அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


தீவில் தங்கியவன் கதை
1

உளவு வேலை -
பாரிஸ் மாநாடு -
அமெரிக்காவும் ரஷ்யாவும்

தம்பி!

கடும் புயலும், கடற் கொந்தளிப்பும் ஏற்பட்டுக் கலத்தைச் சுக்கு நூறாக்கி விட்டது; இருந்தோர் இறந்துபட்டனர்; ஒருவன் மட்டும் உயிர் தப்பினான். மக்களற்ற ஓர் தீவு சென்றான்; ஆண்டு மூன்று ஆகிவிட்டன; ஏதேனும் ஓர் கலம் வரும், தன்னைக் கண்டு அழைத்துச் செல்லும்; மீண்டும் ஊரில் உலவி உற்றாருடன் குலவி மகிழலாம் என்று ஒவ்வொரு நாளும் எண்ணுவான்; ஏங்குவான்!

எங்கும், பச்சைப் பட்டு விரித்திருப்பதுபோலத் தீவு காட்சி தந்தது; பல வண்ணப்பூக்கள், பாடும் பறவைகள், சுவைமிகு கனிகள்; ஆலோலம் பாடிடும் அருவிகள், மென்காற்றைத் தரும் பூங்காக்கள், எல்லாம்தான் இருந்தன, அந்தத் தீவினில். ஆனால் இவைகளைப்பற்றிப் பேசி மகிழ, காட்டிக் களிப்பூட்ட, வேறு ஒருவரும் இல்லை! எதிரே, கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் கடல்! அதன் ஒ-, கே- செய்கிறதோ, தன்னை!! - என்று எண்ணத்தக்க விதத்தில், மேலே மேகக்கூட்டம்! சூழ, இருந்தவை, உற்று நோக்கிட மட்டுமே இடமளித்தன, உரையாட, உறவாட அல்ல!

கானம் பாடிடும் வானம்பாடியிடம், அவன் என்ன பேச முடியும்; சிறிது நேரம் "இனிய இசை' என்று மகிழ்ந்து கேட்கலாம்!!

ஏக்கம் அவனை வாட்டியதிலே, ஆச்சரியம் என்ன இருக்க முடியும். மூன்று ஆண்டுகள் - ஆயிரம் நாட்கள் - தன்னந் தனியனாக ஒரு தீவிலே இருக்கிறான்!!

ஒரு நாள், கலம் ஒன்று நெடுந்தொலைவில் வருவது கண்டான், களிநடமாடினான்; கர்த்தரைத் தொழுதான்; கரத்தால் குறிகாட்டினான்; களிப்புடன் கூவினான்! கலம், அவன் இருக்கும் பக்கம் நோக்கி வரலாயிற்று! வாழ்வு, மீண்டும்! மக்களுடன் உறவாடும் நாட்கள், மறுபடியும்!! என்று எண்ணி மகிழ்ந்தான்.

கலத்திலிருந்து ஒருவன், படகேறித் தீவின் கரைநோக்கி வந்தான்.

வணங்கினான், வாழ்த்தினான், கட்டிப் பிடித்துக்கொண்டு, "கர்த்தரே'தான் உன்னை இங்கு அனுப்பிவைத்தார். என் "ஜெபம்' பலித்தது, ஏக்கம் தீர்ந்தது, மீண்டும் மனிதனானேன்! உன்னை என்றென்றும் மறவேன்! என்னை வாழவைக்க வந்துள்ள தெய்வம், நீயே! என்றெல்லாம் கூவினான், குளறினான், குதூகலத்துடன்.

வந்தவனோ, ஒரு காகிதக் கட்டினைத் தந்து, உலகின் நிலை அறிவிக்கும் பத்திரிகைகள் இவை. படித்துப்பாரும். இதற்குள், நாங்கள், மற்றோர் பக்கம், ஒரு வேலையாகப் போய்விட்டுத் திரும்பி வருகிறோம். அதற்குள் இவைகளைப் படித்து முடித்துவிடலாம். உலகம் இன்றுள்ள நிலை தெரியும், புரியும்! புரிந்த பிறகும் உனக்கு இங்கிருந்து வந்துவிட விருப்பம் இருக்குமானால், உடன் அழைத்துச் செல்கிறோம் என்று உன்னிடம் கூறும்படி, எமது கலத்தின் காவலன், என்னை அனுப்பியுள்ளான் என்று கூறிவிட்டுப் படகேறிச் சென்றான்.

பத்திரிகைகளை, ஆவலுடன் பிரித்தான், படித்தான்.

புதிய படக்காட்சிகள் பற்றிய விவரம் கண்டான்; தனக்கு மிகவும் பிடித்தமான நடிகையரின் படங்களைப் பார்த்தான், பரவசமடைந்தான்.

நாடகம், இசை, நாட்டியம், நாகரிக நிகழ்ச்சிகள் பற்றிய குறிப்புகளைப் படித்தான், பேரானந்தம் பிறந்தது.

பிறகு, நாட்டு நிலை, அரசியல் நிலை, பொருளாதார நிலை, இவைபற்றிப் படிக்கலானான்; மகிழ்ச்சி உலரலாயிற்று; மருட்சி பிறந்தது.

உலகிலே, பல்வேறு இடங்களிலே, இல்லாமையால் தாக்கப்பட்ட மக்கள் படும் அவதி, அவர்களை அடக்கி ஒடுக்கிவைக்க ஆட்சியாளர் அவிழ்த்துவிடும் அடக்குமுறைகள், அந்த அடக்குமுறைகளை எடுத்துக் காட்டி, ஆவேசமூட்டி, அந்த ஆட்சியினைக் கவிழ்த்திட எதிர்க்கட்சிகள் செய்திடும் முயற்சிகள், படுகொலைகள், சதிச்செயல்கள், அடுத்துக் கெடுத்திடும் அக்ரமம், அணைத்து அழித்திடும் பயங்கரம் - ஆகியவற்றினைப் பற்றிய விளக்கங்களைப் படித்தான் - நாடா, காடா இந்த இடங்கள்? என்று எண்ணத் தோன்றிற்று; அருவருப்பும் அச்சமும், அவன் உள்ளத்தை உலுக்கிடலாயின!

நில நடுக்கத்தால் ஏற்பட்ட நாசம் பற்றிய குறிப்பு, பெருவெள்ளம், தீ, ஆகியவற்றால் ஏற்பட்ட அழிவு, பஞ்சமும் நோயும் ஏற்படுத்திவிட்ட பாழ்நிலை ஆகியவை பற்றிய விவரம் படித்தான் - பயந்தே போனான்.

பாராளுமன்றங்களிலே நடைபெறும் பேருரைகள், நாட்டிலே செல்வம் பெருகிவருவதைக் காட்டுவனவாக இருந்தன. பத்திரிகையிலே மற்றோர் பகுதியில், பிழைப்புக்கு வழிதேடிக் கண்காணா நாடு சென்று கடுமையாக உழைத்தும் கதியற்றுக் கலங்கிடும் மக்கள் பற்றி, உருக்கமாக வரையப்பட்ட கட்டுரைகள் இருந்தன!

கர்த்தரின் கருணை பற்றிய பாசுரமும், அதற்கான பொருள் விளக்கமும் ஒரு பக்கம் இருந்திடக் கண்டான்; பிறிதோரிடத்தில், பெற்ற குழந்தையின் கழுத்தை நெரித்துச் சாக்கடையில் வீசிடும் "கன்னித்தாய்' பற்றிய குறிப்பு இருந்தது!

சீமாட்டி வாங்கிய வைரமாலையின் மதிப்புப்பற்றி, நிபுணர்கள் கருத்து வேற்றுமையை எழுதி இருந்தனர்; பசிக் கொடுமைக்காகத் திருடிய சிறுவனுக்கு இருபது சவுக்கடி கொடுத்திடச் சொல்லி, வழக்கு மன்றம் தீர்ப்பளித்ததைப் பற்றிய கருத்துக் கோவையும் காணப்பட்டது.

பிடிபட்ட வேங்கைபற்றிய செய்தியும், பிடிபடாத கொலைகாரனைப் பற்றிய தகவலும், ஒரே இதழில் இருந்திடக் கண்டான்.

கள்ளச்சந்தை நடத்துபவனுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துப் பேசிய அமைச்சரின் அஞ்சா நெஞ்சத்தைக் கண்டு மகிழ்ந்தான்; அடுத்த பக்கத்திலேயே, அறுபத்து நாலுவகை பதார்த்தத்துடன், அமைச்சருக்கு, ஒரு கொள்ளை இலாபக்காரன் நடத்திய விருந்துபற்றிய விவரம் வெளிவந்திருக்கக் கண்டான்.

புதிதாகக் கட்டப்பட்ட அரசமாளிகைக்குச் செலவான பணத்தின் கணக்கு ஒரு பக்கம் தரப்பட்டிருந்தது; மற்றோர் பக்கமோ புற்றுநோய்க்குப் பலியானவர்களின் தொகை பெருகிவருவதைக் காட்டிடும், புள்ளிவிவரம் இருந்திடக் கண்டான்.

உளவு வேலை பார்த்துக்கொண்டே உறவாடும் போக்கினர் உயர் இடங்களிலே இருப்பதைக் கண்டான். இருக்கும் இடமிருந்தவண்ணமே இலக்குகளை அழித்திடும் போர்க் கருவிபற்றிப் பேசிப் பீதி கிளப்பிடும் பெருந்தலைவர்களின் சீற்றத்தைப் பார்த்தான். அவரவர் அவர்வழி என்ற கருத்தினைப் பேசிடும் அறிவாளரையும் கண்டான்; அடுத்த பலி எது என்று மோப்பம் பிடித்தலையும் வெறியரையும், பத்திரிகை படம் பிடித்துக் காட்டிற்று, மனிதகுலம் ஒன்றுதான் என்று பேசி, மதிப்புப் பெற்றிடும் மகான்களையும், இதழ்கள் பாராட்டின; கருப்பு, வெள்ளை, மஞ்சள், சிகப்பு என்று நிறபேதம் காட்டிடும் கொடியோருக்குக், கொடியும் படையும், கொற்றமும் ஏற்றமும் இன்னும் இருந்திடும் கொடுமையையும் காட்டின இதழ்கள்!

பிரித்துப் பிரித்துப் படிக்கிறான், தொல்லை நிரம்பிய உலகம், கொடுமை கக்கிடும் உலகம், அநீதி நெளியும் இடங்கள், ஆபத்துச் சூழ்ந்த நாடுகள் - இவைகளைத்தான் காண முடிந்தது.

அங்கல்லவா, போக வேண்டும்? என்று எண்ணினான் - உடல் பதறிற்று, உள்ளம் கொதித்திடலாயிற்று.

மரமும் செடியும், கொடியும் தழையும், இங்கு; எத்தனை காலத்துக்கு இவைகளைப் பார்த்தபடி இருப்பது என்று ஏக்கம் பிறக்கிறது; உண்மை. ஆனால், அங்கு? மாடமாளிகையும் மண்குடிசையும், பக்கத்துக்குப் பக்கம் உள்ளன; அன்புமொழி பேசுவோரும் அழித்தொழிக்கும் போக்கினரும், அடுத்தடுத்து உள்ளனர்; அங்கல்லவா செல்ல வேண்டும்? நிலநடுக்கத்தால் சாவோ, தீராத நோய் தாக்கி மரணமோ, மெள்ள மெள்ளக் கொன்றிடும் பஞ்சம்தான் பீடித்துச் சாகடிக்குமோ - என்ன கதியோ, யாது முடிவோ! எனக்காக எது காத்துக்கொண்டிருக் கிறதோ - தடியோ, துப்பாக்கி முனையோ, கயவரின் கத்தியோ, காவலரின் கடும் சிறையோலியாதோ! - என்று எண்ணும்போது, அப்படிப்பட்ட ஆபத்துச் சூழ்ந்த இடத்திற்குச் செல்லத்தான் வேண்டுமா என்ற ஐயப்பாடு தோன்றுகிறதே! அச்சம் கூட ஏற்பட்டுவிடுகிறதே!! என்ன செய்யலாம்? போகலாமா? வேண்டாமா? இங்கேயே இருந்துவிடுவதா? அங்கு செல்வதா - என்று எண்ணினான், நெடுநேரம். பிறகோர் முடிவுக்கு வந்தான்! தீவிலேயே இருந்துவிடுவது என்று!!

தம்பி! யார் இவன், என்று கேட்கமாட்டாய். கருத்து விளக்கத்துக்கான, கதை வடிவம் என்பது உனக்குத் தெரியாதா, என்ன!

உலகம், இன்றுள்ள நிலைபற்றிய செய்திகள் பலவற்றைப் பார்த்திடுவோருக்கு, தீவே போதும், நாகரிக அரசுகள் உள்ளன என்ற விருதுகாட்டப்படும் நாடுகள் பலவும், இன்று எந்தச் சமயத்திலே, நாசத்தைக் கக்கலாம், எவரை அழித்திடலாம் என்று துடித்துக்கொண்டு, தொடை தட்டிக் கொண்டு நிற்கும் நிலை தெரிகிறது; தெரிவதால், அருவருப்பும் அச்சமும் மனதிலே புகுந்து குடையவும் செய்கின்றன. என் காலத்திலேயே, மற்றோர் போர் வந்து மூண்டுவிடும் போலிருக்கிறது என்று ஆச்சாரியார் பேசியிருக்கிறார் அல்லவா! அவ்விதம் எண்ணி, மருளத்தக்க விதமாகத்தான், உலகின் நிலையும், நடவடிக்கைகளும் உள்ளன.

சென்ற கிழமை கூடிய, பெருந்தலைவர்கள் மாநாடு, என்ன அலங்கோல நிலை காட்டிற்று! கோடிக்கணக்கான மக்களின், நல்வாழ்வுக்கான பொறுப்பினை ஏற்றுக்கொண்டிருக்கும், அந்தப் பெருந்தலைவர்கள், அதிலும் குறிப்பாக இருவர் - இரு பெரும் நாட்டுத் தலைவர்கள் - கோபதாபத்துக்கு ஆட்பட்டுக், கூடிப் பேசவும் மறுத்துவிட்டனர், கண்டாயல்லவா?

அந்தத் தலைவர்களின் பேரப்பிள்ளைகள், பள்ளியிலே, என் புத்தகத்தைக் கிழித்தவனல்லவா நீ? உன்னோடு எனக்கென்ன பேச்சு! என்று சண்டை போட்டுக்கொள்கிறார்களோ இல்லையோ, இவர்கள், அதே முறையிலல்லவா, நடந்து கொண்டுள்ளனர்.

கோடி கோடி மக்கள், இவர்கள் கூடிப்பேசி, பகை ஒழியவும், பண்பு வளரவும், நேசம் மலரவும், நீதி தழைக்கவும் வழி காண்பர்! அச்சத்தாலும் அருவருப்பாலும் ஆதிக்க வெறி உணர்ச்சியாலும் உந்தப்பட்டுப், பணத்தைப் பயங்கரப் போர்க் கருவிகளுக்குப் பாழாக்கும் முறை ஒழிந்து, மக்கள் அனைவரும் பசியின்றி, நோயின்றிப், பயமின்றிப், பண்புடன். கூடி வாழ்ந்திட வழி காண்பர் - பெரும் பொருளை அதற்கே செலவிடுவர் என்று எத்துணை ஆவலோடு எதிர்பார்த்து நின்றனர். இடையே உள்ளவர்களின் இறுமாப்பினாலேயே இடர்ப்பாடுகளிலே பெரும் பகுதி ஏற்பட்டுவிடுகின்றன. "மூலவர்கள் ஒன்றுகூடிப் பேசினால், மூடுபனி கலைவது போலப் பகை நோக்கு ஒழியும், ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொள்ள இயலும், அதற்காகப் பெருந்தலைவர்கள் கூடிப் பேசவேண்டும்'' என்று, பல காலமாகக் கூறப்பட்டது; ஆனால் கூடினர், பேச அல்ல; பேச முடியாது என்று கூறிவிட்டுக் கலைந்திட!

நேசக்கரத்தை நீட்டவேண்டிய நேரத்தில்தானா, அமெரிக்கா, சோவியத் நாட்டின்மீது, வேவு பார்க்க விமானத்தை ஏவவேண்டும்!! கூடிப்பேச ஏற்றதோர், சூழ்நிலை அமைக்கும் செயலாகுமா, இது? ஏன் இந்த, நம்பிக்கையற்ற போக்கு, அவசர நடவடிக்கை?

விஞ்ஞானத்தின் துணையை, மற்ற எந்த நாட்டினையும்விட மிக அதிகமாகவும், வேகமாகவும், நேர்த்தியாகவும் பெற்று, உலகின் எந்தக் கோடியினையும் கண்டறிய, படமெடுக்க, வசதியினைப் பெற்று, செயற்கைக் கிரகங்களை அடுக்கடுக்காக அனுப்பிக் கொண்டிருக்கும் சோவியத் முறை, விஞ்ஞான வளர்ச்சியை மட்டுமா காட்டி வருகிறது! புதியதோர் வேவு பார்க்கும் முறை அல்லவா, அது!

அமெரிக்கா அனுப்பிய வேவு விமானம் பற்றி, வெகுண்டு பேசிவிட்டாகிலும், எதிர்காலம்பற்றிக் கலந்துபேச, மாநாடு நடத்தக்கூடாதா சோவியத்!

"முடியாது! முழங்காற்படியிட்டபடி, மன்னிப்புக் கேட்டாக வேண்டும், அமெரிக்கத் தலைவர்; அப்போதுதான், பேச இசைவேன்'' என்று சோவியத் தலைவர் அறிவித்துவிட்டார்.

அதற்கு அமெரிக்கத் தலைவர் இணங்குவார் என்று எவரும், எதிர்பார்க்க முடியாது. எதிர்பார்த்தால் மாநாட்டுக்குப் பெருந்தலைவர்கள் மாநாடு என்ற பெயரே பொருந்தாது!!

ஆனால், ஏன், இருபெருந் தலைவர்கள் இந்த முறையில் நடந்து கொண்டனர்?

"கூடி வாழ்வது' என்ற கொள்கைபற்றி இருவரும் பேசாத நாளில்லை. போர் அறவே கூடாது! மூண்டிடின், இது உலகை அழித்தொழிக்கும் போராகிவிடும் - என்று இருவரும் உரைக்கின்றனர்; உணருகின்றனர்.

எனினும், இருவரும், தத்தமது போக்கினைத் துளியும் மாற்றிக்கொள்ள ஒருப்பட்டாரில்லை; மாற்றிக் கொள்வது தம் தரத்தைக் குறைத்துவிடும் என்ற தவறான ஓர் கருத்துக்கு அவர்கள் ஆட்பட்டுக்கிடப்பதால்.

பாலேடு திருடிய பூனைக்குட்டியை, என் தாய் கண்டு பிடித்து, அதைத் தூக்கி, அதே பாலேட்டிலே, பூனையின் மூக்கைத் தேய்த்துப் புத்தி புகட்டினார்கள் - நான் சிறுவனாக இருந்தபோது; அதுபோலத்தான், வேவு பார்த்த அமெரிக்காவுக்குப் புத்தி புகட்ட வேண்டும் என்று விரும்புகிறேன் - என்று குருஷேவ், ஒரு கதையும் கூறியிருக்கிறார்.

தாயாருக்கு இருந்த கோபம், இப்போது இவருக்கும் இருக்கிறது என்பது தெரிகிறது. ஆனால், அன்று, அவருடைய அன்னை, கோபத்தின் காரணமாக அர்த்தமற்ற காரியத்தைச் செய்ததுபோலவா, அகிலத்தில் அமைதி நிலவவேண்டும் என்ற அறிவு அறிந்த பருவத்திலுள்ள மகனும், செய்ய முற்பட வேண்டும்!!

பூனையின் மூக்கைப் பாலேட்டிலே வைத்துத் தேய்த்ததால், கோபம் குறைந்திருக்குமே தவிர, பாலேடு கூடியா இருக்கும்!! பூனை தின்றதுபோக, மிச்சமிருந்ததுமல்லவா, கெட்டுப் போயிருக்கும். தாயார், அதைச் செய்தபோது குருஷேவ், சிறுவர்! இப்போது?

"எமது மாபெருந் தலைவனின், வீரத்தைக் காணீர்! தன்மானம், உயிரினும் பெரிது! என்பதைத் தரணிக்கே எடுத்துக்காட்டிய, எமது இணையிலாத் தலைவரின் தரத்தை மிஞ்ச முடியுமா, கூறீர்!! ஆணவம் பிடித்த அமெரிக்க அரசுக்கு, கொடுத்தார் ஓர் அறை! இறுமாப்புக்கொண்ட ஏகாதிபத்தியத் துக்குக் கிடைத்தது பலமான தாக்குதல்!! -" என்று சோவியத் மக்கள், குருஷேவை எழுச்சியுடன், பாராட்டத்தான் செய்வார்கள்.

"பதறுவது, பண்பாளரின் முறை அல்ல! துடுக்குத்தனமாகப் பேசியதைக் கேட்டும், துளியும் பதறாமல், பதிலுரைக்காமல், பண்புடன் நடந்துகொண்டார், எமது தலைவர்! பாரோரே! பாரீர்! அவர் வழி வந்து சேரீர்!!'' என்று ஐசனோவரை, அமெரிக்க மக்கள் பாராட்டி வரவேற்பர்.

ஆனால், பெருந்தலைவர்கள் எனும் பெருதற்கரிய இடத்தைப் பெற்ற நிலையில், அவர்கள், தம்மைச் சூழ நிற்கும் சாமான்யர்களின் பாராட்டுதலை அல்லவா, பெறத்தக்க போக்கினை மேற்கொண்டிருக்க வேண்டும்?

உலகம், இவரிருவரிடமும், எவ்வளவு எதிர்பார்க்கிறது! இவர்களோ, எவ்வளவு எளிதில், எவரையும் வீழ்த்திவிடத்தக்க கோபதாபத்துக்கு இடமளித்துவிட்டனர்!! இவ்வளவு உயரிடம் பெற்றதும், இதற்கோ?

மாநாடு நடைபெற்று, குருஷேவ், உலகிலே போர்ப் பயம் ஏற்படாதிருக்க வழிகூறிக், கலந்துரையாடித், திட்டம் வகுத்து, ஒப்பம்பெற்றுக் கடைசியில், "இத்துணையும், உலகு அமைதிபெற நான் எடுத்துக் கொள்ளும் முயற்சியாகும், ஆனால் உலகீரே! இதோ, இங்கு நான் புறப்படும் நேரமாகப் பார்த்து, அமைதி விழையும் ஐசனோவர், அகிலம் தழைக்க வழிதேடும் அமெரிக்கத் தலைவர், எனது நாட்டின்மீது வேவு விமானம் அனுப்பினார்; வீழ்த்தினர் எமது படையினர்; வெகுண்டனர், எமது மக்கள்; எனினும், அவர்களுக்கு நான் சமாதானம் கூறிவிட்டுச், சாந்தப்படுத்திவிட்டு, இங்கு வந்தேன்! வலிவுகுறைவு, என்பதால் அல்ல!! வலிவு மிகுதி எம்மிடம், என்பதனால்! வேவு விமானம் அனுப்புகிறது அமெரிக்கா! பாவம்! அதுவும் வெந்து கருகிக்கிடக்கிறது எமது மண்ணில்! வானவெளியில் சுற்றிவருகிறது, எமது விஞ்ஞானக் கருவி!! பூமி அல்ல, எமது இலக்கு! பூலோகத்தார், எண்ணி எண்ணி விளக்கம் காணாது, இருந்து வருகிறார்களே, வானவெளிபற்றி, அங்கு காணப்படும் "உலகுகள்' பற்றி - அவைகளைக் கண்டறிகிறோம் - அறிவுத் துறையில் வென்று வருகிறோம்! அறிவீர்! அறிவிப்பீர்!'' என்று பேருரை நிகழ்த்தி இருப்பின் - ஐசனோவர், வெட்கத்தால், குன்றிப் போயிருப்பார்; குருஷேவின் தரம், பன்மடங்கு, உயர்ந்திருக்கும். ஆனால் அவருக்கு "அப்போதைக்கப்போது கிடைத்திடும் ஆனந்தம்' தான், பெரிதாகத் தோன்றியிருக்கிறது; அடித்துப் பேசினேன், ஐசனோவர் அடங்கிக்கிடந்தது கண்டேன்! என்று பேசி மகிழத்தான், அவருக்கு எண்ணம் பிறந்தது.

குட்டக் குட்டக் குனிந்து கொடுப்பதா! கோழையாகிக் கிடப்பதா! தனிப்பட்ட முறையில் இழிவு என்றால் கூடப் பரவாயில்லை, நாட்டுக்கு இழிவு ஏற்படும் நடவடிக்கையில் ஒரு அந்நிய நாடு ஈடுபடுவது, அதைப் பார்த்தும், கைகட்டி வாய்பொத்தி நிற்பதா! அது ஈனனும் ஏற்கக்கூடாத இழுக்கல்லவா? - என்று கேட்கக்கூடும்; கேட்பதிலே, நியாயம் இல்லை என்றும் கூறுவதற்கில்லை. எனினும், தாங்கிக்கொள்ளவே முடியாது - சகித்துக் கொள்ளவே முடியாது - என்று தோன்றும்போது, சகித்துக் கொள்வதும் தாங்கிக்கொள்வதும், தலை இறக்கத்தை அல்ல, மனிதத் தன்மையின் மாண்பினை மலை அளவு ஆக்கிட வல்லது. மிகச் சிலராலேயே, இது முடியும்! அந்த மிகச் சிலரே உலகுக்குப் பாடம் தர வல்லவராகின்றனர்.

பணிந்து போய்விட்டான் - போர்க் குணத்தை இழந்து விட்டான் - என்று எங்கே பிறர் தாழ்வாகக் கருதிவிடுவார்களோ, என்ற அச்சமே, குருஷேவ் கொண்டது போன்ற போக்கினுக்குக் காரணம்.