அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


தீ மிதித் திருவிழா!
2

ஆமாம்! உதயசூரியனுக்குக் கோட்டையூர்லே இடம் கிடைக்கும்னுதான் சொல்றான். . . .

சொல்றானேல்லோ! இப்ப, இவன் தீ மிதிக்கக் கிளம்பப் போறானேல்லோ, அதோட தீர்ந்துபோய்விடும் கோட்டையூர்லே இடம் பிடிக்கிற திட்டம். . . . .

ஏன்! தீ மிதிக்கிறதிலே ஆசாமி தொலைஞ்சு போயிடுவான். அப்படி நினைக்கறியா?

அது அல்ல அப்பா! உனக்கு ஒரு இரகசியம் தெரியாது. நம்ம பெரியவரு இல்லே, தொலைதூரத்தான், அவருடைய பேச்சை மீறிக் கோட்டையூராகட்டும் வேட்டையூராகட்டும், நடக்க முடியுமா?

முடியாது! ராட்டையூர் ராஜா இல்லையா அவரு. அதனாலே!

அந்த தொலைதூரத்தான் என்ன உத்தரவு போட்டிருக்கிறாரு தெரியுமா? தீ மிதித்தவன், கோட்டையூர்ப் பாதையிலே நடக்கக்கூடாதுன்னு உத்தரவு.

தீ மிதிக்கப்போனா, கோட்டையூர் போகக்கூடாதா?

கோட்டையூர் பாதையிலேகூட நடக்கக்கூடாது. அதுதான் புது உத்தரவு.

அப்படியானா, தீ மிதிச்சிவிட்டு, கருத்தப்பன் வீடு திரும்பியதும், கோட்டையூரை அடியோடு மறந்துவிடணும். . .

ஆமாம், ஆமாம்! உதயசூரியன் கோட்டையூர் போய் அரசாளப் போகிறான்னு பேசிக்கொள்வானேல்லோ கருத்தப்பன், அந்த எண்ணத்திலே மண் விழுந்தது. . .

ஊரார் பாவம், உதயசூரியனோட இவன் கோட்டையூர் போகப்போறான்னு பேசிக்கொள்கிறாங்க. . .

ஆமாம். . . . . தீ மிதித்தா கோட்டையூர் பாதையிலேயே நடக்கக்கூடாதே. புது உத்தரவு!

பாதையிலேயே நடக்கக்கூடாதுன்னா, கோட்டையூர் போய்க் கொலுவிருக்கிறது எப்படி. . . . .?

நடக்காதுங்கறேன். பவுனாம்பாளும் அவளொட புருஷன் வலைவிரித்தானும் திட்டமிட்டு, மெய்யம்மையைத் தூண்டி விட்டாச்சி.

தீ மிதிக்கக் கிளம்பறதுக்கா? ஒத்துக்கிட்டாங்களா. . . .?

ஒத்துக்கொள்ளாம இருப்பாங்களா! பவுனாம்பாதான் பச்சைச் சிரிப்பிலே கெட்டிக்காரியாச்சே! அடி ஆத்தே! நெருப்புன்னா பயமா உனக்கும் உங்க வீட்டுக்காரருக்கும்னு பேசி, மெய்யம்மைக்கு ரோஷமூட்டிவிட்டிருக்கறா. . . .

சரியான ஆசாமிதான்! ஏன் தூண்டுறான்னு யோசிக்க ரோஷம் இடம் கொடுக்காது. . . .

ஆமாம். . . பவுனாம்பாளுக்கு இருக்கிற எண்ணம் தீ மிதிக்க மெய்யம்மையோட குடும்பம் போய்விட்டா, குழந்தை இருக்குமேல்லோ வீட்டிலே, அதோட கழுத்திலே கையிலே உள்ளதைப் பார்த்துக்கொள்ளலாம் என்பதுதான்.

அடடே! அவளோட திட்டம் அதுவா! ஆக, தீ மிதிக்கப் போனா, குழந்தை கோட்டையூர் போக முடியாது. . . .

ஆமாம். . . ஆமாம். . . எல்லாம் இவரோட ஏற்பாடு. . . தெரியுதா. . . என்னமோ பெரிய திட்டம் போட்டானே கருத்தப்பன், இப்ப பார்த்தாயா, அவனோட எண்ணத்திலே மண் விழுது. . . . .

தீ மிதிச்ச தீரன் கருத்தப்பன், அதனாலே அவனோட மகன் உதயசூரியனுக்கு, கோட்டையூர்லே இடம் கொடுக்கணும், அதுதான் மரியாதை என்று நினைக்க மாட்டாங்களா. . . .?

அவனேகூட அப்படித்தான் நினைப்பான்; தீ மிதிச்சது பற்றிப் பேசினா, கேட்கிறவங்க மனசு பாகா உருகும்னு எண்ணிக்கிட்டுத்தான் இருப்பான். அவன் கண்டானா, தீயை மிதிச்சா, கோட்டையூர்ப் பாதையிலேகூட அடி எடுத்து வைக்க முடியாது என்கிற விஷயத்தை. . . ?

எக்கச் சக்கமா மாட்டிக்கிட்டான் பய. . .

கிளம்பட்டும் தீ மிதிக்க. . . பிழைச்சி வந்தாக்கூட, பய இந்தப் பேச்சூரோடு இருந்துவிடவேண்டியதுதான். ஒரு அடிகூட கோட்டையூர்ப் பக்கம் போக முடியாது. . . பாரேன், திண்டாடப் போறதை. . .

***

தீ மிதிக்கும் திருவிழாவில் கலந்துகொள்ளும்படி, ஏன் தூண்டிவிடுகிறார்கள் என்பது கருத்தப்பனுக்குப் புரிந்துவிட்டது.

தீ மிதிப்பதோ, திட்டில் இருப்பதோ, எல்லாம், உதய சூரியன் கோட்டையூர் போய்ச் சேர உதவும் என்பதுதான் அவன் எண்ணம்.

கோட்டையூரில் உதயசூரியன் இடம் பெற்றால் தான், பாலூர் தேனூர் போலாகும் என்று கூறி ஆட்சியைப் பிடித்துக்கொண்ட கோட்டையூரான், கோலெடுத்தானைத் துணைக்கு வைத்துக்கொண்டு மக்களைக் கொடுமைப் படுத்தும் அக்கிரமத்தை ஒழிக்க முடியும்.

அதற்கு வாய்ப்புக் கிடைக்கவிடாமல் தடுத்துவிட வேண்டும், கோட்டையூர்ப் பாதையிலேகூட நடந்திடக் கூடாது என்று உத்தரவு போடுவது சூதான ஏற்பாடு.

இவ்விதமான சூது சூழ்ச்சிகளைக்கூட முறியடிக்கும் வல்லமை கோட்டையூர் போனால்தான் முடியும்.

ஆகவே, கோட்டையூருக்கு உதயசூரியன் சென்று நாட்டைப் பெருவளநல்லூர் ஆக்கவேண்டுமானால், தீ மிதிக்கச் செல்லக்கூடாது என்ற முடிவுக்கு வந்தான் கருத்தப்பன், சூழ்ச்சிக் காரரின் திட்டம் அறிந்ததால்.

வீடு சென்று மெய்யம்மையிடம் கூறினான், உதய சூரியனைக் கோட்டையூர் நுழைய முடியாமல் தடுத்திடத் தீட்டப்பட்டுள்ள சூழ்ச்சிபற்றி.

மெய்யம்மைக்கு அப்போதுதான் பவுனாம்பாள் பசப்பிப் பேசியதன் காரணம் புரிந்தது.

தீ மிதிக்க முடியுமா என்று கேட்டு, ரோஷமூட்டப் பார்ப்பது, நம்மைக் கோட்டையூர் வரவிடாது தடுப்பதற்காகத் தான் என்பது புரிந்ததும், மெய்யம்மை, தீ மிதிக்கச் செல்லத் தேவையில்லை என்று தீர்மானித்தாள்.

தீ மிதிக்கப் போவதில்லை, தங்கள் சூழ்ச்சி வெற்றி பெறப் போவதில்லை என்று தெரிந்ததும் பவுனாம்பாளும், வலை விரிப்பானும், கோட்டையூரானும் கோலெடுத்தானும் முகத்தைத் தொங்கப்போட்டுக்கொண்டனர்.

மெய்யம்மை தன் குழந்தை உதயசூரியனை உச்சிமோந்து முத்தமிட்டு, அரசாளப் பிறந்தவனே! உன்னை அழிக்க அல்லவா அவர்கள் சூழ்ச்சி செய்தார்கள், எங்களைத் தீ மிதிக்கச் செல்லும்படி தூண்டிவிட்டு. உண்மை புரிந்தது. உன்னைக் காத்திட முடிந்தது. தீயோர் எண்ணத்தில் தீ விழட்டும் என்று கூறி மகிழ்ந்தாள்.

தீ மிதிக்கமாட்டானாம். . . துணிவு இல்லை. . . என்று தூற்றிப் பார்த்தான் வலைவிரிப்பான்.

அவனோட துணிவுபற்றிப் பேசுவது இருக்கட்டும் நீ ஏன் உதயசூரியனைக் கோட்டையூர் பாதையிலேயே நடக்கக்கூடாது தீ மிதிக்க அவர்கள் சென்றால் என்று ஒரு புது உத்தரவு போட்டாய்? தைரியம் என்றா அதற்குப் பெயர்! சூது! சூழ்ச்சி! அதைக் கருத்தப்பன் புரிந்துகொண்டதால்தான், நீங்கள் மூட்டிய தீயிலே விழ மறுத்துவிட்டார்கள்! இது புரியவில்லையா எங்களுக்கு என்று நாட்டாண்மைக்காரர் தெளிவப்பன் கூறினார்.

நல்ல காரியம் செய்தாயப்பா! பயந்துகொண்டிருந்தோம், அரசாளப் பிறந்தவனை விட்டுவிட்டு நீங்கள் எங்கே தீ மிதிக்கப் போய்விடுவீர்களோ என்று. நல்ல வேளை, உங்களுக்கு அவர்கள் சூழ்ச்சி புரிந்துவிட்டது - என்று வாக்களிப்பர் பாராட்டினார்.

தீயிலே தள்ளி, என்றென்றும் உதயசூரியன் கோட்டையூர் நுழையாதபடி செய்துவிடலாமென்று சூழ்ச்சி செய்தோம், முடியவில்லை; இனி கோட்டையூர் பாதையிலே காவலிருக்க வேண்டும், உதயசூரியனை அழைத்துக்கொண்டு, கருத்தப்பனும் மெய்யம்மையும் வராதபடித் தடுத்திட வேண்டும் என்று கோட்டையூரானும் கோலெடுத்தானும் முனைந்தனர்.

அவர்களுக்குத் துணையாக நோட்டூரான், இருட்டூரான் போன்றார் நின்றனர்.

பயப்படாதே தம்பி! நாங்கள் துணை இருக்கிறோம் என்று கூறி வாக்களிப்பாரும், தெளிவப்பனும் முன் வந்தனர்; உதய சூரியன் புன்னகை புரிந்தான்.

***

அன்பானந்தரே! புதுமையாக இருக்கிறதே உமது கதை! எதற்காக இப்படி ஒரு கதையைக் கூறினீர்கள் என்று கேட்டேன். அவர் சிரித்துக்கொண்டே "ஏனப்பா! கதையைக் கேட்டதும் உனக்கு கருத்துப் புரியவில்லையா?'' என்று கேட்டுவிட்டு, "இப்போது நீயும் உன்னுடைய உடன்பிறப்புகளும் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? எந்த முயற்சியிலே மும்முரமாக ஈடுபட்டிருக்கிறீர்கள்? தேர்தல் வேலையிலேதானே'' என்று ஒரு கேள்வியை எழுப்பினார்.

"ஆமாம். தேர்தல் வேலையிலேதான்! அது என்ன பாதகச் செயலா? கேவலமானதா'' என்று நான் கேட்டேன்.

"ஜனநாயக முறையை ஏற்றுக்கொண்டுவிட்டு, தேர்தல் காரியத்தைக் கேவலமானது என்று கூற முடியுமா? திருமணம் செய்துகொண்டு, குடும்பத்தை நடத்திச் செல்வது கேவலம் என்று சொல்வார் உண்டா? தேர்தல் என்பது ஜனநாயகத்தில் ஏற்பட்டுவிடும் மிக முக்கியமான கடமை. நான் அதைக் குறை கூறவில்லை. இந்தத் தேர்தலில் ஈடுபட்டுப் படிப்படியாக நீங்கள் முன்னேறி வருகிறீர்கள். இல்லையா?'' என்றார்.

"ஆமாம்! பொது மக்களுடைய நல்லாதரவு காரணமாக. . .'' என்று நான் விளக்கம் தந்தேன்.

"உங்களைப் பொது மக்கள் துளியும் ஆதரிக்கவில்லை என்று கூறிக்கொண்டு வந்த காங்கிரஸ் கட்சிக்கு, இதனால் ஏமாற்றமும் எரிச்சலும் ஏற்பட்டுத்தானே இருக்கும்?''

"ஆமாம்! கொஞ்சநஞ்சமான எரிச்சல் அல்ல'' என்று நான் கூறினேன்.

"அந்த எரிச்சல் காரணமாகத்தான், காங்கிரஸ் கட்சி உங்களைத் தூற்றுகிறது இல்லையா?'' என்று கேட்டார்.

"சாதாரணமான தூற்றலா! பண்புள்ள யாரும் பேசக் கூசிடும் பேச்செல்லாம் பேசுகிறார்கள்; பெரிய இடத்தில் அமர்ந்திருப்பவர்கள்கூட!'' என்று நான் கூறினேன்.

"வருத்தப்படுகிறாயா? பைத்தியமே! பைத்தியமே! அவர்கள் தூற்றத் தூற்றத்தான், அதனை நீங்கள் தாங்கிக்கொள்ள தாங்கிக் கொள்ளத்தான், பொது மக்களுக்கு உங்களிடம் ஒரு பரிவு பற்று ஏற்பட்டிருக்கிறது. அதனையும் அவர்கள் உணர்ந்துகொண்டனர். ஆகவேதான் உங்களை எப்படியாவது தேர்தலிலே நிற்க ஒட்டாதபடி தடுத்துவிட முயன்றனர். சாதாரண முறைகள் போதவில்லை. ஜனநாயகத்தை நடத்துவதாக உலகத்துக்குச் சொல்லிவிட்டு, ஒரு கட்சியைத் தேர்தலுக்கு நிற்கவிடாதபடி, தடை உத்தரவு போட முடியவில்லை. ஆகவே, நேர்வழி கூடாது என்று குறுக்கு வழி சென்று ஒரு சட்டம் உண்டாக்கிக் கொண்டனர். பிரிவினைக் கேட்பவர்கள் தேர்தலிலே ஈடுபடக் கூடாது என்ற சட்டம். ஆஹா! சட்டம் போட்டா எங்களை மட்டந்தட்டப் பார்க்கிறீர்கள் என்று நீங்கள் கூவிக் கொந்தளித்து, சட்டத்தை மீறுவீர்கள், உடனே தேர்தலில் நிற்கும் உரிமையை அழித்துவிடலாம், போட்டி இருக்காது. போக போக்கியம் தரும் பதவி என்றென்றும் இருக்கும் என்ற சூழ்ச்சி. அதை நீங்கள் உணர்ந்துகொண்டீர்கள், அதனால் ஜனநாயகம் பிழைத்தது. அதைத்தான் நான் கதையாகக் கூறினேன்! தீ மிதிக்கிற திருவிழாவுக்கு, பவுனம்மாளின் பேச்சைக் கேட்டுக்கொண்டு, மெய்யம்மை போயிருந்தால், அவள் குழந்தைக்கு என்ன கதி நேரிட்டிருக்கும்?'' என்று விளக்கினார்.

"பெரியவரே! உம்மைப்போன்றவர்கள் உண்மையை உணர்ந்து ஊராருக்கு உரைப்பீர்கள் என்பதிலே எங்களுக்கு உள்ள நம்பிக்கை காரணமாகவே, நாங்கள், காங்கிரஸ் அரசு தீட்டிய சூழ்ச்சிக்குப் ப-யாகக்கூடாது என்று முடிவெடுத்தோம்'' என்றேன் நான்.

"நல்ல முடிவு! உதயசூரியன் நாடாளும் வாய்ப்புப் பெற வழி கிடைத்திருக்கிறது.'' என்றார் அறிவானந்தர். "உங்கள் பேராதரவும் நல்வாழ்த்துக்களும் வேண்டும் ஐயா!'' என்றேன். "தாராளமாக! ஏராளமாக!'' என்று அறிவானந்தர் கூறினார் மலர்ந்த முகத்துடன்.

***

யார் அந்த அறிவானந்தர்? ஆறேழு ஆண்டுகள் ஹரித் துவாரத்தில் ஆசிரமம் நடத்திய மகானா? அல்லது கேட்டதும் ஆயிரக்கணக்கான ரூபாய்களை நன்கொடையாக அள்ளிக் கொடுத்திடும் சீமானா? என்று கேட்கிறாயா, தம்பி!

அறிவானந்தர், உழைத்து உருக்குலைந்த நிலையில் உள்ள ஒரு எளியவர்! கவலைக் கோடுகள் படிந்துள்ள முகம்! கள்ளங் கபடமற்ற மனம்!! தான் படுகிற அல்லலையும் தொல்லையையும், தன் பிள்ளைகளாவது படாமல், நிம்மதியான வாழ்வு பெறவேண்டுமே என்ற ஏக்கம். தன்னைப் போன்றவர்கள் கொண்டுள்ள ஏக்கத்தைப் போக்கிடத்தக்க ஒரு நல்லாட்சி அமையவேண்டுமே என்ற எண்ணம் கொண்டவர்.

அமையும் என்ற நம்பிக்கை கொண்டவர்! மிட்டாமிராசு காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக அலையும் திருக்கூட்டத்தினர் அல்ல! உழைப்பின் பலனைப் பெறவேண்டும் என்று எண்ணிடும் தூயவர்.

அவர் பர்மிட்டும் லைசென்சும் கேட்கவில்லை; பாலும் தேனும் ஓடிட வேண்டும், அள்ளி அள்ளிப் பருகிட வேண்டும் என்ற பேராசை கொண்டவர் அல்ல!

செய்திட ஒரு வேலை! அதிலே ஒரு நீதி, ஒரு நிம்மதி! குடியிருக்க ஒரு இடம்! வயிறாரச் சோறு! மானங்காத்திட ஆடை! நோயற்ற வாழ்வு! ஓய்வு நேரம், உள்ளத்துக்குக் குளிர்ச்சி தர! - இவைகளைத்தான் எதிர்பார்க்கிறார்.

எங்கே இருக்கிறார் அந்த அறிவானந்தர்? என்றா தம்பி! கேட்கிறாய். எங்கும் இருக்கிறார்! இந்நாட்டு உழைப்பாளியைத் தான் சொல்கிறேன்.

அவரிடம் பேசிப் பாரேன்! ஆதரவும் புரியும்! நல்வாழ்த்தும் கிடைத்திடும்.

அதனைப் பெற்றிடுவதிலே மட்டும், தம்பி! நீ வெற்றி பெற்றுவிட்டால், பிறகு உன் ஆட்சி அமைவதைத் தடுத்திடும் வல்லமை எவருக்கும் இருக்கப்போவதில்லை.

அவர் ஏழை உழைப்பாளி, கவலை நிரம்பியவர்! ஆனால் தம்பி! மறந்துவிடாதே! அவர் இந்நாட்டு மன்னர்!

அவர் "கோலம்' பளபளப்பு அற்றது! குரல் வலிவற்றது! ஆனால், அரசுகளை ஆக்கவும் அழிக்கவும் தேவைப்படும் ஆயுதம் அவரிடம் இருக்கிறது! ஓட்டுச் சீட்டு!!

அண்ணன்,

18-9-66