அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


சூடும் சுவையும் (2)
1

தில்லியில் மாற்றார் காட்டிய அன்பு -
திராவிட நாடு பற்றி மாற்றார்.

தம்பி! விமானம் சென்றுகொண்டிருந்தபோது, எனக்கு ஒரு எண்ணம், நாட்டுப் பிரிவினை கேட்பவன் என்ற காரணம் காட்டி, என்னைத் தில்லியில் வெறுப்புடன் அனைவரும் நடத்து வார்களோ என்னவோ என்று. கனல் கக்கும் பார்வை, கடுகடுப் பான பேச்சு, ஆணவம் நெளியும் போக்கு இவைகளால் என்னைத் தாக்குவார்கள் என்று எண்ணிக்கொண்டு, அத்தகைய நிலைக்கு உட்பட என்னை நான் தயாராக்கிக்கொண்டேன்.

தில்லி மக்கள் சபையில் ஐந்நூற்றுக்கு மேற்பட்டவர் உள்ளனர். நமது கழகத்தவர், எழுவர்.

தில்லி இராஜ்யசபையில் இருநூற்று அறுபதுக்கு மேற்பட்டவர் உறுப்பினர் - கழகத்துக்காக நான் ஒருவன்.

எதையேனும் நான் அந்த அவையில் கொண்டு சென்றால், ஆதரிக்கிறேன் என்றுகூற, துணைத்தோழர், கழகத்தவர் இல்லை. மிகப்பெரிய எண்ணிக்கை வலிவுள்ள கட்சி அரணளிக்க அமர்ந்துகொண்டு, ஆணவம் கக்கும் "மாவீரர்கள்' விரல்விட்டு எண்ணத்தக்க எண்ணிக்கையுள்ள முகாமில் இருக்க நேரிட்டால், எத்துணை வீரமும் நெஞ்சுரமும் காட்டுவர் என்பது எனக்குத் தெரியும் - நெருங்கிப்பழகி அவர்களின் இயல்பினை மிக நன்றாக அறிந்திருக்கிறேன்.

"நாங்களென்ன விவரமறியாதவர்களா, வம்பிலே போய் மாட்டிக்கொள்ள. குறைவான எண்ணிக்கையுள்ளதாக ஒரு கட்சி இருக்கும்போது, பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியிலே ஒரு கட்சி நிற்கும்போது, எப்புறமிருந்தும் ஏசலும் தூற்றலும், தாக்குதலும் கிளம்பிவந்து மேலே வீழ்கிறபோது, நாங்கள் ஏன், அந்த இடர்ப்பாடுமிக்க இடத்தில் இருக்கப்போகிறோம் என்று பேசுவார்கள் - புத்திசாலிகள் அவர்கள் - கீழே வீழ்ந்த பழத்தைப் பொறுக்கி எடுத்து, மண்ணை நீக்கி வாயில்போட்டுக் குதப்பிச் சுவைபெறுபவர்கள் - அல்லது, வளையில் பதுங்கிக்கொண் டிருந்துவிட்டு, ஆள் அரவம் இல்லா வேளை பார்த்து வெளியே வந்து, முற்றிய கதிரைக் கடித்துத் தின்னும் காட்டெலிகள் - புரிகிறது.''

தம்பி! நமது கழகத்திலே இன்று இடம்பெற்றுப் பணியாற்றுவது, பெருங்காற்றடித்து மரங்கள் வேருடன் கீழே வீழும் வேளையில், இருட்டாகிப் போனதன் காரணமாகத் தொலைவிலே காணப்படுவது கற்குவியலா காட்டு எருமையா என்று சரியாகத் தெரியாத நிலையில், பேய்க்காற்றடிப்பதால் கிளம்பிடும் ஓசை, காற்றொலியா அல்லது காட்டுமிருகத்தின் உறுமலா என்று விளங்காத நிலையில், தனியனாக ஒருவன், மூலிகை தேடிச்செல்வதற்கு ஒப்பாகும்.

இன்று காங்கிரஸ் கட்சியில் இடம்பெற்று, இன்பம் பெற்று இறுமாந்து கிடப்பவர்களில் நூற்றுக்குத் தொண்ணூறு பேர் களுக்குமேல், அக்கட்சி, கடும்போரினை முடித்துக்கொண்டு காடு கடந்து நாடு ஆளும் நிலைபெற்ற பிறகு, வந்து புகுந்தவர்கள். புகுந்த இடத்துக்கு உள்ள வனப்பும் வலிவும் கண்டதால் ஏற்பட்ட உணர்ச்சி, அவர்களின் கூனினை நிமிர்த்திற்று, குளறலைக் கர்ஜனையாக்கிற்று! வீரம் பேசுகிறார்கள்!!

காங்கிரஸ் கட்சி காடுமேடு சுற்றிக் கருக்கலில் சிக்கி, கண்டவர்களால் தாக்கப்பட்டு வடுபல கொண்டதாக இருந்த நாட்களிலே, இவர்கள், வெந்ததைத் தின்று வாயில் வந்ததைப் பேசிக்கொண்டிருந்தவர்கள்.

நடக்கிற காரியமா இதெல்லாம்.

பைத்தியக்காரத்தனமான போக்கு.

சுட்டால் சுருண்டு கீழே வீழ்வார்கள்,

பிணமாக. தடி தூக்கினால், தலைதெறிக்க ஓடுவார்கள்.

வெள்ளைக்காரன் விட்டுவிட்டுப் போவதற்கா, இவ்வளவு கோட்டைகளைக் கட்டிக் கொடிமரத்தை நாட்டி, கொலுமண்டபம் அமைத்துக்கொண்டிருக்கிறான்!

அவனவனுக்குத் தகுந்த வேலையைச் செய்து கொண்டு வயிற்றைக் கழுவிக்கொண்டு, காலத்தைக் கடத்துவதை விட்டுவிட்டு, வந்தேமாதரமாம் சுய ராஜ்யமாம், வறட்டுக் கூச்சல் போட்டுக் கெட்டுத் தொலைகிறார்கள்.

எத்தனை நாளைக்கு இந்தக் கூச்சல்? வெள்ளைக் காரன், போனால் போகட்டும் என்று சும்மா இருக்கிற வரையில். முறைத்துப் பார்த்தானானால், இதுகள் பயத்தால் வெடவெடத்துப் போய்விடுமே.

இவ்விதமாகவெல்லாம் திண்ணைப்பேச்சு நடத்திக்கொண் டிருந்தவர்களெல்லாம், காங்கிரஸ் நாடாளும் கட்சியான உடனே அதிலே நுழைந்துகொண்டு, திலகருக்குத் தோழர்களாக இருந்தவர்கள்போலவும், சபர்மதி ஆசிரமத்துக்கு அடித்தளம் நாட்டியவர்கள்போலவும், லாலா லஜபதிராய் பாஞ்சாலத்தில் துப்பாக்கியை எதிர்த்து நின்றபோது பக்கத்தில் இருந்து அவருக்குத் தைரியம் கூறியவர்கள்போலவும், சிதம்பரனார் செக்கிழுத்தபோது சிறையிலே இக்கொடுமையை எதிர்த்துப் புரட்சி நடாத்தி அந்தமான் துரத்தப்பட்டவர்கள்போலவும், கொடி காத்த குமரனுக்கு வீரத்தை ஊட்டிய ஆசான்கள் போலவும், தில்லையாடி வள்ளியம்மைக்குத் "தேசபக்தி' பாடத்தைக் கற்றுக்கொடுத்தவர்கள்போலவும், அல்லவா தேசியம் - காந்தியம் - பாரதியம் பேசுகிறார்கள். பேசுவதுகூட அல்ல தம்பி! காங்கிரசின் போக்கைக் கண்டிப்பவர்களைக் கண்டால், அடே அப்பா, இவர்களுக்குக் கொப்பளிக்கும் கோபமும், பீறிட்டு எழும் வீராவேசமும், பொங்கிடும் நாராசமும் கண்டால், கைகொட்டிச் சிரிக்கத்தான் தோன்றுகிறது. எவனோ கஷ்டப்பட்டுக் கடும்போரிட்டு, ஆபத்துகளில் சிக்கி, அடவியில் உலவிக் கிடந்த புலியை அடித்துக்கொன்ற பிறகு, எப்படியோ, அந்த புலித்தோலின்மீது அமர்ந்துகொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டு, அதன் காரணமாகவே ஊரை மிரட்டு கிறானே போலிச் சாது, அதுபோலல்லவா இருக்கிறது இன்று, காங்கிரசில் புகுந்துகொண்டு வீராவேசம் பேசும் பெரும் பாலோரின் போக்கு.

நமது நிலை! தம்பி முற்றிலும் மாறானது. ஆட்சி மன்றங் களில் எண்ணிக்கை பலம் எனும் அரணைத் துணைகொண்டு நாம் இல்லை. நமது கழகம், நாடாளும் நிலையில் உள்ளது அல்ல. காடு மேல் என்று கூறத்தக்க விதமான போக்குடையோர் பலர் தாக்கிடும் நிலையில் உள்ளது. நம் கழகம் ஐந்நூறு பேர்களுக்கு இடையிலே ஏழு! இருநூற்று அறுபது பேர்களுக்கு இடையிலே ஒருவன்! - என்ற எண்ணிக்கை நிலையை மட்டுமல்ல, நான் குறிப்பிடுவது. பலருக்கு, இந்த நிலை ஒன்று போதும், பேச்சடைத்துப்போகும், கண்களிலே மிரட்சி ஏற்படும், கைகால் நடுக்குறும். எண்ணிக்கை நிலையுடன் வேறொன்றும் இருக்கிறது. காங்கிரசிலே உண்மையான தொண்டாற்றியவர்கள் இன்று அங்கு அதிகம் இல்லை. உண்மையாக விடுதலைக் கிளர்ச்சியில் ஈடுபட்டு, எதிர்ப்புகளைத் தாங்கியவர்களுக்கு, வேறோர் விடுதலைக் கிளர்ச்சியில் ஈடுபடுவோரிடம், தம்மையும் அறியாமல், மதிப்பு ஏற்படும். இன்று காங்கிரசில் உள்ளவர் களிலே பெரும்பாலோருக்கு, விடுதலைக் கிளர்ச்சியில் பங்கேற்ற அனுபவம் கிடையாது - ஆகவே அவர்களுக்கு நாம் நடாத்தும் விடுதலைக் கிளர்ச்சியினை மதிப்பிடத் தெரியவில்லை. தெரியாத தால், திக்குக்கு ஒருவர் கிளம்பித் தீப்பொறி கிளப்புகிறார்கள்.

இந்தத் திங்கள் நான் வேதாரண்யம் சென்றிருந்தேன் - காங்கிரஸ்காரர்கள் நினைவிலே வைத்துக்கொண்டிருக்கிறார் களோ இல்லையோ, நானறியேன் - எனக்கு அங்குச் சென்றதும், மறைந்த சர்தார் வேதரத்தினம் அவர்களின் நினைவு வந்தது. சட்டசபையிலே நான், காங்கிரஸ் ஆட்சியின் போக்கைக் கண்டித்துப் பேசும்போது, அவருடைய முகம் அகநிலையைக் காட்டும் - கண்டிருக்கிறேன் - புதிதாகக் காங்கிரசில் சேர்ந்து கொண்டிருப்பவர்களின் முகத்தையும் நான் கவனித்திருக்கிறேன்.

பழைய, தொண்டாற்றிய, துயர் அனுபவித்த காங்கிரஸ் காரர்களின் முகத்திலே, கோபத்தைவிட, ஒருவிதமான திகைப்புத் தான் அதிகம் காணப்படும்; பேச்சில் வெறுப்பை விட உருக்கம் தான் அதிகம் தெரியும்; போக்கிலே ஆணவத்தைவிட அணைத்துச் செல்லவேண்டுமே என்ற கவலைதான் அதிகம் இருந்திடும்.

காரணம் இருக்கிறது, இதற்கு. இவர்கள், கட்டிக் காத்தவர்கள் காங்கிரஸ் கட்சியை, கடும் போரிட்டவர்கள் வெள்ளையரை எதிர்த்து, தழும்புகள் பெற்றவர்கள் விடுதலைக் கிளர்ச்சியின்போது; தன்னலம் மறந்தவர்கள் தொண்டாற்று கையில்; இன்னல் பல கண்டு இறுதியில் வெற்றி ஈட்டியவர்கள்; எனவே அவர்களுக்கு, தமது வெற்றிச் சின்னமான காங்கிரஸ் ஆட்சி கண்டிக்கப்படும்போது, திகைப்பு ஏற்படுகிறது எப்படிப் பட்ட மகத்தான அமைப்பு காங்கிரஸ்; எப்படிப்பட்ட தியாகி களும் தீரர்களும் இந்தக் காங்கிரசுக்காகத் தொண்டாற்றி இருக்கிறார்கள்; அதனை எல்லாம் மறந்து இன்று காங்கிர சாட்சியைக் கண்டிக்கிறார்களே, எதிர்க்கிறார்களே, என்ன காலம் இது! ஈதென்ன போக்கு! உச்சிமேல் வைத்துப் போற்றிவந்தோம் காங்கிரசை; இன்று அதனை உலுத்தர்களுக்கு வாழ்வளிக்கும் கூடம் என்று கூறுகிறார்களே; ஏன் இன்று இவ்வளவு எதிர்ப்பு காங்கிரசுக்கு ஏற்பட்டுவிட்டது என்று எண்ணித் திகைக்கிறார்கள்; வேண்டாமப்பா, காங்கிரசை நீ அறியமாட்டாய், அது வீரக்காப்பியம், தியாகப் பரம்பரை கிளர்ச்சிக் கூடம், விடுதலைப் பேரணி, அதனைத் தாக்காதே தகர்த்திடாதே என்று உருக்கத் துடன் பேசுகின்றனர்; பெற்றவர்களுக்கே தெரியும் அந்தப் பிள்ளையின் அருமை என்பார்களே அதுபோல.

வந்து நுழைந்துகொண்டதுகள் உள்ளனவே, இதுகளுக்கு அந்தப் பழைய வரலாறே தெரியாது, சரியாக! காடுசுற்றிக் கடும் போரிட்ட கட்டம் புரியாது. எனவே, திகைப்பும் உருக்கமும் எழாது; கோபம்தான் கிளம்பும், ஏன், தெரியுமோ, தம்பி! மலைபோல நம்பிக்கொண்டிருக்கிறோம் காங்கிரஸ் கட்சியை; மக்களைக் கட்டுப்படுத்தி வைத்திடத் தக்கதோர் கருவியாக இது கிடைத்திருக்கிறது; இதனை ஏணியாகக்கொண்டு உயர ஏறி உறியில் உள்ளதை வழித்தெடுத்துத் தின்ன முடிகிறது. இதனைப் போய் இந்தப் "பாவிகள்' கெடுக்கப் பார்க்கிறார்களே; என்ற எண்ணம் தோன்றுகிறது; எரிச்சல் பிறக்கிறது. கோபம் பொங்கு கிறது, கடுமொழி உமிழ்கிறார்கள்.

இன்று, ஆட்சிமன்றங்கள் பலவற்றிலும், காங்கிரஸ் கட்சியின் சார்பிலே வெற்றிபெற்று அமர்ந்திருப்பவர்களிலே பெரும்பாலோர், நான் குறிப்பிடும், இரண்டாவது வகையினர்! எரிச்சல்கொள்வோர். காங்கிரஸ் கவிழ்ந்துவிட்டால், தங்கள் "காலம் முடிந்துவிடும்' என்ற அச்சம் அவர்களை ஆட்டிப் படைக்கிறது; அதனால் ஆத்திரம் பீறிட்டுக்கொண்டு வருகிறது.

தம்பி! குதிரைமீது செல்பவனையும் காண்கிறாய்; பொய்க்கால் குதிரை ஆட்டக்காரனையும் காண்கிறாய். உண்மையான குதிரை அத்தனை ஆட்டமா ஆடுகிறது; அத்தனைவிதமாகவா தாவுகிறது, தாண்டுகிறது, வளைகிறது, நெளிகிறது, சுற்றுகிறது, சுழல்கிறது; இல்லையல்லவா?

இன்று காங்கிரசிலே பொய்க்கால் குதிரைகள்தான் அதிக அளவில்!! அதற்கேற்றபடியான "ஆட்டம்' காண்கிறோம்.

இந்தப் "புகுந்துகொண்டதுகள்' கக்கும் பகைதான் இன்று மிகப்பெரிய புகைச்சலைக் கிளப்பிவிட்டிருக்கிறது.

இந்நிலையில், நான் தில்லி சென்றதால், வெறுப்புடன் நடத்தப்படுவேன், அல்லது பேச வாய்ப்புப்பெற இயலாநிலை ஏற்பட்டுவிடும் என்றுதான் எண்ணிக்கொண்டேன்.

தில்லி, பாராளுமன்றத்தில் நான் கண்ட சூழ்நிலை, நான் எதிர்பார்த்தபடி இல்லை. பலரும், பரிவுடன் நடந்துகொண்டனர்.

"வாய்யா, வா, வா! தெரியுமா சமாசாரம் - ஹைதராபாத் திலே, ஒனக்குக் கொண்டாந்த மாலையை எல்லாம் ஒங்க ஆளுங்க என் கழுத்திலே போட்டாங்க - நீ வரலேன்னு சொன்னதும். ஆமாய்யா, நெறைய மாலைங்க. . . உங்க ஆளுங்க . . . .'' என்று முன்னாள் அமைச்சர் மாணிக்கவேலர் கூறினார் குழைவுடன். முன்னாள் அமைச்சர் அவினாசியார், ரொம்பச் சந்தோஷம் எனக்கு என்றார். முன்னாள் அமைச்சர் மாதவ மேனன், என்னா அண்ணாதுரை, தெரியலையா என்னை என்று கேட்டு மகிழ்ந்தார். அமைச்சர் சுப்பிரமணியம், இங்கு மேடைப் பேச்சின்போது, கட்சிக்காரர் மகிழ அடித்துப்பேசும் வக்கீலாகிறார்; அங்கு என்னிடம் மெத்த அன்பாகத்தான் பேசினார். பழகினார். யார் அவன் பிரிவினை கேட்கிறவன்? அவன் "மூஞ்சியைப் பார்க்கவேண்டுமே' என்று பண்டித நேரு கேட்டார் என்று இங்கு பேசினாராம் - பத்திரிகையில் பார்த்தேன்; என்னால் நம்பமுடியவில்லை, அங்கு என்னிடம் அத்துணை பரிவுடன் பழகுபவர் இவரேதானா என்று! என்னைப்பற்றி ஏளனமாகவும் இழிவாகவும் பேசினால்தான், தன் கட்சியில் "சபாஷ்' பட்டம் கிடைக்கிறது என்பதால் அவ்விதம் பேசுகிறார் போலும். பேசி ஆசையைத் தீர்த்துக்கொள்ளட்டும். நான் ஏளனம் இழிமொழிக் கேட்டுத் துவண்டுவிடுபவனல்ல; அதிலும் பேசுபவர்கள் ஏன் அவ்விதம் பேசுகிறார்கள் என்பது நன்றாகப் புரிகிறபோது, எனக்கு வருத்தமோ கோபமோகூட எழாது.

"இவ்வளவு நேரம் இடி இடித்ததல்லவா! இதோ இப்போது மழை பெய்கிறது''

என்று, தலையைத் துவட்டிக்கொண்டே கூறினாராம் சாக்ரடீஸ். நடந்தது என்ன தெரியுமா, தம்பி! ஒரு குடம் தண்ணீரை வேண்டுமென்றே சாக்ரடீசின் தலையில் கொட்டினாள். யார் அந்தத் தூர்த்தை? என்று கோபத்துடன் கேட்டுவிடாதே; உலகம் மெச்சும் வித்தகராம் சாக்ரடீசின் தலையிலே வேண்டுமென்றே போக்கிரித்தனமாகத் தண்ணீரைக் கொட்டியவர் வேறு யாரும் அல்ல; அவருடைய மனைவி! ஆமாம்! அவ்வளவு நல்ல மாது!!

வழக்கப்படி, நண்பருடன் சாக்ரடீஸ், வீட்டு வாயிற்படி அருகே நின்று பேசிக்கொண்டிருந்தார். பல பொருள்பற்றி, ஆழ்ந்த கருத்துக்களை எளிய இனிய முறையிலே விளக்கியபடி. அவர் பேச்சைக்கேட்டு, நண்பர் சொக்கிப்போனார். உள்ளே ஒரே கூச்சல், குளறல், அலறல்! சாக்ரடீசின் மனைவி, இப்படி வேலைவெட்டி இல்லாமல் பொழுதை ஓட்டிக்கொண்டு, கண்டவனிடம் கண்டதைப் பேசிக்கொண்டு கிடக்கிறாரே. செ, இவரும் ஒரு மனிதரா! இவரைக் கட்டித்தொலைத்தார்களே என் தலையில் - என்றெல்லாம், அர்ச்சனை செய்கிறார், உள்ளே இருந்தபடி உரத்த குரலில்,

நண்பன் இதுகேட்டுத் திகைக்கிறான்.

சாக்ரடீசுக்கும் பேச்சுக் காதில் விழுகிறது. நண்பன் திகைப்பது புரிகிறது. ஆனால் ஒரு துளியும் பரபரப்பு அடைய வில்லை, கோபம் எழவில்லை, பேச்சின் போக்குக்கூட மாற வில்லை. மனைவியின் தூற்றலைப் பொருட்படுத்தாமல் பேசிக் கொண்டே இருக்கிறார் - உரத்த குரலில் - இடி இடிப்பது போல.

எவ்வளவு திட்டினாலும் பொருட்படுத்தவில்லையே என்ற ஆத்திரம், அம்மைக்கு. குடம் நிறையத் தண்ணீர் எடுத்து, உள்ளே இருந்து சரேலென வெளியே வந்து, சாக்ரடீசின் தலையிலே கொட்டிவிட்டுச் சென்றாள், தன் ஆத்திரத்தைக் காட்ட. நண்பன் திடுக்கிட்டுப் போனான். அப்போதுதான் சாக்ரடீஸ் சொன்னார்,

இவ்வளவு நேரம் இடி இடித்தது; இப்போது மழை பெய்கிறது.

என்று, சாக்ரடீசுக்கு வந்து வாய்த்தவள் அப்படி. அதற்காக, அவர் தமது அறிவுப் பிரசாரப் பணியை நிறுத்திவிட்டு, அம்மையை நல்வழிப்படுத்தும் காரியத்தைக் கவனித்துவிட்டுப் பிறகு மற்றக் காரியம் என்று இருந்துவிட்டாரா? அல்லது நாடே கொண் டாடும் நிலை நமக்கு; நம்மை இவ்விதமாக நடத்துபவளை நையப் புடைத்திடவேண்டாமா என்று கோபப்பட்டாரா? இல்லை!

"நம்மிடம் உலகு எதிர்பார்ப்பது அறிவுப்பணி; அதனை நாம் நடத்திச்செல்வோம்.''

என்று இருந்துவந்தார்.

நாடும் உலகும் அவருடைய நற்பணிக்கு மதிப்பளித்ததே யன்றி, அவருடைய துணைவியாக வந்துற்றவளின் பேச்சைக் கேட்டு அவரை மதிப்பிடவில்லை.

பொதுப்பணியாற்றிடுவோருக்கு இந்த மனப்பக்குவம் ஏற்படவேண்டும். அதனை நான் மிக முக்கியமானதாகக் கருதுகிறேன். நாம் தேடிப் பெற்றுக்கொள்ளவேண்டிய, பழுது படாமல் பார்த்துக்கொள்ளவேண்டிய, கருவூலம் இது.

வள்ளுவர், கடுமொழி பேசுவோரை மட்டுமல்ல, கேடு செய்பவர்களைக்கூடப் பொறுத்துக்கொள்ளவேண்டும் என்றார்; சகித்துக்கொள்வது மட்டுமல்ல, அவர்களே வெட்கித் தலை குனியும்படி நாம் நடந்துகொள்ளவேண்டும் என்கிறார்.

இன்னா செய்தாரை ஒருத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.

என்பது திருக்குறள். நான் கூடுமானவரையில், அந்நன்னெறியிற் செல்ல முயல்கிறேன்.

தமது கட்சிக்காரர் கைதட்டி மகிழவேண்டும் என்பதற்காக என்னைப்பற்றி இழிவாக அமைச்சர் சுப்ரமணியம் போன்றார் பேசினால், எனக்கு வாய்ப்புக் கிடைக்கும்போது, அவர்களிடம் காணக் கிடைக்கும் சிறப்பு இயல்புகளைப் பாராட்ட நான் தவறமாட்டேன். பகை உணர்ச்சியை வருவித்துக்கொண்டு, பண்பு இழந்துவிட நான் ஒருப்படமாட்டேன். அமைச்சர் சுப்ரமணியம், தமது கட்சிக்காரர் மனமகிழ, தரக்குறைவுமிக்க பேச்சுப் பேசியதால், நான் கோபமுற்று, அவர் அன்று, நான் இராஜ்ய சபைக்குள்ளே நுழைந்தபோது, முன்வரிசையில் உட்கார்ந் திருந்தவர் எழுந்துவந்து கைகுலுக்கி வரவேற்று, "பண்பு' காட்டினாரே, அதனை மறந்துவிட முடியுமா!

அவரால் அப்படியும் நடந்துகொள்ள முடிகிறது; இப்படியும் பேசவருகிறது என்றுதான் எண்ணிக்கொள்கிறேன்.

அதுமட்டுமல்ல! அப்படிப் பண்புடன் நடந்துகொள் பவரைக் கட்சி நிலைமை, இப்படியும் பேசவைக்கிறது என்று எண்ணிக் கழிவிரக்கப்படுகிறேன். அவருடைய கட்சிக்காரர் களிடையே அவர் இன்று ஓர் "சந்தேகத்துக்குரியவர்!' அவருடைய பத்தினித்தனம் சந்தேகிக்கப்படுகிறது. காமராஜரை விட்டு நெடுந்தூரம் பிரிந்து சென்றுவிட்டார், - தில்லிக்கும் சென்னைக்கும் இடையே உள்ள தொலைவை மட்டும் நான் குறிப்பிடவில்லை; நேருவுக்கு மிக நெருங்கியவராகிவிட்டார்!

தில்லியில் பெறவேண்டியவைகளை இனிக் காமராஜர், சுப்ரமணியத்தின் தயவால்தான் பெறவேண்டும் என்ற நிலை, இன்று.

இது, காமராஜருக்குச் சுவையூட்டும் நிலை அல்ல.

தில்லியில் இருந்துகொண்டு, தமிழக அரசியலில் தமக்குள்ள இடத்தையும் இழந்துவிடக்கூடாது என்ற எண்ணத் தால் உந்தப்பட்டு, அமைச்சர் சுப்ரமணியம், காமராஜருக்கு எதிர்ப்புக்குழு உருவாக ஊக்கமூட்டினார் என்று வதந்தி பலமாக இருக்கிறது.

அங்கே இருந்துகொண்டு என்ன செய்ய முடியும்? என்று காமராசர் ஆதவாளர்களும்

அங்கே போய்விட்டால் என்ன? அவருக்காக இங்கு நாங்கள் இருக்கிறோம்

என்று சுப்பிரமணியத்தின் ஆதரவாளர்களும், மிகத் தாராள மாகப் பேசிக்கொள்கிறார்களாம்.

கருத்து வேற்றுமைகள் எழுந்தன; பேசப்பட்டன; ஆனால் பிளவு இல்லை - என்று சுப்ரமணியம் கூறுகிறார்.

இந்த அளவு கூறும் துணிச்சல் இவருக்கு ஏற்பட்டதற்குக் காரணமே, தில்லியில் பெரிய வேலை கிடைத்ததுதானே!! - என்று காமராசர் ஆதரவாளர் பேசிக்கொள்கின்றனர்.

இந்த "வாடை' வீசும் நேரத்தில், இங்கு வந்த அமைச்சர் சுப்ரமணியம் என்னைத் தாக்கிப் பேசுவதன்மூலம், தனது அறிவாற்றலை, வீரதீரத்தை மட்டுமல்ல, தமது (கட்சி) பத்தினித்தனத்தை மெய்ப்பித்துக்காட்ட ஒரு வாய்ப்புத் தேடிக் கொண்டார்போலும்.

"அண்ணாதுரைக்குத் தைரியம் கிடையாது'' என்று அமைச்சர் கூறினாராம்.

"அதனால்தான் பேசிவிட்டு ஓடிவந்துவிட்டான்'' என்று செப்பினாராம்.

"இரயிலில் போனால் என்ன ஆகுமோ என்று பயந்துகொண்டு விமானம் ஏறிச்சென்றுவிட்டான்''

என்று தெரிவித்தாராம். பரிதாபம், இந்தப் பேச்சுக்கூட புதிய பாணி அல்ல! பழைய கஞ்சி. ஏற்கனவே இங்கு கூவி விற்கப்பட்டுக் குப்பைக்குச் சென்றுவிட்டது.

நான் பயந்தவன் - கோழை - என்று கூறிய அமைச்சர் சுப்ரமணியம், அவ்விதம் கூறத்தக்க அளவு, தமது வீரதீரத்தைக் காட்டினவர் அல்லவே நாட்டவருக்கு என்று கூற நினைக்கிறாய், தம்பி! உனக்கு அவராற்றிய வீரதீரச் செயல் தெரியாது; அவருடைய அஞ்சாநெஞ்சம் உனக்குப் புரியவில்லை. படை பலவரினும், தடைபல நேரிடினும், மன்னன், முன்வைத்த காலைப் பின்வைக்கமாட்டார்; வீரம் கொப்பளிக்கும்.

ஒருமுறை அவர் அயர்ந்து தூங்கும் வேளையில், கூரிய வாட்கள் அவர் உடலில் நாலாபக்கமும் பாய்ந்தன. அவரிடமோ, வாள் இல்லை. அஞ்சினாரா? தூ! தூ! அவரா? அஞ்சுபவரா? ஓங்கி அறைந்தார், இரு கரங் களாலும். அவருடைய கையிலே அறைபட்டு, வாள் கொண்டு குத்துவதுபோன்றவிதமாக அவரை வெகு பாடுபடுத்திக்கொண்டிருந்த கொசுக்கள் பல செத்தன? உள்ளங்கையிலே, வெற்றியின் சின்னங்களைக் கண்டார்!

இப்படிப்பட்ட "வீரம்' அவர் நடத்திக்காட்டாமலா இருந் திருப்பார்! இருக்கும், தம்பி! நமக்குத் தெரியவில்லையே தவிர, அவர், ஏதேதோ வீரதீரச் செயல்களைச் செய்திருக்கிறார், அதனால்தான் நான் பயந்துகொண்டு ஓடிவந்துவிட்டேன் என்று கூறுகிறார். வீரர்களுக்குப் பயங்காளிகளைக் கண்டால் பிடிக்காதல்லவா?

உப்புச் சத்தியாக்கிரக காலத்தில், எல்லோரும் கடலோரத்தில் உப்புக் காய்ச்சிட, இவர் தமது வீரதீரத்தை உலகு உணரவேண்டும் என்பதற்காக, அலைகளுக்குப் பயந்தோர் கரையில் கிடக்கட்டும், நான் அஞ்சாநெஞ்சன்! கடல் நடுவே சென்று, கொண்டுவருவேன் உப்பு என்று உள்ளே இறங்கிச் சென்று திரும்பி வந்தவராக இருக்கக் கூடும். யார் கண்டார்கள்! இப்படி ஏதாவது வீரச்செயல் செய்திருந்திராவிட்டால், எனக்குத் தைரியம் இல்லை என்பதைக் கண்டுபிடித்துக் கூறிக் கேலி பேசிட மனம் வந்திருக்காதல்லவா?

எல்லோரும் மகாத்மாவின் தலைமை காரணமாகக் காங்கிரஸ் இயக்கம் வீரதீரமாகப் போராடியதால் சுயராஜ்யம் கிடைத்தது என்று எண்ணிக்கொள்கிறோம். உண்மை அதுவாக இருக்காது போலத் தோன்றுகிறது! ஒருவருக்கும் கூறாமல், ஒருநாள், இவர் போயிருக்கிறார் இலண்டன் பட்டினம் - எவர்? - அஞ்சா நெஞ்சர் அமைச்சர் சுப்பிரமணியம்! சென்று, சர்ச்சில் வீட்டுக் கதவைத் தட்டி இருக்கிறார் பலமாக.