அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


தன்னை வெல்வான் தரணியை வெல்வான்!
1

பாளையங்கோட்டைச் சிறையில் கருணாநிதி
பாதுகாப்புச் சட்டப்படி மாறனும் கைது
கருணாநிதிக்கோ தருமபுரித் தேர்தல் பற்றியே கவலை
விரிவாகிவிட்டது இந்தி எதிர்ப்பு உணர்ச்சி
கருணாநிதிக்குக் கழகம் தரக்கூடிய மகிழ்ச்சிப் பொருள் தருமபுரி வெற்றியே!

தம்பி!

இலைகள் உதிர்ந்த நிலையில் சில மரங்கள்; இது முழுவதும் வெட்டவெளி அல்ல என்பதைக் காட்டுவதற்காக இருந்துகொண்டிருந்தன - மற்றபடி அந்த இடம் இயல்பாகவே வெப்பத்தை அதிகமாக்கிக் காட்டக்கூடிய இடம்.

முப்பது அறைகளுக்குமேல் இருக்கும் - அதிலே ஒரு அறையில் தம்பி கருணாநிதி - மற்ற அறைகள் எல்லாம் பூட்டிக் கிடந்தன. மொத்தத்தில் ஒருவிதமான வெறிச்சோடிய நிலை. ஆள் நடமாட்டம் இல்லை என்பது மட்டும் அல்ல; பேச்சுச் சத்தம் கூடக் காதிலே விழ முடியாத இடம், அத்தனை தனிமை! அவ்வளவு "பாதுகாப்பு!' பக்தவத்சலனாரின் அரசு என்ன இலேசுப்பட்டதா! அவர்தானென்ன சாமான்யமானவரா - இந்தியப் பேரரசின் போலீஸ் அமைச்சர் நந்தாவினாலேயே பாராட்டப்பட்டவர் - கற்பாறைபோல் நின்றார் என்பதாக!

பாதுகாப்புச் சட்டப்படி சிறைபிடித்து வைத்திருப்பதால், மிக்க பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்பது முதலமைச்சரின் திட்டம்போலும். அதனால்தான், பக்கத்திலேயே உள்ள இளம் குற்றவாளிகளுக்கான சிறைக் கட்டடத்தில் பல நூறு பேர் இருக்க, கருணாநிதிக்காகவே ஒரு பெரிய தனிச் சிறையை ஒதுக்கி, அதிலேயும், தனியாக வைத்திருக்கிறார்கள்.

மக்களைப் பெற்றவர்கள் மனம் நொந்து, ஏனோ இந்தக் கொடுமை என்று கண்ணீர் மல்கிடும் நிலையில் இருந்தபடி கேட்பார்கள். கேட்டால் என்ன! பக்தவத்சலனாரா இதற்கெல்லாம் அசைவார்! கற்பாறைபோல நின்றார் என்று சிறப்புப் பட்டம் பெற்றுவிட்டாரே!! தீக்குளித்து இறந்தவர்களை எண்ணி எண்ணி இந்த நாடே பதறுகிறது, கதறுகிறது; நல்லோர் அனைவரும் நெஞ்சு நெக்குருகிப் போயினர்; இந்திக்காரர்களிலே கூடச் சிலர், செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்; ஆனால், முதலமைச்சர் மட்டும்தான், இதயத்தை எடுத்துத் தனியாக வைத்துவிட்ட நிலையினர் போலாகி, துளியும் ஈவு இரக்கம், மனிதத்தன்மையற்றவராகி. தோழர் மதியழகன் மெத்த மன வேதனையுடன் குறிப்பிட்டுள்ளதுபோல, தீக்குளித்த தீரர்களின் பிணங்களின்மீது தூற்றல் சேற்றினை வாரி இறைக்கிறார். எதிர்காலக் காவியமாகப் போகிற எழுச்சிமிக்க தியாகத்தை, இன்று கிடைத்துள்ள இடம் என்றென்றும் தமக்கு என்ற ஏமாளித்தனம் மிகுந்த இறுமாப்பு உணர்ச்சியுடன் எண்ணிக் கொண்டு, இழித்துப் பேசுவதும், பழித்து உரைப்பதும், தமிழ் மண்ணின் மாண்பினையே மங்கிடச் செய்திடும் மாபாதகச் செயல். ஆனால், துணிந்து செய்கிறார்கள் துரைத்தனம் நடாத்துவோர்.

சென்னையிலிருந்து நானூறு கல் தொலைவில், பாளையங் கோட்டையில் தனிமைச் சிறையில் போட்டடைத்துக் கொடுமை செய்வதனைத் தமிழகம் கேட்டுத் தத்தளிக்கிறது; விம்மிடுகின்றனர் தாய்மார்கள்; இப்படி ஒரு ஆட்சியா என்று கேட்டுத் துடிக்கின்றனர் முதியோர்கள்; நம்மை இத்தனை துச்சமாக எண்ணிவிட்டனரே என்றெண்ணி வேதனைப்படுகின்றனர் இளைஞர்கள்; அறம் அறிந்தவர்கள் பதறுகின்றனர்; சட்டம் தெரிந்தவர்கள் இதற்குப் போதுமான நியாயம் இல்லை என்று எடுத்துரைக்கின்றனர்; கழகத் தோழர்கள் கலக்கமடைந்துள்ளனர்; முதலமைச்சர் மட்டும் நிற்கிறார் கற்பாறைபோல!

காலை மணி பத்து இருக்கும், நான் அங்குச் சென்றபோது; உடன் வந்திருந்த நெல்லை நகராட்சி மன்றத் தலைவர் மஜீத், வழக்கறிஞர் இரத்தினவேலு பாண்டியன் மற்றும் பலரையும் தனியே இருக்கச் செய்துவிட்டு, என்னை மட்டும், சிறை அதிகாரிகள் மூவர், கருணாநிதி இருந்த சிறைக்கூடம் அழைத்துச் சென்றனர்.

சந்தித்துப் பேசுவதற்காக ஒரு அறை தயாரிக்கப்பட்டிருந்தது; இரு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

கருணாநிதி அழைத்துவரப்பட்டபோது, முன்பு பல முறை ஒருவரை ஒருவர் சிறையினில் சந்தித்ததுண்டு என்றபோதிலும், இம்முறை தனியானதோர் தவிப்புணர்ச்சி எழுந்து வாட்டியது. அதனை அடக்கிக்கொள்வது கடினம் என்றபோதிலும், கலக்கம் காட்டுவது நமது உள்ளத்தின் உறுதிப்பற்றி மற்றவர்களுக்கு ஐயப்பாடு ஏற்படுத்திவிடுமே என்ற அச்சம் துணை செய்தது; தவிப்புணர்ச்சியைத் தள்ளிவைத்துவிட்டு, அரைமணி நேரத்திற்கு மேல் பேசிக்கொண்டிருந்தோம்.

முன்னாள் நள்ளிரவிலேயே நான் நெல்லை போய்ச் சேர்ந்துவிட்டேன்; விடிந்ததும் என் காதில் விழுந்த முதல் செய்தி, மாறனைப் பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்துவிட்டிருக் கிறார்கள் என்பது. நெல்லைக்குக் கிளம்புவதற்கு முன்பு காஞ்சிபுரத்திலிருந்து தொலைபேசி மூலம் மாறனிடம் பேசினேன் - கைது செய்யப்படக்கூடும் என்ற குறிகள் தென்பட்டிருந்தால் கூட என்னிடம் சொல்லி இருந்திருப்பார். ஆகவே, நெல்லையில் நான் கேள்விப்பட்ட செய்தி என்னைத் தூக்கி வாரிப்போட்டது. அடுக்கடுக்காக வந்துகொண்டிருக்கும் இந்தக் கொடுமைகள், இறுதியில் நமது கழகத்தைப் புடம் போட்டெடுத்த பொன்னாக ஆக்கிடும் என்ற பொது உண்மை தெரியும் - மிக நன்றாகத் தெரியும் என்றபோதிலும் இப்போது நமது கழகத் தோழர்கள் அடக்குமுறைத் தீயிலே தள்ளப்பட்டுக் கொடுமைகளால் தாக்கப்பட்டு வருவதைக் காணும்போது என்னால், பீறிட்டுக் கொண்டு கிளம்பும் வேதனையை அடக்கிக்கொள்ள முடியவில்லை. உள்ளம் மேலும் உறுதிப்பட வேண்டும் என்று தோன்றுகிறது.

கொடுமைகள் இழைக்கப்படும்போது, அநீதி தலை விரித்தாடும்போது, அக்கிரமம் தன் அகன்ற வாயினைத் திறந்து அகோரக் கூச்சலிடும்போது, எல்லாம் இறுதியில் நன்மைக்கே என்ற தத்துவத்தைத் துணைக்கழைத்துச் சமாதானம் தேடிக்கொள்ள முடியவில்லை. காரணம், நாம், ஒரு அரசியல் கட்சியின் உறுப்பினர்கள் என்ற முறையிலே மட்டும் இருந்து வருபவர்கள் அல்லர்; பாசத்தால் பிணைக்கப்பட்ட ஒரு குடும்பமாகி விட்டிருக்கிறோம். அதனால் நம்மில் சிலருக்கு இழைக்கப்படும் கொடுமை நம் எல்லோருடைய உள்ளத்தையும் வேதனையில் ஆழ்த்திவிடுகிறது.

ஆனால், நாம் இத்தகைய கொடுமைகளைத் தாங்கிக் கொண்டே தீரவேண்டும். உள்ள நிலை அது. இன்று இங்குள்ள காங்கிரஸ் அரசு, நாட்டிலே ஏற்பட்டுள்ள நிலையைக் காரணமாக்கிக்கொண்டு, கழகத்தை அழித்தொழிக்கத் திட்டமிட்டு விட்டிருக்கிறது. சுட்டுத் தள்ளவே கூசாத ஒரு ஆட்சி, சிறையில் தள்ளவும் வழக்குகளைத் தொடுக்கவுமா கூசும்! நல்லாட்சிக்குத் தேவையான எல்லா இலக்கணத்தையும் இழந்துவிட்ட நிலையில், கொடுமைகளன்றி வேறென்ன காண முடியும்? காட்டுப் பன்றியிடமிருந்து உறுமலையும், ஓநாயிடம் இரத்த வெறியையும் தவிர, வேறெதைக் காண முடியும்? ஆட்சி தவறான முறையை மேற்கொள்ளும்போது, நாட்டுக்கும் காட்டுக்கும் உள்ள வேறுபாடு மறைந்துவிடுகிறது.

கவலை கப்பிய நிலையில் கருணாநிதியுடன் பல விஷயங்கள் குறித்துப் பேசிக்கொண்டிருந்தேன். கருணாநிதியோ, இடையிடையே, தருமபுரித் தேர்தல் பற்றியே பேசிடக் கண்டேன்; உடல் நலத்தைக் கவனித்துக்கொள், ஏதேனும் உடல் நலக் குறைவு இருப்பதாகத் தோன்றினாலும் உடனே மருத்துவர் தேவை என்பதைத் தெரியப்படுத்து என்று நான் கூறிக்கொண்டிருப்பேன், இடைமறித்து கருணாநிதி, தருமபுரித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பணத்தை அள்ளி வீசுவார்களே அண்ணா! அங்கு நாம் வெற்றிபெற வெகு பாடுபடவேண்டுமே! என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன? யாரார் தருமபுரி சென்று வந்தனர்? நீங்கள் எப்போது செல்லப் போகிறீர்கள்? என்ற இவைபற்றிக் கூறுவார், எனக்குக் கவலையைப் பிய்த்துக்கொண்டு புன்னகை கிளம்பும்.

சிறை மிகச் சக்தி வாய்ந்தது என்று ஆணவம் பிடித்த நிலையில் உள்ள எந்தச் சர்க்காரும் எண்ணிக்கொள்ளுகிறது. சிறையிலே போட்டு அடைத்ததும், வேதனை வென்றுவிடும், உணர்ச்சிகள் மங்கிவிடும், உறுதி தளர்ந்துவிடும் என்ற நினைப்பு; நிலைகெடப்போகும் கட்டத்தை நோக்கி நடைபோடும் எந்தச் சர்க்காருக்கும். சிறை அவ்விதமானதல்ல; அந்த இடம், உறுதியைக் கெட்டிப்படுத்தி வைக்கும் உலைக்கூடம்; சிந்தித்துச் சிந்தித்துத் தமது சிந்தனைச் செல்வத்தைச் செம்மையாக்கிக்கொள்ள வைக்கும் பயிற்சிக்கூடம், இதனை அறிய முடிவதில்லை, அடக்குமுறைச் சுவையால் நினைவு இழந்துவிடும் அரசுகளால். நெல்லையில் சிறைப்பட்டிருக்கும் கருணாநிதியின் நினைவு முழுவதும் எதன்மீது என்பதனை அறிந்துகொள்வாரானால், முதலமைச்சர் தமது முறை தவறு என்பதனை உணர்ந்து கொள்வார். மக்களின் நலனுக்காகக் கழகம்; கழகத்தின் சார்பிலே செயலாற்றினோம்; அந்தச் செயலைத் தவறானது என்று திரித்துக் கூறிச் சர்க்கார் நம்மைக் கொடுமைப்படுத்துகிறது; நமக்கு இழைக்கப்படும் கொடுமையினைக் கண்டும் கேட்டும் இலட்சக் கணக்கானவர்கள் இதயம் துடிக்கிறது; அந்தத் துடிப்பிலிருந்து கிளம்பும் மிகப் பெரிய வலிவு எத்தனை பெரிய ஆணவ அரசினையும் வீழ்த்தவல்லது; அந்த வலிவினை நாடு பெற நாம் நமது வலிவிலே ஒரு பகுதியைச் சிறை வாழ்க்கை காரணமாக இழப்பது தேவை, முறை, அறம் என்ற எண்ணம், சிறையில் உள்ளவர்களுக்குச் செந்தேன். அந்தச் சுவையில் திளைத்திருக்கக் கண்டேன், உடல் இளைத்தாலும் உள்ளம் களைத்திடாது என்ற நிலையில் உள்ள கருணாநிதியிடம். ஒரே ஒரு கவலைதான் இருக்கிறது; தருமபுரி பற்றி! ஆனால், அதிலேயும் கவலையை விரட்டியடிக்கக்கூடிய ஒரு நம்பிக்கையும் இருக்கிறது; எப்படியும் கழகம், தருமபுரித் தேர்தலில் வெற்றி பெற்றுவிடும் என்ற நம்பிக்கை கருணாநிதியைச் சிறையில் போட்டடைத்து வைத்திருக்கிறதே என்பதனை எண்ணி ஏக்கம் கொண்டுள்ளவர்கள், தங்கள் வல்லமையினை, உழைப்பினை, வசதியினை, நேரத்தை, நினைப்பை, தருமபுரிக்காக என்று அனுப்பிக் கொடுத்திடின், வெற்றி பற்றிக் கவலை ஏது! வெற்றி நிச்சயம்! அந்தச் செயலினைச் செம்மையாகச் செய்வார்களா என்ற ஐயப்பாடு அல்ல, கருணாநிதிக்கு; அந்தச் செயலிலே தனது பங்கினைச் செலுத்த முடியாதபடி பக்தவத்சலனார் செய்துவிட்டாரே என்ற கவலைதான். அந்தக் கவலை வேண்டாம், தோழர்கள் திறமையாக, சுறுசுறுப்பாக, மெத்த ஆர்வத்துடன் தேர்தல் காரியத்தைக் கவனித்துக்கொள்கிறார்கள் என்று உறுதி அளித்தேன்.

அதிகாரிகள் கைக்கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டனர்; அதன் பொருள் விளங்கிற்று; நான் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டேன்; நான் வெளிப்புற வாயிற்படி நோக்கி நடந்தேன்; தம்பி தனக்கென அரசு தந்துள்ள அறைநோக்கிச் செல்வதைப் பார்த்தபடி.

சென்றேன், கண்டேன்; செய்தியை உங்களிடம் கூறினேன்; ஆனால், இதுதானா நாம் ஒருவருக்கொருவர் தந்துகொள்ள வேண்டிய செய்தி? எவ்வளவு முறையாகச் செயலாற்றி வருகிறோம், கழகம் அமைத்து; நமக்கு இத்தகைய கொடுமை களைக் காங்கிரஸ் அரசு செய்தபடி இருப்பதா! நாடு எத்தனை காலத்துக்குத் தாங்கிக்கொள்ளப்போகிறது இவ்விதமான கொடுமைகளை? எத்தனை எத்தனை கொடுமைகள் நடந்து விட்டன இன்பத் தமிழகத்தில். மகனை இழந்த மாதாக்கள் கதறுகின்றனரே! எங்கெங்குச் சென்றாலும், நடைபெற்ற துப்பாக்கிச் சூடுபற்றியும், துடிதுடித்து மக்கள் செத்ததுபற்றியும், ஊரெல்லாம் சுடுகாடுகள் போலாகிக் கிடப்பதுபற்றியும், நண்பர்கள் கூறிடக் கேட்டுக்கேட்டு வேதனை மேலும் வளருகிறது. எத்தனை எத்தனை வழக்குகள்! எத்தனை விதமான கொடுமைகள்! நள்ளிரவிலே கைதுகள்! பிடிபட்டவர்கள் நையப்புடைக்கப்படும் இழிதன்மை! ஏன் நமக்கு இழைக்கப் படுகின்றன இவ்வளவு கொடுமைகள்? நிகழ்ச்சிகள் நடைபெற்று நாட்கள் பலப் பல ஓடியபின், ஒரு திங்களுக்குப் பிறகும் கழகத் தோழர்கள் வேட்டையாடப் படுகின்றனர்; வழக்குகள் தொடுக்கப்படுகின்றன. நெல்லைக்குச் சென்று அங்கிருந்து மாயவரம், பிறகு ஆத்தூர், ராசிபுரம், பிறகு சேலம், தருமபுரி ஆகிய இடங்கள் சென்று வந்தேன். வழிநெடுக இதே செய்தி, ஊரெங்கும் இதே கொடுமை. சித்திரவதையைவிட, ஒரே அடியாகக் கொன்றுபோட்டுவிடுவதுமேல் என்பார்கள்; அதுபோல இப்படிக் கழகத் தோழர்களைக் கண்டகண்ட இடங்களில் விதவிதமான கொடுமைகளுக்கு ஆளாக்குவதைவிட, ஒரே அடியாகக் கழகத்தைத் தடைசெய்துவிடலாமே, ஏன் இத்தனை பழிவாங்கும் உணர்ச்சி - வெறித்தனம், புரிய வில்லையே, என்று கழக நண்பர்கள் கேட்கின்றனர். காரணம் இருக்கிறது காட்டு முறையை நாட்டினை ஆள்வோர் கட்டவிழ்த்து விட்டிருப்பதற்கு.

காங்கிரஸ் ஆட்சிக்குப் பலத்த எதிர்ப்பு மூண்டு விட்டிருக்கிறது, சமூகத்தின் பல முனைகளிலுமிருந்து. இங்கேயே உள்ள நிலை என்ன? முன்பு கழகம் கிளர்ச்சி நடத்தியபோது, காங்கிரஸ் அமைச்சர்கள் கெம்பீரக் குரலில் முழக்கிவந்தனர், கழகத்தின் கிளர்ச்சிக்கு மக்கள் ஆதரவு இல்லை; மாணவர்கள், வழக்கறிஞர்கள், இதழ் நடாத்துவோர், அறிவாலயம் நடத்துவோர் ஆகியோரின் ஆதரவு இல்லை; ஒரு சமூகத்தின் மதிப்புமிக்க முனைகள் இவை; இந்த முனைகளில் கழகத்தின் பேச்சுக்கோ செயலுக்கோ துளியும் ஆதரவு இல்லை; எனவே, கழகத்தின் கிளர்ச்சிக்கு அரசினர் மதிப்பளிக்கத் தேவையில்லை; அது தன்னாலே மங்கி மடிந்துவிடும் என்று மார்தட்டி வந்தனர். இப்போது? எந்த இந்தி எதிர்ப்பு உணர்ச்சியினைக் கழகம் பல ஆண்டுகளாக நாட்டிலே எடுத்துக்காட்டிக்கொண்டு வந்ததோ, எந்த இந்தி எதிர்ப்புக்காகக் கழகம் அறநெறிக் கிளர்ச்சியில் ஈடுபட்டு இன்னல்களையும் இழப்புகளையும் ஏற்றுக்கொண்டு வந்ததோ, அந்த இந்தி எதிர்ப்பு உணர்ச்சி மாணவர் உலகினில் பொங்கிடக் கண்டனர் ஆட்சியினர். வழக்கறிஞர்கள் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சிக்கு ஆதரவு தந்திடுவது கண்டனர்; இதழ்கள், இனியும் ஏதும் நடைபெறாததுபோல் இருப்பது கூடாது என்ற உணர்வுடன் இந்தி எதிர்ப்புணர்ச்சியின் வேகத்தையும் வடிவத்தையும் அரசினர் அறிந்துகொள்ளச் செய்யும் அரும்பணியினை ஆர்வத்துடனும் திறமையுடனும் நிறைவேற்றி வருவதனைக் காண்கின்றனர்; காண்பதனால் கிளர்ச்சிக்கு மதிப்பளிக்க முடியாது என்று கூறிவந்த போக்கு சுக்கல்நூறாகி விட்டது. மாணவர்களுமா! ஆசிரியர்களுமா! வழக்கறிஞர்களுமா! இதழ் நடாத்துவோருமா!! என்று கேட்டுக்கேட்டு அரசினர் அதிர்ச்சி அடைந்துவிட்டனர். இப்போது அரசினருக்கு ஆதரவாளர் எவர்? என்பதே புரியவில்லை. அவ்வளவு விரிவாகி விட்டது இந்தி எதிர்ப்புணர்ச்சி.

காங்கிரஸ் கட்சியிலேயே ஒரு பகுதியினர், இந்தி எதிர்ப்புணர்ச்சி கொண்டுள்ளது மட்டுமல்ல, அதனை வெளியே காட்டிக்கொள்வதிலே தயக்கம் காட்டவில்லை, ஆர்வத்துடன் பேசுகின்றனர்.