அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


சூடும் சுவையும் (4)
2

தம்பி! மூலைக்கு மூலை எதிர்ப்புகள்! சளைக்கவில்லை சர். சி. பி.

அரசியல் சட்டப் பிரச்சினைகள் ஆராயப்பட்டன - நுண்ணறிவு மிக்க வாதங்கள் நடைபெற்றன. வெள்ளையர் ஆட்சி அகன்ற உடன், "சமஸ்தானங்கள்' விடுதலைபெற்றுவிடுகிறனவா, இல்லையா? அவை எவருக்குக் கட்டுப்பட்டு இருக்கவேண்டும் என்ற பிரச்சினை, கீர்த்திமிக்க வழக்கறிஞர்களின் பொழுதுபோக்காகிவிட்டது.

ஒருபுறத்தில் அல்லாடியும், கோபாலசாமி ஐயங்காரும் கச்சையை வரிந்துகட்டிக்கொண்டு நின்றார்கள், சமஸ்தானங் களுக்குச் சுதந்திரம் இல்லை என்று விளக்க, ஆதாரங்கள் ஏராளம்.

சர். சி. பி. சட்ட ஆதாரங்களைச் சளைக்காமல் எடுத்து வீசினார். பெதிக்லாரன்சு சொல்லி இருப்பதைக் கவனியுங்கள்; கிரிப்ஸ் பேசியிருப்பதன் பொருளைப் பாருங்கள் என்று கூறினார்.

தமது வாதங்களை மற்றவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா இல்லையா என்றுகூடக் காத்துக்கொண்டில்லை. விரைவாகத் திட்டமிட்டபடி செயல்படலானார். மீண்டும் பத்திரிகை நிருபர் களை வரவழைத்து,

திருவிதாங்கூருக்குத் தனி அரசு நடாத்தும் உரிமை இருக்கிறது.

அதற்கான முடிவு எடுக்கப்பட்டாகிவிட்டது.

முடிவு மாற்றிக்கொள்ளப்படக்கூடியது அல்ல. என்று அறிவித்தார்.

இரண்டொரு நாட்களிலே வேறோர் அறிவிப்புத் தொடர்ந்தது.

ஜனாப் ஜின்னாவிடம் நேரிலே நடத்திய பேச்சு வார்த்தைகளின்படியும், கடிதப் போக்குவரத்தின்படியும் பாகிஸ்தான் திருவிதாங்கூர் பிரதிநிதி ஒருவரை ஏற்றுக் கொள்ளச் சம்மதம் அளித்துள்ளது.

அதன்படி, முன்னாள் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரலாக இருந்துவந்த கான்பகதூர் கரீம்கான் பாகிஸ்தானில் திருவிதாங்கூர் பிரதிநிதியாகப் பணிபுரிய நியமிக்கப்பட்டிருக்கிறார்.

திருவிதாங்கூர் சுதந்திரநாடு ஆகிவிட்டால் என்னென்ன செய்யவேண்டுமோ அவைகளை, முறைப்படி திவான் செய்யத் தலைப்பட்டுவிட்டார்! பாகிஸ்தானத்துக்கு ஒரு பிரதிநிதியை நியமித்ததுபோலவே, இந்தியாவில் இருக்கவும் ஒரு பிரதிநிதியை நியமித்தார். இவர் பெயர் பரமேஸ்வரன் பிள்ளை.

நேரு போன்றார்களுக்கு சீற்றம் கட்டுக்கடங்கவில்லை.

பிரிட்டிஷ் ஏகாதிபத்யமே பணிகிறது, இந்தச் சுண்டைக் காய் அளவுள்ள திருவாங்கூர் தலைவிரித்து ஆடுவதா! இதனை ஒடுக்கியே தீரவேண்டும் என்று ஆர்ப்பரித்தனர்.

தக்க சமயத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்க முடிவுசெய்து விட்டோம் என்று காங்கிரஸ் அறிவித்தது.

எப்போது? சி. பி. நடவடிக்கைகளை எடுத்துக்கொண்ட பிறகு!!

சர். சி. பி. இதனைக் கேட்டுக் கலக்கமடையவில்லை.

நடவடிக்கையா எடுக்கப்போகிறீர்கள்? என்ன நடவடிக்கை? பொருளாதார நெருக்கடி உண்டாக்க எண்ணமா? முடியாதே! திருவாங்கூருக்குத் தேவைப்படும் உணவுப்பொருள் அனுப்பமுடியாது என்று கூறுவீர்கள். பரவாயில்லை. இந்தியாவிலே உணவுப்பொருள் உற்பத்தி, தேவைக்கு அதிகமாக இல்லை. தெரியும். பற்றாக்குறை!! உணவுப்பொருள் தர வேறு இடம் இருக்கிறது. பெற்றுக்கொள்ள முடியும். ஏற்பாடாகிவிட்டது.

திருவாங்கூரின் விலைப்பொருள்களான தேயிலை, இரப்பர், மிளகு, கிராம்பு, கனிப்பொருள் ஆகியவற்றை இந்தியா வாங்காது என்பீர்களா? சொல்லுங்கள்! நட்ட மில்லை! இவைகளுக்கு வேறு மார்க்கெட் இருக்கிறது.

இடைக்காலத்திலே சிறிது நெருக்கடி ஏற்படலாம்; நஷ்டம் ஏற்படலாம்.

ஆனால், பொருளாதாரத் துறையிலே போர் நடத்துவதைப் பிரிட்டனும் ஐ. நா. சபையும் பார்த்துக் கொண்டு வாளா இருக்கா!

இப்படிப்பட்ட கருத்தமைந்த, காரசாரமிக்க பதிலடி கொடுத்தார்; பதறவில்லை; பயப்படவில்லை.

தம்பி! மறந்துவிடாதே, சர். சி. பி. தனி அரசு உரிமைக் கேட்டுக் கிளர்ந்தெழுந்தது, மொத்தக் கேரளத்துக்குக்கூட அல்ல; அதிலே ஒரு துண்டான, திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு!!

தனி அரசு நடத்தமுடியுமா என்று கேட்டவர்களுக்கு, கொளச்சல் களத்தைக் காட்டினார்.

பிழைக்க முடியுமா என்று கேட்டவர்களுக்கு, தோட்டங் களைக் காட்டினார்.

தோட்டா உண்டா என்று கேட்டவர்களுக்கு, சுதந்திரத் திருவிதாங்கூருக்காக எல்லாவிதமான நடவடிக்கைகளிலும் ஈடுபட மகாராஜா உறுதியாக இருக்கிறார் என்று போர்க் குரலே எழுப்பிக் காட்டினார்.

அவர்தான் இப்போது திராவிடம் தனி அரசு கேட்கக் கூடாது என்று தடுத்துக் கூறும் வேலையில் அமர்த்தப்படுகிறார். விந்தையாக இல்லையா!!

சுயராஜ்ய இந்தியாவில் சேர மறுக்கும் சமஸ்தானங்களை, விரோதிகளாகவே பாவித்து, அதற்கேற்ற நடவடிக்கைகள் எடுப்போம் என்று நேரு பண்டிதர் கூறினார்.

ஏ! அப்பா! எத்தனை பெரிய மிரட்டல்! ஐக்கியநாடுகள் சபையிலே சேர மறுக்கும் நாடுகள்கூட உள்ளன; அவைகளைக் கூட இப்படி, ஐ. நா. சபை மிரட்டவில்லையே!! - என்று சி. பி. ஏளனம் பேசினார்.

பாகிஸ்தான் அமைந்தாலும், எல்லைப்புற முஸ்லீம்கள் - பட்டாணியர் - தனியாக இருக்க விரும்புகிறார்கள் என்று அறிவிக்கப்பட்டது; காங்கிரஸ் அந்தப் பக்தூனிஸ்தான் திட்டத்தை ஆதரித்தது.

சி. பி. உடனே தந்தி கொடுத்தார்.

பக்தூனிஸ்தானை ஆதரிக்கிறீர்கள் - திருவாங்கூர் தனிநாடு ஆவதை எதிர்க்கிறீர்களே, இது என்ன நியாயம்? - என்று காங்கிரஸைக் கேட்டார்.

பக்தூனிஸ்தான் கேட்கும் எல்லைப்புற மக்கள் 50 இலட்சம்; திருவாங்கூர் மக்கள் தொகை அதைக் காட்டிலும் அதிகம்.

திருவாங்கூரின் ஆண்டு வருவாய் ஒன்பது கோடி ரூபாய் - எல்லையின் நிலைமையோ, வருவாய் போதாமல், ஆண்டொன்றுக்கு இரண்டரைக் கோடி ரூபாய், மான்யம் பெறுகிறது, மத்திய சர்க்காரிடம்.

அதற்குத் தனிநாட்டு நிலை! திருவாங்கூர் அடிமையாக இருப்பதா? - இவ்விதமாகவெல்லாம் இடித்துக் கேட்டார்.

பாகிஸ்தானுடன் ஒப்பந்தம் செய்துகொண்டார் - வெளி நாடுகளிடம் உதவி கேட்கிறார் - இந்திய அரசுக்கே வேட்டு வைக்கிறார் என்றெல்லாம் காங்கிரஸ், சர். சி. பி.யைக் கண்டிக்கலாயிற்று.

சர். சி. பி. இராமசாமி ஐயர், எதற்கும் கலங்கவில்லை.

திருவாங்கூரிலேயே பலமான எதிர்ப்பு மூண்டது சமாளிப்பேன் என்று கூறினார்.

மீண்டும் நிருபர் மாநாடு நடத்தினார் - ஜூன் 25ல் நகர மண்டபத்தில். அதிலே, விளக்கமாகவும் திட்டவட்டமாகவும் தெரிவித்தார், திருவாங்கூரின் தனி அரசு திட்டம்பற்றி.

திருவிதாங்கூர் சிறிய நாடு அல்ல.

அதனைப் பட்டினிபோட்டுப் பணியவைக்கலாம் என்று கருதினால், தன்மானமுள்ள நாட்டுப்பற்றுமிக்க, திருவாங்கூர்க் குடிமகன் ஒவ்வொருவரும் என்ன முடிவு செய்வார் என்பதிலே எனக்கு ஐயமில்லை.

உலகிலே ஆத்மார்த்தத் துறையின் ஒப்பற்ற தலைவராக விளங்கவேண்டிய மகாத்மா, ஒரு கட்சியின் ஆதரவாளர் என்ற நிலைக்குத் தம்மைத் தாழ்த்திக் கொள்கிறார்.

வழிபாட்டுக் கூட்டத்திலே அரசியல் பேசுவது பொருத்தமற்றது.

இப்படி விளக்கங்களை வாரி வீசலானார்.

பாகிஸ்தானுடன் ஒப்பந்தம் செய்துகொண்டார் என்று சொன்னதும், ஊரே கொதிக்கும், சி. பி. திணறிப்போவார் என்று காங்கிரஸ் தலைவர்கள் எண்ணிக் கொண்டனர். சர். சி. பி. ஒளிக்கவுமில்லை. மன்னிப்பு கேட்கவுமில்லை, விவரம் தரத் தயக்கம் காட்டவுமில்லை, தனக்கும் ஜின்னாவுக்கும் நடைபெற்ற தந்திப் போக்குவரத்தை வெளியிட்டார், நிலைமையைத் தெளிவாக்க.

ஜனாப் ஜின்னாவுக்கு, சி. பி. அனுப்பியிருந்த தந்தியில், பாகிஸ்தான் நீடூழி காலம் நல்வாழ்வு வாழவேண்டும் என்று வாழ்த்தினார்.

நான் பாகிஸ்தான் இயக்கத்தையும், இந்தியா பிளவு படுவதையும் பலமாகக் கண்டித்திருக்கிறேன். ஆனால், தாங்கள் தங்கள் கொள்கையிலே தளராத நம்பிக்கை கொண்டு, விடாப்பிடியாகவும் தீரமாகவும் உழைத்து, தங்கள் இலட்சியத்திலே வெற்றிபெற்றுவிட்டதால், இனி, அதுபற்றி ஏதும் கூறுவது தேவை இல்லை. நான் தங்களுடைய ஒத்துழைப்பையும், பாகிஸ்தானின் ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறேன். நான் ஒத்துழைக்கச் சித்தமாக இருக்கிறேன்.

அதுபோலவே, இந்தியாவுடனும் ஒத்துழைக்க விரும்புகிறேன். இரு அரசுகளிலும் திருவிதாங்கூர் தன் பிரதிநிதிகளை அனுப்பிவைக்க முடிவெடுத்து இருக்கிறது.

நம் இரு நாடுகளுக்கும் பொதுவானதும் நன்மை தரத்தக்கதுமான வாணிபத் தொடர்புகள் சம்பந்தமான பிரச்சினைகளைக் கலந்து பேசி முடிவெடுக்க, திருவாங்கூர் பிரதிநிதி பணிபுரிவார்.

இந்தத் தந்தி மூலம், சர். சி. பி. பாகிஸ்தானுடைய உறவைப் பெற்றுக்கொள்ளத் திட்டமிட்டார். அதற்குக் காரணமும் கூறினார் நிருபர்களிடம். திருவாங்கூர் தனிநாடு ஆகிவிட்டால், உணவுப்பொருள் அனுப்பமாட்டோம் என்று இந்தியாவில் உள்ள சிலர் மிரட்டிப் பார்க்கிறார்கள். அந்த மிரட்டலைப் பொருளற்றதாக்கத்தான், உணவுப்பொருள் தரக்கூடிய பாகிஸ்தானுடன் ஒப்பந்தம் செய்துகொண்டேன். பாகிஸ்தானி லுள்ள சிந்து, பலுஜிஸ்தான் பகுதியிலிருந்து அரிசி கிடைக்கும். அதுவும் கராச்சித் துறைமுகத்திலிருந்து நேரே எமது துறைமுகத்துக்கு வரும். அதுபோலவே, மத்திய கிழக்கு நாடு களுக்குத் தேவைப்படும் எமது நாட்டுப் பொருள்களை, கராச்சித் துறைமுகம் மூலம் அனுப்பிவைப்போம். பாகிஸ்தானுடன் செய்துகொண்ட உறவும் உடன்பாடும், திருவாங்கூரை மிரட்ட முடியாது என்பதை எடுத்துக் காட்டுவதற்கே - என்று கூறினார்.

ஜனாப் ஜின்னா, வாழ்த்துக்கு நன்றி தெரிவித்து, திருவாங்கூர் நல்வாழ்வு பெற்றுத் திகழவேண்டும் என்று வாழ்த்தி, உறவு மேற்கொள்வதை வரவேற்று, பதில் தந்தியும் அனுப்பினார்.

பாகிஸ்தானுடனா ஒப்பந்தம்? ஜனாப் ஜின்னாவுடனா உறவு? என்று கேட்டவர்கட்கு, திவான் சி. பி. பதில் கூறினார்.

ஏன் பதறுகிறீர்கள்? என்ன தவறு? கொடுமை பல புரிந்தது ஜப்பான், யுத்தத்தின்போது - அந்த ஜப்பானுடன் காங்கிரஸ் கைகுலுக்கி நட்புப் பாராட்டும்போது, நான் ஜின்னாவுடன் நட்புக்கொண்டால் என்ன தவறு? அது எப்படி அக்ரமம் ஆகமுடியும்?

பல இலட்சக்கணக்கான கெஜம் மில் துணியை ஜப்பானிலிருந்து வாங்கிக்கொள்ள, காங்கிரஸ் ஒப்புக் கொண்டிருக்கிறது. அப்படியிருக்க, திருவாங்கூர் பாகிஸ்தானுடன் வியாபார ஒப்பந்தம் செய்துகொள்வது கண்டு பதறுவானேன்?

இரு நாடுகளும் கடலால் சூழப்பட்டவை. தொடர்பு கொள்வது எளிது, தேவை, இரு நாடுகளுக்கும் இலாபகரமானது.

இவைகளுக்கெல்லாம், காங்கிரஸ் தலைவர்கள் தமது எரிச்சலைக் காட்டிக்கொண்டார்களே தவிர, தக்க சமாதானம், மறுப்புரை தர இயலவில்லை.

தமக்குக் கிடைத்த இராணுவ வலிவைக் காட்டுவது தவிர, அவர்களிடம் வேறு தரமான வாதங்கள் இல்லை.

கடைசியில் வலுத்தவன் வென்றான் என்றுதான் கதை முடிந்ததே தவிர, சி. பி. தமது வாதத்தில் தோற்றார் என்று கூறுவதற்கில்லை.

மே திங்கள் 17ஆம் நாள் மீண்டும் "பக்தி விலாசம்', சி.பி.யின் முழக்கத்தைக் கேட்டது.

திருவாங்கூர், தனது வருவாய்க்குப் பெரிதும் ஏற்றுமதி இறக்குமதி வரிகளையும் வருமான வரியையும் நம்பிக்கொண்டிருக்கிறது. இந்தியப் பேரரசு எனும் திட்டத்தின்படி திருவாங்கூர் இந்தியாவில் இணைக்கப் பட்டுவிட்டால், இந்த வருவாய் இனங்கள், மத்திய சர்க்காருக்குச் சொந்தமாகும்; அதிலே ஒரு பகுதியைத்தான் திருவாங்கூர் பெறமுடியும். எனவே, திருவாங்கூர் இந்தியாவிலே இணைவது, நட்டமாக முடியும்.

இந்தியா - பாகிஸ்தான் எனும் இரு அரசுகளுடனும், திருவாங்கூர் உறவுகொண்டு வாழவேண்டிய நிலைமையில் இருக்கிறது. எனவே, எந்த அரசிலும் அது இணைந்துவிட முடியாது. இந்திய பூபாகத்திலேயே மற்ற எந்தப் பகுதி யையும்விட, தனி அரசு நடத்தும் தகுதி, திருவாங்கூருக்கே மிக அதிகமாக இருக்கிறது.

இந்தச் சுதந்திர உரிமையைத் திருவாங்கூர் இழந்து விடச் சம்மதிக்காது.

தம்பி! இவ்வளவு விளக்கமாக, தனி அரசுக்கு வாதாடியவர் சர். சி. பி.

இவர், இன்று திராவிடம் தனி அரசு நடத்தக்கூடாது என்று பேச அழைக்கப்பட்டிருக்கிறார். விந்தைமிக்க நிகழ்ச்சி அல்லவா?

திராவிடம் தனி நாடாக இருக்கக்கூடாது என்று இவர் எந்த நியாயத்தின் பேரில் எடுத்துக் காட்டுவார்! திறமை இருக்கலாம்; நிரம்ப. ஆனால் நேர்மையான வாதமாக இருக்க முடியுமா!

என்ன செய்யலாம்? நான்கூடத்தான் முயற்சித்துப் பார்த்தேன் - முடியவில்லை - விட்டுவிட்டேன் - அதனால்தான் உங்களுக்குச் சொல்கிறேன், விட்டுவிடுங்கள் - என்று சர். சி. பி. கூறுவாரானால், தம்பி!

ஐயா தங்கள் திட்டம் அரண்மனையில் உதித்தது. எங்கள் திட்டம் மக்கள் மன்றத்தில் மலர்ந்தது!

தாங்கள் மக்களின் கருத்தறிந்து செயல்படவில்லை; அதிகார பலத்தை மட்டும் நம்பினீர்கள்; நாங்கள் மக்களின் கருத்தறிந்து அவர்களின் துணையை நம்பி இந்த தொண்டாற்றி வருகிறோம்.

உங்களுக்கும் காங்கிரசுக்கும் ஏற்பட்ட விவாதம்; தாக்கும் சக்தியை அடிப்படையாகக்கொண்டது. எங்களுடையது, தாங்கும் சக்தியை அடிப்படையாகக் கொண்டது.

மக்களின் துணைக்கு உள்ள வலிவு மகத்தானது - அதனை மிரட்டலாம், தாக்கலாம். தகர்த்துவிட முடியாது என்று பதில் அளிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.

காந்தீய நெறியிலே காங்கிரஸ் அரசு நடந்துகொள்ளு மானால், எத்தனை கசப்பானதாக அவர்களுக்கு ஒரு திட்டம் தோன்றினாலும், மக்கள் அந்தத் திட்டத்திற்கு ஆதரவு தருகிறார்கள் என்றால், அந்த ஆதரவை அழிக்க அடக்கு முறையை வீசக் கூசும்.

அதுபோலவே, நமக்கு நம்முடைய திட்டத்திலே தூய்மை நிறைந்த நம்பிக்கை இருக்குமானால், எத்தகைய விலை கொடுக்கவும் நாம் தயாராக இருக்கவேண்டும்.

காங்கிரஸ் அரசுக்கு உள்ள தாக்கும் சக்தியை எடுத்துக் காட்டி சர். சி. பி. வாதாடுவாரானால், தம்பி, நாம் காந்திய நெறி வெல்லும் என்பதனைத்தான் எடுத்துக் கூறவேண்டும்.

காந்தியாரைவிட வன்மையாகப் பாகிஸ்தான் திட்டத்தைக் கண்டித்தவர்கள் இல்லை. முஸ்லீம்களைத் தனி இனம் என்று ஏற்றுக்கொள்ளவே முடியாது என்றார்; என்ன நேரிடுவ தாயினும், இந்தியா பிளக்கப்படுவதைச் சகித்துக்கொள்ள முடியாது என்றார். வீம்புக்காக அல்ல; உள்ளத் தூய்மையுடன். எனினும், நிலைமை வளர, வளர, அவர் பாகிஸ்தானுக்கு இணங்கவேண்டி நேரிட்டது. அதனைக் குறித்துக் காந்தியாரிடம் கேட்கப்பட்டபோது,

"இந்தியா பிரிக்கப்படக்கூடாது என்று நான் சொன்னபோது, மக்களின் விருப்பத்தைத்தான் எடுத் துரைத்தேன். ஆனால், இப்போது மிகப் பெரும்பாலான மக்களுடைய கருத்து, நாட்டுப் பிரிவினைக்கு ஆதரவாக இருப்பதைக் காண்கிறேன். இந்த நிலைமையில், மக்களை வற்புறுத்தி என் கருத்தை அவர்களிடம் திணிக்க நான் விரும்பவில்லை.''

என்ற பதிலுரையைத் தமது வழிபாட்டுக் கூட்டத்தில், ஜூன் 9ஆம் நாள் படித்துக் காட்டினார்.

காந்தியம் கருகிப்போய்விடவில்லை என்ற நம்பிக்கையுடன் பணியாற்றி வருகிறோம்.

நாளுக்கு நாள், நமது கருத்துக்கு ஆதரவு வளரக் காண்கிறோம்.

மக்கள் திரண்டு நின்று ஆதரவு தந்தாலும், நாங்கள் ஒத்துக்கொள்ளமாட்டோம் என்று முழக்கமிட்டு, அடக்கு முறையை அவிழ்த்துவிட்டால், அதனை ஏற்றுக்கொள்ள நாம் தயாராகிவிட வேண்டியதுதான்.

நமது வேண்டுகோளும் விளக்கம் பெற்றுத்தர முடியாத வெற்றியை, நாம் கொட்டும் இரத்தம்தான் பெற்றுத்தரும் என்ற நிலைபிறக்குமானால், அதனை பெறற்கரிய பேறு எனக் கொள்ளவேண்டும்.

அலட்சியப்படுத்தத் தக்கது - அர்த்தமற்றது - என்று ஒரு வேளையும், ஆபத்தானது - அடக்கித் தீரவேண்டியது என்று மற்றோர் வேளையும், மாறிமாறி, பேரரசு நடாத்துவோர் பேசிடக் கேட்கிறோம். சிந்தனை குழம்பி இருப்பதற்கு எடுத்துக் காட்டு - புரிகிறதல்லவா?

பிரிவினை கேட்பவர்களை விட்டுவைக்கக்கூடாது, வளர விடக்கூடாது - என்று பேசுவோரும் உளர் - வீணாக உருட்டி மிரட்டி அந்த இயக்கத்தை ஒடுக்க நினைப்பது தவறு - ஏன் பிரிவினைக் கிளர்ச்சி தோன்றியது, எப்படி வளருகிறது என்பதனை ஆராயவேண்டும் - பரிகாரம் தேடவேண்டும் என்று அறிவுரை கூறுவோரும் உளர்.

தம்பி! இப்போதே, மிக முக்கியமான முனைகளிலிருந்து மூன்று அடிப்படைக் கருத்துகள் எடுத்து வலியுறுத்தப்பட்டு வருகின்றன.

கழகத்தைத் தடுப்பது - கழகப் பிரசாரத்துக்கு எதிர்ப் பிரசாரம் செய்வது - கூட்டணி அமைத்துக் கழகத்தைத் தாக்குவது - என்ற யோசனைகளைச் சிலர் வெளியிட்டிருக் கிறார்களே, அதனைக் கூறவில்லை.

(1) இந்தி ஆதிக்கம் கூடாது.

(2) மத்திய சர்க்காரிடம் அதிகாரம் குவிந்து கிடக்கக் கூடாது.

(3) பொருளாதார வளர்ச்சி ஒருசீராக அமைய வேண்டும் - ஒரு பக்கம் வளமும், மற்றோர் பக்கம் வறட்சியும் இருக்கும் நிலை மாறுபட்டாகவேண்டும்.

இந்த மூன்று அடிப்படைக் காரியங்களைச் செய்திட முனைய வேண்டும் என்று எடுத்துக்கூறி, இவைகளைச் செய்தால் கழகம் சரிந்துவிடும் என்று யோசனை கூறுகிறார்கள்.

கழகத்தைக் காட்டிக் காரியத்தைச் சாதித்துக்கொள்ளச் சிலர் இந்த முறையை மேற்கொண்டால், நமக்கு நஷ்டமும் இல்லை, கஷ்டமும் இல்லை, நாம் அதற்குக் குறுக்கே நிற்கப் போவதுமில்லை.

ஆனால், இவைகளை செய்தளிப்பதால், விடுதலை ஆர்வம் மங்கிவிடும், மடிந்துவிடும் என்று எதிர்பார்ப்பது, எத்துணை பெரிய ஏமாளித்தனம் என்பதனைக் காலம் எடுத்துக் காட்டும்.

ஒவ்வொரு முறை சலுகைகள் சில்லறை உரிமைகள் தருகிற போதும் வெள்ளைக்காரன், இனி சுயராஜ்யக் கிளர்ச்சி செத்து விடும் என்ற நம்பிக்கையுடன்தான் இருந்தான். ஆனால் இந்தச் சலுகைகள் பெறப்பெற நாட்டுமக்கள், சலுகை தந்த வெள்ளைக்காரனைப் பாராட்டவில்லை; காங்கிரசின் எதிர்ப்பினால்தான் இவை கிடைத்தன என்று உணர்ந்து காங்கிரசைப் பாராட்டத் தலைப்பட்டனர்; வேகம் குறைய வில்லை, திசை மாறவில்லை, இலட்சியத்தை அடைந்தே தீருவது என்ற உறுதி தளரவில்லை.

அதே நிலைதான் இப்போதும். ஆனால், தம்பி! அன்று தம்மைத் தியாகம் செய்துகொள்ள எண்ணற்றவர்கள் வீறுகொண்டெழுந்து விடுதலைக் கிளர்ச்சியிலே எப்படி ஈடுபட்டார்களோ, அஃதே போல நம்மிலே பலரும் தியாகத் தீயில் குளித்திடத் தயாராகவேண்டும்.

இப்போதைக்கு ஒன்றும் இல்லை - என்கிறார்கள் காங்கிரஸ் அரசு நடத்துவோர். ஆனால், எப்போதும் எதுவும் நேரிடாது என்று இருந்துவிடவேண்டாம், தம்பி! எப்போது வேண்டுமானாலும், என்னவிதமான அடக்குமுறை வேண்டு மானலும் வெடித்துக்கொண்டு வரக்கூடும். நம்முடைய நிலை, எப்போது அந்த அழைப்பு வருவதாக இருப்பினும், ஏற்றுக் கொள்ளும் துணிவுடன் இருப்பதுதான்.

"எந்த நேரத்திலும் அழைப்பு வரலாம்; எனவே போர் உடையுடன் இருந்து வாருங்கள்'' என்று ஒருமுறை நேரு பெருமகனார் கூறினார்.

அது காங்கிரஸ் தொண்டர்களுக்கு மட்டும் கூறிய வாசகம் என்று கருதாதே, தம்பி! அது விடுதலைக் கிளர்ச்சியில் ஈடுபடும் அனைவருக்கும் பொருத்தமான அறிவுரையாகும்!!

நாம் ஒரு இலட்சியத்துக்காகப் பாடுபட முனையும்போது விளைவுகளைத் தாங்கிக்கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும்.

அடக்குமுறை சூடாகத்தான் இருக்கும், ஆனால் அதை ஒரு இலட்சியத்துக்காக ஏற்றுக்கொள்வதிலே, தனிச் சுவை இருக்கிறது.

தடக்கை நீட்டி இங்கொருவர்
தருக வென்னார் விடுதலையை!
உடனே உணர்ந்து வதைத்தோரும்
வழங்கிவிட்ட சான்றில்லை!
அடலே! புயலே! எரிமலையே!
ஆர்க்க வருதல், உரிமையாம்
கடலாய் ஆற்றல் தோள் புனைவாய்
கண்ணாய் வளர்ப்பாய் விடுதலைத் தீ.

அண்ணன்,

17-6-1962