அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


தீ மிதித் திருவிழா!
1

பிரிவினை கேட்போர்க்குத் தேர்தலில் நிற்க இடமில்லையாம்!
கோலோச்சிகளின் குறுக்கு வழிச் சட்டம்!
உதய சூரியன் நுழைவதைத் தடுத்திடச் சூழ்ச்சி!
குட்டு உடைந்தது! திட்டம் அழிந்தது! ஜனநாயகம் பிழைத்தது!

தம்பி!

அறிவூர் அறிவானந்தர் சொன்ன கதை இது.

இதிலே, மெய்யம்மை கருத்தப்பன், பவுனாம்பாள் வலை விரித்தான், கோட்டையூரான் கோலெடுத்தான், வாக்களிப்பார் தெளிவப்பன், நோட்டூரான், இருட்டூரான் என்போர் உளர்.

உதய சூரியன் கோட்டையூர் நுழைவதைத் தடுத்திடச் சூழ்ச்சி நடத்தப்படுவதும், அது முறியடிக்கப்படுவதும் கதையில் விளக்கப்பட்டிருக்கிறது.

மெய்யம்மையிடம் பவுனாம்பாள் தூபம் போட - வருகிற கட்டத்துடன் கதை துவங்குகிறது. மெய்யம்மை இல்லம் போகத்தான் போறேன், போகத்தான் போறேன்னு சொல்லிக்கொண்டே இருந்தாயே பொழுதுக்கும்; தலையே போறதானாலும் போகாம இருக்கப் போறதில்லே. தீ மிதிக்கிற திருவிழாவுக்குன்னு; போகல்லியா, அமர்க்களமா நடக்குதாமே ஆட்சியூர் தடியெடுத்தான் கோயி-லே தீ மிதிக்கிற திருவிழா.

போகணும்னு கொள்ளை ஆசைதான். தீ மிதிக்கிற திருவிழாவோட வேடிக்கை பார்க்க மட்டுமல்ல, தீ மிதிக்கிறதுக்கே ஆசைதான். . .

தீ மிதிக்கிறதுக்கா? அடீ ஆத்தே! கால் புண்ணாயிடுமே கண்டவங்க தீ மிதிச்சா. . .!

மிதிக்கிறவங்க காலெல்லாம் என்ன தீஞ்சா போகுது?. . .

அவங்க வேண்டுதலைச் செய்துகொண்டவங்க - விரதம் இருக்கிறவங்க - அவங்களைத் தீ ஒண்ணும் செய்துடாதாம்.

எனக்கு மட்டும் என்னவாம்? நானுந்தான், தீ மிதிக்கிற துன்னு தீர்மானிச்சி வைச்சிருக்கறேன்.

பயம் இல்லையா, உனக்கு?. . . . நெஜமாச் சொல்லு, தீயிலே இறங்கத் துணிவு இருக்குதா?

இருக்கறதாலேதான், சொல்றேன் தீ மிதிச்சே காட்டப் போறேன்னு. . . .

தீர்மானம் செய்துகொண்டிருந்தாச் செய்யத்தான் வேணும்; செய்வதாச் சொல்லிவிட்டுச் செய்யாமப் போனாத்தான், ஏகப்பட்ட பாபமாம், எல்லம்மன் கோயில் பூசாரி ஏழெட்டு நாளைக்கு முன்னாலே சொன்னாரு. . . .

காலையிலே சொன்னாரா, மாலையிலே சொன்னாரா அந்தப் பேச்சு?

அதென்ன என்னமோ ஒரு தினுசாக் கேட்கறே, காலை வேளையிலா, மாலையிலான்னு. . . . ?

காரணத்தோடுதான் கேட்கறேன். அவரோட பேச்சு பொழுதுவிடிஞ்சாப் போச்சி! புரியல்லையா! அட அவன் மொடாக் குடியன் - போதையிலே பேசினானா, நிதானத்தோட இருந்து பேசினானான்னுதான் கேட்கறேன்.

நீ ஒரு குறும்பு! பூஜாரி, நல்ல கட்டுகட்டா விபூதி பூசிக்கிட்டு, குங்குமம் அப்பிக்கிட்டு, சுத்தமா இருக்கறப்போதான் பேசினாரு. நீ சொல்ற மாதிரியிலே இல்லே. அது கிடக்குது; பொறப்படுறதுன்னா பொழுதோட கிளம்பு.

அதைப்பத்திதான் யோசிக்கறேன். . . .

அஞ்சாறு கல் தொலைவு நடக்க வேணுமே, கால் வலிக்குமேன்னு கவலை இருக்கும். . . .

அந்தக் கவலை கிடையாது - நான் என்ன, மேனா மினுக்கி வாழ்வு நடத்திக்கிட்டா இருக்கறேன், நடந்தா கால் கடுக்க? காடுமேடு சுத்தி உரம் ஏறினதுதான் காலு. . . . ஆனால் . . . .

போறதுக்குள்ளே இருட்டாயிடுமே, அதை எண்ணிப் பயப்படறயா. . . .

அட, அந்தப் பயம் எல்லாம் இல்லை போ! நான் என்ன கழுத்திலே தொங்கத் தொங்கப் போட்டுக்கிட்டா இருக்கறேன், தங்கச் செயினு. உள்ளது மூக்குத்தி. அதுவும் பாட்டி போட்டுக்கிட்டு இருந்தது - பழசு - முழுசா பத்து ரூபாகூடப் போவாது.

வேறே என்ன காரணம் தயக்கத்துக்கு. . .?

அதென்னடி அப்படிக் கேட்டுவிட்டே. . . நான் என்ன ஒண்டிக்கட்டையா, நினைச்ச உடனே பொறப்பட. வீடுன்னு ஒண்ணு இல்லையா, அதிலே தட்டு முட்டுச் சாமான்னு ஏதோ கொஞ்சம் இல்லையா? கொழந்தை இருக்குது, தத்தித் தத்தி நடக்கற வயசு. அதை என்னா செய்யறது. . .

கொழந்தைக்கு என்னா. . . வீட்டிலே இருக்குது; வயத்துக்குப் போதுமானது போட்டுவிட்டா. . . பங்காளி வீட்டிலே பார்த்துக் கொள்ள மாட்டாங்களா. . .?

நல்லாச் சொன்னியே ஒரு பேச்சு; நண்டு சுட்டு நரியைக் காவல் வைக்கற மாதிரி, என் கொழந்தைக்குக் காவலு, என்னோட பங்காளிகளா? அது போதுமே தலைக்குத் தீம்பு.

உன்னோட கொழந்தையை நீ, தீ மிதிக்கிற திருவிழாவுக்குப் போய்த் திரும்பற வரைக்கும், பார்த்துக்கொள்ளவா மாட்டாங்க உன்னோட பங்காளிங்க. . .?

விவரம் தெரியாமப் பேசறே. அந்தப் பங்காளிங்க - என் கொழந்தை பொறந்ததிலே இருந்து, சபிச்சுக் கொட்டிக்கிட்டு இருப்பவங்களாச்சே - உனக்குத் தெரியாதா? விளக்கேத்திக் கும்பிட்டாங்க, கொழந்தை மாந்தத்திலே போயிடாதா, மாரிக்குப் ப-யாயிடாதான்னு எல்லாம். . .

செச்சே! கொழந்தைன்னா கொடியவங்களெல்லாம்கூடக் கொண்டாடுவாங்கன்னு பெரியவங்க சொல்லுவாங்களே. . .

இது, எல்லாக் கொழந்தையும்போல இல்லே, அதைத் தெரிஞ்சுக்கோ முதலிலே. இது அரசாளப் பிறந்தது, ஆமாம். பூவாகிக் காயாகிக் கனியாக வேணும். அதைப் பாதுகாத்து, வளரச் செய்தா, நாங்க இழந்துவிட்ட செல்வத்தை மீட்டுக் கொண்டு வந்து எங்களோட, குலம் விளங்க வழி செய்து வைக்கும், அப்பேர்ப்பட்ட கொழந்தை இது.

இருக்கட்டும். அதனாலே என்ன? பங்காளிங்க என்ன அதைக் கடிச்சித் தின்னுப் போடுவாங்களா? கையைக் காலை ஒடிச்சிப் போடுவாங்களா. . . .

கால் அரைக்கு வித்துப் போடுவாங்க, வெளியூரானுக்கு காணாமப் போயிட்டுது, தேடாத இடமில்லே, சுத்தாத தெருவு இல்லே; கொழந்தையைக் காணோம்னு நீலிக் கண்ணீர் வடிச்சி கதையை முடிச்சிடுவாங்க.

பைத்தியம் உனக்கு; கொழந்தையைக் கொடுமை செய்ய யாருக்கும் மனசு வராது. . .

அப்படியா சொல்றே?. . . . நெஜமா, நம்பிக்கையோடவா சொல்றே. . . .

சத்யப் பிரமாணமாச் சொல்றேன், கொழந்தைக்கு ஒரு கெடுதியும் வராது. நான் பார்த்துக்கொள்றேன்; நீ பயமில்லாமல் போய் வா.

உன்னோட தைரியத்திலேதான், போக முடிவு செய்யறேன். கொழந்தைக்கு ஒரு கெடுதலும் வராதபடி பார்த்துக்கொள்ளு. தீ மிதிக்கிற திருவிழா முடிஞ்சி, நான் வீடு திரும்ப, முடிய மணி நாலு ஆகுதோ அஞ்சு ஆகுதோ தெரியாது. . .

அப்ப, உன்னோட வீட்டுக்காரரும் அண்ணாவும் வந்ததும் கிளம்பப் போறயா. . .

ஆமாம்; அவரும் வருவாரல்லோ. . .

ஆமாம், குடும்பத்தோட போனாத்தானே, பூஜை பலன் கொடுக்கும். . .

நீ மட்டும் என்ன, நாங்களும்தான் வரப் போறோம்னு அவங்களும் சொல்லிக்கிட்டுத்தான் இருக்கறாங்க. நான் மட்டும் பொறப்பட்டா, போய்விட்டுவான்னா சொல்வாங்க

எல்லோருந்தான் கிளம்புவாங்க. . . . நான், நீ பொறப்படறப்போ வந்து பார்க்கறேன்; வழி அனுப்பி வைக்கறேன். உனக்குத்தான் தெரியுமே, நான் தீ மிதிக்கிற திருவிழாவுக்குப் போற பழக்கத்தை நிறுத்திப் போட்டது.

பவுனாம்பாள் மெய்யம்மையுடன் பேசிவிட்டுச் சென்றான பிறகு, மெய்யம்மையின் கணவன் கருத்தப்பன் வீடு வர, நடந்த உரையாடலை மனைவி கூறுகிறாள்.

கருத்தப்பன் எதனையும் ஆராய்ந்து பார்த்திடும் இயல்பினன்.

தீ மிதிக்கும் திருவிழாவுக்கப் போக வேண்டும் என்று ஏன் பவுனாம்பாள் தூண்டிவிட முனைந்தாள் என்பது குறித்துச் சிந்திக்கலானான். மெய்யம்மையுடன் அதுபற்றிப் பேசிடலானான்.

பவுனாம்பாளா சொன்னாங்கறே, தீ மிதிக்கிற திருவிழா வுக்குப் போய்வரச் சொல்லி. . . . .

ஆமா, அவதான், சொன்னா, தீ மிதிக்கிற திருவிழா வரட்டும், போகத்தான் போறேன், போகத்தான் போறேன்னு பேசிக்கிட்டே இருக்கிறாயே, ஆட்சியூர் தடி எடுத்தான் கோயில் திருவிழாவுக்குப் போகலியான்னு.

அட, இது அதிசயமா இருக்குது, புள்ளே! பவுனாம்பா வாயாலே, தீ மிதிக்கிற திருவிழா பத்திப் பெருமையாச் சொல்றது. . . . பவுனாம்பாவும் வருதா உன்கூட. . .

இல்லே, இல்லே, அதெப்படி வருவா, அவதான், தீ மிதிக்கிற வழக்கத்தை விட்டுவிட்டதாச் சொல்லியாச்சே. . .

அதைத்தான் சொல்றேன்; தீ மிதிக்கிறது பைத்தியக்காரத் தனம், அதாலே ஒரு பலனும் இல்லேன்னு ஊர் மூச்சூடும் பேசிக்கிட்டு இருக்கிற பவுனாம்பா, உன்னை ஏன் தூண்ட வேணும், தீ மிதிக்கிற திருவிழாவுக்குப் போகச் சொல்லி

அவபேர்லே குத்தம் கண்டு பிடிக்கறதா நம்ம வேலை, நாம சொல்லிக்கொண்டு இருந்தோமில்லே, தீ மிதிக்கிற திருவிழா வந்தா போகப்போறோம்னு. . .

நாம சொன்னது நெஜந்தான் மெய்யம்மே! அதை நான் மறுக்கல்லே. நம்மை, தீ மிதிக்கிற திருவிழாவுக்குப் போகச் சொல்றதிலே என்ன அக்கறை, ஏன் அந்த அக்கறை தீ மிதிக்கிறதை வெறுக்கிற பவுனாம்பாவுக்கு? அதுதானே புதிரா இருக்குது. நாம, வீட்டைவிட்டு, வெளியே போகணும் என்கிறதிலே அல்லவா பவுனாம்பாவுக்கு அக்கறை ஏற்பட்டிருக்குதுன்னு தோணுது.

உங்களுக்குத் தோணும், எதற்கும் ஒன்பதனாயிரம் சந்தேகம்.

***

மகிழ்ச்சியுடன் வீடு திரும்பிய பவுனாம்பாளை அவள் கணவன், வலை விரிப்பான் கண்டு மகிழ்கிறான்.

மெய்யம்மையிடம் பக்குவமாகப் பேசிக் காரியத்தைக் கச்சிதமாக முடிக்கிறாளோ இல்லையோ என்ற கவலையுடன் இருந்து வந்த வலை விரிப்பான் பவுனாம்பாள் வெற்றிக் களை முகத்தில் ஆட வந்தது கண்டு நடந்ததைக் கூறிடக் கேட்டு பேசுகிறான்.

சந்தேகப்படவே இல்லையா, மெய்யம்மா, உன் பேச்சைக் கேட்டு.

சந்தேகப்படுகிறது போலவா நான் பேசுவேன்? எனக்கு என்ன பக்குவம் தெரியாதா, பழக்கம் கிடையாதா?

பவுனாம்பா! நீயோ இதுவரைக்கும், தீ மிதிக்கிற திருவிழாவுக்குப் போறது தப்புன்னு பேசி வந்திருக்கே. . . .

ஆமாம். இப்பக்கூடத்தான், என்னோட எண்ணம் அது. நான் போகப் போறது இல்லே, தீ மிதிக்க. . .

தீ மிதிக்கப் போகாதவ, எங்களை மட்டும் போகச் சொல்றயே, ஏன்னு மெய்யம்மை கேட்கலியா?

கேட்கவிடுவேனா? தீ மிதிக்கிற திருவிழாவுக்குப் போகப் பயமான்னு கேட்டு ரோஷத்தை மூட்டிவிட்டேன். பாரேன், பிறகு மெய்யம்மை பட்ட பாட்டை! போகத்தான் போறேன், ஆனா கொழந்தை ஒண்ணு இருக்கேன்னு இழுத்தா. . .

மெய்யம்மைக்கு எப்பவும் அந்தக் கொழந்தை கவனம் இருக்குமே தெரியுமே

ரொம்பக் கவலைப்பட்டா கொழந்தைக்கு, பங்காளிங் களாலே, எதாச்சும் கெடுதல் வந்துவிட்டா என்ன செய்யறதுன்னு பொலம்பினா.

பொலம்பி போகப் போறதில்லே தீ மிதிக்கன்னு சொல்லி விட்டாளா? . . .

சொல்லவிடுவேனா? கொழந்தையைப்பத்திப் பயப்பட வேண்டாம்; பார்த்துக்கொள்ள நான் இல்லையான்னு சொன்னேன். ஒப்புக்கொண்டா போக. . .

சாமர்த்தியக்காரி பவுனாம்பா நீ, மெய்யம்மை குடும்பத் தோடத்தானே கிளம்புவா. . .

ஆமாம்; இவமட்டும் போனா, மத்ததுக சும்மா இருக்குமா . . . கொழந்தை மட்டும்தான் வீட்டிலே. . . கொண்டாட்டந்தான் உங்க பாடு. . .

நம்ம பாடுன்னு சொல்லு - பிரித்து வைத்துப் பேசாதே. . .

எனக்கும் எதாச்சும் தராமலா போவிங்க கிடைக்கறதிலே . . . கொழந்தையோட பேச்சை எடுத்தா, எவ்வளவு உருகிப் போறா தெரியுமா மெய்யம்மை! அடே அப்பா! அது அரசாளப் பிறந்ததாம்!!

அரசு ஆளும், ஆளும்டி பவுனாம்பா, ஆளும், இவ கிளம்பட்டும் தீ மிதிக்க; அந்தக் கோட்டான் என்ன கதி ஆகுது பார்! அரசு ஆளப்போகுதாமா அவ கொழந்தை. . . கிடக்கட்டும். கைக் கொழந்தைக்கு யாருதான் காவலு?

குடும்பத்தோடு கிளம்புறா மெய்யம்மை. கொழந்தைக்கு காவல் இருக்க, பொது ஊரான்தான் கிடைப்பான்.

பொது ஊரானா? அவனுக்குத் தூபம் போட்டு விடலாமே, நாம ஒண்ணு சேர்ந்தா. . .

வழி இருக்குது அதுக்கு. நான் முன்னமேயே யோசனை செய்து வைத்திருக்கிறேன். . .

பலே பலே! என்ன யோசனை? சொல்லு, சொல்லு. . .

பச்சைக் கொழந்தை, பாவம்! அதைத் தனியா விட்டு விட்டு, இவங்களோட போக்கைப் பாரு, தீ மிதிக்கக் கிளம்பி விட்டாங்க; இது முறையா சொல்லு, இது நியாயமா சொல்லு! அப்படி இப்படின்னு பேசினாப் போதும் பொதூரான் உருகிக் போய் விடுவான். தீ மிதிக்கப் போனவங்களை வெறுத்துவிடுவான். . .

கொழந்தைக்குக் காவல் இருக்கமாட்டானா. . .

நாம சொல்கிறபடி அவனைக் கேட்கச் செய்யலாம். பாவம், கொழந்தையை உன்னாலே பாதுகாக்க முடியாது. கொடு இப்படி, நான் பார்த்துக்கொள்றேன்னு சொன்னா, கொழந்தையைக் கொடுத்துவிடுவான். . . . .

கழுத்திலே இருக்கிறது எனக்கு, இப்பவே சொல்லிவிட்டேன்.

காலிலே உள்ளதும் கையிலே உள்ளதும் எனக்கு சரிதானே. . .

மெதுவாகப் பேசு, யார் காதிலேயாவது விழுந்துவிடப் போகுது. மெய்யம்மை குடும்பத்தோட கிளம்பறமட்டும் வெளியே மூச்சுவிடாதே விவரத்தை; காரியம் கெட்டுவிடப் போகுது.

***

மெய்யம்மையிடம் பேசிவிட்டு, வெளியே வேறு வேலையாகச் சென்ற கருத்தப்பன் சாவடிப் பக்கத்திலே கோட்டையூரானும் கோலெடுத்தானும் பேசிக்கொண் டிருக்கக் காண்கின்றான்.

ஒரு புறம் ஒதுங்கி நின்று அவர்கள் பேசுவதைக் கேட்கிறான்.

தீ மிதிக்கிறதுக்குத் துணிவு இல்லாத பயன்னு இனிப் பேச முடியாது அண்ணே! கருத்தப்பன் குடும்பத்தோட கிளம்பப் போறான் தீ என்னாதான் செய்துவிடும் பார்க்கலாம்னு கூறிக்கிட்டு. . .

பலே! பலே! அதைத்தானே நான் எதிர்பார்த்தபடி இருந்தேன்! இந்தப்பய தீ மிதிக்கவேண்டியதுதான், தீய்ந்து போகும் இவனோட திட்டம். . . தெரியுமா. . . .?

கோட்டையூர் அண்ணே! விவரமாகச் சொல்லுங்க.

கோலெடுத்தான்! உனக்குத் தெரியுமேல்லோ, கருத்தப்ப னோட திட்டம். . . . . நம்ம கோட்டையூர்லே அவனுடைய கொழந்தை இருக்கே, உதயசூரியன், அதுக்கு இடம் பிடிக்கிற எண்ணம்.