அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


சூடும் சுவையும் (1)
2

"திராவிடநாடு' திட்டம் குறித்து நாம் பேசத் தொடங்கியதி லிருந்து இதுவரை, இந்த அளவு ஒரே நேரத்தில், இந்திய துணைக் கண்டத்திலுள்ள எல்லா இதழ்களும், இங்குள்ள எல்லா மாற்றுக் கட்சியினரும், ஒருசேர, திராவிடநாடு பிரச்சினை குறித்து எழுத, பேச, ஆராய, அலச, தாக்க, முன்வந்தது இல்லை என்பதை எண்ணும்போது, பிரச்சினை எத்தனை பெரிய அளவு ஒரேநாளில் வளர்ந்துவிட்டது என்பது புரிகிறது; மனம் களிநடமிடுகிறது.

இந்து
மெயில்
சுதேசமித்திரன்
எக்ஸ்பிரஸ்
தினமணி
டைம்ஸ் ஆப் இந்தியா
ஸ்டேட்மென்
இந்துஸ்தான் டைம்ஸ்

போ, தம்பி! எத்தனையென்று பெயர்களைச் சொல்வது, எல்லா இதழ்களிலும், "திராவிடநாடு'தானே! கண்டனம், கிண்டல், படம், தலையங்கம், கேள்வி, இப்படிப் பலப்பல.

நானறிந்த வரையில் சமீபகாலத்தில், இத்தனை பெரிய பரபரப்பு, வேறு எந்தப் பிரச்சினைக்கும் கிடைத்ததில்லை.

ஆயிரம் தூற்றட்டும் தம்பி! அவர்கள், நமது பிரச்சினையை இந்த அளவு, வடிவம்கொள்ளத் துணை புரிந்ததற்கு, நன்றி கூறத்தான்வேண்டும்.

ஆழ்ந்த நம்பிக்கையுடனும், தூய நோக்குடனும், நாம் ஆற்றிவரும் பணி, ஆபாசப்பேச்சு, இழிமொழி, பழிச்சொல், தாக்குதல் ஆகியவைகளால் பாழ்படாது - அலட்சியப் படுத்தி னால்தான், பாழ்பட்டுவிடும்.

நமக்கு அந்தப் பயம் எழவிடாமல் செய்துள்ளவர்கள் மாற்றார்கள் என்று தம்மை அழைத்துக்கொண்டாலும், தம்மையும் அறியாமல் நமக்கு உற்ற நண்பர்களாகின்றனர்.

நான் திராவிட இனத்தைச் சேர்ந்தவன்.

நான் திராவிடன் என்று கூறிக்கொள்வதில் பெருமை அடைகிறேன்.

திராவிடக் கலாசாரம் தனித்தன்மை வாய்ந்தது.

உலகுக்கு அந்தக் கலாசாரத்தை எமது பங்காகத் தர விழைகிறோம்.

பிரிவினை கேட்கும் நாங்கள் மற்றவர்களைப் பகைக்கவில்லை.

திராவிடநாடு பிரிவினையால் பாகிஸ்தான் பிரிவினையின்போது ஏற்பட்ட பயங்கர விளைவுகள் ஏற்பட்டுவிடாது.

தம்பி! இந்தக் கருத்துக்களை எடுத்துக்கூறும் முதல் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததை நான் என் வாழ்நாளிலே கிடைத்த பெரும் பேறாகக் கருதுகிறேன்.

அங்கு அவ்விதம் பேசியது மிகப்பெரிய, அதிர்ச்சி தரத்தக்கது என்பதால்தான், ஒரு திங்களுக்கு மேலாக ஒவ்வொரு அரசியல்வாதியும் இதுகுறித்தே பேசிக்கொண்டுள்ளனர்.

திராவிடநாடு குறித்து நான் அங்கு பேசினேன் என்றால், அந்தப் பிரச்சினை குறித்து ஒரு விவாதம் இராஜ்யசபையில் ஏற்பாடாயிற்று என்று பொருள் அல்ல.

குடிஅரசுத் தலைவர், தமது உரையிலே, நாட்டு நிலை, ஆட்சி நிலை, மக்களாட்சி முறையின் நிலைமை, தேசிய ஒற்றுமைப் பிரச்சினை, சமதர்மம் போன்றவைபற்றித் தமது கருத்தினைத் தெரிவித்திருந்தார்; அதையொட்டி உறுப்பினர்கள் தமது கருத்துக்களை எடுத்துக்கூறும் கட்டம் அது.

குடிஅரசுத் தலைவர் உரையிலே, நான் கண்ட மூன்று அடிப்படைப் பிரச்சினைகள்,

மக்களாட்சி முறை
சமதர்ம திட்டம்
தேசிய ஒற்றுமை

என்பனவாகும்.

இம்மூன்று பிரச்சினைகள் குறித்தும், என் கருத்துக்களை எடுத்துக் கூறுவதே, என் பேச்சின் அமைப்பாக்கிக்கொண்டேன்.

குடிஅரசுத் தலைவர் தமது உரையில் தேசிய ஒற்றுமை குறித்துப் பேசியிராவிட்டால், நான், திராவிடநாடு பிரச்சினை பற்றி வலிந்து இணைத்துத்தான் பேசியிருக்க நேரிட்டிருக்கும். பொருத்தம்தானா என்று பலர் கேட்க நேரிட்டிருக்கும். எனக்கும், வேண்டுமென்றே புகுத்திப் பேசுவது, வலிந்து இணைத்துப் பேசுவது பிடிப்பதில்லை. ஆனால் குடிஅரசுத் தலைவர், தேசிய ஒற்றுமைபற்றிக் குறிப்பிட்டிருந்ததால், அவர் கருதும் தேசியத்தைப்பற்றியும், நாம் கோரும் திராவிடப் பிரிவினை பற்றியும் எடுத்துக்கூறப் பொருத்தம் கிடைத்தது.

இந்த வாய்ப்பு, நான் இரயில்வே வரவு செலவு திட்டம் குறித்தோ, நீர்ப்பாசனம் பற்றியோ, எஃகுத் தொழிற்சாலை பற்றியோ பேச முற்பட்டிருந்தால் கிடைக்காது.

அந்த நேரங்களில், தென்னாடு புறக்கணிக்கப்பட்டிருப்பது பற்றிப் பேசலாம், ஓரவஞ்சனை ஆகாது என்பதுபற்றிப் பேசலாம், அதனுடைய தொடர்ச்சியாக வலிய இழுத்துவந்து ஒட்ட வைத்துக்கொள்வதுபோல,

இப்படியெல்லாம் செய்தால், நாங்கள் பிரிந்துபோய் விடுவோம்.

இப்படியெல்லாம் செய்வதால்தான் நாங்கள் பிரிவினை கேட்கிறோம்.

நாங்கள் பிரிந்து தனியாக இருந்தால் இந்தச் சங்கடமும் சிக்கலும் எமக்கு ஏற்படாது.

என்று இந்த முறையிலே; சற்றுச் சுற்றிவளைத்துப் பேசவேண்டி ஏற்பட்டிருக்கும்.

நல்லவேளையாகக் குடிஅரசுத் தலைவர் தமது உரையிலே, "தேசியம்'பற்றிப் பேசினார் - எனவே, திராவிடம்பற்றி எடுத்துரைக்க எனக்குப் பொருத்தமான வாய்ப்புக் கிடைத்தது.

வேறு ஏதேனும் துறைபற்றிய பிரச்சினைமீது பேசும்போது வலியத் திராவிடநாடு பிரிவினைபற்றிப் பேசினால், பொருத்த மற்ற பேச்சு என்று அவைத் தலைவரேகூடத் தடுத்து நிறுத்திவிட முடியும்.

இவைகளை எண்ணிப் பார்த்துத்தான், முதலில் இம்முறை பேசத் தேவையில்லை என்று எண்ணிக்கொண்டிருந்த நான், குடிஅரசுத் தலைவர் உரைமீது பேசினால்தான், பொருத்தமான முறையில், திராவிடநாடுபற்றிப் பேச வசதியாக இருக்கும் என்று முடிவுசெய்து, பேசும் வாய்ப்புக்காக எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன்.

மே முதல் நாள் காலை பேசும் வாய்ப்புத் தரப்பட்டிருக் கிறது என்று எனக்கு அறிவிக்கப்பட்டது.

முன்னாள் இரவு, மாடியில் வெட்டவெளியில் படுத்தபடி, நாம் எங்கிருந்து புறப்பட்டு எங்கு வந்திருக்கிறோம், எங்கெங் கெல்லாம் பேசியிருக்கிறோம், நாளை எங்கு பேசப்போகிறோம், இங்கு திராவிடநாடுபற்றிப் பேசும் வாய்ப்புப் பெறும் அளவு கழகம் பதின்மூன்றே ஆண்டுகளிலே வளர்ந்திருக்கிறதல்லவா? என்றெல்லாம், எண்ணியபடி படுத்துக்கிடந்தேன்.

மேஜைமீது பல புத்தகங்கள், விளக்கொளி பளிச்சென்று; ஆனால் படிக்கக்கூடத் தோன்றவில்லை, நினைத்து நினைத்து மகிழத்தான் தோன்றிற்று.

இத்தனை வளர்ச்சிக்கும் காரணமாக உள்ள நீயோ, நெடுந் தொலைவில். நான் சாம்ராஜ்யங்களின் சவக்குழிகள் நிரம்பிய புதுதில்லை நகரில். காங்கிரஸ் ஏகாதிபத்தியத்தின் அடித்தளம் என்று கூறத்தக்க பாரத ஒற்றுமை எனும் ஏற்பாட்டுக்கு எதிர்ப்பானது என்று கருதுவோரால், மிகப் பலமாகத் தாக்கப் பட்டுவரும், நாட்டுப் பிரிவினைபற்றி, நாளை அரசு அவையில் பேசும் வாய்ப்புக் கிடைத்தது குறித்த எண்ணத்தை அணைத்த படி உறங்கலானேன்.

வடக்கு வீதியில் 116ஆம் எண் உள்ள கட்டிட மாடியில் நான் படுத்திருக்கிறேன்.

எதிர்ப்புற வரிசையில் மனோகரனும், இராஜாராமும், சிவசங்கரனும், செழியனும்,

தெற்கு வீதியில், ஆரூர் முத்து, கடலூர் இராமபத்திரன். வடக்கு வீதி

116ஆம் எண் கட்டிடம். தருமலிங்கத்தின் வீடு. இரவு நெடுநேரமாகியும் புழுக்கம் குறையவில்லை. தில்வெயிலின் கொடுமையைவிட, அதன் தொடர்பாகவும் விளைவாகவும் கிளம்பும் வறட்சி உண்டே, அது எனக்கு மிகுந்த வேதனையைத் தந்தது.

தமிழகத்தைவிட்டுக் கிளம்பிப் பதினைந்து நாட்களுக்கு மேலாகிவிட்டன - என் எண்ணம் அவ்வளவும் தமிழகத்திலே நமது கழகப்பணி எந்த நிலையில் இருக்கிறதோ என்பதுபற்றியேதான்.

தொடர்ந்து பதினைந்து நாட்கள் (சிறையில் கிடக்கும் போது தவிர) இயக்கப்பணிக்காகத் தோழர்களிடம் தொடர்பு கொள்ளும் காரியமாற்றாது இருந்து பழக்கம் இல்லை; பிடிக்கவும் இல்லை. தம்பி கருணாநிதிக்கு எழுதிய கடிதத்திலே இதைக் குறிப்பிட்டிருந்தேன். பேசும் வாய்ப்பு கிடைத்தால் பேசிவிட்டு உடனே ஊர் திரும்புகிறேன் என்று எழுதினேன்.

அதுபோலவே, மே முதல் நாள் பேசியானதும் புறப்படத் திட்டமிட்டுக் கருணாநிதிக்குத் தெரிவித்தேன் - மூன்றாம் தேதி கூட்ட ஏற்பாடும் தில்லியிலிருந்தபடியே செய்யப்பட்டது - ஆறாம் நாள் மதுரை, ஏழாம் நாள் திருப்பத்தூர் நிகழ்ச்சிகள், தில்லி போகுமுன்பே ஏற்பாடு செய்யப்பட்டவைகள். இவை பற்றிய எண்ணம் எனக்கு மேலோங்கியபடி இருந்தது. ஆனால் இரயிலில் இடம் கிடைக்கவில்லை; விமானத்திலும் நாலாம் தேதி வரையில் இடம் கிடையாது என்று ஆகிவிட்டது; முதல் நாள் இரவு விமானத்திலேதான் இடம் கிடைக்கும் என்ற செய்தி விமான நிலையத்தார் அனுப்பினர். அதுவும், வருவதாக இருப்பவர்களில் எவரேனும் வரவில்லை என்றால்!

இந்த என் சங்கடத்தைக் கண்ட, கம்யூனிஸ்ட் நண்பர் இராமமூர்த்தி தனக்கென்று முதல்நாள் இரவு விமானத்தில் இடம் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், தான் இரயிலில் போகப் போவதால், அந்த இடத்தை எனக்குத் தரலாம் என்று விமான நிலையத்தாருக்குக் கடிதம் கொடுப்பதாகவும் தெரிவித்துக் கடிதமும் கொடுத்தார். நான் இராஜ்ய சபையில் பேசும்போது, அந்தக் கடிதம் என் சட்டைப் பையில் இருந்தது.

மக்கள் சபையாகட்டும் இராஜ்ய சபையாகட்டும், அல்லது சட்டசபைகளாகட்டும், வழக்கு மன்றங்கள் அல்ல.

அங்கு பலரும் வழக்கினை எடுத்துரைப்பதுபோலத் தத்தமக்குச் சரியென்றுபட்ட கருத்துகளை ஒழுங்கு முறைப்படி எடுத்துக் கூறுவர். ஆனால் வாதங்களைக் கேட்டு இருதரப்புக் கருத்துக்களையும் கேட்டுத் தீர்ப்பு அளிக்க ஒருவர் அங்கு கிடையாது.

தீர்ப்பு என்று எதையாவது கூறுவது என்றால், ஓட்டெடுப் பிணைத்தான் குறிப்பிடலாம்; அந்த ஓட்டெடுப்பு, கட்சிகளின் எண்ணிக்கை பலத்தைப் பொறுத்தது என்பது அரசியல் அரிச்சுவடி - விளக்கத் தேவையில்லை. மக்கள் சபையில் நமக்கு 7 ஓட்டுகள். இராஜ்ய சபையிலே ஒன்று!!

ஏன் இதனைக் கூறுகிறேன் என்றால், சிலர் இங்கு, நான் ஏதோ தில்லிக்கு வழக்காடச் சென்று, வழக்காடி, என் வாதங்கள் ஏற்றுக்கொள்ளப்படாமல், வழக்குத் தோற்றுவிட்டதுபோல ஒரு பேச்சுப் பேசுகிறார்களே, அது எவ்வளவு பொருளற்றது என்பதை எடுத்துக் காட்டத்தான்.

சட்டமன்றங்களிலே எடுத்துப் பேசும் போக்கு, அளிக்கப் படும் ஆதாரம், காட்டப்படும் காரணம், இவைகளால், சட்டமன்றத்திலே மட்டுமல்லாமல், பொது மக்களிடம் எத்தகைய எண்ணம் ஏற்படுகிறது என்பதுதான் முக்கியமானது.

எந்தச் சட்டமன்றத்திலும் அநேகமாக, ஆளுங்கட்சி கொண்டுள்ள கருத்துக்கு மாறான கருத்தினையோ, மேற் கொண்டுள்ள திட்டத்துக்கு மாறான திட்டத்தையோ, எதிர்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றுகூடித் தனித்திறமை காட்டி எதிர்த்துப் பேசினாலும், ஓட்டு எடுப்பு நடக்கும்போது தீர்ப்பு ஆளுங்கட்சிக்குச் சாதகமாகத்தான் அமையும்; ஆளுங்கட்சிக்கு மாறாகத் தீர்ப்புக் கிடைத்தால், அநேகமாக ஆட்சி மாறவேண்டி நேரிடும். ஒவ்வொரு சட்டமன்றத்திலும் எதிர்க்கட்சிகள் ஆளுங் கட்சிக்கு எதிர்ப்பான முறையில் வாதிடும்போது, நிச்சயம் தீர்ப்புத் தமக்குச் சாதகமாகக் கிடைக்காது என்று முன்கூட்டியே தெரிந்துதான் பேசுகின்றன; நடவடிக்கைகளிலே கலந்து கொள்கின்றன.

இதுதான் முறை என்பது தெரிந்திருக்கும்போது, அண்ணாதுரையின் பேச்சு ஏற்றுக்கொள்ளப்படவில்லை, ஏகப்பட்ட எதிர்ப்புக் கிளம்பிற்று, கோரிக்கை நிராகரிக்கப் பட்டுவிட்டது, வழக்காடித் தோற்றுப்போனான் என்றெல்லாம் சிலர் பேசுவதும், எழுதுவதும், அவர்தம், சிறுமதியைக் காட்டுகிறது என்று கூறுவதற்கில்லை. அவர்களிலே பலர் மெத்தப் படித்தவர்கள்; ஆனால், மக்கள் அப்பாவிகள் என்று அவர்கள் எண்ணிக்கொள்வதாலேயே, அவ்விதம் பேசுகிறார்கள், அவர்தம் போக்குக்கு அதுதான் காரணம்.

தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும் இராஜ்யசபை நடவடிக்கைகளிலே, ஒரு நிகழ்ச்சியாக, என் பேச்சை அவர்கள் கொள்ளாமல், திராவிடநாடு உண்டா இல்லையா, இரண்டில் ஒன்று கூறிவிடுங்கள் என்று கேட்பதற்காகக் கூட்டப்பட்ட, தனி அவையில், நான் கடைசி முறையாகப் பேசிவிட்டுக் காரியம் பலிக்கவில்லை என்று கைபிசைந்துகொண்டும் கண்களைக் கசக்கிக்கொண்டும் வீடு திரும்பிவிட்டதுபோலச் சித்தரித்துக் காட்டி, இராஜ்ய சபையிலே எழுப்பப்பட்ட பிரச்சினை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ள தமது கட்சித் தோழர்களுக்கு, மிட்டாய் தந்து பார்க்கிறார்கள்.

நடைபெற்றது, குடிஅரசுத் தலைவர் உரைமீது விவாதம். அதிலே நான் என் கருத்தினைக் கூறினேன், திராவிடநாடு பிரிவினை ஏற்பட்டால்தான் உண்மையான தேசியம் நிலைக்கும் என்று எடுத்துரைத்தேன் - அவையினர் கேட்டனர் - அவர் களிலே நான் தவிர மற்றவர்கள் நாட்டுப் பிரிவினையை ஏற்றுக் கொள்ளாத கட்சியினர் - எனவே என் பேச்சை மறுத்துப் பேசித் தமது கட்சிக் கொள்கைகளை விளக்கினர்.

பிரிவினை கிடையாது

பிரிவினை கேட்க இவன் யார்?

பிரிவினைப் பேச்சு ஆபத்தானது.

பிரிவினைப் பேச்சு சட்டவிரோதமானது.

பிரிவினை பேசுவதைச் சட்டவிரோதமாக்கவேண்டும்.

என்று இப்படியெல்லாம் பேசினார்கள்.

இவர்களில் ஒருவர்கூட, ஏற்கெனவே இந்தக் கருத்தைக் கொள்ளாமல், இப்படியா அப்படியா என்று இருந்து வருபவர்கள் அல்ல. நாடறிந்தவர்கள் - நமது கொள்கையை மறுப்பவர்கள். அவர்கள் என்ன பதில் அளிப்பார்கள் என்பது அவர்கள் உள்ள கட்சிகள் கொண்டுள்ள கொள்கைகளிலிருந்தே விளக்கமாகிறது. எவருக்கும், எல்லாம் அகில இந்தியக் கட்சிகள்! நிலைமை இது. இங்கு சிலர் பேசிக்கொள்வதோ, அண்ணாதுரை பேச்சை நிராகரித்துவிட்டனர் என்பது!

திராவிடநாடு தருக! என்று நான் கேட்டதும், அனைவரும் எழுந்திருந்து, தந்தோம்! தந்தோம்! என்று கூறிவிடுவார்கள் என்று எதிர்பார்த்தா நான் பேசினேன்! - அவ்வளவு ஏமாளியா நான்!!

இராஜ்யசபை அமைந்த நாள்தொட்டு, அங்கு திராவிட நாடு பிரிவினைப் பிரச்சினை எழுப்பட்டதில்லை. நாம் எழுப்பு வோம். நானிலம், இப்படி ஒரு பிரச்சினை இருக்கிறது என்பதனை உணரட்டும், என்பதல்லவா என் நோக்கம். அதிலே தோல்வி கண்டுவிட்டோமா? இல்லையே!! நாடே கொதிக்கிறதே! நாள் தோறும் மேடை அதிரப் பேசுகிறார்களே!!

நான் எதிர்பார்த்தது எதுவோ, அது, நான் கிடைக்கும் என்று கணக்கிட்டதைவிட அதிக அளவிலேயே கிடைத்து விட்டது.

என் பேச்சுக்குப் பிறகு இராஜ்யசபையிலே நடைபெற்ற விவாதம், குடிஅரசுத் தலைவர் உரைமீது நடப்பதாகத் தோன்ற வில்லை; அண்ணாதுரை பேச்சுமீது எழுப்பிய விவாதமாகத் தோன்றலாயிற்று என்று இந்து இதழ் எழுதிற்று.

இருட்டடிப்புக்கு ஆளாகிக் கிடந்த பிரச்சினை இன்று எங்கும் கவனிக்கப்படும் பிரச்சினையாகிவிட்டது.

வெட்டவெளியிலே பேசப்படும் பிரச்சினை சட்ட சபைக்கும் வந்துவிட்டதா? என்று முன்பு அங்கலாய்த்துக் கொண்டவர்கள் சட்டசபையில் பேசப்பட்டுவந்த பிரச்சினை இராஜ்யசபைக்கும் வந்துவிட்டதே என்று எண்ணுகிறார்கள் - ஏக்கத்துடன் - எரிச்சலுடன்.

அதுவும் எப்போது? இந்தப் பொதுத்தேர்தலிலே, கழகம் அழிந்துபோகும், நாதியற்றுப் போய்விடும், பிறகு பிரிவினைச் சக்தியை ஒழிக்கத் தனிமுயற்சி எடுக்கவேண்டிய தேவையே இராது என்று பண்டித நேருவுக்கு, மதுரையில் காமராசர் வாக்குறுதி தந்த பிறகு.

திராவிட முன்னேற்றக் கழகமே ஒழிந்துவிடும் - ஒழித்துக் கட்டப்போகிறோம் என்று முழக்கமிட்டார் தமிழக முதலமைச்சர். அதற்குப் பிறகு, திராவிடநாடு திராவிடருக்கே என்ற முழக்கம் இராஜ்யசபையிலே எழுப்பப்பட்டிருக்கிறது.

பொருள் விளங்குகிறதா, தம்பி? காங்கிரசாருக்கு நன்றாக விளங்குகிறது. அதனால்தான் ஆத்திரம் பொங்கி வழிகிறது. பணபலமோ, பத்திரிகை பலமோ அற்ற ஒரு கட்சி தேசியத் தாட்கள் அவ்வளவும் தாக்கியபடி உள்ளன அந்தக் கட்சியை. அந்தக் கட்சியின் தலைவர்களை,

கூத்தாடிகள்
கூவிக் கிடப்போர்
கூலிகள் - காலிகள்
பணக்காரனுக்கு கையாட்கள்
பார்ப்பனருக்குத் தாசர்கள்
பகற்கொள்ளைக்காரர்கள் - பண்பற்றவர்கள்
அப்பாவிகள் - அக்ரமம் செய்வோர்
ஒன்றை ஒன்று அடித்துக்கொள்ளும் பேர்வழிகள்

என்று கேட்கக் கூசிடும் இழிமொழிகளால் தாக்கியபடி இருக் கிறோம். வாழ்த்தி வணங்கினவர்களைக்கொண்டே வசைபாட வைத்திருக்கிறோம். கூடிக் குலாவினவர்களே குழிபறிக்கக் கண்டோம். "அண்ணா ஒரு தனி ஆள் அல்ல, அவர் ஒரு அமைப்பு' என்று அர்ச்சித்து ஆலவட்டம் சுற்றி ஆரத்தி எடுத்தவர்களே, அவனுக்கு அரசியலே தெரியாதே, முதுகெலும்பே கிடையாதே என்றெல்லாம் ஏசிடும் நிலை ஏற்பட்டது. கழகம் கலகலத்தது, வீரனும் விவேகியும், தீரனும், சூரனும் கழகத்தை விட்டு வெளியேறிவிட்டார்கள் என்று ஓராண்டுக் காலத்துக்கு மேலாகச் செய்திகள் கிளம்பியவண்ணம் இருந்தன. இப்படி இடிபட்டபடி இருந்துவந்த கழகம், எப்படி ஐயா! திராவிடநாடு பற்றிய முழக்கத்தை இராஜ்யசபையில் எழுப்பும் அளவுக்கு வளர்ந்துவிட முடிந்தது என்ற கேள்வி பிறக்கும்போது, நமது கழகம் அழிந்துபோகும் என்று ஆரூடம் கணித்தவர்கள் முகத்தில், அசடு வழியாமலா இருக்கும்; ஆர்ப்பரித்துத் தமது எரிச்சலைக் காட்டிக்கொள்ளாமலா இருப்பார்கள்.

வால்ட் டிசனியின் கருத்தமைத்த சில கார்ட்டூன் படங் களிலே பார்க்கலாம் தம்பி, "கோழியைக் கொன்று தின்றிட நரி கிளம்பும்; தந்திரம், வஞ்சகம் நரிக்கு நிரம்ப அல்லவா? கோழி சிக்கிக்கொண்டது என்று நாம் நினைக்கும் விதமான நிலைமை ஏற்பட்டுவிடும், ஆனால் திடீரென்று கோழிக்காக வைத்த பொறியிலே நரி சிக்கிக்கொள்ளும், கோழி தன் குஞ்சுகளுடன் கெம்பீரமாகச் செல்லும்.'

காங்கிரசும் கழகத்தை ஒழித்துக்கட்ட, ஓயாமல் திட்ட மிட்டுத் திட்டமிட்டு, கழகம் அழிந்துபோய்விடும் என்று பலரும் எண்ணும் நிலை பிறந்தது. பிறகோ நிலைமாறி, கழகத்தின் செல்வாக்கு வளர்ந்து, காங்கிரசின் முகம் கருத்து விட்ட காட்சி காண்கிறோம். மீசையில் மண் ஒட்டவில்லை என்று பேசும் முறையிலே, காங்கிரஸ் தலைவர்கள் பேசிக்கொள்ளலாமே தவிர, எந்தக் கழகத்தை ஒழிக்கக் காங்கிரஸ் கடுமையாக வேலை செய்ததோ, அந்தக் கழகத்தின் முழக்கம் கல்லறை மைதானத்தில் தொடங்கி, இப்போது ஏகாதிபத்தியங்களில் கல்லறைகள் நிரம்பிக் கிடக்கும் தில்லியில் அரசு அவையில் எழுப்பப்பட்டாகிவிட்டது.

இது துடுக்குத்தனம் - தேசத் துரோகம் - இதற்கு என்ன தண்டனை தெரியுமா? என்று உருட்டி மிரட்டிப் பேசிப்பார்க் கிறார்கள், ஊராள்கிறோம் என்ற துணிவால், அவர்கட் கெல்லாம் நான் ஒன்று கூறிக்கொள்வேன், தம்பி! விடுதலைக் காகப் போரிடக்கிளம்பும் எவரும் - போரிடக்கிளம்புவேன் என்று முழக்கமிடும் போலிகள் அல்ல - வாய்க்கரிசி போட்டுக் கொண்டுதான், அந்தக் காரியத்தில் ஈடுபடுகிறார்கள். எனவே, என்ன நடக்கும் தெரியுமா? என்று மிரட்டுவதிலே பொருள் இல்லை. முத்துக்குளிப்போனிடம் சென்று ஐயோ! தண்ணீருக்குள் இறங்கினால், நீர் கோர்த்துக்கொள்ளுமே, காய்ச்சல் வருமே என்று கூறும் அப்பாவிபோலவும், வேட்டைக்குக் கிளம்புவோ னிடம் சென்று, "அடவிக்கா செல்கிறாய், முள் தைக்குமே காலில்' என்று பேசிடும் பேதைபோலவும், விடுதலைப்பெறப் பாடுபடுவது என்ற உறுதி கொண்டுவிட்டவர்களிடம், தண்டனை என்ன தரப்படும் தெரியுமா என்றா இந்த மேதைகள் பேசுவது?

திடுக்கிட்டுப்போன நிலையில், பாவம், அவர்கள் சூடாகப் பேசுகிறார்கள்.

அந்தச் சூடு சுவையும் தருகிறது - நமக்கு - ஏனெனில் நமது வளர்ச்சியை மாற்றார்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்பது அவர்களின் சூடான பேச்சினால் விளக்கமாக்கப் படுகிறதல்லவா, அதனால்.

அண்ணன்,

27-5-1962