அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


தண்டோரா சர்க்கார் - 1
1

சர்வ கட்சிக் கூட்டணி -
தமிழர் பெருமை -
பி.டி. ராஜன்

தம்பி,

கண்ட காட்சியோ பெரியதோர் நம்பிக்கை அளித்தது - கடலலை ஒலியையும் அடக்கிடும் வகையில் முழக்கம், காண்போரின் கோழைத்தனத்தைக் கல்லி எறிந்திடும் விதமான வீரத் தோற்றம், காரியமாற்றும் திறன் படைத்த காளையர் இலட்சக்கணக்கில் உளர் என்ற பேருண்மையை எடுத்துக் காட்டிடும் எழுச்சி, எல்லாம் கண்டேன். வீழ்ச்சியுற்ற தமிழகத்தில் பிறந்தோமே, வீரர் குறைந்து, வீணர் மிகுந்துள்ள நாட்டிலே வாழ்கின்றோமே, உரிமை உணர்வற்று உண்போம், உறங்குவோம், இடையில் உல்லாசம் தேடுவோம் என்றுள்ளனரே மக்கள், என் செய்வோம், மரபினை மறந்து தாயகத்தின் மீது தளை பல பூட்டிடத் தருக்கர் துணிந்திடுவது தெரிந்தும் சிறு விரலையும் அசைக்காது உளரே பெரும்பாலோர், என் செய்வது என்று திகைத்துக் கிடந்த என்னை, அன்று நான் கண்ட காட்சி, தட்டி எழுப்பிற்று. ஏடா! ஏதேதோ எண்ணி ஏங்கிக்கிடந்திடும் அசடனே! கண்டாயா, இப்பெரும் படையினை! இவர்தம் உறுதியினை அறிவாயோ! எதையும் தாங்கிக் கொள்ளும் இதயம் கொண்டோர்! எந்தையர் நாட்டின் உரிமை காத்திட இன்னுயிரையும் ஈந்திடும் உரம் கொண்டோர்! துரைத்தனத்தார் அவிழ்த்துவிடும் அடக்குமுறை கண்டு அஞ்சுவோர் இவர் அல்ல! துப்பாக்கி உறுமட்டும், தூற்றல் துளைக்கட்டும், தூய உள்ளம் படைத்த இத் தமிழ்ப் பெருங்குடி மக்கள், துளியும் அஞ்சப் போவதில்லை! நீ ஏதேதோ பேசுகிறாய், பலப்பல எழுதுகிறாய், இதோ இவர்கள் நாளையதினம் "வீரகாவியம்' திட்டிக் காட்டப் போகிறார்கள்! கலிங்கமும் கடாரமும் வென்றவர் அல்லவா, தமிழர்! அவர் வழி வந்தோர் காட்டாட்சி நீட்டிடும் தடியடி துப்பாக்கிக்கா அஞ்சுவர்! வீண் பயம் உனக்கு! காரணமற்ற சந்தேகம்! அதோ அந்தக் கண்ணொளி தந்திடும் கருத்துரை அறிகிறாயா? இவர்கள் இத்துணை இலட்சம், திரண்டிருக்கக் கண்டும், என்ன ஆகுமோ, எது நேரிடுமோ என்று கலங்கிக் கிடக்கிறாயே, சந்தனம் இருக்கும்போது ‘மணம்’ கிடைக்குமோ இல்லையோ என்றும் கலங்கிடப்போமோ! - என்றெல்லாம், எண்ணிடச் செய்ததோர் எழில் நிறை காட்சியைக் கண்டேன், உளம் உணர்ச்சியின் ஊற்றாயிற்று. களிப்பிலே மிதந்தேன், கற்பனைச் சிறகடித்து எண்ண வானில் பறந்தேன், இன்பம், இன்பம் என்னென்பேன் நான் கொண்ட இன்ப எண்ணங்கள்.

எனினும், மீண்டும் மனம் குழப்பத்துக்கு இடமளித்தது

கடற்கரையில், கூடினர் நான்கு லட்சம் மக்கள்!

தலைவர்களின் ‘அழைப்பு’ கேட்டுத் திரண்டெழுந்து வந்தனர்!

பண்டைப் பெருநாட்களிலே பாராண்ட மன்னர்கள், தமிழகத்தின் மானம் காத்திட, மாற்றானைத் தாக்கிடக் கிளம்பிய காலை, நம் மூதாதையர் இங்ஙனம்தான் கூடியிருப்பர், கோட்டைப் பெருவெளியில்! அன்று அவரிடம் வடித்தெடுத்த வாளும் வேலும் இருந்தன! களிறுகள் ஏப்பமிடுவது போலப் பிளறிக் கொண்டிருக்க, காற்றையும் வெல்ல வல்லோம் என்று பரிப்படை கனைத்திட, இவற்றினைக் கண்டு, வேட்டை! வேட்டை! என்று வீரர் கூட்டம் துடித்தெழுந்தது!

ஆனால் அது, அன்று! இன்று? இனமும் இயல்பும் கெட்டு, இழிவும் பழியும் படர்ந்திட, பான்மைபட்டுக் கிடக்கும் நாளன்றோ!

தமிழன் என்றோர் இனம் உண்டு! தனியே அவர்க்கோர் குணம் உண்டு! - என்று நாமக்கல் கவிஞரும், ‘தேசியத்தையும்' மறந்து பாடிட வேண்டிய விதமாக அல்லவா, தமிழர் என்ற இன உணர்வு குன்றிக்கிடக்கிறது. இதனை அறிந்தல்லவா, குடிலர்கள் கோலோச்சத் துணிந்தனர், குணக்கேடர்கள் ஆசான்களாக முன் வந்தனர்! இந்நாளில், எழுச்சி ஏற்படுவதெங்ஙனம் இயலும்! ஏன்? என்று கேட்கும் திறனற்று, அநீதியை எதிர்த்து நிற்கும் வீரமற்று, பிறந்துதொலைந்தோம், இறந்துபடும் வரையில் வாழ்ந்து தொலைப்போம். கைகட்டி வாய்பொத்தியேனும், காடு கரம்பு உழுது கிடந்தேனும், பல்லெலாம் தெரியக்காட்டிப் பிச்சை எடுத்தேனும், இச்சகம் பேசிக் கிடந்தேனும், பிழைத்துக் கிடந்தால் போதும் என்று எண்ணிடும் பேதயரானோமே, அஃது அறிந்தன்றோ, மூதாதையர் காலத்தில் முழங்காற்படியிட்டுக் கிடந்த இனத்தோரெல்லாம் இன்று, முடுக்கும் மிடுக்கும் காட்டுகின்றனர், - இந்நிலையில், இழிவினை ஒழித்திட அறப்போர்ப் படை திரளட்டும் என்று நா உலர, நெஞ்சம் உலரக் கூவித்தான் பயனென்ன, என்று மனம் குமுறும் நிலையில் இருந்திடுபவனல்லவா நான்! பிப்ரவரி 9, மாலை, கடற்கரையில் கூடிக் கடமை உணர்ச்சியை இழந்தோமில்லை, காரியமாற்றிடும் திறனை இழந்தோமில்லை, வேற்றார் மாற்றாராயினர் என்பதறிந்தால் அவர்தம் கொட்டம் நொறுக்குவோம், நமக்கென்றோர் கொற்றம் அமைப்போம், கோழை என்று எண்ணாதீர்! அண்ணா! கொடுமைகளைத் தாங்கிக்கொள்ள முடியும் எம்மால்! குழப்பமடையாதீர்! கோல் கொண்டோன் உருட்டி மிரட்டட்டும், கலங்கப் போவதில்லை! விரட்டித் தாக்கட்டும், கீழே வீழ்ந்துபடும் வரையில் வீரப் போரிடுவோம்? எம்மைச் சந்தேகிக்க வேண்டாம், உடன் பிறந்தாரிடம் நம்பிக்கை கொள்ளாமல், வேறு அதனை எங்ஙனம் பெறுவீர், எவரிடம் பெறுவீர், கலப்பை தூக்கிய கரங்களெல்லாம், அதற்கான காலகட்டம் வந்தபோது, வாளேந்திக் களம் சென்ற காதையினை மறந்தனையோ! ஏரடிக்கும் சிறுகோலும், எருதுகளும்தான் இவன் அறிவான், இவனுக்கு வாளேந்த, ஈட்டி எறிய, எங்ஙனம் இயலும் என்று எண்ணினரோ நமது முன்னோர்! மடைகட்டி அறிவானே தவிர, படையில் பணியாற்றத் தெரியுமோ இவனுக்கு! மேடு வெட்டிப் பள்ளம் நிரப்புவான், வாய்க்கால் வெட்டுவான், வளமளிக்க நீர் பாய்ச்சுவான், அறுத்தெடுப்பான், புடைத்து எடுப்பான், குவிப்பான், களிப்புறுவான், இவ்வளவுதான் இவனறிவானேயன்றி, பாய்ந்து தாக்கவும், பக்கவாட்டத்தில் செல்லவும், கோட்டைச் சுவர் ஏறவும், கொத்தளங்களைத் தூளாக்கவும் இவனுக்கு என்ன தெரியும் என்று சந்தேகித்தனரோ முந்தையோர்! இல்லை! இல்லை! உழவனெனினும், களம் அமைத்துக்கொண்டன்றோ பணியாற்றுகிறான்! எனவே காலம் கட்டளையிட்டதும், கரம் வாளாகும், உழவன் உயர்தரமான போர் வீரனாவான்! என்றன்றோ எண்ணினர். அஃதேபோல நாங்கள் கடை வைத்துப் பிழைக்கிறோம், கட்டை வெட்டி வாழ்கிறோம், கல் பிளந்தோ மண் சுமந்தோ கால் வயிற்றுக் கஞ்சிக்கு வழிதேடிக் கொள்கிறோம், தொழில்கள் ஆயிரம் புரிகிறோம், துயரமோ மலையத்தனை காண்கிறோம், ஆலைகளில் கரும்பாகிப் பிழியப்படுகிறோம், ஆவிசோரப் பாடுபடுகிறோம், கட்டுமரம் ஏறிச்சென்று கடலில் பிழைப்புத் தேடுகிறோம், ஆமாம், அரைவயிற்றுக்காக ஆலாய்ப் பறக்கிறோம், அது உண்மைதான்; எனினும், ஆன்றோரும் சான்றோரும் வாழ்ந்த நந்தம் நாட்டுக்கு ஓர் ஆபத்துச் சூழ்ந்திடுகிறது என்று அறியும்போது, நாங்கள் அஞ்சிடும் போக்கிலா இருந்திடுவோம், நம்மால் ஆகுமா என்று பெருமூச்சு விட்டபடியா முடங்கிக் கிடப்போம், வாள் கிடைக்காது போயினும் எதிரியின் வாளை ஒடித்திட இக்கரங்களைப் பயன்படுத்துவோம், மார்பிலே மாற்றார் வீசும் கணைகளைத் தாங்கிக்கொள்வோம், களம் எது காட்டிடு, காலம் குறித்திடு, செயல் முறையினைச் செப்பிடு, செய்து முடித்திடுவோம், இல்லையேல் செத்து ஒழிந்திடுவோம்! ‘செந்தமிழுக்குத் தீமை வந்தபின்னும் இந்தத் தேகம் இருந்தொரு இலாபம் உண்டோ?' என்று பாடியவர் நம்முடைய பாரதிதாசனல்லவா! அந்தப் புரட்சிக் கவிஞன் கிளப்பிய பொறிகளெல்லாம் எங்கே போய் விட்டன? இதோ, எமது கண்ணொளி காண்பாய்! இங்கே வந்தன்றோ, அவை அத்தனையும் குடி ஏறிவிட்டன என்றெல்லாம் எனக்கு எடுத்துரைப்பது போலிருந்தது பிப்ரவரி 19-ல் நான் சென்னைக் கடற்கரையில் கண்ட காட்சி.

தம்பி, நான் மந்திரியல்லவே, அதனால் மக்கள் திரண்டெழுந்திருப்பதைப் பல முறை பார்த்திருக்கிறேன். எழுச்சியூட்டும் பெருங்கூட்டம் பலவற்றிலே கலந்து கொண்டிருக்கிறேன் - எனினும் எனக்கு ஒரு கணம் திகைப்பே ஏற்பட்டு விட்டது, அன்றைய கூட்டத்தின் அளவையும், அங்குக் காணப்பட்ட எழுச்சியின் வகையையும் கண்டு!

மக்களோ, ஒரே மேடையில், ஒன்றுக்கொன்று முரண்பட்டுக் கிடக்கும் பல்வேறு கட்சியினர் அமர்ந்திருப்பது கண்டு, மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

காலை மலர்ந்ததும், நாடெங்கும் கடை அடைப்பும் பொது வேலை நிறுத்தமும் நடைபெற வேண்டும்.

அது எந்த அளவு வெற்றிபெறுகிறதோ இல்லையோ, கலாம் ஒரு துளியும் நடைபெறக் கூடாது.

ம.பொ.சி. பி. டி. ராஜன் பாராட்டிப் புகழத்தக்க விதமாகப் பேசுகிறார், ‘எத்தனை சதவிகிதம் கடை அடைப்பு வெற்றி பெற்றது என்பதைவிட, எத்தனை சதவிகிதம் அமைதி நிலவுகிறது என்பதுதான் முக்கியம்’ என்று.

நான், பன்னிப்பன்னி ‘அமைதி, அமைதி! அடித்தால் பொறுத்துக் கொள்ள வேண்டும்; தாக்கினால் தாங்கிக்கொள்ள வேண்டும்; தூற்றுவர், கோபம் கொள்ளக் கூடாது; இழித்தும் பழித்தும் பேசுவர், ஏளனம் செய்வர், அது கேட்டு மன எரிச்சலடையக் கூடாது, என்கிறேன்.

நமது முறையில் பலாத்காரம் தலைகாட்டக் கூடாது, யாரையும் நாம் வற்புறுத்தவும் கூடாது, கடை அடைப்பிலும் வேலை நிறுத்தத்திலும் ஒவ்வொருவரும் தாமாக மனமுவந்து ஈடுபட வேண்டும், யாரையும் நாம் பலவந்தப்படுத்தக் கூடாது என்று தமக்கே உரித்தான பண்புடன் பேசுகிறார், பி. டி. ராஜன்.

மக்களோ, அப்போதே நகரெங்கும் குழுமிக் கிடக்கும் கவசத் தொப்பி தரித்த போலீசைக் காண்கிறார்கள்; அவர்களின் முகம் கடுகடுத்து இருப்பதும் தெரிகிறது. இவர்கள் என்னென்ன ‘இம்சை’கள் தருவார்களோ என்றும் எண்ணுகிறார்கள். இங்கோ தலைவர்கள், காந்தியார் பார்த்து மெச்சத்தக்க வகையில், ‘சாந்தோபதேசம்’ செய்கிறார்கள் - போலீஸ் முகாமிலோ, துப்பாக்கிகளுக்குத் தோட்டாக்களைப் பொருத்திக் கொண்டும், தடிகளுக்குப் போடப்பட்டுள்ள ‘பூண்கள்’ சரியாகப் பொருந்தியுள்ளனவா என்று சரிபார்த்துக் கொண்டும் உள்ளனர்.

இலட்சக்கணக்கான மக்கள் கடற்கரையில்.

அவர்களை ‘அடக்கி ஆள’ ஆயிரக்கணக்கில் புதிய புதிய போலீஸ் படைகள் வந்திறங்குகின்றன. ஆந்திர நாட்டிலிருந்து கூடப் போலீஸ் படைகள் தருவிக்கப்பட்டிருப்பதாக, அன்று தோழர் விநாயகம் அறிவித்தார்.

தம்பி! 19-ந் தேதிய கூட்டத்தையும் கண்டேன், தலைவர்கள் காட்டிய அடக்கத்தையும் அவர்கள் தந்த அறிவுரையையும் எண்ணி எண்ணிப் பார்த்தேன் - என் கண்களில் நீர் துளிர்த்தது!

சென்னை நகரை, என்ன வேண்டுமானாலும் செய்துவிடலாம் அன்று இரவு! ஆம், தம்பி! என்ன வேண்டு மானாலும்! எழுக, வீழ்த்துக-என்று தலைவர்கள் அன்று கட்டளையிட்டிருந்தால், எதனை? என்று கூடக் கேட்டுக் காத்துக் கொண்டிருக்க மாட்டார்கள், எதையாவது வீழ்த்திவிட்டு, வேறு எதை வீழ்த்த வேண்டும் என்று கேட்டிருப்பர். அவ்வளவு உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இருந்தனர் மக்கள்.

என்னால், எண்ணத்தை வெளியிடாமல் இருக்க முடிய வில்லை.

இன்று ஆளவந்தார்களாக உள்ள இதே காங்கிரசாரிடம் இந்த ‘ஜன சக்தி’ கிடைத்தபோது, அம்மவோ! என்னென்ன செய்து மகிழ்ந்தனர்; எதிர்க் கட்சியினரைத் துரத்தித்துரத்தித் தாக்கினர். துரைத்தனத்தைத் துழைத்து எடுத்தனர். சட்டமாவது மண்ணாவது! அமைதி என்று கோழைத்தனம் பேசுவதா, அடிமைத்தனத்தைப் போக்கிக் கொள்ளும் அரும் வாய்ப்பினை இழந்து விடுவதா? தத்துவம் பேச இதுவா தருணம்? தாக்குக, நொறுக்குக, தண்டவாளங்களைப் பெயர்த்திடுங்கள், தபாலாபீசுகளைக் கொளுத்துங்கள்! சர்க்கார் கட்டிடத்துக்குத் தீ மூட்டுங்கள், தனியே சிக்கிடும் அதிகாரியின்மீது திராவகம் ஊற்றுங்கள் - என்றெல்லாம் பேசினர் - மக்களை எதெதற்கோ ஏவினர் - பலாத்காரத்தை அவிழ்த்து விட்டனர். மக்களின் ஆற்றலைக் கொண்டு, நாசவேலையைச் செய்து முடித்தனர்.

இதோ, பி. டி. ராஜன் எதிரில் நான்கு இலட்சம் மக்கள். சர்வகட்சிக் கூட்டணியின் தலைவர் அவர்.

அவர், தம்மிடம் தரப்பட்டுள்ள நான்கு இலட்சம் மக்களைக் கண்டு, என்ன எண்ணுகிறார்? இந்தப் பெரும் படையினைக் கொண்டு, எத்தகைய பேயாட்டம் நடத்திக் காட்டலாம் என்றா? இல்லை தம்பி, இல்லை. பெருநோக்கம் கொள்கிறார்! மகத்தானதோர் பொறுப்பு ஏற்றுக் கொண்டிருக் கிறோம், எதையும் சாதிக்கவல்லதோர் ஆற்றல் படை இதோ அணிவகுத்து நிற்கிறது! இதனை நாசப் பாதையில் நாட்டம் கொள்ளாதிருக்கச் செய்ய வேண்டும், தமிழ்ப் பண்பு அழியும் விதமான போக்கிலே நடந்து கொள்ளாதிருக்கச் செய்ய வேண்டும் என்பது பற்றித்தான், மிகமிகப் பொறுப்புடன் பேசினார்.

எனக்குத் தம்பி, உண்மையாகவே உருக்கமாக இருந்தது. மாற்றுக் கட்சிக்காரர்களுக்குத் தன் "வலிவை' எடுத்துக் காட்டுவதற்கான எத்துனை பெரிய வாய்ப்பு இது. இதனைப் பெற்றும், மகிழ்ச்சியடைந்தும், வாய்ப்பு, பெரும்பொறுப்பு தவிர, பகை கக்குவதற்கான சாதனம் அல்ல என்பதை உணர்ந்து பேசுகிறாரே, இவரல்லவா கண்ணியவான் என்று எண்ணிக் கொண்டேன், பெருமிதம் கொண்டேன்.

இலட்சக்கணக்கிலே கூடி இருந்த மக்களிடம் சொன்னேன். தங்களிடம் மக்கள் சக்தி குவிந்திருந்த போது கொடுமையையும் நாசத்தையும் அவிழ்த்துவிட்ட அந்த அரசியல் வாதிகள் எங்கே? தமிழகம் தன் பக்கம் திரண்டு நின்று ஆர்வம் கொப்பளிக்கும் நிலையில் ஆதரவு காட்டி நிற்பது அறிந்தும், அமைதியுடன் நீதியைப் பெற அறநெறி நிற்கவேண்டும் என்று அறிவுரை தரும் இவர் எங்கே? தமிழ் நாட்டின் கண்ணியம், இதோ இங்கு அமர்ந்திருக்கிறது. காண்பீர்! என்று எடுத்துச் சொன்னேன். என் இதயம் பேசிற்று.

அத்தகைய "கண்ணியவான்' ஜனவரி 27-ந் தேதிய சர்வ கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார் - கூட்டணித் தலைவரானார்; பிப். 20, பொதுவேலை நிறுத்தம், கடை அடைப்பு, அன்றே தீர்மானிக்கப்பட்டது.

பி. டி. ராஜன், அரசியலில் இப்போது நுழைந்த டி.டி.கே. அல்ல.

காலமெல்லாம் வேறு வேலை பார்த்துவிட்டு, சமயமறிந்து காங்கிரசில் பதுங்கும் ‘சந்து’ தேடிடும் சந்தர்ப்பவாதியல்ல.

கப்பல் மூழ்குவது தெரிந்தாலும், அதில் உள்ளோர் தப்பிச் செல்ல வழி செய்துவிட்டு, நான் தப்பித்துச் செல்வது அறமாகாது, நானும் கப்பலுடன் சேர்ந்து மூழ்கினாலும் கவலையில்லை என்று கூறி, கொடி வணக்கம் செய்தபடி, கப்பல்மேல் தட்டிலே நிற்கும் கப்பல் தலைவன் போல, ஜஸ்டிஸ் கட்சியில் நின்றவர். காமராஜ், அரசியல் இயக்கத்தில் தொண்டராக, கொடி ஏந்தியாக இருந்த நாட்களிலே, கோலோச்சும் அமைச்சராக இருந்தவர்; துள்ளி விளையாடும் சிறுபிள்ளைப் பருவத்தில் காமராஜர் இங்கு இருந்த நாட்களில், சீமை சென்று பார்-அட்-லா படித்தவர். பண்புக்கும் அன்புக்கும் உறைவிடம்; அரசியல் நாகரிகத்துக்கே ஆசான்.

அவரைச் சந்தித்து, பிப்ரவரி 20 குறித்துப் பேச வேண்டும் என்ற அளவுக்குக்கூட, தமது உயர்ந்த இடத்திலிருந்து கீழே இறங்க, காமராஜருக்கும் மனம் இடம் தரவில்லை.

அழைத்துப் பேசவும் அவருக்குத் தோன்றவில்லை. அலட்சியப்படுத்தினார் - கூட்டணி என்றோர் அமைப்பு உருவாக்கி இருப்பதையே கவனிக்க வேண்டிய அளவில் நான் சாமான்யனல்ல, ஒஹோ! அதனை அறிவீரா? நான் இந்த இராஜ்ய முதல் மந்திரி! என்று எண்ணி இறுமாந்து கிடந்தார்.

‘அர்த்தால்’ நடத்தத் தேவையில்லை; கோரிக்கைகளை நான் கவனித்துக் கொள்ளுகிறேன் என்று கூறிட, முன்வரவில்லை.

ஒருவேளை, முதல் மந்திரிக்கு இருக்கும் மிகுதியான, பலரக வேலைகளிலே, இதனை அவர் கவனிக்கவே இல்லையோ என்றால் தெரிந்திருக்கிறது, தூற்றிப் பேசியுமிருக்கிறார் செஞ்சியில்.

வேண்டுமென்றே அலட்சியப்படுத்தினார் - துச்சமென்று எண்ணினார் - கூட்டாவது குழம்பாவது என்றார் !

அப்படிப்பட்டவருக்குக் "கண்ணியம்' காட்டினார், பி.டி. இராஜன். தமிழனின் புகழ்க்கொடி, உயர உயரப் பறந்தது, தம்பி, பறந்தது!

நாடு, சர்வ கட்சிக் கூட்டணியின் அழைப்புக்கு ஆதரவு காட்டிற்று. தம்பி, நீ உன் முழுத்திறமையையும் அளித்து பிப். 20 வெற்றி தேடித் தந்திருக்கிறாய், நான் உன்னிடம் எவ்வளவு எதிர்பார்க்கிறேனோ, அந்த அளவு குறைவு, இன்னும் அதிகம் நான் உன்னிடம் எதிர்பார்க்கலாம் என்பதை எடுத்துக் காட்டிவிட்டாய்.

தித்திக்கும் செய்திகளாகவே அனைத்தும் இருந்து விடவில்லை. குருதி கொட்டினர் நண்பர்கள்; தடியடிக்கும் ஆளாயினர் அன்பர்கள்; அரசியல் பிரச்சினையிலே அக்கறை கொண்டுள்ள தமிழர்கள் அத்துணை பேரும், அவர்கள் எந்தக் கட்சியினராயினும், ஏதேனும் ஓர் வகையில் தமது பங்கினைச் செலுத்த வேண்டும் என்ற ஆர்வத்துடன் பணியாற்றினர் - வெற்றி பெற்றனர். வாழ்த்துகிறேன் - வணங்குகிறேன். அவர்களின் ‘தோழனாக’ இருக்கும் ‘பேறு’ கிடைக்கப்பெற்றதற்காகப் பெருமகிழ்வு கொள்ளுகிறேன்.

சைமன் கமிஷனை பகிஷ்கரித்தபோதுகூட இப்படி இருந்ததில்லை என்றும்,

ரவுலட் சட்ட எதிர்ப்பின் போதும் இதுபோல் கொதிப்பு எழுந்ததில்லை என்றும்,

இராஜ்யம் பூராவிலும் நடைபெற்ற மிகப் பெரிய அர்த்தால் இதுதான் என்றும்.

எதிர்க்கட்சிக்காரர்கள் ஏற்பாடு செய்த அர்த்தாலில், இது போல் மகத்தானது வேறு ஒன்றும் இதற்குமுன் நடை பெற்றதில்லை என்றும்,

பெரிய பத்திரிகைகளின் ஒத்துழைப்பு ஒரு துளியுமின்றி, அவைகளின் எதிர்ப்பையும் ஏளனத்தையும் தாங்கிக் கொண்டு வெற்றிகரமாக நடைபெற்றது இந்த அர்த்தால் ஒன்றுதான் என்றும்,

காலித்தனமோ குழப்பமோ, பலாத்காரமோ பயங்கரமோ இல்லாமல், மிக மிக அமைதியாக, மக்கள் பெருமளவுக்கு நடந்து கொண்டது, இந்த அர்த்தாலில்தான் என்றும்,

ஓரிரு இடங்களில் கட்டுக்கடங்காத ஆர்வத்தினால் சில காரியங்கள் நடைபெற்றிருந்தாலும், அவை விதிவிலக்கு அல்லது ‘திருஷ்டி பரிகாரம்’ என்று கூறத்தக்க வகையில்தான் இருந்தது என்றும்,

இந்த அர்த்தாலின் போதுதான், பொதுமக்கள், பயமற்று உலவிய, காட்சிகளைக் காண முடிந்தது என்றும்,

பெரும் பணத்தைச் செலவிட்டு, முதலாளிமார்கள் முன் முழங்காற்படியிட்டு, போலி வெற்றி தேடிடாமல், மனமுவந்து, தாமாக மக்கள் ஈடுபட வேண்டுமென்று முறை வகுக்கப்பட்டு, நடத்தப்பட்டது இந்த அர்த்தால் ஒன்றுதான் என்றும், நேர்மை உள்ளம் படைத்தவர்கள், மாற்றான் தோட்டத்து மல்லிகை யானாலும், மணம் இருந்தால் ரசிக்கத் தெரிந்தவர்கள், அனைவரும் கூறினர் - பாராட்டினர்.

கண்டித்துப் பேசவும், கேலி பொழியவும், பகை உமிழவும் பொறாமையைக் கக்கவும் தலைவர்கள் இல்லாமற் போகவில்லை.

முட்டாள்கள் - பைத்யக்காரத்தனமான செயல்- என்று மேதை பக்தவத்சலனார் பேசியிருக்கிறார்!

தம்மம்பட்டியிலும் கல்லக்குறிச்சியிலும் குண்டடிபட்டு, உயிருக்கு மன்றாடிக் கொண்டிருக்கும் தமிழ் இளைஞர்கள், நாங்கள் குண்டடிபட்டபோது குற்றுயிராய்க் கீழே கிடந்த போது, மருத்துவரிடம் சிக்கியபோதுகூட எமக்கு இவ்வளவு வேதனை ஏற்பட்டதில்லை; மொழி காக்கவும், மொழிவழி அரசுக்காகவும், நீதிக்காகவும் அறப்போர் நடத்தியவர்களை, முட்டாள்கள் - பைத்யக்காரர்கள் என்று ஏசுகிறாரே ஒரு மந்திரி தமிழ் இனத்தவர் - அதைக் கேட்கும் போதுதான் எமக்கு அதிகமான வேதனை மூண்டுவிடுகிறது என்று கூறுவர்.