அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


சூடும் சுவையும் (1)
1

இராஜ்ய சபையின் பேச்சிற்குப் பிறர் கருத்து
பிரிவினைபற்றிய குழப்பம்

தம்பி!

வகை வகையான வண்ண மலர்கள் மணம் பரப்பும் பொழில்; பூங்காற்று வருடி இன்பம் வழங்கும் வேளை. புள்ளினம் இசை அளிக்கிறது. அதனினும் சுவைமிகு பாகுமொழி செவியில் விழுகிறது. பார்க்கிறான். இதற்குமுன் பார்த்தறியா வனப்புமிகு பாவையை! அமருக! என்கிறாள் அணங்கு, விழியால் விருந்திட்டு. அஃது ஓர் பளிங்கு மண்டபம். அவன் ஓர் இளைஞன் - போர் வீரன்.

தங்கள் தீரத்தை மெச்சாதார் இல்லை - இங்கு. . .

உறுதி தளராத உள்ளம் என்று உரைத்திடக் கேட்டு உவகைகொண்டேன் - பலர் உரைத்தனர்.

சீறி எழும் படைகளைச் சின்னாபின்னமாக்கத்தக்க போர்த்திறன் உண்டு, எனினும், காலமறிந்து காரியமாற்ற வேண்டும் என்று தாங்கள் நடந்துகொண்ட போக்கினைக் கண்டு, வியந்து பாராட்டாதார் இல்லை.

எதற்கும் அஞ்சமாட்டார் - ஆனால், என் மகனே! என்று பெற்றவள் உருக்கமுடன் பேசும்போது, நிலைகுலையத்தான் செய்யும் என்று கூறினர், சிலர்! தங்கள் தரமும் திறமும் அறியாதார்! பகைவர் வீசிடும் வாளுக்கு எவ்விதம் அஞ்சாது இருப்பீரோ, அதுபோன்ற உமது தாயின் தழதழத்த குரல் கேட்டும், கண்ணீர் கண்டும் தளராது நின்றீரோ, அதனை என்ன கூறிப் பாராட்டுவது.

மங்கை பேசுகிறாள் - இளைஞன் இன்பத்தில் மிதக்கிறான்.

வேறோர் புறத்திலே, அவன் வாழ்ந்திட அமைந்ததோர் மாளிகையில், வேலைப்பாடு மிகுந்த இருக்கைகளை வரிசைப் படுத்துவதிலும், மற்றப் பல ஆடம்பரக் கோலங்களை அமைப் பதிலும், எடுபிடிகள் மும்முரமாக இருந்தனர்.

பொன்னிழை மின்னிடும்அங்கி, வைரமணிகள் பதித்த வாளுறை! அவனுக்கு.

கருமுகில் நிறம் கொண்டதும், மின்னல் வேகத்தில் பாயத் தக்கதுமான புரவி - அவனுக்கு.

பன்னீர் பெய்கிறார்கள் அவன் குளித்திட. செயற்கை ஓடையில்!

பழச்சாறு நிரப்பிய கோப்பைகளை ஏந்திச் செல்கிறார்கள். பக்குவமறிந்த பணிப் பெண்கள் - அவன் குற்றேவல் கேட்டு நடந்திடும் குமரிகள்!!

பல ஆயிரம் வராகன்கள் பேழையில்! அவ்விதமான பேழைகள் பலப்பல!

அன்பரே! ஆருயிர் நண்பரே! - என்று அழைக்கிறார், இளவரசர்.

இவரில்லாவிட்டால் உமக்கு ஏது இந்த வெற்றி? என்று கேட்டுக் கெக்கலி செய்கிறாள் இளவரசி!!

ஓவியர் இரவு பகலென்று பாராமல் வேலை செய்கிறார் - நமது நண்பரின் வடிவத்தைத் தீட்டி, தமது கலைக்கூடத்தை அழகுபடுத்த என்கிறார் இளவரசர். சிலை அல்லவோ, சமைக்க வேண்டும் இவருக்கு! ஓவியம் போதாதே!! - என்கிறாள் இளவரசி.

இவர்க்கு ஏற்ற எழிலோவியம் உண்டு, இங்கு, அறிவாயோ? என்று கேட்கிறான் இளவரசன்; மின்னலிடையாள்!! - தெரியுமே முன்பே என்று குறுநகையுடன் கூறுகிறாள் இளவரசி.

இவ்வளவு விரைவில், இத்துணை எளிதாக, வெற்றி கிடைக்கும் என்று நான் எண்ணினதே இல்லை.

கோட்டை வலியுள்ளதல்லவோ!

படைக்கலன்களும் நிரம்ப, அவர்களிடம்!

முற்றுகை நீண்டுகொண்டே போகும் என்ற கலக்கம் எமக்கெல்லாம். . .

நேரடித் தாக்குதலில், நாம் சிக்கிக்கொண்டிருந்தால், நிரம்ப அழிவு நேரிட்டிருக்கும். . .

நல்ல வேளையாக எதிர்பாராத வகையிலே உதவி கிடைத்தது.

சாதாரண உதவியா!! கோட்டையைத் தாக்கித் தகர்த்திட வேண்டிய அவசியமே எழவில்லையே. . .

தட்டினோம்! திறக்கப்பட்டது!

கொட்டினோம் வெற்றி முரசு!

படையின் தளபதிகள் பேசி மகிழ்கிறார்கள் இதுபோல.

பன்னீர் தெளிக்கிறாள் பாவை, இங்கிதமறிந்த முறையில் அன்றோர் நாள், அடவி வழி நுழைந்து மாற்றாரைத் தாக்கப் புரவிமீது சென்றபோது, சேற்றாற்றிலே பாய்ந்ததால், சட்டை எல்லாம் சேறு மயமாகிவிட்டது - அந்த நினைவு வந்தது வீரனுக்கு. பலநாள் அந்தச் சேறுபட்ட சட்டையைப் பார்த்துப் பார்த்து அவன் பூரித்ததுண்டு - வெற்றி விருது என்று மகிழ்ந்ததுண்டு.

அன்று சேறு இன்று பன்னீர்!!

அன்று மாற்றாரைத் தாக்கச் சென்றபோது, சேறு, இன்று?

"நமது மண்டலத்துக்கு மகத்தான சேவை செய்த மணிமுடிக்கு மருதூர் மிட்டாவைப் பரிசாகத் தருகிறோம்''

என்று மன்னர் அவையிலே அறிவித்து, அதைத் தொடர்ந்து வரவேற்பு விழா நடத்துகிறார் - விழாவிலே ஒரு பகுதிதான் - பன்னீர் தெளித்து, பாவை பளிங்கு மண்டபம் அழைத்துச் சென்று பாடலாலும் ஆடலாலும் சுவையூட்டுவது.

காட்டாற்றுச் சேறு முன்பு! கட்டழகி தெளித்திடும் பன்னீர் இப்போது!!

பன்னீர் தெளித்திடும்போது அவனுக்குக் காட்டாற்றுச் சேறு நினைவிற்கு வருகிறது.

களிப்பு உலருகிறது - கண்களில் நீர் துளிர்க்கிறது.

காட்டாற்றுச் சேறு!! - என்று அவன் முன்பு, பலரிடம் காட்டிக் காட்டிக் களிப்படைந்தான். கட்டழகி பன்னீர் தெளிக்கிறாள் - எவரேனும் கண்டுவிடுவரோ என்று எண்ணிக் கலங்குவதுபோல இருக்கிறது அவன் பார்வை.

***

இரக்கமற்றவர்கள் பிடரியைப் பிடித்துத் தள்ளுகிறார்கள், வைக்கோற்புல் பரப்பப்பட்டிருந்த கட்டாந்தரையில் - உடலெங்கும் புண் அவனுக்கு - உடை கந்தல் - கீழே வீழ்கிறான் - புல்லில் மறைந்திருந்த பாம்பு சீறுகிறது - பாய்ந்து செல்கிறது - கைகொட்டிச் சிரிக்கிறார்கள் கொடியவர்கள்.

ஒருபுறம் நச்சரவம் - மற்றோர்புறம் அதனினும் கொடியவர்கள்.

வாட்போரில் வல்லவனாம் - வாகை பல சூடியவனாம்! வீரக் கழல் அணிந்தவனாம்!! ஏடா! நீதானே அது! கொட்டிலில் புகுந்துள்ள நீயோ, கொற்றம் ஆண்டவன்!! கொலு மண்ட பத்திலே கோலமயிலாள் ஆட, குயிலால் பாட, மிக்க கெம்பீர மாக வீற்றிருப்பாயாமே! கேள்விப்பட்டதுண்டு! இன்று? உனக்கேற்ற இடம்! நாட்டியமாட நாகம்!!

வெற்றி அல்லது வீரமரணம் என்று முழக்கமிடுவானாம். . .

இப்போது என்ன கூறி முழக்கமிடுவான்! கூவு. கூர்வாளை நம்பிக்கெட்டவனே! உரக்கக் கூவு!. . .வேழப் படையை முன்னே அனுப்பு! வேற்படையைப் பின்னோடு அனுப்பு! வெற்றிமுரசு எடுத்துச் செல்க!! - என்றெல்லாம் கூவு!!

கற்கோட்டையைத் துளைத்திட எவராலும் முடியாது என்று எண்ணிக்கொண்டான், ஏமாளி.

திறந்துவிட ஆள் இருக்கும்போது எந்த முட்டாள் கோட்டையைத் துளைத்திட நேரத்தைச் செலவிடுவான்?

தட்டினோம்! திறக்கப்பட்டது!!

வெட்டி வீழ்த்துவோம் என்று வீராப்புப் பேசிக்கொண்டிருந்தான்.

விழா நடத்துவோமா, வீழ்ந்தவனுக்கு. . . . ஆமாம், நடத்த வேண்டும். . . ஆடை எப்படி இருக்கவேண்டும். . .

இவன் நம்பிக் கிடந்த வேழப்படை சிதறி ஓடியபோது, கீழே வீழ்ந்துவிட்ட முகபடாம், இவனுக்கு ஆடை. . . ஒடிந்த தந்தங்களைத் தலையிலே வைத்துக் கட்டிடலாம் - முடி! மணி மகுடம்!!

குதிரைக்குப் போடுவானே "கொள்ளு' அது ஒரு வேளை; யானைக்குப் போடுவானே "தழை' அது ஒருவேளை - இப்படி மாறிமாறி, விருந்து.

உடலெங்கும் வடு; உலராத நிலையில். உள்ளமோ உலைக் கூடம்போல. நாடாண்டவன், மாற்றானிடம் பணியாதவன், போர்த்திறமை மிக்கவன். கூடஇருந்து குழி பறிப்போர் இருக்கக் கூடும் என்று துளியும் எதிர்பார்த்தவன் அல்ல. வெஞ்சமரில் வீழ்ந்தானில்லை; வஞ்சகத்தால் வீழ்த்தப்பட்டான்!! வாட்டி வதைக்கிறார்கள்!! பொன்னிறமேனி புழுதி படிந்து கிடக்கிறது. காலிலும் கரங்களிலும் தளைகள் பூட்டப்பட்டிருக்கின்றன. சிறைக்கூடக் காவலை மேற்கொண்ட சிற்றறிவுள்ள கொடியவர்கள், அவன் உண்ண வேகாச் சோற்றினை மண்பாண்டத்திலிட்டு, நாற்றமடிக்கும் சேற்று நீரை மண்குவளையில் ஊற்றி, எதிரே வைக்கிறார்கள். ஒரு கணம் கண்களை மூடுகிறான். என்னென்ன எண்ணுகிறானோ!! அரண்மனையில் அவன் நடத்திய விருந்துகளை எண்ணிக்கொள்கிறானோ? இல்லை! இல்லை! கோட்டையைத் தாக்கித் தகர்த்திடவில்லை! தட்டி னார்கள்! திறக்கப்பட்டது!! சமர் செய்து வீழ்த்தினார்களில்லை, சதிசெய்து சாய்த்தனர்!! புல்லில் மறைந்திருந்த பாம்புபோல, புல்லன் இருந்து காட்டிக்கொடுத்துவிட்டான்; கோட்டை பிடிபட்டது; கொற்றம் அழிந்தது. - இதனைத்தான் எண்ணிக் கலக்கமடைகிறான். உடலிலே உள்ள வடு ஒவ்வொன்றும் ஒவ்வோர் வீரச் செயலுக்குச் சான்று! அதனை எண்ணிக் கொள் கிறான், கண்களிலே களிப்பொளி!!

கட்டழகி பன்னீர் தெளித்திடும்போது, கலக்கம் அடை கிறான் ஒருவன், பளிங்கு மண்டபத்தில்.

காதகர் கடுமொழி வீசிடும்போது, உடலிலே உள்ள புகழ்க் குறி கண்டு பூரிக்கிறான், வஞ்சகத்தால் வளைக்கப்பட்டு, சிறையில் தள்ளப்பட்டுக் கிடக்கும் கொற்றவன்.

கொற்றவன் கொடுமை கண்டும் பெருமிதம் குன்றாது இருக்கக் காரணம், அவன் நெறி தவறாததால் - வீரம் குன்றாததால்.

கோலமயிலாள் கடை இடை காட்டிப் பன்னீர் தெளித்த போதும், களிப்படையாது, பளிங்கு மண்டபத்து வீரன் கலக்கம் கொண்டிடக் காரணம், அவன் காட்டிக்கொடுத்த கயவன். அந்த நினைப்பு அவன் நெஞ்சினைச் சுட்டெரிக்கிறது - அதனால்,

***

என்ன அண்ணா, இது. நெடுந்தொலைவு போய்வந்திருக் கிறாய், நீண்ட நாட்களுக்குப் பிறகு மடல் தீட்டுகிறாய் - சென்ற இடத்துச் சிறப்புகள், செய்த காரியத்தின் அளவு, தரம், கண்ட நண்பர்கள், கூறிய விஷயங்கள், தென்பட்ட குறிகள், இவைபற்றி யெல்லாம் நிரம்பக் கூறப் போகிறாய், கேட்டுச் சுவையும் பயனும் பெறலாம் என்று ஆவலுடன் இருக்கிற எம்மிடம், பளிங்கு மண்டபம், பன்னீர் தெளிக்கும் பாவை, சிறைக்கூடம், சீறி வரும் நாகம், கொடியவர் கொற்றவனைப் படுத்திடும் பாடு, இவை பற்றியெல்லாம் கூறத் தொடங்கிவிட்டாய்; தில்லி பற்றிய செய்தி களைக் கூறவேண்டிய வேளையில் - என்றுதானே கேட்கிறாய் - அவசரப்படாதே, தம்பி! தில்லி போகவேண்டுமென்றால், உடனேவா! நெடுந்தொலைவு அல்லவா? போகலாம்! இப்போது இந்த இருவரை மீண்டும், மனக்கண்முன் கொண்டு வா.

சிறையில் அடைபட்ட சித்தம் கலங்கா மன்னன்.

காட்டிக் கொடுத்ததால் கட்டழகி தெளித்திடும் பன்னீரைப் பரிசுபெற்ற கயவன்.

இந்த இருவர், இரு வெவ்வேறு நிலைமைகளை விளக்கும் நோக்குடன்தான், உன் முன் காட்டப்பட்டுள்ளனர்.

இந்த இருவரில், எவருடன் உறவாட, உரிமை கொண்டாட, உடனிருக்க, இசைவு தருவாய்!

கேட்கவாவேண்டும். காட்டிக் கொடுப்போனிடம் கூடிக் குலாவிடும் கெடுமதி எப்படி உனக்கு ஏற்பட முடியும்!! காட்டாற்றுச் சேறு, கட்டழகி வீசிடும் பன்னீரிலும் மாண் புடையது என்பதனை உணர்ந்த மரபினனல்லவா, நீ!

இதோ, இன்னும் இருவர், இவர்களையும் பார், தம்பி! பயனற்ற வேலை என்று நினைத்துவிடாதே - வெறும் படம் அல்ல, பாடம் புகட்டும் படம், மறவாதே.

***

மதிமிகு பெரியீர்! மாண்புடைய நண்பரீர்! குறிப்பறிந்து நடந்திடும் குணாளரே! வருக! வாழ்க!! உமது புகழ் புவி எங்கும் பரவிடத்தக்கதான, பாமாலை தொடுத்திடுவோம்.

என் நாடு! என் இனம்! என் பித்து நீக்கிய பெம்மானே, வருக! வாழ்க!!

நம்பி வந்தவர்க்குக் கை கொடுக்கும் நல்லறிவாளரே, வருக! வாழ்க!!

நாட்டுப்பற்று என்பது போதை, அதனை நாம் உட்கொள்ளல் தீது என்று உணர்ந்து, சொல்லால் அல்ல செயலால் விளக்கிய வித்தகரே, வாழ்க! வருக!!

வலுத்தவனிடம் மற்றவன் எதிர்த்து நிற்பது அழிவுக்கு வழிகோலும், அஃது ஆகாது! பணிவது, இணைவது, பாங்கான முறை! பாரிலே, பங்கரங்களை ஒழித்திடும் முறை இதுவே! - என்று கூறிச் சிற்றரசாகக் கிடந்தோர் இடத்தைப், பேரரசிடம் ஒப்படைத்துச் சிறப்பான சேவை செய்த செம்மலே வருக!!

தங்கள் பேச்சிலே, அறிவு மணம் கமழ்கிறது.

தங்கள் போக்கிலே, இராஜ தந்திரம் மிளிர்கிறது.

தங்கள் பார்வையிலே வேதாந்தம் சொட்டுகிறது. வேறோர் நாட்டுக்காரர் என்று இருப்பினும், எமது நாட்டினை இருப்பிட மாகக்கொண்டவரே, வருக! வாழ்க!!

எந்நாடுதான் எனக்கு ஏற்புடைய நாடாகும் என்ற தத்துவம் பொடிபடத் தாக்கிய மாவீரனே, வாழ்க! எந்த நாட்டிலே, இன்பம் கிடைக்குமோ, வளம் நிரம்பக் காணப்படுமோ, அந்நாடே எந்நாடு!! என்ற அரிய அரசியல் தத்துவத்தை அவனிக்கே அளித்த ஆசானே! வருக!!

***

தம்பி! இந்த நிலையில் அரச அவையிலே புகழாரம் சூட்டப்பட்டுக் காணப்படுகிறான் ஒருவன். இதோ மற்றொருவன். அவனைச் சூழ்ந்துகொண்டு, கூவுகிறார்கள், கொக்கரிக்கிறார்கள்; விளையாட்டுச் சிறுவர்கள் கற்களை வீசுகிறார்கள். முரட்டுப் பெரியவர்கள், காலைத் தட்டிக் கீழே உருட்டுகிறார்கள். கடுமொழி வீசுகிறார்கள், கண்டவர்கள்.

***

பிடி! அடி உதை! வெட்டு! குத்து! கொல்லு! காரித் துப்புங்கள் முகத்தில்! காதைப் பிடித்துத் திருகுங்கள்! கண்ணைத் தோண்டிப் போடுங்கள்! கையை ஒடித்து விரட்டுங்கள்!

***

இவ்விதமான இழிமொழிகளைக் கேட்டுக்கொண்டு இருக்கிறான் இவன்.

முன்னவன், நாட்டைக் காட்டிக்கொடுத்துப் புகழாரம் சுமக்கிறான்.

இரண்டாமவன், நாட்டுக்காக உழைத்ததற்காக இழி மொழியைப் பரிசாகப் பெறுகிறான்.

இந்த இருவரில், நாம் போற்றத்தக்கவர், புல்லர்களின் பொல்லாங்கு மொழிக்குப் பயந்துகொண்டு, நாட்டுக்கு உழைப்பதை விட்டுவிட மறுக்கும் மாண்புடைய வீரனல்லவா?

சரி, அண்ணா! இப்போது எதற்காக, இந்த விஷயமெல் லாம்? என்றுதானே கேட்கிறாய், தம்பி நான் தில்லிக்குப் பயண மானபோது, இவைபோன்ற எத்தனையோ காட்சிகளை மனக் கண்ணால் கண்டேன். என்னென்னவோ வகையான எண்ணங்கள். அவைகளிலே ஒரு சிலவற்றைத்தான் மீண்டும் நினைவிற்குக் கொண்டுவர முடிகிறது.

எங்களை ஏற்றிச்சென்ற விமானம், எத்தனை எத்தனையோ விதமான மேகக் குவியல்களைத் தொட்டும் தொடாமலும், சென்றுகொண்டிருந்தது. என் மனதிலே பல்வேறு விதமான எண்ணங்கள், அலை அலையாகக் கிளம்பின. இரவு பன்னிரண்டு விமானம் தில்லி நோக்கிப் பறக்கிறது - என் மனமோ உன்னைப் பிரிய மறுக்கிறது.

கண்களை மூடியபடி, ஆனால் உறங்காமல், என் பக்கத்தில், தருமலிங்கம் உட்கார்ந்திருந்தார். அவர் முகத்திலே ஓர் விதமான களை - வெற்றிக்களை என்றே கருதுகிறேன் - தெரிந்தது. காரணத் தோடுதான். என்ன காரணம் தெரியுமோ? நான் தில்லிக்குச் செல்லும் நிலை ஏற்பட்டது இருக்கிறதே, அது தோழர் தரும லிங்கத்தின் வெற்றிகளிலே ஒன்று. இதமாகப் பேசிப்பேசி என்னை "இராஜ்யசபை' செல்வதற்கு இசையும்படி செய்வதிலே அவர் வெற்றி பெற்றார். பார்! முடியாது முடியாது என்று சொன்னவரை, அழைத்துக்கொண்டு போகிறோம், தில்லிக்கு என்ற எண்ணம்போலும் அவருக்கு. அந்தக் களைதான் முகத்தில்!

என்னை அவர் தில்லிக்கு அழைத்துச் செல்வதிலே வெற்றி கண்டுவிட்டார் எனினும், என் மனதிலே, ஐயப்பாடு இருந்தது. செல்வதால் பயன் உண்டா? செய்யத்தக்கனவற்றுக்கு வாய்ப்புக் கிடைக்குமோ? அல்லது அங்குபோய்ச் செயலற்றுக் கிடக்க வேண்டிவருமோ என்ற எண்ணம் மனதைக் குடைந்தபடி இருந்தது.

பேசினான் எதை எதையோ.

முதல் தடவை என்பதால் சும்மா விட்டார்கள்.

பேசிவிட்டு ஓடிவந்துவிட்டான்.

பேச்சுக்குப் பலத்த எதிர்ப்பு.

எல்லோரும் எதிர்த்தனர்; தாக்கினர்.

பேச்சுக்குப் பலன் கிடைக்கவில்லை.

திராவிடநாடு பிரிவினையைப் பிய்த்து எறிந்துவிட்டனர்.

என்றெல்லாம், பலரும் பேசிவருவதையும் எழுதி வருவதையும் பார்த்த பிறகுதான், தம்பி! தருமலிங்கம் என்னைத் தில்லிக்கு அழைத்துக்கொண்டு போனது பயனற்றுப் போக வில்லை, சுவை கிடைக்காமலும் போகவில்லை என்று உணர்ந்து, மகிழ்ச்சியுற்றேன்.

தில்லிக்குச் சென்று பேசச் சந்தர்ப்பம் கிடைக்காது திரும்ப நேரிட்டால், மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்பது கிடக்கட்டும், என் மனமே மெத்த வேதனைக்காளாகும்.

பேச வாய்ப்புகிடைத்து, பேசியான பிறகு, அந்தப் பேச்சு கவனிப்பாரற்று, பத்தோடு பதினொன்று ஆக்கப்பட்டு, என்ன பேசினான்? என்று ஒருவர் கேட்க, ஏதோ பேசினான்? என்று அலட்சியமான பதில் கிடைத்து, அந்தப் பேச்சுப்பற்றி, ஒரு விதமான பரபரப்பு எதிரொலி இல்லாமற்போனால், எனக்கு மிகுந்த ஏமாற்றமும், திகைப்பும் ஏற்பட்டுவிடும். என் இயல்புதான் உனக்கு நன்றாகத் தெரியுமே, தம்பி! அங்கு செல்லும் என்னை இங்கிருந்து வாழ்த்தும் நல்லவர்களோ,

பாரேன் தில்லிக்குப் போனதும்.

சிந்துவார் உண்டா அங்கே.

கும்பலிலே கோவிந்தா ஆகவேண்டியதுதான்.

தில்லியில்போய் இங்கு பேசுவதுபோலப் பேசிக்கொண் டிருக்க முடியுமா?

அது எப்பேற்பட்ட இடம்? எவ்வளவு பெரியவர்களெல்லாம் அங்கே இருக்கிறார்கள்! ஜாம்பவான்கள் இருக்கிற இடம். அந்த இடத்தைப் பார்த்ததும், பேச்சா வரும்! குளறிவிடுவான் பாருங்கள். இங்கே மேடைக்கு மேடை கத்துகிறானே, திராவிடநாடு திராவிடநாடு என்று எங்கே, தில்லியிலேபோய்ப் பேசச்சொல்லு, பார்ப்போம்! கப்சிப்! வாயைத் திறக்கமுடியாது. சுற்றிவரலாம். சுகம் அனுபவிக்க லாம். கடைவீதிபோய்ச் சாமான் வாங்கலாம் - வேறே என்ன செய்யமுடியும்!

தில்லியிலேபோய்ப் பேசினால்கூட இந்தப் பேச்சை யார் கவனிக்கப்போகிறார்கள். கிணற்றிலே கல்விழுந்த மாதிரிதான். ஒருவரும் பொருட்படுத்தமாட்டார்கள்.

***

தம்பி! இப்படி எல்லாம், பரந்த அனுபவம் காரணமாகவும், சொந்த அனுபவம் காரணமாகவும், என்பால் உள்ள நிரம்பிய அன்பு காரணமாகவும், பலர் நல்லுரை கூறித்தானே அனுப்பி வைத்தார்கள்! அதுபோல ஆகிவிட்டிருந்தால், இந்நேரம், நாநர்த்தனம் நாராசமேடையிலே நள்ளிரவு வரையிலும் நடந்திருக்குமே.

ஆனால், தம்பி! என் மனம் சோர்வு சலிப்பு அடையாத விதமாக நிலைமைகள் வடிவமெடுத்துள்ளன.

இராஜ்யசபையிலே நான் பேசிய பேச்சு இன்று, அன்று எழும்பிய ஓசை என்ற அளவில் இல்லை. கடந்த ஒரு திங்களாக மாற்றுக்கட்சிப் பேச்சாளர்களுக்கு அது சுவைமிகு தீனியாகி வருகிறது.

கிருஸ்துமஸ் தீவில் அமெரிக்கா அழிவுக் கருவியை பரீட்சை பார்த்ததையும், ஜபருல்லாகான் - கிருஷ்ணமேனன் காஷ்மீர் குறித்து நடாத்திய ஐ. நா. சபை விவாதத்தையும் மொரார்ஜிதேசாயின், புதிய வரிகளின் விளைவுகளைப்பற்றியும் T. T. கிருஷ்ணமாச்சாரியார் துறவறத்தைத் துறப்பதுபற்றியும் பேசிக்கொண்டிருக்கவேண்டிய நேரத்தில், ஒவ்வொரு நாளும் மாற்றுக் கட்சிகளின் மேடையில், கேட்கப்படும் ஒரே பிரச்சினை. இராஜ்ய சபையிலே பேசியபோது. . . என்பதுதான் இன்னும் ஓயவில்லை. ஓய்ந்துவிட்டால், எனக்கே மனநிம்மதி இருக்காது.

ஏசிக்கொண்டிருப்பவர்கள், தங்கள் மன எரிச்சலைப் போக்கிக்கொள்ள இதுதான் வழி என்று நினைக்கிறார்கள். அப்படிதான் தோன்றும். இயல்பு அது. சொறி பிடித்தவனுக்கு எப்படி கீறிக்கொள்ளக் கீறிக்கொள்ள, நிம்மதியாக இருப்பது போலத் தெரிந்து, பிறகு எரிச்சல் அதிகமாகுமோ, அதுபோலத் தான் அதிலும் பொச்சரிப்புக்கொண்ட மனமாகிவிட்டால், அடே அப்பா, குரங்குப் புண் கதைதான்.

விடாமல் தாக்கவேண்டும், ஒவ்வொரு நாளும் தாக்க வேண்டும், தடித்த வார்த்தைகளை உமிழவேண்டும், எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசவேண்டும், எல்லாம் எனக்குத் தெரியும் என்ற "போஸ்' கொடுத்துப் பேசவேண்டும், என்ற முறையில் "இராஜ்யசபை'ப் பேச்சைப்பற்றி - இவர்கள் இங்கு பேசப்பேச, பொதுமக்கள் மனநிலை என்ன ஆகிறது தெரியுமா, தம்பி! ஒரு நாள் அவன் பேசினான், எல்லோரும் கூடிக்கொண்டு ஓயாமல் அதுபற்றியே பேசிக்கொண்டிருக்கிறார்களே, காரணம் என்ன? அந்த ஒருநாள் பேச்சு, இவ்வளவு பேர்களையும், உலுக்கி விட்டிருக்கிறதுபோலும், குலுக்கிவிட்டிருக்கிறதுபோலும். இல்லையென்றால், இதற்காக இவர்கள் இவ்வளவு "மல்லு' கட்டிக்கொண்டு மாரடிப்பானேன் என்றுதான் பொதுமக்கள் கருதுகிறார்கள்.

அதிலும், இன்று எரிச்சலால் இழிமொழி பேசும் பேர்வழிகள், இந்தத் திருத்தொண்டினை இப்போதுதான் முதல் முறையாகச் செய்கிறார்கள் என்றாலாவது, கேட்பவர்களுக்குத் திகைப்பு ஏற்படும் - இதென்ன எல்லோரும் எதிர்த்துப் பேசுகிறார்களே என்று.

இது இவர்கள் நமக்குப் படைக்கும் நித்திய நைவேத்தியம்! - எனவே இப்போது ஏசிப் பேசுகிறவர்கள், இப்போது இதை வைத்துக்கொண்டு ஏசுகிறார்கள் - வழக்கமான வேலை - செய்து தீரவேண்டிய வேலை!! என்று எண்ணுகிறார்கள்.

அணுகுண்டு வெடித்தார்களாம் என்று முதல்தடவை கேள்விப்பட்டபோது, உலகில் பலநாள், அதுபற்றியேதானே பேசிக்கொண்டிருந்தார்கள் - அவரவர்களின் மனப்பக்குவம், விருப்பு வெறுப்பு ஆகியவற்றுக்கு ஏற்ற முறையில்.

உலகைச் சுற்றும் செயற்கை கோள் கிளம்பிற்று - எல்லோரும் அதுபற்றியே விடாமல் பேசலாயினர்.

நாய்க்குட்டியை வானவெளிக்கு அனுப்பினர் - எல்லோரும் அதுபற்றியே பேசலாயினர்.

மனிதர்களே வானவெளிப் பயணம் செய்தனர் - எங்கும் எவரும் அதுபற்றியே பேசலாயினர்.

ஆதரித்தோ எதிர்த்தோ, விளங்கிக்கொண்டோ விளங்கிக் கொள்ளாமலோ, இவைபற்றியே அனைவரும் பேசினர் அல்லவா. அதுபோல, மே முதல்நாள் இராஜ்யசபையில் நான் பேசிய பேச்சு, அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சி தரத்தக்க, அலசிப் பார்க்கத்தக்க, தாக்கித் தீர்க்கத்தக்க, விளக்கிக் காட்டத் தக்க பிரச்சினையாக்கப்பட்டுவிட்டிருக்கிறதே, இதனைவிடச் சான்று வேறு வேண்டுமா, நாம் கேட்கும் "திராவிடநாடு' கொள்கையின் பெருமையினை விளக்க. நன்றி கூறிக் கொள்கிறேன், மாற்றார்களின் மகத்தான தொண்டு தரும் பயனுக்காக. நான், உள்ளபடி, இவ்வளவு "கவனிப்பு' என் பேச்சுக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. புதிய அரசியல் தத்துவப் பிரசவ வேதனையைக்கூட மறந்துவிட்டு, என் பேச்சிலே உள்ள எழுத்துக்கள், புள்ளிகள், வளைவுகள் ஆகியவற்றை ஆராய்ந்து அதன்மூலம் கிடைத்த "கண்டுபிடிப்பு' காணீர் என்று, மக்களிடம் காட்டுவோரும்; எஃகுத் தொழிற் சாலை சேலத்தில் எப்போது துவக்கப்படும் என்ற பேச்சு, தமது இலாகா என்றாலும், அதனைக்கூட இரண்டாவது வரிசைக்கு விட்டுவிட்டு, என் பேச்சுப்பற்றிய தமது ஆழ்ந்த கருத்துரையை அள்ளித்தந்து, எம்மால் எளிதாக முடியக்கூடியது இது, எஃகுத் தொழிற்கூடம் அல்ல, என்பதனை கூறாமற் கூறுவோரும், புதுவரி எதிர்ப்பு, விலைவாசிக் குறைப்புப் போன்றவைகளைக் கவனிக்காதது ஏன் என்று மக்கள் தம்மைப் பார்த்துக் கேட்காதபடி பாதுகாப்புத் தேடிக்கொள்ளச் சிறந்தவழி, என் பேச்சுப்பற்றி ஏசிப்பேசுவதுதான் என்ற யூகமுடன் பேசிக் கிடப்போரும், ஆமாம் தம்பி! இப்படிப்பட்ட வகையினர் அடைந்துள்ள அதிர்ச்சியைக் காணும்போதுதான், பரவா யில்லை, இராஜ்ய சபை சென்று பேசியது, நல்ல பலனைக் கொடுத்திருக்கிறது - பிரச்சினைக்குச் சூடும் ஏறுகிறது சுவையும் கூடுகிறது என்ற எண்ணம் உறுதிப்பட்டது.