அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


சூடும் சுவையும் (4)
1

சி. பி.யைப் பழிவாங்கியது -
ஏக இந்தியா வாதம் -
திராவிடம் பிரிதல்

தம்பி!

விந்தையான செய்தி இது என்று குறிப்பிட்டிருந்தேன், சென்ற கிழமை; கவனமிருக்குமே. ஏன் விந்தையான செய்தி என்கிறேன் என்றால், தம்பி! தேசிய ஒருமைப்பாடு உண்டாக்க திருவிதாங்கூர் மட்டுமே தனி நாடாகி, தனி அரசு நடாத்த முடியும் என்று முழக்கமிட்டு, ஏற்பாடுகளில் ஈடுபட்ட சி. பி. தானா, இந்தக் காரியத்துக்கு அமர்த்தப்படவேண்டும் என்று எவரும் எண்ணத்தான் செய்வார்கள். நிலைமைக்கு, அவரவர்கள் தத்தமது திறமைக்கு ஏற்ப விளக்கம், காரணம் காட்டுவார்கள்! நிரம்ப!! ஆனால், காங்கிரஸ் வட்டாரமேகூட, உள்ளபடி அதிர்ச்சி அடைந்திருக்கிறது, சி. பி. தலைமையில் குழு அமைக்கப் பட்டது கண்டு.

சி. பி. இராமசாமி ஐயர், கோபாலசாமி ஐயங்கார்போல, வெள்ளைக்காரன் இருந்த வரையில் அவனிடம் "சேவகம்' பார்த்துவிட்டு, சுயராஜ்யம் வந்ததும், அதிலே "சேவகம்' பார்க்க வந்தவரல்ல. எஜமானர்கள் மாறினாலும், ஊழியர் ஊழியரே என்ற தத்துவத்தைத் தடியாகக்கொண்டு மேலிடம் நடந்தவர் அல்ல, சி. பி.

வேண்டாம் இனிப் பதவி என்று கூறிவிட்டு, வேதாந்த விசாரணையில் ஈடுபட்டவர் அல்ல;

ஓய்வுபெற்றாலும், அவ்வப்பொழுது, நேருபிரானுக்குத் துதிபாடியபடி இருந்தால், ஏதாகிலும் கிடைக்கும் என்ற எண்ணத்துடன் "நாமாவளி' பாடிடும் போக்கினருமல்ல, சி. பி.

எனக்கு ஏன்; இன்னமும் ஏன்? என்று உரத்த குரலில் கேட்டுக்கொண்டே, மெல்லியக்குரலில், "என்ன இலாகா? என்ன அந்தஸ்து?' என்று கேட்கும் பசி நிறைந்தவரும் அல்ல, சி. பி.

மகன், தில்லியில் மந்திரியாக வீற்றிருப்பதைக் காண்பவர். விடுதலை இயக்கத்தில் துவக்க காலத்தில் ஈடுபட்டு, அன்னி பெசண்டு அம்மையாரின் அரசியல் அரவணைப்பிலே வளர்ந்து, நிர்வாகத் துறையில் நுழைந்து, நெரித்த புருவத்தையும், நேர்த்தி யான அறிவாற்றலையும் ஒருங்கே இணைத்து அரசோச்சியவர். காங்கிரசை நந்திப் பிழைத்தாகவேண்டிய நிலையில்லை. அவர் ஏன் அழைக்கப்பட்டார்?

இந்தப் பதினைந்து ஆண்டுகளாக உங்கள் தலைவர் களுக்குத் தெரியாததை சி. பி. தெரிந்து கூறி, உமது தலைவர் களால் இதுநாள் வரையில் சாதிக்கமுடியாதுபோன தேசிய ஒருமைப்பாட்டினை, சி. பி. சாதிக்கப்போகிறார் என்றா அவரிடம் இந்தக் காரியத்தை ஒப்படைத்தீர்கள்? என்று கேட்கும்போது, காங்கிரசாருக்கு வேதனையாகவும் வெட்கமாகவும்தான் இருக்கிறது.

தேசிய ஒருமைப்பாடு கிடைத்திடக் காலமெல்லாம் உங்கள் போக்கை வன்மையாகக் கண்டித்துக்கொண்டிருந்த சி. பி. தானா அகப்பட்டார்! அவர் பிரிட்டிஷ் ஆட்சி முறையிலே இணைந்து இருந்தவராயிற்றே - கோஷன் பிரபுவைத் தலைவராகக்கொண்ட எனது சர்க்கார் என்று தர்பார்மொழி பேசியவராயிற்றே - கிளர்ச்சிகளை ஒடுக்க மிகக் கண்டிப்பான அடக்குமுறையை அவிழ்த்துவிட்டவராயிற்றே, பொதுமக்கள் இயக்கத் தொடர் பற்று, பதவியிலே பலகாலம் ஈடுபட்டுக் கிடந்தவராயிற்றே, அவரா, இந்தக் காரியத்துக்கு ஏற்றவர்? என்று கேட்கும்போது, காங்கிரசாருக்கு வருத்தமாகத்தான் இருக்கும்.

உள்ளபடி சி. பி. என்னதான் எண்ணிக்கொள்வார். சதா கிளர்ச்சியிலேயே காலத்தைக் கடத்திவிட்ட காங்கிரசாருக்கு, பிரச்சினையை எப்படித் தீர்த்து வைப்பது என்று புரியவில்லை. முழக்கம் எழுப்பத் தெரியும், மூலை பாயத் தெரியும், சட்டம் மீறத் தெரியும். சத்யாக்கிரகம் தெரியும். இராஜதந்திரப் போக்குத் தெரியாதே! பதினைந்து ஆண்டுகளாக எதை எதையோ செய்து பார்த்தார்கள், தேசிய ஒருமைப்பாடு காண பலிக்கவில்லை; நாளுக்குநாள் பிரிவினை கேட்கும் கழகம் வளரக் கண்டனர், என்ன செய்வதென்று புரியவில்லை; திகைத்துப்போய், ஐயனே! அபயம்! இந்த ஆபத்திலிருந்து எம்மைக் காப்பாற்றி அருளவேண்டும்! - என்று அழைத்து அஞ்சலி செய்தனர் - ஆயிரத்தெட்டுத் தவறுகள் செய்தவர்கள் என்றாலும், கெஞ்சிக் கூத்தாடும்போது என்ன செய்வது? "சரி' என்று சம்மதம் கொடுத்தேன், பதினைந்து வருடம் அரசாண்ட பிறகு, இவர்களின் அரசு சாதிக்க முடியாமற்போனதை நான் சாதித்துக் கொடுக்க வேண்டி இருக்கிறது. எனக்கு ஆணவம் என்று ஆயிரம் தடவை ஆர்ப்பரித்தவர்கள், இந்தக் காங்கிரசார். வெள்ளையனுக்குக் குலாம் என்று ஏசினார்கள். பதவிப் பித்தம் என் தலைக்கு ஏறி விட்டது என்று பரிகாசம் செய்தார்கள். நாட்டுக்குத் துரோகி என்று தாக்கினார்கள். மக்களின் உரிமைக் குரலை அடக்கிடும் மாபாவி என்று சபித்தனர். அடக்குமுறையை அவிழ்த்து விட்டவன் - டயர் போன்றவன் - என்றெல்லாம் கண்டித்தார்கள். சுயராஜ்யத்துக்காகக் காங்கிரஸ் பாடுபட்டபோது சுகவாசம் அனுபவித்துக்கொண்டிருந்த துரோகி என்று தூற்றினர். மக்களின் மனதை அறிந்துகொள்ளத் தெரியாத மமதையாளன் என்றனர். பத்தாம்பசலி என்றனர். தியாகத்தின் மதிப்பு அறியாதவன், தேசப் பிதாவாம் மகாத்மாவையே மிரட்டியவன் என்றெல்லாம் ஏசினார்கள்! அப்படிப்பட்டவர்கள், சுயராஜ்யத்துக் காகப் பாடுபட்டுத் தியாகத் தழும்பேறிய பல காங்கிரஸ்காரர்கள் இருக்க, அவர்களையெல்லாம் விட்டுவிட்டுத் தேசிய ஒருமைப் பாடு எனும் சிக்கல்மிக்க காரியத்தைச் சாதிக்க, என்னைத் துணைக்கு அழைக்கிறார்கள். ஏகாதிபத்தியக் கொலுப் பொம்மை என்று என்னைக் கேலி பேசினார்கள், இன்று என்னிடம், தேசிய ஒருமைப்பாடு எனும் அடிப்படைத் துறை ஒப்படைக்கப் பட்டிருக்கிறது. இத்தனைக்கும் நான் காங்கிரஸ் ஆட்சியாளர் களை, இந்திரனே! சந்திரனே! என்று அர்ச்சிப்பதுமில்லை. என் சுயமரியாதையை இழக்கச் சம்மதித்ததும் இல்லை. இவர்களைப் பற்றி நான் கொண்டுள்ள கருத்தை, ஒளித்து வைத்ததுமில்லை; கண்டித்துப் பேசி இருக்கிறேன். என்றாலும், என்னைதான் அழைக்கிறார்கள். காலமெல்லாம் என்னைக் கண்டித்த வர்கள், கடைசியில் என்னைக் கைகூப்பி அழைக்கிறார்கள். பிரச்சினையைத் தீர்த்துவைக்கத் திறமைவேண்டாமா, தெளிவுவேண்டாமா, ஆராய்ச்சிவேண்டாமா, ஆற்றல் வேண்டாமா? இது என்ன, உப்புக் காய்ச்சுகிற வேலைபோல எளிதானதா? அல்லது துணியைக் கொளுத்துகிற காரியமா? இரட்டை, தக்ளியா? இதற்குத் தேவை, தெளிவு, துணிவு; இதனை அவர்கள் எங்கே பெற்றிருக்கிறார்கள்? என்னை இவர்கள் ஏசியதை எண்ணும்போது எரிச்சலாகத்தான் இருக்கிறது. என்றாலும், ஆண்டு பதினைந்தாகியும் இவர்களால் தீர்க்கப்பட முடியாத பிரச்சினையைத் தீர்க்கவல்லவன் நானே என்பதை உலகுக்கு இவர்களே அறிவிக்கிறார்களே, அது போதும், இவர்களுக்கு ஏற்றத் தண்டனை! தூற்றினவர்கள் துதிபாடகர் களாவது சாதாரண சம்பவமா? சகலரும் சிந்திக்கக்கூடியதா!! வரலாற்றிலே பொறிப்பார்களல்லவா, எந்தச் சி. பி. யைக் காங்சிரசார் மிகவும் கேவலமாகக் கண்டித்து வந்தார்களோ, அதே சி. பி.யை தேசிய ஒருமைப்பாட்டுக்கு வழிகாட்டச் சொல்லிக் கேட்கவேண்டி நேரிட்டது. தன்னை இழிமொழியால் ஏசின காங்கிரஸ்மீது பழிதீர்த்துக் கொள்வதுபோல, எந்தக் காங்கிரஸ் அவர்மீது பழி சுமத்திற்றோ, அதே காங்கிரசுக்குத் துணைபுரிய சி. பி. முன் வந்தது, வரலாற்றிலே பொறிக்கத்தக்க வியப்பான நிகழ்ச்சி என்றல்லவா, பிற்காலச் சந்ததி பேசும். அது போதும்! வஞ்சம் தீர்த்துக்கொண்டேன். நான் அன்றுபோலவே தான் இருக்கிறேன் - வளைவு, நெளிவு, குழைவு, கும்பிடு கிடையாது. எனினும், அவர்களாகவே அழைத்து வழிகாட்டச் சொல்கிறார்கள். வாழ்க்கையிலே நான் பெற்ற எல்லா வெற்றிகளைக் காட்டிலும், இதனை நான் மகத்தானதாகக் கருதுகிறேன் - இவ்விதமாக வெல்லாம் சி. பி. இராமசாமி ஐயர் நினைத்தால், தவறில்லையே! இவ்வளவு இடம்கொடுத்து விட்டார்களே காங்கிரஸ்சார். ஏன்?

இதனை எண்ணி எரிச்சல்கொள்கிறார்கள் காங்சிரசிலுள்ளோர்.

காங்கிரஸ், காடு சுற்றியபோது கண்ணெடுத்தும் பாராது இருந்தவர்களுக்கெல்லாம் மந்திரிப் பதவி கொடுத்தார்கள் நமது தலைவர்கள்; சகித்துக்கொண்டோம்; தேசிய ஒருமைப்பாடு எனும் அடிப்படைக் காரியத்தை, நமது தேசியத்தையும், அதற்காக உழைத்தவர்களையும் மிகத் துச்சமாக மதித்துப் பேசியவரிடம், எதிர்த்தவரிடம் ஒப்படைக்கிறார்களே, அதனை எப்படிச் சகித்துக்கொள்ளமுடியும் - என்று நினைத்து வருத்தப் படுகிறார்கள் காங்கிரஸ் தொண்டர்கள்.

சி. பி.யை இழுத்துப்போட்டது, நமக்கு இழிவாகாது; அலசிப் பார்த்தால் அது சி. பி.க்குத்தான் இழிவு. ஏனெனில், அவர் இந்திய அரசிலே திருவாங்கூர் சேரமுடியாது, தனி அரசு ஆகிவிட்டது என்று ஆணவத்துடன் அறிவித்தவர். அப்படிப் பட்டவரே, இப்போது இந்தியாவில் பிரிவினைகூடாது, அது பெரும் தீது என்று பேசி, அதன்படி காரியமாற்றப்போகிறார் என்றால், அவர் அல்லவா சரணடைந்தார் என்று பொருள்? பிரிவினை பேசினவரைக்கொண்டே, பிரிவினை உணர்ச்சியை ஒழிக்கச் சொல்கிறோம். மாபெரும் சாதனை அல்லவா அது. "ஐயா! சி. பி.! திருவிதாங்கூர் தனி அரசு ஆகிவிட்டது என்று பேசி, இந்திய தேசியத்துக்கு வேட்டு வைக்கப் பார்த்தீரே! இப்போது, பிரிவினைக் கொள்கையை ஒழித்துக்கட்டும் வேலையை, நீரே அல்லவா செய்யவேண்டி வந்தது! துளியாவது எதிர்பார்த்திருப்பீரா? வரலாறு என்ன எழுதிக்காட்டும்? எந்தச் சி. பி. திருவிதாங்கூர் பிரிந்து தனிநாடு ஆகிவிடும் என்று முழக்கமிட்டாரோ, அதே சி. பி. திராவிடம் தனிநாடு ஆகவேண்டும் என்று கேட்பவர்களிடம் மன்றாட, வாதாட நியமிக்கப்பட்டார். பிரிவினையை விட்டுவிடுக என்று கேட்டுக்கொண்டார். திருவிதாங்கூர் தனிநாடு ஆகப் பேராடிய வீரரை அப்போது முறியடித்தது மட்டுமல்ல, பல ஆண்டு களுக்கு பிறகு, அவரே பிரிவினைக் கொள்கையை அடக்கும் தளபதியாக நியமிக்கப்பட்டார். மகாராஜா சம்பளம் கொடுத்த போது, தனிநாடு கேட்கும் தளபதிவேலை பார்த்தார். நேரு அழைத்தபோது தேசிய ஒருமைப்பாட்டுக்கு வழி வகுக்கும் "உத்யோகம்' பார்த்தார். சி. பி.யைச் சரியான முறையிலே பழிவாங்கிவிட்டார் நேரு'

இப்படிக் காங்கிரசார் வாதாடித் தமக்கு ஏற்பட்டுள்ள எரிச்சலைப் போக்கிக்கொள்ளக் கூடும்.

இரு தரப்பிலே, எவர் வாதமாயினும், அது கேலிக் கூத்தாகவே, நடுநிலையாளர்கட்குத் தோன்றும்.

தம்பி! காங்கிரசுக்கோ அல்லது சி. பி.க்கோ, முன்பு கொண்டிருந்த போக்கு நினைவிற்கு வருமானால், இப்போது ஏற்பட்டுள்ள "கூட்டு', எவ்வளவு கேலிக்குரியது என்பது சுரீலெனப்படும்.

அவர்கள் கிடக்கட்டும், தம்பி! நீ தெரிந்துகொள், மறந்து போயிருப்பவர்களுக்கும் எடுத்துச் சொல்லு, தேசிய ஒருமைப் பாடு காணக் குழுத்தலைவர் ஆகியுள்ள சி. பி. முன்பு பூண்டிருந்த கோலத்தையும், முழக்கிய வீராவேசத்தையும் நாம் திராவிடம் தனிநாடாகத் திகழவேண்டும், தனி அரசு நடாத்தவேண்டும் என்கிறோம், இன்று தனி அரசு நடாத்தும் எத்தனையோ நாடுகளைவிடத் திராவிடம் அளவில் பெரிது, வளம் மிகுதியாகக் கொண்டது, மக்கட்தொகை எட்டுக் கோடிக்கு அதிகம்.

சி. பி. திருவிதாங்கூர் சமஸ்தானம் மட்டும் தனி நாடாக, தனி அரசாக இருக்கமுடியும், இருக்கவேண்டும், இருக்கப் போகிறது என்று அறிவித்தவர்! அறிவிப்பா? பிரகடனம்!! திருவிதாங்கூர் சமஸ்தானத்து மக்கட்தொகை எவ்வளவு? 65 இலட்சம்; வருவாய் எவ்வளவு 9 கோடி ரூபாய். இதற்குத் தனி அரசு உரிமை கேட்டவர், சி. பி.

நிலைமை அவருக்குத் துணைசெய்யவில்லை; எனவே, கடைசியில், திருவிதாங்கூர் இந்தியப் பேரரசிலே இணைந்தது. அது, வீராவேசமாகப் பேசியவர் காரியமாற்றமுடியாமல் தடுமாறிப்போனார் என்பதனை எடுத்துக் காட்டுகிறது. அவர் மனம் மாறியதையோ, திருவாங்கூர் தனிநாடாக வாழமுடியாது என்ற உண்மையை உணர்ந்துகொண்டு தமது போக்கை மாற்றிக் கொண்டதையோ, காட்டுவதாக இல்லை. ஏனெனில், திருவிதாங்கூர் தனிநாடு ஆகவேண்டும் என்பதற்காக அவர் சொன்ன காரணங்களை, காட்டிய ஆதாரங்களை, சொத்தை சோடை, சத்தற்றது, பொருளற்றது என்று அவர் பிறகு அறிவிக்க வில்லை. நிலைமை சாதகமாக இல்லை. எனவே போக்கை மாற்றிக் கொண்டார். நிலையான போக்கிலிருக்க, அவருக்கு வாய்ப்பும் இல்லை. ஏனெனில், திருவாங்கூருக்கு அவர் திவான் வேலை பார்க்கப் போனவர்.

அவருடைய போக்கு எக்காரணத்தாலோ மாறிவிட்டது - அதுபற்றி நமக்குக் கவலை இல்லை. நாம் கவனிக்கவேண்டியது, திருவாங்கூர் தனி அரசு நடாத்தமுடியும், நடாத்தவேண்டும் என்பதற்கு சி. பி. என்னென்ன கூறினார் என்பதனை, ஏனெனில், அந்தக் காரணங்களைக் காட்டிலும் பல மடங்கு பொருத்தமும், பொருளும், வலிவும், வரலாற்றுச் சிறப்பும்கொண்ட காரணங்கள் காட்டி, நாம் திராவிடம் கேட்கிறோம்.

தம்பி! இன்று தேசிய ஒருமைப்பாட்டுக்காக உழைக்க ஒத்துக்கொண்ட சி. பி. திவான் வேலைபார்த்தபோது, திருவாங்கூர் தனிநாடு ஆகவேண்டும் என்பதற்காகக் கூறிய வற்றையும், அப்போது நடைபெற்ற வாதங்களையும் தெரிந்து கொள்ளவேண்டும் என்று விரும்புகிறாய் - தெரிகிறது. சரி! வா! தம்பி! "பக்திவிலாசம்' செல்வோம்.

தம்பி! பக்திவிலாசம் என்பது திவான் கொலுவிருக்க, திருவிதாங்கூரிலே அமைந்துள்ள மாளிகை. மேனாட்டார் கேட்டு இன்புறும் ஆங்கிலப் புலமையுடன், பண்டிதர்கள் கேட்டுப் பரமானந்தம் அடையத்தக்க சமஸ்கிருத பாண்டித்யமும், சுயராஜ்யம் கேட்கும் "பாஷை'யிலே பயிற்சியும், ஏகாதிபத்திய முறைகளிலே நிபுணத்துவமும்கொண்டு, எதனையும் துருவி ஆராயத்தக்க கூர்த்த மதியும், அகன்ற அழகிய விழிகளும், கவ்வும் பார்வையும், கனிவு துணிவு எனும் இரண்டினையும் தேவைப் படும்போது எடுத்துக் காட்டவல்ல அதரமும்கொண்ட இராஜதந்திரி, இராஜ வம்சத்துக்கு இரட்சகராகவும் இரமணிய மான குணங்களால் உப்பிரிகைகளைச் சொக்கவைக்கக் கூடியவர் என்ற புகழாரம் சூட்டப்பெற்றவரும், கலை வல்லுநர்கள் வியந்து கூறிடும் நிலை பெற்றவருமான, திவான் சர். சி. பி. இராமசாமி ஐயர் அழைக்கிறார், "பக்திவிலாசம்' வருக! எமது திட்டம் பற்றிய விளக்கம் கூறுகிறோம் - என்று. சென்று பார்ப்போம்.

தில்லியிலே, தம்பி! திடீர் மாறுதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலம். இந்தியாவுக்குச் சுயராஜ்யம் தந்துவிட வெள்ளையர் காத்திருக்கும் வேளை, ஜனாப் ஜின்னாவின் ஒவ்வொரு அசைவுக்கும் பேச்சுக்கும், புன்னகைக்கும் பெரு மூச்சுக்கும், புருவ நெரிப்புக்கும் பொருள் என்ன என்று காந்தியார் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் ஆராய்ச்சி செய்திடும் வேளை.

சுயராஜ்யம் நிச்சயம் - ஆனால் இராஜ்யங்கள் இரண்டு - ஒன்று அல்ல, என்பது இலைமறை காயாக இருந்த வேளை.

சர். சி. பி. இந்தியா இந்தியாவாகவே இருக்கவேண்டும் - பாகிஸ்தான் ஏற்படக்கூடாது - இந்தியா துண்டாடப்படக் கூடாது - என்று அறிவித்துவிட்டு, அது நடைபெறப் போவதில்லை, பாகிஸ்தான் அமையப்போகிறது என்பதனையும் உணர்ந்துகொண்டுவிட்ட சமயம்.

பாகிஸ்தான் அமைகிறது என்ற உடனே, சர். சி. பி. பாகிஸ்தான் அமைப்பை எதிர்க்க அல்ல, "பக்திவிலாசம்' வரும்படி அனைவரையும் அழைப்பது.

இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்துவிடுவதால் மிச்சம் உள்ள இந்தியாவில் திருவிதாங்கூர் இணைய மறுக்கிறது என்று அறிவிக்க அழைக்கிறார். நானே பேசிக்கொண்டிருக்கிறேனே - இராஜதந்திரி பேசுகிறார் - திவான் திருவாய் மலர்ந்து அருளு கிறார், கேண்மின்!!

சீமாட்டிகளே! சீமான்களே! மதிப்புமிக்க பத்திரிகை நிருபர்களே! திருவிதாங்கூர் தேசபக்தர்களே!

வருக! திருவிதாங்கூர் தனிநாடாகி, தனி அரசு நடாத்த மகாராஜா முடிவு செய்துவிட்டார். அதனை விளக்கவே அழைத் துள்ளேன். ஆகஸ்ட் 15ஆம் தேதி பிரிட்டிஷ் ஆட்சி அகலுகிறது. சுயராஜ்யம் அளிக்கப்படுகிறது. பிரிட்டிஷ் ஆட்சி அகன்றதும், இதுவரை அந்த ஆட்சியிலே இணைந்திருந்த திருவிதாங்கூர் சமஸ்தானம், பூரண விடுதலை பெறுகிறது. தனிநாடு ஆகிறது தனி அரசு நடத்த இருக்கிறது.

சுதந்திர திருவிதாங்கூர், இந்தியாவுடன் நேசத்தொடர்பு கொண்டு, தனி அரசு மேற்கொண்டு, நடாத்திவரும், பொருளா தார, பண்பாட்டு அடிப்படையிலும் மற்றப் பல காரணங் களாலும் திருவிதாங்கூர், தனிநாடாகித் தனி அரசு நடாத்துவது தான் நடைமுறைக்கு ஏற்ற இலாபகரமான வழியாகும். இதற்கு எந்தவிதமான மறுப்பும் இருக்கக் காரணமில்லை; நியாயமில்லை. செல்வாக்குள்ள சில வட்டாரத்திலே இந்தத் திட்டம் வெறுக்கப் பட்டாலும், இந்தத் தனி அரசுத் திட்டம் உங்கள் மேலான ஆதரவைப்பெறத் தகுதி வாய்ந்தது என்பதை, திருவிதாங்கூர் மக்களுக்கு, உத்யோகம் வகிப்பவர்கள் உத்யோகப் பற்றற்றவர்கள் ஆகியோர் அனைவரும் நான் கூறுவதுடன், சுதந்திர திருவிதாங்கூர் இலட்சித்துக்காகப் பாடுபடும்படியாகவும், ஒத்துழைக்கும்படியாகவும், அன்புடன் அழைக்கிறேன்.

சந்தேகம் கொண்டவர்களுக்குத் தெளிவு அளித்து மனமாற்றம் ஏற்படுத்தும் பணியில் உத்யோகஸ்தர்கள் ஈடுபட வேண்டும். திருவிதாங்கூர் தனி அரசு நடத்துவது கூடாது என்ற கருத்துக்கொண்டவர்கள், பதவிகளை இராஜிநாமாச் செய்து விட்டு வெளியேறிவிடவேண்டும்.

திருவிதாங்கூர் மக்களின் அப்பழுக்கற்ற தேசபக்தியின் பேரால், திருவிதாங்கூரின் கீர்த்திமிக்க வரலாற்றுச் சிறப்பின் பேரால், ஒளிவிடும் திருவிதாங்கூர் பாரம்பரியம், பண்பாடு ஆகியவற்றின் பேரால், உங்களை நான் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன், சுதந்திர திருவாங்கூர் அமையும் பணியில் ஆர்வத் துடன் ஈடுபட முன் வாரீர்.

தனிநாடாகி, தனி அரசு நடத்தி, உரிமையும் பெருமையும் வேண்டுமா, அல்லது பிளவுபட்ட இந்தியாவிலே பிணைக்கப் பட்டு, அமிழ்ந்துபோய், இந்தியாவில் ஒரு எடுபிடியாக இருக்கப் போகிறீர்களா என்பதை, ஒருவருக்கொருவர் கலந்து பேசி முடிவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.

எந்த நிலைமையையும் சமாளிக்கவும், தேவைப்படும் எந்த நடவடிக்கை எடுத்துக்கொள்ளவும், மகாராஜா உறுதி பூண்டு விட்டார்.

திருவிதாங்கூர் தனிநாடு ஆகத் தகுதி இல்லையா? தனிநாடு களாக உள்ளவற்றுடனோ, அல்லது பிரிட்டிஷ் இந்தியாவில் உள்ள மாகாணங்களுடனோ, ஜனத்தொகை, வருவாய், வளம் ஆகிய அம்சங்களில் திருவிதாங்கூர் எப்படி இருக்கிறது என்பதை ஒப்பிட்டுப் பார்த்து, முடிவுக்கு வாருங்கள். நேபாளம் சயாம் நார்வே, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளுடன் திருவிதாங்கூரை ஒப்பிட்டுப் பாருங்கள். தனிநாடாக இருக்கும் தகுதி திருவிதாங்கூருக்கு இல்லையா, சொல்லுங்கள். இங்கு 65 இலட்சம் மக்கள் இருக்கிறார்கள்; ஆண்டு வருமானம் நமது அரசுக்கு ஒன்பது கோடி ரூபாய். அந்த நிலையில், தனி அரசு நடாத்த இயலும்.

திருவிதாங்கூர் விரும்புவது என்ன? பாரதப் பண்பாடு போன்றதுபோலவே காணப்படினும், திருவிதாங்கூருக்கு என்று அமைந்துள்ள பண்பாடு, தனித்தன்மை வாய்ந்தது தனியானது. அந்தப் பண்பாட்டின் வழியின்படி, இலட்சியங்களின்படி திருவிதாங்கூர் தனி அரசை நடத்திச்செல்ல உரிமைவேண்டும்.

மேலும் கூறுகிறேன், இந்தியா பிளவுபடுவதால் ஏற்படக் கூடிய வேதனைகளிலிருந்து, தென்னிந்தியாவைக் காப்பாற்றும் இரட்சகனாக திருவிதாங்கூர் விளங்கப்போகிறது.

திருவிதாங்கூர் எப்போதுமே, சர்வதேச அரங்கிலே ஒரு தனி அந்தஸ்துப்பெற்று வந்திருக்கிறது.

திருவிதாங்கூரை யாரும் வெற்றிகொண்டதில்லை. அதற்கு மாறாகக் கடற்படை வலிவுள்ள டச்சுக்காரரை கொளச்சல் போரிலே, திருவிதாங்கூர் தோற்கடித்து, ஐரோப்பிய நாட்டவரைத் தோற்கடித்த ஒரே இந்தியநாடு என்ற கீர்த்திபெற்றிருக்கிறது.

இவைகளை எண்ணிப்பாருங்கள் - வரலாறு, பாரம்பரியம், பண்பாடு ஆகியவற்றை நினைத்துப் பாருங்கள். இத்தகைய திருவிதாங்கூர், சுதந்திரம் அடையவேண்டும் என்ற இலட்சியத்தைப் போற்றாதார் இருக்கமுடியுமா!

முன்பு, சுதந்திரத்தைக் காத்துக்கொண்டிருக்கிறது திருவிதாங்கூர்.

தேவைப்பட்டால் எதிர்காலத்திலும், திருவிதாங்கூர் தன் சுதந்திரத்தைப் பாதுகாத்துக்கொள்ளும்.

நான் திருவாங்கூர்க்காரனாக இல்லையே என்று வருத்தப் படுகிறேன். எனினும், திருவிதாங்கூர் தனிநாடு ஆவதற்கான நிலைமை உருவாவதைக் காண அனைவரும் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

தம்பி! 1947ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 11ஆம் நாள் பக்தி விலாசத்தில், திவான் சி. பி. பேசியுள்ள ஆங்கில விளக்க உரையின் சுருக்கம் மேலே காணப்படுவது. எப்படி சி. பி.? கப்பலின் மேற் தட்டிலே கெம்பீரமாக நின்றுகொண்டு, பீரங்கி களை இன்னின்ன முறையிலே அமையுங்கள் என்று உத்தரவிட்டு, திருவிதாங்கூர் கப்பற்படைக்குத் தலைமை வகித்து நடத்திச் செல்லும் கடற்படைத் தளபதிபோலத் தெரிகிறாரல்லவா! அவர் இப்போது, நம்மை அழைத்துக் கேட்கப்போகிறாராம், திராவிடம் தனிநாடு ஆகவேண்டும் என்று கேட்கலாமா? சரியா? முறையா? என்று.

1947 ஜூன் மாதம் திருவிதாங்கூர் தனிநாடு ஆகவேண்டும் என வீர உரை!

1962 ஜூன் மாதத்தில் அவருக்குப் புதிய அலுவர்; - பிரிவினை கூடாது என்று உபதேசம் செய்ய!!

கூரிய கத்தியால் பழமும் நறுக்கலாம், கழுத்தையும் அறுக்கலாம்.

விளக்கொளிகொண்டு திருக்குறளும் படிக்கலாம் திருட்டுக் கணக்கும் எழுதலாம்.

அறிவைக்கொண்டு சிலர் எதையும் செய்யலாம் என்று நினைக்கிறார்கள் போலும்!!

தம்பி! திருவிதாங்கூரை விடுவிக்கும் வீரர், டச்சுக்காரரை கொளச்சல் யுத்தத்திலே திருவிதாங்கூர் தோற்கடித்ததை எடுத்துக் காட்டி, தோள் தட்டுங்கள்! முரசு கொட்டுங்கள்! துந்துபி முழங்குங்கள்! வாளை உருவுங்கள்! என்று முழக்கமிட்டார். இப்போது அவருக்கு இடப்பட்ட வேலை,

கங்கை கொண்டான்
கடாரம் வென்றான்
கலிங்கம் கொண்டான்

என்றெல்லாம் புகழாரம் சூட்டிக்கொண்டுள்ள நாம், கோரி யிடமும், கஜினியிடமும், தைமூரிடமும், செங்கிஸ்கானிடமும் தோற்ற வடவரிடம், பிணைக்கப்பட்டு இருப்பதுதான் பேரறிவு என்று எடுத்துக் கூற!

"பக்தி விலாச'த்தில் பரணி!

பண்டிதர் சகவாசத்தால், முகாரி பாடப்போகிறார் போலும், போகாதே! போகாதே! என் மக்களா! பொல்லாது பொல்லாது பிரிவினைதான்!! - என்று சுருதி தவறாமல் பாடுவார் போல இருக்கிறது. ஆண்டவனே! ஆண்டவனே! அறிவையும் கொடுத்து, அதனை எப்படியும் வளைத்துக்கொள்ளும் துணிவையும் கொடுத்தாயே! இது தகுமா என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா?

சர். சி. பி.யின் இந்தத் திட்டம்பற்றித் தெரிந்ததும், மகாத்மா பதறிப்போனார். மறுநாள் மாலையே வழக்கமாக நடாத்தும் வழி பாட்டுக் கூட்டத்தில், இதனைக் கண்டித்துப் பேசினார்.

கோடிக்கணக்கான மக்களால் கண்கண்ட கடவுள் எனக் கொண்டாடப்படும் மகாத்மாவே இந்தத் திட்டத்தைக் கண்டித்துவிட்டாரே, இனி எப்படி அதனை வலியுறுத்துவது என்று சி. பி. சஞ்சலமடைந்தாரா? அவரா! துளிகூட இல்லை உடனே ஒரு தந்தி கொடுத்தார் மகாத்மாவுக்கு!

எவரும், பல நூற்றாண்டுகளாகத் திருவிதாங்கூரை வெற்றிகொண்டதில்லை. சுதந்திர பாரம்பரியம் அதற்கு உண்டு. அதே சுதந்திரத்தைத் திருவிதாங்கூர் மீண்டும் பெற்று விளங்க முடியும்.

சுதந்திரத் திருவிதாங்கூரில் மக்களுக்கு உரிமை வழங்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது. வயதுவந்தவர்கள் அனைவருக்கும் "ஓட்டு உரிமை' வழங்கப்போகிறோம். திருவிதாங்கூரில் எண்ணற்ற பொதுமக்கள் சுதந்திரத்தை விரும்புகிறார்கள். இதனைத் தங்களுடைய அடுத்த வழிபாட்டுக் கூட்டத்தில் எடுத்துக் கூறவும்.

இப்படித் துணிவுடன் தந்தி அனுப்பினவர்தான் சர். சி. பி.

அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டிக்கு ஏகப்பட்ட சீற்றம். சர். சி. பி.யின் சுதந்திர திருவிதாங்கூர் திட்டத்தை வன்மையாகக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றிற்று.

ஆனால், அதேபோது, தவிர்க்கமுடியாத காரணங்களால், பாகிஸ்தான் பிரிவினைக்கு இணங்குவதாகவும் தீர்மானம் போடப்பட்டது.

மகாத்மாவின் கண்டனம், அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியின் சீற்றம் எனும் எதுவும் சி. பி.யின் உறுதியைக் குலைக்கவில்லை. தமது திட்டத்துக்கு ஆதரவு திரட்டும் வேலையில் வெகு மும்முரமாக ஈடுபட்டார். பல பிரமுகர்களைக் கொண்டு ஆதரவு அறிக்கைகள் வெளியிடச் செய்தார்.

தொன்றுதொட்டுச் சுதந்திர நாடாகவே திரு விதாங்கூர் இருந்துவந்திருக்கிறது. எதிர்காலத்திலும் அவ்விதமாகவே இருக்கவேண்டும். டச்சுக்காரர்போன்றவர் களாலேயே திருவாங்கூரைத் தோற்கடிக்க முடியவில்லை. வெள்ளைக்காரர்கள்கூடத் திருவாங்கூருடன் ஒப்பந்தம் செய்துகொண்டவர்தாம்.

திருவிதாங்கூரின் சுதந்திரத்தை எதிர்ப்பவர்கள் நாட்டுக்குத் துரோகிகள்.

ஏராளமான வளங்கள் உள்ள திருவிதாங்கூர் ஏன் சுதந்திரநாடாக இருக்கக்கூடாது?

என்று கத்தோலிக்க சமூகத்தின் செல்வாக்குள்ள தலைவ ரொருவர் அறிக்கை வெளியிட்டு, சர். சி. பி.யின் திட்டத்தை ஆதரித்தார்.