அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


சூடும் சுவையும் (2)
2

யார் அது?
நான்தான், அஞ்சாநெஞ்சன்.
புரியவில்லையே.
பயப்படாதவன்! தைரியசா-!
பெயர்?
சுப்ரமணியம்.
தமிழரா?
இல்லை - இந்தியர்!
இந்த வேளையிலே இங்கு. . . . .

எந்த வேளையாக இருந்தால் என்ன? எந்த இடமாக இருந்தால் என்ன? பிரிட்டிஷ் சாம்ராஜ்ய முதலமைச்சராக இருக்கலாம் நீர். அதற்காக, நானா அஞ்சுபவன்?

இந்த உரையாடலுக்குப் பிறகு சர்ச்சில், தள்ளாடி நடந்து வந்து கதவு திறந்துபார்க்க, அங்கு வீரமே வடிவெடுத்ததுபோல இவர் நிற்கக்கண்டு, அலறிப்புடைத்து அழுது, என்னை ஒன்றும் செய்து விடாதீர், நீர் சொல்கிறபடி கேட்கிறேன் என்று பணிந்து கூற.

"பயப்படாதே! நான் சொல்கிறபடி செய்; உயிர் போகாது. உடனே சுயராஜ்யம் கொடு;'

என்று இவர் கூற, அவர் உடனே "தந்தேன் சுயராஜ்யம்' என்று எழுதிக்கொடுக்க, அதனை எடுத்துக்கொண்டு இங்குவந்து, "செ! இவ்வளவு காலமாக இந்த மகாத்மாவும், ஜவஹரும், படேலும் ஆஜாதும் "சுயராஜ்யம் சுயராஜ்யம்' என்று கூவிக்கிடந்தனர்; இப்போது அதனை அவர்கள் பெற்றுத்தரவில்லை; நாம்தான், நமது அஞ்சாநெஞ்சு காட்டிப் பெற்றுவந்திருக்கிறோம் என்று தெரிந்தால், உலகிலே அவர்களுக்கெல்லாம் உள்ள மதிப்புக் கெட்டுவிடுமே' என்று எண்ணிப் பரிதாபப்பட்டு, சம்பவத்தை ஒருவருக்கும் கூறாமல், சர்ச்சிலுக்கே மறுபடியும் தொலைபேசி மூலம் பேசி, சுயராஜ்யம் காந்தியார் மூலம் கிடைத்ததுபோன்ற நிலைமையை ஏற்படுத்தி இருந்திருக்கிறார். அவ்வளவு வீரதீரச் செயலாற்றியவராக இருந்திருக்கிற காரணத்தால்தான், நான் "திராவிடநாடு' கேட்டுவிட்டுப் பயந்துகொண்டு ஓடிவந்து விட்டது, அவருக்குப் பிடிக்கவில்லை; பேசுகிறார், எனக்குத் தைரியம் கிடையாது என்று.

தம்பி! எனக்குத் தைரியம் இருக்கிறதா இல்லையா என்பது கிடக்கட்டும்; இவர் தமது அஞ்சாநெஞ்சினைக் காட்டிட ஆற்றிய அருஞ்செயல்கள் உண்டோ என்பதுகூடக் கிடக்கட்டும்; பயப்பட்டுக்கொண்டு ஓடிவந்துவிட்டேன் என்று பேசுகிறாரே "எதற்கு? யாரிடம்?' என்பதை விளக்கும்படி கேட்கமாட்டார்.

தில்லியில் உள்ளவர்களைப்பற்றி அமைச்சர் சுப்ரமணியம் கொண்டுள்ள கருத்து இதுதானா? கொடியவர்கள் - என்பது தானா?

"நத்திப் பிழைக்கவேண்டும், அல்லது நடுங்கி ஓடவேண்டும் - இரண்டில் ஒன்று - வேறு வழி கிடையாது, அங்கு இருந்து வாழ வேண்டுமானால்' என்பதுதான் அமைச்சரின் கருத்தா? என்ன கருத்துடன் அவர் பேசினார் என்பதை விளக்காத காரணம் என்ன? சொல்வதைச் சொல்லிவைப்போம், கேட்பவர் களில் அவரவருக்குத் தோன்றிய விதத்தில் அவரவர்கள் தீர்மானித்துக்கொள்ளட்டும் என்று எண்ணுகிறாரா?

திராவிடநாடு கொள்கைபற்றி, நான், இங்கு சட்ட சபையில் பேசினேன் - இவர்கள் கூறும் பதில்களைக் கேட்டுக்கொண்டுதான் இருந்தேன். ஒரு ஆபத்தும் எனக்கும் நேரிடவில்லை - என் கொள்கைக்கும் ஒரு ஊறும் நேரிடவில்லை - மாறாகப் பல்லைக் கடித்துக்கொண்டு, பத்து வருஷத்துக்குப் பிரிவினைபற்றிப் பேசாதீர்கள் என்று இதே அமைச்சர் என்னைக் கேட்டுக்கொண்டார். திராவிடநாடுபற்றி இங்குப் பேசியபோது ஒரு ஆபத்தும் நேரிடாது, ஆனால் தில்லியில் பேசினால் சும்மாவிட மாட்டார்கள் என்ற பாவனையில் பேசுகிறாரே, என்ன பொருள்? என்ன செய்துவிடுவார்கள் என்று கருதுகிறார்? அல்லதுஎன்ன செய்வதாகச் செய்து வைத்திருந்த ஏற்பாடு, நான் ஓடிவந்துவிட்டதால் கெட்டுவிட்டது என்று கருதுகிறார்.

அப்படி ஏதாவது ஏற்பாடு இருந்தது அமைச்சருக்குத் தெரிந்து, நான் அதிலே சிக்காமல் தப்பித்துக்கொண்டுவிட்டேன் என்பதனால் வருத்தமோ ஏமாற்றமோ ஏற்பட்டு, இவ்வாறு அவர் பேசியிருக்கிறார் என்றால், அவருக்கு நான் பணிவன்போடு கூறிக் கொள்கிறேன், நான் கடைசிமுறையாக அல்ல, முதன்முறையாகத் தான் தில்லி வந்து திரும்பினேன் - மீண்டும் வருகிறேன் - ஏதாகிலும் ஏற்பாடு செய்வதானால் தாராளமாகச் செய்து, காரியத்தை முடித்துக்கொள்ளுங்கள். திராவிடநாடு பெறுவதிலே கிடைக்கக்கூடிய மகிழ்ச்சிக்கு அடுத்தபடியாக எனக்கு மகிழ்ச்சியும் பெருமையும் தரக்கூடியது, அந்த முயற்சியில் ஈடுபட்டதற்காக, கொடியவர்களின் குத்துக்கும் வெட்டுக்கும் பலியாவதுதான். அது எத்துணை விரைவாக நேரிட்டாலும், பரவாயில்லை. நான் இருந்து பேசிக்கொண்டிருக்கவேண்டிய வற்றை, எனக்கு இழைக்கப்படும் கொடுமைபற்றி எண்ணிக் குமுறும் மனமும், கொந்தளிக்கும் கண்ணீரும் செய்து முடிக்கும்.

அமைச்சர் எண்ணிப்பார்த்துப் பேசியிருக்கமாட்டார் - ஏளனம் செய்யவேண்டும் என்று நினைத்து வாயில் வந்ததைப் பேசிவிட்டிருக்கிறார்.

இராஜ்யசபையில், திராவிடநாடு பிரச்சினைபற்றி விவாதித்து முடிவுகட்டவேண்டும், உடனே வா! - என்று அழைப்புக் கொடுத்து வரவழைத்துப் பலரும் கூடியது போலவும், நான் என்வரையில் பேச்சை முடித்துக் கொண்டு, மற்றவர்கள் என்ன கூறி முடிவு எடுக்கிறார்கள் என்பதனைக் கேட்காமல், ஊர்திரும்பி விட்டேன் என்பதுபோலவும், அமைச்சர் பேசுவது அவசரத்தால் ஏற்பட்டுவிட்ட அறியாமை.

இருந்திருக்கலாம் - இருந்திருக்கவேண்டும் - முறை அதுதான் - பண்பு அதுதான் - என்ற அளவுக்குச் சரி - அந்த யோசனையை நான் வரவேற்கிறேன், ஆனால் அப்படி இருக்கமுடியாமல் போகும் நிலைமைக்காக, "தைரியமில்லை, இருந்தால் தெரிந் திருக்கும்' என்றுதான் பேசுவதா? இதற்குப் பெயர், முறையா? பண்பா? அல்லது மிரட்டலா? நான் அங்கு பேசிவிட்டு வந்து விட்டதற்கான காரணம், விளக்கம் இருக்கட்டும், ஒன்று கேட்கிறேன் அமைச்சரை, அங்கும் சரி, மக்கள் சபையிலும் சரி, பேசிடும் உறுப்பினர் அனைவரும், தமது பேச்சுப்பற்றி மற்றவர்கள் என்ன கருத்துத் தெரிவிக்கிறார்கள், அல்லது சபைக் கட்சியின் தலைவர் என்ன பதில் தருகிறார் என்று இருந்து கேட்டுகொண்டுதான் இருக்கிறார்களா? நெஞ்சில் கைவைத்துச் சொல்லட்டும்.

இராஜ்யசபை - மக்கள் சபை, இரண்டு இடங்களிலும் குடிஅரசுத் தலைவரின் உரைமீது நடைபெற்ற விவாதத்தின் போது பேசியவர்கள் எவரெவர், அவர்கள் அனைவரும் அந்த விவாத முடிவின்போது, நேரு பதில் அளிக்கும்போது, அவையில் இருந்து தீரவேண்டும் என்பதற்காக, இருந்தனரா? விளக்கமாக இதனை எடுத்துக்காட்டுவார்களா?

எத்தனையோ உறுப்பினர்கள், தமது கருத்தினைத் தெரிவித்துவிட்டு, வேறு அலுவல்களைக் கவனிக்கச் சென்று விட்டனர் - பதிலுரை அளிக்கப்பட்டபோது, அவையில் இருந்ததில்லை.

அவர்களெல்லாம் போகலாம் - நீ - போகலாமா? என்று கேட்பதானால், நான், அந்த - நீ - என்பதற்கான முக்கியத் துவத்தை அறிய விரும்புகிறேன்.

மற்றதெல்லாம் பேசிவிட்டுச் சென்றுவிடலாம்; ஆனால் திராவிடநாடு பேசிவிட்டு, சென்றுவிடலாமா? என்றால், அது "திராவிடநாடு' பிரச்சினையின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுவதாகிறதா என்று அறியவிரும்புகிறேன்.

பாவி, அங்கு போயும் துவக்கிவிட்டானே திராவிடநாடு பேச்சினை என்று அங்கலாய்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு ஒரு ஆறுதல் கூறிவைப்போம் என்ற முறையில், எதையோ பேசி விட்டார் - இதற்கு நான் என்ன பதில் கூறுகிறேன் என்று தெரிந்துகொள்ளப் பயந்து ஓடிவிட்டார், பதவிப் பாதுகாப்புள்ள தில்லிக்கு - குடும்பத்துடன் என்றல்லவா நான் கூறவேண்டும், அவருடைய பாணியிலே நான் பேசுவதானால்,

குடிஅரசுத் தலைவர் உரைமீது இராஜ்யசபையில் பேசிய வர்கள் பலர் - அவர்களில் பலர், பதிலுரை கூறப்படும்போது அவையில் இல்லை; அப்படி அங்கு இல்லாதவர்களிலே நானும் ஒருவன். ஆனால், நான் அங்கு இல்லாததைத்தான், எரிச்சல் கொண்டவர் அனைவரும் எடுத்து வைத்துக்கொண்டு ஏளனம் செய்து பேசுகிறார்கள். நோக்கம் என்ன தெரியுமல்லவா? இராஜ்யசபையில் அனைவரும் கவனிக்கத்தக்க விதமாகத் திராவிடநாடு கொள்கைபற்றிய பேச்சுப் பேசப்பட்டது, நமது கழகத்தவர் உள்ளங்களிலே, மகிழ்ச்சியும் எழுச்சியும் பெரும் அளவுக்கு ஏற்படுத்திவிட்டதல்லவா; நமது கழகத்திலே இன்னமும் ஈடுபாடுகொள்ளாதவர்களும்கூட, இதுபற்றி, வியப்பும் மகிழ்ச்சியும் கலந்த குரலிற் பேசலாயினரல்லவா, அது பொறுக்கவில்லை. அந்த மகிழ்ச்சி, உற்சாகத்தை இவர்கள் அனுபவிப்பதா, அதைக் கண்டு நாம் வாளா இருப்பதா என்ற எண்ணம்; உடனே ஏதாவது பேசி எரிச்சலூட்டிவிடவேண்டும் என்பது அவர்கள் கையாண்ட முறை.

நான் அங்கு பேசாது இருந்துவிட்டேன் என்று வைத்துக் கொள்ளுங்கள்; என்ன கூறுவார்கள் தெரியுமல்லவா?

இதற்கு எதற்கு அங்கு போனான்?

பேசமுடியவில்லை என்றால், அங்கு ஒட்டிக்கொண் டிருப்பானேன். உதறித் தள்ளிவிட்டு வரவேண்டியதுதானே!

பேச வாய்ப்புக் கிடைக்கும்வரையில், அந்த வாசற் படியிலேயே விழுந்துகிடக்கவேண்டுமேதவிர, ஊர் ஏன் திரும்புகிறான்? என்ன சாதனையைக் காட்ட?

தம்பி! இந்த "ரகமாக'ப் பேசி இருப்பார்கள் - நம்மைப்பற்றிப் பேசுவதையே தொழிலாகவும் கலையாகவும் ஆக்கிக்கொண்ட வர்கள். பேசிவிட்டுத் திரும்பிவராமல், அங்கேயே இருந்து மற்றவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதைக் கவனித்துக் கொண்டு இருந்துவிட்டு வருகிறேன் என்று வைத்துக் கொள்ளேன். அப்போது மட்டும் என்ன? இவர்கள் வாய்க்கு மென்றிட ஒன்றும் கிடைக்காது என்றா எண்ணுகிறாய்.

பேசினானே, உடனே வந்துவிடக்கூடாதா? விவரம் தெரியாதவன், அங்கேயே உட்கார்ந்து கொண்டிருந்தான். இவன் பேச்சுக்காக ஆளாளுக்கு மெடல் கொடுப்பார்கள் என்று எண்ணிக் கொண்டான்போலும். செம்மையாகக் கொடுத்தார்கள், ஒவ்வொருவரும். எல்லாவற்றையும் வாங்கித் தோளில் போட்டுக்கொண்டு, உட்கார்ந்திருந்தான். ஒரு வார்த்தை மறுத்தானா? முடியுமா? குறுக்கிட்டுப் பேசினானா? அந்தத் தைரியம் வருமா?

இப்படிப் பேசித் தமது அற்பத்தனத்தை காட்டிக்கொண்டிருந்திருக்கமுடியும்.

மற்றவர் பேசும்போது நான், மறுத்துப்பேச, குறுக்கிட, விளக்கம்கூற, பதிலுரைக்க முற்பட்டிருப்பின், இவர்கள் வாயடைத்துப்போவர் என்று எண்ணுகிறாயா, தம்பி! அதுதான் இல்லை. கைவிட்டு எடுக்கும் அளவு கிடைக்கா விட்டால், சுறண்டி எடுத்துத் தின்பவர்கள் உண்டல்லவா? அதுபோல, அப்போதும் இவர்கள் பேச விஷயம் கிடைக்காது என்று எண்ணாதே.

பாரீர் இவன் பண்பற்ற போக்கை.

பாராளுமன்ற முறை அறியாது நடந்துகொண்டான்.

இவன் பேசினான் - சபை கேட்டுக்கொண்டது - இவன் பேச்சில் உள்ள முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டி மற்றவர்கள் பேசும்போது, இவன் குறுக்கிடுவதா? மறுத்துப் பேசுவதா? பாராளுமன்றப் பண்பாட்டைப் பாழ்படுத்துவதா? சந்துமுனையில் இருக்கிறவனைப் பிடித்துப் பாராளுமன்றம் அனுப்பினால் வேறு என்ன காணமுடியும்? இப்படிப்பட்ட காலித்தனத்தைத்தான்.

இப்படிப் பேசிச் சுவைபெறமுடியும்.

நான் என்ன செய்கிறேன், எதை எப்படிச் செய்கிறேன் என்பதில் ஏற்படும் கருத்து வேறுபாடா காரணம், இவர்கள் என்னை எதிர்த்துப் பேசுவதற்கு. ஊரறியுமே உண்மைக் காரணத்தை; நான் ஏன் இன்னமும் இருக்கிறேன். நான் எப்படி எண்ணற்றவர்களின் அன்பினைப் பெறலாம், என்பதல்லவா, என்னை இவர்கள் இழிமொழியால் தாக்குவதற்குக் காரணம். ஆகவே, நான் எவ்விதம் பேசினாலும், எவ்விதம் நடந்து கொண்டாலும், இவர்கள் தமது குரோதத்தைக் கக்கியபடிதான் இருப்பார்கள்.

இந்த இயல்புகொண்டவர்கள் நிரம்ப உளர் என்பது எனக்கு நன்கு தெரிவதால்தான், நான் அவர்கள் ஏசிப் பேசுவது கேட்டு, எரிச்சல் அடைவதில்லை.

காங்கிரசில் உள்ள பலர், பிரசார மேடை ஏறும்போது தான், நம்மையும் நமது கொள்கைகளையும் தாக்கிப் பேசு கிறார்கள் - அதிலும் இழிமொழியில் - காரணம் காட்டி அல்ல.

நான், இராஜ்யசபையில் பேசியபோது, எனக்கு எதிர்ப் புறமாக, மாடியில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அழகேசன் அமர்ந்திருக்கக் கண்டேன். ஆச்சரியப்படவில்லை. ஏனெனில் அதற்கு முன்பே, தில்லியில் இரண்டொருமுறை அவருடன் பழகவும் உரையாடவும் வாய்ப்பு ஏற்பட்டதால், அவர் என் பேச்சைக் கேட்க வருவார் என்று எதிர்பார்த்திருந்தேன். இங்கு அவரிடம் பேச வாய்ப்பு ஏற்பட்டதில்லை. இரண்டொரு திருமணங்களிலே சந்தித்ததோடு சரி. மற்றப்படி ஒவ்வொரு மாலையும், நானும் அவரும் கீரியும் பாம்பும்போலத்தானே! தில்லியில்தான், கலகலப்பாகப் பேசினோம். அவரை அழைத்துக் கொண்டுவந்து, என் பக்கம் அமரச் செய்தவரே, அமைச்சர் சுப்ரமணியம்தான்.

மக்கள் சபை கூடுமிடத்தும், இராஜ்யசபை கூடும் இடத்துக்கும் நடுவே, ஒரு மையமண்டபம் இருக்கிறது. அங்கு, உறுப்பினர்கள் ஓய்வு எடுத்துக்கொள்ள உரையாட வருகிறார்கள். நாங்கள் ஒருபுறம் உட்கார்ந்திருந்தோம். அதற்கு எதிர்ப்புறத்திலே, சற்றுத்தொலைவிலே, அமைச்சராகிவிட்ட சுப்ரமணியமும், அமைச்சராகவேண்டிய அழகேசனும் இருந்தனர். சிறிது நேரத்துக்கெல்லாம் இருவரும் நான் இருக்கும் இடமாக வந்தனர்; என்னைக் கண்டதும், அமைச்சர், அழகேச னாரைக் காட்டி, "அழகேசன்!'' என்று அறிமுகம் செய்யும் முறையிலே கூறினார். மூவரும் உட்கார்ந்து சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம். பிறகு ஒவ்வொருமுறை சந்திக்கும் போதெல்லாம்,

தில்லி எப்படி இருக்கிறது?
இருங்கள், நல்லது.
வீடு கிடைத்துவிட்டதா?
நாங்கள் ஏற்பாடு செய்து தருகிறோம்.

என்று இருவரும் கூறுவார்கள்.

தமிழ்ச் சங்கத்திலே தரப்பட்ட வரவேற்பின்போதுகூட, நானும் அழகேசன் அவர்களும் பக்கம் பக்கமாக உட்கார்ந்து கொண்டிருந்தோம் - அதனை ஒரு வியப்பான காட்சியாகப் பலரும் அங்குகூடக் கருதினர்.

அமைச்சர் பக்தவத்சலனாரின் திருமகன் தில்லியில் வேலையில் இருப்பதுகூட, எனக்கு அங்கு போன பிறகுதான் தெரியும் - அதுவும் அழகேசன் கூறியதால்.

இப்படி ஒரு பழக்கம் ஏற்பட்டதால், நான் பேசிய அன்று அவர் வருவார் என்று நினைத்தேன்; வந்திருந்தார்.

நான் பேசியானதும், அவை கலைந்தது; மீண்டும் பிற்பகல் இரண்டுமணிக்குக்கூட, நான், விமான டிக்கட் விஷயமாக அலுவலகம் சென்று விசாரிக்கப்போய், அங்கு ஓர் இருக்கையில் அமர்ந்தேன் - பேசி அரைமணி நேரமாகிவிட்ட - அழகேசன் வந்தார், கை குலுக்கினார். என் பக்கத்தில் அமர்ந்தார் - அன்று இரவு சென்னை செல்வதுபற்றிக் கூறினேன் - நான் சொல்லி இருக்கிறேன், நிச்சயம் இடம் கிடைக்கும் என்று கூறினார். அப்போது, மக்கள்சபை உறுப்பினர் பாண்டேசுரம் கோவிந்தசாமி (நாயுடு) வந்தார்.

வந்திருந்தீர்களல்லவா பேச்சைக் கேட்க.

இல்லை. . . வேறு வேலையாக இருந்துவிட்டேன்.

நான் போயிருந்தேன். நன்றாகப் பேசினார். எல்லாவற்றையும் பேசினார். திராவிடநாடு கொடு என்றெல்லாம் கேட்டுவிட்டார்.

இப்படி அழகேசனார் அவரிடம் கூறினார். நானாகப் பேச்சை மாற்றினேன்.

ஏன் இவைகளைக் கூறுகிறேன் என்றால்,

கேட்கும்போது கடுகடுப்பு ஏற்படுவதில்லை. கட்சிக் கண்ணோட்டத்துடன் பார்க்கும்போதும், கட்சி மேடை ஏறிப் பேசும்போதும்தான் கோபம், வெறுப்பு எல்லாம் கொந்தளிக்கிறது என்பதைக் கூறத்தான்.

கூடப் பழகுவது, அன்பு காட்டுவது, உதவிசெய்வது, பாராட்டுவது என்பது வேறு, கொள்கைக்காகப் போராடுவது முற்றிலும் வேறு தேன்போல இனிக்கும் எங்கள் பேச்சு, மற்றச் சமயங்களில். ஆனால் கொள்கை விஷயம் வருகிறபோது தேளாகக் கொட்டுவோம்.

இப்படிக் காங்கிரஸ் தலைவர்கள் கூறுவது முறை; நான் அதனைக் குறை கூறவில்லை. நாலு தடவை நட்புடன் பழகிவிட்டால், அவரவர் தத்தமது கொள்கைளை விட்டுவிட வேண்டும் என்று நான் கூறமாட்டேன்; எதிர்பார்க்கவும் மாட்டேன். ஆனால் ஒருவருக்கொருவர் பழகிய பிறகேனும், அவரவர் தத்தமது கருத்துகளை, கொள்கைகளை, உறுதியுடன், ஆனால் அதேபோது இழிமொழி, பழிச்சொல், ஏளனம் இன்றி எடுத்துக்கூறும் "பண்பு' வளரவேண்டாமா? பண்புடன் பேசித் தமது கொள்கைக்கு வலிவு தேடிட முடியாது என்று எண்ணுபவர்களைப்பற்றியோ, அவர்களின் கொள்கைகளைப் பற்றியோ உலகம் என்ன மதிப்பீடு தரும். . .? இவைகளை எண்ணிப் பார்க்காமல், அமைச்சர் தமது கட்சியிலே உள்ளவர் களுக்கு மகிழ்ச்சிதரவேண்டும் என்ற ஒரே நோக்குடன் பேசிவிட்டார். நாலடி உயரம் ஏறிக்கொண்டு நாப்பறை கொட்டினாலே, நல்லியல்பு நசித்தே போகவேண்டுமா? மற்றச் சமயத்திலே எண்ணுவது பேசுவது மறந்துபோகவே வேண்டுமா?

தில்லியில் ஒருநாள் ஒரு விருந்துக்குச் சென்றிருந்தோம். இதிலே அமைச்சர் சுப்ரமணியமும் அழகேசனாரும் இல்லை. அதனை முன்கூட்டியே கூறிவிடுகிறேன் - ஏனெனில் இனிக் கூறப்போவதை அவர்களுடன் இணைத்துப் பார்க்காதீர்கள் என்று கேட்டுக்கொள்ள.

பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரமுகர்கள், பத்திரிகைத் துறையினர், வியாபாரிகள் கலந்துகொண்டனர்.

ஒரு பிரபல காங்கிரஸ் தலைவர் - சுதந்திரத்துக்குப் பிறகு கதர் போட்டவர் அல்ல - நீண்டகாலத்துக் காங்கிரஸ்காரர், என்னை உடன் வைத்துக்கொண்டு, பலருக்கு என்னை ஆர்வத் துடன் அறிமுகப்படுத்தியபடி, அரசியல் நிலைமைகளை பேசிக் கொண்டிருந்தார், சற்று உரத்த குரலில், பத்துப்பேருக்குப் புரிகிறபடி.

திராவிடநாடு கேட்கிறான். கேட்கட்டும். கேளுங்கள். நன்றாகக் கேளுங்கள். ஏன் பிரிந்துபோகவேண்டும் என்று கூறுகிறீர்கள் என்று எவனாவது கேட்டால், திருப்பிக் கேளுங்கள், ஒன்றாக இருந்து நாங்கள் என்ன பலனைக் கண்டோம்? பெரிய தொழிற்சாலை உண்டா, இரயில்பாதை உண்டா, இரும்புத் தொழிற்சாலை உண்டா? என்ன கிடைத்தது? எதற்காக ஒன்றாக இருக்கவேண்டும் என்று கேளுங்கள்.

என்று என்னைப்பார்த்துக் கூறிவிட்டு, சூழ இருந்த காங்கிரஸ் பிரமுகர்களைப் பார்த்தபடி,

சிலோன் விஷயத்தைப் பாருங்கள். அங்கு நமக்கு எவ்வளவு கொடுமைகள் செய்கிறார்கள், பதறுகிறார் களா? அதற்காகப் பரிகாரம் தேடுகிறார்களா? இல்லையே. அதுவே தென்னாப்பிரிக்காவில் ஒன்று நடந்துவிட்டால் எவ்வளவு ஆத்திரம் காட்டுகிறார்கள். ஏன்? அங்கே வடநாட்டுக்காரன், சிலோனில் இருப்பவன் தென்னாட்டுக் காரன், அதுதான் வித்தியாசம்.

என்று, எனக்கே தூக்கிவாரிப் போடும்படி பேசிக்கொண்டே இருந்தார். நானாகத்தான், வேறு பக்கமாகப் பார்வையையும் பேச்சையும் திருப்பிவிட்டேன்.

காங்கிரஸ் தலைவர்களிலே பலர் - தென்னாட்டுக்காரர்கள் - தனியாக வெளியிடும் கருத்து. திராவிடநாடு பிரிவினைக் கொள்கைக்கு முற்றிலும் எதிர்ப்பானது அல்ல. அந்தக் கொள்கைக்கு ஆதாரம் பலவற்றை எடுத்துக்கூடக் கூறுகிறார்கள். கட்சிப் பிரசார மேடைமீது ஏறிய உடனே, எல்லாவற்றையும் மறந்துவிடவேண்டி வருகிறது. அப்போது, "பாரதம்' பற்றிய புகழுரைதான். இந்த அண்ணாதுரைக்கு என்ன தெரியும், என்ற ஏளனம்தான்.

தம்பி! நான் யோசித்துப் பார்த்த அளவில், "வடநாடு ஆதிக்கம் செலுத்துகிறது, தென்னாடு புறக்கணிக்கப்படுகிறது'' என்று உணர்ந்தும், உரைத்தும், வாதாடியும், போராடியும் வருகிற அளவுக்கு இசைவு தருகிற காங்கிரஸ் தலைவர்கள்கூட, வடநாட்டுடன் இணைந்திருந்து, ஒத்துழைத்துத் தென் னாட்டுக்குச் சலுகைகளைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று நினைக்கிறார்கள். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தைக் காங்கிரஸ் கட்சி எதிர்த்துக் கிளர்ச்சி நடத்தியபோது, ஜஸ்டிஸ் கட்சியினர், வெள்ளை அரசுடன் ஒத்துழைத்து நாட்டுக்கு நன்மைகளைத் தேடிக்கொள்ளவேண்டும் என்று திட்டமிட்டார்களே, அதுபோல.

மற்றோர்விதமான காங்கிரசார், தென்னாட்டவர், தி. மு. கழகம், பிரிவினை பேசப் பேசத்தான், நமக்கு நல்ல "கிராக்கி' ஏற்படும்; தென்னாட்டுக்காரர்களைத் திரட்டி அந்தப் படையைக் கொண்டு பிரிவினைக்காரரை அழிக்கத் திட்டமிடுவார்கள், அப்போதுதான், நமக்கெல்லாம், தளபதிகள் நிலை கிடைக்கும் என்று நினைக்கிறார்கள்.

பொறுத்திருக்கவேண்டும், பொங்கி எழக்கூடாது என்போரும்,

காலம் வரும், கோலத்தை அதுவரையில் காட்டக் கூடாது என்போரும், உள்ளூரப் பாரத ஒற்றுமையில் நம்பிக்கை கொண்டு இல்லை.

வடநாடு சென்று பல்வேறு துறைகளிலே பணியாற்றி வருபவர் களில் மிகப் பலருக்கு, வடநாட்டு ஆதிக்கம் வளருவது பற்றிய கவலையும், எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற கலக்கமும் இருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகம் வலுவடைவதும், பிரிவினைக் கொள்கைக்குச் செல்வாக்குக் கிடைப்பதும், அவர்களுக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கிறது, மகிழ்ச்சி அடைகிறார்கள்.

ஆனால் அவர்கள் ஆயிரம், இரண்டாயிரம், சம்பளம் வாங்கும் அதிகாரிகள் அல்ல. பிழைக்க வந்தவர்கள், வாட்ட வருத்தம் அனுபவித்துக்கொண்டிருப்பவர்கள்.

தம்பி! கரோல்பாக் எனும் பகுதியில், கழகம் அமைத்து, எங்களை அழைத்துச் சென்று பாராட்டுவிழா நடத்தினார்கள். யார்? மாளிகை வாசிகள் அல்ல! அவர்கள், கண்டும் காணாதது போல் இருந்துவிடுகிறார்கள். பெரிய பெரிய அதிகாரிகள் அல்ல, அவர்கள் அச்சத்தால் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள், சிலர் சுயநலத்துக்கு ஆட்பட்டுக் கிடக்கிறார்கள். எங்களை அழைத்துச் சென்றவர்கள் கூலிவேலை செய்பவர்கள், மூட்டை தூக்கிகள், வண்டி இழுப்பவர்கள், வீட்டுவேலை செய்பவர்கள், பாத்திரம் துலக்குபவர்கள் - சின்னாளப்பட்டி, இராசிபுரம் போன்ற இடங் களிலிருந்து, பிழைக்க வந்தவர்கள்.

அவர்கள் குடி இருக்கும் இடம், சுடுகாடாக இருந்த இடம்.

இவர்களுக்கு இங்கு ஏழுபேர் வந்திருப்பதே, மாட மாளிகை கட்டிக்கொண்டதுபோலத் தோன்றிவிட்டது. இங்குக் கேட்பதுபோல, "வாழ்க!' முழக்கம் எழுப்பி வரவேற்றனர்.

இவர் போன்றவர்கள் வெளிப்படையாக முழக்கமிடுகிறார்கள்.

அலுவலகங்களிலே உள்ளவர்கள், மனதிலே அந்த எண்ணத்தை வைத்துக்கொண்டு குமுறுகிறார்கள், வதைபடுகிறார்கள்.

வடக்கும் தெற்கும் வெவ்வேறுதான் என்பதனை வாழ்க்கையின் பல கோணங்களிலிருந்தும் அவர்கள் தெரிந்து கொண்டிருக்கிறார்கள்.

வேற்றிடத்தில், வெளிநாட்டில் வந்து சிக்கிக்கொண்டு கிடக்கிறோம், விடுதலை என்று கிடைக்குமோ, வீடு என்று திரும்பிச் செல்லமுடிகிறதோ என்ற ஏக்கம், அவர்களைத் துளைக்கிறது.

நாலாயிரம் ஐயாயிரம் சம்பளம் வாங்கும் அமைச்சர் களுக்கு உள்ள "பாரதீய' உணர்ச்சியைவிட, வெறும் உறுப்பினர்களுக்குக் குறைவாகத்தான் இருக்கிறது. கட்சி வேகம் காரணமாகத்தான், அவர்கள் பிரிவினையைப் பலமாக மறுத்துப் பேசுகிறார்கள் - நம்பிக்கையாலோ, உள் உணர்ச்சியாலோ அல்ல.

பிரிவினைக் கொள்கை வலுவடைகிறதா என்று பார்த்து விட்டுப் பிறகு சேரலாம் என்று எண்ணியபடி வேலி ஓரத்தில் உள்ளவர்களும், நிரம்ப இருக்கிறார்கள்.

அண்ணன்,

3-6-1962