அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


தல யாத்திரை
1

இலக்கிய இன்பம் -
ஆப்பிரிக்க மங்காலிசோ டாக்டர் பண்டா -
மடகாஸ்கர் விடுதலை

தம்பி!

"என்ன, சிறிதளவு வாட்டமுற்றதுபோலக் காணப்படு கிறாய்! வீரத் திருமுகத்திலே விசாரக்குறிகள் தெரிகின்றனவே! வந்துற்ற இடுக்கண் யாது? வந்திடில் என்ன? வாட்டம் கொளப் போமோ? வள்ளுவப் பெருந்தகையை மறந்தனையோ! இடுக்கண் வருங்கால் நகுக! என்றாரே. தமிழரின் நெறியினை அழித்திடவல்ல தீ நெறி தமிழகத்திலே நெளிந்திடக் கண்டுபோலும், வள்ளுவர், இடுக்கண் தமிழ் இனத்தைத் தாக்கக்கூடும் என்று அறிந்து, அவ்விதமானதோர் தாக்குதல் ஏற்படினும் கவலை கொள்ளல் ஆகாது, கொண்டிடின் இடுக்கண்களை எதிர்த்து நின்று வெற்றிபெற இயலாது என்று எடுத்துக்காட்ட "நகுகா' என்று கூறினார். குறள் நெறி நின்றிடும் குறிக்கோளுடைய, உனக்கு ஏற்படலாமா வாட்டம் வருத்தம்!!

மாற்றார்கள் மனம் போன போக்கிலே ஏசுவது கேட்டா வாட்டம்? மறக்குலத் துதித்தவனே! மார்பில் பாய்ந்த வேலினைப் பறித்தெடுத்து, மதகரிமீது வீசினானாமே உன் முன்னோரில் ஓர் வீரன், களத்தில்; மறந்தனையோ வீசினான் என்ற உடன் வசைமொழியினை விருப்பம் தீருமட்டும், விசாரம் குறையும் அளவு, நானும் வீசவா என்று கேட்கத்தோன்றும் தம்பி! ஆனால், வீரன் வேல் வீசியது, மதகரி மீது, சிறுநரி மீதல்ல, தெரிகிறதா!!

வசவாளர்களின் பேச்சல்ல, என் வாட்டத்துக்குக் காரணம்; பத்து ஆண்டுகளாக நமது கழகம் உழைத்துத் திரட்டி வைத்துள்ள செல்வாக்கை அழித்தொழிக்க பண குண்டுகளை மாற்றார் செய்து குவித்தவண்ணம் உள்ளனரே, அதனை எண்ணும்போது, கலக்கம் ஏற்படாவிடினும், பெருமளவு கவலை ஏற்படத்தானே செய்யும் என்று கேட்கிறாய். தெரிகிறது. எனினும், களம் செல்ல உறுதிபூண்ட வீரர், கையில் கிடைத்த கருவியைக் கூர்மையானதாக்கிக் கொள்வர், நமது கழகத்தவரும், அதே முறையில், தேர்தல் களத்துக்காகத் தேவைப்படும் பணபலத்தைத் தேடிடத் தலைப்பட்டுள்ளனர். சிறுதுளி பெருவெள்ளமல்லவா!! எனவே, அதுகுறித்துக் கவலைப்பட்டுக் கொண்டிருப்பதைவிட, உன் பங்கு என்ன என்பதனை அளவிட்டுக் கொண்டு, காரியமாற்று. கவலை பறந்து போகும்!!

"என்னென்னதான் கூறுகிறாய், கேட்போம், என்றுதான் அண்ணா பதில் கூறாது இருந்தேன். வாட்டம் ஏற்படக் காரணம், மாற்றாரின் தூற்றலும் அல்ல, மனதை உளையச் செய்திடவல்ல எதிர்ப்பும் அல்ல, தேர்தலுக்காக அவர்கள் திரட்டிக் குவித்திடும் பணத்தைக்கண்டு ஏற்படும் பயமும் அல்ல நெஞ்சிலே நிறைந்துள்ளதோர் நேர்த்தியான இலட்சியம், எந்த இலட்சாதிகாரியையும் பொருட்படுத்தத் தேவையில்லை என்று கருதிடும் வீர உணர்ச்சியைத் தந்திருக்கிறது. என் வாட்டத்துக்குக் காரணம், இந்தக் கோடையின் கொடுமை, வேறொன்றும் அல்ல என்று கூறிடுகிறாயா, தம்பி. உண்மை! உண்மை! பார்த்தாயா நான் காரணமற்றுக் கவலைப்பட்டுவிடுகிறேன்! உன் தெளிவும் துணிவும் நெஞ்சு உரமும் செயல் திறனும் எனக்குத் தெரிந்திருந்தும், சில வேளைகளிலே, தடுமாற்றம் ஏற்பட்டுவிடு கிறது. கோடையின் கொடுமை, வாட்டம் உண்டாகி விட்டதா! ஆமாம், தம்பி! கோடை கொட்டத்தான் தொடங்கிவிட்டது. என்ன செய்வது! எவர் எப்பாடுபடினும், நமக்கு இன்பம் வேண்டும் என்று எண்ணுவோர், இந்தக் கோடையின் கொடுமையிலிருந்து தப்பி, குளிர்ச்சிமிகு இடங்கட்குச் சென்று மகிழ்ச்சிமிகு நிலை பெறுகின்றனர். கொளுத்தும் வெயிலில் பலரும் துடித்திடுகின்றனர்; ஒரு சிலருக்கு, குளிர்ச்சிமிகு குன்று இடமாகிறது. பச்சை, உலரும் நிலை இங்கு! அவர்கள் பாங்கான இடம் சென்று களிப்பினைப் பெறுகின்றனர். ஆனால் எல்லோராலும் முடிகிறதா! சிலர், பாபம், கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்வோமென்று, சட்டசபைக் கூட்டம், கோடையின்போது ஊட்டியில் கூடட்டும் என்றனர், கூடிற்று; சென்றனர்; விட்டாயா அவர்களை! ஊரெல்லாம் சுற்றிச் சுற்றி, "ஊட்டியிலே ஊராள்வோர் உல்லாச வாழ்வு தேடுகின்றனர் காணீர்! இது முறைதானா, கேளீர்!' என்று முழக்கம் எழுப்பினாய்! கோடையைக்கூடத் தாங்கிக் கொள்ளலாம். இந்த எதிர்ப்பைத் தாங்கிட இயலவில்லை என்று எண்ணிப்போலும், சென்ற ஆண்டு, உதகமண்டலம் சென்று சட்டசபை நடத்தியோர், இந்த ஆண்டு, வேண்டாமென்று விளம்பிவிட்டனர். ஓரிருவருக்குக் கோபம் ஏற்பட்டுத்தான் இருக்கும். இந்தச் சிறு கூட்டம் சொல்வதற்காக, நாம் ஊட்டி செல்வதை நிறுத்துவது, கேவலம்; அதுகளின் தலையல்லவா துள்ளும்! - என்று கூடப் பேசுவர்.

எனினும், ஊட்டியிலே உல்லாசமா? என்ற கேள்வியை எழுப்பியவர், சிறு தொகையினராக இருப்பினும், ஆமாம்! ஏன் அங்கு செல்கிறீர்! உச்சிவெடிக்கும் வெயிலில் உழலும் நாங்கள், வரிப்பணம் கொட்டிக் கொடுப்பது, அதைவைத்துக் கொண்டு நீவிர், ஊட்டி சென்று, "குளுகுளு' வாசம் செய்வதோ!! உமக்குத் தொண்டாற்றி வருகிறோம்! உங்களின் உண்மையான ஊழியர்கள் நாங்கள்! என்று மயக்க மொழி பேசி ஓட்டுகளைத் தட்டிப்பறித்துக் கொண்டு, இடம் கிடைத்ததும், ஓடுகிறீர்களோ, உல்லாசம் தேடி, எங்கள் பணத்தை பாழாக்க!! வெள்ளைக்காரன், குளிர்மிகு நாட்டுக்காரன் - கோடை ஆகாது என்றான் நீவிரும், வெள்ளைக்காரராகி விட்டீர்களோ?'' என்று கேட்டுக் கோபித்திடும் மக்கள்தொகையின் அளவோ மிகப் பெரிதாக்கிவிட்டது. அது கண்ட எவர்தான் அச்சம் கொள்ளாதிருக்க முடியும்! எனவே, ஊட்டி வேண்டாம், உள்ளது நிலைத்தால் போதும் என்று இருந்துவிட்டனர். ஒரு இரகசியம் கூறட்டுமா, தம்பி! இந்த முறையும் சட்டசபையை ஊட்டியிலே நடத்துவது என்று, காங்கிரசார் "வீம்பு' செய்திருப்பின், கழகத்தவர்கள் சும்மா விட்டிடினும், பொதுமக்களிலே ஒரு பிரிவினர், ஊட்டி வாசத்தைத் தடுக்க "மறியல்' செய்வது எனத் திட்டமிட்டிருந்தனர்.

ஊட்டி, கோடைக்கானல், ஏற்காடு போன்ற இடங்கள் செல்வதே, குற்றம் என்று கூற முற்படவில்லை. பொதுப் பணத்தைச் செலவழித்துக்கொண்டு, ஏழை எளியோர் வாயைக் கட்டி வயிற்றைக்கட்டிக் கொடுத்திடும் வரிப்பணத்தை விரயம் செய்து, ஊட்டியில் உல்லாசம் தேடுவது, அக்ரமச் செயல். அதைத்தான் நமது கழகம் எடுத்துக் காட்டிற்று.

தவித்திடும்போது, ஊட்டி, ஏற்காடு போன்ற இடங்களுக்கு அழைத்துச் சென்று, மலைவளம் காட்டுவோம், அருவியின் அழகைக் காட்டுவோம்; மலர்மணம் பெறட்டும், மனதுக்கு ஓர் மகிழ்ச்சி கிடைக்கட்டும் என்றல்லவா ஒரு அண்ணனுக்கு எண்ணம் ஏற்படவேண்டும். ஒரு நாளாவது, அழைத்துப் போனது உண்டா, பொழில்நிறை இடங்களுக்கு - என்று கேட்கிறாய், பார்வையால்! கூடாது என்பதல்ல தம்பி! இயலவில்லை என்பதுதான். கோடை கொடுமைதான்! குளிர் தரும் இடம் செல்வது, மகிழ்ச்சி தரத்தான் செய்யும் - இல்லை என்றா கூறுகிறேன். ஆனால் இந்தக் கோடையிலே, தம்பி! நமது உடன் பிறந்தார்களிலே சிலர், பாரவண்டிகளை இழுத்துச் செல்கிறார்கள் - பார்த்தனையா? கால்களிலே சாக்குத் துண்டுகளைச் சுற்றிக்கொண்டு, உருகிடும் தார்போட்ட பாதையில்!! மாடு இழுக்க முடியாத வண்டிகள், தம்பி! முன்னே இருவர் தொட்டு இழுக்கிறார்கள் - பின்னிருந்து மூவர் முட்டித்தள்ளுகிறார்கள்! அவர்களோடு பிறந்தவர்கள்தான், நாம்!! நம்மிலே சிலர், வண்டுகளும் தும்பிகளும் வட்டமிட்டு இசை எழுப்பும் பூங்காக்கள் நிறைந்த இடம் தேடிச்சென்று, உல்லாசம் பெற எண்ணுவதுகூடத் தவறல்லவா? அங்குச் சென்றபிறகு, இந்த நினைப்பு வந்திடின்? கோடை நம்மைத் தேடிவந்தல்லவா, கொட்டும்!

நாமாகிலும், தம்பி! கோடையின் தாக்குதலில் மட்டும் சிக்கியுள்ளோம். கைவண்டி இழுத்துக் கொண்டு இல்லை இன்னும் ஓர் பத்தாண்டுகள், "ஏக இந்தியா' எனும் தத்துவம் நம்மைப் பீடித்துக்கொண்டிருக்குமானால், நம்மிலே பலர் கைவண்டி இழுப்போராக வேண்டியதுதான்! ஆனால் ஒன்று! உழைப்பின் மேன்மையைப் பாராட்டி, நேரு பண்டிதர் நம்மைப் பாராட்டுவார்! அது கிடைக்கும், வண்டி வண்டியாக.

இன்று, நமது இனத்திலே எல்லோருக்குமே இந்த இழிநிலை வராமலிருக்கிறதே என்பதை எண்ணித்தான் ஆறுதல் தேடிக்கொள்ள வேண்டும்.

காலுக்குச் செருப்பில்லையே என்று கஷ்டப்பட்டேன் காலே இல்லாத ஒருவனைக் காணுமட்டும் - என்று கூறினார், ஒரு பேரறிவாளர்.

தம்பி! ஊட்டியாகட்டும், ஏற்காடாகட்டும், நந்திமலை ஆகட்டும், என்ன பிரமாதம் என்கிறாய், வா, நீ, உன்னை, இந்த இடங்களை எல்லாம்விட, எழிலுள்ள இடங்களுக்கு அழைத்துச் செல்கிறேன். நீ, அறிந்திருக்கிற, உல்லாச புரிகளிலே கார் மேகம் உலவும், சிறுதூறல் வீழும், பசும்புற்றரைமீது பல வண்ணப் பூக்கள் உதிர்ந்து அழகளிக்கும். அவ்வளவுதான்.

கொம்பர்த் தும்பி குழல் இசை காட்ட
பொங்கர் வண்டுஇனம் நல் யாழ் செய்ய
வரிக்குயில் பாட
மாமயில் ஆடும்
விரைப்பூம் பந்தர்

காணவேண்டுமா? காட்டுகிறேன். கண்குளிரப் பார்த்திடு. காது குளிர இசை கேட்டு இன்புற்றிரு.

குரவமும், மரவமும், குருந்தும், கொன்றையும்
திலகமும், வகுளமும், செங்கால் வெட்சியும்
நரந்தமும், நாகமும், பரந்துஅலர் புன்னையும்
பிடவமும் தளவமும் முடமுள் தாழையும்
குடசமும், வெதிரமும் கொழுங்கால் அசோகமும்
செருந்தியும், வேங்கையும் பெருஞ் சண்பகமும்

மலர் வகைகள் உள்ளன தம்பி! ஏராளமாக! என்னென்ன வேண்டுமோ, பறித்துக்கொள்!! அதோ பார்த்தனையா,

வெயில் நுழைபு அறியாக்
குயில் நுழை பொதும்பர்!

வெயில் நுழையாத பூங்கா! குயில் கூவுகிறது அங்கு இருந்து கொண்டு. தாமரை, தெரிகிறதா, செந்தாமரை! அதன் பக்கம் பார்த்தனையா, வெண்ணிற அன்னம், அரசோச்சும் பாவனையில்!! கயல் துள்ளுவது கண்டனையா! கடுவன், மந்திக்கு, ஊசல் வேடிக்கை செய்திடும் காட்சி தெரிகிறதா!!

நந்தமிழகம் இருந்த நிலையினை இன்றும் நாம் கண்டு உவகை கொள்ளச் செய்யும் ஏடுகள், உள்ளனவே, அறியாயா? எடு, அவைகளில் ஒன்றினை! எழிலூர் செல்லலாம், ஏற்றமெலாம் காணலாம்!! காண்பது மட்டுமல்ல, அத்தகைய எழிலகமாகத் தாயகம் கோலம்கொள்ள, என்னென்ன பணியாற்றலாம் என்ற ஆவல் சுரக்கும். ஓய்விடம் சென்று, காய் கதிரோனிடமிருந்து தப்பினோம் என்று எண்ணி மகிழ்வதைவிட, இலக்கியம் எடுத்துக்காட்டும் சீரிடம் கண்டு, திருவிடம் விடுபட வழி காணவேண்டும். அந்தத் தொண்டினுக்கன்றோ, உன்னை நீ, ஒப்படைத்திருக்கிறாய்! உன்னை, ஊட்டிக்கு வா என்று அழைப்பது, உன் மாண்பினை நான் மறந்திடும் போக்காக வன்றோ ஆகிவிடும். நான் அந்தத் தவறு செய்திடப் போவ தில்லை. எனவே, வா, தம்பி! வழக்கு மன்றம் போவோம்.

"குற்றத்தை ஒப்புக்கொள்கிறாயா?''

"செய்ததை ஒப்புக்கொள்கிறேன் - ஆனால் செய்தது குற்றம் அல்ல!''

"நீ செய்தது, குற்றமா அல்லவா என்பதைத் தீர்மானிக்க நான் இருக்கிறேன். எனக்கு வழிகாட்ட, சட்டம் இருக்கிறது துரைத்தனம் ஏற்படுத்தியுள்ள அனுமதிச் சீட்டு முறையை எதிர்த்துப் பேசினாயா?''

"ஆமாம்! அது முறை அல்ல! என் நாட்டிலே நான் நடமாட எந்த அனுமதியும் ஒரு அந்நியன், எனக்குத் தரவேண்டியது இல்லை, என்று பேசினேன்,''

"மக்களைக் கூட்டிவைத்து?''

"என் மக்களை அழைத்துச் சொன்னேன்.''

"சர்க்காருக்கு எதிராகத் தூண்டிவிட்டாய்?''

"அநீதிக்கு இடம் கொடாதீர்கள். அடிமைகளாகாதீர்கள் என்று கூறினேன், வீர உணர்ச்சியை ஊட்டினேன்.''

"அதுதான், குற்றம்... ...''

"சட்டம் கூறுகிறதா?''

"ஆமாம்! படித்துக் காட்டவா?''

"படித்துக்கொள், உன் சட்டத்தை, நீயே!''

"நாட்டுக்காக, சட்டம்.''

"என் நாட்டுக்கான சட்டம் இயற்ற வேற்று நாட்டுக் காரனுக்கு, உரிமை ஏது?'' "அரசாள்பவர்கள்தான், சட்டம் இயற்றுவார்கள்.''

"அடிமைகள், அதைப் பயபக்தியுடன் ஏற்றுக்கொள் வார்கள்!''

"அப்படியா! வீரர்கள் என்ன செய்வார்கள்?''

"விரட்டி அடிப்பார்கள் அந்நிய ஆதிக்கத்தை.''

"அதுதான், நீ நடத்திவரும், சங்கத்தின் நோக்கமா...''

"ஆமாம்! எமது தாயகத்தில், வேற்றான் ஆதிக்கம் கூடாது. ஒழிக்கப்பட்டாக வேண்டும் என்பதுதான்.''

"வேற்றான்! பூ! வேற்றான்!''

"விளக்கமாகக் கூறட்டுமா... வெள்ளையன் ஆதிக்கம் அழிக்கப்படவேண்டும் என்பதுதான் எங்கள் இலட்சியம்.''

"போதும்! இனித் தண்டனையைக் கேள்.''

"தூக்கில் மாட்டினால், பழிக்குப்பழி வாங்க அணி அணியாக உள்ளனர், ஆப்பிரிக்க வீரர்கள். சிறையானால், வெளிவந்ததும் நானே கணக்குத் தீர்த்துக்கொள்கிறேன்.''

தம்பி! வீரம் செறிந்த முகம்! பொறிபறக்கப் பேசுகிறான்! பிடிபட்டோம் என்பதுபற்றித் துளியும் அச்சமின்றி. வயது என்ன தெரியுமா? 36! ஆமாம் தம்பி! குழந்தைகள் ஓடி ஆடிக் கூவுவதை, துணைவி மகிழ்ச்சிப் பெருக்குடன் காண்பதைக் கண்டு களிப்படையும் பருவம். ஆனால், கூண்டிலே நிறுத்தப்பட் டிருக்கிறான், குற்றவாளியாக!! சவுக்கால் அடிப்பார்கள் இரத்தம் பீறிட்டுக்கொண்டு வரும் அளவுக்கு. சிறையிலே தள்ளிப் பூட்டுவார்கள்; தெரியும் அந்த வீரனுக்கு. ஆனால் கலங்கவில்லை. அவன் விடுதலைப் போருக்காகவே வாழ்கிறான். மாங்காலிசோ சொபுக்வீ எனும் பெயரினன்; ஆப்பிரிக்க மக்களின் விடுதலைக்காக அமைந்துள்ள கழகத்தின் காவலன். இரண்டு இலட்சம் உறுப்பினர்கள் உளர், அந்த வீரக் கோட்டத்தில்.

மங்காலிசோ விவரம் அறியாதவனுமல்ல. விவரம் தெரிவதால், சிலர் பயத்துக்கு அடிமையாகிவிடுவர். இன்ன காரியம் செய்தால், சட்டத்தின் இன்ன பிரிவின்படி குற்றமாகும். அந்தக் குற்றத்துக்கு இன்ன தண்டனை தரப்படும் - என்ற விவரம், அச்சத்தைத்தானே எளிதிலே ஏற்படுத்தும், இந்த விடுதலை வீரன், கருப்பரை ஆள வெள்ளையர் என்ற முறையை ஒழித்தாக வேண்டும் என்ற உறுதி படைத்தவன். நிறபேதம், வெள்ளையர் கட்டிவிட்ட கயமை என்ற விவரம் தெரிந்தவன். பல்கலைக் கழகமொன்றிலே, மொழித்துறை ஆசானாகப் பணியாற்றியவன். மொழி, அவனை நாட்டுப் பற்றுள்ளோனாக்கிற்று! அந்த உணர்ச்சி, அவனை வீரனாக்கிற்று. வீரனைக் கூண்டில் நிறுத்திற்று வெள்ளை வெறி! அவன் எதற்கும் துணிந்து நிற்கிறான். தாயகம் விடுபடவேண்டும் என்று முழக்கமிடுகிறான். வழக்கு மன்றத்தையேகூட, அவன், தன் கருத்துரைக்க அமைந்த மன்றமாக்கிக்கொண்டான்.

தம்பி! அந்த அஞ்சாநெஞ்சன், இன்று ஆப்பிரிக்காவிலே பல்வேறு பகுதிகளிலே தோன்றியுள்ள எழுச்சியின் சின்னம் எனினும், அவன் படித்து இன்புற, காட்டிப் பெருமைப்பட, ஒரு திருக்குறள் இல்லை!! இங்கு இருக்கிறது - நாம் ஊமையராய் இருக்கிறோம்.