அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


தண்டோரா சர்க்கார் - 1
2

உள்ளம் உண்மையிலேயே வேதனைப்படத்தானே செய்யும்.

கல்லக்குறிச்சியில் மூவர், தம்மம்பட்டியில் மூவர் குண்டடி பட்டு மருத்துவ மனையில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். இளைஞர்கள், வாழ வேண்டியவர்கள், அவரவர் இல்லங்களிலே இன்று இரத்தக் கண்ணீர் வடித்துக்கொண்டுள்ளனர். மகனுக்குக் குண்டடிபட்டதாம் - குருதி கொட்டக் கொட்டக் கீழே வீழ்ந்தனராம் - குற்றுயிராயினராம் - என்று கேட்டதும் தாய் எப்படிப் பதறினார்களோ, என்னென்ன கூறிக் கதறினார்களோ! வம்புதும்புக்குப் போகாதவன், யாரிடமும் இன்முகம் காட்டிப் பேசுவான், ஊருக்கு உழைப்பதிலே ஆசைமிக்கவன், ஒருவரிடமும் விரோதம், குரோதம் கொள்ளமாட்டானே, ஐயோ! அப்படிப் பட்ட என் அருமை மைந்தனை, துப்பாக்கியால் சுட்டார்களாமே! பெற்றெடுத்து வளர்த்துப் பெரியவனாக்க நாங்கள், சுட்டுத் தள்ள சர்க்கார்! இந்தக் கொடுமைக்கு என்னதான் பரிகாரம்? யாரும் இல்லையா நீதி கேட்க?. . . . என் மகன் என்ன, வெடிகுண்டு வீசினானா? வெட்டரிவாள் தூக்கினானா? வீடு புகுந்து கலாம் விளைவித்தானா? போவோர் வருவோரைத் தாக்கினானா? கொலையும் கொள்ளையும் நடத்துவோனை அடக்கப் பயன்படுத்த வேண்டிய துப்பாக்கி கொண்டா, கொள்கைக்காகப் பணியாற்றுவோரைத் தாக்குவது, இப்படி ஒரு துரைத்தனமா? இதற்குத் தூபதீப நைவேத்தியம் வைத்தல்லவா தேர்தலில் ஓட்டுக் காணிக்கை தந்தோம், மாட்டுப் பெட்டிக்கு ஓட்டளியுங்கள், மகத்தான நன்மைகள் செய்து தருகிறோம் என்று ஆசை வார்த்தை கூறினர்; சாரை சாரையாகச் சென்று ஓட்டு அளித்தோம் - இப்போது தடியும் துப்பாக்கிக் குண்டுமல்லவா தருகிறார்கள். என் மகனைத் துப்பாக்கியினால் சுட்டிருக்கிறார்களே! அவதார புருஷன் என்றும், அஹிம்சா மூர்த்தி என்றும், ஒப்பற்ற முனிவன் என்றும், போற்றப்பட்ட உலக உத்தமராம் மகாத்மாவின் சீடர்கள், வாரிசுகள் என்று கூறிக்கொண்டே, இவ்வளவு கொடுமைகளச் செய்கிறார்களே, ஏனென்று கேட்க யாரும் இல்லை, பெற்ற வயிறு பற்றி எரிகிறதே; இந்த அநீதியை, அக்ரமத்தை ஏனென்று கேட்க நீதிமான் யாரும் இல்லையா! காட்டில் உள்ள புலி நாட்டுக்குள் நுழைந்து விட்டால், வீட்டுக்கோர் வீரன் கிளம்பிச் சென்று வேட்டையாடிக் கையில் கிடைத்ததைக் கொண்டு தாக்கி, புலியைக் கொன்று போடுகிறார்களே, நாட்டைக் காடு என்றுஎண்ணிக்கொண்டு, மக்களை அடக்குமுறைக் கொடுமைக்கு ஆளாக்கும் ஓர் ஆட்சி நடத்துகிறது, அறிஞர் பெரு மக்களும் ஆண்மையாளர்களும், குடி அரசின் கோட்பாட்டின் பாதுகாவலர்களும் வாய் மூடி இருந்திடலாமா? என்றெல்லாம் அவர்களுக்குப் பேசத் தெரியாது. ஆனால் கண்ணீருக்கு வேறென்ன பொருள்?

தம்பி, தம்மம்பட்டிச் சம்பவம், கேட்கும்போதே நெஞ்சு உருக்குவதாக இருக்கிறது.

தம்மம்பட்டி, ஆத்தூர் வட்டாரத்தில் உள்ள ஒரு சிற்றூர்.

மாபெரும் புரட்சி நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடத்தினாலும் மொத்தமாக ஒரு ஆயிரம் மக்கள் திரண்டிட முடியாது.

அங்குள்ள மக்களுக்கு, நமது இயக்கத்தைப்பற்றி அறிவிக்க, தம்மம்பட்டியில் நமது கழகக் கூட்டம்கூட நடைபெற்றதில்லை.

சுற்றுப்புறமுள்ள இடங்களிலே நடைபெற்ற, நமது கழகக் கூட்டங்களின் மூலமாகப் பெற்ற உணர்ச்சிதான், தம்மம்பட்டிக்கு இருந்து வந்தது. ஆனால், பிப். 20 அர்த்தால் பற்றிய சர்வக் கட்சிக் கூட்டணியின் பிரசாரம் தம்மம்பட்டிக்கும் பரவிற்று - தமிழர் வீறுகொண்டெழுந்தனர் - ஊர்வலம் நடந்தது. தம்மம்பட்டி சென்ற வந்த தம்பி மதியழகன், அறுபது எழுபது பேருக்கு மேல் ஊர்வலத்தில் செல்லவில்லை என்று தெரிந்து வந்து அறிவிக்கிறார். இதைப் "புரட்சிப் படை' , போலீசைத் தாக்கவந்த படை, நாசம் விளைவிக்கக் கூடிய படை என்றெல்லாம் கருதிக் கொண்டு, அதன் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்திருக்கிறார் ஒரு சப்-இன்ஸ்பெக்டர், மூவர், தம்பி! குண்டடிப்பட்டு, மருத்துவ மனையில் இருக்கிறார்கள்.

மகாத்மா, மொழிவழி ராஜ்யமே தேவை என்று வலியுறுத்தி வந்தார். மக்களுக்கு வாக்களித்தார். அவர் ‘வாரிசு’ ஆகவந்து அரசோச்சும் நேரு பண்டிதரோ, மகாத்மாவின் மொழிவழி ராஜ்யத் திட்டத்தைக் கிழித்தெறிகிறார்.

மகாத்மாவின் உபதேசத்தைப் புறக்கணித்து நடக்கும் நேரு பண்டிதருக்குப் பக்கபலமாக இருப்பதில் பெருமை கொள்ளும் காமராஜர் சர்க்காரோ, தம்மம்பட்டி, கல்லக்குறிச்சி நடத்தி மகிழ்கிறது.

தருக்கரிடம் ஆட்சி சிக்கிக்கொண்டதால், குண்டடிக் கொடுமைக்கு ஆளான தம்மம்பட்டித் தோழர்களே! நீங்கள் அனுபவித்த கொடுமையை எண்ணி எண்ணிக் கண்ணீர் வடிக்கிறோம் - முதலில் - பிறகோ தாயகத்தின் உரிமை முழக்கமிட்டு, அதனை ஒடுக்க எண்ணுவோரின் குண்டினைத் தாங்கிக் கொண்ட, நெஞ்சு உரம் கொண்ட தோழர்காள்! உமது வீரத்துக்குத் தலை வணங்குகிறோம் என்று நான் மட்டுமா, சர்வ கட்சிக் கூட்டணித் தலைவர்களெல்லாம், ஏன், தமிழகமே கூறுகிறது.

கல்லக்குறிச்சியிலும் தடியடி - குண்டடி; அங்கும் மூவர் படுக்கையில்.

கேட்கும்போது, கண்ணீர் வருகிறது - பிறகோ, மார்பு நம்மையுமறியாமல் நிமிர்கிறது. தமிழகமே! தாயகமே! உன் மக்களில் வீரரும் தீரரும் இல்லாமற் போகவில்லை - அனைவருமே பக்தவத்சலங்களாகிவிடவில்லை - இதோ தம்மம்பட்டியும் கல்லக்குறிச்சியும் உனக்கு இரத்தக் காணிக்கை தந்திருக்கின்றன, தருக்கராட்சிக்குக் குருதி மேலும் தேவை என்றாலும், தரச் சித்தமாக உள்ள வீரர் அணிவகுப்பு, உன் தளைகளை ஒடித்திடும் வல்லமையை மெள்ள மெள்ள, ஆனால் நிச்சயமாகப் பெற்றுக் கொண்டு வருகிறது என்று எண்ணி எக்காளமிடத் தோன்றுகிறது.

கடை அடைப்பும் பொது வேலை நிறுத்தமும்தான் நடத்தினோம் - அதிலும், வற்புறுத்தல், துன்புறுத்தல், வம்பு வல்லடி செய்தல், குறுக்கே படுத்தல், மறித்து நிறுத்துதல் கூடாது என்று கூறிவிட்டோம் - கொழுந்து விட்டெரியும் ஆர்வத் தீயைத் தணியச் செய்து கொள்ள முடியாததால், இங்கொன்றும் அங்கொன்றுமாகச் சில நடைபெற்றுவிட்டன சிந்தை நொந்து தமது வருத்தத்தைத் தெரிவிக்கிறார் கூட்டணித் தலைவர்.

சென்னையில், ஊர்வலத்துக்கு வந்த மக்களை ஒழுங்கு படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த அன்பர் ஜீவாவும், கம்யூனிஸ்டுத் தலைவர் வெங்கடராமனும் போலீசால் தாக்குண்டனர். ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளவர், இது கேட்டு இன்னமும் வெட்கித் தலை குனியக் காணோம். இத்தகைய அக்கிரமத்தில் இறங்கியவர்களைக் கண்டித்ததாகவும் தெரியவில்லை. கட்சியின் நடுநாயகங்களாக விளங்கும் இருவர், நாற்பதாண்டுகளாகப் பொதுப் பணியாற்றி வரும் மக்கள் தலைவர்கள், தாக்கப் படுகின்றனர், பட்டப்பகலில் நடுவீதியில், அமைதியைக் காத்திட அவர்கள் ஈடுபடுகிற நேரத்தில்.

அமைதி பிறகு எங்ஙனம் நிலைக்கும்? தங்கள் அன்புக்கும் மதிப்புக்கும் உரிய தலைவர்களைக் கண்ணெதிரே போலீஸ் அடிக்கக் கண்டால், மக்கள் மனம் என்ன பாடுபடும்? கொதித் தெழுவரன்றோ மக்கள்! ஆமாம், அதைத்தான் விரும்புகிறார்கள், அடக்குமுறையில் பயிற்சி பெற்றோர். மக்களைக் கொதித்தெழச் செய்வது, கொதித்தெழுந்த மக்கள்மீது தம்மம்பட்டி, கல்லக் குறிச்சி நடத்துவது! இதுதான் முறை என்றால், இதற்கு ஜனநாயகம் என்ற போர்வை ஏன்?

தோழர் கோவிந்தசாமி M.L.A. கடலூரில் கைதானார் - குற்றம் என்ன தெரியுமா தம்பி, கொள்ளை அடித்தார் என்பது. நம்ம கோவிந்தசாமியேதான், எஸ். எஸ். இராமசாமி படையாச்சியார் காங்கிரசுக்குத் ‘தத்து’ போனபோது, தொத்திக் கொண்டிருந்தால், சீமானாகி இருக்கக்கூடும் - அந்த வாய்ப்பு வேண்டாம், வாக்குறுதி காப்பாற்றப்பட வேண்டும், மக்களுக்குத் துரோகம் செய்யக் கூடாது, பதவி அல்ல முக்கியம், பண்புதான் என்று உணர்ந்து உழைப்பாளர் கட்சியை உருவின்றிப் போகச் செய்ததைக் கண்டித்துவிட்டு, திராவிட முன்னேற்றக் கழகத்துடன் தோழமை கொண்டு பொதுப் பணியாற்றி வருகிறாரே, புன்னகை மாறாத முகமும், புன்மொழி பேசிடா வாயும், எவரிடமும் இன்மொழியே பேசிப் பழக்கமும் பெற்றுள்ள பண்பாளர் இருக்கிறாரே, அவர், ‘‘என்னை மீறி நடக்கிறானே, பார், பார், ஒழித்துக் கட்டிவிட்டு மறுவேலை பார்க்கிறேன்” என்று மந்திரி மிரட்டியபோதும் மனம் தளராமல் மக்கள் தொண்டனாகி மகத்தான பணியாற்றிக்கொண்டு வரும் அதே கோவிந்தசாமி தான், தம்பி, கொள்ளைக்காரனாக்கப் படுகிறார். ஆட்சியாளர்களின் கண்களுக்கு, வழக்கு இருக்கிறது. எனவே மேலாக அது குறித்துக் கூறுவதற்கில்லை.

தமிழகத்தில் ஓட்டு மொத்தம் ஆயிரம் தோழர்களைப் போலீசார் இழுத்துச் சென்றனர். - இப்போது நூறு தோழர்கள் மீது வழக்கு தொடரப்படக்கூடும் என்று தெரிகிறது.

தோழர்கள் A. கோவிந்தசாமி, M.L.A., நாமக்கல் இராமசாமி M.L.A., திருச்செங்கோடு அர்த்தநாரி M.L.A., சென்னை ப. ஜீவானந்தம், M.L.A., சென்னை V. முனிசாமி கார்ப்பரேஷன் கவுன்சிலர், வேலூர் நகரசபை உறுப்பினர்கள் மூவர் - ஆகியவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர் - இதிலே தோழர் A. கோவிந்தசாமி அவர்கள் மீது மட்டும் வழக்குத் தொடரப்படுகிறது.

வழக்கம்போல், தீவிரக் கிளர்ச்சியில் முன்னணியில் நின்று பெருமை பெற்றிருக்கிறார் நமது அலுமேலு அப்பாத்துரையார் - தமிழரசுக் கழகத் தோழியர் சரோஜினி நாராயணசாமி அவர்களுக்கும் இதே பேறு கிடைத்திருக்கிறது.

மொத்தத்திலே, நாமெல்லாம் நீண்ட நாட்களுக்குப் பிறகுங்கூட எண்ணிப் பார்த்துப் பார்த்துப் பெருமைப்படத்தக்க விதமாகவே நிகழ்ச்சிகள் இருந்திருக்கின்றன. எவ்வளவு கடுமையான கிளர்ச்சியானாலும், எவ்வளவு நீண்ட காலத்துக்குத் தொடர்ந்து நடத்தப்பட வேண்டுமென்றாலும், தமிழகத்தில் அதற்கான வாய்ப்பும் திறனும் நிரம்ப இருக்கிறது என்பதும், வேண்டுமென்றே ஆத்திரமூட்டிவிடப்பட்ட சிற்சில இடங்களில் தவிர, மற்றெல்லா இடங்களிலும் பண்பறிந்து மக்கள் நடந்து கொண்டனர் என்பதும் மகிழ்ச்சியூட்டுகிறது - அவ்வகையில் நடத்திச் செல்லும் திறமையைப் பெற்றதாகச் சர்வ கட்சிக் கூட்டணி அமைந்திருக்கிறது என்பதும், நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது. இவ்வளவுக்கும், சர்வ கட்சிக் கூட்டணியைப் பிளவு படுத்த, பலத்த முயற்சி எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது. நமது பொதுச் செயலாளரும் துணைப் பொதுச் செயலாளரும் தமிழக மெங்கணும் கூட்டணித் திட்டத்துக்கு நமது கழகத் தோழர்களிடம் ஆதரவு திரட்டச் சென்றிருந்தனர். தோழர் மதியழகன் கோவை, சேலம், வடாற்காடு மாவட்டங்களிலே சுற்றுப் பயணம் செய்து வந்தார். தம்பி சம்பத்து முழக்கம் கேட்ட வண்ணமிருந்தது - நான்தான் இங்கே சென்னையில் தனி ஆளாக விடப்பட்டிருந்தேன்! எனக்கு எப்போதுமே இத்தகைய கிளர்ச்சியின்போது உடனிருந்து உற்சாக மூட்டவும், என் கோபதாபத்தில் பங்கேற்றுக் கொள்ளவும், சம்பத்து வேண்டும். இம்முறையோ நாட்கள் அதிகம் இல்லாததால், நானே, சம்பத்து பல ஊர்களுக்குச் சென்றுவர வேண்டும் என்று விரும்பினேன். இதனால், இங்கு தம்பி! என் எண்ணங்களைப் பரிமாறிக் கொள்ளவோ, கலந்து பேசிப் புதிய கருத்துப் பெறவோ, மெத்தத் திண்டாடிப் போனேன். நாள் தவறாமல் கூட்டம் - பலப்பல ஆயிரம் மக்கள் - பேரார்வம், போரார்வம் என்று கூடச் சொல்லலாம் - எனினும் அலுத்துவந்தமர்ந்து, கண் அயரும் வேளை வரையில், அன்றைய நிலைமைபற்றி உரையாட, அவர் வருவாரா, இவர் வருவாரா என்று எதிர்பார்த்த வண்ண மிருப்பேன். எவரும் வருவதில்லை. ‘வேலைவெட்டி’ யற்றா அனைவரும் இருக்கிறார்கள், இந்தத் தொல்லைபிடித்த காரியம் பற்றி என்னுடைய ‘தொண தொண’ப்பைக் கேட்டுக் கொண்டிருக்க-எனினும், துணைக்கு நாங்கள் இருக்கிறோம், நாங்கள் கழக முன்னணியில் இல்லாமற்போனது எங்கள் குற்றமல்ல என்று கூறாமற் கூறிக்கொண்டு, என்னுடன் கலந்துரையாடவும், கருத்துக்களைத் திரட்டித் தரவும் தோழர்கள் போளூர் சுப்பிரமணியமும், சென்னை வேதாச்சலமும் இருந்தனர். என்னைப் போன்ற மற்றோர் ‘மாஜி’ இல்லையா சென்னை கே. எம். கண்ணபிரான், அவரும் இருந்தார் - அறிவகத்தில் உள்ள கழகத்தோழர் சிவஞானம் - இவர்கள் இருந்தனர்.

இந்தக் கட்டத்திலேதான், சர்வ கட்சிக் கூட்டணியின் தலைவர்களுடன் அடிக்கடி சந்தித்துப் பேசும் வாய்ப்பு ஏற்பட்டபடி இருந்தது. அதனால் எனக்கு உற்சாகம் ஏற்பட்டதுடன், எங்களுக்குள் ஓர் உள்ளன்பு வளர்ந்திருக்கிறது என்று நான் நிச்சயமாக நம்புகிறேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு ம.பொ.சி யுடன் மீண்டும் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. இருவருமே இதனை மெத்தச் சுவைத்தோம் என்று எண்ணுகிறேன்.

தமிழரசுக் கழகத் தோழர்களில் எனக்கு நீண்ட காலமாகவே நண்பர், உமாபதி; கூட்டணி காரணமாக நாங்கள் சந்திப்பதும், பொதுவாகத் திட்டம் தீட்டுவதும், காணக் காண அவருக்கு மெத்த மகிழ்ச்சி - அலாதியான ஆனந்தம்!

கோவை சின்னதுரையும், சென்னை சுப்பிரமணியமும், ஈரோடு சின்னச்சாமியும், சென்னை அந்தோணிப் பிள்ளையும், அவரவர் தொடர்பு கொண்டுள்ள தொழில் சங்கங்களின் மூலம் சர்வகட்சிக் கூட்டணி பெறக்கூடிய வாய்ப்புகள் பற்றிக் கூறியும், பிரச்சினைகளை அன்புடன் விவாதித்தும், திட்டங்கள் காணுவதிலே தெளிவும் துணிவும் காட்டியும், எனக்கு நம்பிக்கையையும் உற்சாகத்தையும் ஊட்டினர்.

ஜீவாவைப் பற்றித்தான் சொல்லத் தேவையில்லை!

‘‘பொல்லாத ஆசாமி, சொல்லாமல் கொள்ளாமல் வேறு இடத்துக்குக் குடிபோய் விட்டார்,” என்று நாமெல்லாம், எப்போதும் சொந்தம் கொண்டாடிப் பேசும் நிலையில் உள்ள தோழர்.

இவ்வளவு பேருக்கும் அன்பை அள்ளிக்கொடுத்து, முற்றிலும் தமக்குப் பழக்கமே இல்லாத முறைகளையும் திட்டங் களையும் நாங்கள் திணிக்க முயற்சித்த போதெல்லாம், புன்முறுவல் காட்டி, எங்கட்கெல்லாம் பொறுப்புப் பற்றி அடிக்கடி நினைவு படுத்தி, எம்மை ஊக்குவித்து வந்தார், உடனிருந்து நடத்திச் சென்றார், பி. டி. ராஜன் அவர்கள்.

சர்வ கட்சிக் கூட்டணிக்கு, சட்டத்தைக் காப்பாற்றியாக வேண்டும் என்ற பொறுப்பைத் தாங்கித்தாங்கித் தழும்பேறிப் போனவர் தலைவர்; அதிலே உறுப்பினர்களாக உள்ளவர்களில் பெரும்பாலோர், ஜனநாயகத்தின் பேரால் பதவிக்கு வந்தவர்கள் சட்டத்தைப் பயன்படுத்தியே சர்வாதிகாரியாகி விடுகிறார்கள் என்ற உண்மையை அறிவதால், ஆத்திரமே கொள்பவர்கள்! இந்தக் ‘கூட்டு’ எத்தனை நாளைக்கு நிலைக்கும்? ஒரு சிறு விவாதத்தில் சச்சரவு மூண்டுவிடாதா? திட்டம் தீட்டும் போதே தகராறு கிளம்பி விடாதா? கொள்கைக்கு விளக்கமளிக்கும் போதே ஒவ்வொருவர் ஒவ்வொரு கோணம் சென்று விடமாட்டார்களா? என்றெல்லாம் எண்ணிக் கொண்டுதான் காமராஜர்கூட, கூடட்டும், கூடட்டும், தீட்டட்டும் தீட்டட்டும் என்று கூறிக்கொண்டு சும்மா இருந்துவிட்டார் என்று எண்ணுகிறேன். அப்படியே அவருக்குச் சிறிதளவு ஆயாசமோ அச்சமோ ஏற்படவிடக் கூடாது என்பதற்காகவே, பெரியாரும் "பூ, பூ! இதுகளெல்லாம் கூடி ஒரு காரியம் செய்ய முடியுமா? யார் இதுகளை நம்புவார்கள்? இதுகள் யார் என்பது யாருக்குந் தெரியாது?' என்றெல்லாம் பேசியும் எழுதியும் வந்தார்.

எனினும், தமிழகம் கண்டு பாராட்டத்தக்க விதமாக, கூட்டணி செயலில் ஈடுபடுவதிலே, தோழமை உணர்ச்சியையே காட்டிற்று. ஒவ்வொரு சந்திப்பும், நேசத்தை வளர்த்தது. ஒவ்வொரு விவாதமும், தோழமைக்கு அழைத்துச் சென்றது.

கூட்டணி முறியவில்லை என்பதையும், பெரியாரின் பகைப் பிரசாரத்துக்குப் பிறகும், கூட்டணியின் குரலுக்கு நாட்டு மக்கள் ஆதரவு அளிக்கிறார்கள் என்பதைத் தெரிந்த பிறகுதான், ஜனவரி 27-ல் அமைக்கப்பட்ட கூட்டணியை அலட்சியப்படுத்தி, தலைவருடன் பேச முயற்சிக்காமல் முடுக்குடன் இருந்து வந்த காமராஜர் சர்க்கார், கூட்டணித் தலைவரைக் கண்டு பேசவும், அர்த்தாலைக் கைவிட்டு விடும்படி அவரைக் கேட்டுக் கொள்ளவும் முயற்சிகள் எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டம் பிறந்தது! ஆனால், அதற்குள் கூட்டணி அலுவலகக் கதவு தாளிடப்பட்டு விட்டது; தட்டினால் திறக்கப்படும், கேட்டால் விளக்கம் அளிக்கப்படும், கெஞ்சினாலும் மிஞ்சினாலும் அர்த்தாலைக் கைவிடுவது என்பது மட்டும் முடியாது என்பது அறிவிக்கப்பட்டாகி விட்டது.

அரசியலில் அமளிகளைத் தடுத்துச் சமரசம் காண்பதற் கென்றே தம்மை ஒப்படைத்திருப்போர் மூலம், "சமரசம்' பேசப் பட்டது - பலன் ஏதும் இல்லை. காரணம், கூட்டணி தன் திட்டத்தில் தடுமாற்றமற்ற நிலையில் இருந்ததுதான்.

19-ந் தேதி காலை, தம்பி! இரவெல்லாம் எனக்குத் தூக்கம் இல்லை - ஏதேதோ வித விதமான வதந்திகள்! நானும் விதவிதமான புத்தகங்களைச் சேகரித்து வைத்துக் கொண்டேன், உள்ளே போக. . . . விடியற் காலையில் மதுரையிலிருந்து தலைவர் சென்னை வருகிறார். வருகிறவரிடம் கெஞ்சுவது போலவும் கொஞ்சுவது போலவும் ஓர் அறிக்கையும், வழிக்குவராவிட்டால் தாக்குவோம் என்று மிரட்டும் விதமாக மற்றோர் அறிக்கையும் சர்க்கார் வெளியிட்டு விட்டார்கள். பி. டி. ராஜன் வருவார், இந்த அறிக்கைகளைக் காரணமாகக் காட்டுவார், கடை அடைப்பு வேண்டாமென்று கூறி விடுவார், கூட்டணி உடைபடப் போகிறது! என்றெண்ணிக் குதூகலம் கொள்கிறார்கள். மாற்றார் என்செய்வேன் நானும் காலையிலே எழுந்தேன், தலைவரைக் காணச் சென்றேன். தம்பி! அந்தக் காட்சியை நான் என்றைக்கும் மறந்திட முடியாது. பி. டி. ராஜன் அவர்கள் முகத்தில் ‘சோப்பு’ போட்டுக் கொண்டிருக்கிறார், உள் அறையில்; நான் வெளி அறையில் நுழைகிறேன். எப்படியாவது காமராஜரின் அறிக்கையில் திருப்தி பெறச் செய்ய வேண்டும் என்று எண்ணி அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்த நண்பரும் இருக்கிறார் நான் சிறிதளவு பயந்து போனேன். இருவரிடமும் எனக்குச் சாதகமாக இருந்தாக வேண்டும் என்று சண்டை போடக் கூடிய அளவு உரிமை உண்டு - எனினும் அதேபோல அவர்களுக்கும், நாங்கள் சொல்லுகிறபடி கேட்டுத்தானாக வேண்டும் என்று என்னிடம் கூற உரிமை உண்டல்லவா. அதனால் பயந்து போனேன். என் மனநிலையைப் புரிந்து கொண்டாரோ என்னவோ, பி. டி. ராஜன் என்னைப் பார்த்ததும், " "அண்ணாதுரை! என்ன, விஷயமெல்லாம் எப்படி இருக்கிறது? எது எப்படி இருப்பினும், 20-ந் தேதிய காரியத்தில் நான் உங்களோடு இருப்பது உறுதி விட்டு விட்டுப் போய்விடுவேன் என்று மட்டும் எண்ணிக் கொள்ளாதே!” என்றார். வெற்றிப் புன்னகையுடன் நான், சமரசத் தூதுவரைப் பார்த்தேன். அவர் மட்டும் என்ன செய்வார்? அவருக்கே உரித்தானதோர் பரிவான பார்வை காட்டினார், தம்பி! உன்னை மனக்கண்ணால் கண்டேன், உறுதி கொண்டேன்.

அன்புள்ள

26-2-1956