்கூடும்; பலர் எண்ணிக் கொள்ளக்கூடும். வயது என்ன என்பதல்ல பிரச்சினை - அந்த இழப்பு என் இதயத்தில் எத்தகைய வேதனையை மூட்டிவிட்டது என்பதுதான் பிரச்சினை. என்னால் எத்தனை சமாதானங்களைத் தேடித் தேடித் தருவித்துக்கொண்டாலும், தாங்கிக்கொள்ளக் கூடியதாக அந்த வேதனை அமையவில்லை. நான் சிறைப்பட்டிருக்கும் நேரம், அவர்கள் வீட்டில் மரணத்தின் பிடியில் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள். என்னை வாழ்த்தி வழி அனுப்பிவைத்த என் சிற்றன்னை - என் வாழ்வை எனக்காக அமைத்துக்கொடுத்த என் வழிகாட்டி - எனக்காகவே, உயிர் ஊசலாடும் நிலையில், வலிவெல்லாம் இழந்து, நோயினைத் தாங்கிக்கொண்டு, வாழ்ந்து வந்த அந்த அன்புத் தாய், நான் விடுதலையாகி விடு திரும்புவதைத் தன் விழிகளால் கண்டு, மகிழ்ச்சி பொங்கிடும் நிலையில் என்னை வரவேற்க எண்ணிக் கொண்டிருந்த என் சிற்றன்னை, பேச்சிழந்து உயிரை இழந்து கொண்டிருக்கிறார்கள் காஞ்சீபுரத்தில், வீட்டில். நான், அவர்கள் பக்கம் இருந்து பணியாற்றிக்கொண்டில்லை. எனக்கு ஒரு சிறு தொல்லை, மிகச் சாதாரணமான நோய் என்றாலும், அதைக் காண இயலாமல், கலக்கமடைந்து, எனக்கான பணியிலே தம்மை ஈடுபடுத்திக்கொண்டிருந்த என் சிற்றன்னையின் கடைசி நாட்களில், அவர்களுக்குத் துளியும் பயனற்றவனாக்கப்பட்டுவிட்டேன்.

நான் அவர்களைக் காணச் சென்றபோதே, அவர்கள் நினைவிழந்து கிடந்தார்கள் - என் குரலொலி செவிபுகவில்லை. என்னைக் காண அந்தக் கண்கள் திறக்கவில்லை. அவர்கள் மரணத்திற்கான பயணத்திலே இறங்கிவிட்டார்கள் - என் கண்ணீரைக்கொண்டுகூட அவர்களை அந்தப் பயணத்திலிருந்து திரும்பிவிடச் செய்ய இயலாது என்பது, கண்டதும் புரிந்து விட்டது. புரிந்து? உணர்ச்சிகள் வாதங்களால் அடக்கப்படக் கூடியனவா? அவர்களுக்கு வந்துற்றிருப்பது, தீரக்கூடிய நோயல்ல - அதனை ஒரு நோய் என்றுகூடக் கூறுவதற்கில்லை - மூளைக் குழாய்கள் சேதமாகிவிட்டன - தேக அமைப்பிலேயே ஒரு ஊறு நேரிட்டுவிட்டது - அதனைச் சரிப்படுத்த மருந்து கிடைக்காது என்பதனை நுண்ணறிவு படைத்த மருத்துவர்கள் கூறினார்கள் - இப்போது எனக்கு அது புரிகிறது - அன்று எனக்கு, இந்த மருத்துவர்களுக்குத் துளியும் பச்சாதாப உணர்ச்சியே கிடையாதா, உயிர் போய்க்கொண்டிருக்கிறது என் சிற்றன்னைக்கு, இவர்கள், என்னிடம் "மருத்துவப் புலமை' பேசுகிறார்களே என்று ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. என் மகன் பரிமளத்திடம்தான் கோபித்துக் கொள்ள முடிந்தது, "மனித பாஷையில் பேசுங்கள்; வெறும் மருத்துவ மொழியில் பேசுகிறீர்களே!'' என்று சொன்னேன், அவன் என்னிடம் அந்த நிலைமையை விளக்கிக்கொண்டிருந்தபோது. என் மனநிலை அறிந்து, மருத்துவர்கள், மிகுந்த அக்கறையுடன், அந்த நிலையில் என்னென்ன செய்து பார்க்க முடியுமோ அவ்வளவும், செய்தபடி இருந்தனர் - என் சிற்றன்னையோ இறுதிப் பயணத்தில், மேலால் மேலால் சென்றபடி இருந்தார்கள் - நான் குமுறுகிறேன் பக்கம் நின்று. அவர்கள் நெடுந்தூரம் சென்றுவிட்டேன் மகனே! இனியும் காத்துக்கொண்டிராதே! நான் திரும்புவதாக இல்லை! திரும்பப் போவதில்லை! - என்று கூறாமற் கூறிக்கொண்டு, மரணப் படுக்கையிலே கிடந்தார்கள்.

பல நாட்கள் பயணம் செய்துவிட்டு, வீடு திரும்புவேன், ஒரு பொய்க் கோபப் பொலிவுடன் முகம் இருக்கும் - எதிரில் நிற்பேன். இரண்டோர் வார்த்தை பேசுவேன். ஓர் புன்னகை மலரும் - மன்னித்துவிட்டேன் மகனே! என்று அந்தப் புன்னகை அறிவிக்கும். அந்த முகத்தைக் காண்கிறேன், மரணத்தின் முத்திரை படிந்துவிட்டிருக்கிறது! எப்படித் தாங்கிக்கொள்ள முடியும்? நான் வந்திருக்கிறேன் தொத்தா! இதோ வந்துவிட்டேன் தொத்தா! என்று என் கண்ணீர் பேசுகிறது. அவர்கள் அதைக் கேட்கவுமில்லை, என்னைக் காணவுமில்லை. தன்னை மரணத்திடம் ஒப்படைத்துவிட்டார்கள் - இத்தனை காலந்தான் உனக்காக ஓயாது உழைத்து வந்தேனே, போதாதா? என் இறுதிப் பயணத்திலே ஈடுபட்டுவிட்ட நான் இனியும் இருந்து உன்னைக் கவனித்துக்கொள்ளவா? - நடவாது மகனே! நடவாது! நான் போகிறேன் உன்னை விட்டுவிட்டு! என்னை இனியும் எதிர்பார்க்காதே!! - என்றல்லவா நிலைமை தெரிவிக்கிறது.

ஆறு நாட்கள் அருகேயே இருந்தேன் - இரவும் பகலும் - ஊண் உறக்கம் மறந்து - அழுத கண்களுடன் - பாதிப் பயணத்தில் என் நினைவு வந்து, திரும்பி வந்துவிடுவார்கள் என்ற எண்ணத்தில் - என் எண்ணத்தில் மண் விழுந்தது; இதயத்தில் நெருப்பு விழுந்தது; யார் மறுபடி எழுந்து நடமாடி என்னைக் களிப்படையச் செய்விப்பார்கள் என்று எண்ணினேனோ, அந்த என் "தொத்தா' தீயாலான படுக்கையில் கிடத்தப்பட்டு, என் கண்ணெதிரே சாம்பலாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் கொடிய காட்சியைத்தான் நான் காணவேண்டி நேரிட்டது.

அவர்கள் மனம் நோகும்படி நான் நடந்துகொண்டதே இல்லை - இத்தனை வருஷங்களில், நான் ஏதாகிலும் சிறு சிறு தவறுகளைச் செய்து, அவர்களுக்குச் சங்கடத்தை ஏற்படுத்தி விட்டிருந்திருந்தால், அவற்றினுக்கான தண்டனையைச் சிறுகச் சிறுக, அப்போதைக்கப்போது எனக்கு அவர்கள் தரவில்லை. மொத்தமாக, ஒரே நாள், ஒரே தண்டனையாகத் தருவதுபோல், என் கண்ணெதிரே, வெந்தழலில் கிடந்தார்கள் - பார் மகனே! பார்! படுமகனே படு! என்று கூறுவதுபோலிருந்தது அந்தக் கொடுமை.

சே! அவர்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல. அந்த நேரத்தில் அவர்கள் உயிர்பெற்று எழுந்தாலும், முதலில் மகனே! மிகவும் பயந்துவிட்டாயா! மிகவும் வேதனைப்பட்டாயா! என்றுதான் கேட்டிருந்திருப்பார்கள். அவர்கள், எனக்கு வேதனை மூளக்கூடாதே என்பதற்காகவே மரணத்தை ஏமாற்றிக் கொண்டிருந்தார்கள் - சில ஆண்டுகளாகவே - அவர்களால் முடிந்தவரையில் போராடிப் பார்த்தார்கள் - மரணத்தின் பிடியின் வலிமை கடைசியில் அவர்களைக் கொண்டு சென்றுவிட்டது.

மூளைக் குழாய்கள் சேதமடையும்படியான அதிர்ச்சி அவர்கள் ஏன் கொள்ள நேரிட்டது - நான் சிறைப்பட்ட செய்தியைக் கேள்விப்பட்டபோது ஏற்படாத அதிர்ச்சி, நான் நோய்வாய்ப்பட்டு, மருத்துவமனை அனுப்பப்பட்டதைக் கேள்விப்பட்டபோது ஏற்படாத "அதிர்ச்சி', நான் நலமாக இருக்கிறேன் என்ற செய்தியை ஒவ்வொரு நாளும் மருத்துவமனையில் என்னை வந்து பார்த்துவிட்டுச் சென்ற ராணியும், பரிமளமும், தொலைபேசி மூலம் கூறக் கேட்டு அறிந்து கொண்டிருந்தவர்களுக்கு, திடீரென, ஒரு காரணமுமற்று, "அதிர்ச்சி' ஏற்படுவானேன். விளங்கவில்லை. விளக்கிய மருத்துவரும் இல்லை. பார்ப்பதற்கு எப்போதும்போலிருந்த நிலையில், எங்கே அவன்? அவனைப் பார்க்கவேண்டுமே என்று கேட்டார்களாம், என் அன்னையைப் பார்த்து. என்னைப் பார்க்கவேண்டுமென்ற ஒரு அவா, அதிர்ச்சியாக வளர்ந்துவிட்டது. நான் சிறைப்பட்டு மருத்துவமனையில் இருக்கிறேன் என்பதனை மறந்து, நான் ஊரிலே இருப்பதாகவே நினைத்துக்கொண்டு, எங்கே அவன்? என்று கேட்டிருக்கிறார்கள். அவர்கள் எப்போதும்போலக் காணப்பட்ட நிலையில் பேசிய கடைசி வார்த்தைகள் அவைதாம்! பிறகு அவர்கள் படுத்த படுக்கையானார்கள்; பயணத்துக்குத் தயாராகி விட்டிருக்கிறார்கள்.

என்னைப்பற்றியே, ஏனோ திடீரென எண்ணிக்கொண்டிருந்திருக்கிறார்கள். அந்த எண்ணம் வேகமாக, பலமாக வளர்ந்திருக்கிறது, அதிர்ச்சியாகிவிட்டிருக்கிறது, அந்த அதிர்ச்சி, மூளைக் குழாய்களைச் சேதப்படுத்திவிட்டிருக்கிறது. இறுதியைக் கொண்டுவந்து சேர்த்துவிட்டிருக்கிறது. இத்தனை நாட்களுக்குப் பிறகு, இத்தகைய விளக்கம் நினைக்க முடிகிறது. நான் கண்ட அன்று? ஐயோ! நினைக்கவே பயமாக இருக்கிறது. ஒரு விதத்தில் பார்க்கும்போது, நான் சிறைப்பட்டது, அவர்கள் மறைந்ததற்கு, ஒரு காரணமாக அமைந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

நான் பல முறை சிறை சென்றதை அவர்கள் தாங்கிக் கொண்டவர்கள். ஆகவே இம் முறை நான் சிறை செல்வது அவர்களுக்கு வருத்தத்தைக் கொடுக்கும் என்றாலும், விபத்தைக் கொடுக்காது என்றுதான் நான் எண்ணிக்கொண்டேன். ஆனால் அவர்களோ, இத்தனை முறை தாங்கிக்கொண்டேன் - இந்த முறை முடியாது - தாங்கிக்கொள்ளும் வலிவை இழந்துவிட்டேன் - என்று தெரிவிப்பதுபோல, என்னைவிட்டுப் போய்விட்டார்கள். எனக்கு என் சிற்றன்னை, எத்தனையோ விதமான "புத்திமதி'களைக் கற்றுக் கொடுத்தது மட்டுமல்ல, வேதனையைத் தாங்கிக்கொள்ள வேண்டும் என்பதனையும், சில ஆண்டுகளாகவே, எனக்கு எடுத்துக் கூறிக்கொண்டு வந்தார்கள். சில ஆண்டுகளாகவே அவர்களுக்கு உடல்நலமில்லை - அடிக்கடி, "பயப்படும்படியான' கட்டங்கள் ஏற்பட்டுவிடும் - அப்போது நான் மிக வேதனையில் ஆழ்ந்திருப்பேன் - அவர்கள் நல்ல நிலை அடைந்த உடன், என்னிடம் கூறுவார்கள், "பைத்யமே! இந்த வயதிலே எனக்கு ஏதாவது ஆகிவிட்டால், அதற்காக வேதனைப்பட்டுக் கொண்டிருக்கலாமா - தைரியத்துடன் இருக்கவேண்டாமா - ஆக வேண்டியவைகளை நடத்திவிடவேண்டாமா - அழுது கொண்டிருக்கிறாயே'' - என்று சொல்லுவார்கள். ஆக வேண்டியவைகளை நடத்திவிட்டேன். வேறு என்ன செய்ய முடிந்தது என்னால்? என் உடலில் ஒரு துளி மாசுபடக்கூடப் பார்த்து சகித்துக்கொள்ளமாட்டார்கள் - அத்தகைய என் சிற்றன்னையின் உடலுக்குத் தீ மூட்டினேன். எத்தனை கொடிய கரங்கள், எனக்கு இருப்பவை! சே! எப்போதுமே, மிகச் சுறுசுறுப்பான அறிவுத் திறமை அவர்களுக்கு உண்டு. அதிலும் சில ஆண்டுகளாக, அவர்கள் அரசியல் பிரச்சினைகள், நுட்பமான அரசியல் பிரச்சினைகள், மிக ஆராய்ந்து அறிந்துகொள்ளத் தலைப்பட்டார்கள். உடல் வலிவிழந்த நிலையில், வெளியே நடமாடுவது அவர்களுக்கு இயலாது போய்விடவே, தனது நேரத்தில் பெரும்பகுதியை, படிப்பதில் செலவழிக்கத் தொடங்கினார்கள் - நான் ஈடுபட்டுள்ள பிரச்சினைகளில் அக்கறை காட்டத் தொடங்கினார்கள். ஆதரவாகப் பேசத் தலைப்பட்டார்கள். இன்ன விஷயத்தை இன்ன விதத்தில் எடுத்துச் சொல்ல வேண்டும் என்று எனக்குக் கூறுவதில் ஈடுபட்டார்கள். நான் எடுத்துக்கொள்ளும் முயற்சி நியாயமானது என்பதிலே அவர்களுக்கு மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டு, நமது கழக வளர்ச்சியிலே மிகுந்த அக்கறை காட்டி வரலானார்கள். நமது கழகத் தோழர்களில், மிகப் பெரும்பாலானவர்களை, அவர்கள் மிக நன்றாக அறிவார்கள். அந்தத் தோழர்கள், வீட்டுக்கு வருகிறபோது உபசரிப்பதில், உள்ளன்பு கொண்டார்கள். அவர்களிடம் உள்ள பேரன்பு காரணமாக அவர்களின் போக்கு பேச்சு எதிலாவது குறை இருப்பது தெரிந்தால், கண்டிக்கக்கூடத் தயங்கினதில்லை.

அரசியல் பற்றியும், குறிப்பாக கழகப் பிரச்சினைகள் குறித்தும், அவர்கள், ஒவ்வொரு நாளும் மணிக்கணக்கில் பேசுவார்கள் - அதிலே மிகப் பெரிய பங்கு, அ. க. தங்கவேலருக்கு இருக்கும். ஒருவரும் கிடைக்காதபோது, என் அன்னையிடம், "விவாதிக்க ஆரம்பித்துவிடுவார்கள் - அரசியல் காரணமாகவே மகன் வீடு தங்காது இருக்கிறான் என்ற துக்கம் கொண்டுள்ள என் தாய், தன் தங்கையும், அரசியல் பேசுவது கேட்டு, மிகுந்த சங்கடமடைந்து, "நீ சும்மா இரு அம்மா!'' என்று கூறுவார்கள். அப்போது, என் சிற்றன்னை சிரிக்கும் சிரிப்பொலி இருக்கிறதே! இருந்ததே! - என்றல்லவா சொல்லவேண்டி வந்துவிட்டது இருந்தார்கள்! இருந்தார்கள்! - என்று ஆகிவிட்டது.

என்னால் மட்டுமே, முழு அளவிலும் கூர்மையாகவும், உணரக்கூடிய வேதனை குறித்து மேலும் எழுதிப் படிப்போர் களுக்கு ஒரு சங்கடத்தை உண்டாக்குவது அறமாகாது - ஆகவே இது குறித்து என் உள்ளத்தில் பொங்கி எழுந்திடும் எண்ணங்களை அடக்கிக்கொள்கிறேன், என் வேதனை மிகப் பெரிதாகவும், தனித்தன்மை கொண்டதாகவும் எழுந்ததற்கு மிக முக்கியமான காரணம், அந்த இழப்பு நான் துளியும் எதிர்பாராத முறையில், நேரத்தில், ஏற்பட்டதுதான்.

நான் என் சிற்றன்னை மரணப்படுக்கையில் இருப்பதைக் காண்பதற்குக் காஞ்சிபுரம் சென்ற நாளைக்கு முன்மாலைகூட, ராணியும் பரிமளமும் என்னை மருத்துவமனையில் வந்து பார்த்தார்கள் - அப்போது, தொத்தாவுக்கு உடல்நிலை சரியாக இல்லை என்ற பேச்சே எழவில்லை - என்னிடம் சொல்லிக் கொண்டு, அவர்கள் காஞ்சிபுரம் போயிருக்கிறார்கள். அன்றிரவு தொத்தாவுக்கு அதிர்ச்சி ஏற்பட்டு படுத்துவிட்டார்கள். மறுநாள் காலை, "முரசொலி'யில் செய்தி பார்த்து, நான் திகைத்துப் போனேன் - எப்படி காஞ்சிபுரத்துடன் தொடர்பு கொள்ள முடியும் - நானோ மருத்துவமனையில் நோயாளியாக மட்டுமல்ல - கைதியாக - நான் இருந்த அறைக்கு எதிரிலே ஆறு போலீஸ்காரர்கள் காவல் - என்னிடம் அவர்கள் பேசவும் மாட்டார்கள்! என்ன செய்வது! இதை எண்ணி நான் திகைத்து உட்கார்ந்துகொண்டிருந்தேன். காலை மணி 10 இருக்கும், பரிமளம் வழக்கறிஞர் நாராயணசாமியுடன் உள்ளே வரக் கண்டேன் - ஒரு அற்ப சந்தோஷம் கலந்த நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது; தொத்தாவுக்கு ஆபத்தான நிலைமை என்றால் பரிமளம் காஞ்சிபுரத்தைவிட்டு புறப்பட்டிருக்கமாட்டானே, பத்திரிகையில் மிகைப்படுத்திவிட்டார்கள்போல இருக்கிறது - ஆபத்து ஏதுமிராது என்று எண்ணிக்கொண்டு, சிறிதளவு மகிழ்ச்சியாகவே, "பரிமளம்! முரசொலியில் என்னமோ போட்டிருக்கிறார்களே! தொத்தாபற்றி. என்ன?'' என்று கேட்டேன். "ஆமாம்பா! அதற்காகத்தான் நான் வந்திருக்கிறேன் உங்களை அழைத்துக்கொண்டுபோக; உங்களைப் பார்த்தால் ஒரு சமயம் அவர்களுக்கு நினைவு திரும்பக்கூடும்'' என்றான். "நான் வருவது என்றால், அமைச்சர் அனுமதி கிடைக்கவேண்டுமே'' என்று கூறி முடிப்பதற்குள், "நான் வக்கீலுடன், முதலமைச்சர் பக்தவத்சலம் அவர்களைப் பார்த்துப் பேசினேன் - பரோலில் போக அனுமதி கொடுக்கும்படி அதிகாரிகட்குக் கூறிவிட்டார். அதிகாரிகளின் உத்திரவு பெறச் செல்கிறேன். அதற்குள் உங்களிடம் கூறிவிட்டுப்போக வந்தேன்'' என்று சொல்லவே ஓரளவுக்கு தைரியம் பெற்றேன். மிகுந்த கூச்சமுள்ளவன் பரிமளம். ஆனால் சில நிலைமைகள் ஏற்படும்போது, அதற்கு முன்பு இயல்பாக எழாத திறமை, சுறுசுறுப்பு, துணிவு, தன்னம்பிக்கை, வினைசெய்வகை யாவும் தன்னாலே ஏற்பட்டுவிடும் என்ற பொது விதிபற்றி எனக்குத் தெரியும் - ஆனால் அதை நான் விளக்கமாகப் புரிந்துகொண்டது பரிமளம் அமைச்சரை அணுகி, எனக்குப் "பரோல்' பெற்ற சம்பவத்தின்போதுதான். அன்று, கருணாநிதி, நடராஜன், நெடுஞ்செழியன், இவர்கள் யாரும் சென்னையில் இல்லை. எவர் இருந்தால், "பரோல்' பெறுவது இயலுமோ அவர்களில் ஒருவருடனும் தொடர்பு கொள்ளும் நிலையில் நான் இல்லை. நானோ கைதியாக இருக்கிறேன். இந்த நிலையில், வழக்கமாக உள்ள கூச்சத்தை உதறித் தள்ளிவிட்டு, பரிமளம், எனக்குப் "பரோல்' கிடைக்க ஏற்பாடு செய்தது, உள்ளபடி என் வாழ்நாளில், நான் மறக்க முடியாத சம்பவங்களில் ஒன்று.

அமைச்சர் குறிப்பிட்ட அதிகாரியின் உத்திரவைப் பெற்று வர, பரிமளம் சென்றான். நான் மருத்துவமனையில் காத்துக் கிடந்தேன் - ஒவ்வொரு விநாடியும் பல மணி நேரமாக எனக்குத் தோன்றிற்று - மருத்துவர்கள் என் நிலையைப் பார்த்து, ஆபத்து ஒன்றும் இருக்காது பயம் வேண்டாம் என்று அன்புரை கூறினர் - என் மனம் ஒரு நிலை கொள்ளவில்லை! மணி ஆக ஆக என் மனம் குழம்பலாயிற்று.