அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


தல யாத்திரை
2

இழுத்துச் சென்று பூட்டுவார்களா, சிறையில்? என்று கேட்கிறாய். பூட்டட்டுமே! வீரம் அழிந்துபடுமா என்ன? பலரைப் பூட்டிப் பார்த்தனர் - புயல் பலமாயிற்று; வெளியே அனுப்பிவைப்பதன்றி வேறு வழியில்லை, சிறையில் தள்ளப்பட்ட, மற்றோர் வீரன் வெளியே வந்து வீரமுழக்கம் செய்கிறான், காணலாம் வா, தம்பி!

"டாக்டர்! தங்களை விடுவிக்க வந்திருக்கிறேன், புறப்படலாம். இனி, சிறை அல்ல, உமக்கேற்ற இடம்.''

"விடுதலை, எனக்குமட்டும்தானா! நாட்டுக்கு?''

"நாட்டுக்கான திட்டம் குறித்துக் கலந்துபேச, அழைக்கிறார்கள் - தங்களை.''

"அதற்காக என்றால் மிக்க மகிழ்ச்சியுடன் வருகிறேன்.''

தம்பி! இரண்டாண்டுகளாகச் சிறையில் தள்ளிவைத்தனர், நயாசாலாந்து நாட்டு விடுதலைக் கிளர்ச்சியை நடத்திய, டாக்டர் பண்டாவை.

டாக்டர் பண்டா சிறைப்படுத்தப்பட்டால், கிளர்ச்சி அடங்கிவிடும் என்று எண்ணினர். ஏமாந்தனர். இரத்தப் புரட்சிக்கு மக்கள் தயாராகிவிட்டனர். இனி, அவர்களைக் கட்டுக்குள் கொண்டுவந்தால்தான், தலை தப்பும் என்பது புரிந்துவிட்டது வெள்ளையருக்கு. மக்களைக் கட்டுக்குள் கொண்டுவர ஒருவரால் மட்டுமே முடியும், - அவர்தான் டாக்டர் பண்டா. எனவே, விடுதலை!! சிறைச்சாலை சென்று, உயர்தர வெள்ளை அதிகாரி, டாக்டர் பண்டாவைக் கண்டு பேசி, வெளியே அழைத்துக்கொண்டு வந்தார்.

வெளியே வந்த தங்கள் தலைவனை வரவேற்க ஆப்பிரிக்க மக்கள், திரள் திரளாகக் கூடினர்; வாழ்த்தொலி முழக்கினர்.

வீரத் தலைவனே! வருக! வாழ்க!

வெற்றி பெற்றளிக்க வந்தோனே, வருக! வருக!

வெள்ளையரின் கொட்டம் அடக்கும் ஆற்றல் மிக்கோனே! வருக!

நாட்டுக்காகச் சிறைசென்ற, நாயகனே! வருக!

நாங்கள் செய்யவேண்டியது என்ன? கட்டளையிடுங்கள்!

காத்திருக்கிறோம்! பண்டா வாழ்க! பாதுகாவலன் வாழ்க!

விடுதலைக்கு வழிகாட்டியே வாழ்க!

வீரத்தின் சின்னமே, வெற்றியின் பிறப்பிடமே! வருக! வருக! மக்களின் இதய ஒலி, டாக்டர் பண்டாவுக்கு ஆவேசத்தை மட்டுமல்ல, அதை முறைப்படுத்தும், அடக்க உணர்ச்சியையும் அளித்தது.

நாட்டுப்பற்று மிக்கோரே! நண்பர்காள்! உடன் பிறந்த உத்தமர்களே! உமது உள்ளன்புக்கு என் நன்றி! விடுதலை எனக்குக் கிடைத்தது, நாட்டு விடுதலைக்காகப் பாடுபட! நான் சிறை மீண்டேன். இனி நாடு வெள்ளையர் பிடியிலிருந்து விடுபடவேண்டும். அது குறித்துப் பேச அழைக்கின்றனர்; செல்கிறேன். வெற்றிக்காகக் காத்திருங்கள்! வெற்றி கிடைத்தால் விழா! இல்லையேல், இறுதிப் போர்!! ஆனால், இடையில், கலகம் விளைவித்தல் ஆகாது. கல்லெறிந்தனர், பண்டாவின் தோழர்கள் என்ற கெட்ட பெயர் கூடாது. அமைதியாக இருங்கள். அதுதான் ஆற்றலின் அடையாளம். வீடுசென்று குதூகலம் தேடுங்கள் - விடுதலை தேடி நான் செல்கிறேன். வெற்றியுடன் திரும்பி வருகிறேன்! விழாக் கொண்டாடுவோம்.

டாக்டர் பண்டா இக் கருத்துப்படப் பேசுகிறார், தமது நாட்டவரிடம்.

இரண்டு ஆண்டுகளாக, அவரைக் காணாததால் ஏற்பட்ட ஏக்கத்தை ஒரே அடியாகத் தீர்த்துக்கொள்வதுபோல மக்கள் அவரை, மறுபடியும் மறுபடியும் காண அழைக்கிறார்கள். மாடிமீது நின்று, மக்களைக் கண்டு மகிழ்கிறார் டாக்டர் பண்டா.

தம்பி! அந்த நயாசாலாந்து நாட்டிலே, இலக்கியத்தை அகம் என்றும் புறம் என்றும் பிரித்து சுவைபடக் கூறிய புலவோர் இருந்ததில்லை, இங்கு இருந்தனர் எண்ணற்றவர்; பெண்பாற் புலவர்களுங்கூட!

இரண்டாண்டுகளுக்கு முன்பு, டாக்டர் பண்டா, இலண்டன் வந்திருந்தார், நாட்டு விடுதலைக்கான பேச்சு வார்த்தை நடத்த வெற்றி கிட்டவில்லை. வெறுங்கையோடு, ஆனால் வீர உள்ளத்தோடு, நாடு திரும்பக் கிளம்பினார். தன் நாட்டு விடுதலை குறித்து உலகுக்கு ஒரு விளக்கம் அளிக்க விரும்பிப் பிரபல பத்திரிகை நிருபர்களை அழைத்தார்; விருந்தும் வைத்தார். சிறிய சந்து! அதிலே ஓர் பழைய வீடு! அதிலே, வாடகைக்கு எடுக்கப்பட்ட ஒரு அறை! அங்குதான், நிருபர்களைச் சந்திக்க ஏற்பாடு. எத்தனையோ நிருபர்களுக்கு டாக்டர் பண்டா, அழைப்பு அனுப்பினார். இரண்டே நிருபர்கள் வந்தனர். எவனோ ஒரு கருப்பன்!! நாட்டை மீட்கப் போகிறானாம்! இவன் பேசுவதைக் கேட்க, நாம் போக வேண்டுமா? என்று எண்ணிக்கொண்டனர். அவ்வளவு அலட்சியம்!

இம்முறை, விடுதலைபெற்று, டாக்டர் பண்டா இலண்டன் சென்றதும், 50 நிருபர்களுக்கு மேல், அவரைச் சூழ்ந்து கொண்டனர், விவரம் கேட்க! ஒருவரிடமும், டாக்டர் பண்டா, பேசவில்லை. அலட்சியப்படுத்த முடிந்தது!

இந்த டாக்டர், இவ்வளவு குறுகிய காலத்தில், இத்துணை பெரிய ஆளாகிவிடுவார் என்று அப்போது தோன்றவே இல்லை. அன்று நாம், புத்தி கெட்டு அவரை அலட்சியப்படுத்தினோம். இன்று அவரைத் துரத்திக்கொண்டு போகிறோம், பேட்டி கிடைக்கவில்லை என்று எத்தனை நிருபர்கள் பேசிக் கொண்டனரோ, யார் கண்டார்கள்.

டாக்டர் பண்டா, புதிய எழுச்சியுடனும், நம்பிக்கையுடனும் பேசுகிறார்.

"அமெரிக்க மக்களே! ஆப்பிரிக்க மக்கள் எழுச்சியை அலட்சியப்படுத்துகிறீர்கள். இது ஆபத்தான போக்கு.

எப்போதுமே, மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கும் போக்கினைக் கொள்கிறீர்கள். சீனாவில் சியாங்கேஷேக்கை ஆதரித்தீர்கள் பலன் என்ன கண்டீர்கள்? இப்போதும் ஆப்பிரிக்காவில் வெள்ளை வெறியருக்குத் துணைநிற்கிறீர்கள். வேண்டாம், இந்த விபரீத புத்தி!''

டாக்டர் பண்டா என்று ஒருவர், ஆழந் தெரியாமல் காலைவிடுவதுபோலக் கிளர்ச்சியில் ஈடுபட்டார். பிடித்திழுத்துச் சென்றனர், சிறைச்சாலைக்கு. வீண் கிளர்ச்சியில் இறங்காது இருந்தால், நல்ல பதவி கொடுத்திருப்பார்கள். வெள்ளையரின் தயவுபெற்று, செல்வவானாக வாழ்ந்திருக்கலாம். சிறையிலே கிடக்கிறான் என்று கேலி பேசி இருப்பர், அமெரிக்காவில் பலர். விடுதலை இயக்கத்தின் ஆற்றலைப் பார், தம்பி! டாக்டர் பண்டா, அதே அமெரிக்கருக்கு, எச்சரிக்கை விடுக்கிறார்.

நயாசாலாந்து எமது தாயகம். எமது தாயகத்தில் வேறொருவன் எஜமானனாக இருக்க நாங்கள் அனுமதிக்கப் போவதில்லை. ஏனெனில் எங்கள் நாட்டுக்கு நாங்கள் எஜமானர்களாக இருக்க உறுதிபூண்டுவிட்டோம்.

டாக்டர் பண்டா பேசுகிறார் தம்பி! இதுபோல. நியூயார்க் நகர மக்களிடம்!!

தம்பி! செங்காய் போன்று இனித்திடும் செய்திகள் கிடைத்திடும் இடங்கள் மட்டுமல்ல, விடுதலைக் கனிச்சாறு பருகி, இன்புற்று இருக்கும் இடங்களையும் காணுவோம்,

டோகோலாந்து என்றோர் நாடு. ஆமாம், தம்பி! இது நாள்வரையில் பிரெஞ்சுப் பிடியில் இருந்துவந்ததால், பலருக்கு பெயர்கூட அவ்வளவாகத் தெரிந்திராது. அந்த நாடு, இந்தக் கிழமை விடுதலை பெற்றுவிட்டது! விழாக்கோலமாம்! வீரக் களியாட்டங்களாம்! வீதிகளெல்லாம் கொடிகள், தோரணங்கள், வெற்றியை அறிவிக்கும் வளைவுகள்!

ஆப்பிரிக்க பூபாகத்தில், கானா நாட்டுக்குப் பக்கத்தில் உள்ள நாடு. சேரனும் சோழனும் செந்தமிழ் பாண்டியனும் ஆண்டிட்ட திருநாடாக இருந்தாலென்ன, இப்போது பந்தும் பட்டிலும், ஷாவும் நவாசும், நேரு தலைமையில் இருந்து ஆள்கிறார்கள். இதிலென்ன இழிவு என்று இங்கு காமராஜரும் கக்கனும் பேசுவது கேட்கிறோம்.

டோகோலாந்து பாருக்கு நாகரீகம் வழங்கிய, பிரான்சின் ஆட்சிக்கு உட்பட மறுத்துவிட்டது. - ஈராயிரம் ஆண்டு இணையற்ற வரலாறு காட்டி அல்ல; எங்கள் நாடு எங்களிடம் என்ற அரசியல் அரிச்சுவடி காட்டி. இங்கோ கல்லாதாரைத் தள்ளு, தம்பி! கற்றறிந்தோர் மட்டும் என்ன பேசுகிறார்கள்!

என் மொழி! என் நாடு! என்ற பேச்சு, குறுகிய மனப்பான்மை என்கின்றனர்.

டோகோலாந்து, இமயம் முதல் குமரி வரை உள்ள பாரதம் அல்ல! நாம் கேட்கும் திருவிடத்தைக் காட்டிலும் அளவில், வளத்தில், மிகவும் குறைவானதுதான். ஆனால் அங்கு, வீரர்கள் கிளம்பினர், விடுதலைக் கிளர்ச்சியைத் துவக்க; அனைவரும் வீரர் ஆயினர்; வெற்றி கிடைத்தது; மணிக்கொடி பறக்கிறது; மக்கள் மகிழ்கின்றனர்.

ஆப்பிரிக்க பூபாகத்தில் ஒரு பகுதிகூட அல்ல, தம்பி! மடகாஸ்கர். அடுத்துள்ள தீவு! அதுவும், இந்தத் திங்கள், விடுதலை பெற்றுவிட்டது, தனி அரசு ஆகிவிட்டது!

பிரெஞ்சுப் பிடியிலிருந்த இந்தத் தீவு விடுதலைக் கிளர்ச்சியைத் தொடங்கிய உடன், பலமான, பயங்கரமான தாக்குதலைப் பிரான்சு அவிழ்த்துவிட்டது. பல ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். எத்துணை கொடுமைக்குணம் இருப்பினும், எத்தனை காலத்துக்குத்தான், படுகொலை செய்தபடி, ஒரு ஆதிக்கம் இருக்க முடியும்?

எம்மைவிட்டா விலக விரும்புகிறீர்கள்? விலகினால், ஒரு உதவியும், துளிவசதியும் கிடைக்காது. ஆற்றுவாரற்று அலைய நேரிடும். தேம்பித் தவிக்க வேண்டிவரும்.

தனி அரசு நடத்த என்ன தகுதி இருக்கிறது?

வீணாகக் கெட்டுப்போக வேண்டாம். வேண்டியதைத் தருகிறோம்.

பிரான்சு, ஆசைகாட்டிப் பார்த்தது; அச்சமூட்டிப் பார்த்தது. மடகாஸ்கர் பணிய மறுத்தது; விடுதலை பெற்றுவிட்டது தீவு, தம்பி! தனி அரசு ஆகிறது!! திருவிடம் தேம்பித் தவிக்கிறது!! ஏன்?

தம்பி! ஊட்டி சென்று என்ன பயன்? விடுதலை பெற்ற தலங்கள் சென்று, வீர உணர்ச்சி பெறவேண்டும்; விடுதலைப் போரினை வீரத்துடன் நடாத்திக் கொண்டுள்ள இடங்களைக் காணவேண்டும், உறுதி வலுவடைய வேண்டும்.

தளைகள் உடைபட, தாயகம் விடுபட, இன்னுயிர் ஈந்திடவும் துணிந்து நிற்கும், வீரர்கள் உலவும் கோட்டம் செல்லவேண்டும்; வாட்டம் போகும்; வல்லமை மிகும்; வெற்றிப்பாதை, பளிச்செனத் தெரியும்.

ஆனால், அங்கெல்லாம் செல்ல, டில்லி அல்லவா அனுமதி தரவேண்டும்! எங்கிருந்து கிடைக்கும்? மலாயா போகவே, இயலவில்லையே! தடை விதிக்கிறதே, டில்லி. மடகாஸ்கரும், டோகோலாந்தும், நயாசாலாந்தும், அல்ஜீரியாவும் செல்லவா முடியும்? முடியாது என்பதால்தான், தம்பி! டில்லியின் அனுமதி தேவைப்படாத முறையில், அங்கெல்லாம் சென்றுவர, உன்னை அழைத்தேன். அந்த இடங்களைப்பற்றி, அங்கு நடைபெற்றுக் கொண்டு வரும் விடுதலைக் கிளர்ச்சிகள்பற்றி, படிக்கப்படிக்க தம்பி! கோழையும் வீரனாவான், கூனனும் நிமிர்ந்து நிற்பான்!

கோலமாமயிலும், கூவிடும் குயிலும், மணமளிக்கும் தருவும் மாண்புமிகு மரபும், இறவாப் புகழ்பெறு இலக்கிய வளமும் இல்லாத நாடுகளெல்லாம், இன்று தனி அரசுகளாகின்றன. நாம் கேட்கும் திராவிடமோ, வரலாற்றுப் பேராசிரியர் துணை நிற்பினும், இலக்கிய விற்பன்னர்கள் சான்றுதேடித் தரினும், காமராஜருக்குப் பிடிக்கவில்லை. அவரிடம் சென்று, டோகோலாந்தைப் பார்த்தீரா? மடகாஸ்கர் தெரியுமா? டாக்டர் பண்டாபற்றிக் கேள்விப்பட்டதுண்டா? என்றெல்லாம் கேட்டு, விளங்காத காரணத்தால் அவர் என்னை வெறிச்சென்று பார்த்தால், நான் எப்படித் தம்பி! அதைச் சகித்துக்கொள்ள முடியும்! எனவேதான், உன்னிடம் கூறினேன். சிதம்பரம் ஜெயராமன் செவிபழுதானவனிடம் பாடிக்காட்டி, என்ன பலன்? உடம்புக்கு என்ன? வாய் ஏன் இப்படிக் கோணிக் கொள்கிறது, என்றுதானே கேட்பார் செவி கெட்டவர். அதே தான்! திராவிட நாடாவது கீடாவது, எல்லாம் சும்மா! அவா பேசறதோடு, சரி, ஆமா... எனக்குத் தெரியாதா என்ன...? என்று பேசுகிறார், காமராஜர். அவர் முதலமைச்சராக வேறு இருக்கிறார்!!

எத்தனையோ இழிநிலைகளை, இடுக்கண்களை, தொல்லைகளைத் தாங்கிக்கொள்பவளல்லவா தமிழ்த்தாய்!

தன் மக்களிலே ஒரு மகன் ஊமையாகவோ, உன்மத்தனா கவோ இருந்துவிட்டால், தாய் என்ன செய்ய முடியும்? வெறுத்துத் தள்ளிவிடவா முடியும்! மற்ற மக்கள், சிறிது அருவருப்புக் காட்டினால்கூடக் கடிந்துரைத்து, "அவன் இருக்கும் நிலைகண்டு இரக்கமல்லவா காட்டவேண்டும். வாய் இல்லை பேச வகை இல்லை தெளிவுபெற நீதானே துணை இருக்க வேண்டும்'' என்றுதானே கூறுவார்கள். தாய் உள்ளம், இன்னமும் நேர்த்தியானது - எந்தப் பிள்ளை ஊமையாகவோ உன்மத்தனாகவோ இருக்கிறதோ, அந்த மகனிடம் ஒரு தனிப்பரிவு (பரிதாபம் காரணமாக) காட்டுவாள். "அவன் பேச மாட்டானே தவிர, எல்லோரைக் காட்டிலும் அவன்தான் புத்திசாலி! பைத்தியம் போலக் காணப்படுவானே தவிர பெரிய வேதாந்தி'' என்று பேசும் தாயும் உண்டு.

அப்படியும் உண்டா என்று யோசிக்கிறாயா, தம்பி!

இந்த நாட்டுக்குத் தமிழ்நாடு என்ற பெயர்கூட வைத்திட மனமுமின்றி இருக்கிறார் காமராஜர். ஆனால், அவரிடம் உள்ள ஆசையால், பெரியார், பச்சைத் தமிழர் என்றல்லவா அவருக்குப் பட்டம் சூட்டுகிறார். தாய் உள்ளம் இதனினும் நேர்த்தியானதாகத் தானே இருக்கும். "எனவேதான், தாயே! உன் கரங்களில் தளைகளா? நான் இருக்கிறேன் தளைகளை உடைத்திட! என்று கூறும் தன் மக்களிடம் காட்டும் பரிவினைவிட, தளையா? என்ன தளை இரும்பாபரணமல்லவா அது!! தங்கமாக இருந்தால் திருடுபோய்விடும்! இது இரும்பு! ஒரு பயலும் திருட வரமாட்டான்!! இருக்கட்டும் தளை!! என்ற பாவனையில் அரசியல் பேசும், தன் அருமருந்தன்ன மகனாம் காமராஜரிடம் பற்றுவைத்து முதலமைச்சராக்கியுள்ளார், போலும்.

"மற்றப் பிள்ளைகள் பரவாயில்லை. பதவி இல்லை என்றாலும் உலகிலே, அவர்கள் நற்பெயரெடுக்க முடியும், நற்பணி புரிய முடியும்; பாபம்! இந்தப் பிள்ளை அப்படி அல்ல! மந்திரிப்பதவி இருந்தால்தான், நாலுபேர் மதிப்பார்கள்; ஆனால்தான், பதவி அந்தப் பிள்ளைக்கு இருக்கட்டும் என்கிறேன்; இது விளங்கவில்லையா?'' என்றுகூடக் கூறக்கூடும்.

ஆனால், தம்பி! ஒரு குடும்பத்தை அடுத்துக் கெடுக்கத் திட்டமிடும் சூழ்ச்சிக்காரர் என்ன செய்வார்கள் தெரியுமோ? எந்தப் பிள்ளை, ஊமையாகவோ, உன்மத்தனாகவோ இருக்கிறதோ, அந்தப் பிள்ளையிடம், தந்திரமாகப் பேசி, சொத்துக்களைத் தம் பேருக்கு எழுதி வாங்கிக்கொள்வர்.

அதுபோலத்தான், இப்போது, வடநாட்டு ஏகாதிபத்தியம், காமராஜரின் பேச்சினைத் தனக்குத் துணையாக்கிக்கொண்டு, நம்மை அடக்கமடக்க, "காமராஜர், திராவிடர்தானே! அவரே, திராவிடநாடு வேண்டாம் என்கிறாரே!'' என்று பேசி வருகிறது.

"ஐயா! அது தெளிவில்லாத பிள்ளை'' என்று கூறுவது குடும்பத்துக்கு இழுக்கல்லவா! அதனால்தான், நாம் மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திண்டாட வேண்டி இருக்கிறது.

விடுதலைக் கிளர்ச்சியை வலுப்பெறச் செய்யும் முயற்சியில், காமராஜர் ஈடுபடும் வரையில் காத்திருக்க முடியுமா! ஆகவேதான், தம்பி! நீயும் நானும் அவரால் ஏற்படும், இடையூறுகளையும் சமாளித்துக் கொண்டு விடுதலைக் கிளர்ச்சியை முறுக்கேறியதாக்க வேண்டி இருக்கிறது. அதற்காகவே விடுதலைக் கிளர்ச்சி நடாத்திய தலங்களைக் காண அழைத்தேன். கண்டது போதும் என்று இருந்துவிடாதே. தலங்கள் வேறு பலவும் உண்டு. கண்டு, மற்றவர்க்கும் கூறிடு; அணிவகுப்பில் கொண்டுவந்து சேர்த்திடு.

அண்ணன்,

8-5-60